விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/வீரம் இருந்தாலும் விவேகம் வேண்டும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

 38. வீரம் இருந்தாலும் விவேகம் வேண்டுமா!

வாழ்க்கையை வளமாக நடத்திச் செல்வதற்கு உதவுவன விளையாட்டில்பெறும் அனுபவங்களே ஆகும். மகிழ்ச்சிக்காக மட்டும் விளையாடுவது அல்ல. மனநிறைவுக்காகவும், உடல் வலிமைக்காகவும்தான் நாம் விளையாடுகிறோம். ஆனந்தமான விளையாட்டு நேரத்தில் ஆபத்தான விளைவுகளும் எப்பொழுதாவது நேர்வதுண்டு.

ஆபத்து நேராமல் விளையாடுவது அறிவுடையோர்க்கு அழகு. ஆத்திரப்பட்டு விளையாடும் பொழுது அறிவு தடுமாறுகிறது. விதியை மீற நேர்கிறது. வரம்பு மீறும்பொழுது, வருவதெல்லாம் ஆபத்தாகத்தான் முடியும். ஆகவே விழிப்புடனே, நிதானமாகவே விளையாட வேண்டும்.

எதிர்பார்க்காத நேரத்தில் எதுவும் நடப்பதுதான் வாழ்க்கையாகும். சொல்லி எதிர்பார்த்து நடப்பது நிகழ்ச்சி (Incident). சொல்லாமல் எதிர்பாராமல் நடப்பது விபத்து (Accident). எதிர்பாராமல் வருவதை எதிர்பார்த்து எச்சரிக்கையுடன் விளையாடுவதுதான் பண்புள்ளவர். அறிவுள்ளவர் செயலாகும். அப்படி நடந்து கொள்வதுதான் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

சிறந்த வீரர்தான், பிறர் போற்றும் திறமையும் ஆற்றலும் மிக்கவர்தான். இருந்தாலும் இந்த வீரத்திற்கு ஏற்ப, விவேகம் இல்லாததால், எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத இன்னுயிரை இழக்க நேர்ந்தது என்ற ஒரு சம்பவம், சரித்திரத்தில் ஒரு சோக சம்பவம்தான்.

G. சம்மர்ஸ் என்றொரு கிரிக்கெட் ஆட்டக்காரர். இங்கிலாந்து நாட்டில் உள்ள நாட்டிங்காம்ஷயர் எனும் பகுதியைச்சேர்ந்தவர். முதல்தர ஆட்டக்காரர். கிரிக்கெட் ஆட்டத்தில் அதிக ஆர்வமும் நீங்கா வேகமும் கொண்டவர்.

1870ம் ஆண்டு, ஜூன் மாதத்தில் ஒருநாள் லார்டு மைதானத்தில் M.C.C. குழுவிற்கு எதிராக இவர் விளையாடியபொழுது, எதிர்பாராமல் ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டது. அதாவது, ப. பிளேட்ஸ் என்பவர் அடித்த பந்தானது, எகிறி வந்து இவர் தலையைத் தாக்கி விட்டது.

இந்தச் சம்பவம் எதிர்பாராமல் நடந்ததுதான். ஆனால், அந்த விபத்தை மிகவும் எச்சரிக்கையுடன் அணுகி, கவனமாக இருந்திருந்தால் சம்மர்ஸுக்கு ஒன்றும் நேர்ந்திருக்காது. அவர் செய்த தவறினால், அதாவது அவர் காட்டிய அலட்சியப் போக்கினால், அவரது உயிருக்கே அது ஆபத்தாய் முடிந்துபோனது.

ஆமாம்! தலையில் பந்தடிபட்ட நான்காம் நாள் சம்மர்ஸ் இறந்து போனார். தலையில் பலத்த அடிபட்டு, உயிர் பிழைத்தவர்கள் எத்தனையோ பேர்கள் இருக்கின்றார்கள். இவருக்கு ஏன் இந்த அவல நிலை ஏற்பட்டது? இதன் காரணத்தை அறியும்பொழுது நமக்கு அவர்மேல் இரக்கத்திற்கு பதிலாக எரிச்சல்தான் வருகின்றது.

தலையில் பந்தடி பட்டதும் சம்மர்சுக்கு, தகுந்த மருத்துவங்களை செய்திருக்கின்றனர் உடனிருந்தோர். வைத்தியத்திற்குப் பிறகு அவர் முழு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அதுதான் முறை. ஆனால், அவர் தன்னை ஒரு இரும்புமனிதர் என்று எண்ணிக் கொண்டார் போலும்! தன் உடம்பு எலும்பாலும் சதையாலும் இரத்தத்தாலும் ஆன ஒரு கலவை என்பதை அறவே மறந்து விட்டார் போலும். தலைக்காயத்தை அவர் மறந்த விட்டார்.

ஓய்வெடுக்காமல் தன் வீட்டுக்குள்ளேயே வேறுவேலை எதையாவது செய்துகொண்டிருந்தாலும் பரவாயில்லை. அவர் மற்றவர்கள் கூறிய அறிவுரையையும் மிறி, முரட்டுத்தனமாக, பிடிவாதமான, காரியத்தை செய்யத் துணிந்தார்.

மறுநாள் காலையில் கிரிக்கெட் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபொழுது, 'நானும் ஆடுவேன்' என்று மைதானத்திற்கு வந்து விட்டார் சம்மர்ஸ். தலைக்காயத்தை மறந்தார். சுட்டெரிக்கும் வெயிலில் நின்று கொண்டு, நாள் முழுதும் பந்தைத் தடுத்தாடும் பணியில் (Fielding) இருந்துவிளையாடினார்.

அதற்கு மேலும் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக் கலாம். அதுதான் இல்லை, லார்டு மைதானத்திலிருந்து தனது இடமான நாட்டிங்காம்ஷயருக்கு பிரயாணம் செய்தார்.

எல்லா அதிர்வுகளும் இணைந்து கொண்டன. காயத்தின் வேகத்தை அதிகப்படுத்தி விட்டன. முடிவு, அந்த விபத்து அவரை கொள்ளை கொண்டு போய்விட்டது. முதல்தர ஆட்டக்காரர், எல்லா வாழ்க்கை நலன்களையும் அனுபவிக்க இருந்த இளைஞர். அகால மரணத்திற்கு ஆளானார். . காயம் ஆறும்வரை அவர் காத்திருந்தால், இது போன்ற எத்தனையோ கிரிக்கெட் போட்டிகளில் அவர் கலந்து கொண்டிருக்கலாம். டெஸ்ட் போட்டியில் கூட இடம் பெற்றிருக்கலாம். ஆனால், விளையாட்டை மிகவும் சீரியசாக நினைத்துக் கொண்டார். ஆர்வத்தை அடக்கியாளாமல் விட்டுவிட்டார். அறிவுக்கு மதிப்புதராது, உணர்ச்சிக்கு இடம் கொடுத்தார். அதற்கு ஒரு பெரிய தண்டனையே அவருக்கு கிடைத்து விட்டது.

விபத்து நிகழாமல் விளையாட வேண்டும் என்பதைத்தான் எல்லோருமே எதிர்பார்க்கிறோம். மீறி விபத்து வந்துவிட்டால், அதை சுகப்படுத்தும்வரை, உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். அதுதான் உண்மையான விளையாட்டு வீரர்களுக்கு அழகாகும். மீறி நடப்பவர்க்கு சம்மர்ஸ்தான் வந்து புத்திகூற வேண்டும்!