பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

முதற் குலோத்துங்க சோழன்

செயல்களைச் செய்து அவர்களது பேரன்பிற்குரியவன் ஆயினன். இவன், தன் குடிமக்கள் பண்டைக்கால முதல் அரசர்க்குச் செலுத்திவந்த சுங்கத்தைத் தவிர்த்து, அவர்களது வாழ்த்திற்கும் புகழுரைக்கும் உரிமைபூண்டு விளங்கிய செய்தி முன்னர் விளக்கப்பட்டுள்ளது. இவனது செங்கோற் சிறப்பை அபயன் ' இமயத்தினைத் திரித்தகோலில் வளைவுண்டு - நீதிபுனை செய்ய கோலில் வளைவில்லையே'[1] என்று பாராட்டிக் கூறியுள்ளனர் புலவர் பெருமானாகிய சயங்கொண்டாரும்.

அன்றியும், இவன் அஞ்சாமை, ஈகை, ஊக்கம், சுற்றந்தழுவுதல், காலமறிந்து கருமமுடிக்கும் ஆற்றல் முதலான அருங்குணங்கள் படைத்த பெருந்திறல் வேந்தனாய் அந்நாளில் நிலவினான். சுருங்கவுரைக்குமிடத்து, இம்மன்னர் பெருமான், தன்னடி வந்து பொருந்தினோர் எவரேயாயினும் தண்ணளி சுரந்து அவர்களை வாழ்விக்கும் வண்மையும், எதிர்த்தோர் கூற்று வெகுண்டன்ன ஆற்றலுடையவராயினும் அன்னோரைப் போரிற் புறங் காணும் வீரமும் உடையவனாய் விளங்கிய பெருந்தகை யாவன் என்று கூறி இவ்வதிகாரத்தை ஒருவாற்றான் முடிக்கலாம்.


  1. 5. க. பரணி- தா. 260.