உள்ளடக்கத்துக்குச் செல்

மாபாரதம்/திரெளபதியின் திருமணம்

விக்கிமூலம் இலிருந்து

2. திரெளபதியின் சுயம்வரம்

துரோணனுக்கும் துருபதனுக்கும் பகை திரெளபதியின் பிறப்புக்குக் காரணம் ஆயிற்று. அடிபட்ட வேங்கை பதுங்கிப்பாயும் முயற்சியே துருபதனது. எப்படியும் துரோணனை உயிர் பறிப்பது என்று உறுதிகொண்டான். துரோணனுக்குப் பக்க பலமாக இருந்தவன் விசயன். அவனை வளைத்துப் போட்டுக்கொண்டால் துரோணன் தணிந்துபோக வேண்டியதுதான். துருபதன் தன் மகன் திட்டத்துய்மனைக் கொண்டு எளிதில் கொன்று விடலாம் என்று திட்டம் போட்டான்.

பிறந்தவுடனே பெரிவளாகச் சிறந்தவள் திரெளபதி. வனப்பு அவளை நாடி வந்து தேடிப் பெற்றது; பிறப் போடு கூடி வந்த ஒன்றாக இருந்தது. பாண்டவர்கள் அரக்கு மாளிகையில் நெருப்புக்கு இரையாகி விட்டார்கள் என்ற செய்தி பரவியது. எனினும் துருபதன் நம்ப வில்லை. வானில் இருந்து எழுந்த குரல் அவனுக்கு அருச்சுனனைக் காட்டியது: நம்பிக்கை வளர்ந்தது; மற்றும் இடிம்பன், பகன் முதலியவர்கள் இறந்த செய்தி பரவியது; அவர்களை அழிக்கும் ஆற்றல் வீமனுக்கே உண்டு என்பது நாடறிந்த செய்தி, அதனால் அவன் துணிந்து சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்து ஒலைகள் போக்கி அவர்களுக்கு அழைப்பு விடுத்தான்.

வில்லை வளைத்து வீரம் காட்டி மணக்கும் ஆசையில் வந்தவர் சிலர்; அந்த மண விழாவிற்கு வந்து ஆசீர்வதிக்க அழைக்கப்பட்டவர் சிலர். பரிசில் கிடைக்கும் என்று குழுமிய கலைஞர்கள் பலர். மூட்டை முடிச்சுகளோடு கல்யாணக் சாப்பாடு சாப்பிட முன் கூட்டி வந்தவர்கள் பலர்; மணவிழாவில் வேள்வி முன் சடங்குகள் இயற்ற வந்த அந்தணர்கள் சிலர். இப்படி அந்த ஊர் புதியவர் களைக் கொண்டு விழாக்கோலம் பூண்டது.

செய்தி அறிதல்

பாஞ்சால நாட்டில் பசுந்தோகை மயில் போன்ற திரெளபதியின் சுயம்வரத் செய்தி வேத்திரகீயமும் எட்டியது. புரோகிதம் செய்து பிழைப்பு நடத்தும் பிராமணர்கள் இச்செய்தியைப் பரப்பினர். ஊரில் உள்ள சுறுசுறுப்பானவர்கள் சிலர் மணவிழா கண்டு மகிழவும், மன்னன் தரும் கொடைப் பொருளைப் பெற்று வரவும் கூட்டம் கூட்டமாகப் புறப்பட்டனர்.

குந்திக்கு வேத்திரகீயம் அலுத்துவிட்டது; இரந் துண்ணும் வாழ்க்கையை நடிப்புக்கு ஏற்றனர். அதனின்று விடுபட்டுப் புதுவாழ்வு தேட விரும்பினாள். அத்தினாபுரி அடைந்து உரிய பாகம் முற்றும் பெற்றுத் தம் மைந்தர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்பினாள். அதனால் அந்தப்பார்ப்பனச் சேரியில் பதுங்கிக் கிடப்பது பயன் இல்லை என்பதால் மைந்தர்களிடம் சொல்லிப் புறப்படச் செய்தாள்.

கால் கடுக்க நடந்து காரிருளில் அருச்சுனன் விளக் கேந்தி ஒளி காட்ட ஊர் கடந்து சென்றனர். அவர்கள் குடும்ப நலத்தில் அக்கரை கொண்டிருந்த வியாசன் வழியில் சந்தித்து அங்குச் செல்ல வேண்டிய அவசியத்தைச் சுட்டிக் காட்டினான். திரெளபதி மாலை சூட்டும் அவ் விழாவில் இவர்கள் துணிந்து வெளிப்படுதல் தக்கது என்று சொல்லிவிட்டுச் சென்றான். முகவரி தேடியவர்களுக்கு முகதரிசனம் தர வாய்ப்பாகவும் கொண்டனர்.

பாஞ்சாலப் பயணம்

மறுநாள் பொழுது விடிவதற்குள் பாஞ்சாலம் சேர்வது என்று நடையை விரைவுபடுத்தினர். வழியில் ஒரு நீர்த் துறைவழியே செல்லும் போது அதில் விளையாடிக் கொண்டிருந்து சித்திர ரதத்தில் வந்த கந் தருவன் ஆவேசம் கொண்டு அருச்சுனனைத் தாக்கினான். அந்தணன் என்று நினைத்து அவனை அதட்டிப் பார்க்கலாம் என்று கை நீட்டினான்; அவன் செந்தழலினன் என்பதை அவன் தன் அம்பு கொண்டு தேரைக்கரியாக்கியதில் இருந்து தெரிந்து கொண்டான். வீரம் மிக்கவனைக் கண்டு அவன் சாரமுள்ளவன் என்பதால் அவனிடம் பேரம் பேசினான். நட்புரிமை பூண்டு அவனுக்கு வழிகாட்டியதோடு தௌமிய முனிவனை அறிமுகம் செய்து வைத்து அவனோடு பாஞ்சாலம் செல்லுமாறு பகர்ந்தான்.

பொழுது விடிந்தது; தென்றல் வீசிச் சுகத்தைத் தந்தது; பொய்கை ஒன்றில் பூத்திருந்த தாமரை மலரில் தேன் உண்ண வண்டுகள் சுற்றி வந்தன. வலிமை மிக்க வண்டு ஒன்று தன் சிறகால் அவற்றைத் துரத்தி விட்டு அம்மலரில் அமர்ந்து தேன் உண்ணும் காட்சியைக் கண்டனர் :

அந்நீர்த்துறை அருகே மாங்கனி ஒன்று விழ அதன் மீது அங்கிருந்த மீன்கள் எல்லாம் தத்தமக்கு உரிய இரை என்று தாவின. அதற்கு முன் வாளை மீன் பாய்ந்து அதனைக் கவ் விக் கொள்ள ஏனைய மீன்கள் ஏமாற்றம் அடைந்தன.

மரங்கள்தோறும் குயில்கள் இருந்து அவர்களை விளிப்ப போலக் கூவிக் குரல் எழுப்பின.

குயில்கள் தோகை விரித்து ஆடி அவர்களுக்கு மகிழ்ச்சியை அறிவித்தன. பூக்களில் சுரும்புகள் மொய்த்தன. நீர் நிலையில் பறவைகள் தங்கின. விலங்குகள் எல்லாம் துணைகளோடு மேவின. மரங்களைக் கொடிகள் தழுவின. வில்லைத் தாங்கிய இப்பாண்டவர்கள் வெற்றி உறுதி என்ற நினைவோடு இவற்றை நன்னிமித் தங்களாகக் கொண்டனர்.

நகரத்தின் மதில்களில் பூரண கும்பம் வைத்தனர். மங்கல முழவுகள் விம்மின; பல் இயங்கள் ஆர்த்தன; சங்குகள் முழங்கின; சேனைகளும் அவற்றிற்கு உரிய அரசத்தலைவர்களும் நகரில் நெருக்கமாகக் குழுமினர். வீதிகளில் கட்டியிருந்த கொடிகள் எல்லாம் வருபவரை வா என்று அழைப்பது போல அசைந்து அழகு செய்தன. ஆவண வீதிகளில் மாட மாளிகைகளின் வனப்பினைக் கண்ட வண்ணம் சிங்கம் பசுவின்தோல் போர்த்துக் கொண்டது போல இவர்கள் பார்ப்பன வடிவத்தில் பானை செய்யும் குயவன் ஒருவன் வீட்டில் சென்று அவன் விருந்தினராகத் தங்கினர். அன்னை குந்தியைக் குயவன் வீட்டில் தங்கச் சொல்லிவிட்டுத் தமக்குத் துணையாக வந்திருந்த தௌமிய முனிவனோடு அரங்கு நோக்கி ஐவரும் நடந்தனர்.

ஆதியில் சோதிடர் ஐவருக்கும் உரியவள் தான் என்று கூறிய சொற்களை நினைத்தவளாய் உவகை மிக்கவளாக திரெளபதி இருந்தாள். சோதிடம் பொய்க்காது என்றும், உரிய வீரர் தோன்றுவர் என்றும் தாதியர் தேற்றத் தன் மனத் தளர்ச்சி நீங்கியவளாய் இருந்தாள்.

தோழியர் சித்திரங்கள் பலவற்றைக் காட்டச் சீர் மிகு அரசர்கள் அவர்களுள் பேர்மிகு விசயன் கொடிமணித் தேரில் வரும் கோலத்தை மட்டும் பன்முறை பார்த்துப் பழகி வந்தாள்.

வேள்வியில் பிறந்த தான் கேள்விப்பட்ட அருச்சுனனே தனக்குக் கேள்வன் ஆவான் என்ற நம்பிக்கை கொண்டிருந்தாள். மன்றில் தனக்கு மாலை சூட்டி அவன் மணந்திலனேல் மறுபடியும் துன்றும் எரியில் புகுந்து உயிரை மாய்த்துக் கொள்வது உறுதி என்று நினைத்தவளாய் அவன் வருகையை எதிர் நோக்கி இருந்தாள்.

அவைக்கு வந்த அணங்கு

பிறை போன்ற நெற்றியை உடைய திரௌபதியைத் தோழியர் பலரும் கூடிப் புனல் ஆட்டிப் புகையூட்டி மணக்கும் மாலையைச்சூட்டிக் காண்பவர் ஆண்மை தேய அழகு அமைய அலங்கரித்தனர். “குமரர் அனைவரும் வந்து விட்டனர். குமரிப் பெண்ணே வருக” என்று செவிலியர் அழைத்து அரங்கில் கொண்டு வந்து நிறுத்தினர். வீர மன்னர்கள் தம விழிகளால் அழலில் பிறந்த பேரழகியை ஆர்வத்தோடு நோக்கி மன்மதன் அம்பால் வெந்து உருகினர். நெருப்பில் பட்ட மெழுகு போல் உள்ளம் மெலிந்தனர். அழகுக்கு விலைதர வில் வித்தை தமக்கு இன்மைக்கு வருந்தினர்.

மேகங்களிடையே மறைந்து கிடக்கும் சூரியனைப் போல அரசர் கூட்டத்திடையே பாண்டவர்கள் மாறு வேடத்தில் இருந்ததை அவள் பார்வை அறிந்ததோ அறியவில்லையோ தெரியவில்லை. நிச்சயம் அவள் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. மனத்தில் காதல் மிக அதனால் மெலிந்து ‘எனக்கு எனக்கு, என்று. தமக்குள் சொல்லிக் கொண்டு காத்திருந்த காவலரை நோக்கிச் சினக் களிறு போன்ற திட்டத்துய்மன் நினைக்கவும் அரிய செயலைச் சொல்லி அறிமுகம் செய்தான்.

“வில் இது; அம்பு இது; குயவனது சக்கரம் போன்ற வேகத்துடன் திரிகின்ற சக்கரம் அது; அதன் ஆரைகளின் இடையே அம்பு எய்ய மேலே நிலை இல்லாமல் அசைந்து கொண்டே இருக்கும் இலக்கினைக் குறிபார்த்து வீழ்த்த வேண்டும். அவனுக்கே என் தங்கை மாலை இடுவாள்” என்றான்.

வைத்திருக்கும் தேர்வு அரிது; வினாவைக் கண்டு விடைத் தாளை மடித்து வைத்தவர் பலர்; அதில் வெற்றி பெறுவது இயலாது என்று தெரிந்தும் அணங்கின் மேல் வைத்த ஆசையால் நாணம் விட்டு அம்பு காண ஒரு சிலர் முன்வந்தனர்; மையிட்டு எழுதினர்; கைவிட்டுத் தாள் நழுவியது; அவள் கூரிய விழிகளைப் போன்ற அம்பினையும், அவள் புருவத்தைப் போன்ற வளைந்த வில்லினையும் காணுந்தோறும் அவர்கள் நெஞ்சு திடுக்கிட்டது. நேசத்துக்கும் பாசத்துக்கும் உரிய உன் சகோதரன்; இவன் நம்பியவரைக் கைவிடாத நல்லோன் ஆவான்.”

“அதற்கு அடுத்து அமர்ந்திருப்பவன் கண்ணனின் தம்பி சாத்தகி; அடக்கம் உடையவன் ஆவான். அடுத்தவன் கண்ணனின் அத்தை மகன் சிசுபாலன். அவன் கண்ணனை இகழ்ந்து பேசுவதே தொழிலாகி விட்டது. சிக்கல் நிறைந்த வாழ்க்கை; சீராக வாழத்தெரியாதவன்.”

“கண்ணன் கம்சனைக் கொன்றான் என்பதற்காக சராசந்தன் அவனை வடமதுரையில் பதினெட்டு முறை தாக்கினான். அவன் கம்சனுக்குத் தன் மகளிர் இருவரை மணம் செய்து தந்தவன். அதனால் ஏற்பட்ட பகை இது. கண்ணன் தானே அவனைக் கொல்வது தேவை இல்லை என்பதால் வடமதுரையை விட்டுத் துவாரகைக்குப் போய் யாதவர்களுடன் அமைதியாக வாழ்க்கை நடத்துகிறான். இதனைக் கோழைத் தனம் என்று பல முறை சராசந்தன் சாடி வருகிறான்.”

பகதத்தன் என்பவன் நரகாசுரனின் மகனாவான். இந்திரனுக்கு இவன் உதவி செய்ததால் சுப்ரதீபம் என்ற யானையை இவனுக்கு இந்திரன் அளித்திருக்கிறான்; இந்த யானை மீது இவன் இவர்ந்து வந்தால் இவனை யாரும் வெல்ல முடியாது.”

“அடுத்தது சல்லியன்; மன்னர்களுள் சிங்கம் போன்றவன்; மாத்திரியின் சகோதரன் இவன்.”

“அடுத்தது நீலன்; அழகு மிக்கவன் இவன்.”

“அடுத்தது பாண்டியன்; தமிழ் அறிந்தவன்.”

“அடுத்தது சோழன்; காவிரி பாயும் திருநாடன், அவனுக்கு அடுத்து இருப்பவன் சேரன்; மலை நாட்டவன்."

எனினும் அவ்விலக்கை வீழ்த்திவிட்டால் திருமகள் போன்ற அழகுடைய அவளை அடையலாம் என்ற ஆசையால் செய்வது அறியாது திகைத்தனர். அம்பைத் தொடுப்பதா வம்பை விலைக்கு வாங்காமல் தணிந்து ஒதுங்கி விடுவதா என்ற இருவேறு மன நிலையில் அலைமோதினர்.

மன்னரை அறிமுகம் செய்தல்

செவிலித் தாயர் அமுது அனைய அவ்வழகிக்கு வந்திருந்த மன்னரைக் காட்டி இன்னார் இவர்கள் என அறிமுகம் செய்யும்வகையில் அவர்கள் பெருமை தோன்றப் பேசினர்.

“அதோ வாய் மூடி மவுனியாக இருக்கிறானே அவன் யார் தெரியுமா அவன்தான் துரியோதனன்; வில் இலக்கைக் காட்டிச் சுடர் விளக்கை அடைதல் சரியானது அன்று என்று கூறி மறுத்து இருக்கலாம். அப்படிச் சொன்னால் தான் வில்திறன் அற்றவன் என்று நினைப்பார்களே என்பதற்காக அவன் சொல்திறன் அற்றுக் கிடந்தான்.

அவன் சிரிக்கிறானே என்று நினைக்கிறாயா அவ்வளவும் நடிப்பு; அதுமட்டுமல்ல; தனக்கு நிகராக இப்பேருலகில் யாரும் இருக்க முடியாது என்று வீண் அகம்பாவம் கொண்டவன்” என்று கூறித் துரியனை அறிமுகம் செய்தனர்.

“துரியனுக்கு அருகில் இருக்கிறார்களே அவர்கள் தாம் அவன் தம்பியர் ஆவர். பாம்பின் தலைகள் பல இருப்பது போல இவனுக்கு உடன் பிறந்தவர் பலர் ஆவர். அவ்வளவு பேரும் நச்சுப் பல்லை உடையவர்கள்; கொடுமைக்குத் துணைபோகும் அச்சில் வார்த்த அடிமைகள் அவர்கள்” என்றனர்.

சகுனியைச் சுட்டிக்காட்டிச் “சூதுக்கும் சூழ்ச்சிக்கும் இவனுக்கு நிகர் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். அறிவாளி; சாணக்கியனின் மாணாக்கனாகத் தகுதி படைத்தவன்” என்றனர்.

அடுத்தது அசுவத்தாமனை அறிமுகம் செய்தனர்; “பேசாது அடங்கியிருக்கும் பேரறிவாளன் இவன்; போர் செய்யும் ஆற்றலினன். பிறப்பால் அந்தணன்; தொழில் சிறப்பால் வீரத் திருமகன். இவன் மேனி அழகில், படை வலியில், திண் தோள்வலியில் இவனுக்கு நிகர் யாரையும் கூறமுடியாது; இவன் துரோணனின் மகன் ஆவான்”.

அங்கதேசத்து அதிபதியாகிய கன்னனைப்பற்றிப் பேசும்போது அவன் உயர்வுகள் மிகுதியாகப் பேசப்பட்டன; உண்மை, வலிமை, உறவு, நெறி, தேசு, புகழ், வில் திறன், வண்மை இவை அத்துணையிலும் சிறப்பு மிக்கவன் இவன் என்று அறிமுகம் செய்தனர்.

அடுத்தது பலராமனை அறிமுகம் செய்தனர். நீலநிற ஆடையன் என்றும். கலப்பையைப் படையாக உடை யவன் என்றும், வசுதேவன் குமரன் இவன் என்றும் அறி முகம் செய்தனர்.

அடுத்தது கண்ணனை அறிமுகம் செய்தனர்.

“இந்தக்குரிசில் யது குலத்துத்திலகம். இவன் யது குலத்தில் பிறந்தவன்; இடையருடன் ஒருவனாய் வளர்ந்தவன். மாயம் வல்லவன் தன் மாமன் கம்சனின் உயிரை முடித்தவன்; இவன் சத்தியபாமையின் காதலன்; அவன் அவளோடு இந்திர உலகத்துச் சென்று கற்பகச் சோலையில் ஒய்வு எடுத்தவன்; மற்றும் சத்தியபாமைக்காகத் துவாரகையில் கற்பச் சோலையைக் கொண்டு வந்து நிறுவியவன் இன்னும் திராவிடம், சிங்களம். சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கெளடகம், குசலம் என்னும் பதினெண் தேசத்து அரசர்களையும் காட்டினர்.

இவர்கள் பட்டிமன்றத்துப் பார்வையாளர்கள் போல் அங்கே கட்டியிருந்த மண்டபத்தில் வீற்றிருந்தனர்.

“இவர்களுள் இலக்கினை வீழ்த்தி வெற்றி கொள்பவரையே நீ மாலை சூட்டி மணாளனாகத் தேர்ந்து எடுத்துக் கொள்வாய்” என்று செவிலியர் செப்பினர்.

அரசர்களின் அயர்ச்சி

முத்துப் போன்ற பற்களை உடைய திரெளபதியிடம் இவ்வாறு செவிலியர் சொல்லும்போது சித்திரம்போல் அசையாமல் தத்தம் ஆசனத்தில் இருந்தனர். ஆசனத்துக்கு அழகு கூட்டினர். துணிந்து அரசர்களில் சிலர் யானை போல்வார், யான், யான்’ என்று எழுந்தனர்.

யதுகுல வேந்தனாகிய வசுதேவன் பாண்டவர்கள் பார்ப்பன உருவில் வந்திருந்ததைப் பார்த்து விட்டு அதனைப் பலராமனிடம் சொன்னான். தம் குலத்து அரசரை வீண் முயற்சி செய்ய வேண்டாம் என்று தடுத்து நிறுத்தினான். ஒரு சில அரசர்கள் வில்லை எடுக்க முடியாமல் அது பல்லை உடைக்கும் என்று வைத்து விட்டனர். இது மனுஷன் எடுப்பது அல்ல என்ற துவேஷத்தில் நீங்கினர். சல்லியன் வில்லை எடுத்தான்; நாண் ஏற்ற முடியாமல் வில்லோடு தானும் நாண் அற்றுக் கீழே விழுந்தான்; வீழ்ச்சியில் அவனுக்கு வில் துணை நின்றது.

பகதத்தன் நாண் பூட்ட முடியாமல் நாணித் தளர்ந்தான். சராசந்தன், நீலன், துரியோதனன் நாணினை அருகில் கொண்டு வந்து பூட்ட முடியாமல் சோர்ந்து முயற்சியைக் கைவிட்டனர். கன்னன் கயிலை மலையை எடுத்த இராவணன் போல வில்லை உயர்த்திப்பிடித்தான். நாண் மயிர் இழையில் பூட்ட முடியாமல் வில்லின் காம்பு தலைமுடியைத் தாக்கக் கீழே விழுந்தான்.

அரவநெடுங்கொடி உயர்த்திய துரியன் முதலாக உள்ள அரசர் அனைவரும் அந்த வில்லை வளைத்து நாண் ஏற்ற முடியாமல் வலிமை குன்றி, எழில் மாழ்கிச் செயலற்று, ஊக்கம் அழிந்து தத்தம் இருப்பிடம் சேர்ந்தபின் இந்தி ரன் மகனாகிய அருச்சுனன் மிதிலையில் வில்லை வளைத்த இராமனைப் போல இளங் கொடி இருந்த அவையை நோக்கி அணுகினான்.

அந்தணன் வடிவில் அருச்சுனன்

“மன்னர் மரபில் பிறந்து மண் ஆள்கின்ற இந்த மகிபர்க்கு அல்லாமல் மறை நூல் கற்ற அந்தணர்கள் இவ் வில்லை வளைத்து இலக்கினை வீழ்த்தினால் இளந் தோகை மாலை சூட்டுவாளா?” என்று கேட்டான்.

அதற்குத் திட்டத்துய்மன் எழுந்து, “அதனால் பெருமை கூடுமேயன்றிக் குறையாது” என்றான்.

சிவபெருமான் மேருமலையை எடுத்தது போல் அருச்சுனன் அவ்வில்லை எடுத்தான். நாண் ஏற்றினான்; அம்பு தொடுத்துச் சக்கரம் சுழலும் நிலையில் மேல் இருந்த இலக் கினைத் தாக்கி வீழ்த்தினான். வயவேந்தர் நாணம் அடைந்தனர். “தனு நூலுக்கு ஆசிரியன் இவனே யாவான்” என்று அவையோர் பாராட்டினர். குழுமியிருந்த அந்தணர்கள் ஆரவாரித்து மகிழ்ச்சி கொண்டாடினர். தேவர்கள் வாழ்த்தினர்.

தாம் தொடுவதற்கு இயலாத வில்லினை அவன் எடுத்து வளைத்து இலக்கினை வீழ்த்தினான் என்று அறிந்ததும் தரணிபர் தம்முகம் கருகி விட்டது; நீலமலை போல் நின்ற அந்தணனை அவன்தான் அருச்சுனன் என்று பாஞ்சாலர் கன்னி கண்டு கொண்டாள். தன் தாமரைச செங்கண்ணால் பாங்காகப் பரிந்து நோக்கித் தேன் பொதிந்த அழகிய செங்கழுநீர்ப்பூ மாலையை அருவி போல் அவன் தோள்களில் சேர்த்தாள். அதன்பின் பாஞ்சாலியை அழைத்துக் கொண்டு தம் துணைவர் இருபுறமும் வர அவையில் இருந்த மன்னர் களை மதிக்காமல் அருச்சுனன் வெளியேறினான்.

“எங்கிருந்தோ வந்த பார்ப்பனன் பாஞ்சாலன் பயந்த பாவையைத் தட்டிக் கொண்டு போகிறான்; அரசர்கள் என்று சொல்லிக் கொண்டு தலைகளில் மகுடம் தாங்கி நிலத்துக்குச் சுமையாக இருக்கிறீர்; மானம், வெட்கம், சூடு, சுரணை இல்லாமல் மாடுபோல் நிற்கிறீர். முதலில் அவனைத் தடுத்து நிறுத்துங்கள்” என்று துரியன் முழக் கம் செய்தான்.

முத்துப் போன்ற நகை. அழகி திரெளபதியை மூத்தவன் பின் நிறுத்திவிட்டு வீமனும் வில் விசயனும் அரசர் கூட்டத்தை எதிர்த்துப் போராடினர்; அந்தணர் கூட்டமும் தாம் கைகளில் வைத்திருந்த தடிகளைக் கொண்டே அரசர்களை ஓட ஓட விரட்டினர். இந்த அந்தணர்கள் துணிந்து தாக்குதலைக் கண்டு அருச்சுனன் சிரித்து விட்டு “நீங்கள் விலகுங்கள்” என்று சொல்லி அவர்களை அகற்றினான். “என் முன் எமன் வந்தாலும் அவனைத் தடுப்பேன்” என்று முழக்கம் செய்தான். அவனை அந்தணன் என்று நினைத்துக் கொண்டு சிவந்த விழிகளையுடைய கன்னன் அவமதித்து அவன் மீது அம்பு எய்ய அருச்சுனன் அதனை இரண்டாகப் பிளந்தான்; மற்றோர் அம்பு கன்னனின் மார்பைத் தாக்கியது; வீமன் சல்லியனைக் குத்தித் தூக்கி எறிந்தான். தோல்வி கண்ட சல்லியனும் கன்னனும் வென்றாலும் தோற்றாலும் அந்தணர்களோடு போர் செய்தல் வசையே என்று எண்ணிப் போர் தொடுக்காமல் அடங்கி விட்டனர்.

“இவர்கள் நூல் முனிவர் அல்லர்; வானத்தரசர் இந்திரன்.வாயு இவர்களின் குமரர்” என்பதைக் கண்ணன் குறிப்பால் அறிவுறுத்த மண்ணகத்து மன்னர் எல்லாம் பேசாமல் தாம் வந்த வழியே சொந்த நாடு நோக்கிச் சென்றனர்.

குந்தியைச் சந்தித்தல்

தட்டிப்பறித்துக் கொண்டு வந்த கனியை எவ்வாறு வெட்டிப் பங்கிட்டுக் கொள்வது என்று தெரியாமல் வீடு விரைந்தனர். வெளியே வீட்டு மருமகளை நிறுத்தி வைத்து விட்டு “இன்று பெற்றனம் ஒர் ஐயம்; என் செய்வது?” என்று செப்பினர்.

இரந்து பெற்ற உணவைப் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தினால் இவ்வாறு கூறவே உள் இருந்த அன்னை அமுது என நினைத்து “நீர் சேர அருந்துவீர்” என்று சொல்லி வரவேற்றாள். வெளியே சென்று கள்ளவிழ் கூந்தலாளைக் கண்டாள். பிறகு தான் செய்த தவற்றை உணர்ந்தாள். கரும்பு என நின்ற காரிகையை விரும்பி எப்படிப் பகிர்வது என்று அதிர்ச்சி அடைந்தாள்.

“என்ன நினைத்து என்ன சொல்லி விட்டேன்; என்ன செய்தேன்” என்று சொன்ன சொல்லில் சோர்வு கண்டாள்.

அன்னையைத் தருமன் வணங்கி “நின் சொல் வேத வாக்கு ஆகும். நீ நினைத்துச் சொல்லியது அன்று; எங்கள் நெஞ்சிலும் இந்நினைவு உண்டு” என்று தருமன் ஒளிவு மறைவு இன்றிக் கூறினான். பார்த்தனைப் பயந்த பாவை யாகிய குந்தி “விதி வழி இது” என்று எண்ணி அமைதியுற்றாள். அன்று இரவு எல்லாம் முன்தினம் நடந்த சுயம்வரம் பற்றியும், விசயன் இலக்கு வீழ்த்தியது பற்றியும், அரசர் தம்மை எதிர்த்து ஓடியது பற்றியும் மைந்தர்கள் கூற உள்ளம் நெகிழ்ந்து அவற்றைக் குந்தி கேட்டு மகிழ்ந்தாள்.

துருபதன் அழைப்பு

பூவையைப் பெற்ற பூபதியாகிய துருபதன் அவ்வீரர் தம் பெருமிதத்தைப் பற்றியும், அவர்கள் பாண்டவர்கள் என்பது பற்றியும் ஒற்றரால் கேட்டு உணர்ந்து நெஞ்சத்தில் உவகை கொண்டான். மறுநாள் அவர்களைத் தம் மனைக்கு அழைத்து வந்தான். மற்றும் அவர்களைச் சிறப்புச் செய்யப் பல பொருள்களை அவர்கள் முன் வைத்தான், அவர்கள் போர்ப்படைக்கருவிகளை மட்டும் தேர்ந்து எடுத்துக் கொண்டனர். அதனால் அவர்கள் மறக் குடி வீரர் களாகிய பாண்டவர்கள் என்பதைத் தெளிவு படுத்திக் கொண்டான்.

கணையால் வென்று அவளைக் கைப்பிடித்த காதல னுக்கே அவளை மணம் முடிக்கக் கருதி அதைத் தெரிவித் தான். அதற்குத் தருமன் இடையிட்டு “ஐவரும் மணப் போம்” என்று கூறினான். அதனைக்கேட்ட துருபதன் திகைப்பும் தளர்வும் கொண்டான். “இது அடுக்குமா” என்று நடுக்கம் கொண்டான்.

வியாசன் தந்த விளக்கம்

வேத வியாசன் வந்து விளக்கம் கூறினான். “ஐவரை மணக்க வேண்டியது அவசியம்தான்; அதற்குக் காரணம் உள்ளது” என்றான்.

“இவள் சென்ற பிறவியில் நளாயினியாக இருந்தவள்; மவுத்கல்லிய முனிவனின் பத்தினி இவள். அவன் இவள் கற்பினைச் சோதிக்க வெறுக்கத் தக்க தொழு நோயாளியாகத் தன்னை மாற்றிக் கொண்டான்”.

“கச்சணிந்த அழகியாகிய அவள் கொண்டவன் உண்ட மிச்சிலையே உண்டு வந்தாள். அவன் அழுகிய விரல் ஒன்று அதில் விழுந்து கிடந்தது; அதனையும் பொருட் படுத்தாமல் அருவெறுப்புக் காட்டாமல் அவ் உணவை அமுதம் என உண்டாள்; இச்சித்த காதல் இன்பம் பெறாமல் இளைத்த மெய்யினள் ஆயினாள்”.

“அவள் கற்பின் சிறப்பை மதித்து அவள் விரும்பிய இன்பத்தை நல்க மன்மதன் போன்று அழகிய வடிவாகத் தன்னை மாற்றிக் கொண்டான். அவள் ரதியானாள்.

“மின்னே! உனக்கு வேண்டும் வரம் கேள்” என்றான்’

“நின் நேயம் என்றும் நிலைத்து இருக்க வேண்டும்” என்றாள்.

இருவரும் இணைந்து ஈடற்ற இன்பம் அடைந்தனர்; இதயம் கலந்து இருவரும் உணர்வால் ஒன்று பட்டனர்; குன்று என வடிவம் எடுத்தால் அவள் நதியாக அவனைத் தழுவினாள்; அவன் மரமாக வடிவு எடுத்தால் அவள் கொடியாகத் தழுவினாள்; மேகமும் மின்னலும் என அவன் ஆகத்தைக் தழுவினாள்; இப்படிப் பல பிறவி– களில் தொடர்ந்து இன்பம் அனுபவித்தனர். அப் பிறப்புகளை அடுத்து ஒருபிறப்பில் அவள் இந்திரசேனை ஆனாள். அவனையே கணவனாக அடைந்தாள். அறுவை தந்த இல் லற வாழ்க்கையில் அலுத்துத் துறவறம் மேற்கொண்டான்.

அன்னோன் அவளைவிட்டு நீங்கவும் அவன் மேல் அவள் ஆசை மிகுந்ததே தவிரக் குறையவில்லை. அவள் அவனையே நினைத்து அருந்தவம் செய்தாள். சிவனிடம் முறையிட்டாள்.

“உனக்கு என்ன வேண்டும்?” என்று சிவன் கேட்டான்,

“கணவன் வேண்டும்” என்ற ஆர்வத்தினால் அதை யே ஐந்து முறை கூறினாள் கணவனை வேண்டு மென் றாளே தவிர அம் முனிவனே தனக்குத் துணைவன் ஆக வேண்டும் என்று கேட்க மறந்தாள், அவ்வேண்டுகோளின் படி அவள் திரெளபதியாய்ப் பிறந்து இருக்கிறாள் என்று விளக்கினான்.

மற்றும் மீதி வரலாற்றையும் கூறத் தொடங்கினான் முன் நின்ற சிவன் அருள் செய்தபடி இந்திரசேனை கங்கையில் முழுகித் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தாள். கணவனை நினைந்து அழுது கொண்டிருந்த வளைக் கண்டு அவ்வழியாக வந்த இந்திரன், “ஏன் அழுகி றாய் பெண்ணே” என்று கேட்டான்.

அவனோடு தொடர்பு கொள்ள விரும்பி ஆசை பற்றி “வருக” என அவள் அழைத்தாள். அவனும் உருகி அவளை அடையும் ஆர்வத்தில் பக்கத்தில் இருந்த பரமசிவனை மதிக்காமல் அவள்பால் நெருங்கினான்; சிவன் “இவனுக்கு என்ன இவ்வளவு திமிர்” என்று அவன் மீது சீற்றம் கொண்டான். அதனால் இந்திரன் துஞ்சியனைப் போல் புலம்பிக் கீழே விழுந்தான்.

அவனை இழுத்துக் கொண்டு சென்று ஏற்கனவே இவனைப் போலச் செருக்குற்றுப் பதவி இழந்த நான்கு இந்திரர்கள் அங்கே பாதாள அறையில் அடைபட்டிருப்பதைக் காட்டினான். அவர்கள் ஐவருமாகச் சிவன் காலடிகளில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர்; “நீவிர் ஐவீரும் மண்ணுலகில் பிறந்து இந்தப் பெண்ணுக்குக் கணவர் ஆவீராக” என்று கட்டளை இட அவர்கள் ஐவரும் பாண்டவராகப் பிறந்துள்ளனர்” என்று கூறினான் .

யமனுக்குப் பிறந்த தருமனும், வாயுவுக்குப் பிறந்த வீமனும், அசுவனி தேவர்களுக்குப் பிறந்த நகுல சகா தேவர்களும் பிலத்தில் அடைபட்டிருந்த இந்திரர் நால்வர் எனவும், இந்திரனுக்குப் பிறந்த அருச்சுனன் இந்த ஐந்தாவது இந்திரனின் பிறப்பு என்றும் கூறினான்.

இந்திரப்பதவி என்பது மாறி மாறி வரும் என்று கூறப்பட்டது. சிவனால் பதவி இறக்கப்பட்ட ஐந்து இந்திரர்களே மானுடப்பிறவி எடுத்து இந்திரசேனையை இங்கு மணக்கின்றனர் என்று வியாசன் கூறினான்.

இந்தக் கதைப்பின்புலம் பாண்டவர்கள் ஒரு சேர எடுத்த முடிவுக்கு அரண் செய்தது. “கட்டிக் கொள்கிறவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அவர்களுக்கு மனைவியாகப் போகும் காரிகையும் மறுப்புச் சொல்லவில்லை. அவளை வைத்து வழி நடத்தும் மாமியும் ஏற்கிறார். அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும்இல்லை” என்று துருபதன் அம் மணத்துக்கு இசைவு தந்தான்.

மணவிழா

மணவிழா சிறப்பாக நடைபெற்றது. வேதம் கற்ற வேதியரும், முடிவேந்தரும் திரண்டுஇருக்க மணித்துரண்கள் நிறைந்த மண்டபத்துக்குப் பாண்டவர் வந்து சேர்ந்தனர். மண மேடையில் திரெளபதி வலப்பக்கமாகவும் தருமன் இடப்பக்கமாகவும் அமர்ந்தனர். தெளமியன் என்னும் வேதம் ஒதும் பார்ப்பான் புரோகிதனாக இருந்து மணம் நடத்தி வைத்தான். தீ வலம் செய்து, கைகளில் காப்புக் கட்டிக் கொண்டு பெருகிய ஓமத்திவும் இட்டான்; இவ்வாறே மற்றைய நால்வரும் மணமனையில் அடுத்து அடுத்து அமர்ந்து சடங்குகளுக்கு உள்ளாயினர்.

இல்லறம் இனிது நடைபெறத் துருபதன் நீர்வார்த்துக் கன்னிகா தானம் செய்தான்; மற்றும், தேரும், யானையும், சேனையும், நிலமும், தனமும் தமது என்று கூறி அவர்கள் உடைமையாக்கிக் கொடுத்தான். அவர்கள் அங்கு மருமகன்கள் என்ற உரிமையும் பெருமையும் பெற்றுச் சிறப்புடன் இருந்தனர்.

துரியனின் எதிர்ப்பு

பார்ப்பனர் யாரோ வந்து அந்தப் பாவையைக் கைப் பற்றினர் என்று பகை காட்டாமல் நாடு திரும்பிய துரியன் அவர்கள் பார்த்திபர் ஆகிய பாண்டவர் என்று அறிந்ததும் படை கொண்டு பாஞ்சால நாட்டின் மீது பாய்ந்தான்.

துருபதனின் படைகள் திறமை மிக்கவையாக இருந்தன; பாண்டவர்கள் தலைமையில் அவை செம்மை யாகப் போர் செய்தன. இறந்தவர் போக இருந்தவர் அனைவரையும் துருபதன் படை துரத்த அத்தினாபுரம் நோக்கிப் பின்வாங்கினர். கவுரவர்கள் ஆகிய பாம்பு அர்ச்சுனனின் நாண் ஒலியாகிய இடியையும் அப்பு ஆகிய பழையையும் கண்டு ஒட்டம் பிடித்தது. யானை முகத்தை உடைய தாரகாசுரன் முருகவேளுக்கு உடைந்து தோற்றது போல யானை போல வந்த கன்னன் நகுலனின் தாக்குதலுக்கு ஆற்றாது புறம் காட்டினான்; சகாதேவன் சகுனி தேரோடு திரும்பி ஒடும்படி தாக்கினான். தீ முன் வெண்ணெய் உருகுதல் போல வீமனைக் கண்டு துரியனும் துச்சாதனனும் மற்றும் உள்ள தம்பியரும் உறுதி குலைந்து ஒடினர். கன்னனும், துரியனும், துச்சாதனனும், சகுனியும் அரக்கு மாளிகையில் அழிக்க அனுப்பிய புரோசனின் கவனக்குறைவாலேயே பாண்டவர் பிழைத்து விட்டனர் என்று அவனை நினைத்து நொந்து கொண்டனர். பாண்டவர் வேள்வித் திருமகளை மணந்ததோடு வெற்றித் திருமகளையும் அடைந்த பெருமை பெற்றனர்; மாமன் துருபதனோடும் கண்ணனோடும் தங்கி அந்த மாநகரில் மாண்புடன் வைகினர்.

போர்மேற் சென்ற துரியோதனாதியர் போரில் பின் வாங்கியதை அறிந்து திருதராட்டிரன் புதுவகையில் சிந்தித்துத் தம்பியின் பாகத்தைத் தருமனுக்கு ஈவதற்கு அமைச்சரோடு கலந்து யோசித்தான்.

போர் செய்வதனால் எந்த நன்மையும் வரப்போவ தில்லை; அவர்களுக்கு உரிய ஆட்சியைத் தந்து விடுவதே அவர்களைத் துரியனுக்கு வேண்டியவர்கள் ஆக்கமுடியும். அதனால் தன் மகனுக்கு ஆக்கமே விளையும் என்பதால் இம்முடிவுக்கு வந்தான். வீடுமனும் விதுரனும் அதுவே தக்கது என்று உரைத்தனர். அதனால் அவர்களைத் துது அனுப்பி வரவழைத்து அத்தினாபுரியில் நிறுத்திக் கொண்டனர்.

இந்திரப் பிரத்த ஆட்சி

அத்தினாபுரியில் அய்யிரு பதின்மர் ஐவர் என்று பேத மில்லாமல் இரண்டறக்கலந்து ஒற்றுமையாக வாழ்ந்தனர்; அந்நிலையில் அமைச்சரையும் அரும் சுற்றத்தினரையும் அழைப்பித்துத் தருமனுக்கு ஆட்சி நல்கி முடி சூட்டினான் திருதராட்டிரன்.

அழுக்காறு துரியனை ஆட்டி வைத்தது. தருமனைக் காண்டவப் பிரத்தம் என்னும் வறண்ட நகருக்கு அனுப்புமாறு தந்தையைத் துண்டினான்.

இங்கிருந்தால் அவர்கள் இங்கிதமாக வாழ மாட்டார் கள் என்பதால் அவன்பாடிய சங்கீதத்துக்குத் தந்தை ஒத்து இசைத்தான்.பாழ்பட்ட நகரைப் பண்புடையதாக ஆக்கத் தருமனே தக்கவன் என்று சொல்லி அவனை அங்கு ஆட்சி செய்ய அனுப்பி வைத்தான்.

கண்ணன் காட்டைத் திருத்தி அங்கே வளநகர் உண்டாக்குமாறு இந்திரனிடம் சொல்ல அவன் வேத தச்சனாகிய விசுவகர்மனை அழைத்துக் கூறினான். இந்திரனின் ஆணையால் அச்சிற்பி அந்நகரை அமைத்து அழகு படுத்தினான். இந்திரன் புதுப்பித்ததால் அந்நகருக்கு இந்திரப்பிரத்தம் எனப் பெயர் உண்டாயிற்று.

இவர்கள் இங்கே இனிமையாக ஆட்சி செய்து வரும் நாளில் விண்ணவர் நாட்டு இசைஞானி நாரத முனிவன் இவர்களுக்கு நல் விருந்தாக வந்தான். தமக்கு ஏதாவது அறிவுரை சொல்ல வேண்டுமென்றான் தருமன். தரும னுக்குப் போய்த் தருமம் சொல்வது மிகை; அதுமட்டுமல்ல நேரிடை இப்படிச் செய்யக் கூடாது என்றால் அதற்கு எதிர்ப்புத்தான் வரும்.

நாகரிகமாகச் சொல்லி அவர்களைத் திருத்தவேண்டும் என்று விரும்பினான். ஐவரை ஒருத்தி மணந்தாள் என்பது அவர்களைப் பொறுத்த வரை ஏற்றுக்கொள்ளப்பட்டது எனினும் அவர்கள் நல்வாழ்வில் நாட்டம் கொண்ட நாரதன் அவர்களுக்கு அவர்களைப் பாதிக்கக் கூடிய கதை ஒன்று கூறினான்.

எந்த ஒற்றுமையின் பேரில் ஐவரும் சேர்ந்து ஒருத்தியை மணந்தார்களோ அதே அடிப்படையில் அவர்கள் வேறு படக்கூடும் என்பதை அறிவித்தான்.

“சுந்தன் உபசுந்தன் என்பவர்கள் ஒரு தாய் வயிற்றுப் பிறந்த அசுர சகோதரர்கள். ஆற்றல் மிக்க இல் அசுரர் களைக்கண்டு அமரரும் அஞ்சினர். இந்திரன் அவர்களைப் பிரிக்க எண்ணினான். திலோத்தமை என்னும் நடன அழகியை அவர்கள் முன் அனுப்பி வைத்தான். வெறி கொண்டவர்களாகி நெறி தப்பினர். பெரியவன் வயதால் அவள் தனக்கு உரியவள் என்றான்; இளையவன் அவள் தன்னைத்தான் விரும்புவாள் என்றான்; சிறுபொறி பெருந் தீயாக மாறியது; அவளை அடைய வேண்டும் என்ற ஆர்வத்தால் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்; மாறி மாறித்தாக்கிக் கொண்டனர்; இருவரும் இறுதியில் இறந்து ஒழிந்தனர்.

ஒரு பெண்ணின் காரணமாக அசுரர்கள் இருவர் டோரிட்டுக் கொண்ட கதையைச் சொல்லி அவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினான்.

“உங்களுக்குள் ஒரு வரையறையை ஏற்படுத்திக் கொள்வதுதான் உங்களுக்கு நல்லது.”

“ஆண்டுக்கு ஒருவராக அவளுக்கு உற்ற கணவராவீர்; தப்பித்தவறி இருவர் இன்னுரையாடும் போது இடைப் பிற வரலாக நுழைந்து விட்டால் அந்தப் பாபு விமோசனத்– திற்காகத் தீர்த்த யாத்திரை போக வேண்டும்” என்று கூறினான்.

கேட்பதற்கு இனிமையாக இருந்தது. நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருந்தது. சிக்கல்கள் இன்றி அவர்கள் வாழ முடிந்தது. அவளுக்கும் ஒரளவு விடுதலை கிடைத்தது போல ஆயிற்று.

சோதனை

நாரதன் காட்டிய வழிப்படி திரெளபதி முதல்வனுக்கு உறவினளாக இருந்தபோது அருச்சுனன் அவர்களின் தனிமையில் தலைகாட்ட நேர்ந்தது. எதிர்பாராதவிதமாக அவர்கள் இனித்துப் பேசித் தனித்து இருந்த நிலையில் தோட்டத்து வழியே உள் அறைக்குச் சென்றான்.

பார்ப்பனன் ஒருவன் பசு ஒன்றைக் கொள்ளையிடப் பறி கொடுத்துவிட்டுப் பார்த்திபன் ஆயிற்றே என்பதால் அருச்சுனனிடம் வந்துமுறையிட்டான்.முறைகேட்ட அவன் கள்வனைத் துரத்திப் பிடிக்க அம்பும் வில்லும் கொண்டு வர உட்சென்று நுழைந்தான் சீறடிச் சிலம்பின் ஒலி செவியில் பட்டது. பேரிடி கேட்டதுபோல் ஆயிற்று. அவ்வளவு தான்; அவன் தன் நியமம் கெட்டுவிட்டது என்று முடிவு செய்து கொண்டான்.

பாவம் ஏதோ செய்துவிட்டது போன்று ஒரு பரிபவம் அவன் மனத்தில் தோன்றியது. நாரத முனிவன் கூறிய படி அப்பாவம் தீரத் தீர்த்தயாத்திரை செய்ய முடிவு செய்து கொண்டான்.

அருச்சுனனின் தீர்த்த யாத்திரை
உலூபியை மணத்தல்

அருச்சுனன் தன் அண்ணன் மனைவியின் காலடிச் சிலம்புகளைக் கண்டதால் அவன் தீர்த்த யாத்திரையை மேற் கொண்டான். அந்தப் பயணத்தில் தெய்வச் சிந்த னையும் மனிதக் காதலும் மாறி மாறி அமைந்தன. முதற் கண் வட நாட்டு யாத்திரை அமைந்தது. விசயனின் விசயம் அழகியர் மூவரைக் கவர்ந்தது. ஆணழகன் என்ற புகழுக்கு உரியவன் ஆனான்.

கங்கை நீரில் நீராடித் தெய்வக் கோயிலை வழி படச் சென்றவன் நாகர் உலகத்துக் கன்னி அரை குறை ஆடையில் நீரில் முழுகி எழுந்த அழகின் நிழலைக் கண்டு தன் நெஞ்சைப் பறிகொடுத்தான். அவள் அவனைக் கங்கை நீர் வழியாகவே பாதளத்தில் இருந்த நாகர் உலகத்துக்கு அழைத்துச் சென்றாள். தலயாத்திரை பாதள யாத்திரையாக மாறியது.

விருந்துகள் பல நல்கி அருந்தச் செய்து இன்பத்தில் ஆழ்த்தினாள். இன்ப உலகம் என்ற ஓர் இடம் இருக்கிறது என்றால் அது நாகர் உலகம் எனக் கண்டான் வடி கட்டி எடுத்த அழகியரே அங்குக் குடி பெயர்ந்து தங்கினர். ஆணழகன் ஆகிய அருச்சுனன் அழகுக்காகவே ஒரு பெண்ணை விரும்பினான் என்றால் அவள் இந்த நாகர் உலகத்து உலூபி என்ற அழகிதான். இரவான் என்ற மகனை அவள் பெற்றெடுத்தாள். அவன் பயணத்தில் இது முதற்கல்லாக இருந்தது. அங்கே அவன் எழுப்பிய காதல் மாளிகையில் கல்நாட்டு விழாவாக இம் மைந்தனை மகனாகப் பெற்று அங்கு விட்டு வைத்து வளரச் செய்தான்.

சித்திராங்கதையை மணத்தல்

அடுத்த பயணம் தென்தமிழ் நாடாக அமைந்தது; வேங்கடவன் குன்றத்தில் திருமாலை வழிபட்டுப் பின் தொண்டை நாட்டுக் காஞ்சி நுழைந்தான்; அங்கே அறம் வளர்த்த செல்வியாகிய காமாட்சி அம்மன் திருக்கோயிலை யும், வரதராசர் திருச்சந்நிதியையும் சென்று வழிபட்டுப் பின் சிவன் நெருப்பு வடிவத்தில் தங்கி இருந்த திருவருணை எனப்படும் திருவண்ணாமலையையும். சோழ நாட்டில் தில்லையம்பதியையும் வணங்கி விட்டுத் தென்றற் காற்று தமிழ் பாடும் மதுரையை அடைந்தான்.

பாண்டிய நாட்டை ஆண்டு வந்த சித்திரவாகனன் அந்தண வடிவத்தில் சென்ற அருச்சுனனை வரவேற்று உபசரித்தான்.

“நீர் எங்கு வந்தீர்?” என்று கேட்டான்.

“கன்னியைக் கண்ணுற்று ஆட வந்தனன்” என்றான்; கன்னியாகுமரி என்ற ஊர்ப் பெயரும் கன்னிப் பெண் என்ற பொருளும் அமையச் சிலேடை நயம் தோன்றப் பேசினான். குமரியாட வந்த குமரனாக விளங்கினான்.

அருச்சுனனும் மற்றைய அயல் நரட்டு அந்தணர்களும் தவசிகளும் சோலை ஒன்றில் தங்கப் பாண்டியன் ஏற்பாடு செய்திருந்தான். உணவும் உறையுளும் அங்கு அவனுக்கு ஏற்பாடு ஆயின.

அங்கே தோட்டத்தில் வெள்ளைப்பசு ஒன்று மேய்ந்து கொண்டிருத்தது. அதன் சொந்தக்காரர் யார் என்று கேட்டுத் தெரிந்து கொண்டான். அவள் சித்திர வாகனன் பெற்ற சித்திராங்கதை என்பதை அறிந்தான். அவளை நோட்டம் விடுவதற்கு அந்தத்தோட்டம் வழிச் சென்றான். அந்தணத் துறவுக் கோலத்தை நீக்கிவிட்டுக் காமனும் விழையும் கண்கவர் வடிவம் கொண்டு அழகனாக அவள் முன் நின்றான். கண்கள் பேசிக் காதலை வெளிப்படுத்தின.

வந்தவன் அருச்சுனன் என்பதை அரசன் அறிந்து அவளை அவனுக்கு மணம் செய்து தந்தான். தனக்கு மகள் ஒருத்தியே இருந்ததால் அவளுக்குப் பிறக்கும் மகனைத் தன்னிடம் விட்டுச் செல்லும்படி கேட்டுக் கொண்டான். பண்பாட்டின் பிறப்பிடம் தமிழகம் ஆகையால் தமிழ் இனிக்கும் பாண்டிய நாட்டை அவன் விரும்பினான். வட நாட்டில் பிறந்த விசயன் தமிழ் மண்ணில் பெண்ணைத் தேர்ந்தெடுத்தது தமிழ் மண்ணுக்குப் பெருமையைச் சேர்த்தது.

சுபத்திரையின் மணம்

பப்புருவாகனன் என்ற பெயருடைய மைந்தனைப் பாண்டிய நாட்டில் விட்டுச் சென்று சித்திராங்கதையிடம் விடை பெற்றுக் கொண்டு சேது நோக்கிச் சென்றான். கன்னியாகுமரி முனைக்கடலில் குளித்துவிட்டு வடக்கே திரும்பினான். உறவுக்காக ஒருத்தியைத் தேடித் துவாரகை சென்றான். கண்ணனின் தங்கை சுபத்திரை தாவணி அணியும் முன் அறிந்து பழகியவன். அத்தை மகள் என்று அவளிடம் அவன் தனி அன்பு காட்டியவன். அவள் நினைவு வரவே அவன் பயணம் துவாரகை நோக்கித் திரும்பியது. அவள் தாவணிக் கனவுகளை நனவு படுத்த வாய்ப்பு நல்கினான்.

பண்பாடிப் பாட் டிசைக்க அவனுக்குத் துறவுக்கோலம் உதவியது; ஆலமர நிழலில் யோக நிலையில் அமர்ந்து மாபெரும் தவசி போல் நாடகம் நடத்தினான் ஊருக்குள் ஒரு உத்தம சந்நியாசி வந்திருக்கிறார் என்ற செய்தி காட்டுத் தீ போலப் பரவியது. மன்னர்கள் எல்லாம் அவன் காலடியில் விழுந்து வணங்கித் திருநீறும் குங்குமமும் பெற்றுச் சென்றனர். கண்ணனின் மூத்தவனான பலராமனும் அவனை வணங்கி வாழ்த்துப் பெற்றுச் சென் றான். கண்ணன் மட்டும் உண்மை அறிந்து சிரித்துப் பேசி அவன் நோக்கத்தைத் தெரிந்துகொண்டான் சுபத்திரை அங்கு வந்து போனாள். சுபத்திரையைச் செல்வக் கோமகனாகிய துரியனுக்கு மணம் செய்விக்க வேண்டும் என்று பலராமன் விரும்பினான். அதனால் இவர்கள் திருமணத்துக்கு அண்ணன் இசையான் என்பதால் கண்ணன் அவனுக்கு அறிவுறுத்தினான்.

“அடிகளே, உம்முடைய நாடகம் தொடரட்டும்; இங்கு எம்மவர் உம் மணத்துக்கு இசைவு தரமாட்டார்கள். அதனால் நீயே முயன்று அவளைக் காதலித்து மணம் செய்து கொண்டு உம் நகருக்கு அழைத்துச் செல்க” என்று அருச்சுனனுக்கு அறிவித்தான்.

சுபத்திரையை அழைப்பித்து “மழைக்காலம் வந்து விட்டது. முனிவர் நான்கு மாதம் இங்குத் தங்குவார். அவர் இடும் பணிகளைப் பரிவுடன் நீ புரிவாயாக” என்று பணித்திட்டான்.

அதனால் அவளோடு நெருங்கிப் பழக அவனுக்கு வாய்ப்புக் கிடைத்தது. நல்லிலக்கணம் பல உடைய அவன் மேனியின் தோற்றம் அவன் ஏற்றத்தைக் காட்டியது. வில் தழும்பு பெற்ற கைவிரல்களையும் பரந்த மார்பையும் வீங்கிய தோள்களையும் கண்டு இவன் ஒரு மாவீரனாக இருக்க வேண்டும் என்று மதித்தாள்.

ஒரு நாள் அவன் திருவடிகளில் விழுந்து வணங்கி “எங்கெங்கே வண்புனல் ஆடுதற்குச் சென்றிருந்தீர்? எங்கெங்கே தங்கினர்? நீங்கள் உறையும் மாநகர் யாது” என்று வினவினாள்.

தவசியாகிய அருச்சுனனும் தான் தங்கி இருப்பது இந்திரப்பிரத்தம் என்று கூறினான். அவன் அவ்வாறு கூறியதும் அருச்சுனனை விடுத்து ஏனைய நால்வரின் நலம் குறித்து விசாரித்தாள்.

“மின்னல் போன்ற அழகியே! விசயனைப் பற்றிக் கேட்க மறந்தது ஏன்?” என்று கேட்டான்.

அதற்கு அவள் பதில் தரவில்லை; அவள் தோழி பதில் சொன்னாள்.

“மாமன் மகன் பேரைச் சொல்ல அவள் வெட்கப்படு கிறாள். அவனைத்தான் அவள் மணக்கப் போகிறாள்” என்றாள்.

“தீர்த்த நீர் ஆடுவதற்காகப் பார்த்திபன் ஊர்கள் சுற்றித் திரிகிறான் என்று கேள்விப்பட்டோம்; அவன் பேர் பற்றி ஏதேனும் கேள்விப்பட்டது உண்டா? அவன் எங்கே இருக்கிறான். சொல்ல முடியுமா?” என்று தொடர்ந்து அத்தோழிப் பெண் கேட்டாள்.

“ஊரைப் பார்க்கச் சென்றவன் இப்பொழுது உம் தோழியின் பேர்ைச் சொல்லிக் கொண்டு இங்குத் தங்கி இருக்கிறான்” என்றான்.

துறவி உரைத்த உரையைக் கேட்டு யதுகுலப்பெண் ஆகிய சுபத்திரை நெற்றி வியர்த்தாள். இதழ் துடித்தது; மேனி புள கித்தது; அரிவை அவள் அவனை அடையும் ஆவலைக் கொண்டாள்.

அவனால் அதற்கு மேல் அடங்கி இருக்க முடிய வில்லை. அவள் கைகளைத் தொட்டுப் பிடித்தான். பின் அவளைத் தனிமையில் கட்டி அணைத்தான், அத்தான் என்று அவளைச் சொல்ல வைத்தான். அவர்கள் உள்ளத்தால் ஒன்று பட்டனர். அதனைக் கள்ளத்தால் வெண்ணெய் உண்ட மாதவன் அறிந்தான்.

அருச்சுனனின் தெய்வத் தந்தையாகிய இந்திரனும், கண்ணனும் முன் நின்று இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தனர். பலராமன் இருந்தால் தடை செய்வான் என்பதால் பலராமனையும் அவனுக்கு வேண்டியவர்களை யும் மகரத்தீபம் என்னும் இடத்திற்குச் சிவனுக்கு எடுக்கும் விழாவைக் காண்பதற்குக் கண்ணன் அழைத்துச் சென்று விட்டான். அவர்களை அங்கு விட்டு வைத்து இவன் மட்டும் வந்திருந்து முன் இருந்து முகூர்த்தத்தை முடித்து வைத்தான்.

வந்த பிறகு அருச்சுனன் சுபத்திரையை மணந்த கதை யைச் சொல்லி ஒன்றும் அறியாதவன் போல் நடித்தான். அதற்குள் அவர்களைத் தேரில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டான், பலராமன் படையுடன் சென்று எதிர்த்துத் தடுத்தான். சுபத்திரை தேர் ஒட்ட யாதவப்படைகளைச் சொந்த ஊருக்குத் திரும்பப் போய் அடங்கி இருக்க அருச்சுனன் துரத்தி அடித்தான்.

தீர்த்த யாத்திரை முடிந்தது இவன் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தாய் குந்திமுன் வெளிநாடு சென்று திரும்பி வந்ததற்கு அடையாளமாகப் பாத்திரம் ஒன்று கைப்பற்றி வந்து சேர்ந்தான். கோயில் தலங்கள் சென்று வழிமட்டதும், ஒய்வு கிடைக்த போது மடந்தையர் மூவரை மணந்ததையும் சொல்லி மகிழ வைத்தான்.

சுபத்திரை அவனுக்கு ஒர் வீர மகனைப் பெற்றுத் தந்தாள்; அவன்தான் அபிமன்யு என்பவன்.

காண்டவ தகனம்

வறியவர் குறை கேட்டு, வாரி வழங்கிய தருமனின் கொடைச்சிறப்பைப் பயன்படுத்திக் கொண்டு அக்கினி அக்கிரகார வடிவம் கொண்டு அவன் முன் வந்து நின்றான்.

“ஐயா! பார்வை இல்லை” என்று பிச்சைகேட்டுக் கொண்டு உள்ளே ஒரு பாமரனைப்போல நுழைந்தான்.

ஐயர் கேட்டால் இல்லை என்று சொல்லும் துணிவு மேல் அரசகுலத்துக்கு இருந்தது இல்லை.

தருமன் “பசிக்கு உணவு தருகிறோம்” என்றான். வந்தவன் பொறுப்பாக நடப்பான் என்று எதிர்பார்த்தான்; அவன் நெருப்பாய் நிமிர்ந்து நின்றான்.

கேட்டது ஒன்று; வேட்டது வேறாக இருந்தது “காட்டைப் பற்றி எரித்துச் சாம்பல் ஆக்க விரும்புகிறேன்” என்றான்.

“விரும்பியது உண்க” என்றான் அருச்சுனன்.

“மழை பொழிந்து இந்திரன் தீமை இழைப்பான்” என்றான்.

“சரகூடம் அமைப்போம்” என்றான்.

இந்திரன் கொட்டும்மழை கொண்டு அக்கினியை அடக்கப்பார்த்தான்; மொட்டின் வடிவம் உடைய அம்புகளைக் கொண்டு அருச்சுனன் வானத்தில் சரங்கள் அமைத்து மழையைத் தடுத்தான்; கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்த கோவிந்தன் மழையைத் தடுத்தது போல் அரசர் கோவாகிய அருச்சுனன் அமரர் கோவாகிய இந்திரன் தொடுத்த மழையை அம்புகளால் தடுத்தான்.

அந்த வனத்தில் இருந்த மரச்செல்வம் எல்லாம் அழிந்தன: உயிர்கள் எல்லாம் சுருண்டு மடிந்தன. சிங்கம், யானை, புலி, கரடி, மான் இக்கூட்டம் எல்லாம் சாவில் ஒற்றுமை காட்டின. தக்ககன் என்னும் பாம்பு தப்பிப் பிழைத்து குருக்ஷேத்திரத்தை முன்னதாகப் போய் அடைந்தது. அதன் துணைவியாகிய பெண் நாகம் அசுவசேனன் என்னும் குட்டியைக்காக்க அதனை வாயில் விழுங்கிக் காப்பாற்றி வானை நோக்கித் தாவியது. குட்டி என்றும் பாராமல் அம்பு அதனை எட்டியது. வால் அறுப்புண்ட அசுவசேனன் தாயைச் சாவில் இழந்தபின் கன்னனிடம் புகலிடமாக அடைந்து நாகாத்திரமாகச் செயல்பட அவனிடம் வளர்ந்து வந்தது. மயன் என்னும் அசுரத்தச்சன் மட்டும் சரண் அடைந்து உயிர் தப்பினான்.

“கண்ணனும் அருச்சுனனும் தெய்வப்பிறவிகள்; அவர்களை எதிர்த்து தெய்வத் தலைவர்கள் போரிடுவது பயன் இல்லை” என்று அசரீரி கூறியது. மழை நின்றது; காண்டவ வனம் படுகாடு ஆகியது.

அக்கினி விசயனுக்குத் தேரும் படைக்கருவிகள் பலவும் தந்து பாராட்டினான்; அவற்றுள் காண்டீபம் என்னும் வில்லும், எடுக்க எடுக்கக் குறையாத அம்பறாத் தூணிகள் இரண்டும் தரப்பட்டன. வெள்ளைக் குதிரைகள் பூட்டிய தேர் ஒன்றும் தரப்பட்டது.

இராச சூய வேள்வி

காட்டை எரித்து விட்டு நகர் திரும்பிய பாண்டவர்கள் போரிட்ட விண்ண வருக்கு விடை தந்து அனுப்பினர். கரிய நிறச்செம்மல் ஆகிய கண்ணனும் பாண்டவர்களும் இந்திரப்பிரத்த நகரில் வந்து தங்கினர். தப்பிப் பிழைத்த சிற்பநூல் வல்ல அசுரத்தச்சன் ஆகிய மயன் உயிர் அளித்த உத்தமர்களுக்கு உன்னதமான மண்டபம் ஒன்று கட்டித் தருவதாக உறுதி தந்தான். அதற்காக விடபருவன் என்னும் அசுரன் கொள்ளையடித்துக் குவித்து வைத்த அரிய மணிகளைக் கொண்டு வந்து சேர்க்கும்படி கூறினான். அவை விந்து என்னும் பொய்கையில் குவிந்து கிடப்பதாகவும் கூறினான்.

கண்ணசைவில் விண்ணையே அசைத்துக் கொண்டு வரும் ஆற்றல் உடைய தம்பியர் இளைஞர் காவலன் கட்டளை கேட்டுச் சொல்லிய மணிகளை அள்ளிக் கொண்டு வந்து சேர்த்தனர். மயன் தன் சிற்ப நூல் புலமையால் திறன்மிகு பணியாளர்களைக் கொண்டு மின்னல் என ஒளி விடும் முகில் தவழும் மண்டபம் அமைத்துக் கொடுத்தான். கட்டித் தங்கத்தால் கற்களை அடுக்கிக் கணக மணிகளால் விதானம் ஏற்றிப் பச்சை மரகதத்தால் தூண்கள் போக்கி விண்ணவர் உலகத்து சுதன்மை என்னும் மண்டபத்திலும் சிறந்தது என்னும்படி அமைத்துக் கொடுத்தான். நகரம் விழாக்கோலம் கொண்டது.

மண்டபம் அமைத்ததும் அதனை விருப்புற்றுக் காண விண்ணவர் வந்து குழுமினர்; மாமன்னர்கள் வரவேற்கப் பட்டனர்; வித்தியாதரர் வந்து வியந்தனர்; இந்திர உலகத்து அத்தாணி மண்டபம் போல் காட்சி அளித்த அதனைக் கண்டு இஃது ஒர் அரிய சாதனை எனப் பாராட்டினர்

கட்டி முடித்ததும் புதுமனை புகுவிழா நடத்தினர். அதற்கு வருகை தந்த நாரத முனிவன் அவர்கள் மனம் குளிர நற் செய்தி நவில வந்தான். தருமனின் தந்தை பாண்டு மாண்டு ஆண்டுகள் சில ஆகி விண்ணவருலகில் மண்ணுலகக் காட்சிகளைக் கேட்டு மகிழ்ந்தவனாய்த் தன் மகன் ஓர் இராசசூய யாகம் நடத்திப் பெரும் புகழ்படைக்க வேண்டும் என்ற ஆவல் தனக்கிருப்பதாக நாரத முனிவனிடம் கூறியதாகவும், அந்நற்செய்தி நவில அங்கு வந்ததாகவும் அவர்களிடம் நவின்றான். அருகிருந்த கன்னனும் பெருகி வரும் புகழுக்கு இராசசூய யாகம் தேவை என்பதை வற்புறுத்தினான்.

சராசந்தன் வதம்

எட்டுத் திக்கும் சென்று தன் வெற்றிக் கொடியை நாட்ட வேண்டிய பொறுப்பு அவர்களை வந்து சார்ந்தது. அதற்கு முன்னால் நீண்ட நாட்களாகவே ஒழித்துக்கட்ட விரும்பிய சராசந்தனை அழித்து முடிக்க உடற்பருத்த வீமனும் விற்பிடித்த விசயனும் கண்ணனுக்குத் துணை சென்றனர்.

சராசந்தனின் அரசவை மண்டபத்துக்கு இம் மூவரும் அந்தணர் வேடத்தில் அனுமதி கேட்காமலேயே நுழைந்தனர். அவர்களை உற்றுப்பார்த்தான். மார்பில் நூல் இருந்தும் அந்தணர்களுக்கு இருக்க வேண்டிய தொந்தியும் நைந்த தோள்களும் காணப்படவில்லை. தோள்களிலும் விரல்களிலும் தழும்புகள் இருந்தன. அவர்கள் விழுமிய வீரத்தை அலை விளம்பிக் கொண்டு இருந்தன. சரா சந்தன் அவர்கள் சரித்திரத்தை அறிய விரும்பினான்.

“அந்தணர் கோலத்தில் அவைக்களம் அணுகிய காளையரே! நீவிர் யார்” என்று கேட்டான். துவாரகை வேந்தனும் பாண்டுவின் மைந்தர்களும் “கண்ணன், வீமன், அருச்சுனன்” என்று பள்ளிப்பிள்ளைகள் போல் தம் பெயர்களை வரிசையாகக் கூறினர். வாயிலர் தடுப்பர் என்பதால் காவலை மீறி இவ்வேடத்தில் வந்ததாக அறிவித்தனர்

“கண்ணன் துவாரகையில் ஒளிந்தவன்; அருச்சுனன் இளையவன்; வீமன் அவர்களுள் தன்னோடு சமர் புரியத்தக்கவன் என்று கூறி அவனை மற்போருக்கு அழைத்தான். கற்போர் கூடிய அவையை நீங்கி நற்போர் செய்யக் கூடிய நடு இடத்தை நாடினர்.

தன் மகனை மாமன்னன் என்று மகுடம் சூட்டி விட்டுத் தான் இறப்புக்குத் துணிந்து பொறுப்பை அவனிடம் தந்து விட்டுப் புகழை விரும்பி அடுகளம் வந்து சேர்ந்தான். இரு பெரு யானைகள் மதம் கொண்டு அதம் செய்ய இயங்கியது போல இருவரும் தாக்கிக் கொண்ட னர். கட்டிப்புரண்டு மண்ணில் தள்ளி மார்பில் குத்தி அவர்கள் பெரும்சத்தம் செய்தனர். மாறிமாறி மண்ணைக் கவ்விக் கொண்டு விண்ணுக்குச் செல்லும் வழி கேட்டுப் பயணத்துக்குத் தயாராகிக் கொண்டு இருந்தனர். வீமன் அவன் உடலை இருகூறாக ஆக்கி வேறு வேறாக இட்டான். உடற் கூறுகள் இரண்டும் பசையால் ஒட்டிக் கொண்டதுபோல அவை இரண்டும் மறுபடியும் ஓர் உடம்பாக இயங்கியது. மீண்டும் போர் தொடங்கியது. வீமன் அவனை எப்படிக் கொல்வது என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தான். சாமள வண்ணனாகிய கண்ணன் புல் லொன்று எடுத்துப் பிளந்து மாறியிட்டுக் காட்டினான். பிளவுபட்ட சராசந்தனின் உடம்பு மறுமடியும் கூடவே இல்லை, அந்த மாமிசப் பிண்டத்தை அசைத்து உயிர் நீக்கிய நிலையில் வீமன் இசை கொண்டான்.

பிளந்தது மீண்டும் பிணைப்புண்டது கண்டு அனைவரும் வியப்பு அடைந்தனர். வீமனும், விசயனும் அதன் வரலாற்றைக் கண்ணனிடம் கேட்டு அறிந்தனர். அவன் அச்சராசந்தனின் பிறப்பு வரலாற்றின் சிறப்பினைக் கூறிப் பழைய ஏடுகளைப் புரட்டிக் காட்டினான்.

மகத நாட்டுப் பூபதியாக விளங்கியவன் பிருகத்ரதன் என்பவன் பிள்ளை வரம் வேண்டிப் பெரு முனிவன் கவுசிகனிடம் சென்று தன் கொள்ளை ஆசையைக் கூறினான். பிள்ளைக் கனி அமுதம் பெற அம்முனிவன் இனிய தீஞ் சுவைக் கனியாகிய மாம்பழம் ஒன்று தந்து தான் விரும்பும் மங்கைக்குக் கொடுக்குமாறு கூறினான். ஆசைக்கு உரிய நேசமும் பாசமும் உள்ள பத்தினியர் இருவருக்கும் பாதி பாதியாகப் பகிர்ந்து அளித்தான். அவர்கள் கரு உயிர்த்து உருவளித்த குழந்தையும் பப்பாதி வடிவம் பெற்றுப் பாரி னில் உதித்தது. இது அரை குறை பிறப்பு எனக் கருதி விடியுமுன் அதை ஊர்ச் சுவரைக் கடந்து அரசன் தூக்கி எறிந்தான். பிணம் தின்று நிணம் வளர்க்கும் நிசிசரியாகிய அரக்கி ஒருத்தி ஆசையுடன் எடுத்து அவற்றைப் பொருத்திப் பார்த்தாள். அவை ஒட்டிக் கொண்டன; உயிர்ப்புப் பெற்றுத் தன்னை வாழவிடு என்று வாதிடுவது போல வாய்விட்டு அரற்றியது.

அது மன்னன் மகன் என்பதால் அவ்வரக்கி அதனிடம் இரக்கமும் மதிப்பும் வைத்து அக்குழந்தையை அவ் அரசனிடம் சேர்ப்பித்து அதற்குச் சராசந்தன் என்று பெயரிடு மாறு சொல்லிச் சென்றது. சரை என்ற அரக்கி சந்து செய்வித்ததால் அக்குழந்தைக்குச் சராசந்தன் என்ற பெயர் அமைந்தது: அரக்கி தொட்ட பிள்ளையாதலின் அது இரக்கம் கெட்ட அரக்கனாக மாறித் துட்டன் என்று பெயர் எடுத்தது. அரச மகனாகியும் அசுர இயல்பு கொண்டு உலகை அவன் ஆட்டிப்படைத்தான். அவன் நிலத்துக்குச் சுமையாக விளங்கியமையால் அவனைக் குமைத்து ஒதுக்குவது தக்கது என்று துளப மாலையன் ஆகிய முகுந்தன் விவரித்து உரைத்தான்.

சிசுபாலன் வதம்

சராசந்தன் அழிந்தான். அதற்கு அடுத்து சிசுபாலன் அழிவு காத்துக் கிடந்தது; வாய்க் கொழுப்பால் அழிந்தவர்களில் இவன் வரலாறு முதல் இடம் பெறுகிறது.

இராசசூய யாக முயற்சிகள் தொடர்ந்து மேற் கொள்ளப் பட்டன. நாற்றிசையும் பாண்டவர்களும் அவர்கள் மக்களும் சென்று முரண்பாடு கொண்டவரின் படைகளை அழித்தும், அடிபணிந்தவர்களிடம் திறை பெற்றும் நவ மணிகளையும் நவநிதிகளையும் கொண்டு வந்து குவித்தனர். வீமன் கீழ்த்திசையும், சகாதேவன் தென்றல் வரும் தென்திசையும் சென்றனர்; பகைவர்களை வென்று பார் புகழத்தம் வெற்றிக் கொடிகளை நிலைநாட்டினர். சிங்களத் தீவுக்கு இடிம்பியின் மகன் கடோற்சகன் சென்று வீடணனின் வழித் தோன்றல்களைச் சந்தித்து வேண்டியதைப் பெற்று வந்து குவித்தான். சென்ற இடம் எல்லாம் வெற்றி தவிர வேறொன்றையும் கண்டிலர். தடுப்பார் இன்றி அடுபகை வென்று பீடும் பெருமையும் பெற்று ஈடு இணையற்றவராகத் திரும்பிவந்தனர்.

பொருளும் பொன்னும் மருளும் வகையில் வந்து குவிந்தன. வேள்வி நடத்தும் நாளைக் கோள் நூல்வல் லோர் குறித்துத் தந்தனர். இராசசூய யாக வேள்விக்கு நாணிவ மன்னர்களும் அழைக்கப்பட்டனர். நாரத முனி வனை அனுப்பி நாரணன் ஆகிய கண்ணபெருமானை அழைத்து வரச் செய்தனர். பராசன் மகனாகிய வியாச னும் வந்திருத்தான். அதனால் அவர்கள் வாழ்க்கையில் ஒரு திருப்பு நிலை ஏற்பட்டது.

பாரதக்கதையே தவறுகளை மிகைப்படுத்தக்கூடாது என்ற உட்பொருளைக் கொண்டதாக விளங்குகிறது. தவறு செய்து விட்டால் அதற்கு மனம் வருந்தித் தன்னை அழித்துக் கொள்ளும் அவலநிலை மானிடர்களுக்கு ஏற்படுகிறது; அது தேவை இல்லை, மனிதன் குறையுடையவன்; தவறுகள் நிகழலாம். அதற்காக யாரும் தம்மை அழித்துக் கொள்ளத் தேவையில்லை என்பது பாரதம் தரும் பாடம்.

பாஞ்சாலி பாண்டவர் ஐவர்க்கும் பத்தினி என ஏற்கப்பட்டாள்; நாரதன் இடையில் ஒரு திருத்தம் கொண்டு வந்தான். எந்த ஒற்றுமையின் காரணமாக ஐவரும் உவந்து ஒருத்தியை மணந்தார்களோ அதன் விளைவால் ஐவருக்கும் ஒற்றுமை சிதைவதற்கும் வழி உண்டு என்பதை நாரதன் உணர்த்தி ஆண்டுக்கு ஒருவர் கணவராக முறை வைத்துக் கொள்வது தக்கது என்று அறிவித்தான். அதற்கு மேல் ஒரு படி வியாசன் அமைத்துத் தருகிறான்.

அவள் யாகபத்தினியாகிய பிறகு அவள் வாழ்க்கை தனிப்பட்டது ஆகிறது. மேடையில் தருமனும் திரெளபதியும் அமர்கின்றனர். அதனால் கணவன் மனைவி என்ற பெருமை அவர்களுக்கே உரிமை ஆகிறது. அவர்கள் தலைமை பெறுகிறார்கள்; மற்றவர்கள் அவர்களை மதித்து வாழும் மனநிலை பெற வேண்டும் என்று கூறி வியாசன் மாற்றுகிறான். தாயும் தந்தையுமாக அவர்கள் போற்றி மதிக்கத்தக்கவர்கள் என்று புதிய திருப்பத்தை உண்டு பண்ணுகிறான். தம்பியரும் அதனை அமைதியாக ஏற்றுக் கொள்கின்றனர். தவறுகள் வாழ்க்கைக்குத் தடையாகக் கூடாது என்பது பாரதம் கற்பிக்கும் பாடமாகும், குந்தி கதிரவனால் கன்னனைப் பெற்றாள். அதனால் அவள் மணவாழ்வுக்குத் தகுதி அற்றவள் என்று ஒதுக்கப்பட வில்லை.

வேள்விக்கு உரிய தலைமை தருமனைச் சார்ந்தது; திரெளபதி யாகபத்தினியாக மாறினாள்; அவள் நிலை உயர்த்தப்பட்டது. ஆரம்பத்தில் அவர்கள் வாழ்க்கை சம்பிரதாயம் மீறிய வாழ்க்கை ஆக இருந்தது; மறுபடிபும் மானிட சமுதாய சம்பிரதாயங்களின் கட்டுக்குள் அவர் கள் கொண்டு வரப்பட்டனர். இதற்கு வியாசன் வருகை ஒரு திருப்பு நிலை ஏற்படுத்தியது.

யாக வேள்வி நடத்தும் இப்பெருவிழாவில் முதல் மரியாதை பெறுவதற்கு உரியவர் யார் என்ற வினா எழுப்பப்பட்டது. விழாவினை முன்னின்று நடத்தப் பூசனைக்குரிய அலைத் தலைமைக்கு யார் தகுதி பெறுகின்றனர் என்ற வினா எழுப்பப்பட்டது. குடும்பத்தின் மூத்த மகனாகிய வீடுமன் எழுந்து தலைமைப் பதவிக்கும், மதிப்புக்கும், மரியாதைக்கும், வழிபாட்டுக்கும் உரியவன் கண்ணனே என்று முன் மொழிந்து கூறினான். அதற்கு எதிர்ப்பு என்பது எழவில்லை. அந்நிலையில் அவை யோரின் அடக்கத்தைக் கண்டு ஆவேசம் கொண்ட சேது என்னும் நாட்டுக்கு அதிபதி ஆகிய சிசுபாலன் சீற்றம் கொண்டான். கண்ணனுக்கு ஏற்றம் தர மறுத்தான்.

“மன்னவர் கூடியிருக்கும் இம் மாமண்டபத்தில் பால் மணம் மாறாத கோபாலன் எப்படித் தகுதி பெறுகிறான்” என்ற வினா எழுப்பினான். சாதி அரசியலை அடிப்படையில் வைத்து நீதி கேட்டான். இடையன்; ஒருவன் எப்படி முதல்வன் ஆக முடியும் என்று கேட்டான்; மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்து ‘கோனார்’ என்ற பெயரைப் பெறுவதாலேயே அவன் “கோன்” ஆக எப்படி ஆக முடியும்? கோபாலன் எப்படிப் பூபாலன் ஆகலாம்?” என்று கேட்டான். “கோபியரை அவன் குழல் ஊதி மயக்கலாம்; பாபியரைத் தான் பரமன் என்று கூறிப் பெருமைப்பட வணங்கச் செய்யலாம். கோவியல் படைத்த கோவேந்தரை அவன் நா இயல் மயக்க முடியாது. எத்தகுதி பற்றி இக் கிழட்டுத் தலைவன் அவன் பெயரை எடுத்து ஒதினான்” என்று கேட்டான்.

அறிவும் சால்பும் மிக்க கண்ணன் பொறுமைக்கு ஓர் வரம்பாக அன்று நடந்து கொண்டான்; நூலில் அச்சுப் பிழை பொறுக்கும் வாசகர்களைப் போல அவன் நச்சுச் சொற்களைப் பொறுத்துக் கொண்டான். நூறு பிழை செய்தாலும் நூலோர் பொறுமை காட்டுதல் அவர் இயல்பு என்பதற்கேற்ப அவன் பேசுவதைத் தடுக்கவில்லை; ஏசுவதிலும் ஒரு கலை இருக்கிறது என்பதை ரசிப்பவன் போல அவனைத் தடை செய்யவில்லை. திட்டுவதில் அவன் எட்டும் உயரம் காண விழைந்தான். நூல் அறுந்த காற்றாடி உயரப் பறந்தது.

கண்ணன் மீது அவன் தொடர்ந்து குற்றங்கள் சாற்றி னான்.

யானை கொழுத்தால் தானே தன் மீது புழுதியைத் தூற்றிக்கொள்ளும் என்பர். இவன் மற்றவர் மீது புழுதி வாரி இறைத்தான்.

அவன் கூறிய வசை மொழிகள்

“பிறந்தது எட்டாவது; அதனாலேயே அவன் பிற்பட்டவன் ஆகிறான். இவனுக்கு முன் பிறந்தவர்களை வாழ வைக்காமல் வெட்டுக்கு இரையாக்கிக் கட்டோடு சாக வழி செய்தான். இவன் பிறப்பே அவல வரலாறு கொண்டது.”

“இவன் பிறந்தது மாளிகை அல்ல; பசுவின் கொட்டிலாக இருந்தாலும் இவனைப் பரமன் என்று கூறலாம். அதுவும் இல்லை. கம்சனின் சிறைக்கட்டில் பிறந்தவன்; சிறையில் பிறந்தவன் குற்றவாளிதானே; தாயையும் தந்தையையும் கண் திறந்து கண்டதும் சிறையில்தானே"

“இவன் தந்தையும் தாயும் சிறைக் கைதிகள் என்பதை மறுக்க முடியுமா?”

“பிறப்பு என்பதிலும் சிறப்பு இல்லை; வளர்ப்பில்” என்ன உயர்வு கண்டான்?”

“ஏழை ஆய்ச்சியர் எட்டாத உயரத்தில் உறிகளில் வைத்த தயிர் பால் வெண்ணெயைத் திருடித் தின்றான். கொள்ளை அடிப்பதில் கூட்டுச் சேர்த்துக்கொண்டு ஆயர் சிறுவர்களையும் கள்ளத்தனம் செய்யத் துணை தேடினான்.”

“பெண்கள் தெருவில் அச்சமின்றி நடக்க முடிந்ததா? பேதைச் சிறுமியர்கள் பின்னல்களைப் பின்னால் இருந்து இழுத்துச் சிறு குறும்புகள் செய்து அவர்கள் தன்னை விரும்புமாறு நடந்துகொண்டான். கூந்தலில் பூ வைக்க ஆசை உண்டா? அவன் கை வைத்து இழுப்பது எப்படி நியாயம் ஆகும்?”

“கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவள வாய் தான் தித்தித்திருக்குமோ என்று அவன் வாய்ச்சொற் களுக்கு அவர்களை ஏங்கித் தவிக்குமாறு செய்தான். உரலில் கட்டி வைத்தால் அதன் உயரம் கெட அதை இழுத்துச் சென்று மரங்களிடை மோத வைத்து அம்மரங்களையே சாய்த்துவிட்டான். பாலைத் தர வந்த தாய் பூதகியைப் பாலைப் பருகாமல் காதகி என்று காட்ட அவளின் உயிரையே பருகி விட்டானே! இவன் கொடுமைக்கு இஃது ஒர் எடுத்துக்காட்டு ஆகும்.”

“குளித்துக் கரை ஏறக் காத்திருந்த கன்னியரின் சேலைகளை ஒளித்து வைத்து அவர்கள் நாணத்தின் கரையை ஏறும்படி செய்தவன்தானே! இது அவன் வாழ்க்கையில் ஏற்பட்ட கறையாகாதோ? அசுரர்களை அடையாளம் கண்டு கன்று என்றும் கருதாமல் விளாமரம் என்றும் கொள்ளாமல் மோத வைத்து அவர்களைச் சாடி வதைத் தானே! இது எப்படி நியாயம் ஆகும்? மாமனை மரியாதையாக நடத்த வேண்டிய அவன் அவன் மார்பில் ஏறி வீமனைப் போலக் குத்திக் கொன்றானே இஃது எப்படி அடுக்கும்? பாம்பைக் கண்டு நடுங்க வேண்டிய ஒருவன் அதில் ஏறி நர்த்தனம் செய்தானே இதை யாராவது செய்வார்களா? மழை வந்தால் குடை பிடிக்காமல் அதற் காக ஒரு மலையையே தூக்கிப் பிடிப்பது இயற்கையை அதிரவைப்பது ஆகாதோ? குழல்ஊதிப் பசுக்களை அழைக் கலாம். அதைக் கொண்டு கோபியரை எப்படி அவன் மயக்கலாம்?”

“நாட்டிலே கண்ணனின் புகழிலே மயங்கிய நாட்டியக் கலையே அவனைச் சுற்றி இயங்குகிறது அவனால் பாட்டியல் கலைக்கும் நாட்டியக் கலைக்கும் இழுக்கு உண்டாகிறது அல்லவா? கருப்பு நிறத்தில் பிறந்தும் கன்னியரை விருப்புக்கொள்ளுமாறு மயக்கினான் என்றால் அதனை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்? உறவு முறையால் உருக்கு என்ற பெண்மணியை எனக்கு என்று நிச்சயித்த நிலையில் இவன் அவள் நெஞ்சை உருக்கி அவன் பின் அவளை இழுத்து மணம் செய்து கொண்டது எப் படிப் பொருந்தும்? அவனைத் தலைமைக்குத் தகுதியாக்கினால் பாண்டவர் சகாயனாக இறுதி வரை நின்று பாடு படுவான். அதனால் துரியன் நூறுபேர் வேறாகப் பிரிக்கப் படுவர் அறிவு சான்ற துரோன ன் கிருபன் முதலிய ஆசிரியர்கள் இருக்கிறார்கள். உறவு சான்ற விடுமன், விதுரன் முதலியவர்களும் இருக்கிறார்கள். கண்ணிழந்து இவர்கள் வாழ்வுக்காக மண் மகிழ ஆளும் உத்தமன் திருதராட்டிரன் இருக்கிறான். இவர்களை எல்லாம் விட்டுவிட்டு இந்தச் சாமான்ய மக்கள் தலைவன் சாமள வண்ணனை எப்படி முதல் மரியாதைக்கு உரியவன் என்று பேச முடிந் தது என்று ஏசிக்கொண்டே சென்றான்.

பொறுமைக்கு உரிய பூமி சில சமயம் எரிமலையையும் கக்குகிறது. சலனமற்ற கடலில் புயல் வீகி அலைகளை எழுப்புகிறது. அதே போல்தான் கண்ணனும் பொறுத்துப் பார்த்தான். நூறு பிழை வரை காத்திருந்தான். நூற்று ஒன்று எட்டிப் பிடிக்கிறது. சென்சுயரி அடித்ததும் கர கோஷம் எழுவது இயற்கை; இங்கே நூறு எட்டியதும் அவன் சிரச்சேதம் ஏற்பட்டது. கண்ணனின் கையாழி சதிர் ஆடியது. கதிர் எனச் சென்று அவன் தலையைத் தனிப்படுத்தியது.

இராச சூய யாகம் இரண்டு கொடியவர்களின் உயிரை வாங்கியது: ஒன்று சராசந்தன்; மற்றொருவன் சிசுபாலன். கண்ணனின் காதல் விளையாட்டுக்களைக் கேட்ட உலகம் அவன் வீர விளையாட்டைக் காண முடிந்தது. அதற்குச் சிசுபாலன் வாய்ப்பளித்தான்.

தவறு செய்தவனை ஏன் உடனே தண்டிக்கக் கூடாது என்ற கேள்வி எழும்புவது இயற்கை தான்; உடனுக்குடன் தண்டிப்பதில் பொருளே இல்லாமல் போய் விடுகிறது; அதற்குத் தண்டனை என்ற பெயரே வழங்குவதில்லை. கொலை செய்தவன் தலை வாங்குவதாக இருந்தாலும் வழக்கு மன்றத்தில் விசாரித்துப் பின் தான் தண்டனை தரப்படுகிறது. அதே போலத்தான் கண்ணனும் தப்புகள் முழுவதும் செய்ய விட்டுப் பின் தண்டித்தான் என்று தெரி கிறது. முளையிலே களையாமல் முள் மரத்தை முற்றிய பிறகு களைந்தது ஏன்? என்ற அய்யத்துக்கு விடை கிடைத்தது. வியாசன் எழுந்தான்; அதன் காரணங்களை விளக்கினான்.

இந்தத் துயரங்களுக்கு எல்லாம் காரணம் சினத்தின்முழு வடிவம் ஆகிய துருவாசன் தான் என்று விளக்கப்பட்டது. அவன்வைகுந்தம் அடைந்தான். சேவகம் வேலை செய்யும் ஏவலை உடைய காவலாளிகள் தம்மைக்குட்டித் தெய்வங்கள் என்று மதித்துக் கொள்கின்றனர். உள்ளே செல்ல அனுமதி தேவை என்றனர் அறிவு மிகுதி படைத்த முனிவன் தன்னை அவமதித்ததாக எடுத்துக் கொண்டான்.

“நான் யார் என்பது தெரியுமா?” என்றான்.

“பாரத ரத்தினராக இருக்கலாம் மாரத வித்தகராக இருக்கலாம். யாராக இருந்தாலும் உங்கள் பெயரைச் சொன்னால் அனுமதி பெற்று வருவோம்” என்றனர்.

“இந்த ஒழுங்கு, நியதி, வரிசை, அனுமதி எல்லாம் கீழே இந்த மக்கள் பின்பற்றும் கட்டுகள். தேவர் உலகில் ஒழுங்கை எதிர்பார்க்கிறவர்கள் இங்கு இருக்கத் தகுதி இல்லை” என்றான் துருவாசன்.

காவலாளிகள், “அதனால் தேவரினும் மாந்தரே உயர்ந்தவர் என்று தெரிகிறது” என்றனர்.

“மக்களை மதிக்கிறீர் நீர்; பூமியிற் சென்று மானிடனாகப் பிறந்து மா இடர் அனுபவிப்பீராக” என்று துருவாசன் சாபமிட்டான்.

பிறப்பு என்றாலே அஞ்சிப் பரபரப்பு அடைந்தனர்.

நிலை கெட்ட பிழைப்புக்கு அஞ்சி அலைவுற்றனர்; திருமால் திருமகளிடம் சொல்லிவிட்டு வாசலுக்கு வெளியே வந்து இந்தக் குழப்பத்தைக் கவனித்தார்.

“துருவாசரா? இன்று நீங்கள் விழித்த முகம் சரி இல்லை” என்றார்.

“ இவர் முகத்தில்தான் விழித்தோம்” என்றார்கள் அத்துவாரபாலகர்கள். “வைகுந்த வாசலை விட்டு விட்டு ரேஷன் கடை அரிசி வாங்கும் நேஷனில் பிறக்கச் சொல்கிறார்” என்றார்கள். தம்மைப் பார்த்தபின் தான் தலைவரைப்பார்க்க முடியும்?” என்ற ஆணவம் அகன்றது என்றனர்.

“ஏழு பிறப்பு அவர்கள் எடுக்க வேண்டும்” என்றான் துருவாசன்.

“பிறப்பே கூடாது என்று பிரசாரம் செய்யும் பூவுலகில் எங்களை வரவேற்கமாட்டார்கள்” என்றனர். “பிறப்பைக் குறைக்க முடியுமா” என்று கேட்டனர்.

“ஏழு பிறப்புப் பிறந்து அப்பாவியாக வாழ்ந்து எப்பாவமும் செய்யாமல் இறுதியில் இறைவனடி சேர விரும்புகிறீரா? சுத்தியும் கத்தியுமாகச் செயல்பட்டுப் புரட்சிக்காரனாக மாறி மூன்று பிறவிகளில் உம் கதையை முடித்துக் கொள்ள விரும்புகிறீரா?” என்று கேட்டான் துருவாசன்.

“ஆளும் கட்சியில் இருந்து கைதூக்குவதைவிட எதிர்க் கட்சியில் இருந்து கை நீட்டுவதே மேல் என்று தம் முடிவைத் தெரிவித்தனர். இரணியன் இரணியாட்சகன்; இராவணன் கும்பகருணன் என இரட்டையராக இயங்கியவர் இப்பிறவியில் கம்சனும் சிசுபாலனுமாக இணைந்து இந்த உலகைத் துவம்சம் செய்யப் பிறந்தனர் என்றான். “இனி அவர்கள் தேர்தலில் நிற்கத் தேவையில்லை; காவலர்களாக மறுபடியும் வைகுந்தத்தின் படியில் ஏவல் செய்து கொண்டு நிற்பர்” என்றான் வியாசன்.

“பிறப்பு வரலாறு புரிகிறது! கண்ணன் ஏன் இப்பிறவியில் சிசுபாலனை அழிக்க வேண்டும்?” என்ற வினா எழுப்பப்பட்டது.

“சிசுபாலன் பிறக்கும் போது மூன்று கண்களும் நான்கு கைகளுமாகப் பிறந்தான். அவன் தாய்க்கு அது கவலையாகி விட்டது. தெய்வங்களுக்குத்தான் இந்த மிகைப்பட்ட அவயங்கள் அமைதல் உண்டு. மானுடம் ஆயிற்றே: அவன் எப்படி வாழ்வான் என்ற கவலை வாட்டியது. அவயக் குறைவு ஏற்படலாம்; மிகுதியைத் தாங்கிக் கொள்ள முடியாது. ஐங்கரன், நான்முகன், யானைமுகன், ஆறுமுகன் முக்கண்ணன் இவர்கள் மானிடப் பிறவிகள் அல்லர்; பாவம்! தெய்வங்கள் எவ்வாறு தொல்லைப் பட்டிருப்பார்கள்; புகழ்ச்சி என்று பேசுவது சுமையாக அமைந்துவிடுகின்றது.”

“சிசுபாலன் கண்ணனின் அத்தை மகன் என்பதால் அவனை ஆசையோடு மடி மீது வைத்துக் கொண்டான். அவன் விகார வடிவம் நீங்கி சுவீகாரம் கொள்ளத்தக்க அழகனாக மாறினான்.”

“அதற்கு முன் அசரீரி சொல்லி இருந்தது. எவன் அவனை எடுக்கிறானோ எவன் அணைப்பால் விகார வடிவம் மாறுகிறதோ அவன் கையால்தான் அவனுக்கு மரணமும் நேரும் என்று தெரிவித்திருந்தது.”

“கண்ணன்தான் அவனுக்கு இயமனாக மாறுவான் என்பது அறிந்து அவன் அன்னைக்கு மனநிறைவு ஏற்பட்டது. கெஞ்சி முறையிட்டு அவனைக் கொல்லாமல் இருக்கக் கேட்டுக் கொண்டாள்.”

“கண்ணா! அவனை நூறுபிழை செய்தாலும் மன்னிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.”

“கண்ணனும் நூறு பிழை செய்தால் பொறுத்துக் கொள்வதாக வாக்குறுதி தந்திருக்கிறான். அதனால் தான் இந்தப் பொறுமை” என்று கூறப்பட்டது.

இருவருக்கும் மற்றொரு போட்டி ஏற்பட்டு இருந்தது என்று விளக்கப்பட்டது.

“விதர்ப்ப தேசத்து அரசன் பீஷ்மகன் என்பவன் தன் மகளைக் கண்ணனுக்குத் தர விரும்பினான்; அவளும் அவனையே மணப்பது என்று உறுதி கொண்டிருந்தாள்! அவன் தமையன் ருக்குமன் என்பவன் அவளைச் சிசுபால னுக்குக் கட்டி வைக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்தி ருந்தான். மண நாள் அன்று அவள் தப்பித்துக் கொள்ள விரும்பினாள். கண்ணனும் அவள் உள்ளம் தன்பால் என்பது அறிந்து தேர் கொண்டு அவளை ஏற்றிக் கொண்டு சென்று விட்டான். சிசுபாலன் ஏமாற்றம் அடைந்தான். அந்தப் பகையும் சிசுபாலனின் கோபத்துக் குக் காரணமாக இருந்தது என்று கூறப்பட்டது.”

சிசுபாலன் வாழ்வு முடிந்தது. கண்ணன் முதல் மரி யாதை பெறுவதற்கும் தலைமை ஏற்பதற்கும் எந்தத்தடை யும் ஏற்படவில்லை.

கண்ணனுக்குச் சிறப்பு வழிபாடும் பூசனையும் நடந் தன. தருமனும் திரெளபதியும் அவன் கால் தொட்டு வணங்கினர். வேள்வித் தீயின் முன் சாத்திரம் கற்ற ஆசான் மந்திரம் சொல்லத் தூய ஆடைகள் உடுத்திக் கொண்டு வேய்ங்குழல் கண்ணனின் வாழ்த்தோடு வேள் வித் தவிசில் உமையொரு பாகனைப் போல இடம் மாறி அமர்ந்தனர். வலம் மடவாளும் இடம் மணாளனும் ஆக அததவிசில் இருந்தனர். இது ஒரு மணவிழாப்போல வாழ்த்தொலியோடு நடைபெற்றது

வந்த விருந்தினரை வரவேற்று உபசரித்துப் பாக்கும் வெற்றிலையும் தரும் பணி பற்குணனிடமும், வீமனிடமும் நம்பி ஒப்புவிக்கப்பட்டன. ஈகை என்பதற்கு வாகை சூடிய கன்னனிடம் ஈதல் பொறுப்பு ஒப்புவிக்கப்பட்டது. கொடுத்துச் சிவந்தகைகள் அவனுடையவை; இல்லைஎன்ற சொல்லுக்கு அவன் அகராதியில் இடம் இல்லை. அதே போலக் கணக்கு வழக்கு, பொருள் காப்பு ஆகிய பொருளாளர் பதவி செல்வக் கோமான் என்பதால் அரவு உயர்த்தோன் ஆகிய துரியனிடம் ஒப்புவிக்கப்பட்டது.

குரு குலத்துக்குப் பெருமை தேடித்தந்த தருமன் மா மன்னன் என்ற புகழுக்கு உரியவன் ஆனான். அரவக் கொடியோன் ஆகிய துரியனும் அவன் உறவினரும் தருமனிடம் விடை பெற்றுப் பின் அத்தினாபுரம் நோக்கிச் சென்றனர். திரெளபதியின் தந்தை துகுபதனும், விராட அரசனும் தத்தம் பதிகளுக்குப் போந்தனர்; சல்லியன் முதலிய பெருநில மன்னர்கள் தத்தம் பதிகளை அடைந்தனர்; தருமன் தன் தம்பியரின் துணையோடு நாட்டை நல்லபடி ஆண்டு நற்புகழ் பெற்றான்; கண்ணனும் அனைவரையும் வாழ்த்திவிட்டுத் துவாரகையை அடைந்தான்.