சிந்தனை துளிகள்/1-100
சிந்தனைத் துளிகள்
1. “புதிய கோடியில் பழைய துணியை ஒட்டுப் போட முடியாது” என்ற விவிலிய வாக்கு நினைவிற்கு வருகிறது.
பழைய சமுதாய அமைப்பைச் சீர்திருத்தம் செய்வது என்பது நடைமுறையில் நடக்கக்கூடிய காரியமன்று.
கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த புரட்சியை தோற்றுவித்துப் பக்குவப்படுத்திய பின்தான் மனிதனுக்கு பூரண சுதந்தரத்தை வழங்க வேண்டும்.
இந்தச் சூழ்நிலையில்தான் மக்களாட்சி பொருளுடையதாக அமையும்”.
2. “தன்னலம் என்பது ஒரு வெறி. பாம்பின் நஞ்சினும் கொடியது. இந்நஞ்சின் வழிப்பட்டவர்கள் பெற்றுள்ள கல்வி, பக்தி-யாவும் பயனற்றவையே”.
3. “பெண்ணிடம் ஆசை கொள்ளுதலும், காதலும் ஒன்றன்று. இவை, தம்முள் முரண்பட்டவை”.
4. “இன்றைய சமுதாயத்திற்குப் பணத்தின்மீது மட்டுமே ஆசை. பணம் கிடைக்கக்கூடிய வழிகளில் அல்ல”.
5. “தாவர இனங்கள் மனிதனை விடச் சிறந்தவை என்று கூறுவது ஏன்? இன்றைய மானுடப் பிறவிக்கு இது பொருந்துமா?”
பொருந்தாச் சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடித் தமது வளர்ச்சிக்குரிய சூழ்நிலைகளை அமைத்துக் கொள்ள தாவரங்களால் இயலாது.
மானிடர் தாம் பெற்ற பகுத்தறிவால் பொருந்தாச் சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடித் தம்முடைய சூழ்நிலைகளை அமைத்துக் கொள்ளும் திறனுடையவர்கள்.
ஆனால், இன்றைய நம்முடைய தமிழ்ச்சாதி சூழ்நிலைகளை மாற்றும் ஆற்றலுற்றிருக்கிறதா? இல்லை. இன்றைய தமிழ்ச்சாதி, சூழ்நிலைகளின் கைதிகளாக வாழ்கின்றது”.
6. “ஒருவன் மரம் வைத்து வளர்த்தால் அது அவனுக்குப் பயன்படாது. அடுத்த தலைமுறைக்குப் பயன்படும் என்று சொல்லுவார்கள். இது தவறு.
ஒருவன் ஒருமரம் வைத்தால் அவன் சில நாள்களி லேயே அந்த மரத்தின் பயனை அனுபவிக்கிறான். மரம், செடியாக இருக்கும்போதே சுவாசத்துக்கு அவனுக்குத் தேவையான உயிர்ப்புக் காற்றைத் தருகிறது.
இன்றைய வேளாண்மை வளர்ச்சியின் போக்கில் கனிகளைக் கூடச் சில ஆண்டுகளில் பெற முடிகிறது”.
7. “சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்பாடு என்பது பூத பெளதிகத் தூய்மை மட்டுமல்ல. சுற்றுப்புறத்தில் வாழும் சமுதாய மேம்பாடும் சேர்ந்ததேயாம்”. “கவனித்துப் பேணி வளர்க்காத மனித சமுதாயம் கொடுரமானதாக உருக்கொள்ளும் என்பதற்குப் பூலான்தேவி சான்று”.
8. “மனித குலத்திற்கு உழைத்தல் என்பது இயல்பான குணமானால்தான் மண்ணை விண்ணகம் ஆக்கலாம்”.
9. “பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்வு காணப் பெறாவிடில் அவை தம்போக்கில் தீர்வு காண முயன்று சமூகத் தீமைகளை வளர்க்கும்”.
10. “மார்க்ஸ் ஒரு சிந்தனையாளர். அவர் வரலாற்றை-மனித வாழ்வியலை அணுகிய முறையை சமய நெறியினர் கற்று, அம்முறையில் அணுகினால் மண்ணுலகு விண்ணுலகமாகும்”.
11. “பயந்தாங்கொள்ளிகள் எதையும் குழப்புவார்கள்”.
12. “புகழ் என்றால் மகிழ்வதும், இகழ் என்றால் வருத்தப்படுவதும் வாழ்க்கைக்குத் துணை செய்யாது. அதுவும் தொண்டு வாழ்க்கைக்கு முற்றாகக் கூடாது”.
13. “கூட்டுறவு சங்கம் கடன் வாங்குவதற்காக மட்டும் அல்ல. கூட்டுறவு இயக்கம் ஒரு பன்முனை வளர்ச்சி இயக்கம். அதாவது மனித இயல் பண்புகளையும் ஆட்சித் திறனையும் வளர்த்துச் செழுமைப்படுத்தும் இயக்கம”.
14. “கூடித் தொழில் செய்வதன் மூலம் குற்றம் குறையிலாத வகையில் தொழில் நடைபெறும் என்பது கருத்து. ஆனால் இன்றைய நடைமுறையில் பெறப்பட்டுள்ள உண்மை இதுவல்ல”.
15. “ஒரு பொருளின் மதிப்பை மேலும் கூட்டுவது எதுவோ, அதுவே உழைப்பு என்றழைக்கப்பெறும்”.
16. “தாழ்வான கூரை உள்ள வீட்டில் எளிதில் தீப்பிடிக்கும். அதுபோல தாழ்வான நோக்கங்கள் உடையவர்கள் எளிதில் பகை கொள்வர”.
17. “நம்பிக்கை என்பது நடைமுறையில் தோன்றி வளர்வதேயாம்”.
18. “தனி உடைமைச் சமுதாயம் இருக்கும் வரையில் அதற்கு இசைந்தாற் போல் பற்றாக்குறையும் இருக்குமானால் அழுக்காறும் அவாவும் மனிதனை ஆட்டிப்படைக்கும்”.
19. “பொறுப்புடன் கடமைகளைச் செய்கிற பொழுது கலந்து பேச வேண்டிய வாயில்கள் இயல்பாகவே தோன்றும். இவ்வாயில்கள் ஒருவருடைய பண்பை, திறமைகளை அறிமுகம் செய்து வைத்து உறவுகளை வளர்க்கும்”.
20. “தமிழ் மொழி ஆசிரியர்கள், சிற்றுார்கள், பேரூர்கள் தோறும் பரவி, பணியில் அமர்ந்த பிறகும் தமிழர்களிடையில் தமிழ் உணர்வும் குறைந்திருப்பது வருந்தத்தக்கது. இதனால், நம்முடைய மொழி உணர்வு கானல் நீரைப் போன்றது என்பது உறுதிப்படுத்தப்பெறுகிறது”.
21. “கருத்து வேற்றுமைகள் தவிர்க்க இயலாதன, ஆதலால் கருத்து வேற்றுமைகளைக் காழ்ப்புகளுக்குரிய முரண்பாடுகளாக எடுத்துக்கொண்டு வெறுப்பையும் பகையையும் வளர்த்தல் அறிவியல் முறையும் அன்று; நாகரிகமும் அன்று”.
“கருத்து வேற்றுமைகள் வழி பகைமையை வளர்த்தல் எந்த சூழ்நிலையிலும் கருத்துக்களில் தெளிவு காண முடியாது போய் மானிட வாழ்க்கையில் தேக்கம் ஏற்பட்டுவிடும்”.
22. “கருத்து வேற்றுமைகள் நூற்றுக்கு நூறு எப்போதும் இருக்க இயலாது. ஆதலால், மனிதகுல ஒருமைப்பாடு கருதியும் அறிவு வளர்ச்சி கருதியும் உடன்பாடுடைய கருத்துக்களில் ஒன்றுபட்டு செயல் படத் தொடங்கினால் காலப் பேர்க்கில் உறவுகள் வளரும். தெளிந்த அறிவியல் முடிவுகளும் கிடைக்கும் இந்த முறையே நமது அணுகுமுறை”.
23. “பல்வேறு கருத்துடையவர்கள் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளில், தம் கருத்தை - மாறுபாட்டை தன் கட்சியை - சாதியை நினைவு கூரத்தக்க வகையில் பேசுவதும் மற்றவர் கருத்தை விமர்சனம் செய்வதும் பொதுமைக்கு முரணாக அமையும்.
பொது மேடைகளில் மாறுபாடுகளைத் தவிர்ப்பது தலைசிறந்த நாகரிகப் பண்பு”.
24. “நமது வாழ்க்கையின் நோக்கங்களை நாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமானால் ஆவேச உணர்வுடன் உழைக்க வேண்டும்”.
25. “ஒரு சமூகத்தை உதவிகள், சலுகைகள் மூலமே வளர்த்து விடமுடியாது. அந்தச் சமூகத்திற்கு வளரவேண்டும் என்ற உணர்வும் முன்னேற்றத்திற்காக உழைக்கும் மனப்பாங்கும் வேண்டும்”.
26. “விமரிசனத்தை ஏற்றுக் கொள்ள தவறான மனப்போக்குடையவர்கள் முன்வர மாட்டார்கள். “என்னையா” என்று ஆத்திரப்படுவார்கள்”.
27. “நாம் என்ன சொல்லுகிறோம்; எதற்காகச் சொல்லுகிறோம் என்பதல்ல முக்கியம். சொல்லப்படுபவர்கள் எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கிலேயே விளைவுகள் அமையும்”·
28. “உணர்ச்சி உடைய உறவுகள் மட்டுமே இருந்து, ஒத்துழைப்பு இல்லையானால் அது மகப்பேறு இல்லாத மனையறம் போன்றது”·
29. “வாத நோயினும் கொடியது, பழக்க வழக்கங்களில் வழிபட்ட மனம்”.
30. “குற்றங்களை மறைக்க விரும்புபவரின் சிறந்த கருவியே கோபமும், உரக்கப்பேசுதலுமாகும்”.
31. “காலம் சொல்லும்” என்பது பொறுப்பை வரலாற்றின் மீது சுமத்தி விட்டு வறிதே வாழும் இயல்பினரின் கூற்று”.
32. “காணல், கலந்து பேசுதல் ஆகியன கடமைகளைச் செய்யும் மனிதனின் தேவைகள்; தவிர்க்க முடியாத தேவைகள்”.
33. “எந்தவொரு உண்மையான உழைப்பும், உணர்வும் கட்புலனுக்கோ அனுபவத்திற்கோ வாராமல் போகாது”.
34. “பணி செய்த ஆண்டுகளைக் கணக்கிட்டுத் திறமைகளைக் கணக்கிட முடியாது. பணி செய்யும் பாங்கும் திறமையுமே அளவுகோல்கள்”.
35. “சாதாரண விதிமுறைகளைக்கூட, கடைப் பிடித்தொழுகுவதில் இடர்ப்படுவோர் ஏராளம்”.
36. “காரணங்களும் பயன்களும் இல்லாமலே கூட, தவறுகள் செய்பவர்கள் உள்ளனர்”.
37. “முறையாகச் செய்யப் பெறாத மருத்துவம் நோயை விடக் கொடியது”.
38. “தீவிர பற்றுக்கள் ஆய்வு மனப்பான்மையைத் தருவதில்லை”.
39. “பலரோடு கூடி வாழ்வது தொல்லையே! ஆனாலும் பண்பாட்டுப் பயிற்சிக்கு இதைவிட வேறு வழியும் இல்லை”.
40. “பழகிப் புதுக்கிக் கொள்ளப் பெறாத உறவுகள், பறிபோகும்”.
41. “தற்சார்பான பழக்கங்கள், பெரும்பாலும் கிழமை, காலம் தவறுவதில்லை. கடமைகள் மட்டுமே காலந் தவறுகின்றன”.
42. “காலந் தவறுதலை ஒழுக்கக்கேடு என்று உணராதவரை சமூகம் வளராது!”
43. “காலத் தவறிச் செய்யப் பெறும் பணிகள் பொருள் இழப்பைத் தரும்”.
44. “பெரும்பான்மை” என்ற எண்ணம் ஒரு வகையான தடிப்புணர்ச்சியையும் சிறுபான்மை என்ற எண்ணம் தாழ்வுணர்ச்சியையும் தருகிறது”.
45. “பசி என்பது கடமையைச் செய்து வயிற்றின் அடுத்த பணிக்கேட்பின் செயற்பாடு”. 46. “வயிறு சோஷலிசத்தின் சின்னம். வயிற்றுக்கு இடப்பட்ட சோற்றின் பயன், உடம்பின் அனைத்து உறுப்புக்களுக்கும் கிடைக்கிறது.”
47. “சாதி வெறியர்கள், சுரண்டி வாழ்வோர் ஆகியோரிடமிருந்து கடவுளை, மதத்தைக் காப்பாற்ற வேண்டும்.”
48. “தகுதி, திறமை இவற்றை வளர்க்காமல் உரிமைகளையும் உடைமைகளையும் வழங்குதல் பயனன்று.”
49. “ஒருமைப்பாடு, மனித நேய அடிப்படையில் மட்டுமே உருவாகும்!”
50. “சலுகைகள், உரிமைகளா?”
51. “ஒருமைப் பாட்டுக்கு நாடு, மொழி, சமயம் முதலியன காரணங்களாதல் இல்லை. இவை அனைத்தும் குறுகிய பற்றுக்களையே வளர்க்கும்.”
52. “கலியுகம்-கிருதயுகம்என்பன கற்பனைகள். மாற்றங்களை யுகம் பிரளயம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது.”
53. ”செலவழிக்காமல் சிக்கனமாக இருப்பது எல்லோருக்கும் இயலக் கூடிய ஒன்று. வருவாயைத் தேடுதல் அங்ஙனமன்று.”
54. எதிர்மறை அணுகல் நலம் தராது.
55. “செல்வந்தர்களும் மதக் குருக்களும் எப்போதும் கூட்டாளிகள்; உழைக்கும் வர்க்கத்தின் எதிரிகள்.” 56. “சமய வேற்றுமைகளைக் கடந்த நிலையிலேயே “எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்ற முழக்கம் தோன்றுகிறது.”
57. “முறைகேடான அரசுகளைத் தாங்கிக் கொண்டு வாழ்தல் கேவலம்; அடிமைத்தனம்.”
58. சிக்கல்களுக்கு உடனுக்குடன் தீர்வு கானா விட்டால் புதிய சிக்கல்கள் தோன்றும்.
59. திறந்த வீட்டுக்கு நல்ல காவல் தேவை. அதுபோல காதுகளைத் தருவதில் கவனம் தேவை.
60. காலத்திற்குரிய கடமைகள், வேலைகள் இல்லாதிருப்போர் கெட்டுப் போதல் இயற்கை.
61. “தேவைக்குத் தேடுதல் என்பது வாழ்க்கை யல்ல. அறிவறிந்த ஆள்வினையால் தேடிச்சேர்க்கும் அளவுக்குப் பொருள் சேர்த்தல் வேண்டும். பின் நுகர்வுத் தேவைக்கு ஏற்றவாறு எடுக்கவேண்டும். இது வாழ்க்கை முறை.”
62. “அலுவலகத்தில் பல பதவிகள் இருப்பதன் பயன், பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்படுவதுதான். மேல்நிலைப் பதவியிலிருப்பவர்கள் தவறுகளுக்கு மற்ற வர்களையே குறை சொல்லிக் கொண்டிருந்தால் போதாது, அவர்கள் பொறுப்பு தவறுகள் வராமல் முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்தலேயாம்.”
63. “உடனடியாகக் கிராமப்புற இளைஞர்களுக்கு ஊதியத்துடன் இணைந்த வேலைவாய்ப்புத் தேவை. அது இயலாதெனின் முறையான பொழுதுபோக்கிற் குரிய பணிகளிலாவது இவர்களை ஈடுபடுத்தியாக வேண்டும். இதற்கு, சாரணர் இயக்கம் துணை செய்யும்.”
64. “சாதாரணமான கோப்புகளையே குறித்த காலத்தில்-பயனுடைய வகையில் இயக்காதவர்கள் நிதி தொடர்பான அலுவல்களில் அவசரம், கட்டாயம் முதலியவற்றைக் காட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது?”
65. “ஒரு காசில் முடியக்கூடிய வேலைக்கு இரண்டு காசு செலவழிப்பதும் ஊதாரித்தனமே!”
66. “பொதுமக்களிடத்தில் எளிதாகத் தலைவராக விரும்புகிறவர்கள் கிளர்ச்சிகளை விரும்புகின்றனர். இவர்களுக்குக் காரிய சாதனை நோக்கமன்று. தங்களால் காரியம் நடந்ததாக இருக்கவேண்டும் என்பதே இவர்களின் ஆசை”.
67. “திட்டமிட்டுச் செய்யாத பணிகளில் பணமும் பாழாகிறது. பயனும் இல்லாமல் போகிறது”.
68. “இன்றைய சாதாரண மக்கள் அரசினிடம் எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அரசுக்கு உதவியாக இருக்க விரும்புவதில்லை”.
69. “தம்மிடம் அசாதாரணமான திறமையிருக்கிறது என்று கூறுபவர்கள், கடமைகளைச் செய்து ஒத்துழைக்க விரும்பாதவர்கள் என்பதே உண்மை”.
70. “விநாடிகளைக் கணக்கிட்டு வேலைகளைச் செய்து முடிக்காதவர்கள் வேலைகளைப் பாக்கி போடுவர்”.
71. “காரணங்கள் சொல்ல முடியாத தவறுகள் தவறுகள் அல்ல. இது கடமைகளைச் செய்யும் விருப்ப மின்மையேயாம்”.
72. “கலைத்துறையில் ஈடுபட்டு மகிழும் வாய்ப்பில்லாத ஏழைகள் வீட்டிலேயே குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்”.
73. “உயிர் வளர, வாழ களிப்பும் மகிழ்ச்சியும் தேவை. இந்த அடிப்படையிலேயே பால் வேறுபாட்டுடன் கூடிய படைப்பு”.
74. “தனி நபர்களிடம்கூட அரசுகள் அஞ்சுகின்ற அளவு குறை ஏற்பட்டுப் போய்விட்டது”.
75. “ஒரு பொருள் பற்றித் துணிந்து முடிவு எடுக்கவும் செயற்படுத்தவும் இயலாதவர்களில் பலர் வாய் வீச்சில் ஆர்ப்பரிப்பர் என்பது சமுகாயத்தில் கண்ட உண்மை”.
76. “சார்புகளில் சிக்கித் தவிப்பவர்கள் மற்றவர் கூறும் செய்திகளைத் திறந்த மனத்தோடு கேட்டு ஆராய முன்வர மாட்டார்கள்”.
77. “சார்புகளின்மீது இறுக்கமான பற்றுக் கொண்ட மனம் புகை படிந்த கண்ணாடி போன்றது. எதையும் காட்டாது”.
78. “சமயங்கள் தோன்றிய காலத்திலிருந்து நிலவிவரும் சிக்கல்களுக்கு சமயத் தலைவர்கள் இது வரை தீர்வு கண்ட பாடில்லை”.
79. “இந்து சமயத் தலைவர்கள் சிக்கல்களுக்குத் தீர்வு காணாதது மட்டுமன்றி மேலும் சமூகச் சிக்கல்களைக் கடுமைப்படுத்துகின்றனர்”.
80. “ஒரு நிறுவனமும் அதனுடைய கொள்கை அமைப்புமே மிகப்பெரிய கருவி. இதனை முறையாக இயக்கிப் பயனடைய ஆற்றலுற்றவர்கள் புதிய புதிய அமைப்புக்களை நாடிச் செல்வர்”.
81. “இந்து தர்மத்தினர் சாதிகளை ஒழித்தல், சமநிலைச் சமுதாயம் காணல் என்ற கொள்கைகளில் முரண்படுகின்றனர்.
திராவிடர் கழகமும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கடவுளை மறந்து விட்டு, கடவுள் தன்மைகளைப் படைக்க முயற்சி செய்கின்றனர். கடவுள் தன்மை சமுதாய அமைப்பில் நிலைபெற்றுவிட்டால் கடவுளை எளிதில் நினைவு கூரலாம்”.
82. “இலக்கியங்கள் வாழ்க்கையின் மாற்றங்களுக்காகவே தோன்றின. ஆனால் நடைபெற்றிருப்பது உரை விளக்கமே”.
83. “இதுவரை தோன்றிய எந்த ஞானியின் அடிச்சுவட்டிலும் மனித உலகம் செல்லவில்லை. மனம் போன போக்கிலேயே போய்க் கொண்டிருக்கிறது”.
84. “நமது முன்னோர்களும் நாமும் சமுதாயத்தின் இழிவுகளை மாற்றித் தரும் கடமையில் வெற்றி பெறவில்லை. இதுவே உண்மை”.
85. “சமுதாய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்!”
86. “வடபுலத்திற்கு மட்டுமின்றி உலகத்திற்கு ஒரு பொதுச் சமயம் தேவை என்றாலும் அதற்கு உரியது தமிழகத்தின் சைவ சித்தாந்தச் செந்நெறியேயாம்”.
87. “இந்து சமயம்” என்ற பெயரில் ஒரு புது தத்துவம் போல ஸ்மார்த்தத்தைத் திணிக்க முயற்சி செய்ததின் பலனாக இந்து தர்மங்கள் இந்தியாவில் வெற்றி பெறவில்லை. மாறாக நூற்றுக்கணக்கான புதிய சமயங்களே தோன்றின”.
88. “வாக்காளர்களைத் தயாரிப்பது பண்புடை யோராக்குவது சுதந்தர நாட்டின் முதற்கடமை”.
89. “தனி மனித ஒழுக்கக் கேடுகள் பெரும்பாலும் சமூகத்தின் பொருந்தாப் பழக்க வழக்கங்களின் திணிப்பிலேயே உருவாகின்றன”.
90. “மாமுனிவர் மார்க்சின் நினைவாக இலாப நோக்கத்தை கைவிடுதல் நல்லது”.
91. “மாமுனிவர் மார்க்ஸ் நினைவாக பள்ளிக் கணக்குகளில் இலாப நட்டக் கணக்குப் பாடத்தை எடுத்துவிடுவது நல்லது”.
92. “தமிழ் இருக்கும் இடத்திலேயே தமிழர் இருப்பது என்று உறுதி எடுப்பாரானால் தமிழ் வளர்ந்து ஓங்கும்”.
93. “அசைவில் செழுந்தமிழ் வழக்கினைப் பேன வேண்டியவர்கள் அயல் வழக்கின் வழிச் செல்வது, அறம் கொல்லும் பாவமாகும்”.
94. “சோம்பல் தனமுள்ள யானையை சுறுசுறுப் பான எந்த உயிரும் எளிதில் வெற்றி கொள்ளும். அது போல, மொழியால் சமய நெறியால் வள்ர்ந்த தமிழின்த்தின் மதர்த்த சோம்பலை ஆரியம் வெற்றிகொள்ளத் துடிக்கிறது”.
95. “புதுப் பெரிய வாளின் சுறுசுறுப்பு ஏன் துறை சைக்கும், தருமைக்கும் வரவில்லை? நமது நல்லூழின்மையே!”
96. “குறைவான வேலை பார்ப்பவர்கள் கூட நிறைவாகப் பார்க்காது போனால் கடுமையான உழைப்புடையவர்களின் மீது மேலும் சுமையை ஏற்றும்”.
97. “பணத்தாசை-பிழைப்பு நோக்கத்தோடு தன்னை அண்டியிருப்பவர்களை நம்பி காரியங்களை ஒப்படைக்காதே! காரியங்கள் கெட்டுவிடும்!”
98. “ஒரு காரியத்தைத் தொடர்ந்து குறித்த காலத்தில் குறித்த முறைப்படி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முயல்கிறவர்களுக்குத்தான் திருத்தொண்டர்களின் அருமை தெரியும்”.
99. “மாறுபாடுகள் - முரண்பாடுகள் பகைமையாக உருவெடுக்க அனுமதிப்பது நாகரிகமன்று”.
100. “மாறுபாடுகள் - முரண்பாடுகள் பகைமையாக உருப்பெற்றுவிட அனுமதித்து விட்டால் என்றுமே மாறுபாடுகள் நீங்கி ஒருமைப்பாடு தோன்றாது; உறவுகளும் கால் கொள்ளா”.