விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/இதுவல்லவோ பெருந்தன்மை
விளையாட்டுக்களில் பெருந்தன்மையானது மிகவும் முக்கியம். அது வாழ்க்கைக்குவேண்டாமா, விளையாட்டுக்கு மட்டுந்தான் வேண்டுமா, என்றால் விளையாட்டும் வாழ்க்கையும் வேறு வேறு என்று எண்ணினால்தானே! விளையாட்டில் பெறுகின்ற பண்பும் பழக்கமும், வாழ்க்கைக்கும் அப்படியே பயன்தருவதால்தான். விளையாட்டுக்கள் சமுதாயத்திலே முக்கிய இடத்தை வகிக்கின்றன.
பெருந்தன்மை நிறைந்தவர்களையே நாம் பண்பாளர்கள் (Gentlemen)என்கிறோம். பெருந்தன்மையான செயல்களில் ஈடுபடுவதினால், பங்கு பெறுபவர்கள், பார்வையாளர்கள், போட்டிகளை நடத்துகின்றவர்கள் எல்லோருமே மனதிருப்தியும் மகிழ்ச்சியும் அடைகின்றார்கள். அத்தகையவர்களைத் தேர்ந்தெடுத்து, பண்பாளர் பரிசு (Fair Play Award) என்பதாகவும் வழங்குகின்றார்கள்.
அத்தகைய இனிய பரிசுகளை இரண்டு ஆட்டக்காரர்களுக்கு வழங்கி, யுனெஸ்கோ ஸ்தாபனம் கெளரவித்தது. அப்படி அந்த இரண்டு ஆட்டக்காரர்களும் என்னதான் செய்துவிட்டார்கள் என்று அறிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றதல்லவா!
முதலாவது விளையாட்டு வீரர் போலந்து நாட்டைச் சேர்ந்த விளோடிசிமியர்ஸ் லுபான்ஸ்கி (Wil0dzimierz Lubanski) என்பவர் உலகக் கால்பந்தாட்டப் போட்டியின்போது ஆட்டத்திற்கிடையில் நடந்து கொண்ட விதத்தால் இப்போது பெற்றார்.
உலகக் கால்பந்தாட்டப் போட்டியில் டென்மார்க்கு நாடும் போலந்து நாடும் போட்டியிட்டது. அப்பொழுது போலந்து நாட்டு சிறந்த ஆட்டக்காரரான லுபான்ஸ்கி, டென்மார்க்குத் குழுவின் இலக்குக்கு அருகிலே பந்துடன் வந்துவிட்டார். மிக வேகமாக உதைத்தால் எளிதாகப் பந்து இலக்கிற்குள் சென்றுவிடும் என்ற வசதியான வாய்ப்பான நிலையில் அவர் இருந்தும், பந்தை உதைக்கவில்லை. பந்தும் இலக்கினுள் போகவில்லை, ஏன் அவர் அப்படியே நின்று விட்டார்?
டென்மார்க்குக் குழுவின் இலக்குக் காவலர் தடுமாறிக் கீழே விழுந்து கிடக்கிறார். பந்தை உதைத்தால் அவருக்குக் காயம் ஏற்படும். அதனால் ஆபத்து நேரிடும் என்று பயந்து ஒதுங்கி நின்றார். தன் குழு வெற்றி வாய்ப்பினை அந்த சமயத்தில் இழந்தாலும், எதிர்க்குழு ஆட்டக்காரர் ஆபத்து இன்றிதப்பித்துக் கொண்டாரே! அதில் அவருக்கு சந்தோஷம்.
எதிர்த்து விளையாடுபவர்களை எப்படியாவது கீழே இடறிவிட்டு, தள்ளிச் சாய்த்து மிதித்து துவைத்தாவது வெற்றிபெற வேண்டும் என்ற நினைவுடனே காலம் பார்த்து விளையாடும் ஆட்டக்காரர்கள் மத்தியிலே, எதிர் ஆட்டக்காரரும் நமது சகோதரரே; அவரும் நம்மைப் போல்தானே. எந்த விபத்தும் யாருக்கும் நேரக்கூடாது என்று பெருந்தன்மையான நினைவுடன் பண்பாளராக நடந்துகொண்ட லுபான்ஸ்கிக்கு பண்பாளர் பரிசினை அளித்து யுனெஸ்கோ பாராட்டியது.
அதுபோலவே இன்னொரு போலந்து ஓட்டக்காரரும் இந்த பரிசினைப் பெற்றிருக்கிறார். அவர் பெயர் ரிசார்டு போட்லாஸ் என்பதாகும். (Rhszard Podlas.) இந்த சிறந்த ஓட்டக்காரர் உலகக் கோப்பைக்கான ஓட்டப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் ஓடி முதல் பரிசு பெற்றவராவார். அவர் ஐரோப்பிய நாடுகளின் சார்பாக ஒட்டத்தில் பங்கு பெறுகின்ற வாய்ப்பினைப் பெற்றார். அதற்கான தேர்வோட்டப் போட்டியில் (Heat) பங்குபெற வந்தபோது, தன்னைவிட பெல்ஜியம் நாட்டு வீரரான அல்போன்ஸ் பிரிஜென்டென்பக் {Alfons Brijindenbach }என்பவர் சிறந்த போட்டியாளர் என்பதிலே அவர் உறுதியாயிருந்தார்.
அந்தப் போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையை நிறைய வைத்திருந்தார். ஆனால் அந்தப் போட்டியின்போது அல்போன்சுக்குக் காலில் காயம் ஏற்பட்டு, வழக்கமாக வேகமாக ஓடமுடியாது என்ற நிலையில் இருப்பதை உணர்ந்த ரிசார்டு, அவர் அந்த ஓட்டத்தில் மூன்றாவதாக வந்தால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதையும் அறிந்து கொண்டார். அதனால் அவர் நான்காவதாக ஓடிவந்து அல்போன்சுக்கு தன்னிடத்தை வழங்கி மனமகிழ்ச்சி கொண்டார்.
போட்டிக்குத் தவறான வழிகளையே பயன்படுத்து பவர்கள் இடையே, நல்ல மனப்போட்டி வேண்டும். அதுவும் பண்பான போட்டி வேண்டும் என்று தனது குழுவில் உள்ள ஒருவர் சிறந்த வெற்றிபெற வாய்ப்பையும் வசதியையும் வழங்கிய ரிசார்டும் பண்பாளர் பரிசு பெற்றார் என்றசேதி, விளையாட்டு உலகில் வழிகாட்டும் அற்புத சம்பவங்கள் அல்லவா?