உள்ளடக்கத்துக்குச் செல்

சிந்தனை துளிகள்/201-300

விக்கிமூலம் இலிருந்து

201. “ஒய்வு எடுக்காது உழைக்கும் உழைப்பின் தரம் குறையும்”.

202. “இன்றைய சந்தையில் மனிதர்கள் கிடைக்கவில்லை”.

203. “எல்லா இனங்களும் வளர்கின்றன. தமிழினம், இருந்த புகழையும் இழந்து வருகிறது”.

204. “நொய்யரிசி கொதி பொறுக்காதது போல, அற்ப மனிதர்கள் சொல் பொறுக்கமாட்டார்கள்!”

205. “தமிழக வரலாற்றில் இன நலத்திற்காக வாழ்ந்த ஒரே தலைவர் அறிஞர் அண்ணாதான்”.

206. “மிகச் சிறிய செயல்களையும் கவனத்துடன் செய்து பழகினால் மிகப்பெரிய காரியங்களையும் சிறப்பாகச் செய்ய முடியும்”.

207. “நிர்வாகம்” என்ற சொல்லில் வளர்த்தல், பாதுகாத்தல், நீக்குவன நீக்குதல், பயன்படுத்தல் ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன.

208. “உடம்பு நல்ல நிர்வாக முறைக்குச் சிறந்த எடுத்துக் காட்டு.”

209. “சதைச் சோம்பலில் சுகம் கான்பவர்கள் நுகர்வார்கள்; களிப்பார்கள். உழைக்கமாட்டார்கள் மகிழ்வாக இருக்கமாட்டார்கள்.”

210. “களிப்பும் மகிழ்ச்சியும் வேறு, வேறு. களிப்பு காரண காரியங்களுக்குக் கவலைப் படாமல் உன்மத்தனைப் போல் களித்திருத்தல், மகிழ்ச்சி, என்பது அறிவார்ந்த நிலையில் மகிழ்தலாகும்.”

211. “இனம்” என்ற பரந்த சொல் இன்று “சாதி’ என்ற அளவுக்குள் குறுகிவிட்டது.”

212. “பேய் பிடித்தவன் ஆடினாலும், குற்றம் பேய் பிடித்தவனிடம் இல்லை. பேயினிடமேயாம்.”

213. “இன்று தீண்டாமையைக் கடுமையாக அனுட்டிப்பவர்கள் பிற்பட்ட சமுதாயத்தினரேயாம். அதாவது தேவர், வன்னியர் முதலிய சமுதாயத்தினர். ஆனால், இந்தச் சாதி முறையைக் கற்பித்தவர்கள் நல்லவர்கள் போல நடிக்கிறார்கள்.

214. “பழகும் எல்லையின் பரப்பளவு அதிகம் ஆக ஆக குற்றம்-குறைகானும் மனப்போக்கு இருப்ப தில்லை. எல்லை குறுகல் அடையும்போது குற்றங்களே தெரியும். ஏரிகளின் தண்ணிரில் தூசி பார்ப்ப தில்லை; குவளைத் தண்ணிரில் பார்க்கிறோம் அல்லவா?

215. “திருடர்”கள் மான அவமானத்துக்கு அஞ்சிய சமுதாயத்திற்குத் தரும் தொல்லை அளப்பில”.

216. “சீனாவைப் போல சராசரி மனிதனின் வருவாய்க்கு ஏற்ப, வாழ்க்கை நுகர்வுகள் அமையா தொழியின் ஒழுக்கங்களைக் காண்பது இயலாது”.

217. “இன்றையச் சூழ்நிலை திருடனைவிட, திருட்டுக் கொடுத்தல் அஞ்சச் செய்கிறது. இஃதொரு பரிதாபமான நிலை. ஆனால் இந்த நிலை தவிர்க்க இயலாதது. பொதுவுடைமைச் சமுதாயம் அமைந்தால் இந்த நிலை மாறலாம்”.

218. “ஏரியில் வீழ்ந்த துரும்பின் கதியே வஞ்சனை மனவலையில் வீழ்ந்த மனிதனின் கதியும்”.

219. “உடல் சுற்றிய ஆடையே உன் மானம் காக்குமா? உயர் ஒழுக்கமே உன் மானம் காக்கும்”.

220. “வாய் வேலை செய்யத் தவறியதில்லை. ஒயாது ஓவர்டைம் கூட வேலை பார்க்கிறது. காதுகள் இரண்டும் கடமையைச் செய்கிறது. அதனால் உடல் வளர்கிறது. ஊர் வம்பு வளர்கிறது. உணர்வு வளர்ந்தபாடில்லை”.

221. “நெஞ்சே நித்தம் நித்தம் கவலை ஏன்? கவலையில் மூழ்கி முதலை இழப்பானேன்? எழுந்திரு! உழைத்தால் கவலையைக் கடந்து வாழலாம்”.

222. “இறைவா! இந்த தடவை மட்டும் மன்னித்து விடு என்று எத்தனை தடவை உன்னிடம் மன்றாடிக் கேட்டிருப்பேன்? எத்தனை தடவை நீயும் மன்னித் தாய்? ஆனால் நான் எழுந்து நடப்பதாகத் தெரிய வில்லையே மன்னிபுப் பொருளற்றுப் போயிற்றே!”

இறைவா! பொருளற்ற பொக்கையானேன்! எடுத்தாள்க!”

223. “நானிலத்தை இயக்குவது நன்றி. நன்றியில் வளரும் நட்பு. நன்றி நல்லதே படைக்கும், உளம் இழந்த உணர்விழந்த வாயினால் சொல்வதன்று நன்றி. வாழ்க்கையின் படைப்பாற்றலில் நிற்பது நன்றி.”

224. “ஒருவர் திரும்ப திரும்ப ஒரே தவறைச் செய்தால் அது வேண்டும் என்றே செய்யப் பெறுவதாகும். இத்தகையோர் உறவு பயனற்றது.”

225. “ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவர்களிடமிருந்து நீ தப்புவதே உன்னைச் காப்பாற்றிக் கொள்ளும் வழி.”

226. "சமய அனுபவங்களின் தரத்தை அளந்து காட்டும் அளவுகோல் நாகரிகமே”

227. “உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல் எளிதான காரியமன்று. இந்த முயற்சியில் வெற்றி பெற்று விட்டால் மூவுலகையும் ஆண்டு அனுபவிக்கலாம்.”

228. “வாழ்க்கைக்குரிய விலை கொடுக்காமல் வாழ ஆசைப்படுவது விபசாரத்திற்குச் சமம்”.

229. “நல்லெண்ணம்” என்பது ஒருவழிப்பயணம் அல்லவே! இருபாலும்தானே!”

230. “ஒரு தடவை கெட்டவர்கள் கெட்டே போய்விட மாட்டார்கள். அவர்கள் நல்லவர்களாக ஆகலாம். ஆனால் தமது நிலையை எண்ணி வருந்துகிறவர்களாக இருத்தல் வேண்டும்”

231. “எந்த ஒன்றையும் அறிவோடு உணர்வோடு எடுத்துக்கொள்கிறவர்கள் தவறு செய்யமாட்டார்கள்”.

232. “மனிதனின் மேல்நிலைக் கருவியே மனம். இது மிகவும் சாதாரணமானது. மனத்தைக் கடந்ததாக உள்ள புத்தி, சித்தம் என்ற கருவிகள் வரையில் செய்திகளைக் கொண்டு செல்லும் ஆற்றல் தேவை. அப்போதுதான் குற்றங்கள் குறையும். வெற்றிகளையும் பயன்களையும் அடையலாம்”.

233. “இந்தியச் சமூகத்தில் சாதியே எல்லாம். அறிவுக்குக்கூட மதிப்பில்லை. நாலு செய்தி நன்றாகத் தெரியாதவர்கள் கூட பார்ப்பனராக இருந்தால் ‘ஜகத்குரு'வாகி விடலாம்”.

234. “இன்னும் பார்ப்பனர்கள் பெயரளவில்தான் தமிழர்கள். கள்ளிக் கோட்டையில் வாழும் பார்ப்பனர்கள் மலையாளிகளுடனேயே இணைந்து வாழ்கின்றனர். தமிழர்களுடன் அல்ல. இது அவர்கள் இயக்கமாம்”.

235. “தவறுகளைக் கூட ஏற்கலாம். ஆனால் முறைகேடுகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது.”

236. “வாழ்க்கை இன்பத்திலோ, துன்பத்திலோ தேங்கி நின்று விடுதல் கூடாது. பகலும் இரவும் ஒன்றையொன்று விரட்டிக்கொண்டு முந்துவது போல வாழ்க்கை ஒடிக் கொண்டே இருக்கவேண்டும்.

237. “வேலையைத் தேடுதல்-எடுத்துச் செய்தல் என்ற ஆர்வம் இல்லாதவர்களும் சோம்பேறிகளே!”

238. ‘சுகம்’-அனுபவிக்கும் எண்ணம் வந்து விட்டாலே உழைப்பு ஒழுக்கம் எல்லாம் பறந்து போய்விடும்.”

239. “பேய் உண்டோ, இல்லையோ சோம்பேறிக்கு உள்ள சுயநலம் பேயேயாம்.”

240. “நல்லதாக இருந்தால் மட்டுமே மக்கள் ஏற்பார்கள் என்பதல்ல. அந்த நல்லது அவர்களுக்கு எப்படிப் பயன்படுகிறது என்பதையும் பொறுத்ததே யாம்.”

241. “நல்லனவற்றைப் பழக்கங்களாகவும் வழக்கங்களாகவும் மாற்றியமைத்தல் கடமை”.

242. “உடலை வருத்திக் கொள்ளும் அளவுக்கு உறுதி இல்லையானால் முறையாகக் கடமைகளைச் செய்ய இயலாது.”

243. “எந்த ஒரு செயலையும் நோன்புபோல் பிடிவாதமாக எடுத்துக்கொண்டு செய்யும் மனப்போக்கு இருந்தால்தான் கடமைகளைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.”

244. “ஒரு மூச்சு கொள்முதல், ஒரு மூச்சு விடுதல் இதைப் போல் வாழ்க்கையில் எந்த ஒரு செயலிலும் கொள்முதலும் விடுதலும் இருக்கவேண்டும்.”

245. “காரியங்கள் நடைபெற வேண்டுமானால் உளப்பூர்வமான முயற்சி தேவை”.

246. “வேலை செய்வோரெல்லாம் முயற்சியுடையோர் அல்ல. முயற்சி என்பது தடைகளையும் இன்பங்களையும் பாராது, மூச்சடக்கி கருமமே கண்ணாகச் செயற்படுதலாகும்.”

247. “முயற்சி என்பது ஏற்றி வைத்த சுமையுடன் ஒரு மேட்டு நிலத்தில் ஏறும் எருதுகள் மூச்சடக்கி முழங்காலிட்டு முன்னேறுதலைப் போன்றது.”

248. “மனித முயற்சிகள் தோற்கலாம். ஆனால், மனிதன், தோற்கக் கூடாது.”

த-3

249. “மனித முயற்சிகள் படைக்க வேண்டிய நுகர் பொருளை-செயற்கையை-ஆன்மீகத்தால் ஈடு செய்யக்கூடாது. அதற்கு முயற்சியே தேவை. ஆன்மீகம் என்பது ஆன்மாவின் தேவைகளை ஈடு செய்ய வேண்டும்.”

250. “இன்றைய ஆன்மீகம் ஆன்மாவைப் பற்றியே கவலைப்படவில்லை. கடவுளைப் பற்றியே கவலைப்படுகிறது; இது தவறு.”

251. “கடவுளைப் பற்றிய கவலை மனிதனுக்கு எதற்கு? முதலில் அவன் மனிதனைப் பற்றி கவலைப் படட்டும்.”

252. “சித்துக்களைக் காட்டி ஆன்மீகத்தை வளர்ப்பது-செயற்கையாக மூச்சுவிடுதலைப் போலத்தான்.”

258. “ஞானம் கண்ட உண்மைகளை அனுபவத்திற்குக் கொண்டுவரும் பணியை விஞ்ஞானம் செய்கிறது.”

254. “நெடிய பகை கொள்ளுதல், என்றும் தோல்வியையே தரும் நெடிய பகையைத் தவிர்த்திடுக.”

255. “தமிழ் நாட்டில் சாமியார்கள் சண்டை மலிந்துவிட்டது. துவரத் துறத்தல் இன்மையால் வந்த விளைவு.”

256. “எவ்வளவு உயர்ந்தவனாக இருந்தாலும் தனி மனிதன், தனிமனிதன்தான் கூட்டுச் சிந்தனை, கூட்டுச் செயல்களுக்குரிய பலன் கிடைக்காது.”

257. “சமூக அநீதிகளை எதிர்த்தே சமயம் தோன்றியது. பின் அதுவே சமூக அநீதியின் உருவமாக மாறிவிட்டது.”

258. “மற்றவர் பற்றிய இகழ்ச்சியை விரும்புகிறவன், புகழுக்குரியவன் அல்ல.”

259. “உடலுயிர் வாழ்க்கைக்குக் காற்றை இடையிடின்றி சுவாசிப்பது போல, உயிர் இறைவனை சுவாசித்தல் வேண்டும்.”

260. “அறிவுக்கு இசைந்து வராத வளர்ச்சிக்கு தொடர்பில்லாத வரையில் பற்றாக்குறை நீடிக்கும் வரையில் மனித உழைப்பு பயன் தரவில்லை என்றே பொருள்.”

261. “உழைத்தால் போதாது; பொருள் ஈட்டினால் போதாது. உழைப்பும் பொருளும் பயன் தரும் நிலையினை அவ்வப்பொழுது அளந்தறிதல் வேண்டும்.”

262. “மனிதர் பிறந்த நாள் முதல் தொடர்ச்சியாக உண்கின்றனர். ஆனால் தொடர்ச்சியாக யாதொரு கடமையையும் செய்வதில்லை. எதிலும் தொடர்ச்சி இல்லையேல் வெற்றி இல்லை.”

263. “வயிறு தேவையை அறிவித்துப் பெறுகிறது. இயற்கைக்கு வாழ்க்கையின் மீது இருந்த பற்றின் காரணமாக உடல் வாழ்க்கைக்குத் தேவையானக் காற்றை, உணவை தாமே பெறும் உறுப்புக்களைத் தந்துவிட்டன.

ஆனால் அதுபோல் மூளையும் மனமும் செயற்படுவதில்லை. வாழ்வாங்கு வாழும் முயற்சி மனிதனுடையதே.”

264. “பெண் தனித்திருக்க முடியாது என்ற கருத்து பிழையானது.”

265. “உனது வருத்தத்தைக் கடுஞ்சொற்களால் காட்டாதே. சொல்லும் பாங்கில் காட்டு!"

266. யூகத்தின் அடிப்படையில் மற்றவர் மீது பழி பாவங்களைச் சுமத்துவதற்கு முட்டாள்கூட முயற்சிக்கிறான்.”

267. “உடற்பயிற்சி வேலையாக மாறும் நாளே உண்மையாக வாழத் தொடங்கும் நாள்.”

268. சஞ்சித வினை; ஒழுக்கமின்மை; பிராரத்துவ வினை; ஆர்வமின்மை; ஆகாமிய வினை; வறுமை.”

269. ஒரு நாள் கடனாளியாக வாழத்தலைப் பட்டுவிட்டால் எப்போதும் கடனாளிதான்.

270. “பர்லாங்கு கற்களில் ஊர் பெயர் இருப்பதில்லை. ஆனால், மைல் கல்லில் ஊர்ப்பெயர் இருக்கும். அதுபோல, விநாடியில் செய்த வேலைகளில் வேண்டுமானால் பயன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாள் முழுதும் செய்த வேலையில் பயன்பாடு தெரியவேண்டும். அப்படி பயன்பாடு கட்புலனுக்கு வராதுபோனால் வேலை செய்ததாக கருத முடியாது.”

271. “ஒரு வேலையை எண்ணியபடி பயனுடையதாகச் செய்து முடிப்பதற்கே வேலை என்று பெயர்.”

272. “கால இழப்பு, பொருள் இழப்பு, மானிட இழப்பு ஆகியவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் வழக்கம்போல உண்டு உடுத்து வாழ்கிறவன் உபயோகப்படமாட்டான்.”

273. “விதிகளைப் பின்பற்றினாலே பல சிக்கல்களைத் தவிர்த்துவிடலாம்.”

274. “காதலின்பம் என்பது கடவுள் நெறிக்கு மாறானதல்ல.”

275. “அன்று மணிமேகலை தொடங்கிய பசி நீக்கப்பணி, இன்னமும் நிறைவேறவில்லை.”

276. “இன்புறும் வேட்கை மிருக வேட்கை; இன்புறுத்தல் அருள் தழிஇய வேட்கை”.

277. “ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வளரத் தூண்டி துணை செய்கின்ற நெம்புகோல்கள் போன்ற தோழர்கள் அவசியம் தேவை”.

278. “பெண்மைக்கு அனைத்துலகிற்கும் தாய்மை நிலை தாங்கும் பேருள்ளம் தேவை”.

279. “பொறுப்புக்களை உணராதவர்கள் ஒரு நூறுபேர் இருந்தாலும் பயன் இல்லை”.

280. “கீழ் மக்கள் கீழ் மக்களே! அவர்களைத் திருத்துதல் அரிது என்ற பழமொழி உண்மையே என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் வளரும் அறிவியல் உணர்வு மறுக்கிறது”.

281. “சாதாரணக் காலங்களில் நாடாதவர்கள் பணம் தேவைப்படும்பொழுது மட்டும் வந்துவிடுகிறார்கள்”.

282. “விதிகள், முறைகள் தவிர்க்க இயலாதவை இவைகளைத் தவிர்க்க விரும்புபவர்கள் ஒழுக்கக் கேடர்களாகத்தான் இருக்கவேண்டும்”.

283. “நாள்தோறும் காசுகளை எண்ணிக் கூட்டி வைத்துப் பழகினால் செல்வம் பெருகும்”.

284. “அறிவு, அன்பு, ஒழுக்கம் - இவை செயலாக்க வடிவம் பெற்றால்தான் பயன் உண்டு”.

285. “தனித்தமிழ் பேணுவதில் கொங்குநாடு புகழ்பெற்றது”.

286. “நாள்தோறும் பழக்கவழக்கங்களை ஆராய்ந்து புதுப்பித்துக் கொள்ளுதல் வேண்டும்”.

287. “ஆற்றலைத் தருவது ஆர்வம்: ஆர்வத்தைத் தருவது, வாழ்க்கையின் மீது ஏற்படும் ஆசை. ஆசைகள் ஆர்வங்களாக மாறவேண்டும். ஆர்வங்கள் அயரா உழைப்புக்களாக மாறவேண்டும். இதுவே வாழ்வு”.

288. “துய்த்தலைத் தடுத்தல் வளர்ச்சியைக் கெடுக்கும்; துய்த்தற்குரிய பொருளைப் பெற முயலும் ஆர்வமின்மை, வறுமையைத் தரும். வறுமை, தலை விதியை நம்பத்துண்டும். இவையெல்லாம் முறை பிறழ்ந்த நிலை”.

289. “எந்த ஒன்றிலும் கைப்பிடியான பிடிப்பு இல்லையானால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்காது”.

290. “எதையும் முறையாகச் செய்யவேண்டும் என்ற ஆர்வம் இல்லையானால் தவறுகள் நிகழ்வதைத் தவிர்க்க முடியாது”.

291. “திடீர்” என்ற வார்த்தை சோம்பேறிகளின் ஒழுக்கக் கேடர்களின் வார்த்தையாகும்”.

292. “அலட்சியங்கள் கோடிக் கணக்கில் இழப்பைத் தரும்”.

293. “கடமைகளைச் செய்வதில் புத்துணர்ச்சி மிக்க ஆர்வம் தேவை”.

224. “அறிவுக்குத் தொடர்பில்லாத உடல் இயக்கத்தில் ஒழுங்கு மிகுதி. உதாரணத்திற்குச் சாப்பிட மறப்பதில்லை! ஒரு வேளை உணவும் தவிர்வது இல்லை! ஆனால், உயிரியக்கத்தில் அறிவோடு தொடர்புடைய உயிரியக்கத்தில் எத்தனை மறதிகள்! தவறுகள்!”

295. “தாமே வாழத் தெரியாதவர்களால் சமுதாயத்திற்கும் கேடு வரும்”.

296. “யாருக்கும் கடனாளியாக உரிமை இல்லை; மற்றவர்களையும் கடனாளியாக்கக்கூடாது”.

297. “மனிதன் ஏமாற்றுவதில் காட்டும் புத்தி கூர்மைகளைக் காரியங்களில் காட்டினால் உலகத்தை சொர்க்கமாக்கி விடலாமே!”

298. “புத்தி கெட்டு, காரியங்கள் செய்யாமல் விட்டதால் அழிவு ஏற்பட்டதை காரியங்கெட்டுப் போச்சு என்கிறோம்”. (அண்ணாமலை)

299. “பொருள் உற்பத்தி செய்யப் பெறுவது; படைக்கப் பெறுவது. பொருள் உற்பத்திக்கு அறிவு தேவை. அறிவு பெற விழிப்புணர்வு தேவை”.

300. “நம்முடைய இயலாமைகளை - இழிவு களை இயற்கை என தாங்கிக் கொள்ளும் மனோ நிலை இருக்கிறவரையில் முன்னேற்றம் இல்லை”.

"https://ta.wikisource.org/w/index.php?title=சிந்தனை_துளிகள்/201-300&oldid=1055643" இலிருந்து மீள்விக்கப்பட்டது