விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/பெண்களே போய்விடுங்கள்
'பெண்களே போய் விடுங்கள்! விளையாட்டுப் பக்கமே வராதீர்கள்! வந்தால் பயங்கர தண்டனைக்கு ஆளாவீர்கள்' என்று விளையாட்டுக்களை ஆரம்பித்த கிரேக்கர்கள் முதல், இன்று விதண்டாவாதம் பேசும் முறைகெட்டவர்கள் வரை விரட்டித்தான் பார்க்கிறார்கள்.
அணைபோடப்போட அடங்காது குதிக்கின்ற வெள்ளம்போல, அவர்களை விரட்ட விரட்ட, அவர்கள் விளையாட்டில் பங்குபெறும் எண்ணிக்கையும், ஆதிக்கமுமே இன்று அதிகரித்துக்கொண்டு வருகிறது.
பழங்கால கிரேக்கத்தில் நடந்த ஒலிம்பிக் பந்தயங்களில், ஆண்கள் மட்டுமே போட்டிகளில் கலந்துகொண்டனர். அவர்கள் பிறந்தமேனியர்களாக போட்டியிட்டதன் காரணமோ அல்லது பெண்களுக்கு விளையாட்டுக்கள் தேவையில்லை என்று எண்ணினார்களோ என்னவோ, பெண்களை ஒலிம்பிக் மைதானம் நடத்தும் பக்கமே தலைகாட்ட விடவில்லை.
விதிகளை மீறி பந்தயம் பார்க்க வந்தவர்களுக்கு மரண தண்டனையே விதிக்கப்பட்டது. அதையும் அலட்சியம் செய்துவிட்டு, பார்க்க வந்த பிரனிஸ் என்ற தாய் நடத்திய போராட்டத்தால், இந்த விதிமுறை சற்று தளர்ந்தது. அதன் பிறகு, பந்தயங்களில் பெண்களும் கலந்து கொள்கின்ற வாய்ப்பும் உரிமையும் கிடைத்தது.
புதிதாக ஒலிம்பிக் பந்தயங்களை அரம்பித்த பொழுது, அதன் பிறகு, பந்தயங்களில் பெண்களும் கலந்துகொள்கின்ற வாய்ப்பும் உரிமையும் கிடைத்தது. புதிதாக ஒலிம்பிக் பந்தயங்களை ஆரம்பித்த பொழுது, பெண்களுக்கும் அதே கதிதான் நேர்ந்தது. பெண்களுக்கென்று போட்டிகள் நடத்தப்படவில்லை. ஆனால் வேடிக்கை பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள். பெண்களே போய்விடுங்கள் என்று மரண தண்டனையைக் காட்டி பயமுறுத்தும் காலம் மலையேறிப் போய், வேடிக்கை பார்க்க வாருங்கள் என்று விரும்பி அழைக்கின்ற காலமும் வேகமாக வந்து சேர்ந்தது.
பெண்கள் விடுவார்களா என்ன? ஏன் எங்களுக்கும் ஒலிம்பிக் பந்தயங்களில் இடம் இல்லை? வாய்ப்பு மறுக்கப்படுகிறது? நாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை, என்று பேசிப் பேசி, பின்னர் போராட்டம் நடத்தத் தொடங்கி விட்டார்கள். பணிந்து விட்டது ஆண்கள் இனம். அதிகாரிகள் குழாம் . 1896ல் தான் முதல்பந்தயங்கள் நடத்தப்பட்டன. 1900ம் ஆண்டு நடந்த இரண்டாவது ஒலிம்பிக் பந்தயங்கள் பாரிசில் நடத்தபட்டபொழுது, டென்னிஸ், கோல்ஃப் போன்ற ஆட்டங்களில் மட்டுமே பெண்கள் போட்டியிட அனுமதிக்கபட்டனர். அதில் 11 பெண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
முதன் முதல் ஒலிம்பிக் பந்தயங்களில், தங்கப் பதக்கம் பெற்ற பெருமையை உடையவள், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை விர்லே கூப்பர் (Shirley Cooper).
ஏனோ தெரியவில்லை மற்ற ஒலிம்பிக் பந்தயங்களில் இது தொடரவில்லை. 1928ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயங்களில் பெண்களுக்கான போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவர்களுக்கு என்று 5 ஓட்டப் பந்தய நிகழ்ச்சிகளே புகுத்தப்பட்டன.
100 மீட்டர் ஓட்டம், 800 மீ. ஓட்டம், 4x100 மீட்டர் தொடரோட்டம், உயரத் தாண்டுதல், தட்டெறிதல் ஆகிய
நிகழ்ச்சிகளில் தொடங்கிய பெண்களுக்கான போட்டிகள், இன்று பல்வேறு நிகழ்ச்சிகளாக ஆக்ரமித்துக் கொண்டே வருகின்றன.
1976ம் ஆண்டு மான்ட்ரியலில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 13 விதமான போட்டிகள் பெண்களுக்காக நடத்தப்பட்டன. 1980ம் ஆண்டு நடைபெற்ற மாஸ்கோ ஒலிம்பிக் பந்தயத்தில் பெண்களுக்கான வளைகோல் பந்தாட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
அகில உலக ஒலிம்பிக் கமிட்டி ஒரு கணக்கெடுப்பில் ஈடுபட்டு, இதுவரை எத்தனை விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பந்தயங்களில் கலந்துகொண்டிருக்கின்றனர் என்பதைக் குறித்துக் காட்டியிருக்கிறது. அதன் விவரத்தைக் கீழே தருகிறோம்.
இதுவரை 18 முறை ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்று இருக்கின்றன. அவற்றில் 62,237 வீரர்களும் வீராங்கனைகளும் உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் வந்து பங்கேற்றிருக்கின்றனர்.
அதாவது பந்தயங்கள் 1972ம் ஆண்டு மியூனிக்கில் நடைபெற்றபொழுது, 121 நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 7147.
21வது பந்தயமாக 1976ம் ஆண்டு மான்ட்ரியலில் நடைபெற்றபொழுது 6189 வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் சுவையான அம்சம் என்னவென்றால், இந்த ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொண்ட பெண்களின் எண்ணிக்கை 1274 ஆகும்.
மியூனிக் ஒலிம்பிக்கில் 1070 பெண்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம், பெண்கள் பந்தயங்களில் கலந்து கொள்ளும் வேகமும் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
பெண்கள் பங்கு பெறுகின்ற போட்டிகளை ஆண்கள் பார்க்கக் கூடாது என்று சென்ற ஆண்டு பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான எச்சரிக்கையே விடுத்தது. 'பெண்களே போய்விடுங்கள்" என்ற காலம்போய் 'ஆண்களே வராதீர்க்ள, போய்விடுங்கள்' என்ற காலம் வந்துவிட்டது பார்த்தீர்களா!
பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்!