சொன்னால் நம்பமாட்டீர்கள்/சிவாஜி ரசிகர் மன்ற உதயம்

விக்கிமூலம் இலிருந்து
சிவாஜி ரசிகர் மன்ற உதயம்

1950ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்குத் தமிழ் நாட்டில் பலவீனம் ஏற்பட்டது. அப்போது திரு. குமாரசாமி ராஜா அவர்கள் முதலமைச்சராக இருந்தார்.

திராவிட இயக்கத்தினர் செய்த ஆர்ப்பாட்டம், எதிர்ப்புப் பிரசாரம், இவைகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் காங்கிரஸ் தலைவர்கள் திணறிக் கொண்டிருந்தார்கள்.

நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிய காங்கிரஸ் தொண்டர்களும் தலைவர்களும் திராவிட இயக்கத்தினரால் பெரிதும் கேவலப்படுத்தப்பட்டார்கள். ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு பொதுக்கூட்டம் போட்டு திராவிட இயக்கத்தினர் நாக்கில் நரம்பில்லாமல் திட்டினார்கள்.

கதர் கட்டியவனைக் கண்டால் ஏளனம் செய்தார்கள்.

பதிலுக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம் போட்டால் மக்கள் சேருவதில்லை. ஆனால் திராவிட இயக்கக் கூட்டங் களுக்கோ பெருவாரியாக மக்கள் கூடினார்கள். காங்கிரஸ் மந்திரிகளாக இருந்தவர்கள் காலத்திற்கேற்றபடி பேசத் தெரியாமல் செல்வாக்கிழந்து கொண்டு வந்தார்கள்.

திராவிட இயக்கத்தர்களோ, பேச்சில் வல்லவர்களாகவும், புதிய பாணியைக் கையாண்டு மக்களைத் தம் பக்கம் இழுக்கக்கூடியவர்களாகவும் திகழ்ந்தார்கள். திரு. அண்ணாதுரை அவர்களின் பேச்சுப்பாணி மாணவர்களையும், இளைஞர்களையும் மிகவும் கவர்ந்தது. அதனால் இளைஞர் சமுதாயம் அவர்கள் பக்கம் சாய்ந்தது.

இவைகளைச் சமாளிக்க முடியாமல் இப்படி காங்கிரஸ் கட்சி திணறிக் கொண்டிருந்த போதுதான் நானும் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களும் முன்வந்து திராவிட இயக்கத்தினருக்கு அவர்கள் பாணியிலேயே பதலடி கொடுத்து, காங்கிரஸ் தொண்டர்களுக்குத் தைரியமூட்டி தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் புதிய வலிவும் பொலிவும் கொடுத்தோம். எத்தனையோ ஊர்களில் எங்களுக்கு கல்லடி, சொல்லடி, செருப்படி கிடைத்தது. எலக்ட்ரிக் பல்ப், செங்கல் முதலியவைகளை திராவிட இயக்கத்தினர் எறிந்தனர். கூட்டத்தில் விளக்குகளை அனைத்துக் கலகம் விளைவித்தனர்.

“வந்தேமாதரம்” என்று நாங்கள் சொன்னால், “அரகர மகாதேவா” என்று பதிலுக்கு திராவிட இயக்கத்தினர் ஊளையிட்டனர்.

இவ்வளவையும் திரு. ம.பொ.சி. அவர்களும் நானும் மற்றும் எங்கள் தோழர்களும் ஓரளவு சமாளித்து வெற்றி கண்டோம்.

ஆனால் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் என்னையும் திரு.ம.பொ.சி. அவர்களையும் கருவேப்பிலையாக கருதினார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படாமல் கட்சி வேலையை பரபரப்பாகவே செய்து வந்தோம்.

எங்களைப் போல மக்களிடம் கூட்டங்களில் கவர்ச்சியாக, நகைச்சுவையாக, உணர்ச்சியாகப் பேசக் கூடியவர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் எந்த வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை. நாங்கள் வெறும் பேச்சாளர்களாகவே கட்சித் தலைவர்களால் மதிக்கப்பட்டோம்.

பேசத் தெரியாதவர்களும், மக்களிடம் செல்வாக்கில்லாதவர்களும், தலைவர்களையே சுற்றி வந்தவர்களும் இச்சகம் பேசித்திரிபவர்களுக்கு மட்டுமே கட்சியில் பொறுப்பான பதவிகளும், ஆட்சியில் பொறுப்பும் கொடுக்கப்பட்டன.

எதிர் கட்சிகளுக்கு மண்டையில் அடித்தாற்போல் பதில் சொல்லத் தெரியாத மந்திரிகளும், செய்த சேவையை மக்களுக்குத் தோரணம் கட்டி விளம்பரப்படுத்திப் பேசத் தெரியாத கட்சித் தலைவர்களும், நாளுக்கு நாள் காங்கிரஸ் கட்சியை பலவீனமாக்கிக் கொண்டே வந்தார்கள்.

1967 தேர்தலில் ராஜாஜி அவர்கள் காமராஜ் அவர்களைப் பழிதீர்த்துக் கொள்ள திரு. அண்ணாதுரையை முன்னால் நிறுத்தி ஒரு விநோதமான கூட்டணியை உண்டாக்கி காங்கிரசை படுதோல்வி அடையச் செய்து தலைவர் காமராஜ் அவர்களையும் விருதுநகரில் தோற்கும்படி செய்தார்.

காமராஜ் தோற்று, காங்கிரசும் தோற்று, காங்கிரசின் பரமவைரியான தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இந்தத் தடவை சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் காங்கிரஸ் தலைவர்கள் தனக்கு இழைத்த அநீதியை மனதில் கொண்டு தேர்தலில் காங்கிரசை எதிர்த்து நின்று வெற்றி பெற்றார்.

இதில் எனக்கு வருத்தமெல்லாம், திரு. ம.பொ.சி.அவர்கள் காங்கிரசை எதிர்த்து நின்றதைப் பற்றி அல்ல, ஆனால் காலமெல்லாம் ஆக்ரோஷமாக எதிர்த்த தி.மு.கவுடன் சேர்ந்து, அதுவும் உதய சூரியன் சின்னத்தில் நின்று ஒட்டுக்கேட்டதுதான்!

திரு. ம.பொ.சியின் அருமை பெருமையை திரு. காமராஜ் உணர்ந்து அவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கவில்லை.

இத்தனைக்கும் திரு. காமராஜ் அவர்களின் பெருமையை திரு. ம.பொ.சி. நாடு நகரமெல்லாம் பேசிப் பரப்பினார்.

ஆனால் திரு. அண்ணாதுரை, திரு. மு. கருணாநிதி இவர்களை எவ்வளவோ தாக்கி திரு. ம.பொ.சி. பேசியிருக்கிறார். மா.பொ.சி.யின் உண்மையான நாட்டுப்பற்றையும், தமிழுணர்ச்சியையும் தமிழ் இனப் பற்றையும் மதித்து அண்ணா அவர்களும் கலைஞர் மு. க. அவர்களும், ம.பொ.சிக்கு அவர்களால் முடிந்த பெருமையையும் கெளரவத்தையும் செய்திருக்கிறார்கள். அது குறித்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.

1967 தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததும் மீண்டும் காங்கிரஸ் தொண்டர்களிடையே சோர்வு ஏற்பட்டது. தி.மு.க தோழர்கள் வெற்றி விழாக் கொண்டாட்டம் என்ற பேரில் ஊரெல்லாம் முழக்கினார்கள். இப்போது அவர்களுடன் ம.பொ.சி., ராஜாஜி வேறு இருந்தார்கள். கேட்க வேண்டுமா அமர்க்களத்தை!

இச்சமயம் இளைஞர்கள் யாரும் காங்கிரசைச் சீண்டவில்லை. ஒரு ஆண்டு, இரண்டாண்டு பொறுத்துப் பார்த்தேன், காங்கிரசில் யாரும் புதிய வேகம் கொடுக்கக் கூடியவர்கள் தென்படவில்லை.

கட்சித் தொண்டர்கள் நாளுக்கு நாள் உற்சாகமிழந்து வந்தனர்.

ஒருநாள் நான் மதுரை சென்றிருந்தேன். எனது நண்பர் திரு. ஆனந்தன் அவர்கள் (மதுரைநகர முன்னாள் துணை மேயராக இருந்தவர்) என்னைப் பார்க்க வந்தார். அவரிடம் தமிழ்நாட்டில் காங்கிரசின் நிலை பற்றியும், காங்கிரசிற்கு இளைஞர்களைக் கொண்டு வருவது எப்படி என்பதைப்பற்றியும் ஆலோசனை செய்தேன்.

அவர், “தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் பலர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் வைத்திருக்கிறார்கள். இவர்கள் தனித்தனியாக இருக்கிறார்கள். இவர்களை ஒன்று சேர்த்தால் காங்கிரசிற்கு புதிய பலம் கொண்டு வரலாம்” என்று கூறினார்.

“மதுரையில் அப்படி எத்தனை மன்றங்கள் இருக்கின்றன?” என்று கேட்டேன். “இப்போது சுமார் 60 மன்றங்கள் இருக்கின்றன” என்றார். அவர் “முதலில் அவர்கள் அனைவரையும் ஒரு இடத்தில் கூட்டுங்கள். பேசிப் பார்ப்போம்” என்று சொன்னேன். “சரி” என்று திரு ஆனந்தன் மறுநாளே மதுரையிலுள்ள சிவாஜி ரசிகர் மன்றங்களை ஒரு இடத்தில் கூட்டினார். சுமார் 500 இளைஞர்கள் கூடினார்கள்.

அவர்களிடம் பேசியதில், “அதில் இந்திய ரீதியில் ஒரு சிவாஜி மன்றம் துவக்கி, இந்தியா முழுவதிலுள்ள சிவாஜி ரசிகர்களை ஒன்று திரட்டி காங்கிரஸ் கட்சிக்குக் கொண்டு வரலாம்” என்ற எண்ணம் உதயமாயிற்று. காங்சிரஸ் கட்சிக்கு நேரடியாக வரவிரும்பாத இளைஞர்கள் பலர், சிவாஜி ரசிகராக முதலில் சேர்ந்து அதிலிருந்து காங்கிரசிற்கு நிச்சயம் வருவார்கள் என்று நான் உறுதியாக நம்பினேன்.

அதனால் காங்கிரஸ் கட்சிக்கு நிறைய இளைஞர்களைக் கொண்டு வரவேண்டுமென்ற ஆசையால்தான் 1969 ஆகஸ்டு மாதம் “அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம்” என்ற அமைப்பை உருவாக்கினேன்.

1969 அக்டோபர் முதல் தேதி அன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 43வது பிறந்த தினவிழாவும், அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்ற முதல் பேரவையும் சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் நடைபெற்றது. அதற்குநடைபெற்ற ஊர்வலம் சென்னையில் புதிய சரித்திரத்தை உண்டாக்கியது.இந்தியா முழுவதிலுமுள்ள இளைஞர்கள் அதற்கு வந்த வேகம்போல் வேறு எதற்கும் இதுவரையில் வரவில்லை.

தி.மு.க. அரசு ஸ்தம்பிக்கும்படியாக, பஸ்களும், லாரிகளும் சென்னையில் குவிந்தன. தென்னாட்டு நட்சத்திரங்களும், வடநாட்டு நட்சத்திரங்களும் வந்து அலைமோதினார்கள். இவ்வளவும் எதற்காக? காங்கிரசைப் பலப்படுத்த நான் மறைமுகமாகச் செய்த ஏற்பாடு!

இந்தக் கூட்டத்திற்கு வர தலைவர் காமராஜ் அவர்களை நான் ரொம்பவும் கெஞ்சவேண்டியதாயிற்று காரணம் இளைஞர்களின் மனப்போக்கு எப்படி இருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்கவோ, அல்லது அதை ஜீரணிக்கவோ காங்கிரஸ் தலைவர்களுக்கு நாட்டம் இல்லாமல் போய்விட்டது! அதனால் காங்கிரசிலே பலபேர், நான் சிவாஜி ரசிகர் மன்றம் ஆரம்பித்து அமர்க்களப்படுத்தியதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கட்சிக்குள் எனக்கு செல்வாக்கு இல்லாமல் செய்து கொண்டு வந்தனர்.

நான் அதை எல்லாம் லட்சியம் செய்யாமல் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்செய்து சுமார் 15000 சிவாஜிகணேசன் ரசிகர் மன்றங்கள் அமைத்து, அதை ஒரே தலைமையின் கீழ் கொண்டு வந்து. இன்று ஒரு பெரிய ஆலவிருட்சமாக அது வளர்ந்தோங்கி நிற்கிறது. காங்கிரசின் கவசமாக அது என்றும் நின்று பணி புரியும்.

ஏழு ஆண்டுகள் அதன் தலைவராக இருந்து, தொடர்ந்து நாமே தலைவராக இருந்து வருவது சரியாகாது என்று கருதி, அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்ற தலைவர் பதவியிலிருந்து விடுவித்துக் கொண்டேன்.

இரண்டுமுறை தமிழகக் காங்கிரஸில் தொய்வு விழுந்தநேரத்தில் நானும் தோள்கொடுக்க வாய்ப்புக் கிடைத்தது குறித்து நான் பெருமை அடைகிறேன்.