உள்ளடக்கத்துக்குச் செல்

விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/இதயத் துடிப்பில் இருக்கிறது இரகசியம்

விக்கிமூலம் இலிருந்து


15. இதயத் துடிப்பில் இருக்கிறது
இரகசியம்!

நீண்ட தூரம் ஓட்டப்பந்தயத்தில் ஓடுகின்ற எல்லா ஓட்டக்காரர்களுமே வெற்றிபெற முடிவதில்லை. குறிப்பிட்ட ஒரு சில ஓட்டக்காரர்களே தொடர்ந்து வெற்றி பெறுகின்றார்கள. அதிலும் பத்துப் பனிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்தாற்போல் ஓடி வெற்றிமாலை சூட்டிக் கொள்கின்றார்கள். அவர்கள் வயதுகூட, முதுமைகூட ஒன்றும் செய்துவிட முடிவதில்லை.

அதன் இரகசியம் இதயத் துடிப்பில்தான் இருக்கிறது. சாதாரண ஒரு மனிதனின் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 72 முறை. இதுபோன்ற துடிப்புள்ள இதயத்தைக் கொண்டவர்கள் எந்தக்காலத்திலும் நெடுந்துார ஓட்டத்தில் வெற்றிபெறவே முடியாது. ஏனெனில் அது சாதாரண இதயம்தான். சக்தி வாய்ந்த இதயமல்ல.

ஒருமுறை சுருங்கி விரிகின்ற இதயம், உடல் முழுவதற்கும் தேவையான இரத்தத்தைப் பீறிட்டுப் பாய்ச்சுகின்ற வலிமையுடையதாக இருக்கவேண்டும். அப்படி உள்ள இதயத்தின் துடிப்பு, நிமிடம் ஒன்றுக்கு மிகக் குறைவாகவே இருக்கும்.

இங்கே கொடுத்திருக்கின்ற வீரர்களின் பட்டியலையும் அவர்கள் இதயத் துடிப்பின் எண்ணிக்கையையும் பாருங்கள். பத்து தங்கப் பதக்கத்திற்குமேல் ஒலிம்பிக் பந்தயங்களில் நெடுந்துாரப் போட்டியில் வென்ற பாவோநர்மிக்கு 40 துடிப்புக்கள். எவ்வளவு கடுமையான போட்டியில் ஈடுபட்டாலும், அவரது துடிப்பு நிமிடத்திற்கு 50க்குமேல் போகாது என்று கணக்கிட்டிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் அதேபோல் அமெரிக்க ஒட்டக்காரர்

லெஸ்மேக்மிட்சல் - 43 தடவை.

ஜில்டாப்ஸ் என்பவருக்கு 48 தடவை.

ஜிம் ரேசர்டி என்பவருக்கு 55,

கிளென்கன்னிங்காம் என்பவருக்கு 48,

கண்டர்ஹேக் என்பவருக்கு 50.

இப்படி இதயத் துடிப்புள்ளவர்கள்தான் வெற்றி பெறமுடியும் என்றால், அவர்களுக்கு எப்படி இந்த இதயம் கிடைத்தது? கடுமையான, உண்மையான, நேர்மையான மனம் ஈடுபட்ட ஓட்டப் பயிற்சியினால் தான். பயிற்சியும் முயற்சியும்தான் ஒருவரை உயர்த்தும், வாழ்வாங்கு வாழவைக்கும்!