பக்கம்:தமிழ் நூல்களில் பௌத்தம்.djvu/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

மனிதன் விலங்கினின்றுந் தோன்றினவன். அவனை விலங்கினின்றும் பிரிப்பது சமயம். விலங்கு + சமயம் = மனிதன். எனவே, மனிதனுக்குச் சமயம் இன்றியமையாதது.

அச்சமயம் ஒன்றா? பலவா? மெய்யறிவு விளங்கப் பெற்றவர்க்கும், அவ்வறிவுண்மையைக் கலையறிவால் உணர்ந்து, அதைக் குறிக்கொண்டு நிற்பவர்க்குஞ் சமயம் ஒன்றே. மெய்யறிவு விளக்கமாதல் நாட்டமாதல் பெறாதார்க்குச் சமயம் பலவாகவே தோன்றும். மெய்யறி வல்லாத பிறவறிவு கொண்டு, பொருளுண்மையை ஆராய்வோர்க்கு, அவ்வுண்மை, அவரவர் அறிவாற்றலுக்கேற்ற அளவில், இன்றைக்கொரு விதமாகவும், நாளைக்கொரு விதமாகவும் விளங்கும். அவர்கள் நிலைத்த முழு உண்மையை உணராமையான், அவர்கட்குப் பல சமய உணர்வு பிறக்கிறது. மெய்யறிவு விளங்கப்பெற்றதும் அப்பன்மை உணர்வு பொன்றும்.

"உலகில் நானாபக்கங்களிலுந் தோன்றி உண்மை ஞானத்தை அறிவுறுத்திய சமய குரவர்கள் பலரும் மெய்யறிவு பெற்றவர்கள் அல்லவோ? அவர்கள் அறிவுறுத்திய சமயக் கொள்கைகள் ஒன்றோடொன்று முரண்பட்டுப் பன்மை உணர்விற்கு நிலைக்களனாக நிற்றற்குக் காரணம் என்னை?" என்று சிலர் வினவலாம். சமய குரவர்கள் அனைவரும் அறிவுறுத்திய உண்மை ஒன்றே. ஆனால் அவ்வுண்மைப் பேற்றிற்குரிய முறைகளில் வேற்றுமை உண்டு. அடிப்படையான உண்மையையும், முறைப்பாட்டையும் ஒன்றெனக் கொண்டு பலர் வாதம் புரிகிறார். அவ்வாதப் போர் ஈண்டு எற்றுக்கு?

உண்மை, என்றும் ஒரு பெற்றியா இலங்குவது. முறைப்பாடுகள் காலதேச வர்த்தமானத்தை யொட்டிக் கோலப்படுவன. அவைகளில் வேற்றுமை யிருத்தல் இயல்பு. அவைகள் மாறுந் தகையன. மாறத்தக்க முறைகளையே அடிப்படையான உண்மையென்று கோடல் அறியாமை. இந் நுட்பம் விளங்கப்பெறுவோர்க்கு, "உண்மையில்" பன்மை