அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்/1. பாரதி -"ரஷ்யப் புரட்சியின் குழந்தை"
1
பாரதி -"ரஷ்யப் புரட்சியின் குழந்தை"
ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியை, "ரஷ்யப் புரட்சியின் குழந்தை" என்றே இலக்கிய விமர்சகர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் தமிழகம் தந்த தேசிய மகாகவியான சுப்ரமண்ய பாரதியையும் 1905-1907-ம் ஆண்டுகளின் "ரஷ்யப் புரட்சியின் குழந்தை" என்றே சொல்லிவிடலாம். ஏனெனில் 1905-ம் ஆண்டின் ரஷ்யப் புரட்சியைத் தொடர்ந்து இந்தியாவில் எழுந்த தீவிரவாதத் தேசிய இயக்கத்தின்போதே, பாரதி தேச பக்தி பொங்கித் ததும்பும் கவிதைகளைப் படைத்த தேசிய கவியாகவும், அரசியல் பத்திரிகையாளராகவும் மலர்ச்சியுற்று மணம் பரப்பத் தொடங்கினார். பின்னால் வரப்போகிற வெற்றிகரமான புரட்சிக்கோர் ஒத்திகை என்று மாமேதை லெனினால் சரியாக வருணிக்கப் பெற்ற இந்தப் புரட்சி, இந்தியா உட்பட பல்வேறு கீழைநாடுகளிலும் தேச விடுதலைப் போராட்டங்களை மடை திறந்த வெள்ளம் போல் பொங்கியெழச் செய்தது. திலகர் போன்ற திறமை வாய்ந்த தலைவர்கள் தொடங்கிவைத்துத் தலைமை தாங்கி நடத்திய இந்தத் தீவிரவாதத் தேசிய இயக்கத்துக்குத் தூண்டுகோலாக விளங்கிய முக்கிய காரணங்களில், இந்தப் புரட்சியும் ஒன்றாகும் என்பது இன்று சரித்திர ஆசிரியர்கள் பலரும் ஒப்புக் கொண்டுள்ள உண்மையாகும். அந்நாளில் கனன்று பொங்கும் காளைப் பருவத்தினராக இருந்த பாரதி திலகரைத் தமது அரசியல் தலைவராக ஏற்றுக் கொண்டதோடு, விழித்தெழுந்த நாட்டின் வீறு கொண்ட கவிஞராகவும் மாறினார். எனவேதான் அன்றைய மிதவாதிகளை ஆதரித்து வந்த சுதேசமித்திரன் பத்திரிகையில் தாம் வகித்து வந்த உதவியாசிரியர் வேலையை உதறித் தள்ளிவிட்டு, 1906 ஏப்ரல் மாதத்தில் தமது ஆசிரியப் பொறுப்பில் முற்போக்கான அரசியல் வாரப் பத்திரிகை ஒன்றையே பாரதி தொடங்கினார்.
1905-ம் ஆண்டு ரஷ்யப் புரட்சியைப் பற்றி
"சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்ற முப்பெரும் கோஷங்களை தலைப்புப் பக்கத்தில் தாங்கி, சென்னையிலிருந்து வெளிவரத் தொடங்கிய பாரதியின் அரசியல் வாரப்பத்திரிகையான இந்தியா 1906 ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வெளிவந்த இதழ்கள் சிலவற்றில், ஏனைய பல விஷயங்களோடு, ரஷ்யப் புரட்சியைப் பற்றி பின்வரும் தலைப்புகளில் பாரதி எழுதிய ஐந்து செய்தி விமர்சனக் குறிப்புக்களையும் தாங்கி வெளிவந்தன:
---Russia in the Throes of Revolution Again
ரஷ்யாவில் மறுபடியும் ராஜாங்கப் புரட்சிச் சின்னங்கள்(30-6-1906)
--- Go Ahlead, Russia
ரஷ்யாவின் தீவிர அபிவிருத்தி(7-7-1906)
Dissolution of the Duma
ரஷ்யப் பார்லிமெண்டின் கலைவு(28-7-1906)
---Russian Revolution
ரஷ்யாவிலே ராஜாங்கப் புரட்சி(1-9-1906)
--- The Death of Trepor-One Tyrannical Wretch the Less
'ட்ரேபோவின் மரணம்' - உலகத்துப் பாதகர்களில் ஒருவன் குறைந்து போய் விட்டான்.(22-9-1906)
இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். அக்காலத்தில் ஓர் அகில உலகக் கண்ணோட்டத்தையும், புரட்சிகரப் போக்கையும் வளர்த்துக் கொண்டிருந்த ஒரு சிலரில், சமுதாய விடுதலையும் பொருளாதார விடுதலையும் கிட்டும்போதுதான் அரசியல் விடுதலை அர்த்த புஷ்டியும் பூரணத்துவமும் பொருந்தியதாக இருக்கும் என்று கருதிய சிலரில், பாரதியும் ஒருவர், இத்தகைய உணர்வினாலும், ரஷ்யப் புரட்சியிலிருந்து அவர் பெற்ற உத்வேகத்தின் பயனாகவும்தான், ரஷ்யப் புரட்சி நிகழ்ந்த காலத்திலேயே (1907ல்) தாம் எழுதி வெளியிட்ட "சுதந்திரப் பள்ளு" பாடலில் பாரதி பின்வருமாறு பாடினார்:
எங்கும் சுதந்திரம்
- என்பதே பேச்சு! - நாம்
எல்லோரும் சமமென்பது
உறுதியாச்சு !
சங்கு கொண்டே வெற்றி
ஊதுவோமே! - இதைத்
தரணிக்கெல்லாம் எடுத்து
ஓதுவோமே!
உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம் - வீணில்
உண்டு களித்திருப்போரை
நிந்தனை செய்வோம்!
விழலுக்கு நீர்பாய்ச்சி
மாய மாட்டோம் - வெறும்
வீணருக்கு உழைத்துடலம்
ஓய மாட்டோம்!
ஆடுவோமே - பள்ளுப்
பாடுவோமே!
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோமென்று
(ஆடுவோமே)
என்றாலும், அன்னிய ஆட்சியாளர்களையும் அவர்தம் காலனியாதிக்கச் சுரண்டற் கொள்ளையையும் சாடி எரிமலையெனக் குமுறி நெருப்பைக் கக்கி வந்த பாரதியின் இந்தியா பத்திரிகையின் மீது விரைவிலேயே, 1908 செப்டம்பர் மாதத்திலேயே, அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கழுகுக்கண்கள் பாய்ந்து விட்டன. அரசாங்கம் தம்மைக் கைது செய்யப் போகிறது என்ற ரகசியத்தைத் தெரிந்து கொண்ட பாரதி, தமது சகாக்கள் சிலரோடு அந்நாளில் பிரெஞ்சு நாட்டின் ஆட்சியின் கீழிருந்த பாண்டிச்சேரிக்கு உடனே போய் விட்டார். இந்தியா வாரப் பத்திரிகையையும் அங்கிருந்து தொடர்ந்து வெளியிட்டு வரத் தொடங்கினார். இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும் : பாரதியோடு பாண்டிச்சேரி சென்ற அவரது சகாக்களில், இந்தியா பத்திரிகையின் பதிப்பாளரும் நிர்வாகியுமான எம். பி. திருமலாச்சார்யா (மண்டயம் பிரதிவாதி பயங்கர திருமலாச்சார்யா) என்ற இளைஞரும் ஒருவர். எம். பி. டி. ஆச்சார்யா என்று பின்னர் குறிப்பிடப்பெற்ற இந்த இளைஞர் பாண்டிச்சேரியிலிருந்து விரைவிலேயே ஐரோப்பா சென்று அங்கிருந்த இந்தியப் புரட்சியாளர்களோடு சேர்ந்து கொண்டார். எம். பி. டி.ஆச்சார்யா 1919 மே மாதத்தில் லெனினைச் சந்தித்துப் பேசிய இந்தியப் புரட்சிவாதிகளில் ஒருவராகவும், வெளிநாடுகளில் இருந்து வந்த இந்தியப் புரட்சிவாதிகள் 1920 அக்டோபரில் தாஷ்கண்டு நகரில் தோற்றுவித்த இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குத் தலைவராகவும் இருந்தார் என்றால் அதில் வியப்பேதும் இல்லை.
பாரதி கிட்டத்தட்ட பத்தாண்டுக் காலம் பாண்டிச்சேரி யில் அரசியல் அஞ்ஞாதவாசம் புரிய நேர்ந்தது. எனினும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இரும்புக்கரம் அவரது இந்தியா பத்திரிகையின் மீது விரைவிலேயே பாய்ந்தது. இந்தியா தமிழ் நாட்டுக்குள் வருவது தடை செய்யப்பட்டது. எனினும் பாரதி அதைக்கண்டு சளைக்காமல், தமது கருத்துக்களைப் பிற பத்திரிகைகளின் மூலம் வெளியிட்டே வந்தார்.
பிப்ரவரிப் புரட்சியின்போது
சர்வதேச நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்து வந்த பாரதி, ரஷ்யாவில் நிகழ்ந்து வந்த சம்பவங்களையும் தொடர்ந்து கவனித்து வந்தார். எனவே ரஷ்யாவில் 1917ம் ஆண்டின் பிப்ரவரிப் புரட்சி வெற்றி பெற்றபின், விரைவிலேயே 28.3.1917 அன்று தாம் எழுதிய "பொழுது போக்கு" என்ற உரையாடற் கட்டுரையில், "பூமியில் நல்ல யுகம் தோன்றப் போகிறது. மனித ஜாதி முழுமைக்கும் விடுதலையுண்டாகப் போகிறது. ருஷ்ய ராஜ்யப் புரட்சியானது இனி வரப்போகிற நற்காலத்தின் முன்னடையாளங்களில் ஒன்று" என்று எழுதினார் பாரதி, (பாரதி தமிழ்-பெ.தூரன் தொகுப்பு). ஏறத்தாழ இதே சமயத்தில் "வரப்போகும் யுகம்"' (The Coming Age) என்ற தலைப்பில் தாம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில், பாரதி பின்வருமாறு எழுதியுள்ளார்: "சோஷலிசம் என்று மேலை நாட்டினர் குறிப்பிடுவது என்னவென்று இங்கு தெளிவாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. என்றாலும் மேலை நாட்டுக்கும் சரி, கீழை நாட்டுக்கும் சரி, கௌரவமான வாழ்க்கை நடத்துவதற்கு ஒரே ஒரு மார்க்கம்தான் உள்ளது. உலகைப் பொதுவுடமையாக்கி, அதில் சக- தொழிலாளிகளாகவும் கூட்டுப் பங்காளிகளாகவும் வாழ்வதே அந்த மார்க்கமாகும். கிருதயுகத்தில் மனிதர்கள் இம்மாதிரியே இந்த நாட்டில் வாழ்ந்தனர் என்று கூறும் மரபு நமக்குண்டு. அது உண்மையாகவும் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ஆயினும், எல்லா நாடுகளிலும், அதுவும் விரைவிலேயே, கிருதயுகத்தைக் கொண்டு வருவதில், மானிட வைராக்கியம் இனியும் வெற்றி பெறும், மனிதனின் மிகவுயர்ந்த வைராக்கியம் இதுவரையில் ஏதோ காரணத்தினால் முடக்கப் பட்டிருந்தது; அது தனது சக்தியின் தலையாய அம்சத்தை , நமது சமுதாயப் புன்மைகள் அனைத்தின் வேரையும் களையும் பணியில் செலுத்த முடியாமல் இருந்தது. மனித சமுதாயத் தின் உருவாக்கத்திலேயே நீதியை வெற்றி பெறச் செய்தாக வேண்டும். பின் நீதி எல்லா மானிட விவகாரங்களிலும் உறவுகளிலும் இயல்பாகவே வெற்றி பெற்றுவிடும். மனிதக் கூட்டுறவுகளின் கட்டுக்கோப்பில், போட்டிக் கோட்பாடு கொடிகட்டிப் பறக்கிற வரையிலும், நிலமும் நீரும் மனிதர்கள் எல்லோருக்கும் பொதுவான சொத்தாக இல்லாத வரையிலும், எந்த விதத்திலும் மனிதர்கள் தமது ’பொருளாதார’ உறவுகளில் மிருகங்களை விடவும் மோசமாகவே நடந்து கொள்வர். இந்த உண்மையைப் பெரும்பான்மையான மனிதர்கள் பூரணமாக உணரும் போது, நாம் நமது ஏறுமுகமான பரிணாமத்தில் அடுத்த அடியை எடுத்து வைத்து விடுவோம் (Bharathi's ”Essays and other Prose Fragments”).