விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/தவறும் தண்டனையும்

விக்கிமூலம் இலிருந்து
20. தவறும் தண்டனையும்!

விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்பொழுது, ஆட்டக்காரர்கள் உணர்ச்சி வசப்பட்டு, வெற்றிபெறும் நோக்கத்துடன் விதிகளுக்குப் புறம்பான போக்கில் ஈடுபடுவதுண்டு, அவ்வாறு செய்வது தவறு என்பதை உடனே சுட்டிக் காட்டித் திருத்திடத்தான் நடுவர்களை நியமித்திருக்கின்றார்கள்.

விசில் அடித்து தவறை சுட்டிக் காட்டித் திருத்துகின்ற முறை ஒன்று. தவறிழைப்பவர் திருந்தாமல், மீண்டும் அதே தவறை வேண்டுமென்றே செய்யும் பொழுது, எச்சரிக்கை தந்து ஆடச்செய்வது இரண்டாவது முறை. அதே தவறை தொடர்ந்து செய்து தரக் குறைவாக நடந்து கொள்பவர்களை, ஆட்டத்தை விட்டே வெளியேற்றி விடுவது மூன்றாவது முறை.

ஆக, தவறுக்குரிய தண்டனையை உடனே தந்தால்தான் விளையாட்டும் செழிக்கும். விளையாட்டுத் தரமும் பிழைக்கும். ஆட்டக்காரர்களின் தவறும் மறையும். ஓர வஞ்சகம் செய்பவர்கள் நடுவராக இருந்தால், விளையாட்டுத்துறை உருப்படுமா என்ன?

பழங்காலத்தில், கிரேக்கர்கள் தாங்கள் நடத்திய ஒலிம்பிக் போட்டிகளில் தவறுக்குத் தண்டனை தருவது பற்றி ஒரு புதுமுறையைக் கையாண்டிருக்கிறார்கள்.

மல்யுத்தமும், குத்துச்சண்டையும் இரண்டறக் கலந்த பங்கராஷியம் என்ற போட்டிகளுக்கு நடுவராக இருந்தவர்கள், கையிலே நீண்ட தடி வைத்திருந்தார்கள். அந்தத் தடியின் முனையானது கூரான இரும்புக் கம்பியினால் ஆக்கப்பட்டிருக்கும். போட்டியாளர்கள் போட்டி நேரத்தில் தவறு இழைத்தால், அந்த நடுவர்கள் தவறிழைப்பவரின் கழுத்து பாகத்தில், அந்தத் தடியின் கூர்முனையால் குத்திவிடுவார்கள். வலிதாங்காத வீரன் உடனே விலகிக்கொள்வான். கழுத்தில் மட்டுமல்ல, தவறைச்சுட்டிக்காட்டி, தவறுக்குள்ளானவரை விடுவிக்க எது சாதகமான இடம் என்று அறிந்து, தவறிழைப்பவரின் உடலில் குத்துவார்களாம். பிறகு எப்படி தவறு மீண்டும் முளைத்தெழும்?

விளையாட்டை நடத்துபவர்கள் நடுநிலையாளர்களாக விளங்கி, நடுவர்களும் சிறந்த நீதிபதிகளாக பணியாற்றி விட்டால், விளையாட்டுத் துறை எப்பொழுதும் மக்களை சீர்திருத்தும், செம்மைப்படுத்தும், வாழ்வாங்கு வாழவைக்கும்.