இங்கிலாந்தில் சில மாதங்கள்/இன்றைய பாரத தேசம்
இன்றைய பாரத தேசம்
“ருஷ்யப் புரட்சி மார்க்சியத்தை அறிவித்தது. ‘மனிதனை நேசி’ என்ற புதிய தத்துவத்தைப் பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது. பொருளாதார அடிப்படையில் அரசியல் சமுதாயம், தனிமனித உறவுகள் ஒழுக்கப் பிரச்சனைகள் அணுகி அலசிக் காட்டப்படுகின்றன. உழைப்புக்கும் பிழைப்புக்கும் உள்ள அவசியத்தை மார்க்சியம் வற்புறுத்துகிறது. உழைப்பின் சேமிப்பு முதல் எனப்படுகிறது. அந்த முதல் பாரம்பரிய உரிமையாகும் போது தனி மனிதன் மற்றவன் உழைப்பில் வாழத் தொடங்குகிறான், அதற்குத்தான் சொத்துரிமை என்று கூறப்படுகிறது. வசதி பெற்றவன் வீட்டில் பிறந்துவிட்டால் அவன் அந்தச் சொத்துக்கு வாரிசாகிவிடுகிறான்; இல்லாதவன் இல்லாமையிலிருந்து வாழ்க்கையைத் தொடங்குகிறான். நாட்டின் பாதுகாப்பை நம்பி நாம் வாழ முடியவதில்லை; வாழ்க்கை யில் உறுதிப்பாடுகள் இல்லை; தந்தை விட்டுச் செல்லும் சொத்துக்கள் மனைவி கொண்டுவரும் வரதட்சணை, ஓரு ரூபாய் லாட்டரி சீட்டுகள் இந்த அடிப்படையில் வாழ்வைத் தொடங்குகிறான்: அதே அமைப்பைத் தன் வாரிசுகளுக்கும் விட்டுச் செல்கிறான். இதைத்தான் வருணாசிரம் தர்மம் என்று சொல்லி வந்தார்கள்; தெளிவாகச் சொன்னால் தந்தையின் தொழிலை மகன் ஏற்கிறான்; சாதி அடிப்படைகள் இவற்றுக்குத் துணை செய்கின்றன.
தேசம் தனி மனிதனின் நல்வாழ்வுக்கு உறுதி அளிக்காதவரை பெற்றோரின் பாதுகாப்பிலும் அவர்கள் ஈட்டி விட்டுச் செல்கிற பாரம்பரியச் சொத்துக்களையும் நம்பித்தான் அவர்களின் பிள்ளைகள் வாழவேண்டி இருக்கிறது. இது எதுவரை கொண்டு செல்கிறது? அவர்களுக்கு மணவாழ்வு அமைத்துக் கொடுப்பதும் பெற்றோர்களின் பொறுப்பாக இருந்து வருகிறது. இந்த முறை மேல் நாட்டில் இல்லை. ஒருவனும் ஒருத்தியும் பழகி அறிந்து பேசி முடித்துக்கொண்டு பெற்றோர்கள் விருந்தினர்களில் சிலராக அழைக்கப்படுகின்றனர். இங்கே பெரியவர்கள்தான் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கிறது.
எனவே ஒரு புதிய போராட்டம் மாற்றம் நாம் எதிர் நோக்குகிறோம். பிள்ளைகளைப் பாதுகாப்பது; அவர்களுக்கு உறுதியான வாழ்வு அளிப்பது நாட்டின் பொறுப்பு என்ற நிலைக்கு மாறவேண்டும். அப்பொழுதுதான் இந்த பாரத தேசத்தில் சாதிகள் ஒழியும்; பிள்ளைகள் நாட்டுப் பற்றோடு வாழ முனைவார்கள்.