சொன்னால் நம்பமாட்டீர்கள்/வடக்கு எல்லைப் போராட்டம்

விக்கிமூலம் இலிருந்து

வடக்கு எல்லைப் போராட்டம்

1955-ம் ஆண்டு தலைவர் காமராஜ் முதன் மந்திரியாக இருந்தநேரம். தமிழரசுக் கழகத்தின் வடக்கெல்லைப்போராட்டம் மீண்டும் துவக்கப்பட்டது. என் தலைமையில் சுமார் 50 தோழர்கள் சத்யாக்கிரகம் செய்யப் புறப்பட்டோம். அப்போது சட்டசபை இப்போதைய கலைவாணர் அரங்கு இருக்கும் இடத்தில் நடந்துகொண்டிருந்தது. சட்டசபை வழிகளை எல்லாம் சுவர் வைத்ததுபோல போலீசார் அடைத்துக் கொண்டிருந்தார்கள்.

எனக்கோ சட்டசபைக்குள் சத்தியாக்கிரகிகளுடன் போய் விடவேண்டும் என்ற எண்ணம், போலீஸ் வியூகத்தை உடைத்துக் கொண்டு எப்படிப் போவது என்ற சிந்தனையோடு சத்தியாக் கிரகிகளுடன் நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு வழி புலப்பட்டது.

எங்கள் போராட்டக்குழுவில் திருமதி. சரோஜினி நாராயணசாமியும் திரு .கு. சா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய மனைவியாரும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரையும் முன்னால் வரச்செய்து அவர்கள் தலைமை தாங்கிச் செல்வது போல ஏற்பாடு செய்தேன்.

இரு பெண்மணிகளும் முன்னால் செல்ல, நாங்கள் பின்னால் வந்து கொண்டிருந்தோம். போலீஸ்காவல் புரியும் கேட் அருகில் வந்ததும் திருமதி.சரோஜினியிடம் நிற்காமல் தயங்காமல் நடந்து செல்லுங்கள் என்று மெதுவாகக் கட்டளையிட்டேன்.

திருமதி. சரோஜினி நல்ல துணிச்சல் உள்ளவர். ஆகவே கொஞ்சமும் தயங்காமல் போலீசாரைப் பிளந்து கொண்டு செல்லமுனைந்தார். பெண்மணிகள் இருவர், தங்களை இடிப்பது போல் வருவதைப் பார்த்த போலீசார் கொஞ்சம் கூச்சப்பட்டு இலேசாக ஒதுங்கிக் கொடுத்தார்கள்.

அவ்வளவுதான் சத்தியாகிரகிகள் அத்தனைபேரும் கோஷம் செய்து கொண்டு ஒரே ஓட்டமாக சட்டசபைக்குள் கண்மூடிக் கண் திறப்பதற்குள் நுழைந்துவிட்டோம். சட்டசபை நடந்து கொண்டிருக்கிறது. திரு. கோபால மேனன் சபாநாயகர். திரு. காமராஜ் முதல் மந்திரி, திரு. சி. சுப்ரமணியம் நிதி மந்திரி மற்றும் மந்திரிகள். சட்டசபை அங்கத்தினர்கள் எல்லோரும் அசந்து போனார்கள். நாங்களோ சட்டசபைக்குள்ளே நின்றுகொண்டு “வேங்கடத்தை விட மாட்டோம்” என்றெல்லாம் முழக்கம் செய்தோம்.

சபாநாயகர் உத்தரவு இல்லாமல் சபைக்குள் போலீசார்வர முடியாது. அதனால் போலீசார் வெளியே நின்று கொண்டு துடித்துக் கொண்டிருந்தார்கள். சபாநாயகர் கோபாலமேனன் என்னைப் பார்த்து'சபைக்குள் வரக் கூடாது. சட்ட விரோதம், வெளியே போங்கள்” என்றார்.

உடனே திருமதி சரோஜினி, “நீங்கள் ஒரு மலையாளி. இது தமிழர் பிரச்சினை. மந்திரி சபையின் கவனத்தைக் கவரவே நாங்கள் உள்ளே வந்திருக்கிறோம்” என்றார்.

உடனே முதலமைச்சர் காமராசர் எங்களிடம், “சரி, எல்லோரையும் கூட்டிக் கொண்டு வெளியே வந்து சொல்ல வேண்டியதைச் சொல்லுங்கள்” என்றார், வெளியே வந்தோம். எங்களுடைய கோரிக்கையைச் சொன்னோம். “சரி. என்னால் செய்யக் கூடியதைக் கட்டாயம் செய்கிறேன்” என்று சொன்னார்.

அவர் அந்தப் பக்கம் போனதும் போலீசார் எங்களை வளைத்துப் பிடித்து கைது செய்து வேனில் ஏற்றில் வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனில் கொண்டுபோய் வைத்திருந்தார்கள்.

கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தியின் மனைவியாருக்கு இதெல்லாம் புதிய அனுபவம். கொஞ்சம் கலவரப்பட்டதுபோல இருந்தார்கள். நான் கு.சா.கி. அவர்களிடம் “எதுக்கய்யா மனைவியைக் கூட்டிக் கொண்டு வந்தீங்க? அவங்க ஜெயிலுக்குப் போகப் பயப்படுவாங்க போலிருக்கே” என்றேன்.

அவர் உடனே “இப்ப நான் கூட்டிக் கொண்டு வந்ததாலே தேச சம்பந்தமாக ஜெயிலுக்குப் போகப் போறா, வீட்டிலே விட்டு வந்திருந்தா கிரிமினல் சம்பந்தமா அடிதடி சண்டைக் கேசுக்காக ஜெயிலுக்கு வந்து நிற்பாளே” என்றார்.

“என்ன விஷயம்” என்றேன். அவர் சொன்ன விஷயம் ரொம்ப தமாஷாக இருந்தது. அதாவது அவருக்கு இரு மனைவிகள். இருவரும் ஒரே வீட்டில் குடித்தனம். ஒரு மனைவி மேல் மாடியில் வசிக்கிறார். இன்னொரு மனைவி கீழ் வீட்டில் வசிக்கிறார். தாங்கள் எங்கே வசிப்பது? என்று நடுவில் ஒரு கேள்வி போட்டேன்.

“நான் மாடிப்படியில்தான் வசிக்கிறேன், அதனாலே மேலே இருப்பவள் கீழ் வராமலும், கீழே இருப்பவள் மேலே போகாமலும் தடுத்துக் கொண்டிருக்கிற சக்தி நான்தான். விஷயம் இப்படி இருக்கிறபோது நான் மட்டும் போராட்டத்திற்கு வந்து விட்டால் மேலே இருக்கிறவள் கீழே வர, கீழே இருக்கிறவள் மேலே போக, கடைசியில் அடிதடி சண்டைக் கேசில் ஜெயிலுக்குத் தானே வரவேண்டும். அதனால்தான் ஒருத்தியை என்னுடன் கூட்டிக் கொண்டு வந்துவிட்டேன் என்றார்.”

எல்லோரும் தாமாஷாகச் சிரித்தோம். ஜெயிலுக்கு வந்தவர்களை மனம் தளராமல் கவிஞர் கு.சா.கி. இப்படி தமாஷாகப் பேசி உற்சாகமூட்டிக் கொண்டிருப்பதில் வல்லவர் பிறருக்கு எந்தத் தீங்கும் நினைக்காத நல்லவர்.

எங்களையெல்லாம் போலீஸ் கமிஷனர் முன் ஆஜர் செய்தார்கள். முதலில் என் பெயரைச்சொன்னதும் நான் கமிஷனர் எதிரில் நின்றேன். அப்போது கமிஷனராக இருந்தவர் திரு. அருள் அவர்கள் என்னை நிமிர்ந்து பார்த்து, புன்னகை செய்துவிட்டு ஏதோ எழுதப்போனார். நான் உடனே “சார்” எழுதும்போது பி. கிளாஸ் போட்டு எழுதுங்கள். இல்லாவிட்டால் நாங்கள் உள்ளேபோய் வேறு போராட வேண்டியதிருக்கும்.” என்றேன்.

“பி-கிளாஸ் போடுகிறேன்” என்று சொல்லி சிரித்துக் கொண்டேஎழுதினார். எழுதி முடித்ததும் “சரி நீங்கள்போகலாம்” என்றார். -

“சார் இன்னொரு விஷயம்” என்றேன் “என்ன?” என்றார்.

“இப்போது மணி ஒன்று. எங்களைச் சிறைக்குள் கொண்டு போகும்போது மணி நான்காகிவிடும் சிறையில் சடங்குகள் முடிந்து எங்கள் அறைகளுக்குச் செல்லும்போது மணி ஆறாகலாம்.

ஆகவே நாங்கள் இப்போது சாப்பிடாமல் சிறைக்குச் சென்றால் இன்று பூரா பட்டினி கிடக்க நேரிடும். அதனால் எங்கள் எல்லோருக்கும் நல்ல சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றேன். கமிஷனர், சிரித்துக் கொண்டே “எத்தனை முறை சிறைக்குச் சென்றிருக்கிறீர்கள்?“ என்றார்.

“நான்கு” ஐந்து முறை சென்றிருக்கிறேன்” என்றேன். “அதனால் உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. சரி நீங்கள் போகலாம்” என்று சொல்லி எங்களுடன் வந்த சார்ஜண்டைக் கூப்பிட்டு தன்கைப்பணத்தை (ரூ.200) கொடுத்து நல்ல சாப்பாடு போட்டு பிறகு ஜெயிலுக்குக் கொண்டு போகும்படி உத்தரவிட்டார்.