உள்ளடக்கத்துக்குச் செல்

விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/இடம்பிடிப்பது சுலபமா என்ன?

விக்கிமூலம் இலிருந்து
40. இடம் பிடிப்பது சுலபமா என்ன?

1922ம் ஆண்டில் ஒருநாள் மாலைநேரம். வளைகோல் பந்தாட்ட ஆடுகளத்திற்குள் இரண்டு குழுக்கள் விளையாடத் தயாராக இருக்கின்றன. ஏனோ தெரியவில்லை. ஆட்டம் தொடங்கிடவில்லை.

சிறிதுநேரம் கழித்துத்தான் சேதி தெரிகிறது. ஒரு குழுவில் 10 ஆட்டக்காரர்கள்தான் இருக்கிறார்கள். இன்னும் ஒருவர் இருந்தால் ஆட்டத்தைத் தொடங்கிவிடலாம். ஆனால் ஆள் யாரும் கிடைக்க வில்லையே!

ஏக்கத்துடன் சுற்றும் முற்றும் பார்த்து மற்றவர்கள் நிற்கும்பொழுது, ஒருவனைப் பார்க்கிறார்கள். பள்ளிக்கூடம் விட்டு அந்தப் பையன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான். அவனை வந்து விளையாடு என்று ஆள் தேடும் குழுவினர் அழைக்கின்றார்கள். அவனும் சரி என்று, புத்தகப் பையை கீழே போடுேவிட்டு வந்து சேர்ந்து கொள்கிறான்.

பதினோராவது ஆட்டக்காரர் இல்லை என்பதற்காக, ஆள் இல்லாததால்,' ஒப்புக்குச் சாப்பாணி' என்பார்களே, அப்படி சேர்த்துக் கொள்ளப்பட்டான் அந்த சிறுவன்.

ஆட்டம் தொடங்கி விட்டது. அவன் மைய முன்னாட்டக்காரர் (Centre Forward) என்ற இடத்தில் நின்று ஆடத்தொடங்கினான். புதிதாக வந்து சேர்ந்த பயமோ அல்லது மற்றவர்களைப் புரிந்துகொள்ள முடியாத தன்மையோ என்னவோ, அந்தச் சிறுவன் பயந்து பயந்து ஆடினான். அதாவது தன்னம்பிக்கை யில்லாதவனாகவே ஆடிக்கொண்டிருந்தான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த வயது முதிர்ந்த ஒருவர் சிறுவன் அருகில் வந்து, தம்பி! நீ விளையாடுகின்ற இடம் முக்கியமான இடம் என்பதை மறந்துவிட்டாயே! என்று நினைவுபடுத்திவிட்டு, தைரியம் ஊட்டிச் சென்றுவிட்டார்.

பிறகென்ன! சிறுவனின் ஆட்டம் மிகச் சிறப்பாக அமைந்துவிட்டது. அன்று அந்த சிறுவன் எதிராளிகளின் இலக்கிற்குள் 10 முறை பந்தடித்து, தன் குழுவிற்கு வெற்றி தேடித் தந்துவிட்டான்.

இடம் பிடித்துக் கொண்ட அந்த சிறுவன், எல்லோருடைய இதயத்திலும் இடம்பிடித்துக் கொண்டான். அன்றிலிருந்து அந்த சிறுவனின் ஆட்டத்தில் மறுமலர்ச்சி புகுந்து கொண்டது. அந்த சிறுவன்தான் தயான் சந்த் என்று அழைக்கப்படும் உலக மகாவீரன்.

வளைகோல் பந்தாட்டப் புலி (Hockey wizard) என்று உலகத்தாரால் செல்லமாக அழைத்துப் பாராட்டப் பெற்ற வீரன். சிப்பாயாக இராணுவத்தில் சேர்ந்த தயான் சந்த், விளையாட்டில் வளர்த்துக் கொண்ட திறமையால் மேஜராகப் பதவி உயர்த்தப் பெற்று கெளரவிக்கப்பட்ட மகாவீரன்.

தனக்குரிய இடம் எது என்று உணர்ந்து கொண்ட அந்த வீரன், கடைசி வரையிலும் கொண்டது விடாமல் கண்டதை விடாமல் கட்டிக் காப்பாற்றி, வளைகோல் பந்தாட்டத்தில் பெரும்சரித்திரம் படைத்த மகாவீரன் ஆவான்.

இடம் பிடிப்பது என்பது சுலபம்தான். ஆனால், இடத்தை விடாமல் அங்கேயே இருப்பது என்பது எல்லோராலும் முடியுமா! முடியாது. அதற்கு உள்ளத்தில் உறுதியும், உழைப்பில் திண்மையும், கண்ணும் கருத்தும் நிறைந்த கடமை உணர்வும், தெய்வமாகப் போற்றும் செயலாண்மையும் நிறையவே வேண்டும். அத்தனையும் நித்தமும் கொண்டிருந்ததால்தான், தயான் சந்த் இன்று புகழின் சிகரத்தில் வீற்றிருக்கின்றார்.

அன்புள்ள வாசகர்களுக்கு

விளையாட்டுக்களில் சுவையான சம்பவங்கள் பற்றி நீங்கள் படித்து முடித்த பிறகு, இந்நூல் உங்களுக்கு சுவையாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமைந்திருந்தது என்று நீங்கள் கருதினால், இது போலவே மேலும் பல புத்தகங்கள் நான் எழுதியவை இருக்கின்றன என்பதை உங்களுக்கு நினைவு படுத்துவது என் கடமை என்று எண்ணுகிறேன்.

என் நூல்களைத் தொடர்ந்து வெளியிடும் ராஜ்மோகன் பதிப்பகத்தாரிடம் எழுதிக் கேட்டு, வாங்கிப் படித்து மகிழுமாறும் பயன் பெறுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

அன்பன்

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா