உள்ளடக்கத்துக்குச் செல்

சொன்னால் நம்பமாட்டீர்கள்/திருடாதே

விக்கிமூலம் இலிருந்து

திருடாதே

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ராஜா ராணி கதைகளில் நடித்து புகழ் பெற்றுக்கொண்டிருந்த சமயம்,

அவர் நடித்துக்கொண்டிருந்த சக்ரவர்த்தி திருமகள் என்ற திரைப்படத்தில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.

சக்ரவர்த்தித் திருமகள் ஒரு ராஜா ராணி கதைதான்.

திரு. எம்.ஜி.ஆர். அவர்கள்தான் அதில் கதாநாயகன். திருமதி அஞ்சலிதேவி கதாநாயகி.

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்-மதுரம் அதில் நடித்தார்கள்.

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களுடன் எனக்கு முன்னமேயே நல்ல பழக்கம் உண்டு.

திரு. எம்.ஜி.ஆர். அவர்களுடன் நான் நெருங்கிப் பழகியது சக்ரவர்த்தித் திருமகள் படப்பிடிப்பின் போதுதான்.

படப்பிடிப்பின் இடைவேளையில் அரசியலைப் பற்றி சலிக்காமல் விவாதம் செய்வார். படப்பிடிப்புக் காலங்களில் தினமும் நாங்கள் ஒன்றாகவே சாப்பிடுவோம். அதனால் எம்.ஜி.ஆருடன் மிக நெருங்கிப் பழகவும்-மனம் விட்டுப் பேசவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஒரு நாள் எம்.ஜி.ஆரிடம், “நீங்கள் ஏன் ராஜா- ராணி கதையிலேயே நடித்துக் கொண்டிருக்கிறீர்கள், நல்ல சமூகக் கதையில் நடித்தால் என்ன?” என்று கேட்டேன்.

“சந்தர்ப்பம் வந்தால் பார்க்கலாம்” என்று சொல்லிப் பேச்சை வேறு திசைக்குக் கொண்டு சென்று விட்டார்.

அப்போது எம்.ஜி.ஆர். ‘பாகவதர் கிராப்’ தான் வைத்திருப்பார். எம்.ஜி.ஆருக்கு ஒரு பலகீன மனப்பான்மை இருக்கிறது என்று நான் யூகித்தேன். அதாவது தனக்கு சமூகக் கதைக்கு ஏற்ற முகம் இல்லை. தற்கால கிராப் வைத்தால் பார்க்க நன்றாக இராது. கத்திச் சண்டை முதலியவைகள் சமூகக்கதையில் போட முடியாது. அம்மாதிரி சண்டை இல்லை என்றால் படம் ஓடாது,” என்று எண்ணிக்கொண்டுதான் சமூகக் கதையில் நடிக்க முயற்சிக்கவில்லை என்று நான் எண்ணினேன்.

பின்னர் ஒரு நாள் எம்.ஜி.ஆரிடம், “நான் ஒரு சமூகக் கதை எடுக்கலாம் என்றிருக்கிறேன். தாங்கள்தான் அதில் நடிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டேன்.

திரு. எம்.ஜி.ஆர். சிறிதுநேரம் யோசித்து, “சரி தாங்களுக்கு தைரியமிருந்தால் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை, நல்ல கதையாகப் பாருங்கள்” என்று சொன்னார்.

நான் முன்னமே இந்திப் படமான ‘பாக்கெட்மார்’ என்னும் கதையைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். ஆகவே அப்படத்தைப் போட்டு எம்.ஜி.ஆருக்குக் காண்பித்தேன்.

அவருக்கு அந்தக்கதை மிகவும் பிடித்திருந்தது."சரி இந்தக் கதையையே எடுக்கலாம். இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்று சொன்னார்.

மறுநாள் சியாமளா ஸ்டுடியோ மேக்அப் அறையில் எம்.ஜி.ஆர். மேக்அப் போட்டுக் கொண்டிருக்கும் போது நானும் எனது கூட்டாளியான வி. அருணாசலம் செட்டியார் அவர்களும் சென்று, “சாவித்திரி பிக்சர்ஸ்” என்ற பெயரில் ஒரு கம்பெனி துவங்கியிருக்கிறோம். அதில்தான் தாங்கள் நடிக்கும் படத்தை எடுக்க முடிவுசெய்திருக்கிறோம். என்று சொன்னோம்.

எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியடைந்து மிகவும் குறைந்த சம்பளத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டு.“எனக்கு படங்கள் அதிகமிருக்கிறபடியால் ஆறு மாதத்திற்கு அவைகளுக்கெல்லாம் கால்ஷீட் கொடுத்துவிட்டேன்.

ஆனால் ‘கால்ஷீட்’ நேரம் பூராவும் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரைதான் கொடுத்திருக்கிறேன். அதனால் தினமும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணிவரை சூட்டிங் நடத்தினால் படத்தைச் சீக்கிரம் முடிக்கலாம்.

அதற்குத் தகுந்தாற்போல நடிகர் நடிகைகளை போட வேண்டும். குறிப்பாக கதாநாயகியை புதுமுகமாகப் போட்டால்தான் நம் செளகரியம் போல் சூட்டிங் நடத்தலாம்” என்று சொன்னார்.

நான் அப்போது திரு. பி.ஆர். பந்தலு அவர்களின் பத்மினி பிக்சர்ஸ் கம்பெனியில் ‘தங்கமலை ரகசியம்’ என்ற திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தேன். தங்கமலை ரகசியம் எனது கதையாதலால் என்னைக் கூடவே திரு.பி.ஆர். பந்தலு வைத்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் சென்னைக் கடற்கரையில் தனிமையாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்போது அங்கு டைரக்டர் திரு. சுப்ரமணியம் அவர்களின் புதல்வி பத்மா சுப்ரமணியம் வந்தார். அவர் கூடவே ஒரு பெண்ணும் வந்தாள்.

என்னைக் கண்டதும் பத்மா அங்கேயே உட்கார்ந்தார். பல விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு வரும்போது நான் ‘தங்கமலை ரகசியம்’ என்ற திரைப்படத்துக்குக் கதை எழுதியிருப்பதையும் அதில் வேலை செய்து வருவதையும் சொன்னேன்.

உடனே பத்மா, “இந்தப் பெண் பெங்களுரைச் சேர்ந்தவள்.” தாய் மொழி கன்னடம், கன்னடப் படத்திலும் நடித்திருக்கிறாள். தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டுமென்பது ஆசை. ஏதாவது தமிழ்ப் படத்தில் ஒரு சிறு ‘சான்ஸ்’ கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

“தங்கமலை ரகசியம் படத்தில் அழகு மோகினி, யெளவன மோகினி என்ற இரண்டு பெண்கள் நடனமாடும் காட்சி வருகிறது. அதில் ஒரு நடன மணியாகப் போடலாம். நான் பந்துலு அவர்களிடம் சொல்கிறேன்” என்று சொன்னேன்.

பத்மா சிபாரிசு செய்த பெண் மாநிறமாக இருந்தாள் அவ்வளவு அழகு என்று சொல்ல முடியாது எனினும் கண் கேமிராவுக்கு ஏற்றதாகத் தோன்றியது.

மறுநாள் பந்துலு அவர்களிடம் அப்பெண்ணைச் சிபாரிசு செய்தேன். மேற்படி பெண்ணைக் கூட்டி வந்தார்கள். நடன மணிகளில் ஒருத்தியாகப் போட பந்துலு சம்மதித்தார்.

அழகு மோகினி, யெளவன மோகினி சூட்டிங் ரேவதி ஸ்டுடியோவில் நடந்தது.

படத்தின் டைரக்டர் பந்துலு, நடிகர் திலகம் சிவாஜி நடிக்கும் பேறு காட்சிகளைப் படம் பிடித்துக் கொண்டிருந்தபடியால், மேற்படி நடனக் காட்சியை டைரக்ட் செய்யும்படி திரு. ப. நீலகண்டன் அவர்களை ஏற்பாடு செய்திருந்தார்.

பத்மா சிபாரிசு செய்த பெண் மேக்கப்போட்டு அலங்காரம் செய்து கொண்டு வந்து காமிரா முன் நின்றாள்.

காமிரா மூலம் அந்தப் பெண்ணின் உருவத்தைப் பார்த்த திரு நீலகண்டன் என்னைத் தனியாகக் கூப்பிட்டு, இந்தப் பெண் காமிராவுக்கு ரொம்பவும் நன்றாக இருக்கிறாள். கொஞ்சமும் யோசியாமல் மூன்று படத்திற்கு ஒப்பந்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்.

பின்னர் நடனக் காட்சி படமாக்கப்பட்டு, தியேட்டரில் போட்டுப் பார்த்தோம்.

எல்லோரும் ‘ஆகா’ என்று சொல்லும் அளவுக்கு அந்தப் பெண் காட்சி அளித்தாள். அந்தப் பெண் வேறு யாருமல்ல, பின்னர் தமிழ் நாட்டில் மிகப் பெரிய கதாநாயகியாக விளங்கிய சரோஜாதேவிதான்!

சொன்னால் நம்பமாட்டீர்கள், “தங்கமலை ரகசியம்” படத்தில் நடனம் ஆடியதற்கு சரோஜா தேவிக்கு அப்போது பந்துலு அவர்கள் கொடுத்த பணம் ரூபாய் இருநூற்றி ஐம்பதுதான் பின்னர் அதே பந்துலு அதே சரோஜாதேவிக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததும் உண்டு. டைரக்டர் நீலகண்டன் அவர்கள் சொல்லியபடி உடனே மூன்று படங்களுக்கு சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்தேன்.

ஒவ்வொரு படத்திற்கு பணம் எவ்வளவு என்று நினைக்கிறீர்கள்?

முதல் படத்திற்கு ரூபாய் மூவாயிரத்து ஐநூறு. இரண்டாவது படத்திற்கு ரூபாய் ஏழாயிரம். மூன்றாவது படத்திற்கு ரூபாய் பத்தாயிரம்.

மேற்படி ஒப்பந்தம் முடிந்ததும். எம்.ஜி.ஆர். அவர்களிடம் சென்று புதுமுகம் சரோஜாதேவி பற்றி சொன்னேன். “ஒரு டெஸ்ட் எடுங்கள் பார்க்கலாம்” என்று சொன்னார். சரி என்று சிட்டாடல் ஸ்டுடியோவில் ஒரு ‘டெஸ்ட் எடுத்தோம்’.

‘டெஸ்ட் எடுப்பது’ என்பது பலமாதிரி நடிக்கச் சொல்லிப் படமாக எடுப்பது.

‘டெஸ்டை’ எம்.ஜி.ஆர்.பார்த்தார். கூட நாங்கள் சிலரும் பார்த்தோம்.

சரோஜாதேவி நடந்து போகும் போது ஒரு கால் தாங்கித் தாங்கி நடந்து சென்றதைச் சிலர் எம்.ஜி.ஆரிடம் சுட்டிக் காட்டினார்கள். அதற்கு எம்.ஜி.ஆர். அதுவும் ஒரு செக்ஸியாகத் தானே இருக்கிறது. இந்தப் பெண்ணையே கதாநாயகியாகப் போட்டுவிடுங்கள் என்று சொன்னார்.

எங்களது சாவித்திரி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ‘பாக்கெட்மார்’ என்ற இந்திப் படக் கதையை தமிழில் எடுப்பது என்றும் அதில் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி இணைந்து நடிப்பதென்றும், திரு. ப. நீலகண்டன் டைரக்ட் செய்வதென்றும், திரு. ஏ. எல். சீனிவாசன் அவர்கள் நெகடிவ் ரைட்ஸ் வாங்கிக் கொள்வதென்றும் முடிவு செய்து வேலையைத் துவங்கினோம்.

படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது என்று சிந்தித்தபோது எம்.ஜி.ஆர் “எவ்வளவு லட்சம் செலவு செய்து படம் எடுக்கிறோம். அந்த படத்தின் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும், அதே போல் நாம் தேர்ந்தெடுக்கு. படத்தின் பெயர் ஒரு நீதியைப் போதிப்பதாக அமையவேண்டும். பணம் செலவு செய்து ‘போஸ்டர்’ ஒட்டுகிறோம்.

பத்திரிகையில் விளம்பரம் போடுகிறோம். ஏதாவது நல்ல கருத்தைச் சொல்லும் பெயராக இருந்தால் நாம் செலவு செய்வதற்குப் பலன் உண்டல்லவா? அப்படிப்பட்ட ஒரு பெயரைப் படத்திற்கு வைக்கவேண்டுமென்றார். அத்துடன் அப்படி யார் நல்ல பெயர் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு ரூ.500 பரிசு அளிப்பதாகவும் கூறினார்.

எல்லோரும் சுறுசுறுப்பாக யோசனை செய்தார்கள் கடைசியில் எங்கள் குழுவைச் சேர்ந்த திரு. மா. லெட்சுமணன் அவர்கள் மேற்படி படத்திற்கு “திருடாதே” என்று பெயர் வைக்கலாம் என்று சொன்னதை அனைவரும் ஒருமுகமாக ஆதரித்தோம்.

எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் அப்பெயர் ரொம்பவும் பிடித்தது. திரு. மா. லெட்சுமணனுக்கு ரூ.500ஐ எம்.ஜி.ஆர். கொடுத்தார்.

“திருடாதே” படம் வேகமாக வளர்ந்து வந்தது. திரு. எம்.ஜி.ஆர். அவர்களும் “திருடாதே” படத்தை மிக நன்றாகத் தயாரிக்க ரொம்பவும் உதவியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் ஒரு நாள் எம்.ஜி.ஆர் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கால் ஒடிந்துவிட்டது. படுத்த படுக்கையாகிவிட்டார். நானும் அடிக்கடிபோய் அவரைப் பார்த்துபேசிவிட்டு வருவேன்.

ஒருநாள் எம்.ஜி.ஆர் என்னிடம், “என் கால் குணமாகி நான் படப் பிடிப்பிற்கு வர எவ்வளவு நாள் ஆகுமென்று தெரியாது. அதுவரையில் நீங்கள் காத்திருந்தால் உங்களுக்கு வீண் சிரமம் ஏற்படும். படத்தின் மீது வாங்கியிருக்கும் கடன்களுக்கு வட்டி அதிகமாக ஏறிப்போகும்.

ஆகவே படத்தை திரு. ஏ.எல்.எஸ். அவர்களுக்கே கொடுத்து விடுங்கள். உங்களுக்கு நான் லாபமாக ஒரு நல்ல தொகை தரச் சொல்கிறேன்” என்று சொன்னார்.

நான் சிறிது யோசித்தேன். அவர் விடவில்லை. “என் பேச்சைக் கேளுங்கள்” என்று விடாப்பிடியாகச் சொன்னார். சரி. என்று ஒப்புக்கொண்டேன். அவர் சொன்னபடியே எல்லாம் செய்து கொண்டோம்.

‘திருடாதே’ படத்திற்காக எனக்குக் கிடைத்த பணத்தை வைத்துத்தான் ‘கடவுளின் குழந்தை’ என்ற படத்தை நான் எடுத்தேன்.

அதன் பின் திருடாதே ஏ.எல்.எஸ். வெளியீடாக மூன்று ஆண்டு கழித்து வெளிவந்தது. மிகப்பெரிய வெற்றிப்படமாக ஒடியது. அதன் வெற்றிக்கு நான்தான் அஸ்திவாரம் என்ற உண்மை பலருக்குத் தெரியாமல் போயிற்று.

ஆனால் சரோஜாதேவிக்கு எல்லாம் தெரியும். அதனால் திருடாதே நூறாவது வெற்றி விழா நடைபெற்ற அன்று நூறு தேங்காய், நூறு மாம்பழம், நூறு வாழைப்பழம் கொண்டு வந்து என்னைப் பார்த்து வணக்கம் தெரிவித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

வாழ்க அவர் பண்பு!