உள்ளடக்கத்துக்குச் செல்

கணிப்பொறி அகராதி/R

விக்கிமூலம் இலிருந்து

R

radio button - வானொலிப் பொத்தான் : இது உரையாடல் பெட்டியில் உள்ளது. இப்பெட்டியில் 3 பொத்தான்கள் இருக்கும். இப்பொத்தான்கள் பன்மத் தெரிவுகளைக் காட்டப்பயன்படுபவை. தெரிவுக்கு இடப்பக்கமுள்ள சிறிய வெண்வட்டத்தை இயக்கி, ஒரு தெரிவைத் தேர்ந்தெடுக்கலாம். வட்டத்தின் மையத்தில் தோன்றும் கறுப்புப் புள்ளி, ஒரு தெரிவு தேர்ந்தெடுக்கப்பட்டதைக் காண்பிக்கும்.
உருவாக்கல் : இதை உருவாக்க இயல்பு TYPE க்கு RADIO என்னும் மதிப்பைக் கொடுக்க வேண்டும். VALUE என்னும் மதிப்பு இயல்பு, மாறியில் சேமிக்கப்பட்ட மதிப்பைக் குறிப்பிடப் பயன்படும். ஒரு தெரிவைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, இது செய்யப்படும் தெரிவுகளில் ஒன்றைத் தவறுதல் தெரிவாக CHECKED என்னும் இயல்பு பயன்படுத்தப்படவேண்டும். -

radix - மூலம் : வேர். எண் முறையின் அடி எண். இரும முறை மூலம் 2. பதின்ம முறை மூலம் 10, எண்ம முறை 8.

radix complement - மூல நிரப்பு : ஓர் எண்ணின் மூல நிரப்பைப் பின்வருமாறு கணக்கிடலாம். அந்த எண்ணின் மூலத்திலிருந்து ஓர் எண்ணைக் குறைவாகக் கழி. கிடைக்கும் முடிவோடு 1ஐக் கூட்டுக. எ-டு பதின்ம எண் 171 இன் மூல நிரப்பு : 999 - 171 + 1 = 829.

radix notation - மூலக் குறிமானம் : இது ஓர் இன உறுப்பு நிலையான மூலக் குறிமானத்தையும், கலப்பு அடி எண் மூலக் குறிமானத்தையும் தழுவுவது.

random access - வரம்பில் அணுக்கம் : ஒரு சேமிப்பு இடத்தில் தகவலைப் பெறும் முறை. இங்குத் தகவலை வரிசை முறையில் தேடும் பொழுது, அணுக்கம் வரம்புக்கு உட்படுத்தப்படுவதில்லை.

random access disk file - வரம்பில் அணுக்க வட்டுக் கோப்பு : ஒரு தடத்திற்கு ஒரு தலையுள்ள வட்டைக் கொண்டுள்ள கோப்பு. இங்கு ஆவணங்கள் அடுத்தடுத்துச் சேமிக்கப்பட வேண்டியதேவை இல்லை. random access memory, RAM - அணுக்க நினைவகம், வஅநி : இது ஓர் அரைக் கடத்திக் கருவியமைப்பு. ஒன்றுக்கு மேற்பட்ட ஒருங்கிணை சுற்றுகளைக் கொண்டது. கணிப்பொறித் தொகுதியில் தற்காலிகமாகத் தகவலைச் சேமித்து வைக்கப் பயன்படுவது. எல்லா நுண்முறையாக்கிகளும் இந்நினைவகத்தைப் பயன்படுத்தித் தகவல்களையும் நிகழ்நிரல்களையும் சேமித்து வைக்கின்றன. தகவல் பைட் அலகில் சேமித்து வைக்கப்படுகிறது. ஒரு பைட் = 8 பிட் சொற்கள். இந்நினைவகத்தின் தேக்கு திறன் பைட்டுகளில் அளக்கப்படும். எ.டு. 48K இதில் சேமித்த தகவல்களை வேண்டியவாறு பயன்படுத்தலாம். மின்னாற்றல் இருக்கும் வரையில்தான் இதில் தகவல் இருக்கும். இதைத் தவிர்க்கத் தகவலைச் சேமிக்க வேண்டும்; சேமிக்கப்படும். இது உடனுக்குடனும் நேராகவும் மையச் செயலகத்தை அடையும். ஒ. read only memory.

random access programming - வரம்பில் அணுக்க நிகழ் நிரலாக்கம் : நிகழ்நிரலில் சேமிப்பு நிலைக்குரிய அணுக்கத்திற்கான நேரத்தைக் கருதாதது நடைபெறுவது.

random access storage - வரம்பில் அணுக்கச் சேமிப்பு : இனங்காண வேண்டிய இடத்திற்கு நிலையான அணுக்க நேரத்தை அளிக்கும் சேமிப்பு.

range - வீச்சு : ஒரு வேலைத் தாளில் இது தொடர் நுண்ணறைத் தொகுதியைக் கொண்டது. வீச்சு முகவரியினால் இது குறிப்பிடப்படுவது. iச்சில் முதல் நுண்ணறையின் முகவரி வீச்சு முகவரியாகும். இதை அரைப்புள்ளி தொடரும்; இதற்குப்பின் வீச்சிலுள்ள இறுதி நுண்ணறையின் முகவரி தொடரும். எ.டு. நுண்ணறைகள் G1, G2, G3, G4, G5. இவற்றைச் சுருக்கமாக G1:G5 எனலாம். துண்ணறைகள் A1, B1, C1, D1, E1, F1. இவற்றை A1:F1 எனலாம். நுண்ணறைகள் A4, A5, A6, B4, B5, B6. இவற்றை A4:B6 எனலாம்.

rapid storage - விரைவுச் சேமிப்பு : உயர் விரைவுச் சேமிப்பு.

raster - வரிக்கோலம் : எதிர்மின் வாய்க்கதிர்க் குழாயின் திரையில் பார்க்கும் கிடைமட்ட வரிகளின் கோலம். இவ்வரிகள் ஒரு மின்னணுக் கற்றையால் அலகிடப்படும்.

rows and columns - வரிசைகளும் பத்திகளும் : இவற்றைத் தொடக்கத்திலோ அட்டவணையின் நடுவிலோ சேர்க்கலாம், நீக்கலாம். rows and columns height - வரிசைகள் மற்றும் பத்திகளின் உயரம் : இவ்விரண்டையும் எளிதாக வேண்டிய அளவுக்கு மாற்றியமைக்கலாம். அதாவது, கூட்டலாம், குறைக்கலாம்.

raw data - கச்சாத் தகவல்கள் : இவை முறையாக்கப்படுவதற்கு முன்னுள்ளவை. எந்திரம் அறிந்து கொள்ளும் அளவுக்கு ஒரு வடிவத்தில் இருக்க வேண்டிய தேவை இல்லை.

read - படி : ஒரு கருவியிலிருந்து தவலைப் பெற்று, அதை முறையாக்கலுக்கு ஆயத்தம் செய்தல்.

reader - படிப்பி : இது ஒரு கருவியமைப்பு. தகவலை ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்றுவது. எ-டு துளையிட்ட தாள் நாடாவிலிருந்து காந்த நாடாவிற்கு மாற்றுதல்.

read error - படிப்புப் பிழை : இது கணிப்பொறி எந்திர நிலை. இதில் சேமிப்புக் கருவியமைப்பின் அடக்கங்களை மின்னணு முறையில் இனங் காண முடியாது.

read only memory, ROM - படிப்பதற்குரிய நினைவகம், பஉநி : நிலையாகச் சேமித்து வைத்த தகவல்களிலிருந்து உருவாக்கப்படுவது. மின்சாரம் நின்றாலும் இது அழியாது. ஒ. random access memory.

read out - படித்து மாற்று : ஒரு கணிப்பொறியின் உள் சேமிப்பிலிருந்து படித்து அதைப்புறச் சேமிக்குக் கொண்டுவருதல்.

read rate - படிப்பு வீதம் : தகவல் அலகுத் தொகுதி, எ-டு உருக்கள், சொற்கள். கொடுக்கப்பட்ட அலகு நேரத்தில் உட்பலன் படிப்புக் கருவியமைப்பு மூலம் இவ்வலகுகளைப் படித்தல்.

read time - படிக்கும் நேரம் : சேமிப்பிலிருந்து மாறுகை தொடங்குவதற்கும். அது முடிவதற்கும் இடையே உள்ள நேர இடைவெளி. இது அணுக்க நேரத்திற்குச் சமம். இதில் காத் திருக்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும்.

real address - மெய்முகவரி : முதன்மைச் சேமிப்பிலுள்ள இனவரி.

real file - மெய்க்கோப்பு : ஆதி கோப்புகளிலிருந்து உருவாக்கப்படும் ஆவணத்திரட்டு. ஓர் இயங்கு தொகுதியிலுள்ள ஆவண அனுக்கப் பொறி நுட்பத்தைக் கொண்டு இதைச் செய்யலாம்.

real time - மெய்ந்நேரம் : கருவி நிகழ்வோடு ஒரே சமயத்தில் நடைபெறும் முறையாக்கல். தாமதமில்லாமல் அந்நிகழ்வைக் கட்டுப்படுத்த இம்முறை யாக்கல் நடைபெறுவது. real variable - மெய்மாறி : மிதப்புப் புள்ளி வடிவத்தில் தெரிவிக்கப்படுவது.

record - ஆவணம் : ஒன்றுக்கு மற்றொன்று தொட்ர்புள்ள தகவல் புலங்களின் தொகுதி. அமைப்பு நோக்கத்திற்காக ஒரே அலகாகக் கருதப்படுவது. இது கோப்பில் இருக்கும். ஒவ்வொரு ஆவணமும் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும். எ-டு வாடிக்கையாளர் பற்றிய தகவல். ஆவணம் எப்பொழுதும் முறைமை வடிவத்திலேயே இருக்கும்.

record list - ஆவணப் பட்டியல் : படிக்கக் கூடிய வடிவத்தில் அளிக்கப்பட்டு ஒரு கோப்பில் இருக்கும் தகவல்.

record section - ஆவணப் பகுதி : ஒரு தொகுதியிலுள்ள ஆவணப் பகுதி.

reduction, data - தகவல் குறைப்பு : கச்சாத் தகவல்களை எடுத்து, அதைப் பயனுள்ளதாக மாற்றுதல்.

redundancy - மிகையாக்கல் : பல கருவியமைப்புகளை ஒரே வேலையைச் செய்யுமாறு செய்தல். இதன் நோக்கம் இவ்வேலையின் துல்லியத்தை உயர்த்துவதே.

redundant digit - மிகைத் தகவல் : ஒர் உண்மையான கணக்கீட்டிற்குத் தேவைப்படாத இலக்கம். ஆனால், இலக்கக் கணிப்பொறியில் பிழையைச் சுட்டிக்காட்டப் பயன்படுவது.

reference address - பார்வை முகவரி : பார்வைப் புள்ளியாகப் பயன்படும் முகவரி. சார்பு முகவரியைக் கொள்ள எழுதப்படும் கட்டளைகளின் தொகுதி இது.

reference listing - பார்வைப் பட்டியலிடல் : ஒரு தொகுப்பியில் இது தொகுக்கப்படும். இறுதி நடைமுறைச் செயலில் தோன்றும் கட்டளைகளைக் காட்டுவது. இதில் சேமிப்பிடத் தகவல்கள் அடங்கும்.

reference record - பார்வை ஆவணம் : இது ஒரு தொகுப்பியின் வெளிப்பலன். குறிப்பிட்ட இறுதி நடைமுறைச் செயலில் செயல்கள், அவற்றின் நிலைகள் ஆகியவற்றைப் பட்டியலிடுவது. நடைமுறைச் செயலின் சேமிப்பு ஒதுக்கீடு, பகுதியாக்கல் ஆகியவற்றை விளக்கும் தகவலைக் கொண்டது.

refresh - புதிதாக்கு : மீண்டும் மீண்டும் ஒரு குறிகையை ஒரு சூழ்நிலையில் உண்டாக்கல். எ-டு ஓர் இயக்க நினைவு நறுவலிலுள்ள நுண்ணறைகளை துண்டுதல்.

regenerate - மீட்பாக்கம் செய் : சேமிப்பில் அதன் முதல் வடிவத்தில் தகவலை இருக்கு மாறு செய்தல். மங்கல், அலைக்கழிப்பு ஆகியவற்றி லிருந்து தடுக்க இதைச் செய்ய வேண்டும்.

register - பதிவகம் ; வருங்காலப் பயனுக்குரிய தகவல்களும் குறிப்புகளும் இதில் சேமித்து வைக்கப்படும். இது தற்காலச் சேமிப்புப் பகுதி. இதைச் செய்வது நுண்முறையாக்கி, நேரடியாக இதை இனங் காணலாம்.

register capacity - பதிவகத் திறன் : ஒரு பதிவகத்தில் முறையாக்கப்படும் எண்களின் மேல் கீழ் வரம்புகள்.

register circuit - பதிவகச் சுற்று : நினைவகக் கூறுகளுடன் கொண்ட சொடுக்கும் சுற்று இது குறிமையுள்ள மில்லியன் கனக்கான இருமிகளை (பிட்டுகள்) இது சேமிக்க வல்லது. registry - பதிகோப்பு : @5, தகவலைப் பதியும் கோப்பு. கணிப்பொறித் தொகுதியில் எல்லா வன்பொருள் மென்பொருள் விவரங்களைச் சேமித்து வைப்பது.

regression analysis - தொடர் பகுப்பு : புள்ளி இயல் பகுப்பில் மாற்ற வீதத்தை உறுதி செய்யும் வழி.

relational data base - தொடர்புத் தகவல் தளம் : தகவல் தளங்களில் ஒருவகை. ஒரு தொடர்பு அமைப்பு தகவல் தளத்தைக் குறிப்பது. இது ஒன்றுக்கு மற்றொன்று தொடர்பு அட்டவணைகளைக் கொண் டது. இதில் பல அட்டவணைகளில் பல புலங்கள் இருக்கும். இப்புலங்கள் அட்டவணைகளுக்கிடையே தொடர்பை உண்டாக்கும். பொதுப் புலங்கள் திறவுகள் எனப்பெயர் பெறும். இந்த தகவல் தளம் தற்காலத் தொழில் நிறுவனங்களில் இன்றியமையாத உறுப்பாக உள்ளது.

முதன்மைத் திறவு என்பது ஒரு தகவல்தளத்தில் ஓர் ஆவணத்தை இனங் காண்பது. தொடர்புத் தகவல் தளங்களில் இத்திறவு ஒன்றுக்கு மேற்பட்ட புலங்களைக் கொண்டிருக்கும். காட்டாக, Emp No. என்பது வேலையாளர் எண் ஆகும். இது சிறப்பாக ஒரு வேலையாளின் ஆவணத்தை இனங் காட்டும்.

relational system - தொடர்பு முறை : இது ஒரு வகைத் தகவல் தளமேலாண் முறை. இதில் தகவல்கள் அட்டவணைகளாகக் குறிக்கப்படும். இதில் ஒவ்வொரு பதிவும் ஒரு மதிப்பை மட்டும் கொண்டிருக்கும்.

relative address - சார்பு முகவரி : ஒரு கட்டளையின் முகவரிப் பகுதியைக் குறிக்கும் எண். அடிநிலை முகவரியைப் பொறுத்தவரை தேவைப்படும் இடத்தைச் சுட்டிக் காட்டுவது. இம்முகவரியுடன் அடிநிலை முகவரியைச் சேர்த்துத் தனி முகவரியைப் பெறலாம்.

relay centre - அஞ்சல் செய் மையம் : இது ஒரு சொடுக்கும் மையம். இதில் செய்திக் குறிகைகள் பெறப்பட்டு நேரடியாகத் தானியங்கு முறையில் பல வெளிப்பலன் சுற்றுகளுக்கு அனுப்பப்படும். செய்தியிலுள்ள தகவலுக்கு ஏற்ப இது நடைபெறும்.

release - விடுவி : ஒரு குறிப் பிட்ட நிகழ்நிரலின் கட்டுப்பாட்டிலிருந்து நினைவகப் பகுதி அல்லது வெளிப்புற அலகை விடுவித்தல். இது ஒரு நிறைவேறிய செயலால் நடைபெறுவது. விடுவிக்கப்பட்ட வன்பொருள் வேறு நிகழ்நிரலுக்கு ஆயத்தமாகும்.

relocate - மீளிடம் அளி : ஒரு நிகழ்நிரலிலுள்ள கட்டளைகள் தாமாக மாறுவதை இது குறிக்கும்.

relocation register - மீளிடப் பதிவகம் : இது வன்பொருள் கூறு. ஒரு கணிப்பொறியிலுள்ள ஒவ்வொரு நினைவக இடத்திற்கு முகவரியை அனுப்பும் ஒரு மாறிலியைக் கொண்டது இது.

remote - தொலைவிலுள்ளது : ஒம்பு பொறியிலிருந்து சிறிது தொலைவில் வெளிப்புற அலகு.

remote computing system - தொலைக் கணிப்புமுறை : இது ஒரு வன்பொருள் அமைவு. இதில் தொலை முனையங்கள் நேரிடையாக ஒரு கணிப்பொறியுடன் இணைக்கப் பட்டிருக்கும். இதனால் பயனாளிகள் நேரிடையாக மைய முறையாக்கியுடன் தொடர்பு கொள்ளலாம். இந்தத் தொலை முனையங்களிலிருந்து பயனாளிகள் தகவல்களைத் தொகுக்கலாம், பிழை நீக்கலாம், ஆய்ந்து பார்க்கலாம். தங்கள் நிகழ்நிரல்களை நிறைவேற்றலாம்.

remote processing - தொலை முறையாக்கல் : இம்முறையில் தகவல்கள் தொலைவிலுள்ள நிலையங்களிலிருந்து செய்திகளாக ஒரு கணிப்பொறியால் செலுத்தப்படும். தகவல்கள் பின் முறையாக்கப்படும்.

remote processor - தொலை முறையாக்கி : கணிப்பொறியின் மைய முறையாக்கியிலிருந்து தொலைவிலுள்ளது இது. ஆனால், மைய முறையாக்கியின் இயங்கு தொகுதியின் முழுக்கட்டுப்பாட்டில் இதன் செயல்கள் உள்ளன.

reorganise - சீரமை : ஒரு புதிய கோப்புச் சேமிப்பில் தகவல்களைப் பதிதல், தகவல்களை மேம்படுத்த இது தேவை. repertoire - அனைத்துறுப்பு : ஒரு குறிப்பிட்ட குறிமைத் தொகுதியிலுள்ள தனிக் குறிமைகள் அல்லது உருக்களின் வீச்சு.

repetition instruction - திருப்பு கட்டளை : குறிப்பிட்ட தடவைகள் ஒரு கட்டளை அல்லது கட்டளைகளை மீண்டும் நிகழுமாறு செய்யும் கட்டளை.

replication - பகர்ப்பு : ஒரு தொகுதியில் ஓர் ஒத்த வன்பொருளை ஒன்றோ அதற்கு மேலுமோ பயன்படுத்தல். பொறி பழுதுபடும் பொழுது அதிலுள்ள அலகுக்ள் ஒன் றுக்கு மற்றொன்று இணைந்து இயங்கும்.

reply - பதில் : விடை முன்னரே உள்ள செய்திக்கு அளிக்கப்படும் தகவல்.

report - அறிக்கை : அச்சிட்ட தகவல்; கணிப்பொறி உருவாக்குவது. பயனாளிகளின் தகவல்கள் அடிப்படையில் அமைவது. இது எளிமையான ஆவணமாக இருக்கலாம். அல்லது குறிப்பிட்ட ஆவணமாக இருக்கலாம்.

report generation - அறிக்கை இயற்றல் : வெளிப்பலன் அச்சிடப்படும் பொழுது, தானியங்கு கணக்கீடுகளை நிறைவேற்ற அறிக்கை இயற்றிகள் தெரிவு செய்த தகவல்களையும் முறைகளையும் பயன்படுத்தும். உண்மையில் இந்த இயற்றிகள் பெரும்பான்மை தகவல் தள மேலாண்முறையில் உள்ளன. இவை வினாக்களிலிருந்து அறிக்கைகளை உருவாக்கும்.
ஒரு வினாவை உருவாக்குவது போல் ஸ்டார்பேசில் அறிக்கை உருவாக்கலாம். இதைச் செய்ய, எக்ஸ்புளோரர் தகட்டிலுள்ள Report என்னும் பகுதியை இயக்குக. பட்டியிலிருந்து இதையும் செய்க. Select New Report. தன் வலவிச் சாளரம் தோன்றும். இச்சாளரம் கிடைக்கும் அட்டவணைகள் வினாக்கள் ஆகியவற்றைக் காட்டும். இதைத் தேர்ந்தெடுத்து Next பொத்தானை அழுத்தவும். அடுத்துத் தெரிவுசெய்த அட்டவணையிலுருந்து கிடைத்த புலப்பட்டியலுடன் சாளரம் திரையில் தோன்றும் அறிக்கையில் சேர்க்க வேண்டிய புலங்களைத் தெரிவு செய்க. இதற்குப் பின்வருவனவற்றைப் பயன்படுத்துக. the → and → buttons இதைப் பயன்படுத்தவும்.
Next என்னும் பொத்தானை அழுத்தவும்.
ஆக, ஓர் அட்டவணை அல்லது வினாவிலிருந்து பன்ம அறிக்கைகளை உருவாக்கிச் சேமிக்கலாம்.

report programme - அறிக்கை: நிகழ்நிரல் : ஒரு தகவல் கோப்பின் பகுப்பை அச்சிட வடிவமைக்கப் பயன்படும் நிகழ்நிரல்

reservation - ஒதுக்கீடு : பன்ம நிகழ்நிரல் கணிப்பொறியில் ஒரு குறிப்பிட்ட நிகழ்நிரலுக்கு நினைவகப் பகுதிகளை அல்லது வெளிப்புற அலகுகளை ஒதுக்குதல்.

reset - மீளமை : ஓர் எண்ணு கருவியைச் சுழியில் இருக்குமாறு அமைத்தல்.

reset cycle - மீளமை சுற்று : ஒரு சுழற்சிக் குறியீட்டு எண்ணியை அதன் முதல் மதிப்புக்குக் கொண்டு வருதல்.

reset pulse - மீளமை துடிப்பு : சேமக் கலத்தின் நிலையைக் கட்டுப்படுத்தும் துடிப்புகளில் ஒன்று. குறிப்பாகச் சுழி நிலைக்கு ஒரு மின்கலத்தை மீளச் செய்வது.

residual error - எஞ்சு பிழை : ஓர் ஆய்வின் பொழுது உண்டாகும் தவறு.

residual error rate - எஞ்சு பிழை வீதம் : ஒரு தகவல் செலுத்துகையில் நிகழும் திருத்தாப் பிழையின் தகவைக் குறிப்பது.

residual value - எஞ்சு மதிப்பு : முடியும் நிலையில் ஒரு கருவித் தொகுதியின் மதிப்பு இது. அது ஒரு பகுதியின் மதிப்பாகவும் இருக்கலாம்.

resolution - பகுப்புத் திறன் : பிரிதிறன். ஒரு வரைகலைக் காட்சியில் கிடைக்கக்கூடிய படக்கூறுகளின் எண்ணிக்கை. இவை மாறுபவை. இவற்றைத் தனியாக இனங் காணலாம்.

resource - தலைவாய் : கணிப்பொறித் தொகுதியின் பகுதி. தனி அலகாகக் கருதப்படுவது. குறிப்பிட்ட முறையாக்கலைப் பயன்படுத்த உதவுவது.

resource file - தலைவாய்க் கோப்பு : மூலக் கோப்பு. கோப்புகளில் முதன்மையானது.

response - துலங்கள் : வினவுதலைத் தொடங்குவதால் ஒரு தகவல் மீட்பு முறையில் பயனாளிக்குக் கிடைக்கும் செய்தி.

response time - துலங்கல் நேரம் : ஒரு வினாவிற்கு விடையளிக்கத் தேவைப்படும் நேரம்.

restore - மீளமை : ஓர் எண்ணு கருவி, பதிவகம், சொடுக்கி, அல்லது நிலைகாட்டியை முன்னரே தெரிந்த மதிப்புக்குச் சரிசெய்தல்.

result - முடிவு : விடை. ஓர் எண்கணித அல்லது முறைமைச் செயலிலிருந்து பெறப்படும் மதிப்பு அல்லது அளவு. இது செயலிடத்தில் நிறை வேறுவது.

retention period - தக்கவைக்கும் காலம் : தகவல்கள் காந்த நாடாவில் அல்லது வட்டில் சேமித்து வைக்கப்படும் கால அளவு. இது பல நாட்கள், வாரங்கள், மாதங்கள் இருக்கலாம். இது தேவையைப் பொறுத்து அமையும்.

retrieval - மீட்பு : ஒரு கோப்பிலிருந்து தகவலைப் பிரித்தல். ஆவணங்களில் குறிப்பிட்ட திறவுகளும் அல்லது ஒட்டுகளும் இருக்கும். இந்த ஆவ ணங்கள் கோப்பில் அடங்கி இருக்கும். இத்திறவுகளைத் தேடவே இந்த மீட்பு.

return - திருப்பம் : ஒரு துளை நடைமுறைச் செயல் முடிவுறும் பொழுது உள்ள கட்டளை. கட்டுப்பாட்டை முதன்மை நிகழ்நிரலுக்குக் கொண்டு வர உதவுவது. இதைச் செய்வது திருப்பு கட்டளை.

RGB - Red, green and blue, the three primary colours.
சிபநீ
 : மூன்று முதன்மை நிறங்கள்.

ring network - வளை வலையமைவு : இதில் இடவியல் தொடர் வட்டம், சுற்றளவில் கணுக்கள் முனைகளாகக் குறிக்கப்படும். வளையத்திலுள்ள எல்லாக் குறுக்கிடும் கணுக்கள் வழியாகக் கணுக்களுக்கிடையே செய்திகள் செல்லும்.

robot - தொலை இயக்கி :
1) கணிப்பொறியால் இயங்கும் எந்திரம். அலுப்பு சலிப்பு இல்லாமல் வேலைகளைத் திரும்பத்திரும்பச் செய்யலாம். தவிர, வண்ணத்தெளிப்பு, பற்ற வைத்து இணைத்தல் முதலிய கடின வேலைகளும் இதன் மூலம் நடைபெறுபவை.
2)நிகழ்நிரல் அமைத்து எந்திரங் களைக் கட்டுப்படுத்துவது.
3) உற்பத்தித் துறையின் சரக்குகளையும் பொருள்களையும் கையாளுந் தானியங்கு கருவித் தொகுதி.
4) ஒரு செயற்கைக் கோள்.
5) நடக்கும் பேசும் கற்பனை எந்திர மனிதன்.

robotics - தொலை இயக்குவியல் : முன்னரே உறுதி செய்யப்பெற்ற செயல்களை நிறைவேற்றக் கணிப்பொறியால் கட்டுப்படுத்தப் பெறும் எந்திரங்களை ஆராயுந்துறை. எடு உந்து வண்டியில் உலோகத்தைப் பற்றவைத்து இணைத்தல், கோளின் மண்ணியலைப் பகுத்துப் பார்த்தல், திங்களின் மண் நன்கு பகுத்துப் பார்க்கப்பட்டுள்ளது.

roll in - உள்வாங்கல் : ஒர் இயங்கு தொகுதியில் ஒரு செயல்முறையை ஊக்குவித்தல். இதற்குச் செயல்முறையின் பகுதிகளை அடுத்தடுத்து முதன்மைச் சேமிப்புக்குக் கொண்டு வருதல்.

roll off - வெளிச் செலுத்தல் : இம்முறையில் ஆதிகோப்பு, ஊடகத்திலிருந்து படி எடுக்கப் படுதல்.

roll on - உள் உருளல் : தாழளவுக் கோப்புச் சேமிப்பிலிருந்து ஆதி கோப்பைப் படி எடுத்துக் குறிப்பிட்ட பருமவகைக் கோப்பாக மாற்றுதல்.

roll out - வெளி உருளல் : முதன்மைச் சேமிப்பிலிருந்து ஒரு செயல் முறையை நீக்கல்.

roll over - மேல் உருளல் : இது விசைப்பலகைப் பொறிநுட்பம்; ஒரே சமயம் ஒன்றுக்கு மேற்பட்ட திறவை அழுத்தும் பொழுது பிழையை நீக்குவது.

rounding error - முழுமைப் பிழை : ஒரு முடிவில் ஏற்படும் பிழை, முழுமையாக்கலால் உண்டாவது.

rounding off - முழுமையாக்கல் : ஓர் எண்ணின் கீழ்வரிசை இலக்கங்களைச் சரிசெய்தல். குறைதலை இச்செயல் சரி செய்வது.

route - வழி : வலையமைவு மற்றும் இயங்குதொகுதி தொடர்பாகப் பயன்படும் பாட்டை.

routeing - வழியமைத்தல் : மர அமைப்புள்ள தகவல் தளத்தில் ஆவணங்களை இணைக்கும் முறை.

routine - நடைமுறைச் செயல் : குறிமையுள்ள கட்டளைத் தொகுதி, குறிப்பிட்ட வரிசையில் அமைக்கப்படுவது. குறிப்பிட்ட வேலையைக் கணிப் பொறி செய்யுமாறு இது செய்யும்.

run - ஒட்டம் : ஒரு நிகழ்நிரல் அல்லது நடைமுறைச் செயல் நடைபெறுதல். தொகுதிமுறையாக்கல் பயன்பாடுகளுக்குரியது.

run book - ஓட்ட நூல் : இயங்குவதற்குரிய வழிகாட்டி, அதாவது தேவையான பொருள்களையும் தகவல்களையும் ஒரு வேலையைச் செய்ய எவ்வாறு பூட்டுவது என்பதைக் கூறுவது. இதில் இயக்குகட்டளைகள் தொகுதியாக ஓர் ஓட்டம் அல்லது ஓட்டத் தொகுதியில் அமையும்.

run chart - ஓட்டப்படம் ; வழிமுறைப் படத்தைக் குறிப்பது. இது ஓட்டத் தொடரைக் காட்டும். இந்த ஓட்டங்கள் சேர்ந்து ஒரு வேலையைத் தோற்றுவிக்கும்.

run command - ஓட்டக் கட்டளை : தொடக்கப் பட்டியலுக்குள்ள ஆனை இது. தகவல் கோப்புகளைத் திறக்கும். பயன்பாடுகளைத் துவக்கும் மாற்றுமுறையை அளிப்பது.

run time - ஓட்ட நேரம் ; நிகழ்நிரல் ஒட ஆகும் நேரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணிப்பொறி_அகராதி/R&oldid=1047062" இலிருந்து மீள்விக்கப்பட்டது