சிந்தனை துளிகள்/1301-1400

விக்கிமூலம் இலிருந்து

1301. “தயவிலும் தவறுகள் நிகழ்வது உண்டு.”

1302. “அறிவொடும் - நடைமுறையொடும் பொருந்தாத் தயவு நன்றன்று.”

1303. “ஒவ்வொரு உயிரும் கடைசித் தருவாயிலும் கூட சுகித்திடவே விரும்பும்.”

1304. “மலைக்குப் பக்கத்தில் நிற்பதெல்லாம் மலையாகிவிடாது. அதுபோல பெரிய மனிதரைச் சேர்ந்தவர்கள் எல்லாம் பெரிய மனிதர்கள் இல்லை.”

1305. “ஒன்றை ஊக்கத்துடன் செய்தால் எளிதில் காரியம் முடியும்.”

1306. “செய்முறைகளுடன் பாடம் போதிக்கும் மரபு வழித் திருவுருவமே ஆலமர் கடவுள்.”

1307. “சட்டங்கள் வரையறையில் நிற்கும் அமைப்புக்கள் வழங்க இயலாது.”

1308. “நிதி மிகமிக உயர்ந்தது."

1309. “ஒவ்வொரு இந்தியனும் மதச் சார்பற்ற தன்மையுடையவனாய் இருந்தாலே மதச் சார்பற்ற நாடு.”

1310. “பொறுப்புணர்ந்த நிலை, வாழ்க்கையை இயக்கமாக்கி விடும்.”

1311. “வாழ்க்கையில் உள்ள சோம்பலே பொறுப்பின்மைக்குக் காரணம்.”

1312. “இன்தென வேலை தெரிந்திருந்தும் அதைச் செய்யாது சுற்றுவது அலையும் மனத்தின் அடையாளம்.”

1313. “இறை வழிபாடு மட்டுமே வாழ்க்கை என்றால் மானுடப் பிறப்பை இறைவன் செய்திருக்க வேண்டியதில்லை.”

1314. “அரசின் திட்டங்களை அறிந்து கொள்ளுதலே ஆக்கத்தின் முதற்படி.”

1315. “செலவுகளில் முதற் செலவு சேமித்தல்”

1316. “கொடிய துன்பங்களையும்கூட மகிழ்வாக அனுபவிக்கலாம்-வாழ்க்கையில் வளரவேண்டும் என்ற உணர்விருந்தால்.”

1317. “சமுதாய அமைப்பின் சிற்பி ஆசிரியரே.”

1318. “ஒவ்வொருவருக்கும் ஒரே ஒரு உபாசனா மூர்த்திதான் இருக்கவேண்டும். எந்தத் திருவுருவத் தினைக் கண்டாலும் தனது உபாசனா மூர்த்தியின் வண்ணமாக நினைப்பதே மரபு.”

1319. “மனசாட்சி” என்ற சொல், மனத்துக்குச் சாட்சியாக இருக்கும் கடவுளையே குறிக்கும்.”

1320. “நாம் முற்றாகப் பொறுப்பேற்க இயலாத நிலையில், சத்தியம் செய்வது கூடாது.”

1321. “அறு கயிறு ஊசலென்று மனம் அலைதல் கூடாது.”

1322. “மரண வாயிலிலும் வன்கண்மை உள்ளம் மாறாதவர்கள் வளர்ச்சி யடையாதவர்கள்.”

1323. “நாம் மட்டும் நல்லவர்களாக இருந்தால் போதாது. நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நல்லவர்களாக இருந்தாலே பயன் உண்டு.”

1324. “மற்றவர்களிடம் மேலாண்மை கொணர்வதே சரியான நிர்வாகத்திற்கு உதவியாக அமையும்.”

1325. “அடிமைப் புத்தியுடையவர்கள் சுதந்தரத்தை அனுபவிக்கமாட்டார்கள்.”

1326. “பிழைப்பு நடத்த விரும்புகிறவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள மாட்டார்கள்.”

1327. “காலத்தில் கண்காணித்தால் இழப்புக்களைத் தவிர்க்கலாம்: ஈட்டங்களைக் கூட்டலாம்.”

1328. “சிந்திப்பவன், சிந்திக்காதவன் சொல்லைக் கேட்பது பைத்தியக்காரத்தனம்.”

1329. “சிறு எல்லைகளைத்தான் சமாளிக்க இயலும்.”

1330. “காலம், பொன்-இரண்டையுமே அளந்து பயன்படுத்தி மிச்சம் பிடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.”

1331. “மானிட உறவுகளைப் பராமரிப்பது பயன்களைத் தரும்.”

1332. “புகழை விரும்புகிறவர்களிடம், கஞ்சத் தனம் இல்லாமல் புகழ்ந்து பேசுக.”

1333. “வலிமையுடையார் தேடாது போனாலும் சென்று உறவு கொள்வர்.”

1334. “உழைக்காது உண்பவர்க்கு இயற்கை வழங்கும் தண்டனை தான் நோய்.”

1335. “சில தீர்மானங்கள் எடுத்தாலும், செயற்படுத்தப்படுவது நல்லது.”

1336. “பிழைபடச் செய்வார் வருந்தி மாற்றிக் கொள்ளாமைக்குக் காரணம், ஒன்று அறியாமையாக இருக்கவேண்டும் அல்லது அகந்தையாக இருக்க வேண்டும்.”

1337. “சிறிய சிறிய தவறுகளிலிருந்தே பெரிய தவறுகள் தோன்றுகின்றன.”

1338. “படிப்பிக்கும் ஆசிரியர்கள் சுறுசுறுப்பாக இருந்தால், நாடே சுறுசுறுப்பாக இயங்கும்.”

1339. “கடமைகளைவிட காப்பி, தேநீர் அருந்தல் முதன்மைப் பெற்றுவிட்டால் யார்தான் காப்பாற்ற இயலும்.”

1340. “வயிறு இல்லாது போனால் பலர் வேலை செய்யமாட்டார்கள்.”

1341. “அன்பு இல்லாத இடத்தில் மகிழ்ச்சி இல்லை!”

1342. “கருணைக்கு விஞ்சிய சிறப்புடையது இந்த வையகத்தில் இல்லை.”

1343. “ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கிக் கட்டியதில் உருவானதே மாளிகை. அதுபோல ஒவ்வொரு செயலாகத்தான் புகழ்பூத்த வாழ்வு உருப்பெறுகிறது.”

1344. “ஒருவர் வாழ்வு, பிறிதொருவர் வாழ்வின் நலனுடன் பிணைந்துவிடின் வாழ்வித்து வாழும் பண்பு கால் கொள்ளும்.”

1345. “ஒழுங்குகள் பழக்கப்படும் வரையில்தான் தொல்லை. பழக்கத்திற்கு வந்து விடின் அது பாதுகாப்பான சாதனம்.”

1346. “ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பது என்பது பிறப்பின் வழி அமைந்த கடமை.”

1347. “படித்தவர்கள் செய்த தவறுகளின் பயனே ஆட்சிமுறைகள்.”

1348. “சிறுநீரகம் சீராக இயங்காது போனால் விளையும் தொல்லையைப் போன்றே சிறியவர்கள் சீராக இயங்காவிடினும் துன்பம் ஏற்படும்.”

1349. “மலச்சிக்கலிலும் கொடியது மனச்சிக்கல். விரைவில் தீர்வு காண்பது நல்லது.”

1350. “தாம் செய்யாது விடும் காரியங்களால் உலகம் பெரிய துன்பத்திற்கு ஆளாவதை அறிக.”

1351. “வெற்று அரசியல், ஆர்ப்பாட்டத்தில் வெளிச்சம் போடுகிறது.”

1352. “நன்மையைக் கூட, நன்மைக்காகவே செய்யவேண்டும். நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு செய்யக் கூடாது.”

1353. “பொருட் செல்வம் போற்றும் பண்பற்றவர்கள் பொருளுடையராதல் அரிது.”

1354. “மிகவும் தரத்தில் குறைந்த மனிதர்கள் மற்றவர்களையும் தம் அளவுகோலையே வைத்து அளப்பர்.”

1355. “சமூகச் சேவையில் எவ்வளவு மகிழ்வு இருக்கிறதோ அவ்வளவு நெருக்கடியும் இருக்கும்.”

1356. “நாளுக்கொரு தொழிற்கூடம் கண்டால் நலிவு நீங்கும்.”

1357. “நிர்வாகியைவிட உழைப்பாளரே உயர்ந்தவர்.”

1358. “இந்திய சமூக அமைப்பில் நிர்வாகிகளை விட, தொழிலாளிகள் குறைவான ஊதியமே பெறுகிறார்கள்.”

1359. “சுதந்தரம் என்பது அனுபவிக்கத் தக்கது. ஆனால் சுதந்தரத்தை அனுபவிக்கும் திறன் எளிதில் வருவதில்லை.”

1360. “அதிகாரத்தால் ஒன்றைச் செய்வதைவிட, அன்பான அணுகுமுறையால் செய்வது பயனுடைய பண்பாட்டு முறை.”

1361. “கூட்டுறவு என்பது, இருக்கும் பிரிவினைகளைக் கடந்து ஒன்றுபடுவது.”

1362. “இன்று கையூட்டு தேசியமயமாகி விட்டது.”

1363. “விருப்பம்-விழைவு இவற்றில் பிறந்து வளர்ந்த கையூட்டு இன்று கட்டாயமாகி விட்டது.”

1364. “மனிதர்கள் எடுத்த தீர்மானங்கள் செயலுருக் கொண்டிருந்தால் உலகம் சொர்க்கமாகி இருக்கும்.”

1365. “செயற்பாட்டுக்கு வராத, அரசு ஆணைகளே மிகுதி.”

1366. “தொடர்புடையார் கருத்தறியாமல் ஒரு கோப்பினை முடிப்பது தவறு.”

1367. “மனிதகுலம் ஒன்றே! இதுவே இயற்தை! பிரிவினைகள் இயற்கைக்கு மாறானவை.”

1368. “மனிதகுலம் முழுமையடைய முதற்பகை வறுமை."

1369. “வறுமை ஏற்றத்தாழ்வு - இவைகளை வாயில்களாகக் கொண்டே பகை தோன்றுகிறது.”

1370. “வரலாறு தொடர்ந்து இயங்குகிறது. இந்த வரலாற்றியக்கத்தைக் கூர்ந்தறிந்து கற்பவர்கள், வாழ்க்கையில் வெற்றிபெறுவார்கள்.”

1371. “இந்திய சிந்தனையாளர்கள் துறவு மனப் பான்மையுடையோராய், அரசுக் கட்டிலுக்கு வராமையினாலேயே நமது நாட்டுச் சிந்தனையாளர்கள் தோற்றார்கள்.”

1372. “புத்தர் கூட துன்ப நீக்கத்திற்கு வழி துறவென்றே கண்டார்.”

1373. “ஒரு பொருளின் மதிப்பைக் கூட்டுவது உழைப்பு.”

1374. “தங்கம் விலை மதிப்புடையதுதான். ஆனால், அத்தங்கத்தின் மதிப்பறிய, சாதா மதிப்புடைய மாற்றுக்கல் தான் பயன்படுகிறது. அதுபோல, உயர்ந்த சிந்தனைகள் கூட சராசரி மனிதரிடத்தில் தோற்றுவிக்கும் தாக்கங்களைப் பொறுத்தே மதிப்பிடப் பெறும்.”

1375. “வழிவழி வரும் பழக்கங்களுக்கு ஒரு அரசாங்கத்தைவிட அதிக செல்வாக்கு உண்டு.”

1376. “இந்திய சுதந்தரப் பிரசவமே பலவீனமான கஷ்ட நிலைதான்!”

1377. “ஆங்கிலேயர்கள் போய்விட்டாலும், அவர்கள் விதைத்த இன, மொழி, சமயப் பிரிவினை நச்சு விதைகள் செழித்து வளர்கின்றன.”

1378. “தீவிர சமயவாதிகளுக்கு இந்த உலகத்தை விட அடுத்த உலகத்தைப் பற்றிய கவலையே அதிகம்.”

1379. “பழக்கம் என்பது சேறு. இச்சேற்றில் சிக்கியவர்கள் எளிதில் கரையேற மாட்டார்கள்.”

1380. “தெரியவேண்டியன தெரியவும், துணிய வேண்டியன துணியவும் செய்ய வேண்டியன செய்யவும் தடையாக இருப்பவை எதுவும் தீமையேயாம்.”

1381. “செயலின்மையால் யான் அழிவதைவிட தாட்சண்யத்தால் அழிவதே மிகுதி.”

1382. “கூட்டுச் சமூக வாழ்க்கைக்குத் தன்னைத் தயாராக்கிக் கொள்ளாதவர்கள் கூட்டத்தில் இருந்தாலும் தனி மனிதரே!”

1383. “உலகம் முழுதும் சமநிலைச் சமுதாயம் தோன்றினாலே போரிடும் உலகம் திருந்தும்.”

1384. “வாழ்வோரினும் செத்தார் உண்டு; செத்தோரினும் வாழ்வோர் உண்டு.”

1385. “அக்கறை என்பது இடம் நோக்கிச் செயற்படும் பண்பன்று; இயல்பானது.”

1386. “காசுகளின் அருமை அறியாதார், எப்போதும் செல்வந்தர் ஆகார்.”

1387. “மேடைகள் அமைத்தலே இப்போது ஒரு பிழைப்பாகிவிட்டது.”

1388. “இருபாலும் ஒத்த, ஒன்றைக் கூறினாலும் ஏற்க முன் வராது போனால் அவர்கள் நியாயத்தை மறுக்கிறார்கள்.”

1389. “சிலருக்கு ஒன்றை எப்படியும் அடைந்து விடுவது என்ற மனத்தின் பின்னணியில் கரவும் வன்கண்மையும் இருக்கும். இவர்கள் உறவு ஆகாது.”

1390. “உழைக்காமல் சாப்பிடும் நிலப்பிரபுக்கள், படித்த அறிஞர்கள், பேச்சுக்குப் பணம் கேட்பதைக் குறை சொல்கிறார்கள்.”

1391. “ஒன்றைத் தொடர்ச்சியாகக் கண் காணிக்காது போனால், புதிய சிக்கல்கள் தோன்றும்.”

1392. “உழாத நிலம் கெடுவது போல, பழகாத உறவும் கெடும்.”

1393. “திறமையற்றவர்கள், நிர்வாகத் தலைமைக்கு ஆசைப்படுவது பயனற்றது.”

1394. “ஒன்றும் செய்யாதவர்களைவிட, செய்வது போல் பாவனை செய்கிறவர்கள் மோசமானவர்கள்.”

1395. “குழுக்களை உருவாக்க, சேர்க்க முயற்சிப்பவர்கள் ஏதோ ஒரு கொள்கைக்கு ஆயத்தம் செய்கிறார்கள் என்பதே கருத்து.”

1396. “நாலுபேர் உட்கார்ந்து பேசும் இடத்தில் கூட்டுச் சிந்தனை நிகழும் போது தனித்தும் பிரிந்தும் எண்ணுதல் சைத்தானின் செயல்.”

1397. “தற்காலிகமான உழைப்புக்களைக் காட்டிச் சமாளிப்பவர்கள் சிறு தூறல்களைப் போலத் தரையை நனைக்கலாம். அவர்களால் வளத்தையும் வெற்றியையும் தரவியலாது.”

1398. “ஒரு பணியில் ஈடுபட்டுள்ள பலர், ஒருவரை ஒருவர் எண்ணத்தாலும் செயலாலும் உறவாலும் நெருங்கி வராது போனால் அந்தப் பணி சிறப்பாக நடவாது.”

1399. “ஏகாதிபத்திய அரசுகளின் செயற்பாடு நாகரிகமாக இல்லை. கொலை செய்யும் அளவுக்கு வந்துவிட்டனர். இனி இந்த உலகத்தை, கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.”

1400. “யாரை நம்புவத” என்ற வினா, மனித நாகரிகம் கெட்டு விட்டது என்பதன் அடையாளம்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=சிந்தனை_துளிகள்/1301-1400&oldid=1055654" இலிருந்து மீள்விக்கப்பட்டது