அதிகமான் நெடுமான் அஞ்சி/கோவலூர்ப் போரும் குமரன் பிறப்பும்
குமரன் பிறப்பும்
திருக்கோவலூரில் மலையமான் திருமுடிக் காரி என்னும் வீரன் வாழ்ந்துவந்தான். ஒரு சிறிய நாட்டுக்குத் தலைவன் அவன். அந்த நாட்டுக்கு மலாடு என்று பெயர். மலையமான் என்பது அவனுடைய குடிப்பெயர். மலையமான்களுடைய நாடு மலையமான் நாடு. அந்தப் பெயர் நாளடைவிலே சிதைந்து மலாடு என்று ஆகிவிட்டது.
காரி சிறந்த வீரன். ஆற்றலும் ஆண்மையும் உள்ள பல வீரர்களே உடைய பெரும் படை ஒன்று அவனிடம் இருந்தது. தமிழ் நாட்டில் பெரிய மன்னர்களுக்குத் துணைப் படையாக அதைத் தலைமை தாங்கி நடத்திச்சென்று அம்மன்னர்கள் வெற்றியடையும்படி செய்வான் காரி. பாண்டியன் அழைத்தாலும் துணையாகப் போவான்; சோழன் அழைத்தாலும் போவான்; சேரமானுக்கும் துணையாகப் போவதுண்டு. அவன் யாருக்குத் துணையாகச் செல்கிறானோ அந்த மன்னன் வெற்றி அடைவது உறுதி என்ற புகழ் அவனுக்கு இருந்தது.
வெற்றி பெற்ற மன்னர்கள் காரிக்கு மிகுதியான பொருளும் பொன்னும் தருவார்கள்; ஊரைக் கொடுப்பார்கள்; தேர், யானை, குதிரைகளை வழங்குவார்கள். ஆதலின், அவனுக்கு எதனாலும் குறைவு இல்லாமல் வாழும் நிலை அமைந்தது. அப்படிப் பெற்றவற்றை அவன் தனக்கென்று வைத்துக்கொள்வதில்லை; புலவர்களுக்குக் கொடுப்பான்; பாணர்களுக்கு வழங்குவான்; ஏழைகளுக்கு ஈவான்; கூத்தர்களுக்கு அளிப்பான். எத்தனை கிடைத்தாலும் அத்தனையையும் பிறருக்கு ஈந்து மகிழ்வது அவன் இயல்பு.[1]
அவனுடைய வீரத்தை முடிமன்னர்களும் பாராட்டினார்கள். அவன் ஈகையைக் கலைஞர்கள் புகழ்ந்தார்கள். இரண்டையும் பாவாணர்கள் பாடல்களில் அமைத்துச் சிறப்பித்தார்கள்.
திருமுடிக்காரிக்குச் சேரமான் நெருங்கிய நண்பனாக இருந்தான். அக்காலத்தில் வஞ்சிமாநகரத்தில் இருந்து அரசாண்டவன் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னன். அவன் காரியின் வீரத்தை நன்கு அறிந்து அடிக்கடி வரச் செய்து அளவளாவி இன்புறுவான்.
ஒரு முறை காரி வஞ்சி மாநகருக்குப் போயிருந்தபோது, சேரமான் தன் மனத்தில் நெடுநாளாக இருந்த விருப்பம் ஒன்றை வெளியிட்டான். கொல்லி மலையைச் சார்ந்த பகுதிகளை ஓரி என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்தான். அவன் விற்போரில் வல்லவன். அதிகமானுக்கும் அவனுக்கும் ஓரளவு உறவு இருந்தது. அதிகமான் நாளடைவில் தன்னுடைய நாட்டை விரித்துக்கொண்டு வருவதைப் பெருஞ்சேரல் இரும்பொறை கண்டான். அதைக் கண்டு பொறாமை உண்டாயிற்று. அவனை அடக்க வேண்டுமானால் அவனுடைய நாட்டுக்கு அருகில் தன் படை இருக்கவேண்டும் என்று கருதினான். ஓரியின் கொல்லிக் கூற்றம் அதிகமானுடைய நாட்டை அடுத்து இருந்தது. ஓரி பெரும் படையை உடையவன் அல்லன். அவனை அடக்கி அவன் நாடாகிய கொல்லிக் கூற்றத்தைத் தன் வசப்படுத்திக் கொண்டால் அதிகமானை அடுத்தபடி அடக்குவது எளிதாக இருக்கும் என்பது சேரனுடைய திட்டம்.
இந்தக் கருத்தைக் காரியிடம் எடுத்துச் சொன்னான், பெருஞ்சேரல் இரும்பொறை; “தக்க செவ்வி பார்த்துக் கொல்லிக் கூற்றத்தின் மேல் படையெடுத்துச் செல்லலாமென்று இருக்கிறேன். அப்போது உம்முடைய உதவி வேண்டியிருக்கும்” என்றான்.
காரி புன்முறுவல் பூத்தான்.
“ஏன்? நான் கூறியது தக்கதாகத் தோன்றவில்லையோ?” என்று கேட்டான் சேரமான்.
“அப்படி எண்ணவில்லை. ஓரி மிகச் சிறியவன். காலில் தைத்த முள்ளையெடுக்கக் கோடரியை வீச வேண்டுமா? மன்னர்பிரான் திருவுள்ளத்தை நான் அறிந்து கொண்டேன். என்னுடைய படையோடு நான் சென்று பொருதால் இரண்டு நாளைக்கு அவன் நிற்கமாட்டான்.”
“ஒருகால் அதிகமான் அவன் துணைக்கு வந்தால்-?”
“ஓரிக்கும் அதிகமானுக்கும் அவ்வளவு நெருங்கிய தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஒருகால் சேரநாட்டுப்படை சென்று தாக்கினால் அவன் இது தான் சமயம் என்று போருக்கு எழுந்தாலும் எழலாம். நான் தாக்கினால் அவன் கவலைகொள்ள மாட்டான்.”
“சரி; உமக்கு எது நல்லதென்று தோன்றுகிறதோ அதையே செய்யலாம்” என்று சேரன் காரியின் கருத்துக்கு உடம்பட்டான்.
காரி விடை பெற்றுத் திருக்கோவலூருக்கு வந்து போருக்கு ஆவனவற்றைச் செய்தான். ‘கொல்லிக் கூற்றத்தைச் சேரமானுக்குக் கொடுத்தால், அவனுக்கு அடங்கிய வேளாக ஆட்சி புரியலாம்; இல்லையானால் போருக்கு வருக’ என்று கூறிக் காரி ஓரிக்குத் தூது போக்கினான். நெடுங்காலமாக உரிமை வாழ்வு வாழ்ந்தவனுக்கு ஒருவனுக்கு அடங்கி வாழ மனம் வருமா? அவன் உடம்படவில்லை.
காரி போர் முரசு கொட்டிவிட்டான். தன் படைகளை வகுத்து ஓரியின் நகரை முற்றுகையிட்டான். ஓரியிடம் விற்போரில் சிறந்த வீரர்கள் பலர் இருந்தார்கள். அவர்கள் மிடுக்குடன் காரியின் படையை எதிர்த்து நின்றார்கள். காரிக்குக் காரியென்ற பெயரோடு ஒரு கருங்குதிரை இருந்தது. அவன் அதன்மேல் ஏறிவந்தான். ஓரிக்கும் ஓரியென்ற பெயரையுடைய பரி இருந்தது. போர் முகத்தில் இருசாரார் படையும் சந்தித்து மோதின. ஓரியின் நாடு ஆதலால் அங்குள்ள மக்களில் வலிமையுடைய இளைஞர்கள் அவன் படையில் சேர்ந்தார்கள். அறநெறி திறம்பிச் சேர மன்னனுடைய தூண்டுதலால் காரி படையெடுத்ததைப் பொறாமல் அவர்கள் கூட்டம் கூட்டமாகப் படையில் சேர்ந்து திறலுடன் போரிட்டனர்.
இரண்டு மூன்று நாட்கள் கடுமையாகப் போர் நடந்தது. காரி அதுவரையில் தன் பாசறையில் இருந்தபடியே இன்ன இன்னவாறு செய்ய வேண்டுமென்று கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தான். மூன்று நாட்களாக நடந்த போரில் யார் விஞ்சுவார்கள் என்று தெரியவில்லை. ‘இனி நாம் சும்மா இருத்தல் கூடாது’ என்று காரி தானே போர் முனைக்கு வந்தான்; காரியென்னும் குதிரையின்மேல் ஏறி அவன் போர்க்களத்தில் வந்து நின்றவுடன், அவனுடைய படை வீரர்களுக்குப் புதிய முறுக்கு ஏறியது. தம் வலிமையையெல்லாம் காட்டிப் போர் புரிந்தனர்.
ஓரி தன் குதிரையின்மேல் ஏறிவந்து போர் செய்தான். அவன் படையில் இப்போது தளர்ச்சி நிழலாடியது. படைத் தலைவர்களிலே சிலர் வீழ்ந்தனர். ஓரி தன் குதிரையை முன்னே செலுத்திக் காரியிருந்த இடத்தை அடைந்தான். இப்போது காரியும் ஓரியும் நேருக்கு நேராக நின்று போர் செய்தார்கள்[2]. காரி வைரம் பாய்ந்த மரம் போன்றவன்; எத்த னையோ பெரும் போர்களைச் செய்து வெற்றி கண்டவன். அவனுக்கு முன் நிற்பதென்பது எத்துணைப் பெரிய வீரனாயினும் இயலாத செயல். ஓரியால் எப்படி நிற்கமுடியும்? ஆனால் அவன் சிறிதும் பின் வாங்கவில்லை. தளர்வு தோன்றினாலும் தன் உயிரைப் பிடித்துக்கொண்டு தாக்கினான். என்ன பயன்? கடைசியில் காரியின் வாளுக்கு அவன் இரையானான். காரி வென்றது வியப்பே அன்று. ஓரி ஓடாமல் ஒளியாமல் நேர் நின்று போர் செய்து உயிரை விட்டதைக் கண்டு யாவரும் வியந்தனர். அவனுடைய நாட்டை அடிப் படுத்திய காரி அதைச் சேரமானுக்கு ஈந்தான்.[3] சேரமான் தக்க அதிகாரிகளையும் படைத்தலைவரையும் கொல்லிக் கூற்றத்துக்கு அனுப்பித் தன் ஆட்சியைச் செலுத்தலானான்.
சேரமான் செய்த இந்தச் செயலைச் சான்றோர்கள் போற்றவில்லை. அதிகமானுக்குச் சேரமான்பால் கோபம் மிக்கது. அவனுக்குக் கருவியாக இருந்து ஓரியைக் கொன்ற காரியை உடனே போய்க் கொன்றுவிட்டு வரவேண்டும் என்ற ஆத்திரம் உண்டாயிற்று. ஓரி கொல்லப்பட்டான் என்ற செய்தியைக் கேட்ட அந்தக் கணத்திலேயே அவன் காரியைப் பழிவாங்கவேண்டும் என்ற வஞ்சினத்தைச் செய்தான். ஆறப் போட்டுக் காரியோடு பொருவதைவிட உடனே தன் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்று துடித்தான்.
அதற்கு ஒரு தடை இருந்தது. அவனுடைய மனைவி கருவுற்றிருந்தாள். பல காலம் மகவு இல்லாமல் இருந்த அவளது கலி தீரும் பருவம் வந்தது. அந்தச் சமயத்திலா போர் புரியப் போவது? இதை அதிகமானைச் சேர்ந்த பெரியோர்கள் எடுத்துச் சொன்னர்கள். அவன் அரசியலில் வல்லவன். மாற்றான் வலியை அறிந்து