உள்ளடக்கத்துக்குச் செல்

கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1/வள்ளி கோன் உபதேசம்

விக்கிமூலம் இலிருந்து

வள்ளிகோன் உபதேசம்

ஹிந்து மதம்

மது பாரத நாடு முழுவதும் அமைந்த ஒரு சமயத்தை ஹிந்து மதம் என்று சொல்கிறோம். நாம் சொல்கிறோம் என்று சொல்வதைக் காட்டிலும் மேல்நாட்டார் சொல்ல, நாம் சொல்கிறோம் என்று சொல்வதே பொருத்தம். அவர்கள்தாம் இந்தியா என்றும், ஹிந்து மதம் என்றும் சரித்திரத்தில் எழுதி இருக்கிறார்கள். 'ஹிந்து மதம் என்று ஒரு மதம் உண்டா? இந்தியா முழுமைக்கும் ஒரு சமயம் உண்டா? அப்படியானால் ஹிந்து மதத்திற்குப் பொதுவான தத்துவம் என்ன இருக்கிறது? என்று சிலர் கேட்கிறார்கள். ஹிந்து மதத்திற்குப் பொதுவாக ஏதாவது இலக்கணம் உண்டா என்பதைப் பார்க்கலாம். பொதுவான இலக்கணம் கோயிலுக்குப் போய்க் கும்பிடுவது என்றால், கோயிலுக்குப் போகாத யோகிகள் இந்து மதத்தில் இருக்கிறார்கள்; ஞான விசாரம் பண்ணுகின்ற முனிவர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் கோயிலுக்குப் போவதில்லை. ஆகையால் கோயிலில் போய்க் கும்பிடுவது இந்து மதத்தின் பொதுக் கொள்கை என்று சொல்ல முடியாது. அப்படியானால் விபூதி பூசுவதை ஹிந்து மத அடையாளம் என்று சொல்லலாமா? நாமம் போடுகிறவர்கள் ஹிந்து மதத்தில் இருக்கிறார்கள். நாமம் போடுவதும் அப்படியே பொதுவான இலக்கணம் ஆகாது. வேஷ்டி கட்டாதவர்கள் ஹிந்து மதத்தினர் ஆகமாட்டார்கள் என்றால், 'பாண்ட்' போடுவது ஹிந்து மதத்திற்கு விரோதம் என்று எங்கும் சொல்லவில்லை. காது குத்துவது ஹிந்து மதத்தின் அடையாளம் என்றால், காது குத்தாமல் பல காலம் வாழ்கின்ற பிள்ளைகள் இருக்கிறார்கள். குழந்தைக்கு உபநயனம் செய்யும் போது காது குத்துவது என்ற வழக்கம் உள்ள குடும்பங்கள் இருக்கின்றன. ஆகவே காது குத்துவதையும் அடையாளமாகச் சொல்ல முடியாது. இவற்றை எல்லாம் பார்த்தால் ஹிந்து மதம் என்று பொதுவாகச் சொல்வது தவறு போலத் தோன்றுகிறது.

அத்வைதக் கொள்கையை நிலைநாட்டிய சங்கரர் ஹிந்து மதத்தைச் சார்ந்தவர். ராமாநுஜாசாரியார் விசிஷ்டாத்வைதக் கொள்கையைப் பரப்பினவர்; அவர் ஹிந்து. மத்வாசாரியாரும் ஹிந்து சமயத்தைச் சேர்ந்தவர்; அவர் த்வைதக் கொள்கையை நாட்டில் பரப்பினார். சைவ சித்தாந்தம் இருக்கிறது. வீர சைவம் இருக்கிறது. எல்லாம் ஹிந்து மதத்தைச் சார்ந்தவையே. அவற்றில் ஒன்றை மாத்திரம் ஹிந்து மதம் என்று சொல்ல முடியாது. அரிசி சாப்பிடுகிறவர்கள் ஹிந்துக்கள் என்றால், கோதுமை சாப்பிடுகிறவர்கள் வடக்கே இருக்கிறார்கள். "இப்படி உடை, உணவு, ஆகாரம் ஆகிய எல்லாவற்றிலும் வேறுபாடு இருக்கிற இடத்தில் எப்படி ஐயா ஒரு சமயம் இருக்க முடியும்?' என்ற கேள்வி எழுகிறது.

ஹிந்து மதம் என்ற பெயர் நாம் வைத்தது அல்ல. மேல் நாட்டிலிருந்து வந்தவர்கள் இந்தியாவுக்குள் முதலில் கைபர் கணவாய் வழியாக வந்தார்கள். அதைத் தாண்டியவுடன் அவர்கள் கண்ணில் முதலில் தென்பட்டது சிந்துநதிப் பிரவேசம். அதிலிருந்து சிந்து, ஹிந்து என்ற பெயர்கள் வந்தன. அங்கு இருப்பவர்கள் ஹிந்துக்கள், அவர்கள் மதம் ஹிந்து என்றாகிவிட்டது. அவர்கள் அந்தப் பெயரை இந்தியா முழுமையும் இருக்கின்ற ஒரு சமயத்தை நினைந்து வைக்கவில்லை.

அப்படியானால், இந்தியாவிலே உள்ள சமயங்கள் பலவென்று சொல்ல வேண்டுமேயன்றி, ஒரு மதம் என்று சொல்வது பொருத்தமன்று என்றே தோன்றுகிறதல்லவா? இவ்வளவுக்கும் அடிப்படையான ஒரு பொதுமை இல்லையா? உண்டு.

அருளியல் ஒற்றுமை

ந்த நாடு என்றைக்கும் அரசியலில் ஒரு நாடாக இருந்ததில்லை; இப்பொழுதுதான் இருக்கிறது. ஆனால் அருள் இயலில் கன்னியாகுமரி முதல் இமாசலம் வரைக்கும் ஒரே நாடாகப் பழங்காலம் முதற்கொண்டு இருந்து வருகிறது. வடக்கே போனாலும், தெற்கே போனாலும், எந்த மொழி பேசுகிற நாட்டுக்குச் சென்றாலும் மனிதன் தன் வாழ்நாளில் பெற வேண்டிய பயன் நான்கு என்று சொல்வார்கள். தென் குமரியில் தமிழ் பேசும் மனிதன் அந்த நான்கையே சொல்வான்; வடகோடியில் இருக்கிற வங்காளியும் அந்த நான்கையே சொல்வான். வடக்கே உள்ளவர்கள் 'தர்ம அர்த்த காம மோட்சம்' என்று சொல்வார்கள். தெற்கேயுள்ள தமிழன் அவற்றையே 'அறம் பொருள் இன்பம் வீடு' என்று சொல்வான். இவற்றை உறுதிப் பொருள் என்று சொல்வது வழக்கம். வடமொழியில் புருஷார்த்தம் என்பர். இந்த நான்கும் வாழ்க்கையின் பயனென்ற கொள்கை பொதுவானது என்று சொல்லலாம். பாரத நாடு முழுமைக்கும் உரியவை என்று சொல்கிற சட்டம் ஒன்று உண்டு. இந்த நான்கையும் சொல்லும் அந்தச் சட்டத்திற்கு வேதம் என்று பெயர். ஆகமம் பொதுவான நூல் அல்லவா என்று கேட்கலாம். ஆகமங்களில் வெவ்வேறு பிரிவு உண்டு. வைஷ்ணவ ஆகமம், சிவாகமம், தேவி ஆகமம் என்ற வகைகள் இருக்கின்றன. இந்தியாவிலுள்ள எல்லாச் சமயத்தினரும் மேற்கோளாகச் சொல்கின்ற நூல் ஒன்று உண்டானால் அது வேதம். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் வேதத்திலிருந்து மேற்கோள் காட்டுவார்கள். ராமானுஜர் வேதத்தை மேற்கோளாகக் காட்டியிருக்கிறார். மத்துவாசாரியர் தம் மதத்திற்கு ஆதாரமாக வேதத்திலிருந்து மேற்கோள் எடுத்துக் காட்டியிருக்கிறார். சங்கரரும் வேதத்தைக் காட்டுகிறார். சிவஞானபோத உரைகளிலும் பொதுவான விஷயத்தைச் சொல்லும்போது வேதத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார்கள். எத்தனை விதமான வழிகள் உண்டோ அத்தனைக்கும் மூலசட்டமாக இருக்கிற பொதுநூல் வேதம். இந்த நாட்டிலுள்ள எல்லாச் சமயங்களும் வேதத்தைத் தங்கள் சமயச் சட்ட நூலாகக் கொண்டமையினால் இந்த நாட்டின் மதம் ஒன்று என்று சொல்கிறோம்.

வைதிக மதம்

தற்கு ஹிந்து மதம் என்பது பேராக இருக்க முடியாது. சநாதன தர்மம் என்று இப்பொழுது சொல்கிறார்கள். பழங்கால முதல் இருப்பதனால் அப்படிச் சொல்கிறார்கள். உலகில் பழைய சமயங்கள் சில இருக்கின்றன. அதனால் சநாதனம் என்பது இதற்கென்றே அமைந்த பெயர் ஆகாது. இந்தியாவில் உள்ள சமயங்கள் அத்தனைக்கும் ஒரு பெயர் இருக்குமானால் வைதிகம் என்ற பெயரையே சொல்ல வேண்டும். அவை யாவும் வேதத்தை ஆதாரமாகக் கொண்டமையினால் வைதிக சமயம் என்ற பெயரைப் பெற்றன.

சுட்டாத வேதம்

பாரத தேசத்தில் எந்தப் பகுதியாக இருந்தாலும், எந்த மொழி பேசும் நாடாக இருந்தாலும், எந்த ஆசாரத்தை வைத்துக் கொண்டவர்களாக இருந்தாலும், வேதத்தை நம்பி, அதை மேற்கோளாக வைத்து தங்கள் தங்கள் சமயத்தை அமைத்துக் கொண்டவர்கள் ஹிந்துக்கள். அறம், பொருள், இன்பம், வீடு என்ற இந்த நான்கு புருஷார்த்தங்களும் எல்லோருக்கும் பொதுவானவை. இந்த நாட்டிலுள்ள எல்லா மொழிக்காரர்களுக்கும், எல்லாச் சமயத்தார்களுக்கும் பொதுவான ஒரு நூலாக இருக்கின்ற வேதம் என்ன சொல்கிறது? மனிதன் வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறது; உலகம் எப்படி உண்டாயிற்று என்று சொல்கிறது; இறைவனைச் சுட்டிக் காட்டுவது இல்லை.

நடுத்தெருவில் ஒருவன் இருந்தால் அவன் என்று சொல்வோம். ஒரு பொருள் இருந்தால் அது என்று சொல்வோம். அது, இது, உது என்று மூன்றுவிதமான சுட்டுச் சொற்கள் இருக்கின்றன. பக்கத்தில் இருக்கிறதை இது என்றும், தொலைவில் இருக்கிறதை அது என்றும், மேலே இருப்பதை உது என்றும் சொல்வது வழக்கம். 'உது' என்ற சொல் தமிழ்நாட்டில் வழக்கொழிந்துவிட்டாலும், யாழ்ப்பாணத்தில் இன்னும் வழக்கில் இருக்கிறது. இறைவன் மனத்திற்கும் பொறிக்கும் அப்பால் இருப்பதால் அவன் என்று சொல்கிறோம். வேதம் அவனை எப்படிச் சொல்கிறது? அது என்று சொல்கிறது. வாக்கினாலே சுட்டிக்காட்ட முடியாதவன்; ஆகையாலே, 'அநுபவத்திலே நீயே கண்டுகொள்' என்று சொல்கிறது. அவனைச் சொல்லித் தெரிந்து கொள்ள முடியாது. அவனால் வரும் இன்பத்தையும் சொல்ல முடியாது.

"அதுவானால் அதுவாவர் அதுவே சொல்லும்"

என்கிறார் தாயுமானவர். வேதம் சொல் மயம். சொல்லுக்குள் அடங்காதவனை அதனால் சொல்ல முடியாது. சொல்ல முடியாவிட்டால் அதனால் என்ன பயன் என்று தோன்றும். நேரே சொல்லாவிட்டாலும், ஏதோ ஒரு வகையில் குறிப்பாகப் புலப்படுத்துகிறது.

ஒர் அகதி விடுதியில் பத்து ஆண்கள் இருக்கிறார்கள். தன் கணவனைக் காணாத ஒரு பெண் அங்கே வருகிறாள். ஓர் அதிகாரி அந்தப் பெண்ணிடம், "இவன் உன் கணவனா? இவன் உன் கணவனா?” என்று கேட்டு வருகிறார். "இவன் அல்ல, இவன் அல்ல" என்று சொல்லிக் கொண்டே வருவாள். அந்தப் பத்துப் பேர்களுள் ஒருவன் அவளுடைய கணவன். அவனைச் சுட்டிக்காட்டி, "இவன் உன் கணவனா?" என்று கேட்கும்போது அவள் மௌனமாகத் தலைகுனிந்துகொண்டுவிடுவாள். அந்த மௌனத்தின் பொருள் என்ன? "இவன் என் கணவன்" என்பதே பொருள். பல பல பொருள்களை விரித்து விரித்துப் பேசுகிற வேதம் இறைவனைப் பற்றிச் சொல்ல வந்த இடத்திலே மௌனம் சாதிக்கிறது.

நேதி

வேதம் மற்றப் பொருளைப் பற்றிச் சொல்லி இறைவனை அவை அல்லாத ஒருவன் என்று கூறி மறைமுகமாக எதிர்மறை வாயிலாகச் சுட்டுகிறது. "ந இதி, ந இதி” என்று சொல்கிறது. 'இது அன்று, இது அன்று' என்று பலபல பொருள்களை எல்லாம் மறுத்து ஒதுக்கிவிடுகிறது. இதை நேதி களைந்து பார்த்தல் என்று வேதாந்திகள் சொல்வார்கள். இதைப் பரஞ் சோதியார் சொல்கிறார்.

"அல்லை ஈதல்லை ஈதென மறைகளும் அன்மைச்
சொல்லி னால்துதித் திளைக்குமிச் சுந்தரன்."

வேதம் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறது. எல்லாவற்றையும் அக்கு வேராக ஆணிவேராக அறிவிக்கிறது. ஆனால் ஆண்டவனை நேரே சுட்டாமல், "நீ இப்பொருளும் அல்ல, இப் பொருளும் அல்ல" என்று சொல்லித் துதித்து இளைத்துப் போகிறதாம்.

எதிர்மறைத் துதி

றைவனை, "இது அல்ல, இது அல்ல" என்று சொல்வது எப்படித் தோத்திரமாகும் என்ற கேள்வி எழலாம். நாம் வாழ்கின்ற பேட்டைக்கு ஒரு நல்ல அதிகாரி வருகிறார். அவருக்கு வரவேற்புப் பத்திரம் வாசித்து அளிக்கிறோம். 'உங்களுக்கு முன்பு இருந்தவர்கள் லஞ்சம் வாங்கியதுபோல நீங்கள் வாங்குவது இல்லை; உங்களுக்கு முன்பு இருந்தவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்தது போல நீங்கள் செய்வது இல்லை; அவர்கள் சொத்துத் தேடிக் கொண்டதுபோல நீங்கள் தேடிக் கொள்ளவில்லை" என்று சொல்கிறோம். அவருக்கு அது இல்லை, இது இல்லை என்று சொன்னாலும் அவை அவருக்குப் பெருமையையே உண்டு பண்ணுகின்றன. குற்றம் இல்லாமல் இருப்பதே பெரிய குணம். "உங்களிடத்தில் இந்தக் குற்றங்கள் இல்லை" என்று சொல்வதே அவரிடத்தில் நிறையக் குணங்கள் இருக்கின்றன என்று துதித்தது ஆகும்.

இறைவனைப் பற்றி வரையறை செய்யப் புகுந்து மேலும் மேலும், "இதுவா, அதுவா?' என்று கேட்கும் கேள்வி வளர்ந்து கொண்டே போகும். அது அல்ல; அது அல்ல என்று விடையும் எல்லையின்றி விரிந்துகொண்டே போகும்.

வேதம் ஏன் அப்படி அவன் அல்ல என்று சொல்ல வேண்டும்? அவன் அல்லாத பொருளை அவன் என்று நினைக்கிறோம். ஞான விசாரத்தினால், "அது அவன் அல்ல; அது அவன் அல்ல" என்று தெரிந்து விலகிக் கொண்டே வந்தால், அதுபவப் பொருளாக அவன் இருப்பதை உணரலாம். காலத்தினாலும், இடத்தினாலும் வளர்ந்து வரும் பொருள் அத்தனையும் அவன் அல்ல என்று சொல்ல முடியும். அதனால்தான், "இது அல்ல, இது அல்ல" என்று சொல்லிச் சொல்லி அதற்கு முற்றுப் புள்ளியே இல்லாமல் இளைத்துப் போய் வேதம் நிற்கிறதேயொழிய, இவன் இத்தகையவன் என்று திட்டமாகச் சொல்லவில்லை.

அன்மைச் சொல்

வேதம் சொல்லுகிறதைப் போலவே அருணகிரியார் அன்மைச் சொல்லால் இந்தப் பாடலைச் சொல்கிறார். "ஆண்டவன் எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு" என்று முதலில் சொல்கிறார். "அந்த ஒன்றைச் சொல்லுங்கள்" என்று சொன்னால், "அது அன்று; இது இன்று" என்று அடுக்குகிறார்.

தேன் என்று பாகுஎன்று உவமிக்
கொனாமொழித் தெய்வவள்ளி
கோன், அன்று எனக்குஉப
தேசித்தது ஒன்றுஉண்டு.

"வள்ளிமணாளன் எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு" என்று உண்டு என்ற வார்த்தையை ஒரு முறை சொன்னார். அப்புறம் எத்தனை 'அன்று' சொல்கிறார் பாருங்கள்:

கூறவற்றோ?
வான்அன்று, கால்அன்று, தீஅன்று
நீர்அன்று, மண்ணும் அன்று,
தானன்று, நான்அன்று,
அசரீரிஅன்று, சரீரிஅன்றே.

உண்டு என்ற வார்த்தையை ஒரு முறை சொன்னவர் 'அன்று' என்ற வார்த்தையை ஒன்பது முறை சொல்லிவிட்டார். இந்தப் பாட்டில் அவ்வளவுதான் அடங்கும்; ஆதலால் ஒன்பதுமுறை சொல்லி நிறுத்தினார். மேலும் சொல்லிக்கொண்டே போனால் பாட்டு நீளமாகப் போகும். வேதமே, அன்று, அன்று என்று சொல்லி இளைக்கிறது என்றால், அருணகிரிநாதர் எவ்வாறு முற்றும் சொல்ல முடியும்? உண்டு என்றால் ஒன்று சொன்னால் போதும். அன்று என்றால் அந்த வரிசைக்குக் கணக்கில்லை; முடிவில்லை; சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

வள்ளி நாயகி

தாம் அடைந்த இன்ப அநுபவத்தைச் சொல்ல வருகிற பொழுதெல்லாம், அருணகிரியாருக்கு வள்ளி பெருமாட்டியின் நினைவும் உடன் வரும். ஆறாவது பாட்டில், அரும்பும் தனிப் பரமானந்தம் பற்றிச் சொன்னார். அந்த இன்பத்தைத் தரக் கூடியவன் குறப் பெண்ணாகிய வள்ளியம்மையிடம் தான் இன்பம் அடைபவனைப் போலச் சென்ற குமரன் என்று, வள்ளியம்மையைச் சேர்த்துக் சொன்னார். சாதாரணமாகப் பாலை வெள்ளிக் கிண்ணியில் வைக்கிறோம். மண் குடுவையில் கள்ளை வைக்கிறார்கள். பாலை மண் குடுவையில் வைத்தால் அது கள்ளாகிவிடுமா? எந்தப் பாத்திரத்தில் இருந்தாலும் பால் பாலாகத்தான் இருக்கும். ஆண்டவன் எந்த வேஷம் போட்டாலும், காம மயக்கம் உடையவன் போலத் தோன்றினாலும், அவன் பேரின்ப நலத்தையே வழங்குகிறான். எம்பெருமான் வள்ளி நாயகியிடம் காம மயக்கம் உடையவனைப் போல ஒடி வந்தாலும், அவளைத் தடுத்தாட் கொண்டு பேரின்பத்தையே வழங்கினான். இதைப் பலவிடங்களில் நினைப்பூட்டுகிறார் அருணகிரியார். இங்கே தமக்கு ஒன்று உபதேசித்தவன் வள்ளி மணாளன் என்று சொல்கிறார்.

தேன்என்று பாகுஎன்று உவமிக்
கொணாமொழித் தெய்வவள்ளி
கோன் அன்று எனக்குஉப தேசித்த
தொன்றுஉண்டு

வள்ளி குறமகளாக வளர்ந்தாலும் திருமாலின் மகளாதலின், தெய்வத் தன்மை உடையவள். ஒரு பெண்ணைச் சிறப்பிக்கும் போது அவள் குணத்தைச் சொல்லலாம்; அவள் அங்க நலங்களை வருணிக்கலாம். ஆனால் அங்க நலங்கள் மனிதர்களுக்கே உரிய சிறப்பல்ல. உள்ளம் என்பது மனிதர்களுக்கு இருப்பதுபோலவே மற்ற விலங்குகளுக்கும் இருக்கிறது. அவை நினைக்கின்றன; ஆனால் சொல்லத் தெரிவதில்லை. மனிதர்கள் சிறப்பு அடைவதற்குக் காரணம் உள்ளத்தில் இருப்பதை உரைக்கக் கூடிய சக்தி இருப்பதுதான். வள்ளிநாயகியின் சிறப்பைச் சொல்லவந்தவர் அப்பெருமாட்டியினுடைய மொழியின் இனிமையை எடுத்து உரைக்கிறார்.

மொழி இனிமை

ள்ளியெம்பெருமாட்டி தினைப்புனத்தைக காவல் செய்கிறாள். முருகன் மரத்தின் இடுக்கில் ஒளிந்து கொண்டிருக்கிறான். அவளது உடலும், உள்ளமும் அவனுக்குத் தெரியவில்லை. அவள் ஆலோலம் பாடிக் கொண்டிருக்கிறாள். அந்த இனிமையான மொழி அவன் காதில் விழுகிறது. "அடடா இவள் குரல் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. தேன் போன்றது, பாகு போன்றது என்று உவமித்துச் சொல்லொணாததாக அல்லவா இருக்கிறது?" என்று அவன் நினைக்கிறான். மகளிர் மொழியை தேன் என்றும், பாகு என்றும் உவமித்துச் சொல்வது வழக்கம். வள்ளி நாயகியின் மொழியை அவ்வாறு உவமித்த இடங்கள் இருக்கின்றன.

தேன்மொழி

வைத்தீசுவரன் கோயிலில் எழுந்தருளியிருக்கும் முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழில் வள்ளியின் மொழியைத் தேனென்று கூறுகிறார் குமரகுருபரர். அழகான பாட்டாதலால் அதை இப்போது சிறிது பார்க்கலாம்.

ராமலட்சுமணர்கள் ராவண சங்காரம் செய்துவிட்டுத் தம் பாவங்களைப் போக்குவதற்காக வைத்தீசுவரன் கோயிலுக்கு வந்து பூசை பண்ணினார்களாம். அத்தகைய சிறப்புடைய தலம் அது. அங்கே எழுந்தருளியிருக்கிற வைத்தியநாதப் பெருமானையும், அவனுடைய அருட்சக்தியாகிய பாலாம்பிகையையும் பார்க்க வேண்டுமென்று திரிமூர்த்திகள் வருகிறார்கள். தேவரும் முனிவரும் பக்தருமாகப் பலர் எம்பெருமானது கோயில், வாசலிலே வரிசையாக நின்று கொண்டிருக்கிறார்கள். வைத்தியர் வீட்டிலும், மந்திரம் போடுகிறவர் வீட்டிலும் எப்போதும் கூட்டம் இருப்பதற்குக் கேட்க வேண்டுமா? வைத்தியநாதப் பெருமான் ஒரு பெரிய வைத்தியர். தையல் நாயகியோ பெரிய மந்திரக்காரி. தீராத நோயுடையவர்கள் டாக்டரிடம் வந்து ஆக வேண்டும். தீராத வினை தீர்த்த தம்பிரான் என்று வைத்தியநாத சுவாமிக்குப் பெயர். பேய் பிசாசு பிடித்தவர்கள் மந்திரக்காரி வீட்டுக்கு வராமல் என்ன செய்வது? தையல்நாயகி சந்நிதியில் பேய்கள் ஆடும். அவர்கள் வீட்டில் எந்தக் காலத்திலும் கூட்டத்திற்குப் பஞ்சம் இராது. மும்மூர்த்திகளும் அவர்களுடைய தரிசனத்திற்காக வந்து காத்திருக்கிறார்கள். ஆனால் வாசலிலே பெரிய கூட்டம் நிற்கின்றது. அந்த வரிசையில் நின்றால் அவர்களுடைய தரிசனம் கிடைப்பதற்கு நெடுங்காலம் ஆகும் போல் இருக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.

அப்பொழுது ஒருவர் வருகிறார். "திரிமூர்த்திகளாகிய நீங்களா இங்கே காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? எம்பெருமானையும் எம் பெருமாட்டியையும் காண்பதற்கு நான் உங்களுக்கு ஒரு தந்திரம் சொல்லித் தருகிறேன். இந்த இரண்டு பேரையும் பார்ப்பதற்கு பதிலாக இவர்களுடைய அன்புக்கு உரியவரான ஒருவரைப் பார்த்தாலே போதுமே அது உங்களுக்கு தெரியாதா? இதோ இருக்கிறானே, முத்துக்குமாரசுவாமி. இவன் வைத்தீசுவரப் பெருமானுக்கும் தையல் நாயகிக்கும் அருமருந்து போன்றவன்; அமிருதம் போல இருக்கிறவன். இவனைத் தரிசித்துக் கொள்ளலாம்” என்று சொல்கிறார். அந்த மூன்று பேரும் அதைக் கேட்டு உடனே அந்தக் குழந்தையைப் பார்க்கப் போகிறார்கள். "குழந்தையிடத்தில் போவதானால் அதிகச் சிரமம் இல்லை. கொஞ்சம் வாழைப்பழம், தேங்காய் முதலியவற்றை வாங்கிக் கொண்டு போய்விட்டால் அவன் தரிசனம் எளிதில் கிடைத்து விடும்" என்று எண்ணி அவர்கள் முருகன் கோயிலுக்குப் போகிறார்கள். அங்கும் காத்துக்கிடக்கும்படி ஆகிவிட்டது. அவன் எங்கே போனான்? தினைக் கொல்லையைக் காவல்புரிகின்ற வள்ளியைத் தேடி ஓடி வருகிறான். "அவள் ஒரு வார்த்தை சொல்ல மாட்டாளா? அதைக் கேட்க மாட்டோமா?" என்று ஏங்கி நிற்கிறான். அவள் வாயிலிருந்து எப்பொழுது வார்த்தை உதிரும் என்று காத்துக் கொண்டிருக்கிறான். அவளுடைய தேனூறு கிளவிக்கு வாயூறி நிற்கிறானாம்.

"மீனேறு குண்டகழி தீவாய் மடுத்ததனி
வில்லியார் இளவலோடும்
விதிமுறை வணங்கச் சடாயுபுரி யிற்கருணை
வெள்ளமென வீற்றிருக்கும்
ஆனே றுயர்த்திட்ட ஐயற்கும் அம்மைக்கும்
அருமருந் தாகிநின்ற

ஆதிப் பிரான் என்று மும்முதற் கடவுளும்
ஆடித்தொழும் பாற்றமற்க்
கூனேறு மதிநுதல் தெய்வக் குறப்பெண்
குறிப்பறிந் தருகணைந்துன்
குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கெனக்
குறையிரந் தவள் தொண்டைவாய்த்
தேனுறு கிளவிக்கு வாயூறி நின்றவன்
செங்கீரை ஆடியருளே
செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள
செங்கீரை ஆடியருளே."

பாகு மொழி

குமரகுருபரர் இந்தப் பாட்டில் வள்ளிநாயகியின் மொழிக்குத் தேனை உவமையாக்கினார். அருணகிரிநாதர் அந்த மொழிக்குப் பாகையும் உவமை கூறினார்.

“கரங்கமல மின தரம் பவளம்வளைகளம் பகழிவிழி மொழிபாகு
கரும்பமுது முலைகுரும்பை குருகுபகரும் பிடியினிடை எயின்மாது

என்பது திருப்புகழ். வேறு ஓரிடத்தில், "பாகு கனி மொழி மாது குறமகள்" என்று பாடுகிறார். எம்பெருமானுக்குப் பாகு கொடுக்கும் போது வள்ளிநாயகி இங்கிதமொழி பேசிக் கொடுத்தால் அந்தப் பாகும் கனிந்துவிடுமாம். பாகு கனிவதற்குக் காரணமான மொழி, பாகுக்கும் சுவை மிகச் செய்யும் மொழி என்று பொருள் செய்வது சிறப்பாக இருக்கும். பாகையும் கனியையும் போன்ற மொழி என்றும் சொல்லலாம். இப்படித்தேன் என்றும், பாகு என்றும் வள்ளியின் மொழிக்கு உவமைகளைக் கூறுவது புலவர் வழக்கம். அருணகிரிநாதருக்கு அந்த உவமைகளால் திருப்தி உண்டாகவில்லை. "ஏதோ அவசரத்தில் உபமானம் சொல்லிவிட்டோம். வள்ளியெம்பெருமாட்டியின் மொழிக்கு உபமானம் சொல்வது தவறு" என்று சொல்கிறவரைப்போல இப்போதும் பாடுகிறார்.

தேன் என்று பாகு என்று உவமிக்கொணா மொழித் தெய்வ வள்ளி" என்கிறார். எம்பெருமானது பேரின்ப அநுபவத்தைப்

க.சொ.1-19 பெற்றவள் வள்ளி; அவள் தெய்வத் தன்மை பொருந்தியவள். முருகனே கும்பிடும் தெய்வம் அல்லவா?

அன்று

அன்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு.

ன்று என்பது அந்த நாள் என்று குறிக்கும் சுட்டுச் சொல். முன்னாலே ஒரு நாளைக் குறிப்பிட்டுப் பின்பு அன்று என்று சுட்டினால் இன்ன நாள் என்று தெரியும். இங்கே அருணகிரியார் எந்த நாளைக் குறிப்பிடுகிறார்? இதற்கு முன்னே இன்ன நாள் என்று குறிப்பிட்டிருக்கிறாரா? அப்படி ஒன்றும் இல்லை.

மூவகைச் சுட்டு

ங்கே கொஞ்சம் இலக்கணத்தைப் பார்க்கலாம். "ராவணனை அவன் கொன்றான்” என்றால் எவன் கொன்றான் என்பது நமக்குத் தெரியும். ராமன் ராவணனைக் கொன்றான் என்பது உலகு அறிந்த உண்மை. "அந்தக் காந்தி இருந்தாரே" என்றால் அந்த என்பது யாரைச் சுட்டுகிறது என்பது உலகத்திற்குத் தெரியும். அத்தகைய சுட்டுக்கு உலகறி சுட்டு என்று பெயர். "அவன் அன்றி ஓரணுவும் அசையாது" என்றால் அவன் என்பது "யாரைச் சுட்டுகிறது?" இறைவனைச் சுட்டுகிறது. இது உலகத்திற்குத் தெரியும். ஆகவே உலகறிச் சுட்டு.

"அன்றைக்கு ராவணனை ராமன் கொன்றான்" என்பதில் அன்று என்பது பழைய காலத்தைச் சுட்டுகிறது. "அந்தக் காலம்" என்பதில் வரும் அந்த என்பதும் அத்தகையதே. இது பண்டறிச் சுட்டு.

"என் கல்யாணத்தன்று" என்று ஒரு பெண் தோழி ஒருத்தியிடம் சொல்கிறாள். அந்தப் பெண்ணின் கல்யாணம் என்றைக்கு ஆயிற்று என்று உலகத்திற்குத் தெரியாது; அந்தத் தோழிக்கும் தெரியாது. இது உலகறி சுட்டும் அல்ல; பண்டறிச் சுட்டும் அல்ல. என்றைக்குக் கல்யாணம் ஆயிற்று என்பது அந்தப் பெண்ணின் மனத்திற்கு மாத்திரம் தெரியும். இதற்கு நெஞ்சறி சுட்டு என்று பெயர். "அன்று எனக்கு உபதேசித்தது" என்ற அருணகியார் கூறுவதில் உள்ள அன்று என்பது நெஞ்சறி சுட்டு. அவர் சுட்டும் நாள் அவர் நெஞ்சுக்குத்தான் தெரியும்.

உபதேசம்

"வள்ளிகோன் அன்று உபதேசித்தது ஒன்று உண்டு” என்று முருகன் தமக்கு உபதேசித்தாகச் சொல்கிறார். ஒரு மாணாக்கனுக்கு ஒரு நூலில் ஒன்று விளங்கவில்லை. அதை ஆசிரியன் விளங்கும்படியாகச் சொல்கிறான். நூலிலுள்ள பொருள் விளங்க வில்லையானால் அதற்கு உரை கூறி விளக்குகிறான். இவையாவும் உபதேசங்களே. வேறு சிலர் மந்திரங்களை உபதேசிக்கிறார்கள். மந்திர குருவினுடைய உபதேசத்தையே பெரும்பாலும் உபதேசம் என்று நாம் வழங்கி வருகிறோம். உலகம் நிலையாதது என்பதையும் இறைவன் நிலை இன்னதென்பதையும் வேறு சமய உண்மைகளையும் ஒரு பெரியவர் சொல்கிறார். அவரும் உபதேசம் செய்கிறவரே. சமயப் பிரச்சாரம் செய்கிறவரை உபதேசியார் என்று சிலர் சொல்கிறார்கள்.

இத்தனை உபதேசங்களும் அறிவிலே தெளிவாகப்பதிகின்றன. முன்பு தெரியாமல் குழம்பியிருந்த அறிவில் இப்போது உபதேசத்தால் தெளிவு உண்டாகிறது; உபதேசித்த பொருள் பதிகிறது. அதன் பயனாக உபதேசம் பெற்றவர்கள் மற்றவர்களுக்கும் அந்தப் பொருளை விளக்கும் ஆற்றல் பெறுகிறார்கள். தாம் உபதேசத்தால் அறிந்த ஒன்றைப் பிறருக்குச் சொல்லும் வன்மை அவர்களுக்கு அமைகிறது. அவர் பெற்ற உபதேசம் அப்படிச் சொல்லும் எல்லைக்குள் அடங்கியிருப்பது.

இங்கே, வள்ளிகோன் உபதேசித்தது எப்படி? எதை உபதேசித்தான்? அவன் அறிவிலே பதியும் உபதேசத்தோடு நிற்கவில்லை. அறிவிலே தெளிவுண்டாக்கும் உபதேசம் பிறருக்கு மீட்டும் சொல்லத்தக்க இயல்பை உடையது. "முருகன் தங்களுக்கு உபதேசம் செய்த அந்த ஒன்றை எங்களுக்குச் சொல்லுங்கள்" என்று அருணகிரியாரைக் கேட்டால் அவர், "அந்தோ! அதைக் கூற இயலாதே! கூறும் வன்மை எனக்கு இல்லையே! கூறத்தக்க வன்மையுடையவர்களின் வன்மைக்கு அகப்பட்டது அல்லவே!" என்று சொல்கிறார். "கூறவற்றோ?" என்று பாட்டில் வருகிறது. ஏன் அப்படிச் சொல்கிறார்?

அறிவு, அநுபவம் என்று இரண்டு உண்டு. மனத்தின் பகுதி அறிவு. புத்தியில் பதிகின்ற தெளிவே அறிவு விளக்கம். முருகன் செய்த உபதேசம் அநுபவத்தை உண்டாக்கியது. அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டது அநுபவம். அநுபவம் வரும்போது அறிவு செயலற்று நின்றுவிடுகிறது.

சில இடங்களில் ஞானம் என்று அநுபவ உணர்வைக் குறிப்பிடுவதுண்டு. அங்கே அநுபவம் வேறு, ஞானம் வேறு என்ற பிரிவே இல்லை. அநுபவமே ஞானம்; ஞானமே அநுபவம். மனம் கடந்த நிலை அது.

முருகன் உபதேசித்தது, அறிவிலே பதிகிற உபதேசம் அன்று; உயிரிலே பதிந்த அநுபவம். அந்த அநுபவம் உண்டாகும்படி செய்ததையே இங்கே உபதேசித்ததாகச் சொன்னார். அதனால் தான், "அது கூறும் வன்மைக்கு அகப்பட்டதா?" என்கிறார்.

அநுபவ உணர்வு நுட்பமானது. நுட்பமானவற்றை உப மானத்தாலும் உருவகத்தாலும் சொல்வது வழக்கம். அப்படியாவது இந்த அநுபவத்தை, வள்ளிகோன் உபதேசித்த ஒன்றை, சொல்லிவிட முடியுமா?

வான் அன்று

ல்லாப் பூதங்களையும் தனக்குள் அடக்கி வைத்திருப்பதுவான்; நுட்பமானது; சுட்டிக்காட்ட இயலாதது. "நீங்கள் சொல்கின்ற ஒன்று இந்த வானோ?” என்றால் "வான் அன்று" என்கிறார்.

கால் அன்று

ப்படியானால் மிகவும் இனிமையாக இருப்பது, வெப்பத்தைப் போக்குவது காற்று அல்லவா? அருணகிரியார் பெற்ற அநுபவம் காற்றுப் போல இருக்கிறதா? பிறவியாகிய வெப்பத்தைத் தீர்ப்பதற்கு ஆண்டவன் அருள் தென்றல் காற்றாக வரும் என்கிறார்களே.

"வீசு தென்றலும்"
என்று அப்பர் சொன்னாரே! அந்தக் காற்றை உபமானமாகச் சொல்லலாமா? இப்படிக் கேட்டால், "கால் அன்று" என்கிறார். கால் - காற்று. அந்த இன்ப அநுபவத்தைக் காற்று என்றும் சொல்ல முடியாது.

தீ அன்று

ருக்கின்ற மாசுகளைக் களைவதே இன்பம் என்று சொல்வார்கள். நீரினாலே ஓரளவு மாசுகளைக் களைய முடியும். தீயோ பொருள்களின் மாசுகளைப் போக்கிப் பரிசுத்தத்தைப் தருகின்றவற்றில் சிறந்தது. அந்த அக்கினியை உபமானமாகச் சொல்லலாமா? அதையும் சொல்லக் கூடாது. "தீ அன்று."

நீர் அன்று

ப்படியானால், அப்புவை அமிருதம் என்று சொல்கிறார்கள். உண்பாருக்கு நல்ல உணவுகளை உளவாக்கி, அவற்றை உண்கிறவர்களுக்குத் தானும் உணவானது நீர்.

"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை"

என்கிறார் வள்ளுவர். நெல்லை விளைப்பதற்குத் தண்ணீர் வேண்டியிருக்கிறது. நெல்லிலிருந்து அரிசியைக் குத்தி எடுத்தால் அதைச் சோறு ஆக்கத் தண்ணீர் வேண்டும். சாப்பிட நாம் உட்கார்ந்தவுடன் தாய் ஒரு பாத்திரத்தில் நீரைப் பக்கத்தில் கொண்டுவந்து வைத்துவிட்டுச் சாதம் போடுகிறாள். சாப்பிடுகிறவனுடைய உணவுப் பொருளையும் தண்ணீர் உண்டாக்கிக் கொடுக்கிறதோடு சாப்பிடுகிறவனுக்குத் தானேயும் தனித்து உணவாகிறது. ஆகையால் மிகச் சிறப்பானது தண்ணிர் என்று அநுபவத்தில் காண்கிறோம்.

சில காலத்திற்கு முன்னால் மேல்நாட்டிலிருந்து பெரிய விஞ்ஞானி ஒருவர் வந்தார். ஸர்.ஸி.வி. ராமன் அவரிடம் திடீரென்று, "நீங்கள் அமிருதத்தைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். அவர் சற்றே யோசனை செய்தார். "ஸ்ரீ ராமன் சுத்தமான தண்ணீர் (Pure and Simple water) என்றார். ஆகவே, நீங்கள் அடைந்த அநுபவம் தண்ணீர் போன்றதா?" என்று கேட்டால் "நீர் அன்று" என்கிறார்.

மண் அன்று

ரி. உயிர்கள் உடம்பு எடுத்துப் பக்குவத்தை அடைகின்றன. உடம்புக்கு ஆதாரமாக இருப்பது பூமி. தரை என்று அதற்குப் பெயர். தரை என்பதற்குத் தாங்குவது என்று பொருள். தனக்குத் துன்பம் செய்கிறவனையும் அது தாங்குகிறது. தன்னைவெட்டுகிறவனையும் தாங்குகிறது.

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்"

என்கிறார் வள்ளுவர்.

பூமிக்கு வசுந்தரா என்றும் ஒரு பெயர் உண்டு. வசு என்றால் செல்வம். பலவகையான செல்வங்களை அவள் தன் மடிக்குள் வைத்திருக்கிறாள். சிலர் பணத்தைக்கூடப் பூமியில் புதைத்து வைத்திருக்கிறார்கள். நெய்வேலியில் நிலக்கரி கிடைக்கிறது. கோலாரில் தங்கம் கிடைக்கிறது. இப்படி வெள்ளி, தங்கம், நிலக்கரி, வைரம் ஆகிய எல்லாவற்றையும் பூமி தனக்குள் வைத்திருக்கிறது. தன் வயிற்றில் செல்வத்தை எல்லாம் தாங்குபவள் ஆதலால் வசுந்தரா என்ற பெயர் பூமிக்கு வந்தது. "அத்தகைய பூமியை நீங்கள் அடைந்த அநுபவத்திற்கு ஒப்பாகச் சொல்லலாமா?" என்றால், "மண்ணும் அன்று" என்கிறார்.

இவ்வாறு ஐம்பூதங்களும் அன்று என்று சொல்வதன் வாயிலாகத் தாம் பெற்ற அநுபவம் பூதங்களுக்கும் அப்பாற் பட்டது என்று உணர்த்தினார். ஐம்பூதங்களாலும் வாழ்க்கையில் நமக்கு அநுபவம் உண்டாகிறது. அவர் அடைந்தது அந்த அநுபவம் அன்று.

மூவிடம்

தோடு நிற்கவில்லை. மேலும் அன்று அன்று என்று சொல்கிறார்.

தான் அன்று, நான் அன்று, அசரீரி அன்று சரி அன்றே

தான் என்பதற்கு அவன் என்று பொருள். அவன் என்று சுட்டும் பொருளும் அன்று அந்த அநுபவம். "அப்படியானால் எனக்குத் தெரிந்தது நான்தான். நான் ஆகுமோ?" என்றால், "நான் அன்று" என்கிறார்.

தான் நான் என்னும் இரண்டும் இனச் சொற்கள். இனத்தைச் சுட்டும் வரையில் பேதம் உண்டு. "யான்தான் எனும் சொல் இரண்டுங் கெட்டாலன்றி யாவருக்கும் தோன்றாது சத்தியம்" என்று அருணகிரியார் கூறுவார். தான், நான் என்று சொல்கின்ற பேத உணர்ச்சி இருக்கிற வரைக்கும் அநுபவம் இல்லை. இந்த இரண்டும் கெட்டாலன்றி அவன் அருளைப் பெற முடியாதாம். நான், நீ, தான் என்னும் மூன்றும் ஓர் இனச் சொற்கள் மூன்று இடங்களைக் குறிப்பவை. நான் என்பது தன்மை; நீ என்பது முன்னிலை; தான் என்பது படர்க்கை. பகல் என்று சொன்னால் இரவு இருக்கிறது என்பது குறிப்பால் தெரியும். வேண்டியவன் இருக்கிறான் என்று சொன்னால் வேண்டாதவனும் இருக்கிறான் என்று ஆகும். அதைப் போலவே, தான் என்று சொன்னால் நான், நீ என்பவற்றையும் நினைக்கச் செய்யும்.

முதலில் சொன்ன பஞ்சபூதங்களும் முன்னே உள்ள பொருள்கள்; முன்னிலைக்குச் சமமானவை. அவற்றினூடே வாழ்கின்ற நாம் தன்மை, இறைவன் அவன் என்னும் படர்க்கை. இந்த மூன்று இடங்களுக்கும் அப்பாற்பட்ட அநுபவத்தை அருணகிரிநாதர் பெற்றார். அவன் என்ற படர்க்கையாகக் காணாமல் பெற்ற அநுபவம் ஆதலால் தானும் அன்று என்றார்.

இப்படி அன்று, அன்று என, முன்னிலை, படர்க்கை, தன்மை என்பவற்றை மறுத்துவிட்டுக் கடைசியில் மிகச் சுருக்கமாகச் சொல்லி முடிக்கிறார். உருவம் படைத்த எதையும் உபமானமாகச் சொல்ல முடியாது; உருவம் இல்லாததையும் சொல்வது பொருந்தாது' என்று சொல்கிறார்.

அசரீரி அன்று, சரீரி அன்றே

சுட்டிக் காட்டலாகாத பொருளை எப்படிச் சொல்வது? வேதமே இது அன்று, இது அன்று என்று சொல்லும்போது அவர் எப்படிச் சொல்ல முடியும்? அவர் சொல்லவில்லை என்பதனால் அவருக்கு ஒரு குறைபாடு உண்டாகாது. அவர் சொல்லிவிட்டாரானால் அது அவர் அநுபவத்திற்கு ஒரு குறைபாடு. "கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்" என்பது அல்லவா வழக்கு? வேதத்தினால் சொல்ல முடியாத ஒன்றை இவர் சொல்லிவிட்டார் என்பதனால் அவர் அநுபவத்திற்குப் பெருமை ஏற்படாது; அவர் அநுபவம் சந்தேகத்திற்குரியது என்றே தோன்றும். எல்லாவற்றையும் நன்கு உணர்ந்துள்ள வேதம் சொல்வதைப் போலவே சொன்னார் இவர்; ஆகவே இவர் அடைந்த அநுபவம் சத்தியம் என்று தெரிகிறது.

தேன்என்று பாகுஎன்று உவமிக்
கொணாமொழித் தெய்வவள்ளி
கோன்அன்று எனக்குஉப தேசித்தது
ஒன்றுஉண்டு, கூறவற்றோ?
வான்அன்று, கால்அன்று, தீஅன்று,
நீர்அன்று, மண்ணும் அன்று,
தான்அன்று, நான்அன்று, அசரீரிஅன்று,
சரிரீ அன்றே.

(தேன் என்றோ பாகு என்றோ உவமை கூற இயலாத இனிய மொழியையுடையவளும் தெய்வத்தன்மை உடையவளுமாகிய வள்ளி நாயகியினுடைய கணவன் அன்றைக்கு எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு; அது கூறும் வன்மைக்கு உட்பட்டதோ? அது வானம் அன்று; காற்று அன்று; நெருப்பு அன்று; நீர் அன்று, மண்ணும் அன்று; அவன் அன்று; நான் அன்று; சரீரம் இல்லாதது அன்று; சரீரம் உடையதும் அன்று.

கோன்-தலைவன். அன்று: நெஞ்சறிசுட்டு. வற்றோ - வன்மையானதோ: வன்மைக்கு அகப்பட்டதோ)