உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராண மதங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாதுரை

7

னர். பிறகு முன்னேறிய வேகத்தைவிட, அதிக வேகமாக , மிரண்டோடுகிறார்கள் பின்னோக்கி. மற்றும் சிலரோ, பாதை எப்படி இருப்பினும் சரி, அவ்வழி சென்றே தீருவது என்று துணிந்து செல்கின்றனர். அங்ஙனம் அஞ்சா நெஞ்சுடன் செல்பவர்களைத்தான், 'தம்பி நில்!' என்று கனிவுடன் அழைத்துச் சீர்திருத்தத்துக்கான செம்மையான கருத்துக்கள் இங்கே உள்ளன, என்று கூறி, செல்லுக்குத் தப்பிய சில ஏடுகளைக் காட்டுகின்றனர். செந்தமிழ் கற்ற அன்பர்கள். அவர்கள் காட்டும் ஏடுகளிலே, அவர்கள் கூறுவதுபோலச் சீர்திருத்தக் கருத்துக்கள் உள்ளனவா என்று ஆராயப் புகுமுன்பு, நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்குக் காரணம், அவர்களும் சீர்திருத்தத்தை வரவேற்கிறார்களே என்பதுதான். அவர்களின் ஆர்வத்தைப் பாராட்டத்தானே வேண்டும்! ஆனால் இதிலே ஒரு வேடிக்கை என்னவென்றால், தென்னை மரத்தின்மேல் ஏறிய கள்ளனை விரட்டும்போது, 'காய் திருடச் செல்லவில்லை, மாட்டுக்குப் புல் எடுக்க ஏறினேன்' என்று சொன்னதாக உள்ள கதை இருக்கிறதே, அந்த 'ரகமாக' இருக்கிறது இவர்களின் வாதமும். 'தென்னையில் ஏதடா தம்பி புல்?' என்று கேட்டவருக்கு, 'இல்லை என்று தெரிந்ததால் தான் இறங்கி விடுகிறேன்' என்று சொன்னானாமே கள்ளன், அதுபோலவே, புராணத்திலே போய் சீர்திருத்தக் கருத்தைத் தேடுகிறாயே இருக்குமோ என்று கேட்கத் தொடங்கினால், 'இல்லை என்பதைக் கண்டு சொல்லத்தான் இத்தனை ஏடுகளையும் ஆராய்ந்தேன்' என்று பேசுகிறார்கள்.

🞸🞸

புராணங்கள், பக்தி மார்க்கத்துக்கான ஏடுகள், இலக்கியச் சுவையுடன் இருப்பினும் சரி, இல்லாது போயினும் சரி, அந்த ஏடுகளைப் படித்து, 'ஐயனின்' பெருமையை, 'அம்மை'யின் அருமையை, 'அடியவர்' சிறப்பை உணரலாம் என்று கூறமுடியுமே தவிர,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/8&oldid=1696124" இலிருந்து மீள்விக்கப்பட்டது