உள்ளடக்கத்துக்குச் செல்

சொன்னால் நம்பமாட்டீர்கள்/திராவிடக் கழகத்தினர் கலாட்டா

விக்கிமூலம் இலிருந்து

திராவிடக் கழகத்தினர் கலாட்டா

1947-ல், நமது நாட்டுக்குச் சுதந்திரம் வந்தது. தமிழ் நாட்டில் காங்கிரஸ் மந்திரிசபை நடந்தாலும் காங்கிரஸ் கட்சி கலகலத்திருந்தது. திராவிடக் கழகம் பலம் பெற்று கொண்டிருந்தது. காங்கிரஸ் தொண்டர்கள் தெருவில் நடந்தால் திராவிடக் கழகத்தவர் அவர்களை நையாண்டி செய்வார்கள். வீண்வம்பிழுப்பார்கள். “ஆறு அவுன்ஸ்” என்றும் “ஐந்து ஏக்கர்” என்று கேலி செய்வார்கள். காங்கிரஸ் கூட்டங்களை நடத்தவிடாமல் திராவிடக் கழகத்தினர் கலாட்டா செய்வார்கள்.

இம்மாதிரி செய்யும் திராவிடக் கழகத்தினரைத் தட்டிக் கேட்க ஆள் இல்லாமல் போய் விட்டதனால் அந்தத் தம்பிகள் சண்டப்பிரசண்டம் செய்து கொண்டிருந்தார்கள். போலீசாரும் ஏன் என்று கேட்கவில்லை. காங்கிரஸ் அரசாங்கமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நானும் என்னைப் போனற சில காங்கிரஸ் பேச்சாளர்களும், திரு.ம.பொ.சி. அவர்களும்தான் ஆங்காங்கே நடக்கும் காங்கிரஸ் கூட்டங்களில் திராவிடக் கழகத்தைத் தாக்கிப் பேசுவோம். நான் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசுவேன். அதனால் திராவிடக் கழகத்தினர் என் மீது ரொம்பவும் காட்டமாக இருந்தனர்.

ஒரு நாள் சென்னை மயிலாப்பூரில் ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு, குளக்கரையிலுள்ள பஸ் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். என் பின்னே சிறு

கூட்டமாகச் சிலர் வந்து என்னை மிகக் கேவலமாகத் திட்டினார்கள். பேச்சும் போக்கும் அவர்கள் திராவிடக்கழகத்தினர் என்பது தெளிவாகத் தெரிந்தது.

லோகநாதன் என்ற ஒரு இளைஞர் என் சட்டையைப் பிடித்து இழுத்துக் கிழித்து, “ஏண்டா நீ தானே கூட்டங்களில் பெரியாரைத் தாறுமாறாகப் பேசுகிறாய்.” இனி அம்மாதிரி பேசினால் காலை கையை ஒடித்துவிடுவோம்.

இப்போது நீ ஒரு தமிழன் என்பதினால் (பிராமணன் அல்லாதவன்) உன்னை உயிரோடு விடுகிறோம்” என்று கூறினார். இம்மாதிரி இம்சைகளுக்கிடையே பஸ் ஏறினேன். பஸ்ஸை சுற்றி நின்றுகொண்டு மேற்படி நபர்கள் பலவாறு கூச்சலிட்டார்கள். பஸ் கண்டக்டரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு, “பேமானி” என்றும் “கழுதை” என்றும் திட்டி, காங்கிரஸ் மீது வசைபாடினார்.

இவ்வளவையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு கிழிந்த சட்டையுடன் தலைவர் காமராஜ் இல்லத்திற்குச் சென்றேன். என் அலங்கோல நிலையைப் பார்த்துப் பதறிப்போன காமராஜ் விஷயத்தை விசாரித்துத் தெரிந்து கொண்டார். அவருக்கு அபார கோபம் வந்துவிட்டது.

டெலிபோனை எடுத்து அப்போதைய முதலமைச்சராக இருந்த திரு. குமாரசாமி ராஜா அவர்களைக் கூப்பிட்டு, “என்ன கவர்ன்மெண்ட் நடத்துறீங்கண்ணே, கதர் சட்டை போட்டவன் வீதியிலே நடக்க முடியலே, மந்திரிங்க மட்டும் காருலே கொடி போட்டுக்கிட்டு போனாபோதுமான்னேன்” என்று கூறி என் சம்பந்தமாக நடந்ததைச் சொல்லி, “இதற்கு உடனே ஏதாவது செய்தாகணும்” என்று சொல்லிவிட்டு ‘டக்’ கென்று போனை வைத்துவிட்டார்.

நான் உடனே ஐயா இது என் விஷயம் மட்டுமல்ல, தமிழ் நாடு பூராவும் காங்கிரஸ் தொண்டர்கள் இந்த மாதிரி அவஸ்தைக்குள்ளாகி இருக்கிறார்கள். அதற்கு மொத்தமாக நாம் கட்சி ரீதியாக ஏதாவது செய்ய வேண்டும்.

போலீஸ் நடவடிக்கை இதற்கு நிரந்தர பரிகாரமாகாது. என்றேன். “என்னசெய்யலாம், சொல்லுங்க” என்றார். “திராவிடத் கழகத்தை எதிர்த்து ஒரு இயக்கம் நடத்தினால் காங்கிரஸ் தொண்டர்களுக்குப் புதிய தெம்பு உண்டாகும். கட்சிக்கும் புதிய பலம் உண்டாகும்” என்றேன்.

ஒரு கட்சியை எதிர்த்து இயக்கம் நடத்துவது, அரசியல் ரீதியாகசரியாகச் இருக்காதே, திராவிடக் கழகம் பிரிவினைக் கட்சிதானே அதனால் “பிரிவினை எதிர்ப்பு இயக்கம்” என்று நடத்தினால் என்ன?” என்று கேட்டார்.

“பிரிவினை எதிர்ப்பு” என்று நடத்தினால் பரபரப்பு இருக்காது. “திராவிட இயக்க எதிர்ப்பு” என்று நடத்தினால்தான் பரபரப்பு இருக்கும்” என்று சொன்னேன்.

“சரி, அப்படியானால் உடனே வேலையைத் தொடங்குங்கள்,” என்று சொல்லி ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்து, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு போன் செய்து, எனக்கு ஒரு செவர்லட் வான் ஒன்றைக் கொடுக்கும்படியும், டிரைவர் ஏழுமலை என்பவரை வண்டியை ஓட்டும்படியும் ஏற்பாடு செய்தார்.

“டிரைவர் ஏழுமலை சிறந்த காங்கிரஸ் தொண்டர். உணர்ச்சி உள்ளவர். கலகம் வந்தாலும் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கக் கூடியவர்” என்று காமராஜ் சொன்னார். மேலும், பிரிவினை எதிர்ப்பு என்றால் நானே தலைமை வகித்து இயக்கத்தை நடத்தலாம்.

அது அரசியல் ரீதியாக சரியாக இருக்கும். திராவிட இயக்க எதிர்ப்பு என்றால் நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து கொண்டு ஒரு கட்சிக்கு எதிர்ப்பு என்ற இயக்கத்தை நடத்தக்கூடாது. ஆகவே இதை நீங்களே நடத்துங்கள். நான் என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன்” என்றார்.

“அப்படியானால் ம.பொ.சி. அவர்களைக் கேட்கட்டுமா?” என்றேன். “சரியான பொருத்தமானவர்தானே. உடனே வேண்டியதை அவரை ஆலோசித்துச் செய்யுங்கள்,” என்றார். நான் தலைவர் காமராஜ் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்தேன். வீட்டில் மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்து காத்துக் கொண்டிருந்தார்.

போலீஸ் கமிஷனர் கூட்டிக் கொண்டு வரச் சொன்னதாகச் சொன்னார், கமிஷனரைப் போய்ப்பார்த்தேன். மயிலாப்பூரில் நடைபெற்ற விஷயங்களைச் சொன்னேன். “ஆட்களை ஞாபகமிருக்கிறதா?” என்று கமிஷனர் கேட்டார். “ஞாபக மிருக்கிறது” என்றேன். “அப்படியானால் கலாட்டா செய்த பகுதி வழியாக மீண்டும் செல்லுங்கள். கலாட்டா செய்தவர்கள் தட்டுப்பட்டால் அவர்களைக் கூப்பிட்டு வம்பிழுங்கள்” என்றார் போலீஸ் கமிஷனர். அவர் சொன்னபடியே செய்தேன்.

கலாட்டா செய்த லோகநாதனைக் காணோம். ஆனால் மற்றவர்கள் இருந்தார்கள். மீணடும் என்னை வந்து சுற்றிக் கொண்டார்கள். அப்போது சாதாரண உடையில் (மப்டியில்) இருந்த போலீசார் பலர் நாலாபக்கமிருந்தும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து மேற்படி கலாட்டாக்காரர்களைச் செம்மையாக உதைத்துப் போலீஸ் வேனில் ஏற்றி, போலீஸ் ஸ்டேஷனுக்குத் தள்ளிக் கொண்டு போய் விட்டார்கள்.

என்னைப் போலீஸ் கமிஷனர் தன் வண்டியில் ஏற்றி என் வீட்டில் விட்டுவிட்டுச் சென்றார். இரவு 10 மணி இருக்கும். தலைவர் காமராஜ் அவர்கள் வீட்டிலிருந்து. உடனே வரும்படி எனக்கு போன் வந்தது. போனேன். அங்கு சுமார் இருபது குடும்பத்தினர். வயதான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கூடியிருந்தார்கள்.

என்னைப் பார்த்ததும் தலைவர் காமராஜ், “இவங்கள்ளாம் இன்று கைது செய்யப்பட்டிருக்கும் திராவிடக் கழகக்காரர்களின் குடும்பத்தினர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் கார்பொரேஷனிலும், அரசாங்கத்திலும் வேலை செய்பவர்களாம். தண்டிக்கப்பட்டால் வேலை போய்விடுமாம். அந்தப் பிள்ளைகளை நம்பித்தான் இவர்கள் குடும்பம் இருக்கிறது என்கிறார்கள்.”

இனிமேல் இம்மாதிரி நடக்காமல் நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம் என்கிறார்கள். முதலமைச்சர் குமாரசாமி ராஜாவைப்பார்த்தார்களாம். அவர் என்னைப் போய் பார்க்கும்படி சொன்னாராம். சம்பந்தப்பட்டவர் தாங்கள். ஆகவே தங்களைக் கேட்காமல் எதுவும் நான்சொல்லக் கூடாதல்லவா? அதனால்தான் கூப்பிட்டு விட்டேன். “என்ன, மன்னிச்சு விட்டுவிடலாமா?” என்று மடமடவென்று கேட்டார் தலைவர் காமராஜ்.

“சரி, இனிமேலாவது காங்கிரஸ் தொண்டர்களைக் கேவலப் படுத்தாமல் இருந்தால் போதும்” என்றேன். காமராஜ் அவர்களின் கட்டளைப்படி கலாட்டா செய்த தோழர்கள் இரவே விடுதலை செய்யப்பட்டார்கள். மறுநாள் காலை. மயிலாப்பூர்திராவிடக்கழக பிரமுகர் லோகநாதன் அவர்கள் என் வீட்டிற்கு வந்து நடந்ததற்கு வருத்தம் தெரிவித்தார்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். அதே லோகநாதன் சில ஆண்டுகளில் காங்கிரசில் சேர்ந்து எனது நெருங்கிய நண்பராக இறக்கும் வரை இருந்தார். காமராஜரின் பக்தராகக் கடைசி வரை இருந்தார். காமராஜரிடம் அவர் பக்தி கொள்ளக் காரணமாக இருந்தது. நான் மேலே குறிப்பிட்ட சம்பவமும் காமராஜ் அவர்களின் மன்னிக்கும் குணமுமேயாகும்.