70 என்பதையும் அப்பெருங் கிணற்றைத் தோண்டுவித்தவன் ஆலம்பாக்க விசயநல்லூழான் தம்பியான கம்பன் அரையன் என்பதையும் அதன் - பெயர் மாற்பிடுகு பெருங்கிணறு என்பதையும் அஃது இனிது புலப்படுத்துகின்றது. நந்திவர்மப் பல்லவ மல்லனது உதயேந்திரம் செப்பேடு களிலும் காசாக்குடி செப்பேடுகளிலும் பாரத்துவாச முனிவர் பல்லவ மன்னர்களின் முன்னோர்களுள் ஒருவராகக் குறிக்கப்பட்டுள்ளார். (South Indian Inscriptions Volume II Part III) பல்ல வர்களைப் பாரத்துவாச கோத்திரத்தினர் என்று முதலாவது கல்வெட்டு உணர்த்துவதற்குக் காரணம் இதுவேயாகும். அக்கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ள தந்திவர்மன் கி.பி. 717 முதல் கி.பி. 780 வரையில் நம் தமிழ் நாட்டில் ஆட்சிபுரிந்த நந்திவர்மப் பல்லவ மல்லனது மகன்; கி.பி. 780 முதல் 830 முடிய சோழ மண்டலத்தையம் தொண்டை மண்டலத்தையும் அரசாண்ட நெடுமுடி வேந்தன். எனவே, இவனது ஐந்தாம் ஆண்டாகிய கி.பி. 785-ல் மேலே குறித்துள்ள திருவெள்ளறைத் தென்னூர்ப் பெருங்கிணற்றின் வேலை முடிவெய்தி அது மக்கட்குப் பயன்படும் நிலையில் இருந்திருத்தல் வேண்டும். அப்பெருங்கிணற்றைத் தோண்டுவித்தவன் கம்பன் அரையன் என்பான். இவன் ஆலம்பாக்க விசய நல்லூழான் என்பவனது தம்பி என்பது அக்கல்வெட்டால் அறியப்படுகின்றது. இங்குக் குறிக்கப்பெற்ற ஆலம்பாக்க விசய நல்லூழான் நந்திவர்மனது தந்தையாகிய நந்தி வர்மப் பல்லவ மல்லனது அமைச்சர்களுள் ஒருவன். இச்செய்தி நந்திவர்மப் பல்லவ மல்லனது ஆட்சியின் அறுபத்திரண்டாம் ஆண்டில் வெளியிடப்பெற்ற* பட்டத்தாள்மங்கலம் செப்பேட்டினால் புலப்படுகின்றது. பெருங்கிணறு தோண்டுவித்த கம்பன் அரையனும் தன் தமையனைப் போலவே பல்லவ மன்னர்களது அரசாங்கத்தில் உயர்நிலையில் இருந்தவன் ஆதல்வேண்டும். அரையன் என்பது அரசனால் அளிக்கப்பட்ட பட்டமாகும். கம்பன் என்பது இவனது இயற்பெயர், எனவே, கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கம்பன் என்பது இயற்பெயராக வழங்கிவந்த செய்தி ஈண்டு அறிந்துகொள்ளுதற்குரிய தொன்றாம். உடன் பிறப்பினராய்ப் பல்லவ மன்னர்களான நந்தி வர்மப் பல்லவ மல்லன், தந்தி வர்மன் என்போரது ஆட்சிக் காலங்களில் உயர்நிலையிலிருந்து அரசாங்கத்தை நடத்தி வந்த இவ்விரு தலைவர்களும் ஆலம்பாக்கம் என்னும் ஊரில் வாழ்ந்தவர்கள் என்பது 'ஆலம்பாக்க விசைய நல்லூழான்' என்ற சொற்றொடரால் நன்கு வெளியாகின்றது. இவ்வாலம்பாக்கம், லால்குடி என்று தற்காலத்தில் வழங்கும் திருத்தவத்துறையிலிருந்து அரியலூர்க்குச் செல்லும் பெருவழியில் 12 * Epigraphia Indica Volume XVIII No.14