விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/ஆர்வத்திற்கு அளவு உண்டோ!

விக்கிமூலம் இலிருந்து
36. ஆர்வத்திற்கும் அளவு உண்டோ!

இளமையின் எழுச்சியும், போராட்ட உணர்ச்சியும் கரைபுரண்டு மோதும் களமாகக் காட்சியளிப்பது விளையாட்டுலகமாகும். விளையாடுகின்றவர்கள் தான் உணர்ச்சி வசப்படுவார்கள், வீறு கொண்டு எழுவார்கள். மாறுபாடுடன் விதிகளை மீறுவார்கள் என்கிற பொதுவான நிலையையும் புறம் தள்ளிவிடுகின்ற பாங்கிலே, பார்வையாளர்களின் எழுச்சியும் உணர்ச்சியும் சில சமயங்களில் எல்லைத் தாண்டிப் போய் விடுவதும் உண்டு.

கிரிக்கெட் ஆட்டத்திலே, இதுபோன்ற கிளர்ச்சி மிகுந்த சூழ்நிலைகள், கேட்டால் நம்ப முடியாத அளவுக்கும் நடந்தேறியிருக்கின்றன. நலம் கெட்டும் போயிருக்கின்றன. நடுவர்களிடம் மோதுவது, விக்கெட்டின் குறிக்கம்புகளை எத்துவது, ஒருவரை ஒருவர் சட்டையைப் பிடித்து இழுப்பது என்பது சர்வ சாதாரணமாக நடக்கக் கூடிய நிகழ்ச்சியாகவும் நிகழ்ந்திருக்கிறது.

ஆனால், சில சமயங்களில் பார்வையாளர்களின் ஆர்வம் காரணமாய் பண்ணுகின்ற அட்டகாசம் அதை அக்கிரமம் என்றுகூடக் கூறலாம், எல்லை மீறிப்போய், நடைபெறுகின்ற ஆட்டத்திற்கே தொல்லையாய் முடிவதுண்டு.

1980ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த கிரிக்கெட் நூற்றாண்டு விழாப்போட்டியில், இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலிய அணியும் போட்டியிட்டன. போட்டி நடைபெற்று வருகின்ற மூன்றாம் நாள், கடுமையான மழை பெய்ததன் காரணமாக, ஆட்டம் நிறுத்தப்பட்டிருந்தது.

வேடிக்கை பார்க்க வந்த ரசிகர்களுக்கு விளையாட்டுப் போட்டி இல்லாதது என்னவோ போல் இருந்தது. எதையோ பறிகொடுத்தவர்கள் போல வெறுமனே அமர்ந்திருந்த

நிலையும் எரிச்சல் மூட்டியதோ என்னவோ போட்டியை ஆரம்பியுங்கள் என்று கூச்சல்போடத் தொடங்கினர்.

மழையினால் விளையாடும் பரப்பு பாதிக்கப்பட்டி ருக்கிறதா என்பதைக் காணவும் நிர்ணயிக்கவும், முக்கிய அதிகாரிகள் சிலர் பந்தாடும் பரப்பு (Pitch) நோக்கிப் போய், நிலையினை அறிய நின்று கொண்டிருந்தனர்.

அந்த இடைவெளி நேரத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாத பேரார்வம் மிகுந்த பார்வையாளர்களில் சிலர், பாய்ந்து அதிகாரிகளை நோக்கி ஓடினர். அதாவது, அதிகாரிகளைச் சுற்றி முற்றுகையிட்டுக் கொண்டு நின்றனர்.

பந்தடிக்கும் பரப்பில் தண்ணிர் தேங்கியிருப்பதைப் பார்த்தனர். அந்தத் தண்ணிரைப் போக்க வேண்டு மானால், சாக்கு போன்ற துணிகளை நனைத்து நனைத்து வெளியே பிழிந்து விடலாம். அதற்காக அங்கே எந்தவிதமான சாதனமும் இல்லை என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

உடனே, அவர்கள்தாங்கள் அணிந்திருந்தகோட், மற்றும் சட்டைகளைக் கழற்றி, இதனை உபயோகித்து, ஆட்டத்தை ஆரம்பியுங்கள் என்று கூறத் தொடங்கினர்.

அவர்களின் ஆர்வத்தையும், ஆட்டத்திற்காகத் தாங்கள் எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் மனப்பான்மையும் கண்டு மகிழ்ந்த அதிகாரிகள், அவர்களது கோட்டையும் சட்டைகளையும் வாங்கிக் கொள்ள மறுத்தனர்.

காலை பத்து மணிக்குத் தொடங்க இருந்த ஆட்டத்தை மாலை 3.45க்குத்தான் தொடங்கினர். தாமதமாகத் தொடங்கினாலும், ஆட்டம் தொடங்கியதே என்று ஆர்வமுள்ள ரசிகர்கள் அனைவரும் ஆனந்தமடைந்தனர்.

மேல் சட்டைகளைக் கழற்றித் தந்த மேல்நிலை பார்வையாளர்களைப் பார்த்தோம். இன்னும் சில போட்டி

நேரங்களில் விலங்குகளாய் மாறி வீணாக்கிய வரலாறும் உண்டு.

1907ம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டில் உள்ள லார்டு மைதானத்தில், மிடில் செக்ஸ் குழுவிற்கும், லங்காஷயர் குழுவிற்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. முதல்நாள் ஆட்டம் தொடங்கிய சில மணிநேரத்திற்குள்ளாக மழை பெய்யத் தொடங்கியதால், ஆட்டம் நின்றது. மழை நின்ற பிறகு, ஆட்டத்தைத் தொடர முயன்றார்கள். ஆனால், பந்தாடும் பரப்பு நன்றாக இல்லை என்று, லங்காஷயர் குழுவின் தலைவன் ஆட மறுத்து விட்டதன் காரணமாகவே, குழப்பம் ஏற்படத் துவங்கியது.

ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடவேண்டும் என்று ரசிகர்கள் குரல் கொடுத்தனர். கூச்சலிட்டனர். அவர்கள் கோரிக்கை ஏற்கப்படாததால், பந்தயத் திடலுக்குள் பாய்ந்து ஓடினர். பந்தடித்தாடும் தரையைப் பார்க்கப் போனது மட்டுமின்றி, அதில் பலபேர் ஒரே சமயத்தில் வெறியுடன் அலைந்தனர்.

அவர்களை அப்புறப்படுத்துவதே சிரமமான காரியமாக ஆயிற்று. கடைசியில் போலீஸ் வந்துதான் அவர்களைக் கலைத்துவிரட்டியது அவர்கள் வெறியால்பந்தடித்தாடும் தரை பாழாய்ப் போயிற்று. பிறகெப்படி ஆட்டம் தொடரும் குரங்கு கை கிடைத்த பூமாலைபோல, அவர்கள் காலிலே பட்ட பந்தடித்தாடும் தரை வீணாய் போயிற்று.

ஆர்வம் அளவோடு இருந்தால், அனைவருக்கும் ஆனந்தம் அளிப்பதாக மாறும். அதுவே மாறி வெறியாகிப் போனால், எப்படி போகும் என்பதற்கு இரண்டாவதாக விளக்கிய நிகழ்ச்சியே சான்றாக அமைந்திருக்கிறது பார்த்தீர்களா!