விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/முயன்றால் நிச்சயம் முடியும்

விக்கிமூலம் இலிருந்து

21. முயன்றால் நிச்சயம் முடியும்!

சதுரங்க ஆட்டம் ஆடுவதென்பது மிகவும் சிரமமான காரியம்தான். அதே நினைவுடன், அங்குமிங்கும் திரிகின்ற மனதை அடக்கி, உடலைக் கட்டுப்படுத்தி, ஒன்றுபட்ட மனதுடன் சிந்தித்து ஆடவேண்டும் என்பது யாவரும் அறிந்ததே!

தன்முன்னால் அமர்ந்து ஆடுகின்ற எதிராட்டக் காரருக்கே இந்த நிலை என்றால், இங்கே ஒரு ஆட்டக்காரர் 560 ஆட்டக்காரர்களை எதிர்த்தாற் போல் உட்கார வைத்துக் கொண்டு. அத்தனைபேர்களுடனும் போட்டியிட்டுசதுரங்கம் ஆடியிருக்கிறாரே! அது எப்படி அவரால் ஆடமுடிந்தது!

ஆச்சரியமாக இல்லையா ஸ்விட்சர்லாந்து நாட்டு மாணவனான அந்த சதுரங்க விளையாட்டு வீரனின் பெயர் வெர்னர் ஹக் (Werner Hug) என்பதாகும். 27 வயது நிரம்பிய அந்த இளைஞன் ஏற்கனவே ஒருமுறை இளையோர் சதுரங்கப் போட்டியில் (Junior) உலக வெற்றி வீரனாக வந்தவன். தனது திறமையை விளக்கும் வகையில்தான் அந்தப்போட்டியில் கலந்து கொண்டான்.

லூசர்னி என்னும் இடத்தில் அந்தப்போட்டி நடைபெற்றது. வரிசை வரிசையாக 560 சதுரங்க விளையாட்டு வீரர்கள் அமர்ந்து ஆட ஆரம்பித்தனர். ஒவ்வொரு மேஜைக்கும் முன்னே போய்நின்று ஒரு காயை நகர்த்திவிட்டு அடுத்த மேஜைக்கு ஆடப் போய்விடுவான். அதற்கு வெர்னர் ஹக் எடுத்துக்கொண்ட நேரம் ஐந்தே வினாடிகள்தான்.

இப்படி ஓடி ஓடி அத்தனை பேருடனும் ஆடியபிறகு அத்தனை ஆட்டங்களின் முடிவுகள் எப்படி இருந்தன தெரியுமா? 560 ஆட்டங்களில் 385 பேர்களை வென்றான். 126ஆட்டங்களை வெற்றிதோல்வியின்றி சமமாக முடித்தான். 49 ஆட்டங்களில் தோற்றான். அந்த 27 வயது வீரன் ஆடிய நேரம் எவ்வளவு தெரியுமா? 25 மணிநேரம். இவ்வளவு நேரம் இத்தனைப் பேர்களுடனும் நினைவாற்றலுடன் ஆடி விளையாடியது ஓர் உலக சாதனையாகி விட்டது.

ஆமாம்! 560 பேர்களுடன் 25 மணி நேரம் ஆடி 5 வினாடிக்கு ஒருமுறை ஒரு மேஜைக்குச் சென்று ஆடியபோது நடந்த தூரம் 30 கிலோ மீட்டர் என்றும் கணக்கிட்டிருக்கின்றார்கள். இதுவும் புதிய சாதனைதானே!

இதற்கும் முன்னர் ஒரு உலகசாதனை இருந்தது. அவர் செக்கோஸ்லோவோகியா நாட்டு வீரர் விளாஸ் டிமில்ஹொர்ட் ஆவர். 550 பேர்களை எதிர்த்து ஆடினார். அந்தசாதனையைத்தான் வெர்னர் ஹக் முறியடித்தான். இந்தஇளம்வயதில் இப்படி ஒரு சாதனையைப்பொறித்த வெர்னரைப் பாராட்டுவோம். நாமும் முயலலாம். முயன்றால்,அதுவும் எண்மையாக முயன்றால் முடியாதது உண்டோ!