71 ஆவது மைலில் உள்ளது. இது பல்லவர்களது ஆட்சிக்காலங்களில் தந்திவர்மமங்கலம் என்னும் பெயரை எய்தியிருந்தது; சோழ மன்னர்களது ஆட்சிக் காலங்களில் மதுராந்தகச் சதுர்வேதி மங்கலம் என்று வழங்கிற்று; அந்நாளில் சோழ மண்டலத்திலிருந்த ஒன்பது வளநாடுகளில் ஒன்றாகிய இராசேந்திரச் சிங்கவள நாட்டின் உண்ணர்டுகளுள் ஒன்றான பொய்கை நாட்டிலுள்ள ஊராக இருந்தது. (Annual Report on Epigraphy for 1905-06 page 63) திருவெள்ள றையிலுள்ள மாற்பிடுகு பெருங்கிணற்றைப் போல இவ்வாலம்பாக்கத்திலும் மாற்பிடுகு ஏரி ஒன்றும் இருந்ததென்று கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. வெவ்வேறு ஊர்களிலுள்ள பெருங்கிணற்றிற்கும் ஏரிக்கும் ஒரே பெயரிட்டு வழங்கப்பட்டுள்ளமை ஈண்டுணரத்தக்கது. இவ்வேது பற்றித் திருவெள்ளறையில் பெருங்கிணறு தோண்டுவித்த கம்பன் அரையன் என்னும் தலைவனே தன் ஊராகிய ஆலம்பாக்கத்திலும் மாற்பிடுகு ஏரி வெட்டுவித்திருத்தல் கூடும் என்றும் எண்ணலாம். மாற்பிடுகு ஏரியை வெட்டு வித்தவன் இவனது தமயனாகிய ஆலம்பாக்க் விசைய நல்லூழானாக இருத்தல்வேண்டும் என்று கூறினும் பொருந்தும். இவ்வூர்க்குத் தந்திவர்மமங்கலம் என்னும் ஒரு பெயரிருந்திருப்பதை நோக்குங்கால் கி.பி. 780 முதல் 830 முடிய ஆட்சிபுரிந்த தந்திவர்மன் என்ற பல்லவ மன்னனால் உடன் பிறப்பினராகிய இவ்விருவர்க்கும் இது முற்றூட்டாக அளிக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்று அறியப்படுகின்றது. இனித் திருவெள்ளறையில் தோண்டுவிக்கப்பெற்ற கிணற்றின் பெயர் ஆராய்தற்குரிய தொன்றாம். கல்வெட்டில் இதன் பெயர் 'மாற்பிடுகு பெருங்கிணறு என்பது' என்றிருத்தலால் நாகரிகம் மிகுந்துள்ளதாகக் கருதப்படும் இந்நாளில் ஆற்றின் பாலங்களுக்கும் பிற கட்டிடங்களுக்கும் பெயரிட்டு வழங்குவது போல அந்நாளிலும் அத்தகைய வழக்கம் இருந்து வந்தது என்பது நன்கறியக் கிடக்கின்றது. மாற்பிடுகு என்பது ஒரு சிறந்த பட்டம் என்று புலப்படுகின்றது. மால்+பிடுகு என்ற இத்தொடர் மொழியின் பொருள் பேரிடி என்பதே யாம். இப்பட்டத்தையும் விடேல் விடுகு, பகாப்பிடுகு பெரும்பிடுகு என்ற பட்டங்களையும் பெற்று வாழ்ந்த சில முத்தரையர்களின் கல்வெட்டுக்கள், செந்தலை, திருச்செந்துறை, திருமெய்யம், மலைக்கோயில் முதலான ஊர்களில் உள்ளன. இன்னோர், பல்லவ மன்னர்கட்குத் திறை செலுத்திவந்த குறுநில மன்னர் ஆவர். எனவே, இப்பட்டங்கள் பல்லவ மன்னர்களால் இவர்களுக்கு வழங்கப் பட்டிருத்தல் வேண்டும். செங்கற்கட்டு ஜில்லா வல்லங் குகைகோயிலிலுள்ள ஒரு கல்வெட்டு, பல்லவ வேந்தனாகிய முதல் மகேந்திர வர்மன் பகாப்பிடுகு என்னும் பட்டம் உடையவனாயிருந் தனன் என்று உணர்த்து கின்றது. சைவசமயாசாரியருள் ஒருவராகிய திருநாவுக்கரச அடிகளைத் துன்புறுத்தியவன் இவ்வேந்தனேயாவன். I