விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/தாங்கமுடியாதவருக்கு தண்டனை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
19. தாங்கமுடியாதவருக்கு தண்டனை!

உலகக்கோப்பைக்கான கால்பந்தாட்டப் போட்டியில் ஓர் உச்சக் கட்டம். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்திருக்க முடியாத நிலையில், உணர்ச்சிப் பெருக்கேறிய சூழ்நிலையில் அமர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

இத்தாலிய நாட்டுக் குழுவினர். ஆடுகளப் பக்கத்திலே பந்து விளையாடப்படுகிறது. இதோ! இத்தாலியக் குழுவினரின் இலக்கு ஓரத்தில் பந்து வந்துவிட்டது. அதைத் தள்ளி விடுகிறார் எதிர்க்குழு ஆட்டக்காரர். அதனைத் தடுக்க வந்த இத்தாலிய நாட்டுக் குழுவின் இலக்குக் காவலர் பாய்ந்து விழுந்தார்.

பந்து அவர் கையில் படவில்லை. அதோ! பந்து மெதுவாக இலக்கை நோக்கி உருண்டு சென்று கொண்டிருக்கிறது. அதனைத் தடுக்க வேறு எந்த ஆட்டக்காரரும் வரஇயலாத நிலையில், ஆங்காங்கே ஆட்டக்காரர்கள் இருக்கின்றனர். இன்னும் ஒருசில வினாடிகளில் பந்து இலக்கினுள் சென்றுவிடும். பிறகு, இத்தாலி தோற்றுப் போய்விடும்.

எல்லா ரசிகர்களும் இந்த நிலைமையும், பந்து போகின்ற நிலையையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். மனதிலே பரபரப்பு! தாங்கள் போய்தடுத்து விடலாம் என்றால் முடியுமா! மனதுக்குள்ளே குறு குறுத்தவண்ணம் அல்லாடிக் கொண்டிருக்கையில், துப்பாக்கி வெடித்ததுபோல் ஒரு சத்தம். படீர் என்று வெடிக்கும் மற்றொரு சத்தம்.

என்னவென்று எல்லோரும் அச்சத்துடன் பார்க்கின்றனர். கைத் துப்பாக்கியுடன் ஓர் இளைஞன் பார் வையாளர் பகுதியில் நிற்கிறான். இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருந்த பந்து வெடித்துக் கிடக்கிறது. அச்சமும் ஆச்சரியமும் நிரம்பிவழிய, எல்லோரும் அவனையே பார்க்கின்றனர். அதிகாரிகள் பலர் ஓடிவருகின்றனர். அவனைக் கைது செய்துகொண்டு போகின்றனர்.

அந்த இளைஞன், பாஸ்டியா (Bastia) என்பது அவன் பெயர். அவன் கூறுகிறான். "இத்தாலி நாட்டுக்குழுவின் ரசிகன் நான். இத்தாலியக் குழுவே வெல்ல வேண்டுமென்று நான் விரும்பினேன். வேண்டிக் கிடந்தேன். விளையாட்டை ஆவலுடன் பார்த்துக்கொண்டு வந்தேன். தடுப்பவர் யாருமின்றி அந்தப் பந்து இத்தாலியக் குழுவின் இலக்கிற்குள் போவதை என்னால் சகிக்க முடியவில்லை. என்னால் தடுக்கவும் முடியாது. நிச்சயம் பந்து இலக்கிற்குள் செல்கிறது என்பதை என்னால் தாங்க முடியவில்லை. உடனே என் கைத்துப்பாக்கியை எடுத்து பந்தை சுட்டுவிட்டேன். பந்து இலக்கிற்குள் போகவில்லை. இத்தாலியக் குழுவை, நான் விரும்பும் எனது குழுவை, தோல்வியிலிருந்து தடுத்து விட்டேன்" என்று அந்த இளைஞன் தன்னை விசாரித்த அதிகாரிகளிடம் விளக்கினான்.

பாஸ்டியா நோக்கத்தைப் புரிந்து கொண்டாலும், அவனது நோக்கம் யாருக்கும் தீங்கிழைப்பதாக இல்லை என்று தெரிந்து கொண்டாலும், அந்த இளைஞன் தண்டிக்கப்பட்டான், அதாவது முறையாகத்தான்.

பயங்கரமான ஆயுதம் ஒன்றை அனுமதி இல்லாமல் வைத்திருந்தான் என்பதற்காக பாஸ்டியாவுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. விளையாட்டை விளையாட்டு என்று எண்ணாமல்,அதுவே பேரிழப்பு,பெரிய காரியம் என்று எண்ணிய பாஸ்டியா, பரிதாபமாக சிறைக்குள் புகநேர்ந்தது. ஆகவே, உணர்ச்சி வசப்படாத நிலையில் நாம் எப்பொழுதும் இருக்கவேண்டும் என்ற உண்மையை நாம் உணர்ந்து வாழவேண்டும். ஏனெனில், நமது வாழ்க்கையானது எப்பொழுதும் நாம் எதிர்பாராத நிகழ்ச்சிகளையே நமக்கு அளிக்கிறது, அதனைத் தாங்கிக் கொள்ளக்கூடிய உடல் சக்தியையும், மனஆற்றலையும் தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு தாங்கிக்கொள்ள முடியாது போனால், தவறு இழைக்கத்தான் நேரிடும். தண்டனை பெறத்தான் நேரிடும் இதற்கு பாஸ்டியா சம்பவம் ஒரு பாடமாக அமைகிறது அல்லவா! மனதையும் உடலையும் பக்குவப்படுத்தவும், பண்படுத்தவும்தான் விளையாட்டுக்கள் உதவுகின்றன. விளையாட்டு உலகிலே இப்படிநடந்து கொண்டால், வாழ்க்கையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் பகலிலே பாதை தெரியவில்லை என்றால் இரவில் எப்படி முடியும்! இதுதான் பாஸ்டியா நமக்கு விளக்குகின்ற பாடமாகும்.