விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/இரும்படிக்கும் இடத்தில்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
37. இரும்படிக்கும் இடத்தில்!

இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை என்பது பழமொழி! அப்படிப் போனால் அடிபட்டு சாகும் என்பதுதான் அதன் முடிவாகும் இருக்கும்.

அதுபோலவே, கிரிக்கெட் ஆட்டத்திலே மனிதர்கள்தான் பங்குபெறுவார்கள். விளையாட்டுவீரர்கள் ஆட, அதிகாரிகள் கண்காணிக்க, நடுவர்கள் முடிவெடுக்க, பார்வையாளர்கள் பார்த்து மகிழ, இப்படித்தான் மைதானம் நிரம்பியிருக்கும். அங்கே நாய்க்கும், குருவிக்கும், சுண்டெலிக்கும் என்னவேலை?

1963ம் ஆண்டு ஹோவ் என்னுமிடத்தில் மேற்கிந்தியத் தீவின் குழுவிற்கும், சசக்ஸ் குழுவிற்கும் கிரிக்கெட் போட்டிஒன்று நடைபெற்றது. N.I. தாம்சன் என்பவர் பந்தடித்து ஆடுபவராக இருந்து, பந்தை அடித்தபொழுது, அந்தப் பந்து எல்லை ஓரமாகப் போனது.

வெளியே நின்றுகொண்டிருந்த நாய் ஒன்று, உள்ளே வந்து பந்தை கெளவிக் கொண்டு ஓடிவிட்டது. எல்லைக்கு வெளியே பந்துபோய்விட்டது. நாய் தூக்கிக் கொண்டு ஓடியது சரியல்ல. ஆனாலும் அதற்கு 4 ஓட்டங்கள் உண்டு என்பதாக நடுவர் கூறி, தாம்சனுக்கு 4 ஓட்டங்கள் தந்தார். நாய் அவருக்கு உதவியது என்றாலும், அதற்கு அங்கே வேண்டாத வேலைதானே!

இதுபோல இன்னொரு நாய் உள்ளே புகுந்தபொழுது, என்ன ஆயிற்று தெரியுமா? லார்டுமைதானத்தில் பிரெளன் பிரைட்டன் என்பவர், (1783-1857) மிகவும் வேகப் பந்து வீச்சாளர் என்று பெயர் பெற்றவர். அவர் எறிந்தபந்துபட்டு, நாய் அதே இடத்தில் உயிரை விட்டுவிட்டது. விளையாட்டுக் களத்தை போர்க்களம் என்று நினைத்து வந்து வீரமரணம் எய்தி, வரலாற்றிலும் இடம் பிடித்துக் கொண்டது அந்த நாய். ஆனால், ஒரு ஊர்க்குருவியும், தூக்கணாங்குருவியும் இப்படித்தான், வராத இடத்திற்கு வந்து, வம்பில் புகழும் மரியாதையும், மற்றொன்றுக்கு கிடைக்கவில்லை, பாவம் தூக்கணாங்குருவி!

1885ம் ஆண்டு ஆகஸ்டு 12ம் தேதி கேம்பிரிட்ஜ் எனும் இடத்தில் நடைபெற்ற கிரிக்கெட்ஆட்டத்தில் பங்குகொண்ட குழுக்கள் கெயஸ் மற்றும் டிரினிட்டிஹால் ஆகும். அதில், கார்டியாக்ஸ் என்பவர் எறிந்த பந்து பட்டு, ஒரு தூக்கணாங்குருவி உயிர் துறந்தது. இறந்தது இறந்ததுதான். பரிதாபத்திற் குள்ளாகி வெளியே வீசி எறியப்பட்டது.

ஆனால், ஊர்க்குருவி ஒன்று உயிர் துறந்ததே! அதற்கு வந்த வாழ்வைப் பாருங்களேன்!

1936ம் ஆண்டு லார்டு மைதானத்தில் M.C.C. குழுவிற்கும் கேம் பிரிட்ஜ் கலாசாலைக் குழுவிற்கும் நடைபெற்ற போட்டியில் நுகாங்கீர்கான் எறிந்த பந்து மோதி, அந்த ஊர்க்குருவி உயிரிழந்தது.

ஆனால், மாண்டுபோன குருவியின்மேல் பரிதாபப் பட்டோ என்னவோ, அதனை லார்டு மைதான அரங்கத்தினுள் ஒரு உன்னதமான அறையில் பத்திரமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டு, இன்றும் பார்வையாளருக்குப் பரவசமூட்டும் காட்சிப் பொருளாக அமைந்திருக்கிறது.

1967ம் ஆண்டு இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் நடைபெற்ற போட்டியின்போது, தலைகாட்டிய சுண்டெலி ஒன்று அடிபட்டு மாண்டுபோனது.

கிரிக்கெட் மைதானத்திற்குள் வந்து, பந்தால் அடிபட்டுப்போன நாயும், சுண்டெலியும், குருவியும் வரலாற்றிலே இடம் பிடித்துக் கொண்டன. ஆனால் அதிர்ஷ்டம் உள்ள ஊர்க்குருவியோ தன் மரணத்தில் வாழ்வு பெற்றது. இறந்தும் உயிராக இருப்பதுபோல் வந்தவர்க்கு வரலாறு கூறுகிறது. அப்படி ஒரு அதிர்ஷ்டம் அதற்கு!