சிந்தனை துளிகள்/101-200

விக்கிமூலம் இலிருந்து

101. “இராமன், இராவணனிடத்தில் காட்டிய பண்பாட்டையும் தருமன், துரியோதனனிடத்தில் காட்டிய பண்பாட்டையும் இன்றைய சமுதாய வாழ்க்கையில் காண முடியவில்லையே!”

102. “தண்ணிரில் மிதந்து செல்வது தெப்பம் தண்ணிரின்மையால் நிலத்தொடு தொடர்பு கொண்டு நிற்கும் நிலைத் தெப்பம் என்று கூறினாலும் அது தெப்பமாகாது. அதுபோலத்தான் சாதி, மொழி, சமய வேறுபாடுகளால் பிணக்குண்டு வாழும் சமுதாயத்தில் ‘தேசியம்’ என்பது”.

103. “கவிஞனுக்குப் பெருமை அவன் தன் மாணாக்கனாலேயே என்பதற்கு கம்பன் பெருமை எடுத்துக்காட்டு”.

104. “துறவு” என்பது எல்லோருக்கும் உரியது. துறவின் வழிதுய்த்தல் நிகழும் பொழுதுதான் துய்த்தல் இன்ப மயமாகிறது”.

105. “சமூக வாழ்க்கையின் சுதந்திரம் என்பது கட்டுப்பாடுகளுக்குட்பட்டதே!”

106. “அரைகுறைகள் மற்றவர்கள் சொல்வதை மதித்துக் கேட்கமாட்டார்கள்”.

107. “உரிமைகள் உறவின் அடிப்படையில் தோன்றும் பொழுது அருவெறுப்பைத் தருவதில்லை”.

108. “ஊராட்சி மன்றத்தின் நிதிகள் ‘ஊர்’ என்ற பெயரில் கொள்ளையடிக்கப்படுகின்றன”.

109. “வலிமையற்றோர் அனைவரும் சாதி உணர்வுகளிலிருந்து விடுதலை பெற்று ஓரணியாகத் திரளும்போதுதான் நேர்மை தவறிய வல்லாளர்களாகிய மேட்டுக் குடியினரைத் திருத்தி ஆள முடியும்”.

110. “பெரும்பாலும் பழக்கங்கள் என்பன முன்னேற்றத்திற்குத் தடையாய் அமைவனவேயாம்”.

111. “சிதம்பரம் திருச்சபையில் திருமுறை ஒதும் மரபல்லவாம். ஒதக்கூடாதாம். ஆனால் மனிதரைப் புகழ்தல், மாலை சூட்டல், காசுகள் பெறுதல் ஆகிய எல்லாம் சபையில் செய்யலாமாம். இது ஒரு வினோதமான மரபு”.

112. “ஒரு சிலராவது உன்னுடைய கொள்கைகளுக்கு உடன்பட்டு ஆவேசமுடையவராக ஒத்துழைத்தால்தான் எண்ணங்கள் நிறைவேறும்”.

113. “காதல் மனைவி கிடைப்பதிலும் அருமை, நல்ல தோழர் கிடைப்பது”.

114. “காஞ்சிபுத்தில் இந்திய சமயக் கலைல விழாவாம். இந்து சமயத்திலிருந்து இந்திய சமயத்திற்கு மாறியுள்ளார்? ஏன்? ‘இந்து’ பெயர் வெறுப்பாளர்களுக்கு இஃது ஒரு வெற்றி!”

115. “காஞ்சிபுரம் புதுப் பெரியவாள் தொடங்கியுள்ள இந்திய சமய இயக்கத்தில் பெளத்தம் ஜெனம் சேர்கிறதா? இல்லையா? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்”.

116. “வலிமையற்ற மனம் எப்போது கெடும் என்று கூற முடியாது. எப்போதும் கெடலாம்”.

117. “பெண், தற்கொண்டானைப் பேணுதலே கணவனின் கற்புக்கு அரண்” என்னும் திருவள்ளுவம் வாழ்க்கையின் உண்மை”.

118. “எந்த ஒரு கடமையையும் முறையாகக் காலத்தில் செய்யாதவர்கள் பலருக்குத் தொல்லைகளைத் தருவர்”.

119. “காலம்” என்ற உணர்வே இல்லாதவர்களின் உறவு, பல இழப்புக்களைத் தரும்”.

120. “மனித குலத்தில் முதலில் தோன்றியது கடவுள் நம்பிக்கையே. கடவுள் நம்பிக்கையின் வழியாக மதங்கள்-மதத் தலைவர்கள், புரோகிதர்கள் தோன்றிய பிறகு கடவுள் சுரண்டும் சாதனமாக மாறியது. அதற்குப் பின்தான் நாத்திக நெறிகள் தோன்றுகின்றன. இது உலகாய மதத்திற்கு உரிய தன்று”.

121. “சாதாரண மக்களிடத்தில் இடம் பெற முடியாத சமய நெறி வரலாற்றில் நிற்காது. கடவுளை நினைந்து வழிபடக்கூடப் புறத்தே ஒரு வடிவம் சின்னம்-பெயர் தேவைப்படுவதால் பொருளை முதலாகக் கொண்டதுதான் வாழ்வியல் என்பது உண்மையாகிறது”.

122. “கொள்கை வழிப்பட்ட இயக்கங்கள், பிரச்சாரம் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை”. “அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொள்கையில் தெளிவுள்ளவர்களாக விளங்குவதும் அக்கொள்கையைத் தமது வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகுவதுமே போதும்”.

123. “நமது சமயம் ஒரு காலத்தில் ஆற்றல் மிக்குடைய இயக்கமாக இருந்தது. காலப்போக்கில் அது அப்பட்டமான நிறுவனங்களாகி வலுவிழந்து போயின”.

124. “உலகின் பிற சமயங்கள் ஆசிரியர்மாரைப் பாராட்டுகின்றன. நாம் அதைச் செய்யாதது ஒரு பெரிய குறை”.

125. “வைணவ பட்டாசாரியர்கள், மதத் தலைவர்கள் ஸ்மார்த்தமாகிய புல்லுருவியைத் தம்முடைய சமயத்தில் அனுமதிக்கவில்லை. சைவத்தில் புல்லுருவிதான் மிச்சம்”.

126. “ஊருக்கு உதவி செய்ய முயன்று முறை மன்றத்துக்குச் செல்ல வேண்டியதாயிற்று”.

127. “தமிழினம், நடுவணரசின் பொறுப்புகளுக்குப் போகாது போனால் வளம் சுருங்கி வாழ்விழக்கும்”.

128. “ஒரு சமூகம் முன்னேற வேண்டும் என்றால் அந்தச் சமூகத்திற்கு முன்னேற வேண்டும் என்ற ஆசை வேண்டும்”.

129. “சலுகைகளால் ஒரு சமுதாயத்தை வளர்த்து விட முடியாது”.

130. “பொது நிறுவனங்களின் செயற்பாட்டுக்கு ஊறு விளைவித்தவர்களை திருடர்களை-நடுத் தெருவில் கல்லால் அடித்துச் சாகடிக்கும் தைரியம் தேவை.” த-2

131. “கீழே விழுந்து விடுவது ஒரு பெரிய குற்றமல்ல; விமுந்த வேகத்திற்கு எழுந்திருக்க வேண்டாமா?”

132. “நன்றாக நடந்த தொழிற்சாலையைப் பொறுப்பில்லாமல் நடத்தி, மூடியவர்கள்-அதைப் பற்றிக் கவலைப் படாமலோ-வெட்கப் படாமல் இருந்தாலோ என்ன செய்வது?”

133. “பெருமை சிறுமை பற்றிக் கவலைப்படுகிறவர்கள் ஏன் பொறுப்புகளைப் பற்றி கவலைப்படுவதில்லை”.

134. “ஒரு குற்றம் அல்லது ஒரு குறை விமர்சனம் செய்யப் பெறுவதற்குக் காரணம் வெறுப்பு என்று எடுத்துக் கொண்டால் குறைகளினின்று விடுதலை பெறும் முனைப்புத் தோன்றாது”.

135. “பங்குனி-சித்திரை கோடையில் உச்சி வேளையில் காலில் செருப்பு இல்லாமல் மண் அள்ளும் வேலை மிகவும் இரங்கத்தக்க நிலை”.

136. “காலத்தை நிறுத்த முயன்றால் பலர் தமது சோம்பலுக்குத் துணையாகக் காலத்தையும் நிறுத்திவிடுவர்”.

137. “தமிழினம் தம்முள் முரண்பட்டு நிற்றல் மரபுவழி வரும் குறை”.

138. “அவையத்து முந்தியிருத்தல்” என்ற வளளுவம் தமிழர் வாழ்வில் இடம் பெற்றுவிட்டது. ஆனால் வள்ளுவத்திற்கு முரணான காரியம் நடை பெறுகிறது”.

139. “பாசம் மிகுந்தாலும் தொல்லைகள் வரும்”.

140. “பொறிகள் வாயிலாக உடலுக்கும், புலன்கள் வாயிலாக உயிருக்கும் உணவு கிடைக்கிறது. முன்னதற்கு உணவு என்றும் பின்னதற்கு உணர்வு என்றும் பெயர்”.

141. “பொறிகள் புலன்களின் அனுபவத்திற்குக் கிடைக்கும் செய்திகளைப் பொறுத்தே மனிதன் வளர்கிறான்; வாழ்கிறான்”·

142. “எரிந்த மெழுகுவர்த்திகள்” என்று பெண்களை வர்ணிக்கும் எழுத்தாளர்கள் “எரிந்த விறகுகள்” என்று ஆண்களை மாற்றி எழுதுவார்கள்”.

143. “அந்தமான் அருண்” என்பவர் “திருட்டு நண்டு” என்று ஒரு கட்டுரை ஆங்கிலத்தில் எழுதியுள்ளதைப் படித்துப்பார்த்தோம். மிக நல்ல கட்டுரை. தமிழில் திருட்டு நண்டு என்று மொழி பெயர்த்துள்ளார். ஆனால் நண்டு உலகத்தில் உடைமைச் சமுதாயம் இல்லை”.

144. “கவிஞர்கள் மிக உயரச் சிந்திக்கிறார்கள். ஆனால் சமுதாயமோ மிகமிக அதல பாதாளப் பள்ளத்தில் கிடக்கின்றது. சமுதாய அமைப்பில் அடிப்படையான முழுமையான மாற்றங்கள் ஏற்படுத்தாத வரையில் இக்கவிதைகள் பயனற்றுப் போய்விடும்”.

145. “விடுதலைப் போராட்டம் என்பது எவ்வளவு துன்பமானது என்பதை அந்தமான் செல்வோர் சிறைக் கூடத்தை ஒருதடவை பார்த்தாலும் அறிந்து கொள்ள இயலும். விடுதலைப் போராட்டத்தின் அருமைகளை உணர்ந்தவர்கள் சுதந்திரத்தின் வழிப்பட்ட உரிமை”. “களை சாதாரணமாகக் கருதி விளையாட மாட்டார்கள்”.

146. “சுழன்றடிக்கும் காற்று இல்லாதபொழுது சிறிய அளவு சூடம் கூட எரியும். காற்று வேகமாக அடிக்கும் பொழுது எரியக் கூடிய அளவு சூடம் இருந்தாலும் அணைந்துவிடுகிறது! அதுபோல நெருக்கடிகளும் துன்பங்களும் இல்லாதபோது வேலையின் அளவும் தரமும் குறைந்தாலும் ஆபத்து வந்துவிடாது. ஆனால் நெருக்கடி நிறைந்துள்ள போழ்தில் கடுமையாக உழைத்தாலே மீளமுடியும்”.

147. “இறைவன் சந்நிதியில் எரியும் கற்பூரத்தைக் கொளுத்துவதன் பொருள் என்ன? ஞான நெருப்பை மூட்டு; எரிந்து கொண்டிருக்கக்கூடிய செயல் ஊக்கத்தியை மூட்டு என்பதன் விளக்கமேயாம்”.

148. “இறைவா! நீ கருணையால் அளித்த வாய்ப்புக்களை நான் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. முயன்றும் முடியவில்லை. ஆனால் ஆசை மட்டும் குறையவில்லை. திரும்பத் திரும்ப உன்னுடைய கருணையை, அருள் பாலித்தலை வேண்ட வந்து நிற்கின்றேன்! மன்னித்துக் கொள்: அருள் பாலித்திடுக”.

149. “மனிதன் தான் படைத்த பணத்தின் முன் ஏன் இப்படி சேவகம் செய்கிறான்? விநோதமான வாழ்க்கை”.

150. “தலைவனைத் தலைவன் என்று மக்கள் அறியவேண்டும், தலைவனுக்குத், தான் தலைவன் என்ற உணர்வு இருக்கக்கூடாது”.

151. “எந்த மனிதன் தன்னுடைய சொந்த ஆசா பாசங்களிலிருந்து விடுதலைப் பெற்று வருகின்றானோ அவனுக்கு அவனுடைய சுதந்தரம் தானே வந்து சேரும்.”

152. “ஆசைகள் ஒவ்வொன்றும் சுதந்தரத்திற்குப் போடப்படும் விலங்குகள்.”

153. “உலகியற்கை - நியதி எதற்கும் அழிவில்லை. மாற்றங்களே ஏற்படும். குப்பைகள் கூட அழிவதில்லை. படைப்பாற்றல் உடைய உரங்கள்ாக உருமாற்றம் பெறுகின்றன.”

154. “நமது சமயம் ஒழுங்கமைவுகள் பெறாததற்குக் காரணம் அது மிகப் பழமையானது என்பது தான்.

155. “இறைவனே! நீ இவ்வளவு கருணை கொண்டு என்னை வாழ்விக்க, கற்சிலையில் எழுந்தருளிக் கருவறையில் சிறைப்பட்டாய்! உன்னைக் காணும் பொழுதெல்லாம் உன் திருவுருவத்தை ஆரத்தழுவி உச்சிமோந்து அழவேண்டும் என்ற ஆர்வம் பிறக்கிறது!

என்ன செய்ய? கண்ணப்பர் காலத்தில் இல்லாத தடைகள் தோன்றிவிட்டனவே! கடவுளே ஏன் இந்த நிலை? கதவைத் திற! வெளியே வா என்னைத் தழுவி முத்தமிடு வாழ்த்து!”

156. “இந்துக்கள் ஒருமைப்படவேண்டும் என்ற ஆர்வத்தில் தவறு இல்லை. ஆனால் அந்த ஆர்வம் உண்மையான இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பதற்குப் பதிலாக மீண்டும் சாதி மேலாதிக்கம் கொள்ள முயல்கின்றது.”

157. “ஒரு விருப்பம் புறக்கணிக்கப்பட்டுப் பிறிதொன்று திணிக்கப் பெறுமானால் அன்பும் ஆர்வமும் கலந்த ஒருமைப்பாடு உருவாகாது”.

158. “அயல் மாநிலங்களில் வாழும் தமிழர்கள். தமிழகத்தோடு உணர்வில்ஒன்றி வாழ்வது தவறில்லை, ஆயினும், எல்லா வகையிலும் தமிழகத்தைப் போல நடந்து கொள்வது நல்லதல்ல”.

159. “ஆரவாரம் செய்யும் கடலோரத்தில் முத்துக்கள் கிடைக்காது. ஆழ்கடலில் தான் முத்துக்கள் கிடைக்கும். ஆழமான மோனத்தில்தான் ஞானம் என்ற முத்து கிடைக்கும்”.

160. “ஐரோப்பிய இனம் (ஆங்கிலேயர்கள்) ஆரிய இனம், திராவிட இனம் என்ற உலகத்தின் தலை மூத்த இனத்தாரில் தம் நிலை தாழாது வாழ்வன ஆங்கில இனமும் ஆரிய இனமுமே. திராவிட இனம் அத்தகு பேறு பெறவில்லை. ஏன்? ஆர்ப்பரவம் செய்தல், அடிமைப் புத்தியிலிருந்து மீளாமை ஆகியவையே காரணங்கள்”.

161. “திருவள்ளுவரையும் வள்ளலாரையும் தமிழகம் பின்பற்றாததால்தான் நம்நிலை தாழ்ந்தது”.

162. “போர்ட் பிளேயர் அரசு மிருகக் காட்சி சாலையில் ஒரு பெண் குரங்குடன் வேறு ஒர் ஆண் குரங்கு சண்டைப் போட்டது. உடன் கடுவன் குரங்கு அந்தப் பெண் குரங்குக்காகப் பரிந்து சண்டைபோட வந்துவிட்டது. இன்று எத்தனை கணவன்மார்கள் தன் மனைவிக்காகத் தன் தாயிடத்தில் பரிந்து பேச முன் வருவர்? வந்தால் ஏன் ஸ்டவ் வெடிக்கிறது?”

163. “ஒரு தமிழ்ப் பெண் இந்தியை தாய் மொழியாகவுடைய ஆடவனை மணந்ததால் இந்திக்காரப் பெண்ணாக மாறிவிட்டார். இந்திக்கு உள்ள கவர்ச்சி என்னே! என்னே!”

164. “ஒரு மனிதனை, வேறு மனிதனிடமிருந்து வேற்றுமைப்படுத்திப் பிரித்துப் பார்ப்பதே தீமை. இத்தீமையைக் கடவுளின் பெயரால் செய்தாலும் பாபமே!”

165. “மனிதரை மனிதர் இழிவு செய்தல் அற மன்று. யாதானும் ஒருவகையில் தாழ்ந்தாராயினும் தாழ்மையிலிருந்து மீட்க வேண்டுமே தவிர, இழிவு செய்தல் கூடாது; ஒதுக்கக் கூடாது.”

166. “செல்வமும் மனிதரைக் கோழையாக்குதல் உண்டு. செல்வத்தை இழந்துவிடும் அச்சத்தில் கோழையாதல் உண்டு.”

167. “வாய்ப்புக்கிடைப்பின் பார்ப்பனர் யாரையும் பயன்படுத்திக் கொள்வர். தமிழர்க்கு இத்திறன் கிடையாது.”

168. “அறியாமை சுரண்டலுக்குப் பயன்படும் சாதனம்; அறிவை நல்க விரும்புபவர்கள் சுரண்ட மாட்டார்கள்.”

169. “தமிழர்கள் உழைப்பாளிகள். ஒருமையும் ஒழுங்கமைவுமிருப்பின் உலகத்தை வெல்வர்.”

170. “நத்தையில் முத்து பிறப்பதை நோக்கினால் நந்தனார் தோற்றம் வியப்பன்று. ஆனால் சொத்தைகளை முத்து என்று போற்றுவாரை என்னென்பது?”

171. “இயற்கையில் உள்ள அழகுக்கு உயிர் உண்டு. செயற்கைக்கு அது இல்லை”.

172. “எந்தப் பொருளையும் அதன் நிலையிலிருந்து மாற்றி அனுபவத்திற்கு நுகற்விற்குக் கொண்டு வரும் மனிதன் ஏன் மனிதக் குலத்தைப் பற்றி மட்டும் ஒதுக்கல் கொள்கையைக் கையாள்கிறான்? ஒதுக்கல் கொள்கையினர் அறிவிலிகள்; கோழைகள்!”

173. “இறைவா! உன்னுடைய எளிமை-பொதுமை-கருணை அளப்பரியது! ஆயினும் என்ன பயன்? வேலி போட்டுப் பழகும் மானிடச்சாதிக்குள் சிக்கிவிட்டாய் அவர்கள் உனக்குச் சாதி, குலம், இனம், மொழி, சமய வேலிகளை வைத்து நான் எளிதில் காண முடியாமல் தடுத்துவிட்டார்களே! இறைவா, ஏன் இந்த நிலை? என்னால் வேலிகளை கடந்து வரமுடியவில்லை. வந்தாலும் விடமாட்டார்கள்! நீயே வாயேன், வேலியைத் தாண்டி! உன்னைப் பார்த்து ஒரு அழுகை அழுவதற்கு சந்தர்ப்பம் கொடேன்!”

174. “இறைவா! உன்னோடும் நான் “கண்ணா மூச்சி’ விளையாட்டு விளையாடுகின்றேனே! உனக்குத் தெரியாதது என்ன? நீ என்றோ எங்களை விட்டு நீங்கிவிட்டாய்! கற்சிலை மட்டுமே கோயில்களில் உள்ளன!

மீண்டும் வா! கற்சிலையில் எழுந்தருளி ஆட்கொள் வாயாக! நின் சித்தப்படி நடக்கச் சித்தமாயுள்ளேன்! இனி, உன் சந்நிதியில் பாவம் செய்யமாட்டேன். இது சத்தியம்!”

175. “ஒற்றுமையை விரும்புகிறவர்கள் காரண காரியங்களை ஆராய மாட்டார்கள்!”

176. “ஒருமைப்பாட்டுணர்வு அருள் நிலைக்கு அழைத்துச் செல்லும்”.

177. “புறத்தே வளர்ந்துள்ள நம்மவர்கள் அகநிலை நாகரிகத்தில் மோசமாக உள்ளளர். புறத்தே வளராத ‘ஜரவாக்கள்’ அகநிலையில் நாகரிகமாய் உள்ளனர்.”

178. “அந்தமான் தீவு-பூர்வீக குடிகளாகிய ஜரவாக்கள்'மத்தியில் சண்டையில்லை.

179. “இறைவனே! உறுப்புக்களை மறைத்து, உடை உடுத்தி நாகரிகமானவன் என்று நாடகம் நடத்திவருகின்றேன்! ஆனால் உணர்வுகளை மறைத்துக்கொள்ள கற்றுக் கொண்டேனில்லை, ‘ஜரவா’ பழங்குடி மக்களோ உறுப்புக்களை மறைத்தார்களில்லை! ஆனால் உணர்வுகளை மறைத்து வாழ்கின்றனர். ‘நான்’ என்ற உணர்வு அற்ற நிலையில் உன்னை அடைவேன்’.

180. ஒவ்வொருவரும் தம்தம் நிலையில் சாமார்த்திய சாலிகளாகவே நடந்து கொள்வதாக நினைக்கின்றனர். ஆனால் அவலத்தின் மொத்த உருவம் அவர்கள் தான்!”

181. “சிறுபான்மையாக வாழும் பகுதியில் வாழ்வது ஒரு வசதி. எளிதில் பெருமை பெறலாம்.”

182. “பட்டுப் பூச்சிகள் கூட நேர்த்தியான பட்டு நூல்களை உற்பத்தி செய்கின்றன. ஏன், ஆறறிவு படைத்த மனிதர்கள் நேர்த்தியான காரியத்தைச் செய்வதில்லை?”

183. “வழிபாட்டுத் திருமேனிகளில் சிதைவு ஏற்பட்டால் உருவங்களை மாற்றுதல் தவறு.”

184. “ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணும்பொழுது பிறிதொரு சிக்கல் தோன்றும் வகையில் தீர்வு காணுதல் கூடாது”.

185. “அரசியல் விவகாரங்களுக்கு அப்பாற்பட்ட சமூகம் தோன்றினால்தான் நாடு வளரும்”.

186. “மோசமான மனிதர்கள் எதிர்கால விளைவுகளைப் பற்றிக் கவலையே படமாட்டார்கள்”.

187. “மதங்கள் தோன்றிய பிறகுதான் சமூகம் சீரழிந்தது”.

188. “சாதி வேற்றுமைகள் நீங்கினாலே தீண்டாமை நீங்கும்”.

189. “இந்த உலகில் மக்களாகப் பிறந்தோர் பேசும் மொழிகளில் கடவுளைச் சுட்டிக்காட்டிய மொழி தமிழே!”

190. “ஒன்றை இழந்து விடுவோம் என்ற அச்சம் ஆர்வத்தைத்தூண்டி முயற்சியில் இறக்கி விடும்”.

191. “அக்கறையுடைய வாழ்க்கையே ஆளுமையைத் தரும்”.

192. “நன்றாற்றலுள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக்கடை” என்ற திருக்குறள் அனுபவ வாக்கு! காரியங்களைச் செய்தால் மட்டும் போதாது. யாரை நோக்கிச் செய்யப்படுகிறதோ அந்த மக்களையும் வளர்த்துக் கொண்டால்தான் காரியங்கள் பயன்படும்”.

193. “இறைவா! ஏன் இந்த நிலை? என்னை, இப்படி எல்லோரையும் கொண்டு ஏசவைக்கிறாய்? இறைவா! புரிகிறது உன் தந்திரம் ஏச்சுக்கள் மூலம்”. தான் புகழ் வேட்டையை நாடும் என்னை தடுத்து நிறுத்த முடியும் என்று நம்புகிறாய்!

மற்றவர் ஏச்சின் மூலம்தான் மானம், அவமான உணர்ச்சி அறும் என்பது நின் திருவுள்ளம்! எல்லோரும் ஏசட்டும்! ஆனால் இறைவா, நீ ஏச மாட்டாயே! வாழ்த்தியருள்க!”

194. “நீ நம்பினால் போதாது! அவர்களும் வளர வேண்டுமே! இருபாலும் ஒத்த வளர்ச்சியில்லை யானால் எந்த விருப்பமும் விலை போகாது! பயன் தராது.”

195. “ஒரு இயல்பான கதவு அடைபடுவதின் மூலமே ஒழுக்கக் கேடுகள் தோன்றுகின்றன!”

196. “இறைவா! பற்றுக் கூடாது என்று சொல்கின்றனர். உன்னிடத்திலும் பற்றுக் கூடாதா? உன்னிடம் பற்று இல்லாமல் நான் எப்படி வாழமுடியும்? இல்லை, இல்லை. இறைவா! உன் மீது பற்றுக் கொள்ளலாம். எனக்கு தீமை இல்லை! நன்மையேயாம்! ஆனால் இறைவா! உனக்குத் தொல்லைதான்.”

197. “ஆதாயம் கருதித் தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள்! சிலர் எந்தவிதமான ஆதாயமும் இன்றித் தவறு செய்வார்கள். இந்த விநோதம் ஏன்? நன்மையில், ஒழுங்கில், ஒழுக்கத்தில் விதிமுறைகளில் ஊன்றிய கவனம் இன்மையேயாம்.”

198. “இறைவா! மூடர்களையும் படைத்துப் புத்திசாலிகளையும் படைத்து வேடிக்கை பார்க்கிறாய்! மூடர்களுடன் பேசவே முடியவில்லையே பேசுபவர்களை முட்டாளாக்கி விடுகிறார்களே!

“மூடர்களுடன் தர்க்கம் செய்வதைத் தவிர்த்துவிட எனக்கு அருள் செய்! வேண்டவே வேண்டாம்: விவேகம் இல்லாதவர்களுடன் தர்க்கம்”.

199. “கோடி செங்கல்கள் கொட்டிக் கிடந்தால் கட்டிடமாகிவிடுமா? அவற்றை முறையாக அடுக்கினால் வீடு! அதுபோல கோடிக் கணக்கில் மனிதர்கள் இருந்தாலும் சமுதாயம் தோன்றி விடுவதில்லை. ஒருவரை ஒருவர் தழுவியும் தாங்கியும் ஒப்புரவு அறியும் பண்புடன் வாழ்ந்தாலே சமுதாயம் தோன்றும்”.

200. “பழகத் தொடங்கிய தலை நாளில் இருந்த விருப்பம் போலவே, என்றும் விருப்பம் குறையாமல் இருப்பதே நட்பு”.

"https://ta.wikisource.org/w/index.php?title=சிந்தனை_துளிகள்/101-200&oldid=1055642" இலிருந்து மீள்விக்கப்பட்டது