உள்ளடக்கத்துக்குச் செல்

கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1/ஆனந்தத் தேன்

விக்கிமூலம் இலிருந்து













ஆனந்தத் தேன்

முகவுரை

தமிழ்நாட்டில் கடவுளை நினைப்பதற்கு வாய்ப்பாகப் பல அமைப்புக்களும், பொருள்களும் வழக்கங்களும் இருக்கின்றன. கோயில்கள், புராணங்கள், நூல்கள் ஆகியவை கடவுளின் நினைவை எப்போதும் பசுமையாக இருக்கும்படி செய்கின்றன. மக்களுக்கு இடும் பெயர்களும், பண்டிகைகளும் நினைவுக்கு உரமூட்டுகின்றன. கடவுள் ஒருவனே என்ற அடிப்படையான உண்மையை நாம் மறப்பதில்லை. ஆனாலும் அன்பர்களின் விருப்பத்தை நிறைவேற்ற அவன் வெவ்வேறு திருவுருவம் கொள்கிறான் என்று நூல்கள் கூறுகின்றன. அவ்வப்போது திருவவதாரம் செய்த மூர்த்திகளும், அன்பர்களின் வேண்டு கோளுக்கு இணங்க எழுந்தருளிய மூர்த்திகளும் பல பல. திருமால் பத்து அவதாரங்கள் எடுத்தார். ஆனால் அவருடைய திருக்கோலங்கள் பத்தோடு நிற்பவை அல்ல. அவற்றையல்லாமல் வேறு வடிவங்களும் உண்டு. அந்தப் பத்திலும் ஒவ்வொன்றிலும் பல நிலைகள் இருக்கின்றன. ராமன் ஓர் அவதார மூர்த்தி, ஆனாலும் அவனுடைய கோலங்கள் எத்தனை விதமான அன்பர்களுடைய உள்ளத்தே காட்சியளிக்கின்றன. கோசலையின் கைக்குழந்தைகளாகிய கௌசல்யா ராமன் ஒரு மூர்த்தி. தளர்நடை பழகும் ராமன் ஒரு மூர்த்தி. வசிஷ்டரிடம் மாணாக்கனாக இருக்கும் ராமன் ஒரு மூர்த்தி. இப்படியே தசரத ராமன், ஆரண்ய ராமன், சீதா ராமன், கோதண்ட ராமன், பட்டாபிராமன் என்று ராமனுடைய கோலங்களும், நிலைகளும் பலவாக இருக்கின்றன. சிற்பத்திலும் ஒவியத்திலும் வடித்துக் காணும் திருவுருவக் கோலங்களின் வகை இவை.

இவற்றையன்றிக் குணநலங்களை நினைக்கும் நுட்பக் கோலங்கள் பல. இவற்றைக் குறிக்கும் பெயர்கள் அனந்தம். வழிபாட்டு முறைகள், மந்திரங்கள், அர்ச்சனைகள், புராணங்கள், துதி நூல்கள் என்று ராமனைக் காட்டும் கருவிகள் பல. இப்படியே கண்ணனைப் பற்றியும் சொல்லலாம். பாகவதக் கதைகளை வைத்துப் பார்த்தால் கண்ணன் ஆயிரமாயிரம் வேறுபட்ட கோலங் கொண்டு விளங்குவது தெரியும்.

சிவபெருமானைப் பற்றிய எண்ணங்களின் விரிவு கரை காண முடியாதது. தமிழ்நாட்டில் அவை மிக மிக அதிகம். மகா புராணங்களில் காணப்பெறும் மூர்த்தங்கள் பல. அந்த அந்தத் தலங்களின் இறைவன் இயற்றிய திருவிளையாடல்களோடு தொடர்புடைய கோலங்கள் அளவிறந்தன. மதுரைத் திருவிளையாடல் அறுபத்து நான்கு. அவற்றோடு தொடர்புடைய கோலங்கள் அறுபத்து நான்குக்கும் மேற்பட்டவை. திருவாரூர்த் தியாகராச லீலை முந்நூற்றறுபது. ஒவ்வொரு லீலைக்கும் ஒரு கோலத்தை வைத்துக் கொண்டாலும் முந்நூற்றறுபது திருக்கோலங்களை நினைக்கலாம்.

முருகனுக்கும் புராணங்கள் கூறும் கோலங்கள் பல. தியான சுலோகங்களில் காட்டும் உருவங்கள் பல. அருணகிரியார் உள்ளக்கிழியில் உருவெழுதிக் கண்டவை கணக்குக்கு அடங்காதவை. அவருடைய உலகமே தனியானது. அது விரிந்து விரிந்து செல்கிறது. இப்போது கிடைக்கும் 1300 திருப்புகழைப் பார்த்தாலே அருணகிரியாரின் அன்பு விரிவையும் உள்ள விரிவையும் உணர்ந்து பிரமிக்கிறோம். அவர் இயற்றிய பதினாயிரம் திருப்புகழ்ப் பாடல்களும் கிடைத்திருந்தால்...?

தெய்வங்களின் திருவிளையாடற் சிறப்பையும் திருக்கோல அழகையும் தமிழர் உணர்ந்து நுகரும் அளவுக்கு மற்றவர்கள் நுகர இயலாதென்றே தோன்றுகிறது. கல்லிலும், சொல்லிலும் தெய்வங்கள் உருக் கொண்டிருப்பதைக் கொண்டே இதைத் தெரிந்து கொள்ளலாம்.

தமிழில் முருகனைப் பற்றிய செய்திகள் பழங்கால முதற் கொண்டே வழங்கி வருகின்றன. சங்க நூல்களில் திருமுரு காற்றுப்படையும் பரிபாடலும் அவனைப் பாராட்டுகின்றன. அவனுடைய திருக்கோயில்களைப் பற்றிச் சொல்கின்றன. அவனை மக்கள் வெவ்வேறு வகையில் வழிபடுவதையும் காட்டுகின்றன. பின்பும் பல பெரியோர்கள் முருகனைப் பாடினார்கள். ஆனால் அருணகிரிநாதரைப் போல விரிவாகப் பாடினவர்கள் வேறு யாரும் இல்லை. அவருடைய கற்பனையும் சந்த அமைப்பும் வியக்கத் தக்கவை.

அவர் இயற்றிய நூல்கள் எல்லாவற்றிலுமே சில பொதுப் பண்புகளைக் காணலாம். விரிந்த பாட்டாக உள்ள திருப்புகழிலும் கட்டளைக் கலித்துறையாக அமைந்த கந்தர் அலங்காரத்திலும் கலி விருத்தத்தாலாகிய கந்தர் அநுபூதியிலும் அருணகிரிநாதர் பாணி இருக்கும்.

முருகனுடைய திருவுருவ வருணனையை ஓரிடத்தில் அமைப்பார். அவன் திருநாமங்களைப் பிறிதோரிடத்தில் அடுக்குவார். அவன் குழவிப் பருவ விளையாடல்களைச் சொல்வார். வீரச் செயல்களை விரித்துரைப்பார். வள்ளியம்மைபால் காதல் பூண்ட கருணையைப் பாராட்டுவார். இவை கந்தவேளின் திருவிளையாடல்கள். தமக்கு அவனருளால் கிடைத்த இன்பத்தைச் சில இடங்களில் எடுத்துச் சொல்லி உருகுவார். தகுதியில்லாத தம்மையும் ஆண்டுகொண்ட கருணையை எண்ணி வியப்பார். அவன் திருவருளால் தமக்குக் கிடைத்த அநுபவத்தைச் சொல்ல முடியாமல் திணறுவார்.

தாம் தவறு செய்வது போலவும் குற்றம் மிக உடையவர் போலவும் கூறி இரங்குவார். தமக்கு அருள் செய்ய வேண்டுமென்று பணிந்து வேண்டுவார்.

உலகில் மக்கள் இறைவன் அருளைப் பெறாமல் வீணாகப் பிறந்திறந்து அல்லற்படுவதை எண்ணி வாடுவார். இறைவனைப் பணியுங்கள், பாடுங்கள் என்று பணிப்பார். அறம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறுவார். பாவச் செயல்களைச் செய்து வீணாகிறீர்களே; இவ்வாறு நடவுங்கள் என்று வழிகாட்டுவார்.

உயர்ந்த ஞானநெறியைச் சொல்வார். சரியை, கிரியை யோகங்ளையும் சொல்வார்.

முருகனைப் பாராட்டுவதோடு அவனிடம் உள்ள பொருள்களையும் போற்றுவார். அவற்றின் இயல்பை விரித்துரைப்பார். இத்தகைய முறைகளைக் கந்தர் அலங்காரத்திலும் காணலாம்.

கந்தர் அலங்காரத்தில் ஒரு கருத்தை அழகுபடச் சொல்வதற்குப் பலபல முறைகளை ஆளுகிறார் அருணகிரியார். அவர் அருட்புலவர். அருளநுபவமும் புலமையும் ஒருங்கே வாய்த்தவர். அருளநுபவத்தை உணர்ச்சி வசப்பட்டு, "நான் எவ்வாறு சொல்வேன்!" என்று வியப்புக்குறி போடும்போது காணலாம். புலமையை அவர் கருத்தை அமைக்கும் முறையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். உருவகம், உவமை, உயர்வு நவிற்சி முதலிய அலங்காரங்கள் கந்தர் அலங்காரத்தில் அழகாக அமைந்துள்ளன.

கந்த புராணத்தில் முருகனுடைய திருவவதாரம் முதல், வள்ளியம்மை திருமணம் வரையில் பல வரலாறுகள் இருக்கின்றன. அதிற் கண்ட வரலாறுகளோடன்றி முருகனைப் பற்றிய வரலாறுகள் வெவ்வேறாகப் பழங்கால முதல் வழங்கி வருகின்றன. இராமாயணம், பாரதம், வடமொழிக் கந்த புராணம், குமார சம்பவம் என்னும் வடநூல்களில் முருகனைப் பற்றிய வரலாறுகள் வருகின்றன. அவை யாவும் ஒரே மாதிரி அமைந்தவை என்று சொல்ல இயலாது. பல வேறுபாடுகள் இருக்கும். ஒன்றில் காணப்பெறாத புதிய செய்திகள் வேறு ஒன்றில் இருக்கும். அப்படியே திருமுருகாற்றுப் படை, பரிபாடல் முதலிய பழந்தமிழ் நூல்களிலும் கந்த புராணத்தில் இல்லாத கதைகள் இருக்கும்.[1]

அருணகிரிநாதர் வாக்கிலும் பல புதிய வரலாறுகளைக் காணலாம். முருகனையும் அவனைச் சார்ந்துள்ள பொருள்களையும் பற்றிய தத்துவங்களை அவர் பல இடங்களில் விளக்குகிறார். அவனுடைய ஆறுமுகக் கோலம் அநாதியானது என்றும் அவன் மயில் ஓங்கார உருவமுடையதென்றும் அவனைச் சிவபெருமான் வணங்கினார் என்றும் வள்ளியெம்பெருமாட்டியை வணங்கிப் பாதம் வருடினார் என்றும் அவர் கூறும் செய்திகள் புராணத்தில் காணப்படுவதில்லை. ஆனாலும் முருக்ன் அருளில் ஊறிய அவர் கூறுவன ஏற்றுக் கொள்வதற்கு உரியனவே. அப்படியெல்லாம் நடந்தனவா என்று கேட்பதற்கு நாம் யார்? "இல்லை, இல்லை; அப்படி நடக்கவில்லை" என்று சாட்சி கூறும் தகுதிதான் யாருக்கு இருக்கிறது? புலமை மிக்க கவிஞர்கள் தம்முடைய கற்பனையால் உலக நிகழ்ச்சிகளையே வேறு வகையாகக் காட்டும் உரிமை படைத்திருக்கிறார்கள். அவற்றைக் கவி ஸமயம் என்றும் புலவர் மரபு என்றும் கூறுவர். அவ்வாறே இறைவனிடம் முறுகிய பக்தி கொண்டு அவனுடைய திருவருளால் அநுபவ எல்லையிலே சஞ்சரிக்கும் பெரியார்களுக்குத் தம் உள்ளத்தில் விஞ்சியிருக்கும் உணர்ச்சியால் எழும் கற்பனைகளைச் சொல்ல உரிமை உண்டு. புலவர்களுடைய கற்பனைகளைப் பரிவும் கவியுணர்ச்சியும் கொண்டு பார்த்தால் அவற்றின் சுவையை உணரலாம். அருணகிரிநாதரைப் போன்ற அருட் புலவர்களின் வாக்குகளை நுகர்வதற்குப் பரிவு, கவியுணர்ச்சி என்ற இரண்டோடு பக்தியும் வேண்டும். அப்போதுதான் நன்றாக உணர்ந்து அநுபவிக்க முடியும்.

இந்தப் புத்தகத்தில் கந்தர் அலங்காரத்தில் உள்ள ஆறு பாட்டுக்களுக்குரிய விளக்கம் இருக்கிறது. முதல் மூன்று பாடல்களும் அருணகிரியார் தாம் பெற்ற அநுபவத்தை எண்ணி எண்ணி வியக்கும் நிலையிலே பாடியவை. இவை மூன்றிலும் அருணகிரியாரை அருட்கடலில் மூழ்கிக் களிக்கும் அநுபவியாகவே பார்க்கிறோம். "ஆனந்தத் தேனை, வெறும் பாழைத் தெளிய விளம்பியவா!" என்றும், "உபதேசித்தது ஒன்று உண்டு, கூறவற்றோ?" என்றும் "சும்மா இருக்கும் எல்லையுட் செல்ல எனை விட்டவா!" என்றும் அவர் சொல்லும்போது தாம் உண்ட இனிய விருந்தின் இனிமையைச் சொல்ல முடியாமல் ஏப்பம் விட்டுக் காட்டுபவரைப்போலத் தோற்றுகிறார். வியந்து நிற்பதும், சொல்ல இயலாதென்று சொல்வதும் அவருடைய உணர்ச்சிச் சிறப்பைப் புலப்படுத்துகின்றன.

"ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்து உச்சியின்மேல், அளியில் விளைந்ததோர் ஆனந்தத் தேனை" என்னும்போது புலமை நிலையில் நின்று உருவகம் செய்து காட்டுகிறார். உடனே, "அநாதியிலே வெளியில் விளைந்த வெறும் வெறுந்தனியை" என்னும்போது உபநிஷத எல்லையில் நின்று பேசுகிறார். "தெளிய விளம்பியவா!" என்னும்போது அநுபவத்தை நினைந்து வேசாறும் நிலையில் இருக்கிறார்.

"சொல்லுகைக் கில்லையென்று எல்லாம் இழந்து சும்மா இருக்கும் எல்லையுட் செல்ல எனை விட்டவா" என்று தொடங்கும் போதே வியப்புணர்ச்சியில் மூழ்கிவிடுகிறார். அடுத்தபடி வள்ளி நாயகியினிடம் இறைவன் காட்டிய காதலை நினைந்து, "இகல்வேலன், நல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய், வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோள் அண்ணல் வல்லபமே!” என்று பாடுகிறார்.

மூன்றாவது பாட்டை வள்ளிநாயகியை முதலில் நினைத்து, "தேனென்று பாகென்று உவமிக் கொணா மொழித் தெய்வவள்ளி, கோன்” என்று ஆரம்பிக்கிறார். பிறகு தமக்கு உபதேசித்ததைச் சொல்ல இயலாதே என்று வேசாறுகிறார். "எனக்கு உபதேசித்த தொன்று உண்டு, கூறவற்றோ?" என்கிறார். பிறகு சொல்ல முயல்வாரைப்போல முயன்று, முடியாதென்பதையே புலப்படுத்துகிறார்: "வாணன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று, தானன்று, நானன்று, அசரீரியன்று சரியன்றே" என்று சொல்வதில் அக்கருத்தையே காண்கிறோம்.

பின் மூன்று பாட்டிலும் அருணகிரியார் புலமைத் திறனாலும் பக்தி உரிமையாலும் செய்யும் கற்பனை விரிகிறது. மயில் நடக்கும்பொழுது விளையும் விளைவுகளை ஒரு பாட்டிலும், சேவல் சிறகடிக்கும்பொழுது விளைவதை ஒரு பாட்டிலும், திருவரைக் கிங்கிணி ஓசையினால் விளைவதை ஒரு பாட்டிலும் கூறுகிறார். இந்தக் கற்பனைக் காட்சிகள் வேறு ஒருவர் கூறியன அன்று. அருணகிரியாரே மனக் கண்ணிலே உருவாக்கிக் கண்டு கூறுபவை. கந்தபுராணத்திலோ முருகன் வரலாற்றைக் கூறும் வேறு நூலிலோ இந்த நிகழ்ச்சிகள் உள்ளனவா என்று தேடிப் பார்த்துக் காண இயலாது.

கற்பனையானாலும் அவற்றினூடே ஒரு கருத்தும் இருக்கும். சமய நூல்களில் இப்படி ஒரு குறிப்பு இருப்பதைப் பழைய உரையாசிரியர்களின் உரைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த உள்ளுறையை இந்தச் சொற்பொழிவுகளில் ஓரளவுக்கு விரிக்க முயன்றிருக்கிறேன். இன்னும் சிறப்பான உள்ளுறை வேறு அறிஞர்களுக்குத் தோன்றலாம். இதுதான் வரையறையான உள்ளுறை என்று சொல்ல மாட்டேன். ஆயினும் இவை ஓரளவு பொருந்தும் என்றே எண்ணுகிறேன். கூர்ந்து உணர்ந்து பொருத்தத்தை ஆராயும்படி அன்பர்களை வேண்டுகிறேன்.

அலங்கார மாலையில் மூன்றாவது புத்தகம் இது. முன் இரண்டும் எப்படி உருவாயினவோ அதே முறையில்தான் இதுவும் உருவாயிற்று. சுருக்கெழுத்தால் உருவாக்கித் தரும் அன்பர் திரு.அனந்தன் மேலும் மேலும் தம் அன்பை வழங்கி உபசரிக்கிறார். தேனாம்பேட்டை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அறக்காப்பாளர் மூவரும் தம் ஆர்வத்தை என்பால் வளர்த்து வருகின்றார்கள். இவர்களுடைய அன்பை எனக்குக் காணியாக்கித் தந்த முருகன் திருவருளை எண்ணி வாழ்த்துவதையன்றி வேறு என் செய்யவல்லேன்!

கி.வா. ஜகந்நாதன்



10.08.1956

ஆனந்தத் தேன்

அநுபவமும் வியப்பும்

முருகவேளின் வெற்றிப் பிரதாபத்தைப் பேய்களின் விளையாட்டு மூலமாக உணர்த்தினார் அருணகிரிநாதர். பழைய மரபைப் பின்பற்றி முருகன் போர்க்களத்திலே வென்று களவேள்வி செய்த செய்தியைச் சொன்னார். பிறகு, என்னுடைய மனமயக்கத்தைத் தீர்த்தருள வேண்டுமென்று வேண்டிக் கொண்டார். நம்முடைய பிரதிநிதியாக இருந்து நாம் செய்ய வேண்டிய விண்ணப்பத்தை அவர் செய்தார். ஆண்டவனுடைய திருவருளால் இன்ப அநுபவத்தைப் பெற்றவர் அவர். கந்தர் அலங்காரத்தில் முதல் பாட்டிலேயே, "பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா" என்று அந்த அநுபவத்தை எடுத்துச் சொன்னார். மேலும் பல பல பாட்டுக்களில் தம் அநுபவத்தைப் பேசுகின்றார். அப்படிச் சொல்கிற பாட்டு ஒன்றை இப்போது பார்க்கலாம்.

ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத் துச்சியின் மேல்
அளியில் விளைந்ததோர் ஆனந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பிய வாமுகம் ஆறுடைத் தேசிகனே!

"முருகன் ஆறுமுக நாதனாகிய பரமகுரு. அவன் எனக்குச் செய்த உபதேசத்தின் பெருமையை என்ன என்று சொல்வேன்!" என்று ஆச்சரியப்படுகிறார் அருணகிரியார். மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவன் உயர்ந்த நிலைக்கு ஏறிக் கீழே உற்று நோக்கினால் ஆச்சரியம் உண்டாகும். தரையில் இருந்தவன் மலை உச்சிக்குப் பறந்து போய்விட்டான் என்றால், அங்கிருந்து தரையை நோக்கும் போது பேராச்சரியம் உண்டாவது இயல்பு தான். அருணகிரியார் ஆச்சரியப்படுகின்ற பல பாடல்களைக் கந்தர் அலங்காரத்தில் பார்க்கலாம். முதல் பாட்டு அவர் வியப்பிலே மூழ்கிப் பாடியது. "பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவாறு என்னே!" என்பதில் வியப்பு இருக்கிறதல்லவா? இப்போது முகமாறுடைத் தேசிகன் விளம்பிய உபதேசத்தை நினைந்து வியப்படைகிறார்.

தேசிகன்

தேசிகன் என்பது குருவைக் குறிக்கும் சொல். இன்ப அநுபவத்தைப் பெறும்படி உபதேசம் செய்த தேசிகன் முருகன். உலகத்திலுள்ள மக்களுக்கு நல்ல குணம் படைத்த மக்கள் குருக்களாக இருக்கிறார்கள். அந்தப் பெரியார்களுக்கு உலகப் பற்றுகளை எல்லாம் ஒழித்துவிட்டு, இந்திரிய நிக்கிரகம் செய்த துறவிகள் குருக்கள். இந்தத் துறவிகளுக்குப் பழங்காலம் முதற் கொண்டே ஒரு குரு பரம்பரை இருந்து வருகிறது. அந்தப் பரம்பரையில் பழையவர்கள் சனகர் முதலிய நான்கு பேர்கள். இந்த நான்கு பேர்களுக்கும் குருநாதர் இன்னாரென்று யாவரும் அறிவர்; அவரே தட்சிணாமூர்த்தி.

ஒவ்வொரு கோயிலிலும் தெற்கு நோக்கி வீற்றிருக்கிற பெருமான் தட்சிணாமூர்த்தி. அவரைக் குருமூர்த்தி என்று சொல்வார்கள். குரு பரம்பரை அவரோடு நின்றுவிடவில்லை. அவருக்கும் மேலே போகிறது. சிறந்த குருவாய் இருக்கிற தட்சிணாமூர்த்தியும் ஒரு சமயத்தில் மாணவராக இருந்தார். மற்றவர்களை நோக்க எல்லோருக்கும் பரம குருவாய் இருக்கின்ற தட்சிணாமூர்த்தி வேறு ஒருவனை நோக்க மாணவராக இருந்தார். அவன்தான் குமரகுருபரன். குருமூர்த்திகளுக்குள் உயர்ந்தவன் ஆதலாலே குருபரன் என்ற பெயர் பெற்றான். குமரன் ஆகையினாலே அவனைக் குமரகுருபரன் என்று வழங்குவார்கள்.

சிவபெருமானுக்குப் பிரணவப் பொருளை உபதேசம் செய்கின்றபோது முருகன் குருவாய் இருந்தான். சிவபெருமானுக்கே குருவாய் இருந்த நல்ல புகழ் உடையவன் என்றால், அவன் ஆத்துமாக்களுக்கு நல்லுபதேசம் செய்வான் என்று சொல்லவும் வேண்டுமா? தமக்கு அவன் உபதேசம் செய்ததனாலே தாம் அடைந்த இன்ப அநுபவங்கள் என்ன என்பதை இந்தப் பாட்டில் பேசுகின்றார். "ஆறுமுகமுடைய தேசிகன், குருநாதன் எனக்கு என்ன எல்லாம் காட்டினான் தெரியுமா?" என்று தாம் அடைந்த இன்ப அநுபவத்தைச் சொல்ல வருகிறார். முதலில் அந்த அநுபவத்தை இனிமையுடைய தேனாகச் சொல்கிறார்.

மலையின் தோற்றம்

ருவன் ஒர் ஊருக்குச் சென்றான். நட்ட நடு இரவில் பன்னிரண்டு மணி நேரத்தில் சென்றான். இன்ன வீதி, இன்ன வீடு, இன்ன பொருள் என்ற அடையாளங்களே தெரியவில்லை. ஒரே கும்மிருட்டாக இருந்தால் எப்படித் தெரியும்? இரவு கழியட்டும் என்று அவன் பேசாமல் ஓர் இடத்தில் படுத்துக் கொண்டுவிட்டான்.

காலை ஆறு மணி ஆயிற்று. கொஞ்சம் தெளிவு உண்டாயிற்று. ஒளிப்பிழம்பான சூரியன் தன் செங்கதிர்களைப் பரப்பிக் கொண்டு கீழ்த் திசையிலே தோன்றினான். அப்பொழுது பார்த்தால் எதிரே உள்ள பொருள்கள் எல்லாம் தெரிந்தன. தான் தங்கியிருக்கும் இடம் தெரிந்தது; வீடு தெரிந்தது; மக்கள் எல்லாம் தெரிந்தார்கள். அவ்வளவு மாத்திரமா? அந்த ஊருக்கு மிக அருகிலேயே உள்ள ஒரு பெரிய மலை தோன்றியது. இரவில் அந்தப் பெரிய மலை தோன்றவில்லை. அந்த ஊரிலிருந்த குளம் குட்டைகளும் தோன்றவில்லை. ஒரே இருட்டாக இருந்ததுதான் காரணம். அந்த இருட்டு அவனுக்கு மிக உயர்ந்த மலையையும் காட்டவில்லை; மிகப் பள்ளமான குளத்தையும் காட்டவில்லை.

ஆனால் காலையில் சூரியன் ஒளி பரவிய மாத்திரத்திலே பொருள்கள் யாவும் இயற்கை உருவத்தோடு, நிறத்தோடு தோன்றின. பச்சைப் பசேல் என்று உள்ள வயற்காட்டைப் பார்த்தான். சோலைகளிலே பல வண்ணங்களோடு மலர்ந்திருக்கின்ற மலர்களைப் பார்த்தான். பள்ளமான குளங்களைப் பார்த்தான். மிக உயர்ந்திருக்கிற மலையையும் பார்த்தான். இரவு தான் படுத்து உறங்கிய இடத்தைப் பார்த்தான். "அடடா, மிக அழுக்கான இடத்திலே, ஒரு குட்டிச்சுவருக்கு அருகில் அல்லவா நாம் படுத்து உறங்கியிருக்கிறோம்?" என்றும் உணர்ந்தான். ஆடையெல்லாம் ஒரே புழுதி படிந்திருப்பதையும் கண்டு வெட்கப்பட்டான். நாம் படுத்திருந்த இடத்திற்கு மிக்க அண்மையில் இருந்த மலை நம் கண்ணில் படவில்லையே! எனப் பெரிதும் வியப்பு எய்தினான். இருட்டு அவன் கண்ணில் எந்தப் பொருளும் படாதபடி செய்துவிட்டது. எல்லாப் பொருளும் ஒரே கறுப்பாகத் தான் அவனுக்குத் தோன்றியது. சிறிய பொருளாக இருந்தாலும் சரி, பெரிய பொருளாக இருந்தாலும் சரி அதனை மறைப்பது இருட்டு.

ஒளி வந்தபின் அவன் மலையைப் பார்க்கிறான்; மடுவைப் பார்க்கிறான்; எழில் மிக்க மலரைப் பார்க்கிறான். 'அடடா! இவை யாவும் நம் கண்ணில் படாதவாறு இருந்தது என்னே!' என்று வியப்பு எய்துகிறான்.

மேல் நாட்டில் ஆர்க்கிமிடீஸ் என்ற விஞ்ஞானி ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்தபோது, கத்திக் கொண்டு குதித்தானாம். ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்தால் வியப்பு உண்டாகும். இந்த மனிதனும் வியப்பில் மூழ்கினான். அவன் கண்டுபிடித்தது சாமானியமான பொருளா? மிக உயர்ந்து நிற்கும் மலை. அந்த இடத்தில் திடீரென்று மலை முளைத்ததா? இல்லை. முன்பே இருந்த அந்தப் பெரிய மலையை, இருட்டுச் சூழ்ந்து கொண்டிருந்ததால், அவன் பார்க்கவில்லை. ஒளி தோன்றியவுடனேயே அந்த மலை அவன் அதிசயிக்கும்படியாக அவன் கண்ணில் தோன்றியது. புதியதாக அங்கே வந்து நின்றது போல இருந்தது அவனுக்கு. உடனே அதன் மேலே ஏற வேண்டு மென்று விரும்பினான். இருட்டிலே நேராக இருக்கின்ற பாதைகூடத் தெரியாது; சிறிய ஒளியின் துணை இருந்தால் நேரான பாதை தெரியும். ஆனால் கரடு முரடாக இருக்கிற ஒற்றை அடிப்பாதை தெரியாது. நல்ல ஒளி இருந்தால் என்ன கவலை? நேராக இல்லாத பாதையாக இருந்தாலும், காலை தூக்கி வைத்து ஏறுகின்ற செங்குத்துப் பாதையாக இருந்தாலும் நன்றாகத் தெரியும். ஆகவே, அவன் நல்ல ஒளியின் உதவியைக் கொண்டு மலை மேலே மெல்ல மெல்ல ஏறிப் போனான். மலை ஏற ஏற அவன் இருக்குமிடம் பூமி மட்டத்திலிருந்து உயர்ந்து கொண்டே போயிற்று.

பார்வை விரிதல்

நிலத்தில் இருக்கும்பொழுது குறுகிய இடமே அவன்கண்ணில் பட்டது. வீட்டுக்குள் இருந்தால் அந்த வீட்டுக்குள் இருக்கும் பொருள்கள் மட்டுமே தோன்றும்; வீதி தெரியாது; வீதியில் போகின்றவர்கள் யார் என்று தெரியாது. ஆனால் வீதிக்கு வந்தால் அந்த வீதியில் இருக்கிற பொருள்கள் எல்லாம் தோன்றும்; பக்கத்து வீதியில் உள்ள பொருள் ஒன்றும் தெரியாது. மலையின் மேல் ஏறிப் பார்த்தால் அந்த ஊர் முழுவதையும் பார்க்க முடியும். பத்தடி உயரம் ஏறிவிட்டால் அதற்கு ஏற்றபடி முன்பிலும் விரிவான பகுதி அவன் கண்ணில் படும். ஐம்பதடி ஏறினால் பின்னும் விரிவான நிலப்பரப்பைப் பார்க்கலாம். உயர செல்லச் செல்ல அவன் பார்வை விரியும்.

பார்வை விரிவதாவது என்ன? அவன் கண்ணில் படுகிற பொருள்கள் விரிந்தன. குறுகிய எல்லைக்குள் சில பொருள்களைப் பார்த்த அவன் கண்கள் மிக விரிந்த எல்லைக்குள் பல பொருள்களைப் பார்த்தன. அவன் கண்கள் விரியவில்லை. பார்வைப் பொருள்கள் விரிந்தன. அதாவது, அவன் உயரத்தில் ஏற ஏறப் பார்வையை முட்டுகின்ற தடைகள் கீழே போய் விட்டன. வீட்டுக்குள் இருந்தபோது அவன் பார்வை குறுகி இருந்ததற்குக் காரணம் கண் குறுகியதாக இருந்தது அன்று. பார்வை விரிந்து போகாதபடி சுற்றியுள்ள தடைகள் தடுத்தன; வீதிக்குப் போகமுடியாதபடி சுவர்கள் தடுத்தன. வீதிக்கு வந்த பிறகு அடுத்த விதிக்குப் போக முடியாதபடி பெரிய பெரிய மாளிகைகள் தடுத்தன. வெளியே வந்த பிறகு கண்ணுக்கு எட்டிய தூரம் பார்க்க முடியாதபடி தோப்புத் துரவுகள் தடுத்தன. அவன் மலையின் மேலே போகப் போகத் தடைகளுக்கு மேல் சென்றான். முயற்சியினாலே அவன் உயரப் போனான். அது மாத்திரம் அல்ல. உயரப் போகப் போக பல தடைகள் தாழ்ந்து போயின. அவன் பார்வை விரிந்து போக முடியாதபடி தடுத்து நின்ற பொருள்கள் கீழே போகப் போகக் கண்டறியாதன கண்டேன் என்று குதித்தான். அந்தப் பொருள்கள் எல்லாம் புதியனவாக அங்கே வரவில்லை. அவன் வசிக்கின்ற இந்த உலகத்தில் முன்பே பார்க்க முடியாதபடி இருந்தன; அவ்வளவுதான்.

அமெரிக்காவுக்குப் போய் அங்கே உள்ள பொருள்களை ஒருவன் பார்க்கிறான். அங்கே போகாதபோது அந்தப் பொருள் தெரிவது இல்லை. அமெரிக்காவில் உள்ள பொருள் தெரியாமல் இருப்பது ஆச்சரியம் அன்று. நாம் வாழும் இந்தியாவிலேயே நாம் பாராத பொருள்கள் எத்தனையோ உண்டு. நம் ஊரிலே

க.சொ.-17 அடுத்த வீதியில் ஒரு முருகன் கோயில் இருக்கிறது; அங்கே முருகனுக்கு அலங்காரம் பண்ணியிருக்கிறார்கள் என்று தெரிந்தாலும் அதனைப் போய் நாம் பார்க்கிறது இல்லை. பார்க்க முடியாதபடி நமது பார்வையைத் தடுக்கின்ற தடை ஒன்று இருக்கிறது. வீட்டுக்குள் இருப்பவனுக்கு வீதியில் இருக்கிற பொருள் தெரியாதபடி தடுக்கின்றது சுவர். அதைப்போல மனத்திலே இருக்கிற மாயையாகிய சுவர் வெளியில் உள்ள பொருள்களைத் தெரிந்து கொள்வதற்குப் பெருந்தடையாக இருக்கின்றது.

குணம் என்னும் குன்று

லைமேல் ஏற ஏற அவன் பார்வைக்கு தடையாக இருந்தவை கீழே போகின்றமையால் அவன் மிக விரிந்த வெளியில் உள்ள பொருள்களை எல்லாம் பார்க்கிறான். அதைப் போல நம் மனம் இன்றைக்கு இருக்கும் தாழ்ந்த நிலையிலிருந்து உயர வேண்டும். மனத்திலே நல்ல குணங்கள் அமைந்து உயர வேண்டும்.

“குணமென்னுங் குன்றேறி நின்றார்"

என்கிறார் வள்ளுவர். நல்ல குணம் என்னும் மலையின் மீது மனம் ஏற ஏற அதன் பார்வை விரிகிறது. தடையாக இருக்கின்ற பொருள்கள் எல்லாம் கீழே போகின்றன. அவை நமது பார்வையைத் தடுப்பதில்லை. குணம் என்னும் குன்றேறிப் பார்த்தால் நில உலகம் எல்லாம் நல்லதாகத் தெரியும்.

ஒரு சமயம் தருமபுத்திரனைப் பார்த்து, "இந்த உலகத்தில் யாராவது கெட்டவன் இருக்கிறானா, பார்த்து வா" என்று கண்ணன் கேட்டானாம். அதைப் போலவே துரியோதனனைப் பார்த்து, "இந்த உலகத்தில் யாராவது நல்லவன் இருக்கிறானா, பார்த்து வருக" என்று பணித்தானாம். துரியோதனன் எங்கெங்கோ போய்ப் பார்த்தான். அவனுக்கு ஒரு நல்லவன்கூடக் கிடைக்கவில்லை. கடைசியில் அவன், "இந்த உலகத்திலுள்ளவர்கள் எல்லோரும் போக்கிரிகள், நல்லவன் ஒருவன்கூட இல்லை" என்று சொல்லிக் கொண்டு வந்துவிட்டான். ஆனால் தருமபுத்திரனுக்கோ பார்க்கிறவர் எல்லோரும் நல்லவர்களாகவே தோன்றினார்கள். ஒருவன் திருடியதைப் பார்த்தான். "அவன் வறுமை யினால்தானே திருடினான்? வயிற்றுக்கு உணவு கிடைத்திருந்தால் அவன் திருடி இருப்பானா?" என்று எண்ணினான். அவன் குணம் என்னும் குன்றேறி நின்றவன் அல்லவா? அந்தத் திருடன் புரிகின்ற செயலுக்கு அப்பாலே அதற்கு மூல காரணம் இன்னதென்று உணர்ந்தான். ஆகவே, உலகத்திலே இயல்பாகக் கெட்டவர்கள் என்று யாரும் இல்லை என்பதாக உணர்ந்தான்.

"குறுகிய மனப்பான்மை கூடாது. விரிந்த மனோபாவம் வேண்டும்" என்று அரசியல்வாதிகள் சொல்கிறார்கள். எங்கே ஏறினால் விரிந்த மனோபாவம் வரும்? மேடையில் ஏறினால் வராது. குணம் என்னும் குன்றேறி நிற்பவர்களே விரிந்த மனோபாவம் உடையவர்கள்.

மலைத் தேன்

மேலே ஏற ஏறக் கண்ணில் படுகின்ற காட்சிப் பொருள் விரிந்து போகும். "அடடா இவ்வளவு நாளாக இந்தப் பொருள்கள் நம் கண்ணில் படாதது என்னே!" என்று வியப்புணர்ச்சி மேலிடும்.

முன்னே சொன்ன மனிதன் மலை உச்சிக்குப் போய்விட்டான். உச்சியிலே போய்ப் பார்த்தால் அங்கே சந்தன மரங்கள் உயர்ந்து வளர்ந்திருந்தன. சந்தன மரமே உயரமானது. அதுவும் மலை உச்சியின் மேலே வளர்ந்து மிக உயர்ந்து ஓங்கி நிற்கிறது. அந்த மரத்தின் உச்சிக் கொம்பிலே யாரும் தொடாததேன் அடை இருந்தது. மனிதர்கள் வாழ்கிற இடத்திலே இருந்திருந்தால் ஒரு நாள்கூட விட்டு வைத்திருக்க மாட்டார்கள். நெருப்பைப் போட்டுக் கொளுத்தி, வண்டுகளைக் கொலை செய்து தேனை எடுத்துக் குடித்திருப்பார்கள். இங்கோ மனிதன் கண் படாத மலை உச்சியின் மேலேயுள்ள சந்தன மரத்தின் கொம்பில் அந்தத் தேன் அடை இருந்தது; அந்தத் தேன் எப்படி இருக்கும்?

“தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீந்தேன் போல'

என்று நற்றிணையில் ஒரு பாட்டு வருகின்றது. ஒரு நாயகி உயர் குணங்கள் நிரம்பப் பெற்ற தன்னுடைய நாயகனுடைய அன்புக்கு உவமையாக அதனைச் சொல்கிறாள். "என் நாயகன் அன்பு மிக உயர்ந்தது. உயர்ந்தது மாத்திரம் அன்று; இனியது. இனியது மாத்திரம் அன்று, தூயது, கிடைத்தற்கு அரியது" என்று சொல்ல வருகிறாள். இவை எல்லாவற்றையும் அந்த உவமையைச் சொல்வதன் வாயிலாகப் புலப்படுத்துகிறாள்.

கீழேயுள்ள தண்ணிய பொய்கையில் தாமரை மலர் மலர்ந்திருக்கிறது. வண்டுகள் அதிலேயுள்ள தேனை எடுத்துச் சென்று மலை உச்சியின் மேலுள்ள சந்தன மரத்தின் கொம்பில் வைக்கின்றன. அது தாமரைத் தேன், தாமரையிலே அது இருக்குமானால், குளத்தில் இறங்கிக் குளிக்கிற எருமை மாடுகள் அந்த மலர், அதன் தேன் எல்லாவற்றையும் வீணாக அடித்திருக்கும். ஆனால் அந்த இனிமையான தேனை வண்டுகள் எடுத்துப் போய்விட்டன. எளிதில் பிறருக்குக் கிடைப்பதற்கரிய மலையின் உச்சிக்கு எடுத்துப் போய் உயர்ந்து வளர்ந்திருக்கும் சந்தன மரத்தில் கட்டிய அடையில் வைத்திருக்கின்றன. அந்தத் தேனைப் போல இனிய, உயர்ந்த, அரிய அன்பு என்னுடைய நாயகன் அன்பு" என்று அந்தத் தலைவி பேசுகின்றாள். மலையின் உச்சியில் உள்ள சந்தன மரத்தேன் மிகச் சிறந்தது என்பதை அந்தப் பாட்டினால் அறியலாம்.

ஆனந்தத் தேன்

பூமியில் இருப்பவர்களுக்கு, மிகவும் தாழ்ந்த நிலையிலேயே இருப்பவர்களுக்கு, அந்தத் தேன் இருப்பது எப்படித் தெரியும்? மலையில் ஏறி உச்சிக்குப் போனால் தெரியும் முதலில் மெல்ல மெல்ல ஏறினால் இதுவரையிலும் பார்க்க முடியாதிருந்த பொருள்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தோன்றும். பார்வைக்குத் தடையாக இருந்த பொருள்கள் கீழே போய்விடும். மலையின் உச்சியை அடைந்துவிட்டால் அங்கே வளர்ந்திருக்கும் சந்தன மரம் தெரியும். அதன் கிளையிலே கட்டியுள்ள தேன் அடை தெரியும். அந்தத் தேனைச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்!

அத்தகைய சுவையான அரிய தேன் தமக்குக் கிடைத்ததாக அருணகிரியார் சொல்கின்றார். அதை ஆனந்தத் தேன் என்கிறார். அவருக்கு அந்தத் தேன் எப்படிக் கிடைத்தது? "முகம் ஆறுடைத் தேசிகன் அதை நுகர எனக்கு வழிகாட்டினான். அவன் முதலில் காட்டிய அருள் ஒளியினால் என்னைச் சுற்றி நின்ற இருள் அகன்றுவிட்டது. எங்கே பார்த்தாலும் ஒளி பரவியது. இதுவரையிலும் என்னைச் சுற்றியுள்ள பொருள்கள் இன்னவென்று தெரிந்து கொள்ளாமல் இருந்தவன் யாவையும் தெரிந்து கொண்டேன். அவற்றுக்கு அருகிலேயே இருந்தது ஒரு மலை. அந்த ஞான மலையின் உச்சியின்மேலே இருந்த தேனை நான் கண்டு சுவைத்து இன்புறும்படியாக அவன் உபதேசித்தான். அவன் அப்படி உபதேசித்தவாறு என்னே!" என்று பேசுகிறார்.

ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்து உச்சியின்மேல்
அளியில் விளைந்ததோர் ஆனந்தத் தேனை
... ... ... ... ... ...
தெளிய விளம்பிய வாமுகம் ஆறுடைத் தேசிகனே!

'முகம் ஆறுடைத் தேசிகன் நான் தெளியுமாறு உபதேசித்தது என்ன ஆச்சரியம்!' என்கிறார். எதை உபதேசித்தான்? ஆனந்தத் தேனை நான் நுகரும்படியாக உபதேசித்தான். அந்தத் தேன் எப்படிப்பட்டது?

ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்து உச்சியின்மேல்
அளியில் விளைந்தது

ஒளியில் - தன் அருள் ஒளியினால், விளைந்த-உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த, உயர் ஞான பூதரத்து உச்சியின்மேல் - உயர்ந்த ஞானமாகிய மலையின் உச்சியின் மேலே, அளியில்-அன்பிலே, விளைந்தது-பழுத்து முதிர்ந்தது. எது? ஆனந்தத் தேன்; ஆனந்த அநுபவமாகிய தேன்.

இந்த இருண்ட உலகத்திலே சூரியன் ஒளி பட்ட மாத்திரத்தில் ஊர் தெரிந்தது, ஊரிலுள்ள வீடு வாசல்கள் எல்லாம் தெரிந்தன. அந்த ஊருக்கு அருகிலுள்ள மலை தெரிந்தது. அந்த மலையின் மேலே ஏறிப் போனேன். மலை உச்சியிலே மரத்தின் மேல் தேன் இருந்தது. மலைத் தேன் உயர்ந்தது அல்லவா? அந்தத் தேன் சூரியன் ஒளியாலே கிடைத்தது என்று ஒருவன் சொல்வதுபோல உருவகப் படுத்தி அவர் பேசுகிறார்.

தேன் என்பது எதைக் குறிக்கிறது? இன்ப அநுபவங்களைக் கூற இயலாது. சிற்றின்பமாக இருப்பினும் பேரின்பமாக இருப்பினும் வார்த்தைக்குள் அடங்காது. சர்க்கரை இனிக்கும் என்று சொல்கிறோம். "எப்படி இனிக்கும்?" என்று கேட்டால் வேறு பொருள் எதையாவது சுட்டிக் காட்டித்தான் விளக்க முடியுமே அன்றி வார்த்தை அளவைக் கொண்டு விளக்க முடியாது; அல்லது சர்க்கரையை வாயில் போட்டுத்தான் அந்த இனிப்பு அநுபவத்தை உணர்த்த வேண்டும். இறைவனுடைய அருளால் கிடைக்கும் அருளநுபவங்களும் அத்தகையனவே. தாய்க்கும் மகளுக்கும் நெருங்கிய அன்பு உண்டு. தாய் எத்தகைய பரம இரகசியங்களையும் தன் மகளிடம் சொல்வாள். ஆயினும் மணாளனோடு ஆடிய இன்பத்தைச் சொல் என்று மகள் கேட்டால் அதனை அவள் எப்படிச் சொல்வாள்? சொல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தாலும் சொல்ல முடியாது.

"மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய -
சுகத்தைச் சொல்எனிற் சொல்லுமாறு எங்ஙனே?”
(திருமூலர்)

குறிப்பாகச் சொல்லுதல்

ந்திரியங்களுக்கு உட்பட்டு நாம் அநுபவிக்கிற சிற்றின்பமே எடுத்துச் சொல்வதற்கு அரியதாக இருக்கிறதென்றால், இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் கிடைக்கும் பேரின்பத்தை எப்படிச் சொல்லில் அடக்கிச் சொல்ல முடியும்? ஆனாலும் அதை உபமான வாயிலாகப் பெரியோர்கள் சொல்வார்கள். தமக்குத் தெரிந்த ஒன்றைப் பிறருக்கும் சொல்ல வேண்டுமென்ற கருணையுடையவர்கள் அவர்கள். சொல்லக் கூடியவற்றையே, இரகசியமான பாஷையில் (Code) அரசியல் துறையில் சொல்லுகிறார்கள். அந்த இரகசிய பாஷை தெரிந்தவர்களுக்கு மட்டுமே அது தெரிய வேண்டும், பிறருக்குத் தெரியக் கூடாது என்பதுதான் காரணம். அதைப்போலவே சமயத் துறையிலும் பல சித்தர்கள் தாங்கள் அடைந்த இன்பப் பேற்றை, சொல்ல முடியாத இன்ப அநுபவங்களை, குறிப்பாகப் பல பாடல்களில் குறிப்பித்தார்கள். அந்தப் பாடல்களை நாம் எவ்வளவு முறை படித்தாலும் ஒன்றும் புரியாது. மிகவும் வேடிக்கையாக இருக்கும். சில சமயங்களில் அர்த்தமற்ற பாட்டாகக்கூட இருக்கும். சொல்லக்கூடாது என்பதற்காகச் சொல்வது அன்று இது, சொல்ல முடியாமையால் இப்படிச் சொல்கிறார்கள். பல சித்திரங்களைப் பார்க்கிறோம். ஒரு பெண் ஒரு பாத்திரத்தைக் கீழே போட்டு விட்டாள். கீழே விழுந்த பாத்திரம் 'டங்'கென்று ஒசையை எழுப்பிற்று என்று வைத்துக் கொள்வோம். பெண்மணியையும், கீழே விழுந்த பாத்திரத்தையும் ஓவியக்காரர் படம் போட்டுவிடுகிறார். டங்' என்ற ஓசையைப் படத்தில் காட்ட அவர் என்ன செய்கிறார்? அந்தப் பாத்திரத்தைச் சுற்றி சிறு சிறு கோடுகளைப் போடுகிறார். அந்தக் கோடுகள் பாத்திரம் கீழே விழுந்தபோது ஏற்பட்ட ஓசையைக் குறிப்பிக்கின்றன. ரோடுகளில் சில இடங்களில் ஒரு பையன் ஒடுவதைப் போன்ற படம் ஒன்றை எழுதி வைத்திருப்பார்கள். அதைப் பார்த்தால் நமக்கு ஒன்றும் விளங்காமல் இருக்கலாம். ஆனால் மோட்டார் ஒட்டிகளுக்கு, "இங்கே பள்ளிக்கூடம் இருக்கிறது. பையன்கள் நடமாடுவார்கள். காரை மெதுவாக ஒட்டு" என்ற பொருளை அது உணர்த்துகின்றது. அதை ஏன் படம் போட்டு அப்படிக் குறிப்பிக்க வேண்டுமென்றால், “இங்கே பள்ளிக்கூடம் இருக்கிறது. காரை ஜாக்கிரதையாகப் பார்த்து ஒட்ட வேண்டும்" என்று நீளமாக எழுதி வைத்திருந்தால் வேகமாகப் போகிறவர்கள் அதனை நின்று படித்துப் பார்த்துவிட்டு, அதற்குத் தக்கபடி ஒட்ட முடியுமா? கண்ணில்பட்ட மாத்திரத்திலேயே, அதனைப் பார்க்கிறவனுக்கு அதன் குறிப்புப் பொருள் தோன்ற வேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்கிறார்கள். இது உலக வழக்கம்.

குறிப்பாக விளக்கும் முறையினால், விளக்க முடியாதவற்றையும் பெரியவர்கள் புலப்படுத்துவார்கள். சித்தர்கள் அப்படி விளக்குவதை இங்கே ஒர் உதாரணத்தால் பார்க்கலாம்.

சித்தர் பாட்டு

"மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்பார்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி? - குதம்பாய்!
தேங்காய்ப்பால் ஏதுக்கடி?”

என்று சித்தர் ஒருவர் பாடுகிறார். குதம்பைச் சித்தர் பாடல் இது. இதனை வெளிப்படையாகப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். இன்ப அநுபவத்தைப் பெறுகிறவர்களில் இரண்டு வகையினர் இருக்கிறார்கள். சிலர் தம்மளவில் இன்ப அநுபவத்தைப் பெற்று, அதனைப் பிறருக்குச் சொல்லாமல் போய்விடுவார்கள். சிலர் தாம் பெறுவதோடுகூடப் பிறருக்கும் உணர்த்த எண்ணி, அது சொல்ல முடியாததாதலால் குறிப்பாக உணர்த்திப் போவார்கள். அப்படிப்பட்ட மெய்ஞ்ஞானிகளே சித்தர்கள்.

"மாங்காய்ப்பா லுண்டு மலைமேல் இருப்பார்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி? - குதம்பாய்!

என்ற பாட்டைப் பார்த்தால் என்ன விளங்குகிறது? மாங்காய்ப் பால் என்றால் என்ன? மலைமேல் அதை உண்ணுவது என்பது என்ன? பச்சை மாங்காயைக் கிளையில் இருந்து ஒடிக்கும்போது பால் சொட்டும். அதற்குத்தான் பால் என்று பெயரேயன்றி மாங்காய்க்குள் இருக்கும் சாற்றைப் பால் என்று சொல்ல மாட்டார்கள். மாங்காயின் காம்பிலிருந்து வருகின்ற பால் எப்படிப்பட்டது என்பது நமக்குத் தெரியும். குழந்தைகள் அதனைக் கடிக்கும் போது தப்பித் தவறி அந்தப் பால் உதட்டிலே பட்டுவிட்டாலே புண் உண்டாகிவிடும். மேலே பட்டால் புண்ணாகும். அந்தப் பாலையே உண்பவன் எத்தகையவனாக இருக்க வேண்டும்? அந்த ஆசாமி நெருப்பைச் சாப்பிடுகிறவனாகத்தான் இருக்க வேண்டும். அந்தப் பாலை அவன் உண்டு மலை மேலே இருக்கிறான்; அமைதியாக இருக்கிறான். அவன் பெரிய பேர்வழி அல்லவா?

இதன் பொருள் என்ன? பிறருக்குத் துன்பத்தைத் தருகின்ற ஒன்று அவனுக்குத் துன்பம் தரவில்லை. எல்லோருக்கும் துன்பத்தைத் தருகின்றவை பொறிகள். அவை இந்த உடம்பில் இருந்தாலும் அவை அவனுக்குத் துன்பத்தைக் கொடுப்பதில்லை. நாம் நம்முடைய ஐந்து பொறிகளுக்குள் அடங்கிச் செயல்புரிந்து துன்பத்தை அடைகின்றோம். அவனோ ஐந்து பொறிகளையும் அடக்கினவன். ஐந்து பொறிகளும் அவனுக்கு அடங்கிச் செயல்புரிகின்றன.

நமக்கு ஐந்து பொறிகளும் மாங்காய்ப் பாலைப் போலப் புண் தருகின்றன. வாயிலே புண் ஏற்பட்டால், புண்ணை ஆற்றுவதற்குத் தேங்காய்ப்பால் சாப்பிட வேண்டும். ஐந்து இந்திரியங்களினாலே ஏற்படுகின்ற புண்ணை ஆற்றுவதற்குத் தினப்படி பூசை முதலிய நித்திய கர்மானுஷ்டானங்களைச் செய்ய வேண்டி யிருக்கிறது. ஆனால் இந்திரியங்களை நிக்கிரகம் செய்தவர்கள், இந்திரியங்களைத் தங்களுக்கு அடங்கினவையாகச் செய்தவர்கள், அவற்றால் துன்பத்தை அடையாதவர்கள், அவற்றை எதற்குச் செய்ய வேண்டும்? புழுக்கமான இடத்திலே இருப்பவன் கையிலே விசிறி வைத்திருப்பான். நன்றாகக் காற்று வீசுகிற கடற்கரையில் உட்கார்ந்திருப்பவன் கையில் விசிறி எதற்காக வைத்திருக்க வேண்டும்? "பொறிகளின் குறும்புகளை அடக்கி உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்குச் சாதனங்கள், கருவிகள் எதற்கு?" என்ற கருத்தையே,

'மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்பார்க்குத்
'தேங்காய்ப்பால் ஏதுக்கடி? - குதம்பாய்!
'தேங்காய்ப்பால் ஏதுக்கடி?”

என்று சித்தர் மொழியில் சொன்னார் குதம்பைச் சித்தர்.

உள் உருக்கும் தேன்

ருணகிரிநாதரும் தாம் பெற்ற இன்பத்தை ஆனந்தத் தேன் என்று உருவகமாகச் சொல்கிறார். சுகத்திற்கும், துக்கத்திற்கும் அப்பாற்பட்ட இன்பமே ஆனந்தம். அதனைத் தேன் என்று சொன்னார்; அப்படிச் சொன்னால்தான் நமக்கு விளங்கும். அந்தத் தேனைப் பற்றிப் பலர் சொல்லியிருக்கிறார்கள்.

'தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே
'நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
'அனைத்தெலும்பு உண்ணெக ஆனந்தத் தேன் சொரியும்
'குனிப்புடை யானுக்கே சென்றுதாய் கோத்தும்பீ"

என்று மாணிக்க வாசகர் பாடுகிறார்.

தேனை உண்ணுவது வண்டு. இரண்டுவிதமான தேன் உண்டு. நுனி நாக்கில் மட்டும் இனிக்கும் தேன் ஒன்று; உள்ளத்திலும், உயிரிலும் இனிக்கும் தேன் ஒன்று. நுனி நாக்குக்கு மாத்திரம் இனிக்கும் தேனைச் சுவைத்துப் போகிறது வண்டு. மாணிக்கவாசகர் சொல்கின்ற தேனோ நாக்கை மாத்திரம் இனிக்க வைக்கவில்லை. இது ஆனந்தத்தேன். உடம்பில் மிக மிக மென்மையானது நாக்கு. சாதாரணத் தேன் இந்த நாக்கை இனிக்க வைக்கிறது. அவர் சொல்கிற ஆனந்தத் தேன் உடம்புக்குள் மிக மிக வலிதான எலும்பையும் உள்ளே நெகிழும்படி செய்து இனிக்கிறதாம். அதைச் சொரியும் நடனத்தையுடையவனாம் இறைவன். நடராசன் எப்போதும் சுற்றிச் சுழன்று ஆடிக் கொண்டே இருக்கிறான். அதனால் அவன் பாத தாமரை எப்போதும் அசைந்தபடியே இருக்கிறது. அதிலிருந்து அனந்தத் தேன் நாலு பக்கமும் சிதறித் துளிக்கிறது. அவன் எப்போதும் தூக்கிய பாதம் உடையவன். அதை குஞ்சித பாதம் என்று சொல்வார்கள். அந்தக் குஞ்சித பாத தாமரையிலிருந்து தெறிப்பது அந்தத் தேன். அதைச் சுவைக்கின்ற ஆன்மாக்களின் உடம்பிலுள்ள மிக வலியதான எலும்புங்கூட நெகிழ்ந்து இன்மையை உணரும் என்று சொல்கிறார். மனத்தையே வண்டாக வைத்துப் பாடிய பாட்டு இது.

இந்த ஆனந்தத் தேனையே அருணகிரியார் சொல்கிறார். "இறைவன் அருளினாலே அந்தத் தேன் எனக்குக் கிடைத்தது" என்று தெரிவிக்கிறார். "அது எனக்கு முன்னாலே கிடைக்காமல் இருந்தது. கிடைக்கும்படியாக விளம்பியவன் முருகன்" என்கிறார்.

"அந்தத் தேன் எங்கே இருந்தது? மலைமேலே இருந்தது. என்னைச் சுற்றிலும் இருட்டுச் சூழ்ந்திருந்ததால் முதலில் எனக்கு என்னைச்சுற்றியுள்ள பொருள்கள் இன்னவை என்றே தெரியவில்லை. வீடும் தெரியவில்லை. வீதியும் தெரியவில்லை. பள்ளமும் தெரியவில்லை. மேடான மலையும் தோன்றவில்லை. ஒளியாகிய அவன் கருணை கிடைத்த பிறகுதான் எல்லாப் பொருள்களும் தெரிந்தன. அவ்வப் பொருளின் இயற்கை நிறம் தெரிந்தது; உருவம் தெரிந்தது. கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று பூனை நினைக்கும் என்று சொல்வார்கள். அதைப் போல நான் என் உள்ளத்திலுள்ள மயக்கத்தினால் சளத்தில் பிணிபட்டு அசட்டுக் கிரியைகள் செய்து கொண்டுதான் இருந்தேன். என் உள்ளத்தின் மயக்கம் கெட அவன் மெய்ப்பொருள் பேசினான். அவன் அருள் கிடைத்த மாத்திரத்திலே உலகிலுள்ள யாவும் தெரிந்தன. மலை தெரிந்தது. அதன் மேலே ஏறினேன். அங்கே மரத்தில் உள்ள ஆனந்தத் தேன் கிடைத்தது” என்று அறிவிக்கிறார்.

இருளும் ஒளியும்

ருட்டிலே பார்க்கும்போது உலகிலுள்ள பொருள்களின் உருவம் நிறம் முதலியன எப்படி நமக்குத் தெரியவில்லையோ, அவ்வாறே உலக மாயையில் சிக்கி இருக்கின்ற நம் புறக்கண்களுக்கும் உலகிலுள்ள பொருள்களின் உண்மை இயல்பு விளங்குவதில்லை. சூரியன் ஒளி கிடைத்த மாத்திரத்திலே உலகிலுள்ள பொருள்களின் நிறம், வடிவம் எல்லாம் தோன்றுவதுபோல, இறைவன் திருவருள் ஒளி கிடைத்துவிட்டால் நம் அகக் கண்களிலே உலகிலுள்ள பொருள்களின் உண்மைத் தத்துவம் விளங்கும். நமக்கு உலகம் இருண்டு கிடக்கின்றது. "இருள் தருமா ஞாலம்" என்கிறார்கள். ஆனால் சிலருக்கு உலகம் ஒளி மயமாக இருக்கின்றது. அவர்கள் எல்லோரும் இறைவன் அருளால் ஒளி பெற்றவர்கள்.

உலகை ஒளியுலகாகப் பார்க்க வேண்டுமானால் இறைவன் அருள் வேண்டும். அவ்வருளாளல் அகக்கண் பெற்றவர்களுக்கு நமக்குத் தோன்றாதன எல்லாம் தோன்றும். உலகத்திலுள்ள பொருள்கள் நமக்கு நிழற்படமாகத்தான் தெரிகின்றன. அவற்றுக்குள் இருக்கும் தத்துவங்கள் எல்லாம் அவர்களுக்கு நன்றாகப் புலப்படும். நமக்குத் தோன்றவில்லையே எனின், நாம் அறியாமையாகிய இருட்டுக்குள் கிடக்கின்றோம். சூரியனுடைய ஒளியினால் எப்படிப் புற இருள் நீங்கிப் போகின்றதோ, அதேபோல இறைவனுடைய திருவருள் கூட்ட உண்டாகும் ஒளியினால் அறியாமை இருள் விலகிப் போகும். பந்தபாசங்கள் எல்லாம் போய்விடும். அதற்கும் அப்பால் ஞான மலையின்மீது கொஞ்சம் கொஞ்சமாக ஏறினால் தத்துவங்கள் விரிந்துகொண்டே போகும். அந்தத் தத்துவங்களை இப்போது நம் கண்களினால் காண முடியாது. இறைவன் திருவருளினால் பெறப்படும் அறிவுக் கண்களுக்குத்தான் அவை புலப்படும்.

அருள் ஒளி

ழங்காலத்தில் ஒரு பாண்டியன் இருந்தான். வரகுண பாண்டியன் என்பது அவன் பெயர். சிவபிரானிடத்திலே அவன் மிகுந்த பக்தி உடையவன். இறைவன் அருளால் அகக்கண் பெற்றவன். ஒரு வேப்பமரம், பழுத்துக் குலுங்கியிருந்தது. பிறர் கண்களுக்கு வெறும் வேப்பம் பழங்களாகத் தோன்றின பொருள் அவன் கண்களுக்குச் சிவலிங்கங்களாகத் தோன்றினவாம். உடனே அந்த மரத்திற்கு அவன் விதானம் அமைக்கச் செய்து விட்டான். அது மாத்திரமா? நல்ல மழைக்காலம் வந்தது. மழைத் தண்ணிர் தேங்கி நின்ற குட்டையில் தவளைகள் இருந்தன. இரவுக் காலங்களில் அவை ஒன்றாகச் சேர்ந்து சங்கீதம் பாட ஆரம்பித்து விட்டன. அவற்றின் குரல் அவனுக்கு எப்படிக் கேட்டது? பக்தர்கள் எல்லோரும் சேர்ந்து "ஹர ஹர" என்று சொல்வது மாதிரியாக அவனுக்குத் தோன்றியதாம். "ஹர நாமத்தைச் சொல்லும் இந்த நல்ல பிராணிகளுக்கு உணவை வீசுங்கள்" என்று அவன் சொன்னான். இறைவனுடைய நினைவு அவன் உள்ளத்திலே பதிவு பெற்றுவிட்டதால், காணும் பொருள்களிடத் தெல்லாம் அவன் இறைவனுடைய தொடர்பைக் கண்டான். அந்த மாதிரியாக நமக்கும் தோன்றவில்லையே என்றால் நமக்கு எப்படித் தோன்றும்? கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டிருக்கிறவனுக்கு உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களும் காக்கையைப் போலக் கறுப்பாகத்தான் தோன்றும். காமாலைக் கண்ணனுக்குக் கண்டனவெல்லாம் மஞ்சளாகத்தானே தெரியும்? இறைவனது அருளாகிய வெளிச்சம் நமது உள்ளத்தில் அடித்தால்தான் உலகத்திலுள்ள பொருள்களின் உண்மை தெரியும்.

இருட்டிலே ஊரிலுள்ள திக்குத் திசை தெரியவில்லை. சூரியன் வந்த பிறகு அந்த ஊரில் இருக்கிற இடம் தெரிந்தது. மிகப் பெரிய மலை தெரிந்தது. அதைப்போல அஞ்ஞானமாகிய இருட்டிலே அகப்பட்டு நாம் எல்லோரும் இந்த உலகத்தில் ஒன்றும் தெரியாமல் தவிக்கிறோம். நம்முடைய வீடு என்று எதனையோ எண்ணிக்கொண்டிருக்கிறோம். அருளாகிய ஒளி வந்தால்தான், “நாம் யார்? நமக்கும் இவ்வுலகிலுள்ள பொருள்களுக்கும் என்ன சம்பந்தம்? இவ்வுலகிலுள்ள பொருள்களின் உண்மை இயல்பு என்ன? நமது உண்மையான வீடு எங்கே இருக்கிறது?" என்பவை தெரிகின்றன. உலகத்தைத் தெரிந்து கொண்டால் போதுமா? போதாது. உலகம், உயிர், கடவுள் என்ற மூன்று பொருள்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். உலகத்துப் பொருள்களைத் தெரிந்து கொண்டவுடனே, தான் எங்கே இருக்க வேண்டியவன் என்று தெரிந்து கொண்டு, அந்த நிலையை எய்துவது எப்படி எனத் தெரிந்து கொள்கிறான். முன்பு நாம் அப்படி அருவருக்கத் தக்க நிலையில் இருந்தோம் என்பதையும் காண்கிறான். தான் இருக்கிற நிலையிலிருந்து மேலே அண்ணாந்து பார்க்கிறான்; அதாவது, உன்னத திருஷ்டி உடையவனாகிறான். பெரிய மலைக்குப் பக்கத்தில் தான் இருப்பதைப் பார்க்கிறான். உலக இயலுக்கு அப்பாற்பட்ட இறைவனுடைய உண்மையைப் பார்க்கிறான். இவற்றையெல்லாம் பார்க்க அவனுக்கு இறைவனுடைய திருவருள் வேண்டும்; அவன் அருளொளி கிடைக்க வேண்டும். அஞ்ஞானமாகிய இருட்டில் அவன் இவற்றை எல்லாம் பார்க்க முடியாது. எத்தனை தலங்களுக்குப் போனாலும் பயன் இல்லை. எத்தனை முறை ஆகமங்களைப் புரட்டிப் பார்த்தாலும் உண்மை விளங்காது. மாணிக்க வாசகர் சொல்கிறார்:

"இத்தந் திரத்திற் காண்டுமென் றிருப்போர்க்கு
அந்தத் திரத்தின் அவ்வயின் ஒளித்தும்"

இருட்டிலே ஒருவன் உட்கார்ந்து கொண்டு புத்தகங்களின் ஏடுகளைப் புரட்டிக் கொண்டே இருக்கிறான். அதில் ஒன்றுமே தெரியவில்லை என்று சொல்கிறான். எப்படித் தெரியும்? விளக்கைப் போட்டால் புத்தகங்களிலுள்ள எழுத்துத் தெரியும். அப்படித்தான் ஆகமங்களைப் படித்து பார்த்துவிட்டுப் பொருள் புரியவில்லை என்கிறான்; இவன் அறியாமை இருட்டில் இருந்து கொண்டு அதன் ஏடுகளைப் புரட்டுகிறான். ஆனால் ஆண்டவன் அருள் ஒளி கிடைத்த மாத்திரத்திலே அதில் எத்தனை எத்தனையோ பொருள்கள் புலப்படுகின்றன.

ஞான மலை

ருணகிரியார் இன்ப அநுபவத்தை எப்படிப் பெற்றார்? அவருக்கு முதலில் இறைவன் அருளால் ஒளி தோன்றியது; ஒளி தோன்றிய மாத்திரத்தில் நிலம் தெரிந்தது. நிலம் மாத்திரம் தெரிந்ததோடு நிற்கவில்லை. ஒரு பெரிய மலை விளைந்தது.

ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்து.

ஒளியில் விளைந்தது வெறும் சாதாரண மலையா? அது ஞான பூதரம். பூதரம் - மலை. அது பெரிய ஞான மலை. வெறும் கல் மலை அல்ல. விளைந்தது என்றால் உண்டாயிற்று என்று பொருள். திடீரென்று பெரிய மலை எப்படி உண்டாயிற்று? எந்தப் பொருளையும் புதியதாகப் பார்க்கும்போது அது புதியது என்று சொல்வது வழக்கம். நான் ஒரு புதிய ஊரைக் கண்டேன் என்றால் அந்த ஊர் அப்பொழுதுதான் உண்டாயிற்றா? இல்லை. அவன் அந்த ஊருக்கு அப்பொழுதுதான் முதல் முதலாகப் போயிருக்கிறான். அவன் காட்சி புதியதே தவிர ஊர் புதியது அல்ல. இவ்வுலகில் புதிய மலையைக் கண்டேன் என்றால் மலை புதியது அல்ல. அது எப்பொழுதும் அங்கே இருப்பது தான். ஆனால் அவன் காட்சி புதியது. இதற்கு முன்னால் அதை அவன் பார்க்கவில்லை. "நான் இத்தனை காலமும் இந்த உலகில் பல பல பொருள்களைக் கண்டு வந்தேன். ஆனாலும் அவற்றினிடையே ஒரு புதிய தத்துவத்தை இப்பொழுதுதான் கண்டேன். அதுவும் அவனது அருளினாலே கிடைத்த ஒளியிலே கண்டேன்" என்பதையே குறிப்பாகச் சொல்கிறார் அருணகிரிநாதர்.

அருணகிரியார் இறைவனது அருளொளியிலே விளைந்த உயர்ந்த மலை ஒன்றைக் கண்டார். அது ஞான மலை. அந்த மலையின் மேல் ஏற ஏற அவரது பார்வைக்குத் தடையாக நின்ற பொருள்கள் எல்லாம் கீழே போய்விட்டன. உலகம் முழுவதும் விரிந்து கிடக்கின்ற பொருள்களின் உண்மை இயல்புகள் புலனாயின; அந்த மலையின் உச்சிக்குப் போன பிறகு ஒரு புதிய அநுபவம் விளைந்தது. அது எதில் விளைந்தது? அளியில் விளைந்தது; அன்பிலே விளைந்தது. அறிவாகிற மலையில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக முயன்று ஏறி உச்சிக்குச் சென்றுவிட்டார். இனி அதற்கு மேல் அவர் முயற்சி செய்து போகக் கூடி இடம் இல்லை. எல்லாம் கடந்து நின்ற அவருக்கு, ஆனந்தத் தேன் கிடைத்தது. அது அன்பிலே விளைந்த ஆனந்தத்தேன்.

அறிவும் அன்பும்

றிவினாலே மாத்திரம் ஆனந்தத் தேனைப் பெறுவது எந்தக் காலத்திலும் முடியாது. உடல் பலத்தினாலேயும் பெறக் கூடியது அன்று அது. அறிவைக் கொண்டு ஒரு விநாடியில் ஆயிரக்கணக்கான பேர்களை அழிக்கும் ஹைட்ரஜன் குண்டுகளை விளைவிக்க முடியும். அவை வெறும் அறிவினாலே விளைபவை. அது பசை இல்லாத அறிவு. எதிலும் ஒட்டாது. வெறும் அறிவில் ஏறி மேலே மேலே அதன் நுனிக் கொம்பையும் தாண்டிப் போக முயன்றால் கீழே விழ வேண்டியதுதான். அறிவின் நுனியை அடைந்த பொழுது அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட வேண்டும். நாம் ஒருவருடைய வீட்டுக்கு ஒர் ஆளின் துணை கொண்டு போகிறோம். அவன் நமக்கு அவருடைய வீட்டைக் காட்டத் துணையாக வருகிறான். அந்த வீடு வந்தவுடன், அந்த ஆள் நின்று கொண்டுவிடுகிறான். கூட்டிக் கொண்டு வந்தவனை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு நாம் அந்த வீட்டின் சொந்தக்காரனோடு உள்ளே போகிறோம். துணைக்கு வந்தவனையுமா உள்ளே கூட்டிக் கொண்டு போகிறோம்? இல்லை. நமக்குத் துணையாக இருப்பது அறிவு. அந்த அறிவின் துணை கொண்டு தத்துவமாகிற சாரலில் ஏறி மலையின் உச்சியை அடைந்து விட்டோம். அந்த இடத்திற்கு அப்பாலே அறிவுக்கு வேலை இல்லை. அறிவு நிற்க வேண்டிய இடம் அது. அதுவரையில்தான் அறிவு நமக்கு வழிகாட்டியாக வர முடியும். அதற்கு அப்பாலே அநுபவம் வரவேண்டும். அது எப்படி வரும்? அன்பு இருந்தால் வரும். அன்பு வராவிட்டால் இன்ப அநுபவம் நமக்குக் கிடைக்காது. அந்த அன்புப் பசைதான் நம்மை இறைவனோடு ஒட்டுகிறது.

எனவே, அறிவின் தலைநிலத்தில் நின்ற ஒருவனுக்கு அன்பு விளைந்தால் ஆனந்தத் தேன் வரும். அறிவு மலையின் அன்பு மரத்தில் அநுபவத்தேன் இருக்கிறது. "அன்பிலே விளைந்த முதிர்ந்த ஆனந்தத் தேன் நான் பெறும்படி, அநுபவத்திலே தெரிந்து கொள்ளும்படியாக, விளம்பியவாறு என்னே!" என்று ஆச்சரியப்பட்டுப் போகிறார் அருணகிரியார்.

தோழியும் மணப்பெண்ணும்

றிவு நிற்கின்ற இடத்திலே, அன்பு விளைகின்ற இடத்திலே, அநுபவம் தோன்றுகிறது. ஒரு பெண் தன் தலைவனோடு கூடி இன்பம் அநுபவிக்கின்ற கல்யாணம், அன்று அவளுடைய பரம ரகசியங்களை எல்லாம் அறிந்துள்ள தோழிகள் அவளைச் சுற்றிச் சூழ நின்று காலையிலிருந்து பரிகாசம் செய்கிறார்கள். இரவு வந்தது. நன்றாக அலங்கரிக்கப்பட்டுள்ள படுக்கை அறைக்குள் அவளை அழைத்துப் போகிறார்கள். தந்தை கூடத்திலேயே நின்றுவிடுகிறார். தாய் கொஞ்சதூரம் வந்துவிட்டு மறைந்து போகிறாள். தோழிகள் அவளோடு இன்னும் சிறிது தூரம் போகிறார்கள். அவர்களுக்குள் உயிர்த்தோழி படுக்கை அறை வரையிலும் வருகிறாள். ஆனாலும் அறைக்குள் அந்தப் பெண் ஒருத்திதான் போகிறாள். அதுவரையிலுந்தான் தோழி வர முடியுமே தவிர அதற்கு அப்பாலும் அவள் அறைக்குள் வர முடியாது. அங்கே அவளுக்கு வேலை இல்லை. அறைக் கதவு வரையிலும் வந்த தன் தோழியை அங்கேயே நிறுத்திவிட்டு, அவள் அறைக்கதவை தாழிட்டுக் கொண்டு உள்ளே போய் விடுகிறாள், ஆனந்தத்தை அநுபவிக்க.

அதே மாதிரி ஆன்மாவானது இறைவன் ஒருவன் உண்டென்று அறிந்து, அவனை அடைய முடியாமல் தடுக்கின்ற பல இடையூறுகளையும் அருளாகிய ஒளியைக் கொண்டு போக்கி, உலகத்திலுள்ள உண்மைத் தத்துவங்களை எல்லாம் கண்டு, ஞான மலையின் முடிவை அடைந்துவிட்டால், அதற்குப் பிறகே அங்கே அறிவுக்கு வேலை இல்லை. ஆன்மா தனித்து போய் இறைவனோடு ஒட்டி ஆனந்தத் தேனை, அன்பிலே விளைகின்ற ஆனந்தத் தேனை, அநுபவிக்க வேண்டும்; தத்துவாதீதமாய் இருக்கின்ற எம்பெருமானோடு கலந்து இன்பத்தை அநுபவிக்க வேண்டும். அங்கே போகும் அறிவு இங்கும் நான் இருக்கிறேன் என்று வந்தால் அங்கே இன்பம் இராது. அங்கே நாயகன் வரமாட்டான். நாயகனோடு பெண் தனித்து இருக்க வேண்டிய அறை வரையிலும் துணையாக வந்த தோழி எப்படி அந்த அறையின் வெளியிலே நின்றுவிட்டாளோ, அப்படியே தத்துவங்களை எல்லாம் கடந்து வருவதற்குத் துணையாக இருக்கின்ற அறிவு, ஆன்மா இறைவனோடு ஒன்றுபடும் நிலைக்கு முன்னே வெளியிலேயே நின்றுவிட வேண்டும். அறிவு ஆனந்தத் தேனை அநுபவிப்பதற்குக் காரணமாய் இருக்கிறதே தவிர, அந்தத் தேனைச் சுவைக்கும் போது அது நமக்குத் துணையாக இருக்க முடியாது. அன்பு விளைந்தால்தான் இன்பம் உண்டாகும்.

அறிவு செல்ல முடியாத இடத்திற்கும் அன்பு செல்கிறது. அறிவு மாத்திரம் இருந்தால் பல பல பேதங்களை எல்லாம் காணும். தெளிந்த அறிவிலே அன்பு கலந்துவிட்டால் அங்கே அபசுரம் இல்லை.

ஒரு பெண் என்னதான் தாய் தந்தையர் வீட்டில் மிகச் செல்லமாக வளர்ந்தாலும் அவர்களை விட்டுவிட்டு நாயகன் வீட்டுக்குப் போய்விடுகிறாள். குழந்தையாக இருக்கும்போது அம்மாவை விட்டு ஒருகணங்கூடப் பிரிந்து இருக்க மாட்டாள். அப்பாவுக்குச் செல்லப் பெண். இருந்தாலும் கல்யாணம் ஆகிக் கணவன் வீட்டுக்குப் போன பிறகு ஒரு பத்து நாள் வருகிறாள் என்று வைத்துக் கொண்டாலும், அந்தப் பத்து நாளைக்குப் பல தடவை தன் வீட்டுக்குப் போக வேண்டுமென்று சொல்லி விடுகிறாள். "இதுதான் அம்மா உன் வீடு. நீ தவழ்ந்து ஆடி விளையாடிய கூடம் இதோ இருக்கிறது பார். நீ வைத்த வாழை எப்படி வளர்ந்திருக்கிறது பார்" என்று அவள் தாய் சொன்னாலும் அவள் அவை எல்லாவற்றையும் விட்டுத் தன் வீட்டுக்குப் போக வேண்டுமென்கிறாள். தன் வீடு என்று எதைச் சொல்கிறாள்? நாயகனோடு இருக்கும் இடத்தைச் சொல்கிறாள். பிறந்த வீட்டை அவள் தன் வீடு என்பதே இல்லை. கல்யாணம் ஏதோ ஒரு நாள் நடக்கிறது. கல்யாணம் ஆகிற வரைக்கும் இருபது இருபத்திரண்டு ஆண்டுகள் அவள் தாய் தந்தையர்களின் வீட்டிலே இருந்திருக்கிறாள். ஆனால் அந்த ஒரு நாள் கல்யாணம் ஆன பின், அந்த வீட்டை அவள் தன் வீடு என்று சொல்லமாட்டேன் என்கிறாள். அதே மாதிரியாக உள்ளத்தில் மயக்கம் இருக்கிறவரையில் நாம் இப்பொழுது இருக்கிற வாழ்க்கையே மிக உயர்ந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் இருக்கிற வீடுதான் நமது வீடு என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அறிவு மலையிலே ஏறி மாயை நீங்கிவிட்டால் அப்போது இந்த உலகத்திலே இந்திரியங்களின் வாயிலாக அநுபவிக்கும் இன்பங்களை எல்லாம் வெறுக்கத் தலைபட்டுவிடுகிறோம். அறிவின் துணைக் கொண்டு, உண்மைப் பொருளை அறிந்துவிட்டால், அப்புறம் அங்கே அறிவுக்கு வேலை இல்லை. அறிவு அதோடு நின்று விடுகின்றது. உள்ளத்தில் அன்பு விளைந்தால் அந்த நிலையிலேயே இன்ப அநுபவம் உண்டாகிறது. வெறும் அறிவை மாத்திரம் வைத்துக் கொண்டு பயன் இல்லை. ஆண்டவனுடன் கலந்து ஆனந்தத்தைச் சுவைப்பதற்குத் துணையாக இருப்பது அன்புதான்.

அறிவு நழுவுதல்

சங்கராசாரிய சுவாமிகள் தம் அறிவின் துணை கொண்டு பல பல இடங்களுக்கும் சென்று பல பேரோடு வாதாடி அத்துவைதக் கொள்கையை நிலைநாட்டினார். பிற சமயவாதிகளை எல்லாம்

க.சொ.1-18 வென்றார். ஆயினும், அந்த அறிவுக்கும் அப்பாற்பட்ட ஆனந்தத்தை, அன்பாலே விளைந்த ஆனந்தத் தேனை, இறைவனோடு கலந்து அநுபவித்துச் சிறந்து நின்றார். அந்தத் தேனை உண்ட மயக்கத்திலே சிவானந்த லகரி பாடினார். லகரி என்பது மயக்கம். ஆனந்த லகரி அன்பினாலே பிறந்தது. அன்பினாலே உள்ளம் உருகிப் பாடினார். பிற சமயத்தையெல்லாம் வாதத்தினாலே வென்றது, அவரிடம் ஓங்கி நின்ற அறிவு. அது அவருக்கு ஆனந்தத்தைக் கொடுக்கவில்லை. அந்த அறிவுக்கும் எட்டாத ஆனந்தத்தை அவர் அன்பினாலே கசிந்து கசிந்து உருகிப் பெற்றார்; பக்தி இல்லாமல் அன்பு இல்லாமல் யாரும் அறிவினால் மாத்திரம் அந்த ஆனந்தத்தை அடைய முடியாது.

அறிவின் துணை கொண்டு உலகத்திலுள்ள பொருள்களின் உண்மையை உணர்ந்து கொண்டிருக்கலாம். உள்ளத்திலுள்ள மயக்கத்தைப் போக்கிக் கொண்டிருக்கலாம். பலபல தத்துவங்களைக் கடந்து செல்லலாம். ஆனால் ஆண்டவனோடு கலந்து இன்பத்தை அடையக் கூடிய நிலையில் அறிவு நழுவிப் போய், அன்பு தலைப்பட வேண்டும். இறைவனுடைய திருவருளினால் மாயா இருளைப் போக்குகின்ற ஒளியைப் பெற்று, அறிவின் துணை கொண்டு, ஞானமலையின் மேலே, தத்துவங்களாகிற படிகனை ஒவ்வொன்றாகக் கடந்து சென்றுவிட்டால், உச்சியை அடைந்துவிட்டால், அறிவு நழுவிப் போய், அன்பு முதிர்ந்து நிற்கும்; அப்போது ஆனந்தத் தேனை அநுபவிக்கலாம். “அதனை நான் அநுபவிக்கும்படியாக விளம்பியவாறு என்னே!" என்று வியப்பு அடைகிறார் அருணகிரியார்.

ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்து உச்சியின்மேல்
அளியில் விளைந்தது ஒர் ஆனந்தத் தேனை,...
தெளிய விளம்பியவா, முகம் ஆறுடைத் தேசிகனே!

வெறும் பாழ்

மக்குச் சூரியன் ஒளி தெரியும். கல் மலை தெரியும். தேன் தெரியும். இவற்றுக்கு உருவம் உண்டு. அருணகிரியாரும் ஒளி என்கிறார், மலை என்கிறார், தேன் என்கிறார். அப்படியானால் அவர் சொல்லுகின்றவற்றுக்கு உருவம் உண்டா? அவற்றைப் பார்க்கலாமா?' என்ற சந்தேகம் நமக்குத் தோன்றலாம். உண்மையில் அங்கே ஒன்றும் இல்லை. அவை யாவும் நமக்கு அகக்கண் இல்லாவிட்டால் தோன்றா. விளக்க முடியாத உருவற்ற பொருளை உருவம் கொடுத்து நமக்கு விளக்கினார் அவர். தாம் உணர்ந்த பொருளை பிறருக்கு உணர்த்துவதற்காக உருவகமாகச் சொன்னார். "இவை எல்லாம் உண்மை அல்ல. உனக்குப் புரிய வேண்டுமென்பதற்காக உன் மொழியில் சொன்னேன். அறியாமை இருளில் சிக்குண்டு கிடக்கிறவனுக்கு, அருள் ஒளியில் ஞான மலை தோன்ற, அதில் ஏறி ஆனந்தத்தேனை நுகர வேண்டுமென்று உருவகமாகச் சொன்னேன். அங்கு ஒன்றும் இல்லை" என்று பின்பு புலப்படுத்துகிறார்.

அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற
வெறுந்தனியை,

"நான் அடைந்த இன்பத்திற்குக் கால எல்லை இல்லை; அது அநாதி, ஆதி அற்றது. எந்தக் காலத்தில் அந்த ஆனந்தம் உண்டாயிற்று என்று தெரியாது. நான் அநுபவித்த இன்பத்தை பல காலமாகப் பல பெரியோர்களும் அநுபவித்தார்கள். இப்படி அநாதி காலமாக இருந்து வருகின்றது. அது."

"அது கால எல்லையைக் கடந்தது என்று சொல்லிவிட்டீர்கள்? அது விளைந்த இடம் எது?” என்று கேட்டால் அதற்கும் விடை சொல்கிறார்.

வெளியில் விளைந்தது

என்று. வெளி என்றால் ஆகாசம். "அதற்கு ஆதாரம் ஆகாசந்தான்" என்று சொன்னார். ஆகாசம் ஐந்து பூதங்களில் ஒன்று. ஆகாசத்திற்குள் நான்கு பூதங்களும் அடங்கி இருக்கின்றன. ஆனாலும் ஆனந்தம் என்பது இந்த ஆகாசத்திற்கும் மேல் இருக்கிற ஒன்று என்பதைக் காட்ட,

வெளியில் விளைந்த வெறும்பாழ்

என்று சொன்னார். பாழ் என்று சொன்னால் போதாது. நமது ஊரில் பாழ் வெளி இருக்கிறது என்றால் அந்தப் பாழ் வெளிக்கு அப்பாலே ஊர் இருக்கிறது என்று தெரியும். பாழுக்குப் பக்கத்தில் மனிதன் நடமாடுகிற இடம் தெரியும். ஆனால் இந்தப் பாழுக்கு அப்பாலே எதுவும் இல்லை. இது வெறும் பாழ்; தனக்கு அப்பாலே எதுவும் இல்லாத பாழ்; இது இட எல்லை கடந்தது என்று சொன்னபடி.

கால எல்லை கடந்தது என்பதற்காக, "அநாதியிலே" என்று சொன்னார். பிறகு இது பஞ்ச பூதங்களுக்கும் அப்பாற்பட்டது என்பதற்காக, "வெளியில் விளைந்த பாழ்" என்று சொன்னார். பிறகு இது இட எல்லையையும் கடந்தது என்பதற்காக "வெறும் பாழ்" என்று சொன்னார். இந்தப் பாட்டின் முன்பகுதியில் உருவம் உடைய பொருள்போல ஒளி, மலை, உச்சி, தேன் என்று சொன்னார். அவை நமக்கு விளங்குவதுபோல இருந்தன. ஆனால் பிற் பகுதியில் ஒரே நுண்பொருள்களாகச் (Abstract) சொல்கிறார். ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? நமக்கு விளங்க வேண்டுமென்று முதலில் உருவகமாகச் சொன்னார். அதைக் கேட்ட பிறகு நாம் அதனை, இந்திரியங்களுக்குக் கட்டுப்பட்டது, பொறிகளின் மூலமாகவே அநுபவிக்கக் கூடியது என்று எண்ணி விடாமலிருக்கப் பிற்பகுதியில் இவ்வாறு விளக்குகிறார். அதனைப் பொறிகளின் மூலமாக அநுபவிக்க முடியாது. அது கால எல்லை கடந்தது. பூத எல்லை கடந்தது. இட எல்லை கடந்ததுங என்று புலப்படுத்துகிறார். அநாதியிலே வெளியில் விளைந்த வெறும் பாழ்' என்று சொல்கிறார்.

வெறுங்தனி

தை "வெறும் பாழ்" என்று மட்டும் சொல்லிவிடவில்லை. "அந்தப் பாழைப் பெற்ற வெறுந்தனி" என்று பேசுகின்றார். தனி என்பதற்கும், வெறுந் தனி என்பதற்கும் வித்தியாசம் உண்டு. "நான் தனியாக இருக்கிறேன்" என்று ஒருவன் சொன்னால் என்ன பொருள்? அவன் இருக்கிற வீடு இல்லையா? அவனைச் சூழ்ந்து பல பொருள்கள் இல்லையா? அவை யாவும் இருந்தாலும் அவன் தனியாக இருக்கிறேன் என்று சொல்கிறான். அதாவது அவனுக்கு இனமான பொருள் அங்கே ஒன்றும் இல்லை என்பது அதற்குப் பொருள். மல்லிகைக் கொடியில் ஒரே ஒரு பூ இருந்தால், அதிலே பல இலைகள், கொடிகள் எல்லாம் இருந்தாலும், வேறு பூக்கள் அங்கே இல்லாமையினால் அது தனி. ஒரு தனி நாற்காலி என்றால், வேறு நாற்காலிகள் அங்கே இல்லை என்பது பொருளே தவிர மேஜை இல்லை, கண்ணாடி இல்லை, வேறு பொருள் ஒன்றுமே இல்லை என்ற பொருள் தோன்றாது. இங்கேயோ தன் இனப் பொருளும் இல்லை, வேறு இனப் பொருளும் இல்லை. அதைத் தெரிவிக்கவே, "வெறுந் தனியை" என்று சொன்னார்.

இப்படி, காலத்தினால் அளவிடற்கு அரியதான ஒன்றை, வெளியில் அடங்காத ஒன்றை, இட எல்லைக்கும் அப்பாற்பட்டு இருக்கின்ற வெறும் பாழை, அதனைப் பெற்ற வெறுந் தனியைத் தெரிந்துகொள்ளுமாறு விளம்பினவன் முருகன். அவன் எத்தகையவன்?

முகம் ஆறுடைத் தேசிகனே!

தேசிகன் என்றால் குரு. குருநாதன் ஆகிய அவனுக்கு அடையாளம் என்ன? யாருக்கும் இல்லாத அடையாளம் உண்டு அவனுக்கு. அவன் முகம் ஆறு உடையவன். தேசிகன் என்று பொதுவாகச் சொன்னால் அது யாரையும் குறிக்கும். முருகப் பெருமானையே குறிக்க, "முகம் ஆறுடைத் தேசிகன்" என்றார். சிவபிரான் ஐந்து முகம் உடைய தேசிகன். ஐந்து முகங்களினால் அவர் இருபத்தெட்டு ஆகமங்களைச் சொன்னார். குமரக் கடவுள் ஆறுமுகம் உடையவன். இந்த ஆறுமுகக் கடவுள் ஐந்து முகக் கடவுளுக்கே பிரணவ மந்திரோபதேசம் செய்தவன். அத்தகைய ஆறு முகம் உடைய குருநாதன் எனக்கு உபதேசம் செய்தான் என்றார் அருணகிரிநாதர். எதற்கு உபதேசம் செய்தான்? பொருளைத் தெரிந்துகொள்ள அல்ல என்கிறார். தெளிந்து கொள்ள என்கிறார். அறிவு என்பது நூல்களினாலே அறிவது. காலம், இடம், பூதம் ஆகிய எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற ஒரு பொருளை அறிவினாலே தெரிந்து கொள்வது இயலாத காரியம். அதுபவத்தினாலேதான் அது முடியும். அறிவுடையவர்கள் எல்லாம் அந்த ஆனந்தத்தை அடைவார்கள் என்று சொல்ல முடியாது. அறிவினாலே பல பல தத்துவங்களையும் அறிந்து, உணர்ந்து கடந்து செல்லலாம். ஆனால் அந்த அறிவு நழுவிய நிலையில், அன்பு கனியும்போதுதான் அந்த ஆனந்தத்தைப் பெற முடியும்.

சர்க்கரை இனிக்கும் என்பதை அறிவினாலே தெரிந்து கொள்ளலாம். அல்லது அதைப்போன்ற பல பொருள்களை உபமானமாக வைத்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் எப்படி இனிக்கும் என்பதை அநுபவத்தினாலேதான் அறியலாம். அநுபவத்தினால் அறிந்து கொள்வது தெளிந்து கொள்வது ஆகும். அறிவினாலே அறியப்படுவனவற்றைப் பிறருக்குச் சொல்ல முடியும். அநுபவத்தினாலே உணர்கிறவற்றை யாருக்கும் சொல்ல முடியாது. தெரிந்த பல பொருள்களை அநுபவத்தில் அடையாமல் இருக்க முடியும். தெளிய அறிந்தேன் என்றால் அநுபவத்தினாலேயும் அதனைப் பெற்றேன் என்று பொருள். ஆறுமுகமுடைய தேசிகனின் திருவருளினாலே நான் அருளொளி பெற்று, அதன் எல்லையைக் கடந்து, பூத எல்லையைக் கடந்து, இட எல்லையைக் கடந்து, தனக்குச் சமானம் இல்லாத தன்மையில் இருக்கின்ற ஒன்றை, அன்பினாலே விளைந்த ஆனந்தமாகிய தேனை நான் பெற்றேன். அது வெறும் பாழைப் பெற்ற தனி. அதனை நான் பெறம்படியாக, அவன் உபதேசம் செய்தான். நான் தெளியும்படியாக விளம்பினான் என்று அருணகிரியார் சொல்கிறார்.

ஒளியில் விளைந்த உயர்ஞான
பூதரத்து உச்சியின்மேல்
அளியில் விளைந்ததோர் ஆனந்தத்
தேனை, அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்
பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பிய வாமுகம்
ஆறுடைத் தேசிகனே!

(அருள் என்னும் ஒளியில் புதியதாகத் தோன்றிய உயர்ந்த ஞானமாகிற மலையின் உச்சியில் அன்பிலே விளைந்ததாகிய ஒப்பற்ற ஆனந்தம் என்னும் தேனை, கால எல்லையற்ற அநாதியில், இட எல்லையற்ற வெளியில் உண்டான வெறும் சூனியத்தைப் பெற்ற வெறும் தனியான அநுபவ நிலையை நான் அநுபவத்தால் உணரும்படி முகம் ஆறுடைய குருநாதன் உபதேசம் செய்தவாறு என்ன வியப்பு

ஒளியென்றது அருளை. பூதரம்-மலை. அளி-அன்பு. வெளி-ஆகாசம். விளம்பியவா-விளம்பியவாறு என்னே என்று ஒரு சொல்லை வருவித்து முடிக்க வேண்டும். தேசிகன்-குரு)

  1. 'பெரும் பெயர் முருகன்' என்னும் புத்தகத்தில் "எது சரி?" என்ற கட்டுரையில் இந்த வேறுபாடுகளைப் பற்றி ஆராய்ந்திருக்கிறேன்.