சிந்தனை துளிகள்/1401-1500

விக்கிமூலம் இலிருந்து

1401. “வேலியே பயிரை மேய்கிறது; பாது காவலனே கொல்கிறான்! கலியுகத்தின் யதார்த்த நிலை!”

1402. “ஒரு தலைமை உருவாவதற்கு எவ்வளவு காலம் செலவு ஆகிறது? ஒரு நொடியில் கொலை செய்து விடுகிறார்கள் பாவிகள்.”

1403. “அன்னை இந்திரா, இந்திய நாட்டின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் செய்த பணிகள் நினைந்து நினைந்து போற்றத்தக்கவை.”

1404. “விளக்காத பாத்திரம் தூய்மையாய் இராது. ஆய்வு இல்லாத பணியில் வளர்ச்சி இராது.”

1405. “கிராமச் சூழலில் குழந்தைகள் நன்கு வளர்க்கப்பட்டால் மேதைகள் வளர்வார்கள்; தோன்றுவார்கள்.”

1406. “அன்னை இந்திராவிடம் துணிவும் உறுதியும் இருந்தது! அதேபோழ்து நெகிழ்ந்து கொடுக்கும் மனப்போக்கும் இருந்தது.”

1407. “முதலாளித்துவம்” என்ற நஞ்சு உள்ள வரையில் நல்லவர்கள் வாழமுடியாது.”

1408. “முதலாளி வேறு; செல்வந்தர் வேறு.”

1409. “செல்வம் இல்லாத ஏழைகளில் கூட முதலாளிகள் உண்டு. இது ஒரு குணம்.”

1410. “பல, சிறு கடப்பாடுகள் முறையாக நிகழ்ந்தாலே பெரிய கடப்பாடுகள் தாமே நிகழும்.”

1411. “எந்த ஒரு சிறு நிகழ்வையும் கூர்ந்து கவனித்து வாழ்க்கையை இயக்குவது அறிவுடைமை.”

1412. “சில மனிதர்கள் தவறு செய்வதற்குக் காரணங்கள் கூற இயலாது. அது அவர்களுடைய சுபாவம்.”

1413. “உடுப்பது உண்பது இவற்றை எளிமைப் படுத்துவது அழுக்காற்றைத் தவிர்க்க உதவி செய்யும்.”

1414. “ஒருவரை அடியொற்றிப் பின்பற்றாமல் போற்றுவது ஒருவிதமான உணர்ச்சி. அதனால் பயன் இல்லை.”

1415. “இந்திய அரசியலில் ஜனநாயகப் பண்பு முழுமைத்துவம் அடையவில்லை.”

1416. “கசப்புணர்ச்சியும் காழ்ப்புணர்ச்சியும் இல்லாதவர்களே ஜனநாயகத்தில் கால் கொண்டு நிற்க இயலும்.”

1417. “இந்திய அரசியலில் நபர்களே முக்கியம். கொள்கை, கோட்பாடுகள் அல்ல.”

1418. “எந்த ஒன்றும் முறையாக நடவாது போனால் இழப்புக்களே வரும்.”

1419. “பாதுகாப்பு வேலைகள், வேலையாக மட்டும் அமையாமல் உணர்வு பூர்வமான கடமையாக அமைந்தால் நல்லது.”

1420. “ஜனநாயப் பண்புக்கு இன, மொழி, மத வேறுபாடுகள் இசைந்ததல்ல.”

1421. “கருத்து வேற்றுமைகள் கசப்புணர்ச்சியாக உருக்கொள்ளுதல் ஜனநாயக மரபுக்கு இசை வில்லாதது.”

த-10

1422. “ஒரு எல்லை வரையில்தான் பொறுத்தாற்றும் பண்பு தீமை எல்லைக் கடக்கும் பொழுது கயமைத்தனமாகிவிடுகிறது! கொல்வதைத் தவிர வேறு வழியில்லை!”

1423. “பண்டும் இன்றும் என்றும் பரந்த மனப்பான்மை உலகியலில் அடைந்தது தோல்வியே!”

1424. “நல்லவர்களைவிட தீயவர்கள் நல்லவர்களாக நடிப்பது, கவர்ச்சியாக இருக்கிறது. மக்கள் மயங்குகின்றனர்.!

1425. “விடுப்பில் இருக்கும் விருப்பம், உழைப்பிலும் இருந்தால் உலகம் உருப்பட்டுவிடும்.”

1426. “உபதேசியாதல் எளிது. ஆனால் செய்வது கடினம்.”

1427. “மனம் ஒரு விந்தையான பொருள். முறையாகப் பழக்கினால் நாய்; இல்லையானால் புலி:”

1428. “நோய் வராது வாழ்தலே ஒரு கலை. ஆசைகள் இல்லாமற்போனால் நோய் இல்லை.”

1429. “நூல்களைப் படிப்பது சமைத்த சோற்றைச் சாப்பிடுவதைப் போன்றது.”

1430. “இன்று ஆசை, அரசியல் எல்லாம் வெறும் உள்ளீடில்லாத உணர்ச்சிகளேயாம்.”

1431. “தலைவரின் கொள்கைக்கு மொட்டை போடுகிறவர்கள், தலைவர் இறந்தாலும் தலை மொட்டை போடுகிறார்கள்.”

1432. “பலர் ஏற்றுக் கொள்ளும் ஒரு செயல் மக்களாட்சி முறை தழுவியதே.”

1433. “வாய்ப்புக்களைப் பயன்படுத்தி வளர்பவர்கள் சிலரே.”

1434. “கசப்புணர்ச்சியை வளர்த்தல் எளிது; அகற்றுதல் அரிது.”

1435. “இந்திய சமூக வாழ்க்கையில் வேரூன்றிய பிரிவினை எண்ணங்களை எளிதில் அகற்ற முடிய வில்லையே!”

1436. “நியாயமான ஒன்றை அடைய எளிய முயற்சிகளே போதும்!”

1437. “பிறர் பற்றி உன்னிடம் குறை சொல்பவர்கள் நிச்சயம் உன்னைப் பற்றியும் கூறுவார்கள். விழிப்பாக இரு.”

1438. “நற்பழக்கங்கள் மூலம் தான் தீயபழக்கங்களை அகற்ற முடியும்.”

1439. “வாழ்க்கை, களிப்புக்காக ஏற்பட்டதன்று களிப்பு, வாழ்க்கையில் ஒரு பகுதி.”

1440. “மற்றவர் கவலையை அறிந்து மாற்ற முயலுபவர்களின் கவலை தானே மறையும்.”

1441. “சம வாய்ப்புகள் இயற்கையாக அமையத்தக்க வகையில் சமுதாய நடைமுறை அமைந்தாலே நாடு வளரும்.”

1442. “பாவிகளையும்கூட நேசித்து கட்டுப் பாட்டிற்குள் வைத்துக் கொள்ளல் புண்ணியம் செய்தற்கு உதவியாக இருக்கும்.”

1443. “ஒவ்வொருவ்ரும் அவர்களால் முடிந்த எல்லை வரையில் தனி நடைப்போக்கு. இயலாத எல்லையில் சமுதாயத்தை நாடுவர்.”

1444. “அற்ப மனிதர்கள்தான்” பெரிய மனிதர்களாகிக் கொண்டு வருகின்றனர்.”

1445. “சிறுபான்மையினர்தான், பெரும்பான்மையினரை அடக்கியாள்கின்றனர். இந்த முரண் பாட்டுக்குக் காரணம் அறிவு பெறுதலுக்கு அனைவருக்கும் சம வாய்ப்பு அமையாமையே யாம்.”

1446. “எப்படியாவது காரியத்தைச் செய்து முடித்தல் என்ற வாழ்க்கை முறை, நன்றன்று. இப்படித்தான் என்று திட்டமிட்டு நெறிமுறைப்படி அமைதல் வேண்டும்.”

1447. “தீமை செய்யாதவர்கள் அனைவரும் நல்லவர்கள் அல்லர்; நன்மை செய்பவர்களே நல்லவர்கள்.”

1448. “உயிருக்கு இன்னல் விளைவிக்கும் பணியை மற்றவர்களிடம் செய்யக் கொடுப்பதே மனித இயற்கை.”

1449. “வேலை வாங்கும் உரிமையைப் போலவே வாழ்வளிக்கும் கடமையை மேற்கொள்ளவேண்டும்.”

1450. “காலம், ஆற்றல், பணி முதலியவற்றை முறைப்படுத்திச் செய்தால், பணிகளையும் நிறைய செய்யலாம்; மிகுதியும் பயனுடையதாகவும் செய்யலாம்; தப்பாமலும் செய்யலாம்.”

1451. “இப்படித்தான் வாழ்வேன் என்று உணர்வு பூர்வமாக முடிவெடுத்துவிட்டால் நமது மூளையும் உடலும் இயல்பாகவே ஒத்துழைக்கும்.”

1452. “பலவீனமானவர்களால் சமுதாயம் சீர் கேடடைவதைவிட, பலமானவர்களுடைய பலம், பலவீனத்தை ஈடுசெய்யக் கூடியதாக சமுதாய உணர்வுடன் வளரவில்லை. பழுதான இயந்திரத்தை, பழுதாகாத இயந்திரம் இழுத்துப் போகவில்லையே!

1453. “சிலர் நல்லவர்களே! திறமை இன்மையால் கெட்டவர்கள் போலத் தெரிவர்.”

1454. “விரைவு உணர்வு வேறு; அவசரப்படுதல் வேறு. விரைவு உணர்வு காரிய சாதனையைத் தரும். அவசரப்படுதல் காரியக் கேடுகளையே தரும்.”

1455. “சுறுசுறுப்பு வேறு, பரபரப்பு வேறு. சுறு சுறுப்பு நல்லது. பரபரப்பு நல்லதல்ல.”

1456. “இன்றைய குடும்பங்களில் பல, உடல் வயப்பட்டவை; உணர்வுவயப்பட்டவை அல்ல.”

1457. “சமமற்ற நிலையில் அன்பு தோழமை, சன நாயகம் சிறப்பதில்லை.”

1458. “ஒத்த நோக்கில்லாதார் நட்பினராய் இருத்தல் அரிது.”

1459. “கழுவாய் முறையாக அமைந்தால் நோய் இல்லை; பகை இல்லை!”

1460. “வல்லாங்கு வாழ்பவர் தொடர்ந்து மற்றவர் வாழ்க்கைக்குத் தீங்கு செய்வதைத் தடுக்க இயலாத அரசு, அரசல்ல.”

1461. “அநீதியை எதிர்க்காமல் ஒதுங்கி வாழ்பவர்களும் அநியாயக்காரர்களே!”

1462. “அரசாங்கப் பணிமனைகளிலும் எளிய உழைப்பாளிகளுக்கு உத்தரவாதம் இல்லை.”

1463. “சோவியத்தில் லஞ்சம் வாங்கினான்! இது எப்பொழுதோ நிகழ்வது. ஆனால் நம் நாட்டிலோ லஞ்சம் தேசியமயப்படுத்தியாயிற்று.”

1464. “பலரை மொட்டையடித்து வாழ்பவ்ர்கூட திருப்பதிக்கு மொட்டை போடுகின்றனர்! பாபக் கழுவாய் போலும்.”

1465. “இன்றைய அரசியலில் - வாழத் தெரியாதவர்களே பெரிதும் ஈடுபடுகின்றனர்.”

1466. “தேவைக்கு வாங்கியவர்கள், திருப்பித் தரும் பொழுது சங்கடப்படுவது அறமன்று.”

1467. “நாளை எண்ணி ஊதியம் கொடுக்கும் முறை உழைப்பைக் கெடுக்கும்.”

1468. “உழைப்பு, பொருளீட்டல் ஆகிய இரண்டிலும் மன நிறைவு கொள்ளுதல் கூடாது கொண்டால் தேக்கநிலை வரும்.”

1469. “ஆற்றல் இயற்கை; படைப்புப் பொருளன்று. ஆற்றலைப் பயன்படுத்துகிற முறையிலேயே மனிதன் வெற்றி பெறுகிறான்.”

1470. “உள்ளவர் பெறுவார் என்பது ஆன்றோர் நியதி. இன்று அதையும் அழுக்காறு கெடுக்கிறது.”

1471. “தன்னைவிட மற்றவர் குறைவாகவே பெறுதல் வேண்டும் என்ற எண்ணம் இன்று பலரைப் பிடித்தாட்டுகிறது.”

1472. “இன்று எங்கும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசிப் பெருந்துன்பத்தை விளைவிக்கின்றனர்.”

1473. “இன்றைய இந்தியாவை, வேந்தலைக்கும் கொல்குறும்பு வருத்துகிறது.”

1474. “அறிவு, ஆள்வினையில் விருப்பமில்லாதார் விழுமிய சிறப்புக்களைத் தேடி அலைகின்றனர்.”

1475. “சாவு, - இயற்கை: ஆனால் வாழாமல் வாழ்வதைவிடச் நாமாக சாவது மேல்.”

1476. “இந்த உலகம் வாழ்க்கையின் மேல் உள்ள ஆசையால் எந்தத் துன்பத்தையும் எளிதில் மறந்துவிடும்.”

1477. “விலங்குகள், தனக்கு உணவுக் கிடைத்து விட்டால் அமைதி கொண்டுவிடும்; மற்ற விலங்குகளைப் பற்றிக் கவலைப்படாது இந்த நிலைக்கு இன்று மனிதர்களும் வந்துவிட்டார்கள்.”

1478. “சமநிலை இல்லாத சமுதாயத்தில் சண் நாயக தத்துவம் வெற்றி பெறாது.”

1479. “செய்பணிகளில் போராட்ட உணர்வு இல்லையெனில் வாழ்க்கை எளிதில் வெற்றியைத் தழுவாது.”

1480. “இந்திய சமூக வாழ்க்கையில் முதுமை, போற்றப்பட்டதுண்டு. இன்று இல்லை.”

1481. “பண்டித ஜவஹாலால் நேரு அவர்களின் குடும்பத்தின் பரிணாம வளர்ச்சி அறிவியல் சார்புடையது; சுதந்தரத் தன்மையுடையது.”

1482. “இன்று காலிஸ்தான் சிக்கலுக்குக் காரணம் பஞ்சாபை, பஞ்சாப், ஹாரியானா என்று பிரித்ததேயாம்.”

1483. “தற்காலிக வெற்றிகளுக்காக தீய சக்திகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளுதல் தவறு. பின் விளைவுகள் தீமையையே தரும்.”

1484. “காலில் முள் தைத்துவிட்டது என்று கேட்கும் நிலைக்கு இன்றைய சமூகம் வந்து விட்டது.”

1485. “காதல் வாழ்க்கையில் பெண்ணுக்குப் பேருழைப்பு: பெருஞ்சுமை! உழைப்பு வாழ்க்கையிலும் அப்படியே! இது நியாயமற்ற தன்மை!”

1486. “கடைவீதியில் நல்ல தூய்மையான” சத்துள்ள உணவு நியாய விலைக்குக் கிடைத்தால் நமது பெண்கள் வாழ்க்கையை மாற்றலாம்; வளர்க்கலாம்.”

1487. “பயம்-கோழைத்தனத்துக்குத் தாய்! நரகத்தின் வாயில்!”

1488. “தவறுகளுக்கு அஞ்சுவது வேறு. தண்டனைகளுக்கு அஞ்சுவது வேறு. இன்று தண்டனைகளுக்கே அஞ்சுகின்றனர். தவறுகளுக்கு யாரும் அஞ்சுவதில்லை.”

1489. “ஒருவர்தம் உடற்கருவிகளை பூரணமாகப் பயன்படுத்தினால் இன்பமாக வாழலாம். இது சத்தியம்!”

1490. “வாங்குபவர் விலை பேசாதுபோனால், விற்பவர் விருப்பமே விலையாகிவிடும்.”

1491. “ஒரு நோக்குடைய அரசாங்கத்தில் பணி செய்வோரிடையில் ஒருங்கிணைப்பின்மையே. நோக்கமில்லாத வாழ்க்கையைக் காட்டுகிறது.”

1492. “தியாகம், நாகரிகம் முதலியன பற்றிக் கவலைப்படாது-ஆதாயம் பற்றியே கவலைப்படுதல் விபச்சாரத்துக்கு நேரானது.”

1493. “சமமற்ற நிலைகள் உள்ளவரையில் நற்பண்புகள் வளர்தல் அரிது.”

1494. “வாய்ப்புக்கள் தானாக வருவன அல்ல; உருவாக்கிக் கொள்ளப்படுபவை.”

1495. “தன் தவற்றை உணரும் திறனற்றவர்கள் மற்றவர்கள் தவறுகளைப் பெரிதுபடுத்துபவர்.”

1496. “அதிகாரத்தைச் சுவைத்தல் தீமையில் தீமை.”

1497. “பெரும்பான்மையோர்” முடிவெல்லாம் ஜனநாயகத் தன்மை உடையனவாகாது!”

1498. “விவகாரத்தில்   உளப்பூர்வமான சமாதானம் கண்டால் ஒழிய-விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாது.”

1499. “கெட்டிக்காரன் கிடைத்ததைச் சுருட்டுகிறான்; ஏமாளி வாய்ப் பறை அறைந்து கொண்டிருக்கிறான்.”

1500. “இந்திய சமுதாயத்தில் புதியன சிந்தித்தவர்கள் உண்டு. ஆனால் இந்திய சமுதாயம் புதியன வற்றை ஏற்கவில்லை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=சிந்தனை_துளிகள்/1401-1500&oldid=1055655" இலிருந்து மீள்விக்கப்பட்டது