சொன்னால் நம்பமாட்டீர்கள்/கலைவாணருடன் போட்டி
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் எனது நெருங்கிய நண்பர். எனது நகைச்சுவைப் பேச்சுகள் அவரை மிகவும் கவர்ந்திருந்தன. பல ஊர்களுக்கு அவரும் நானும் பிரயாணம் செய்திருக்கிறோம். பல பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறோம்.
மகாத்மா காந்தியடிகள் அமரரானபோது சென்னை தியாகராய நகரிலுள்ள தக்கர் பாபா வித்யாலயத்தில் 30 நாட்கள் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. 30வது நாள் கலைவாணரும் நானும் பேசுவதாக ஏற்பாடு.
மேற்படிகூட்டத்தில் பேசுவதற்காக இருவரும் ஒரே காரில் சென்றோம். அப்போது என்.எஸ்.கே. சொன்னார். இன்று நான் பேசிய பிறகு நீங்கள் பேச வேண்டும், முடியுமா? என்றார். ‘முடியும்’ என்றேன்.
‘நான் பேசிவிட்டால் கூட்டம் இருக்காதே ‘ என்றார். ‘கூட்டத்தை இருக்கும்படிச் செய்யலாம்’ என்றேன். ‘தோல்வி அடைவீர்கள்’ என்றார். பார்க்கலாம் என்றேன்.
‘நான்பேசிய பிறகு கூட்டத்தை நிறுத்தி வைத்து அரைமணி நேரம் நீங்கள் பேசினால் ரூ.1000/- தருகிறேன் என்றார்.
‘ரூபாய் ரெடியாக இருக்கட்டும்’ என்றேன்.
இருவரும் கூட்டத்திற்குச் சென்றோம். சுமார் 3000 பேர் கூடியிருந்தனர். பிரார்த்தனை முடிந்ததும் ஏற்கெனவே நாங்கள் திட்டமிட்டபடி கலைவாணர் என்.எஸ்.கே. பேசினார். அரைமணி நேரம் மிக உருக்கமாகப் பேசினார். இயற்கையாக அவருக்குள்ள நகைச்சுவையும் ஆங்காங்கே வெளிப்பட்டது.
அவர்பேசி முடிந்ததும் கண் மூடிக்கண் திறப்பதற்குள் நான் எழுந்து கம்பீரமான குரலில் “சங்கநாதம் கேட்குது, சாந்த காந்தி சத்தியத்தின் சங்க நாதம் கேட்குது” என்று பாட ஆரம்பித்தேன்.
எதிர்பாராதவிதமாக இப்படி நான் திடீரென்று பாட ஆரம்பித்ததும் சபை அப்படியே நிசப்தமாகி வெகு கூர்மையுடன் என் பாட்டை கேட்டுக் கொண்டிருந்தது. பாட்டுப் பாடி முடிய பத்து நிமிடங்கள் ஆயின. பாட்டு முடிந்ததும் பலத்த கரகோஷம், அடுத்த வினாடிமக்களைப் பார்த்து நான் ஒரு கேள்வி கேட்டேன்.
உங்களில் யார் யார், காந்தி பக்தர்கள் தயவு செய்து கையைத் தூக்குங்கள் பார்க்கலாம் என்றேன். அனைவரும் கை தூக்கினார்கள். அப்படியானால் காந்தியடிகள் பிரார்த்தனை செய்தது போல் நாமும் கூட்டுப் பிரார்த்தனை செய்யலாமா? என்று கேட்டேன். அனைவரும் ஒரே குரலில் சரியென்றார்கள், ரகுபதிராகவ ராஜாராம் பிரார்த்தனை பத்து நிமிடம் நடத்தினேன்.
அதன் பின்னர், மக்களிடம் சொன்னேன், “கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் உங்களை மிகவும் நேசிக்கிறார். அதைப் போலவே நீங்களும் அவரை நேசிக்கிறீர்கள். அதனால் நான் அவரிடம் சொன்னேன்.
நீங்கள் முதலில் பேசிவிட்டால் மக்கள் கலைந்து விடுவார்கள். ஆகவே நான் முதலில் பேசி விடுகிறேன். என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர், நீங்கள் நினைப்பது தவறு.
இன்று கூட்டத்திற்கு வருபவர்கள் எனக்காகவும், உங்களுக்காகவும் வருபவர்கள் அல்ல; காந்தி மகாத்மாவின் பக்தர்கள். ஆகவே கூட்டம் முடியும் வரையில் இருப்பார்கள் என்று சொன்னார்.
அவர் சொன்னதை நம்பித்தான் நானும் அவர் பேசிய பிறகு பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் கலைவாணர் சொல்லியபடி கடைசி வரையில் இருப்பீர்களா? என்று கூட்டத்தைப் பார்த்துக் கேட்டேன்.”
‘கண்டிப்பாக இருக்கிறோம்’ என்று ஏகோபித்த குரலில் மக்கள் பதில் கொடுத்தார்கள்.
உடனே என்.எஸ்.கே.எழுந்து அவருக்கும் எனக்கும் ஏற்பட்ட பந்தயத்தைப் பற்றி மக்களிடம் விளக்கிச் சொல்லி, ‘பந்தயத்தில் சின்ன அண்ணாமலை ஜெயித்துவிட்டார்’ நான் சொன்னபடி ரூ.1000/- த்தை இப்போதே கொடுக்கிறேன், என்று பணத்தைக் கொடுத்தார்.
நான் அதை வாங்கி தக்கர் பாபா வித்யாலயத்திற்கு நன்கொடையாக வழங்கினேன்.