கிரிக்கெட் ஆட்டத்தின் கதை/ஆடையும், அணி முறைகளும்
9. ஆடையும் அணிமுறைகளும்
'ஆட்டமும் தொடக்கமும், அடித்தாடும் எல்லைக்கோடு என்ற பகுதிகளுக்குரிய விளக்கங்கள், பந்தாடும் தரையின் வரலாற்றுடன் ஒன்றிப்போனதென்பதால், இவற்றிற்கான விளக்கங்களை, பந்தாடும் தரைப்பகுதியின் விளக்கத்திலேயே படித்துக் கொள்ளவும்.
இனி, ஆட்டக்காரர்களின் ஆடையும் அணிகலனும் காலத்திற்கேற்றவாறு எவ்வாறு மாற்றம் பெற்று மெருகேறி வந்தன எனும் விவரங்களைத் தொடர்ந்து காண்போம்.
இங்கிலாந்து நாடு குளிர் பிரதேசம் என்பதால், தங்கள் தேகத்தை சூடுபடுத்திக்கொள்வதற்காக, நாள் முழுவதும் விளையாடுகின்ற விளையாட்டாக, கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்து இங்கிலாந்து நாட்டினர் விளையாடி மகிழ்ந்தார்கள் என்பதாக, கிரிக்கெட் பற்றிக் குறிப்பிடும்போது பலர் குறிப்பிடுவார்கள்.
சூரியக் குளியல் (Sun Bath) என்பதாக, ஒரு சடங்கே நிகழும் அங்கே. முடியாதவர்கள் இதுபோல் வீட்டு மாடிகளில் சூரிய வெளிச்சத்தில் தேகத்தில் வெப்பம் ஏற்றிக் கொள்ள, வாய்ப்பும் வசதியும், உடல் திறமும் நிறைந்தவர்கள் ஓடி ஆடி, தங்கள் தேகத்தை சூடுபடுத்தி, குளிரை விரட்டிக் கொண்டார்கள் என்றும் குறிப்பிட்டுக் காட்டுவார்கள்.
நமது நாட்டில் அல்லது ஒட்டப் பந்தயங்களில் அணிந்து கொள்கின்ற அரைக் கால்சட்டை, கையில்லாத பனியன் போல, அதுவும் தவிர, வேறுபல முக்கிய விளையாட்டுக்களில் இடம் பெற்ற ஆடைகள் போல. கிரிக்கெட் ஆட்டத்தில் ஆடை இல்லாது போயிற்று.
முதல் காரணம்-நாள் முழுதும் தொடர்ந்து ஆடுகின்ற விளையாட்டாக அமைந்திருந்ததால், உடலுக்குப் பாதுகாப்பான உடை தேவையாக இருந்தது. என்னதான் விளையாடினாலும், குளிரிலிருந்து தப்பிப் போக முடியுமா!
அதனால், உடல் முழுவதையும் மூடி மறைக்கின்ற, குளிரிலிருந்து காத்துக்கொள்கின்ற முழுக்கால்சட்டை, முழுக்கை சட்டை, தலைக்குத் தொப்பி என்பதாக அணிந்து கொண்டு ஆடினார்கள்.
அடுத்தாக, ஆட்டத்தில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் பிரபுக் குடும்பத்தினர் அரச பரம்பரையினர் . வசதி படைத்தவர்கள், இவர்கள் எல்லோரும் எப்படி இருப்பார்கள்! வசதிக்காகத்தான் விளையாட்டே தவிர, விளையாட்டுக்காக வாழ்க்கை முறையை, வசதியை மாற்றிக் கொள்வார்களா! அவர்கள் அணிந்திருந்த உடையையே சற்று ஏற்றி இறக்கி, ஆடி மகிழ்ந்திருக்கின்றார்கள். அவ்வளவுதான்.
கிரிக்கெட் நன்கு வளர்கின்ற காலத்திலிருந்தே, ஆடைபற்றி அக்கறையை யாரும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. இயற்கையான அவர்களது முழுக்கால் சட்டை முழுக்கை சட்டை, தலைக்குத் தொப்பி என்பதாகவே அமைந்து விட்டிருந்தது.
அதன் பின்னர், ஆட்டத்தில் வளர்ச்சியும், மக்களிடையே ஆர்வமும் எழுச்சியும் பெற்றுக்கொண்டு, அந்த நிலையில் ஆட்டக்காரர்களின் ஆடைகள் சற்று மாற்றம் பெறத் தொடங்கின.
18-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஆடிய ஆட்டக்காரர் கள் மூன்று முனையாயிருக்கின்ற தலைத் தொப்பியை அணிந்திருந்தனர். அணிந்திருந்த சட்டைக்கு மேல், கையில்லாத வெள்ளைச் சட்டையை (Vest) போட்டுக்கொண்டு, போட்டிருந்த முழுக்கால் சட்டையில் முழங்கால் வரை 'ஸ்டாக்கிங்ஸ்' போட்டு இழுத்து, குதிரை சவாரி செய்பவர்கள் போன்ற தோரணையில் ஆடினர். அவர்கள் இறுக்கும் கயிற்றால் முடியப்பெற்ற காலணியை அணிந்தும் ஆடினர். இவ்வாறு முதல் தர தோற்றமான ஆடை அலங்காரம், கிரிக்கெட்டில் தலைகாட்டத் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, ஹேம்பிள்டன் குழுவைச் சேர்ந்தவர்கள், தாங்கள் தலையில் அணிந்திருந்த தொப்பியை சுற்றிலும், தங்கச் சரிகை அல்லது வெள்ளிச் சரிகையை தைத்து. தங்கள் தனித்தன்மையை பறைசாற்றிக் கொண்டனர்.
அதே ஹேம்பிள்டன் சங்கத்தைச் சேர்ந்த மற்றொரு குழுவினர், நீலநிறக் கோட்டினை அணிந்து, அதற்கு நீலநிற வெல்வெட் காலரை அணிந்து, தாங்கள் அணிந்திருந்த கோட்பித்தான்களில் CC என்ற எழுத்துக்களையும் எழுதி, தங்கள் சீருடையைக் காட்டி வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்.
அதைத்தொடர்ந்து, 18ம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் ஆடிய ஆட்டக்காரர்களின் ஆசையும் எண்ணமும், இன்னும் சற்று முன்னேறத் தொடங்கியது. குதிரைப் பந்தயத்தில் குதிரை ஒட்டும் குதிரைக்காரர்களான 'ஜாக்கி' அணிகின்ற தலைக்குல்லாய் போல அணிய ஆசைப்பட்டு, அணிந்து கொண்டு ஆடினார்கள். அதன்பின், தலையில் உயரமான குல்லாய்களை (High Hat) அணிந்தார்கள். வைக்கோலினாலும் ஆன குல்லாய்களையும் (Straw Hat) அணிந்தும் ஆடி மகிழ்ந்தனர்.
வேட்டைக்குப் போகின்றவர் அணிவது போல, முழங்கால் வரை ஸ்டாக்கிங்ஸ் அணிந்து கொண்டிருந்த ஆடை அணி முறை, மாற்றம் பெறத்தொடங்கியது. அதில் சங்கடத்தையும். ஆடமுடியாத, ஒட முடியாத வசதியின்மையையும் உணர்ந்து, நீண்ட முழுக்கால் சட்டையை அணிந்தார்கள். அதில், இரும்பாலான பெரிய பக்கில் (Buckle) இருப்பது போன்று. இடைவாரும் அணிந்து கொண்டனர். விரைவாக ஆட்டம் வளர்ந்து கொண்டு வந்ததற்கேற்ப வசதியாக, ஆடையில் மாற்றம் ஏற்பட்டு, இடுப்பில் சரிவரப் பிடிப்புடன் இருக்கும் வண்ணம் இடைவாரும், (Belt) இடம் பெற்றது.
இதற்கிடையில், காலணிகளும் (Shoes) அடிக்கடி மாற்றம் பெற்றுக்கொண்டே வந்தன. ஏறத்தாழ 1860-ம் ஆண்டு காலத்தில், மாநிறமுள்ள (Brown) காலணிகளும், சில நேரங்களில் வெண்ணிற காலணிகளும் ஆட்டக்காரர்களால் விரும்பி அணியப்பட்டன.
ஆனால் 1850-ம் ஆண்டுக்குப் பிறகு, வெண்ணிற மான் தோலால் (Buck Skin) ஆனக் காலணிகளை அணிந்து ஆடும் பழக்கமே நடைமுறை மரபு வழக்கமாக அமைந்திருந்தது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றார்கள்.
கிரிக்கெட் சங்கத்தைச் சோந்த ஆட்டக்காரர்கள் நீண்ட அளவுள்ளதாக, முழுக்கால் சட்டை அணிந்து கொண்டிருந்த பொழுது, பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆட்டக்காரர்கள், வண்ண வண்ணக் குல்லாய்களை விரும்பி அணிந்து ஆடி வந்தனர். அந்தப் பழக்கம் இன்னொரு பழக்கத்தையும் அழைத்து வந்தது.
வண்ண வண்ண குல்லாய்கள் அணிந்தது போலவே, வண்ண வண்ண மேலுடைகளையும் அணிந்து ஆடும் பழக்கம், 19-ம் நூற்றாண்டில் பெருகி வந்தது.
ஆனாலும் , 19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்டக் காரர்கள் , வெள்ளை நிற உடைகளையே அணிந்திடவேண்டும் என்ற மரபு எப்படியோ எழுந்து, அந்த ஆடை முறையே இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.
கீழே காணும் படத்தில், ஆடை மாறி வந்த விவரத்தின் தொகுப்பினை நீங்கள் காணலாம்.
அவ்வப்போது மாறி வந்த உடையின் விளக்கத்தை இனி காண்போம். படங்களை இடமிருந்து வலமாகப் பார்க்கவும்.
கிரிக்கெட் கிராமத்தில் தான் தோற்றம் பெற்றது என்பதற்கேற்ப முதல்படம் தோற்றமளிக்கிறது.
இரண்டாவது படம் , வசதியுள்ளவர்கள் தான் ஆட்டக்காரர்கள் என்பது போல, நீண்ட கோட்டும், முழங்கால் வரை ஸ்டாக்கிங்ஸ் வந்து முழுக்கால் சட்டையை மறைக்கின்ற தன்மையிலும், தலைக்குல்லாய் மும்முனை உள்ளது போன்ற அமைப்பிலும் இருப்பதை காணலாம்.
அடுத்து, முழுக்கால் சட்டை முன்னர் போலவே தொடர்ந்தாலும், மேல் சட்டை மாறி, கையில்லாத மேல் சட்டையும் இடம் பெற்று வந்திருப்பதையும் அறியலாம்.
அடுத்து, ஐந்தாவது படத்தில் , நீளத் தொப்பியிருப்பதைப் பாருங்கள். அதுவே அலங்காரம் என்று ஆசையுடன் அணிந்து ஆடியவிதத்தை முன்பக்கத்தில் நீங்கள் படித்திருப்பீர்கள்.
இவ்வாறு தொப்பியும், மேல் சட்டையும் மாறி மாறி வந்திருப்பதைத்தான் மேலே உள்ள படங்கள் விளக்குகின்றன.