உள்ளடக்கத்துக்குச் செல்

சொன்னால் நம்பமாட்டீர்கள்/கட்டபொம்மன்-கப்பலோட்டிய தமிழன்

விக்கிமூலம் இலிருந்து

கட்டபொம்மன்,
கப்பலோட்டிய தமிழன்

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களுடன் நான் தமிழரசுக் கழகத்தில் தொண்டு செய்துகொண்டிருந்தபோது, தங்கமலை ரகசியம் என்ற திரைப்படக் கதை ஒன்றை பத்மினி பிக்சர்ஸ் உரிமையாளர் திரு.பி.ஆர். பந்துலு அவர்களிடம் சொன்னேன்.

கதை, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நடிப்பதற்காகவே சொல்லப்பட்டது.

வசனம் மிகச்சிறப்பாகப் பேசி அற்புதமாக நடிக்கும் ஆற்றல் பெற்ற சிவாஜி அவர்கள், வாய் பேசாமலே சிறப்பாக நடிப்பதற்காக பாதிக் கதை வரையில், வாய் பேசத் தெரியாத வாலிபனாகவும், பின்னர் பேசத் தெரிந்தவனாகவும் ஒரு கதாபாத்திரத்தை சிருஷ்டி செய்தேன்.

கதாநாயகன் குழந்தையாக இருக்கும்போது சூழ்ச்சியின் காரணமாகக் காட்டில் வீசப்படுகிறான். அக்குழந்தையை யானைகள் எடுத்து வளர்ப்பதாக கதை.

யானைகள் எப்படி எப்படி ஒரு குழந்தையை வளர்க்கும்-யானைகள் என்னென்ன வேலை செய்யும் என்பதை எல்லாம் இதற்காக நான் பல சர்க்கஸ் கம்பெனிகளில் விசாரித்து ஒரளவு தெரிந்து வைத்திருந்தேன். அதனால் திரு. பந்தலு அவர்கள் என்னையும் தன் கூடவே இருந்து படப்பிடிப்பிற்கு உதவியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

திரு. பி.ஆர்.பந்துலு அவர்கள் முதன் முதலில் டைரக்ட் செய்த படமும் அதுதான்!

“தங்கமலை ரகசியம்” படிப்பிடிப்பின்போதுதான் பந்தலு அவர்களின் உள்ளத்தில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, “கப்பலோட்டிய தமிழன்” ஆகிய இருவரின் சரிதத்தைப் படமாக்க வேண்டுமென்ற விதையை ஊன்றினேன். -

திரு. ம.பொ.சி. அவர்களைப் பற்றி பந்துலு அவர்களுக்கு அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருப்பேன்.

என்னுடைய தூண்டுதலுக்கு மிகவும் ஆதரவாக நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் இருந்தார்.

பத்மினி பிக்சர்ஸுக்கு பாட்டு எழுதிக் கொண்டிருந்த கவிஞர் திரு. கு. மா. பாலசுப்ரமணியமும் தமிழரசுக் கழகத்தைச் சேர்ந்தவராகையால் அவரும் என் பேச்சை ஆமோதித்துக் கொண்டிருந்தார்.

‘தங்கமலை ரகசியம் தமிழில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதுவே “ரத்னகிரி ரகசியம்’ என்ற பெயரில் கன்னடத்தில் வெளிவந்து அதுவும் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

இச்சமயத்தில்தான் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களும் நானும் மற்றும் தமிழரசுக் கழகத் தோழர்களும் கட்டபொம்மன் பற்றித் தமிழகமெங்கும் தீவிரப் பிரசாரம் செய்து கொண்டிருந்தோம்.

தமிழ் மக்கள் கட்டபொம்மனைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொண்டார்கள். அவனுடைய வீரம்-தியாகம் இவைகளை மிகவும் போற்றினார்கள்.

இச்சூழ்நிலையில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் வீர பாண்டிய கட்டபொம்மன் என்ற அற்புதமான நாடகத்தை அரங்கேற்றம் செய்தார்.

அந்த நாடகம் தமிழகத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியது.

திரு. பி. ஆர். பந்துலு உள்ளத்திலும் ஒரு புதிய வேகத்தை ஏற்படுத்தியது.

நாடகம் முடிந்து நாங்கள் வீடு திரும்பும்போது திரு. பந்துலு அவர்கள். என்னிடம், “சரி, உங்கள் விருப்பப்படி கட்டபொம்மன் பட வேலையை நாளையே துவக்குங்கள்” என்றார்.

நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

மறுநாள் முதலில் நான் செய்த காரியம் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் வீட்டுக்கு பி.ஆர்.பந்துலுவைக் கூட்டிக் கொண்டுபோய், ம.பொ.சி. அவர்களுக்கு மாலை மரியாதை செய்து “கட்ட்பொம்மன் படம் தயாரிக்கச்சிறந்த ஆலோசனைகள் அடிக்கடி சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுதான்.

அதுபோல திரு. ம.பொ.சி.அவர்கள் கட்டபொம்மன் படம் முழுவதற்கும் கூடவே இருந்து உதவி செய்தார்கள். கட்டபொம்மன் படப்பிடிப்பு சென்னை கோல்டன் ஸ்டுடியோவில் ஆரம்பமானது. முருகன் கோவில் செட் போட்டிருந்தோம். விளக்கேற்றி வைத்து ஆரம்பிக்க வேண்டிய பணியை என்னைச் செய்யும்படி திரு. பி.ஆர். பந்துலு சொன்னார்.

பக்கத்திலிருந்த அனைவரிடமும் இந்தப்படம் எடுக்க என்னைத் தூண்டியவர் சின்ன அண்ணாமலைதான். அதனால் அவர் விளக்கேற்றி வைப்பதுதான் முறை, என்று சொல்லி எனக்கு மாலை அணிவித்தார்.

கட்டபொம்மன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தமிழ்த் திரைப்படத்துறைக்கு ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கியது.

ஆசியாவிலே சிறந்த படம் என்ற பரிசை கெய்ரோவில் அதற்குக் கொடுத்தார்கள்.

இதை எல்லாம் பார்த்துநான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். என்னைப்போலவே திரு. ம.பொ.சி. அவர்களும் பெருமகிழ்ச்சி. அடைந்தார்கள். கட்டபொம்மன் படத்தைப் போலவே ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற திரைப்படத்தை திரு.பி.ஆர். பந்துலு எடுப்பதற்கு மூல காரணம் எனது முயற்சியே.

பந்துலு கூடவே நான் இருந்தபடியால் அவரிடம் அடிக்கடி பேசக்கூடிய வாய்ப்பு இருந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ‘கப்பலோட்டிய தமிழன்’ பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

என்உள்ளத்தில், கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்றவர்களைப் பற்றி பதியவைத்தவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.தான்.

திரு.ம.பொ.சி. இந்த முயற்சி எடுக்கவில்லை என்றால் கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழனுக்கு இவ்வளவு பேரும் புகழும் வந்திருக்குமா, என்பது சந்தேகமே!

பின்னர் பி.ஆர்.பந்துலு கப்பலோட்டிய தமிழன் என்ற திரைப்படத்தை எடுத்தார்.

நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் வ. உ. சிதம்பரனாராக நடித்து இறவாத புகழ் பெற்றார்.

இந்தப் படம் தயாரித்து வெளியிட்டபோது இதை ஒரு காங்கிரஸ்கார்ன் கதை என்று சிலர் பிரசாரம் செய்துவிட்டார்கள். அதனால் அப்போது படம் பெரிய வெற்றிபெறவில்லை. ஆனால் இப்போது அந்தப் படத்திற்குப் பெரிய வரவேற்பு மக்களிடமிருக்கிறது.

இன்னும் நாளாக ஆக கப்பலோட்டிய தமிழன் படமும் கட்டபொம்மன் படமும் மக்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படும் என்பதில் ஐயம் இல்லை.

கட்டபொம்மன்-கப்பலோட்டிய தமிழன் ஆகிய இந்த இரண்டு திரைப்படங்களும் தமிழில் வெளிவர அஸ்திவாரம் நான்தான் என்பது பலருக்குத் தெரியாது.

“அஸ்திவாரம் எப்போதும் கண்ணுக்குத் தெரியாது” என்பது அனைவருக்கும் தெரியும்.