சொன்னால் நம்பமாட்டீர்கள்/தலைமறைவு வாழ்க்கை
1942 ஆகஸ்ட் போராட்டத்தில் திருவாடானை சிறையில் இருந்து மக்கள் என்னை விடுதலை செய்தததும், போலீஸ் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றதும் அந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் என் கையில் ஒரு குண்டு பாய்ந்ததும், போலீஸ்காரரிடம் இருந்து தப்புவதற்காகப் பல பகுதிகளில் ஒளிந்து மறைந்துகையில் ஏற்பட்ட காயத்துடன் திருச்சிக்கு வந்து சேர்ந்தேன்
திருச்சியில் திரு டி.எஸ். அருணாசலம் அவர்கள், இப்போது காமராஜ் மன்றம் என்ற பெயரால் இயங்கி வரும் நூல்நிலையக் கட்டிடம் அப்பொழுது ஜில்லா போர்டு ஆபீஸாக இருந்து வந்தது.
அதில் அவர் தங்கி இருந்தார். நடு இரவில் மேற்படி கட்டிடத்திற்குச் சென்று அவரை எழுப்பினேன். அவர் என்னைப் பார்த்து திடுக்கிட்டு எப்படி இங்கு வந்தாய்? என்று கேட்டார். நடந்த சம்பவங்களைச் சொல்லிக் கையில் இருந்த காயத்தைக் காண்பித்தேன்.
உடனே என்னை அவர் டாக்டர் ஜகந்நாதன் என்பவரிடம் கூட்டிச் சென்றார். திருச்சி நகரசபை சேர்மனாக இருந்த டாக்டர் ரங்கநாதன் அவர்களுடைய மாமனார்தான் டாக்டர் ஜகந்நாதன். டாக்டர் ஜகந்நாதன் அவர்கள் சிறந்த காங்கிரஸ் அபிமானி, ஆகையால் கையில் பாய்ந்திருந்த துப்பாக்கிக் குண்டை போலீஸுக்கு அறிவிக்காமல் வெளியில் எடுத்து காயத்துக்கு மருந்து போட்டுக் கட்டிவிட்டார்.
அதற்குள் போலீஸார் தேவகோட்டையிலும், திருவாடா னையிலும் சிறையில் இருந்த தப்பிய என்னை உயிருடனோ, அல்லது பினத்தையோ கொண்டு வந்தால் ரூ.10,000 பரிசளிப்பதாகப் பறை சாற்றினார்கள். இது விவரம் தெரிந்ததும் தலைவர் டி.எஸ். அருணாசலம் அவர்கள் என்னை ஒரு பாதுகாப்பான வீட்டில் தலைமறைவாக இருக்கச் செய்தார்கள்.
தலைவர் டி.எஸ் அருணாசலம் அவர்களும், நானும் பல யோசனைகள் செய்து திருச்சியில் உள்ள காவேரி பாலத்தை வெடி வைத்துத்தகர்ப்பது என்றும் அகில இந்திய ரேடியோ நிலையத்தை பாம் வைத்துத்தகர்ப்பது என்றும் திட்டம் தீட்டி அதற்கு வேண்டிய வெடிமருந்துகள் தயார் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தோம்.
இந்தக் காரியத்தை நாங்கள் செய்வதற்கு குறித்த நாளுக்கு முதல்நாள் போலீஸார் திடீரென்று டி.எஸ்.அருணாசலம் அவர்களைக் கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்ததும் நானும் தப்புவதற்காக ஏற்பாடுகள் செய்யும்போது பெரிய கம்மாள தெருவில் ஏராளமான போலீஸார் நடமாட்டம் இருப்பது தெரிந்தது. மேற்படி கம்மாள தெருவில்தான் நான் தலைமறைவாக இருந்தேன்.
அந்த வீட்டுக்கு உடையவர் ஒரு ஏணியை எடுத்து நடுவாசலில் வைத்து ஒட்டின்மீது ஏறச்செய்து வரிசையாக இருந்த வீடுகளின்வழியாக ஒட்டின்மீதே நடந்து அடுத்த தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு எல்லா வீடுகளையும் கடந்து குதிக்கச்சொன்னார்.
அவர் சொன்னதுபோல் செய்து நானும் குதித்தேன். அந்த வீட்டுக்காரர் தாயாராக வைத்திருந்த காரில் ஏற்றி என்னை கரூருக்கு அனுப்பி வைத்தார்.
கரூரில் டி.கே.எஸ்., பிரதர்ஸ் நாடகக் குழுவினரின்நாடகம் நடந்து கொண்டு இருந்தது. அந்த நாடகக் குழுவினர்களுடன் போய் நானும் சேர்ந்துகொண்டேன். டி.கே.எஸ்.சகோதரர்கள் என்னிடம் மிக அன்பாக நடந்துகொண்டு நான் தலைமறைவாக இருப்பதற்கு வேண்டிய சகல உதவிகளையும் செய்தார்கள்.
அதற்கும் ஒரு நாள் ஆபத்து வந்தது. நாடகம் பார்க்க வந்ததுபோல் சில போலீஸ் அதிகாரிகள் வந்து நான் இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். இதை அறிந்த திரு.டி.கே.சண்முகம் அவர்கள் சாமர்த்தியமாக என்னை போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து தப்புவித்து அவர்களுடைய காரிலேயே என்னைச் சென்னையில் கொண்டுவிடும்படி செய்தார்.
சென்னையில் தலைமறைவாக இருந்த திரு சா.கணேசன் அவர்களைச்சந்தித்தேன். அவர் சென்னையில் இருப்பது ஆபத்து என்று கூறி என்னை காசிக்குப் போய் தலைமறைவாக இருக்கும்படி ஏற்பாடு செய்தார். காசிக்கு என்னை இரயிலில் ஏற்றி விடுவதற்கு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு தினமணி ஆசிரியர் ஏ. என். சிவராமன் அவர்கள், திரு ஏ. கே. செட்டியார் அவர்கள். திரு. கோயங்கா முதலியவர்கள் வந்திருந்தார்கள்.
சென்னையிலிருந்து நானும் எனது நண்பரும் காசிக்கு ரயிலில் சென்றபோது இட்டார்சி என்ற ஊரில் ஒருநாள் மாலையில் இறங்கி மறுநாள் காலையில் ரயில் ஏற வேண்டியிருந்தது.
இட்டார்சி என்பது ஒரு ரயில்வே ஜங்ஷன். யுத்த காலமாக இருந்ததால் ராணுவவீரர்கள் ஏராளமாகத் தென்பட்டனர். இரவு எங்கு தங்குவது என்று தெரியவில்லை. எந்தப் போலீஸ்காரரைப் பார்த்தாலும் சந்தேகமாக இருந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது. சரி முதலில் ரயில்வே உணவு விடுதியில் சாப்பிடுவோம் என்று சாப்பிடப்போய் உட்கார்ந்தோம். அது அசைவ உணவு விடுதி. பரோட்டா, கோழி குருமா, மீன் வறுவல் என்று பலவகையான உணவு வகைகளை இருவரும் ஒரு ‘பிடி பிடித்தோம்’ பில் வந்தது. ரூபாய் அறுபது. அசந்து விட்டோம். இது வரையில் இம்மாதிரி ஓட்டலில் நாங்கள் சாப்பிட்டதுமில்லை. இவ்வளவு ரூபாய்க்கு பில் கொடுத்ததுமில்லை.
எங்கள் கைவசமோ ரூபாய் அதிகமில்லை. இப்போது அறுபது ரூபாய் கொடுத்து விட்டால் என்ன செய்வது என்று நாங்கள் இருவரும் தமிழில் பேசிக் கொண்டோம்.
எங்களுக்கு உணவு பரிமாறி பில் கொடுத்த சர்வர் எங்களை ஆச்சரியமாகப் பார்த்து “ஏன் சார் நீங்கள் தமிழ்நாடா? என்று தமிழில் கேட்டான்.
“ஆமாம் நாங்கள் தமிழ்நாடுதான், ராமநாதபுரம் ஜில்லா” என்றோம். உடனே அவன் நான் கூட ராமநாதபுரம் ஜில்லாகாரன்தான் சார் என் ஊர் சிவகங்கைக்குப் பக்கத்திலுள்ள பார்த்திபனூர்” என்றான்.
“அடடே அப்படியா சங்கதி. ரொம்ப நெருங்கி வந்து விட்டாயே, இங்கே வந்து எவ்வளவு காலமாச்சு?” என்று கேட்டேன். ‘பத்து வருஷமாச்சு, நம்ம ஊரை எல்லாம் பார்க்க வேண்டுமென்ற ஆசை வரவர அதிமாகிக்கொண்டு வருகிறது” என்று சொன்னவன், தன் குரலைத் தாழ்த்தி, “ஏன் சார், திருவாடானைப் பகுதியில் பெரிய புரட்சியாமே. இங்கிலீஷ் கவர்மெண்டே போச்சாமே, ஜெயிலை உடைத்து காங்கிரஸ் தலைவர்களை ஜனங்கள் விடுதலை செய்து விட்டார்களாமே, நம்ம ஊர் ஆளுங்க செய்யக் கூடியவங்கதான் சார். வீர மறவர் நிறைஞ்ச ஊரில்ல” என்று அடுக்கிக் கொண்டே போனான். நாங்கள் அவனைத்தடுத்து, நீயும் காங்கிரஸ்காரன்தானா?” என்று கேட்டோம்.
“என்ன சார் இப்படிக் கேட்கிறீங்க, என் பெயர் வீரபத்ரன் என் உடம்பிலும் மறவன் ரத்தம் ஓடுது. உண்மையான மறவன் ஒவ்வொருவனும் தேச பக்தி உள்ளவன்தான் சார், தேசத்துக்காக நாங்கள் எதையும் செய்வோம்.
இந்த ஓட்டலுக்கு வெள்ளைக்காரங்க, அதிலும் போலீஸ், ராணுவ அதிகாரிகள் வந்தாங்கன்னா, அவர்களுக்கு நான் சாப்பாடு பரிமாற வேண்டி வந்தால் கட்டாயம் விஷத்தைப் போட்டுக் கொடுத்திடுவேன் சார்”என்றான் ஆவேசமாக
அவனுடைய தேசபக்தியைப் பார்த்து நாங்கள் பிரமித்து விட்டோம். நாங்கள் யார் என்பதையும் இப்போது எந்தநிலையில் அங்கு வந்திருக்கிறோம் என்பதையும் சொன்னவுடன் அவன் எங்களை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டு தாரை தாரையாகக் கண்ணிர் விட்டான். அவனால் பேசமுடியவில்லை.
திருவாடானை ஜெயிலை உடைத்து மக்களால் விடுதலை செய்யப்பட்டவர்கள் நீங்கள்தானா, நீங்கள்தானா, நீங்கள்தானா என்று எங்களைத் தொட்டுப் பார்த்தான்.
பின்னர் ஓட்டல் முதலாளியிடம் எங்களைக் கூட்டிச் சென்று. எங்களைப் பற்றிய முழு விபரத்தையும் அவரிடம் சொல்லி விட்டான். “பில்லுக்கு பணம் கொடுக்க வேண்டாம். நானும் ஒரு காங்கிரஸ்காரன் தான். பிழைப்பிற்காக வேறு துணி கட்டியிருக்கிறேன். நீங்கள் பக்கத்திலிருக்கும் அறையில் தங்கிக் கொள்ளுங்கள்” என்று ஒட்டல் முதலாளி இந்தியில் சொன்னார்.
எல்லாம் வீரபத்ரன் ஏற்பாடுதான். அறையில் தங்கி யிருந்தோம். சுமார் அரைமணி கழித்ததும், அறையைத் திறந்து கொண்டு வீரபத்ரன், ஓட்டல் முதலாளி, முதலியவர்களுடன் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார்.
நாங்கள் திடுக்கிட்டுத்திகைத்தோம். ‘ஆகா மோசம் போய் விட்டோம்’ என்று நினைத்துக் கொண்டோம். வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் இனிமையான தமிழில், ‘தம்பி வீரபத்ரன் எல்லாம் சொன்னான். நீங்கள் எதற்கும் பயப்படவேண்டாம். இன்று இரவு நமது வீட்டில் தமிழ் நாட்டுச் சாப்பாடு சாப்பிடலாம் வாருங்கள்’ என்று கூப்பிட்டார்.
“அப்பாடா” என்று பெருமூச்சு விட்டோம். அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெயர் சுந்தர்சிங் என்றும், அவர் தந்தை மதுரையைச் சேர்ந்தவர் என்றும் காசியில் வியாபாரம் செய்ய வந்த குடும்பம் அங்கேயே தங்கி விட்டார்கன் என்றும் கந்தர்சிங் முழுப்பெயர் சோமசுந்தரம் என்றும் வடக்கே உத்யோகம் பார்க்க செளகரியமாக சுந்தர்சிங் என்று பெயரை வைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் ஒரு பஞ்சாபிப்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார் என்றும் வீரபத்ரன்சொல்லத் தெரிந்து கொண்டோம்.
இன்ஸ்பெக்டர் வீட்டுக்குச் சென்றோம். அவரது பஞ்சாபி மனைவி தூய தமிழில் “வணக்கம்"என்றார். அப்போதே எங்களுக்கு “அங்கு தமிழ் நாட்டு சாப்பாடுதான்” என்று புரிந்த விட்டது. இரவு சாப்பாடு முடிந்தது. காலையிலும் பலகாரம் தந்தார்கள். இன்ஸ்பெக்டர், ஓட்டல் முதலாளி, வீரபத்திரன் மூவரும் சேர்ந்து ரூபாய் ஜநூறு கொடுத்து செலவிற்கு வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். நாங்கள் புறப்பட வேண்டிய ரயில் ஏறினோம்.
அப்போது இன்ஸ்பெக்டர் சுந்தர்சிங்கின் மகன் ஐந்து வயதுப் பையன் வெளியூர் சென்றிருந்தவன் அங்கு வந்தான். அவன்தான் அவர் மகன் என்பதைத் தெரிந்து கொண்டு நான், “தம்பி உன் பெயர் என்ன?” என்றேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள் அவன் சொன்ன பதில் காந்தி என்பதாகும்.