பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

முதற் குலோத்துங்க சோழன்

கைப்பற்றிக் கொண்டானென்றும் கூறுவர் வேறு சிலர். கங்கைகொண்ட சோழன் மனைவி, தன்பேரனாகிய இவனைச் சுவீகாரம் எடுத்துக்கொண்டாள் என்பர் மற்றுஞ் சிலர். அதிராசேந்திரசோழன் நோய்வாய்ப்பட்டிறந்தமைக்குக் கல்வெட்டில் ஆதாரமிருத்தலாலும் நம் குலோத்துங்கன் சோழநாட்டை யடைந்தபோது அந்நாடு அரசனின்றி அல்லலுற்ற நிலையில் இருந்ததென்று கல்வெட்டுக்களும் கலிங்கத்துப்பரணியும் ஒருங்கே கூறுவதாலும் அதிராசேந்திரன் ஆட்சியில் திருமால் கோயில் கற்றளியாக ஆக்கப்பட்டிருத்தலை நோக்குங்கால் அவன் வைணவசமயத்தில் வெறுப்புடையனல்ல னென்பது நன்கு புலனாதலாலும் அவன் ஆளுகையில் சோழநாடு கலகமின்றி அமைதியாகவே இருந்தமைக்கு அவன் காலத்துக் கல்வெட்டுக்களில் போதிய ஆதாரங்கள் கிடைத்தலாலும் அவர்கள் கூறுவனவெல்லாம் சிறிதும் பொருந்தாமை காணலாம். கங்கைகொண்டசோழனுக்குப் புதல்வர் ஐவர் இருந்தனரென்பது கல்வெட்டுக்களால் தெளியக்கிடத்தலால் அவன் மனைவி தன் பேரனாகிய குலோத்துங்கனைச் சுவீகாரப் புதல்வனாகக் கொண்டன ளென்பதற்கும் இடமில்லை.