உள்ளடக்கத்துக்குச் செல்

கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1/அயில்வேலன் கவி

விக்கிமூலம் இலிருந்து


அயில்வேலன் கவி

1

உபதேசம்

கா ஞானிகள் தம்மைச் சார்ந்தவர்கள் இன்பம் அடைய வேண்டுமென்று பல வகையிலே உபதேசம் செய்வார்கள். அவர்கள் தம்முடைய சிஷ்யர்களுக்கு மந்திரோபதேசம் செய்வதன் மூலம் அருள் பாலிக்கலாம். கண்களினால் அவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்கு ஞானம் உண்டாகும்படியும் செய்யலாம். அவர்களைத் தொட்டு அருள் ஊட்டலாம். நலம் ஏற்பட வேண்டுமென்று நினைத்தும் அருளை வழங்குவது உண்டு இவையாவும் அவர்கள் காலத்திலேயே வாழ்ந்த மக்களுக்குத்தான் பயன்படும். தம் காலத்தில் வாழாத மக்களுக்கும் பயன்படும் வகையில் அருணகிரிநாதரும் அவரைப் போன்றவர்களும் பாமாலைகளைத் தொடுத்து வைத்திருக்கிறார்கள். அவற்றின் வாயிலாக நாம் பெறும் உபதேசங்களும் அறிந்து கொள்ளும் நுட்பங்களும் பல.

அதிகாரி

'பதேசம் பெறுவதற்கு இன்னார் அதிகாரி என்ற வரையறை உண்டு. எந்த உபதேசத்தைச் சொன்னாலும், இதற்கு முன் இன்ன இன்ன தெரிந்து கொண்டவன் இதற்கு அதிகாரியாவான் என்று சொல்வது பெரியவர்கள் வழக்கம்.

அருணகிரிநாதரும் பாமாலைகளைக் கற்றுக் கொள்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறார். "நீங்கள் இந்த முறையில் பாமாலையைக் கற்றுக் கொள்ளாமல் இருக்கிறீர்களே!" என்ற போக்கில் சொல்லி, அந்தத் தகுதி இன்னதென்று புலப்படுத்துகிறார். உபதேசமாக உள்ள பாக்களைக் கற்றுக் கொள்பவன் எப்படி இருக்க வேண்டும்? தமிழ் நன்றாகக் கற்றவனாக இருக்க வேண்டும்; ஆண்டவனிடத்தில் பக்தியுடையவனாக இருக்க வேண்டும். இதைக் கந்தர் அலங்காரத்தின் இரண்டாவது பாட்டில் சொல்கிறார்.

முருகனும் தமிழும்

பாமாலையைப் பெறுபவன் முருகன். அவன் நல்ல நூலறி புலவன்; தமிழுக்குத் தெய்வம் என்று போற்றப் பெறுகிறவன்; அகத்திய முனிவருக்குத் தமிழ் இலக்கணத்தைச் சொன்ன பெருமான்.

பார்வதி கல்யாணத்தின்போது எல்லா மக்களும், எல்லாத் தேவர்களும் கயிலைக்குச் சென்றார்கள். கூட்டம் அதிகமானதால் வடதிசை தாழ்ந்து, தென் திசை உயர்ந்து போயிற்று. பூமியைச் சமநிலையில் வைக்க எண்ணிய இறைவன் அகத்திய முனிவரைத் தென் திசைக்குப் போ என்று அருளினான். "அங்கே போனால் அந்த நாட்டு மொழி எனக்குப் புரியாதே! நான் என்ன செய்வேன்" என்று அகத்தியர் கேட்க, சிவபெருமான், "நான் சொல்லித் தருகிறேன்" என்று கூறித் தமிழைக் கற்பித்தருளினான்.

தமிழ் பேசவும், தமிழ் பேசுகிறவர்களின் கருத்தைப் புரிந்து கொள்ளவும் வல்லவராய் அவர் வடக்கே இருந்து தெற்கே வந்தார். இங்கே வந்த பிறகு இலக்கண அறிவைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினார். இலக்கண அறிவு இல்லாவிட்டால் ஒரு மொழியிலுள்ள குறைபாடு தெரியாது. எந்த சமயத்தில் நாம் வழுக்கிவிழுவோமோ அது தெரியாது. இலக்கண அறிவு இருப்பது யானையின் பலம் வந்தது போன்றது. உடலுக்கு எலும்பு பலம் அளிப்பது போல இலக்கணம் மொழிக்குப் பலம் அளிக்கும்.

அத்தகைய இலக்கண அறிவை அகத்திய முனிவர் வேண்ட, அதனை அவருக்கு முருகப் பெருமான் அருளினான். சிவபெருமான் அவருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தான்; அவர் பிள்ளையாகிய முருகன் அந்த மொழியின் இல்க்கணத்தை அவருக்கு அருளினான்.
   "குறுமுனிக்கும் தமிழுரைக்கும் குமரமுத்தம் தருகவே"
என்றும்,
   சிவனைநிகர் பொதியவரை முனிவன்அக மகிழஇரு
   செவிகளிலும் இனியதமிழ் பகர்வோனே"
என்றும் பெரியவர்கள் பாடியிருக்கிறார்கள்.

பெரிய புலவனாக இருந்தால், தான் கற்றுக்கொண்டதைப் பிறருக்குச் சொல்ல வேண்டும். முருகப்பெருமானிடம் இலக்கணத்தைக் கற்றுக் கொண்டு தமிழ் மொழியிலே பெரிய புலவரான அகத்தியர் அழகிய இலக்கணம் ஒன்றைத் தமிழில் வடித்துத் தந்தார். அதற்கு அகத்தியம் என்று பெயர்.

அவ்வாறு அகத்தியருக்குத் தமிழ் இலக்கணத்தைக் கற்றுக் கொடுத்த முருகப் பெருமானைப் பற்றிய தமிழ்ப் பாட்டைப் பாடும்போது இலக்கணப் பிழையோடு பாடலாமா?

அருணகிரிநாதப் பெருமான் நல்ல தமிழ்ப் புலவர். அவர் புகழ்ந்து பாடிய முருகன் அகத்திய முனிவருக்கே இலக்கணம் கற்றுக் கொடுத்தவன். அத்தகைய முருகன் மீது நல்ல தமிழ்ப் புலவரால் பாடப் பெற்றப் பாட்டைப் படிக்கின்றவர்களும் தமிழறிவு உடையவராய் அந்தப் பாட்டைப் பிழையின்றிப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டுமல்லவா?

"முருகனைப் பற்றிய தமிழ்ப் பாட்டை எழுத்துப் பிழை இல்லாமல் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று சொல்கிறார் அருணை முனிவர்.
   அழித்துப் பிறக்கவொட் டாஅயில் வேலன் கவியை அன்பால்
   எழுத்துப் பிழைஅறக் கற்கின் றிலி எரிமூண்டதென்ன
   விழித்துப் புகைஎழப் பொங்குவெங் கூற்றன் விடும் கயிற்றால்
   கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே?

நாக்குத் திருந்த

அருணகிரிநாதர் மிகவும் சதுரர். "அவர் ஞானி. அவர் ஆண்டவன் அருளைப் பெற்றவர் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவர் நல்ல ஆசிரியர். தமிழை நாம் எல்லோரும் சுத்தமாகப் படிக்க வேண்டும், நாக்கு திருந்த வேண்டுமென்று விரும்புகிறார். மற்ற எழுத்துக்களை சொல்வதைக் காட்டிலும் ழகர றகரங்களை நன்கு உச்சரிக்கக் கற்றுக் கொண்டுவிட்டால் நம்முடைய நாக்கு திருந்திவிடும். இந்தப் பாட்டில் ழகர, றகரங்களை மிகுதியாக வைத்திருக்கிறார். தமிழுக்கே உரிய சிறப்பெழுத்தான ழகறத்தை நன்றாகச் சுத்தமாக உச்சரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பாட்டில் ஏழு ழகரம் வைத்திருக்கிறார்.

அவர் மனத்தில் தமிழைப் பிழையறச் சொல்ல வேண்டும் என்ற கருத்து உதயம் ஆகிறது. அந்தக் கருத்தில், 'ழகர றகரங்களைப் பிழை இல்லாமல் உச்சரிக்கக் கற்றுக் கொண்டு விட்டால், மற்ற எழுத்துக்கள் எல்லாம் தாமே வந்து விடும்; பாட்டைப் பிழை இல்லாமல் படிக்க முடியும்' எனத் தோன்றுகிறது. கருத்துக்கேற்ப வார்த்தைகள் வந்து விழுகின்றன.

மறைமுகமாகப் புலப்படுத்தல்

“ழகரத்தையும், றகரத்தையும் நன்றாக உச்சரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நேரே சொல்லாமல் மறை முகமாகப் புலப்படுத்துகிறார் இந்தப் பாட்டிலே. அப்படிச் சொல்வது ஒரு முறை. இலக்கணமாகத் தனியே ஒன்றை எடுத்துச் சொல்லாமல், தாமே பிரயோகம் செய்து அந்தப் பிரயோக வாயிலாகச் சொல்ல வேண்டியதைக் குறிப்பால் புலப்படுத்துவது ஒரு மரபு. "காலையில் எழுந்து நீராடு; திருநீறு அணிந்து கொள்; இட்டிலி சாப்பிடு; பிறகு என் வீட்டுக்கு வா" என்று நேர்முகமாகச் சொல்லலாம். இது ஒரு முறை. "நீ காலையில் எழுந்திருந்து நீராடி விட்டுத் திருநீறு அணிந்துகொண்டு, இட்டிலி சாப்பிட்டு விட்டு, வெளியே போவாயே, அப்பொழுது என் வீட்டுப் பக்கம் வந்து விட்டுப் போ" என்று மறைமுகமாகவும் சொல்லலாம். இப்படிச் சொன்னாலும், "என் வீட்டுக்கு வரும் போது நீராடி விட்டுவா, திருநீறு அணிந்து வா" என்பதுதான் பொருள். ஆனால் இப்படி மறைமுகமாகச் சொல்வதில் ஒரு நயம் இருக்கிறது; நாசூக்கு இருக்கிறது.

எங்கள் ஆசிரியர் அப்படிச் சொல்வது வழக்கம். அந்த முறையை அவர்கள் மணி ஐயர் அவர்களிடம் கற்றுக் கொண்டதாகச் சொல்வார்கள். ஒரு சமயம் ஐயர் அவர்கள் ஒரு சம்ஸ்தானத்திற்குச் சென்றார்கள். அந்தச் சம்ஸ்தானத்தில் ஒவ்வோர்

க.சொ.1-6 ஆண்டும் நவராத்திரி பூஜையின்போது பல பிராமணர்களுக்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் செய்வது வழக்கம்.

"இந்த ஆண்டு பிராமண போஜனம் வேண்டாம்; ஏழைகளையும் உட்கார வைத்து அன்னம் போட வேண்டாம். சாதத்தை உருட்டி வேண்டுமானால் கையில் கொடுத்து அனுப்பி விடலாம். அதனால் செலவு குறையும்" என்று அந்த ஆண்டு புதிதாக வந்திருந்த திவான் சொன்னாராம். அதனைச் சம்ஸ்தானாதிபதியும் ஒப்புக் கொண்டுவிட்டாராம்.

இதனால் பெரிதும் ஏமாற்றம் அடைந்த பிராமணர்களும், ஏழைகளும் யாரிடம் சொன்னால் தங்கள் காரியம் நடக்கும் என்று எண்ணி, எங்கள் ஆசிரியரிடம் வந்து சொன்னார்கள்.

"மகாராஜா அப்படி எல்லாம் செய்ய மாட்டார்கள். நீங்கள் போங்கள்; நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று எங்கள் ஆசிரியர் அவர்களுக்குத் தேறுதல் சொல்லி அனுப்பிவிட்டுத் தர்பாருக்குச் சென்றார்கள். அங்கே பல புலவர்கள் இருந்தார்கள்; படித்த அறிவாளிகள் இருந்தார்கள்; வேறு யார் யாரோ வந்திருந்தார்கள். அந்தச் சமயத்தில் ஐயரவர்கள் மகாராஜாவைப் புகழத் தொடங்கினார்கள். "மகாராஜாவின் பரம்பரைப் பெருமையை என்னவென்று சொல்வது தங்கள் முன்னோர்கள் செய்த தான தர்மங்கள் என்ன! அந்த மரபில் வந்த மன்னர்கள் எல்லாம் எத்தனை பேருக்கு அன்னதானம் செய்திருக்கிறார்கள்! பெரியவர்கள் செய்து வந்ததை நிறுத்தக் கூடாது என்ற எண்ணத்தோடு தாங்களும் அறம் செய்கிறீர்கள். போன ஆண்டு இரண்டாயிரம் பேருக்குமேல் நவராத்திரியின்போது உணவளித்தீர்கள். இந்த வருஷம் ஐயாயிரம் பேர்கள் வந்திருக்கிறார்கள். இந்த ஆண்டும் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். தங்களைப் போல யார் இப்படிப் பண்ணப் போகிறார்கள் என்று சொன்னார்கள். அதைக் கேட்டவுடன் அந்த அரசர் அவ்வாண்டும் வழக்கம்போல அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டார்.

உடம்படுபுணர்தல்

பெரியவர்கள் இப்படிச் சொல்வது வழக்கம். எதையும் நேர்முகமாகச் சொல்லாமல் பிரயோக வாயிலாகப் புலப்படுத் துவதும் இதைப் போன்ற முறைதான். விதியாகச் சொல்லாமல் பிரயோகத்தில் வைத்துக் காட்டுவதை உடம்படுபுணர்த்தல் என்று இலக்கணத்தில் சொல்வார்கள்.

அவ்வாறே அருணகிரிநாதர், "ழகர றகரத்தை நன்றாக உச்சரியுங்கள்" என்று சொல்லாமல் அவ்விரண்டையும் இந்தப் பாட்டிலே மிகுதியாக அமைத்துச் சொல்கிறார்.

இந்தப் பாட்டில் ஏழு ழகரங்கள் இருக்கின்றன என்று முன்னே சொன்னேன். றகரங்களோ பதின்மூன்று இருக்கின்றன. எண்ணிப்பார்த்தால் தெரியும்.

நம் வீட்டிலே நாமே செடிகளை வைத்துப் பயிரிட்டு, மலர்களைப் பறித்துக் கொண்டு வந்து ஆண்டவனுக்குச் சாத்துவது என்றால் முடியாத காரியம். மலரைக் கடையிலிருந்து வாங்கி வந்து ஆண்டவனுக்கு அர்ச்சனை பண்ணலாம். அப்படிப் பண்ணும் போது நமக்குச் சிரத்தை இருந்தால், அன்பு இருந்தால், அந்த மலரின் காம்புகளை எல்லாம் கிள்ளிவிட்டுச் சுத்தமான மலராக அர்ச்சனை பண்ணலாம். இதுதான் முறை. அப்படிச் செய்யவில்லை என்றால் சிரத்தை இல்லையென்றே கொள்ள வேண்டும். அதுபோலவே இறைவன்மேல் நம்மால் பாட்டுக்கள் புனைய முடியாவிட்டாலும் பெரியவர்கள் பாடிய பாடல்களை எழுத்துப் பிழையில்லாமல் சொல்ல வேண்டும்.

காலநிலை

ருணகிரிநாதர் காலத்தில் இந்த நாட்டில் கன்னடர்களுடைய ஆட்சி இருந்தது. கன்னடம் பேசும் அதிகாரிகள் அங்கங்கே இருந்தார்கள். "கருநடப்பேர் வெள்ளத்து விழாமல்" என்று வில்லிபாரதச் சிறப்புப் பாயிரம் சொல்வதிலிருந்து இது தெரிய வருகிறது. கன்னடக்காரர்களோடு சேர்ந்து எழுத்தைத் தவறாக உபயோகிக்கின்ற மக்களைப் பார்த்து மனம் குமுறி, அப்படி உபயோகிக்காதீர்கள் என்று சொல்ல எண்ணினாரோ அருணகிரிநாதர் என்று தோன்றுகிறது. இதே நிலை இப்பொழுது இருக்கிறது. நுனி நாக்கிலே பேசுகின்ற ஆங்கிலமொழியின் கலப்பினால் வார்த்தைகளைச் சரியாக நாம் உச்சரிப்பதில்லை. நாமும் நுனி நாக்கிலே பேசுகிறோம். அதனால் இந்தப் பாட்டு இன்றும் நமக்குப் பயன் தருவது.

இந்தப் பாட்டில், காலனை வெல்ல வேண்டுமென்றால் நன்றாக எழுத்துப் பிழையறக் கற்க வேண்டும் என்று அருணகிரிநாதர் சொல்கிறார். எதைக் கற்பது? கவியை எழுத்துப் பிழையறக் கற்க வேண்டும். எந்தக் கவியை அயில் வேலன் கவியை. எழுத்துப் பிழையறக் கற்றால் போதாது. அன்போடு எழுத்துப் பிழையற அயில் வேலன் கவியைக் கற்க வேண்டும். அப்படிக் கற்றால் காலனை வென்று விடலாமாம்.

இதனை எப்படிச் சொல்கிறார் என்று பார்ப்போம்.

ஞானசக்தி


   அழித்துப் பிறக்கவொட் டாஅயில் வேலன்
அழித்து என்றால் மீட்டும் என்று பொருள். உலகத்தில் பிறந்த அத்தனை பேரும், உடம்பைப் பெற்றவர்கள். அவர்கள் உடம்புக்குள்ளிருந்து உயிர் என்றாவது ஒரு நாள் வெளிப்பட்டே ஆக வேண்டும். அதுதான் மரணம். அந்த உயிர் வேறு பிறவி எடுக்கிறது. ஆனால் இறைவன் அருள் பெற்றவர்கள் மீட்டும் பிறக்க மாட்டார்கள். மீட்டும் இந்தப் பிறவியை பெறாதபடி செய்பவன் அயில் வேலன். அயில் வேல் என்பதற்குக் கூர்மையான வேல் என்று பொருள். முருகன் கையிலுள்ள வேலை ஞானசக்தி என்பார்கள். இறைவனிடத்தில் இருக்கும் சின்னங்கள் எல்லாம் சில சில தத்துவங்களை நினைப்பூட்டுபவை. முருகன் கையிலுள்ள வேல் ஞானத்தைக் காட்டுகிறது. ஆன்மாக்களைப் பற்றியுள்ள அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானசக்தியே வேல்.

அஞ்ஞானம் அல்லது அவித்தையினால் நாம் உலகத்தில் பிறக்கின்றோம். அவித்தை அழிந்தால், அறியாமை ஒழிந்தால், பிறப்பு ஒழியும். ஞானமே ஆண்டவன் திருக்கரத்தில் வேலாக இருக்கிறது. அந்த ஞான வேலினால் அஞ்ஞானம் தொலையும்; அதனால் பிறவி போகும்.

இவற்றை மனத்தில் நினைத்தே, "அழித்துப் பிறக்க வொட்டா அயில்வேலவன்" என்றார். அவனுடைய கவியைக் கற்க வேண்டும். கற்க வேண்டுமென்று சொல்லாமல், இன்னும் கல்லாமல் இருக்கிறீர்களே" என்று இரங்குகிறார்.
   அயில்வேலன் கவியை அன்பால்
   எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர்!

2

கற்றல்

ல்வியைக் கற்பது எப்படி என்று சற்று நின்று பார்க்க வேண்டும். ஒரு முறை படிப்பது, பலமுறை படித்து மனனம் பண்ணுவது, பொருளைத் தெரிந்து கொள்வது முதலாகக் கற்பதில் பல படிகள் உண்டு. கல்வி அநுபவமாக மாறும் போது தான் அது முற்றுப் பெறும் என்று சொல்வர் பெரியோர். உண்மையான படிப்பு, படித்த உண்மையைத் தெளிந்து அடங்கும்போது தான் நிறைவேறும். ஆண்டவனுடைய புகழைக் கற்றுக் கேட்டு உணர்ந்து, அதனால் இன்பத்தை அநுபவிப்பது கல்வியால் ஆய பயன். அந்த அநுபவ நிலை வந்துவிட்டால் கல்வி நிறைவை அடைந்துவிட்டதாகக் கொள்ளலாம்.

உலகில் மிகப் பெரிய ஞானிகள் பலர் இருந்திருக்கின்றார்கள். பழங்காலத்தில் சனகர், சனந்தனர், சனத்சுஜாதர், சனத்குமாரர் என்று நான்கு ஞானிகள் இருந்தார்கள். அவர்கள் கல்லாதது, கேளாதது ஒன்றுமே இல்லை. நாலு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்து நாலு கலை என்று சொல்லும் எல்லாவற்றையும் கற்றவர்கள். அப்படியிருந்தும் அவர்களுக்குச் சந்தேகம் நீங்கினபாடில்லை; அநுபவ நிறைவு ஏற்படவில்லை. அந்த ஐயத்தைத் தெளிவிக்க வேண்டுமெனப் பல பேர்களைக் கேட்டார்கள். அவர்கள் எல்லாம் புத்தகத்தில் இருக்கும் பொருள்களையே சொன்னார்கள். அவற்றை அவர்கள் முன்பே படித்தவர்களாதலால் அவற்றைக் கேட்டும் அவர்கள் சந்தேகம் நீங்கவில்லை. அவர்களுடைய கல்வி நிரம்பவில்லை. அந்த ஐயத்தைப் போக்குவதற்கு வழி என்ன? கடைசியில் இறைவன் அவர்களுடைய கல்வியையும், கேள்வியையும் பூரணமாக்கினான்; ஐயத்தைப் போக்கினான். கல்லாலமரத்தின் அடியில் உட்கார்ந்து அவர்களுடைய சந்தேகத்தைச் சின் முத்திரையினால் விளக்கினான். பேசாத பேச்சினாலே அந்த முனிவர்களுடைய சந்தேகம் தீர்ந்தது. வாக்குக்குள் அகப்பட்ட எல்லாவற்றையும் கல்வி கேளிவியால் உணர்ந்திருந்த அந்த நால்வரும், வாக்கு இறந்த மோன உபதேசத்தால் தெளிவு பெற்றார்கள்.
   “கல்லாலின் புடைஅமர்ந்து நான்மறைஆ றங்கமுதற்
   கற்ற கேள்வி
   வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய்
   மறைக்கப் பாலாய்
   எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி
   இருந்து காட்டிச்
   சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைந்துபவத்
   தொடக்கை வெல்வாம்"
என்று பரஞ்சோதி முனிவர் தட்சிணாமூர்த்தியின் புகழைப் பாடுகிறார்.

கேள்வி எப்பொழுது முடிவு பெறும்? கேளாத நிலையில் தான் முடிவு பெறும். வாக்கு எப்பொழுது முடிவு பெறும்? வாக்கு இல்லாத இடத்திலேதான் முடிவு பெறும். ஆகவே அந்த நிலையை அடைகின்ற வரையிலும் நாம் கற்கின்ற கல்வி எல்லாம் முடிவு பெறவில்லை என்றே சொல்ல வேண்டும்.

அநுபவ ஞானம்

றைவன் கல்வியினால் அறிய முடியாத பொருள்; அறிந்தேன் என்பவர்களால் அறியப்படாத பொருள். 'அறியவில்லையே, அறியவில்லையே' என்று ஏங்கி அவனை அறிய வேண்டுமென்ற ஆர்வத்தோடு அலைந்து கொண்டிருக்கிறவர்களுடைய அறிவுக்குப் புலனாகின்ற பொருள். எவன் எல்லாவற்றையும் நன்றாகப் படித்து விட்டேன் என்று சொல்லுகிறானோ அவன்தான் உண்மைப் பொருளை அறியாதவன். அறிந்தபோது அநுபவம் தோற்றி, மோனம் தலைப்படும்.

இதனை ராமகிருஷ்ண பரமஹம்சர் மிகவும் நன்றாக ஒரு கதையின் வாயிலாகச் சொல்கிறார். ஒரு பௌராணிகர் பாகவதத்தைப் பலமுறை திருப்பித் திருப்பிப் படித்தார். தாம் படித்த வற்றைப் பிறருக்கு வெகு நன்றாகச் சொல்ல வேண்டு மென்று படித்தார். பிறருக்கு உபந்நியாசம் செய்தார். ஒரு நாள் அரசனிடம் சென்று, "பாகவதத்தை ஒரு முறை மகாராஜாவுக்கு முன் சொல்ல ஆசைப்படுகிறேன்" என்றார்.

அரசன் அவரைப் பார்த்து, "பாகவதத்தை நீங்கள் நன்றாகப் படித்திருக்கிறீர்களா?" என்று கேட்டான்.

"ஒ, மிக நன்றாகப் படித்திருக்கிறேனே!" என்று அவர் சொன்னார்.

அரசன் அவரைப் பார்த்து, "இன்னும் ஒரு முறை படித்து விட்டு வாருங்கள், பார்ப்போம்" என்று சொல்லி அனுப்பி விட்டான்.

"அரசன் இப்படிச் சொல்லுகிறானே!" என எண்ணிக் கோபம் கொண்ட பௌராணிகர் அதனைக் காட்டிக் கொள்ளாமல் மறுபடியும் சென்று ஒரு முறை படித்துவிட்டு அரசருடைய தர்பாருக்கு வந்தார்.

அரசன் முன்போலவே, "நன்றாகப் படித்துவிட்டு வந்தீர்களா?" என்று கேட்டதற்கு, அவர் முன்போலவே, "மிகவும் நன்றாகப் படித்து வந்திருக்கிறேன்" என்று விடை சொன்னார். அரசன் அவரிடம் மறுபடியும், "இன்னொரு முறை படித்துவிட்டு வாருங்கள். படித்தது போதாதென்று தோன்றுகிறது" என்று சொல்லி அனுப்பிவிட்டான்.

இவ்வாறே ஒவ்வொரு வாரமும் அந்தப் பௌராணிகர் அரசனுடைய தர்பாருக்குச் சென்று, "நான் மிகவும் நன்றாகப் படித்துவிட்டு வந்திருக்கிறேன்" என்று சொல்வதும், அரசன் அவரை, "திரும்பவும் போய்ப் படித்துவிட்டு வாருங்கள்" என்று சொல்வதும் வழக்கமாகி விட்டன. பௌராணிகருக்கு அளவற்ற கோபம் வந்து விட்டது. இனி மிக நன்றாகப் படிக்காமல் அரசனுடைய தர்பாருக்குப் போகக் கூடாதென்று எண்ணி மறுபடியும் படிக்க ஆரம்பித்தார். ஒரு முறை படித்தார். பல முறை படித்தார். மனம் ஊன்றிக் கவனித்துப் படித்தார். அரசனுக்குச் சொல்ல வேண்டும் என்பதை மறந்து படித்தார். படிக்கப் படிக்க அவர் உள்ளம் அதில் ஆழ்ந்தது. கண்ணன் விளையாடல்களை உணரத் தொடங்கினார். பக்தி ஆர்வம் பொங்க, ஏதோ ஒரு வகையான அமைதியும் இன்பமும் உண்டாயின. அந்த அநுபவ நிலையிலேயே நின்றார். பகல் தெரியவில்லை; இரவு தெரியவில்லை; நாள் போனது தெரியவில்லை; வாரம் போனதும் தெரியவில்லை. அரசனிடம் போக வேண்டுமென்ற எண்ணங்கூடத் தோன்றவில்லை.

அரசன் பார்த்தான். வாரம் தப்பினாலும் குறித்த நாள் தப்பாமல் வந்து கொண்டிருந்த பௌராணிகரைக் காணவில்லையே என்று எண்ணி அவர் இருந்த இடம் தேடி அரசனே வந்தான். வந்து பார்த்தால் ஒரே கண்ணன் மயமாக ஆகிக் கண்ணனையே தம் ஒளிமிக்க கண்களினாலே பார்த்துக் கொண்டு, வாய் அடைத்து உட்கார்ந்திருக்கும் நிலையிலே பௌராணிகர் இருந்தார்.

"சுவாமி, தாங்கள் இப்போது பாகவதத்தைச் சொல்லுங்கள்" என்று அரசன் அவர் காலிலே வீழ்ந்தான். ஆனால் அவர், "அரசே, நான் சொல்வது என்ன இருக்கிறது! தாங்களே எனக்குக் குரு" என்று அவர் காலிலே வீழ்ந்தார். அவர் அநுபவ ஞானி ஆகிவிட்டார்.

இந்த அநுபவ ஞானத்தை அபரோக்ஷ ஞானம் என்று சொல்வார்கள்; பரஞானம் என்பதும் அதுதான். நூல் அறிவினாலே வருகின்றது அபரஞானம், அல்லது பரோக்ஷ ஞானம்.

கற்றதனால் ஆய பயன் என்ன? இறைவன் நற்றாள் தொழுவது தானே? கற்க வேண்டும். அது இன்றியமையாததே. அதைவிட முக்கியமானது கசடறக் கற்றபின் அதற்குத் தக நிற்பது; அதாவது அநுபவத்தில் இன்பத்தைப் பெறுவது. ஆகவே, ஆண்டவனுடைய கவியை அன்பால் கற்றுக் கொள்ள வேண்டும்; அநுபவ முதிர்ச்சி உண்டாகும்படி கற்க வேண்டும்; பிழையில்லாமலும் கற்றுக் கொள்ள வேண்டும்.

முதலில் இன்றியமையாதது அன்பு. அது வளரத் துணையாக இருப்பது இறைவன் புகழைப் பாடுவது. அந்தப் பாட்டைப் பிழை இல்லாமல் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்ள எத்தனையோ கவிகள் உண்டு. ஆனால் அன்போடு கற்றுக் கொள்ள வேண்டுமானால் ஆண்டவனைப் பற்றிய கவியாக இருக்க வேண்டும்; அயில் வேலன் கவியாக இருக்க வேண்டும். தாம் பாடிய கவியை மாத்திரம் நினைந்து, அருணகிரிநாதர் இப்படிச் சொல்லவில்லை. அவருக்கு முன்னாலே தோன்றிய நக்கீரர் முதலிய பெரியார்கள் முருகப் பெருமானைப் பற்றியும், ஆழ்வாராதிகள் திருமாலைப் பற்றியும், ஞான சம்பந்தர் முதலியவர்கள் சிவபிரானைப் பற்றியும் பாடியிருக்கிறார்கள். அப்பெரியார்கள் இறைவனுடைய திருவருளிலே ஈடுபட்டுப் பல பல பாடல்கள் பாடியிருக்க, அவற்றை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளாமல் வீணே வாழ்நாளைக் கழிக்கின்ற மக்களை நினைந்து இரங்கி இந்தப் பாட்டைப் பாடினார்.

தமிழர் வாழ்வில் பாட்டு

மிழுக்கும் பாட்டுக்கும் தொடர்பு அதிகம். பழந்தமிழ் நூல்கள் யாவுமே கவிகளால் அமைந்தவை. “பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லை" என்பது பெரிய புராணம். தமிழ் நாட்டில் பாட்டுக்குப் பெருமை அதிகம். மனிதனுடைய வாழ்நாளில் பல வகையில் பாட்டுக் கலந்திருக்கிறது. குழந்தை பிறந்தால் தாலாட்டுப் பாட்டு: குழந்தைக்குத் தொட்டில் போட்டால் பாட்டு: குழந்தை நடக்க ஆரம்பித்தால் பாட்டு; குழந்தை விளையாடும் விளையாடல்களுக்கு ஏற்ற பாட்டு; கல்யாணம் வந்தால் நலங்குப் பாட்டு, ஊஞ்சல் பாட்டு; கடைசியில் இறக்கும்போது ஒப்பாரிப் பாட்டு. இப்படித் தமிழர் தம் வாழ்வைப் பாட்டினால் அளக்கிறார்கள். அந்தப் பாட்டுக்களை எல்லாம் மனிதர் கற்றுக் கொள்ளலாம். அவை யாவும் அவ்வப்போது இன்பம் தந்து ஒரளவு மனத்திலே அமைதியைத் தரத் தக்கன. ஆனால் அவற்றால் கால ஜயம் பண்ண முடியாது.

கவிகளைக் கற்றுக் சுவை காண்பதால் ஒருவகை அமைதி உண்டாகிறது. மீட்டும் பிறவாத இன்ப நலம் மிக்க அமைதி வேண்டுமென்றால் எந்தக் கவியைக் கற்றுக் கொள்ள வேண்டும்? அயில்வேலன் கவியைக் கற்றுக் கொள்ள வேண்டும். எப்படிக் கற்றுக் கொள்ள வேண்டும்? அன்பால் கற்றுக் கொள்ள வேண்டும். அவனைத் தியானிக்க அன்பு இருந்தால் போதும். அந்தத் தியானம் மனத்திலே நிலைக்க அவனைப் பாடித் துதிக்க வேண்டும். அதற்குத் தமிழறிவு வேண்டும்.

எழுத்துக்கள்

மிழ் அறிவு எப்படிப் புலப்படும்? பாடும்போது நன்றாக உச்சரிக்கும் வாக்கினாலே புலப்படும். பாடலைப் பாடும்போது எழுத்துப் பிழை இல்லாமல் சொல்ல வேண்டும். எழுத்து ஒவ்வொன்றையும் சரியாக உச்சரிக்காவிட்டால் பயன் இல்லை. ஒவ்வொரு எழுத்தும் பராசக்தியிடமிருந்து தோன்றியது என்று பெரியவர்கள் சொல்வார்கள். 51 எழுத்துக்களுக்கும், 51 விதமான தத்துவங்கள் இருக்கின்றன. தனித்தனித் தேவதைகள் உண்டு என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏதேனும் ஒர் எழுத்தைத் தவறாக உச்சரித்தால் அந்த எழுத்துக்குரிய தேவதை கோபித்துக் கொள்ளும். ஒரு பெரிய அதிகாரியின் பெயரையோ, விலாசத்தையோ தவறாகச் சொன்னால் அவருக்குக் கோபம் வராதா? அதுபோலவே நம் நாவிலிருந்து நடமாடுகிற தேவதைகள் தங்களுக்கு உரிய எழுத்தைச் சரியாக உச்சரிக்காவிட்டால் கோபம் அடைகின்றன. சரியாக உச்சரித்தால், அவற்றுக்குரிய இலக்கண அமைதி இருந்தால், அதனால் கிடைக்கும் நன்மையைப் பெறலாம்; தேவதைகளும் மகிழ்ச்சி அடைவார்கள்.

3

மழலையும் பேச்சும்

ழுகையே தன் மொழியாகப் பிறக்கும் குழந்தை பின்பு மழலை பேசுகிறது. வளர வளர நன்றாகப் பேசக் கற்றுக் கொள்கிறது. குழந்தைகளின் மழலைச் சொல் இசைக் கருவிகளை விட இனிமையானது என்று வள்ளுவர் சொல்கிறார். இளங் குழந்தை மழலை பேசினால் அது குறைபாடு ஆகாது. எழுத்தைத் தவறாக உச்சரித்ததாகவும் ஆகாது. குழந்தை சோறு என்பதை, 'சோச்சி' என்கிறது. பழம் என்பதைப் 'பயம்' என்கிறது. காபி என்பதை 'காவி' என்கிறது. அவை எழுத்து குறைபாடு உடையவை; ஆனாலும் இனிமையை உடையன.
   "குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
   மழலைச்சொல் கேளாதவர்" என்று வள்ளுவர் சொல்கிறார். "திருவள்ளுவருக்கு இசை வராது போலிருக்கிறது. அதனால்தான் அவருக்கு யாழின் இனிமையும் தெரியவில்லை. குழலின் இனிமையும் தெரியவில்லை" என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். அவர் கருத்து இன்னதென்று தெரிந்து கொண்டால் அப்படிச் சொல்ல மாட்டார்கள். குழல் ஒலி இனிமையானது அல்ல, யாழ் ஒலி இனிமையானது அல்ல என்பது அவர் கருத்து அன்று. ஒருவன் முயற்சி செய்தால் பத்து ஆண்டுகளிலே குழலை மிக இனிமையாக வாசிக்கக் கற்றுக் கொள்ளலாம். வீணையும் பத்து ஆண்டுகளில் கற்றுக் கொள்ளலாம். எவ்வளவு பெரிய நாடகத்தில் நடிக்கும் நடிகனாக இருந்தாலும் சின்னஞ்சிறு குழந்தையைப் போலப் பேச வராது. விகடம் பண்ணுகிறவர்கள் ஆடு மாதிரிக் கத்தலாம்; யானை மாதிரி பிளிறலாம்; வெவ்வேறு மனிதரைப் போலப் பேசலாம். ஆனால் குழந்தையைப் போலப் பேச முடியாது.

குழந்தைக்கு இரண்டு பக்கத் தாடையும் வலுவடைய வில்லை. பற்கள் முளைக்கவில்லை. இவற்றுக்கு மேல், அதன் உள்ளம் அழுக்கடையவில்லை. பற்களும் வரிசையாக முளைத்து, தாடையும் வலுவடைந்து, உள்ளமும் நன்றாக அழுக்கேறி விட்டால் மழலை ஒலி வராது. "கல்லா மழலைக் கணியூறல்” என்று ஒரு புலவர் சொல்கிறார். முயற்சி செய்து கற்றுக் கொள்ளுகிற குழலையும் யாழையும்விடக் கற்றுக் கொள்ள முடியாத மழலையே சிறந்தது; இனிமையானது.

எழுத்து நிறைவு பெறாததனால் மழலை இன்பத்தை உண்டாக்குகிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? முழு வார்த்தையையும் பேசத் தெரியாத குழந்தை மழலை பேசுகின்றது; அதைக் கண்டு களிப்படைகிறாள் பெற்ற தாய்; உவகை அடைகிறான் பெற்ற தந்தை. எழுத்து நன்றாகத் தெரியாத மழலையில் இன்பம் இருக்கிறதென்றால், அந்தக் குழந்தை பதினாறு ஆண்டுகள் நிரம்பப் பெற்ற பிறகும் மழலையாகவே திக்கித் திணறிப் பேசினால் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்களா? "குழந்தைக்கு ஏதோ என்னவோ!" என்று பயந்து கொண்டு டாக்டரிடம் அழைத்துப்போய்த் தொண்டை, நாக்கு இவற்றைப் பார்க்கச் சொல்கிறார்கள். வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே என்று எண்ணிப் பதினாறு வயசில் தம் மகன் மழலையாகப் பேசினால் பெற்றோர் கள் சந்தோஷப்படமாட்டார்கள்; அதனை ஒரு நோயாகவே கருதித் துடித்துப் போவார்கள்.

அப்படியானால் குழந்தை பேசும் மழலையில் இனிமை உண்டாக என்ன காரணம்? அடுத்தடுத்த வீடுகளில் இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. இரண்டு வயசு ஆன பின்பு ஒரு குழந்தை 'பாபா' என்கிறது; 'மாமா' என்கிறது; மழலையாகப் பொரிந்து தள்ளுகிறது. மற்றொரு குழந்தையோ 'பூ பூ பூ' என்கிறதே தவிர எழுத்தின் ஒலியை வெளியிட மாட்டாமல் திணறுகிறது. அதைக் கேட்டு, 'ஐயோ! இது ஊமை போல இருக்கிறதே!' என்று பெற்றோர்கள் கதிகலங்கிப் போகிறார்கள். "மாமா" என்று சொல்லுகிற குழந்தையின் தாய் அதனைக் கேட்டு மிகவும் மகிழ்வதற்குக் காரணம், தன் குழந்தை ஊமை அல்ல, இனி நன்றாகப் பேசும் என்ற நம்பிக்கையை அந்த மழலை அவளுக்கு உண்டாக்குவதுதான். அதனால் அது அவளுக்கு இனிக்கிறது. ஒரு விதையை நட்டால் முளை வெளியே வந்தவுடன் அது இனிச் செடியாகி நன்றாக வளரும் என எண்ணி மகிழுவது போல, அந்த மழலைச் சொல்லைக் கேட்டவுடன், இனி நன்றாக வளர்ந்து அழகாகப் பேசும் நிலையை அக்குழந்தை அடைந்து விடும் என்று எண்ணிக் களிப்படைகிறாள்.

ஆகவே மனிதன் வளர வளர மழலை மாறிப் பேசக் கற்றுக் கொள்கிறான். மழலை நிலை மாறிப் பேச்சு நிலை வருவதுதான் வளர்ச்சிக்கு அறிகுறி. மனிதன் பெற்ற பெரும் வரம் பேச்சு. பிறருக்குத் தன் கருத்தைத் தெரிவிப்பதற்காக ஒருவன் வாயிலிருந்து வருகின்ற ஒலித்திரளே பேச்சு. வாயிலிருந்து வரும் ஒலி பொருளுடையதாக இருந்தால்தான் பேச்சாகும். ஊமையின் ஒலி பிறருக்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்காது. அவன் காகூ என்று உண்டாக்கும் ஒலி அவன் வாயிலிருந்து பிறந்தாலும் அது பேச்சல்ல. பேச்சிலும் நல்லது, பொல்லாதது உண்டு.

பேச்சிலே சிறந்தது

ழலை, பேச்சுக்கு முளையாதலால் இன்பத்தை உண்டாக்குகிறது. தீமை இல்லாததால் விரும்பிக் கேட்கிறோம். மழலை வளர்ந்த பேச்சும் குழந்தை பேசுவதுபோலத் தீமை இல்லாமல் இருக்க வேண்டும். பிறருடைய உள்ளத்துக்குத் தன் கருத்துப் புரியும்படி செய்து, அவர்களுக்கு இன்பம் உண்டாகும்படி பேசுகின்ற பேச்சுதான் பேச்சு; நல்ல பேச்சு, பிறருடைய உள்ளம் புண்படும்படியாகப் பேசுகின்ற பேச்சுத் தாழ்ந்தது. நம்மைப் படைத்துக் காக்கின்ற இறைவனுடைய உள்ளம் குளிரும்படியாகப் பேசுகின்ற பேச்சு எல்லாவற்றையும்விட மிகச் சிறந்த பேச்சு.

இறைவன் உள்ளம் குளிரும்படி பேசுவதற்கு நமக்கு என்ன தெரியும் என்று கேட்கலாம். "நான் உனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன்' என்று சொன்னால் அந்தப் பேச்சினாலே ஒருவனுடைய உள்ளம் குளிருகின்றது. அந்தப் பேச்சினாலே தனக்கு வரும் பெரிய ஊதியத்தை எண்ணியே அவன் மனம் குளிருகின்றது. ஆனால் இறைவனுக்கு நாம் எதைத் தருவதாகச் சொல்லலாம்? நம்மிடம் அவனுக்கு அளிக்கத் தக்க பொருள் என்ன இருக்கிறது? இறைவன் நம்மால் பெறுவது ஒன்றும் இல்லை. அவன் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்துக் கொண்டிருக்க, நாம் அவனுக்குக் கொடுப்பதாவது!

பலவகையான அணிகளைத் தங்கத்தினால் பண்ணி அணிந்து கொள்கிறோம். அந்தத் தங்கத்தினாலே நமக்குப் பலவிதமான பயன்கள் இருக்கின்றன. நம்மால் அந்தத் தங்கத்திற்கு என்ன பயன் இருக்கிறது? இறைவன் தங்கம் போன்றவன். அவனுடைய அருளினாலே நாம் தனுகரணபுவன போகங்களைப் பெற்றிருக்கிறோம். ஆனால் நம்மாலே ஆண்டவனுக்கு ஏதாவ உபகாரம் உண்டா? இல்லை.

இதைப் பட்டினத்தார் சொல்கிறார்.
   "பொன்னாற்ப்ர யோசனம் பொன்படைத்
    தாற்குண்டு.அப் பொன்படைத்தான்
   தன்னாற்ப்ர யோசனம் பொன்னுக்கங்
    கேதுண்டத் தன்மையைப்போல்
   உன்னாற்ப்ர யோசனம் வேணதெல்
    லாமுண்டிங் குன்றனக்கே
   என்னாற்ப்ர யோசனம் ஏதுண்டு
    காளத்தி ஈச்சுரனே"
என்பது அவர் பாட்டு. நமக்கு எல்லா இன்ப நலங்களையும் அளிக்கின்ற கடவுளுக்கு நம்மால் உபகாரம் ஒன்றும் இல்லை என்று அவர் சொல்கிறார். அபகாரந்தான் உண்டாகிறது. இறைவன் கொடுத்த நாக்கினால் வாய் கூசாது கடவுள் இல்லை என்று சொல்லித் தவறு செய்கிறோம். இறைவனைத் திட்டுகிறோம், அவன் குழந்தைகளாகிய மக்களை வைகிறோம். இப்படி அவனுக்கு நாம் அபசாரம் செய்கிறோமே தவிர ஒரு விதமான உபகாரமும் செய்யவில்லை.

இவ்வாறு இருந்தால் எப்படி அவன் மனம் குளிரும்? குழந்தை தத்தித் தத்திக் கீழே விழாமல் நடக்கத் தெரிந்து கொண்டால் தாய் மகிழ்ச்சி அடைகிறாள். மழலைச் சொல்லாலே, அம்மா என்று குழந்தை கூப்பிட்டால் அதனைக் கேட்டு எல்லையில்லாத ஆனந்தம் எய்துகிறாள். பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தவுடன் வகுப்பிலேயே முதலாக இருக்கிறான் என்று சொல்லக் கேட்டால் அவள் உள்ளமெல்லாம் குளிர்ந்து போகிறாள். அந்தக் குழந்தை படித்து விட்டு நல்ல உத்தியோகத்திற்குப் போய்விட்டால் அவள் அடைகின்ற மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போய்விடுகின்றது. தன் குழந்தை நல்லவன் என்று பிறர் கூறக் கேட்கும் பொழுதெல்லாம் அவள் அடைகிற இன்பம், அக்குழந்தையைப் பெற்ற காலத்தில் அடைந்த இன்பத்தையும்விட மிக அதிகமானது என்று வள்ளுவர் சொல்கிறார்.

அதைப்போன்று எல்லா உலகத்திற்கும், எல்லாக் காலத்திற்கும், எல்லா ஜீவன்களுக்கும் பரம மாதாவாக விளங்குகிறவன் ஆண்டவன். இந்த உலகத்தில் எல்லா உயிர்களும் எந்த வகையில் முடியுமோ அந்த வகையில் சிறந்து விளங்கினால் அது அவனுக்குப் பேருவகையைக் கொடுக்கும். அதனால் அவன் உள்ளம் குளிரும். “இவன் மிகவும் நன்றாகப் பேசுகிறான்; இவனுக்கு மேலும் மேலும் நன்றாகப் பேசக் கற்றுக் கொடுக்க வேண்டும்' என்று தோன்றும்.

ஒரு தாய், தன் மகன் தினமும் பள்ளிக்கூடத்திற்குப் போகும் போது இரண்டணாக் கொடுத்து அனுப்புவாள். மத்தியான்ன வேளையில் வயிறு பசித்தால் ஏதாவது வாங்கித் தின்னட்டும் என்று அப்படிச் செய்வாள். பையன் பள்ளிக்கூடத்தின் வாசலுக்கு எதிரே ஒரு கிழவி ஊசற் கடலையைக் கொண்டு பண்ணின சுண்டலை விற்றுக் கொண்டிருந்தாள். அதனை வாங்கித் தின்றான். இரண்டு மூன்று நாள் சாப்பிட்டான். உடனே அவனுக்கு உடல் நலிவு வந்துவிட்டது. தலைவலி என்றான்; உடம்பு வலி என்றான். பள்ளிக்கூடம் போகாமல் வீட்டிலேயே படுத்துக் கொண்டுவிட்டான்.

தாய் என்ன நினைப்பாள் 'ஏதோ நல்ல பொருளாகப் பசி நேரத்திற்கு வாங்கிச் சாப்பிடட்டும் என்று இரண்டணாக் கொடுத்தால் இந்தப் பையன் உடம்புக்கு ஆகாத பொருளை வாங்கிச் சாப்பிட்டுவிட்டான் போலிருக்கிறது. வாந்தி எடுக்கிறான். இனி இவனுக்குக் காசு கொடுத்துப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பக் கூடாது' என்றுதானே நினைப்பாள்?

இறைவன் நமக்கு நல்ல வாயைக் கொடுத்து, பேசும் ஆற்றலையும் கொடுத்து அனுப்புகிறான். அந்த நாக்கை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டால் அவன் மிகவும் மகிழ்ச்சி அடைவான். மேலும் மேலும் நன்றாகப் பேச்சு வளரும்படி செய்வான். தாய் இரண்டணாக் கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய பிள்ளையாண்டான் ஊசற் கடலையை வாங்கித் தின்று உடம்புக்குத் தீங்கு தேடிக் கொண்ட போது தான் கொடுத்து அனுப்பிய இரண்டணாவைக் கொடுக்காமல் நிறுத்திவிட்டது போல, ஆண்டவன் நமக்குக் கொடுத்தனுப்பிய நாவைக் கொண்டு அவனுடைய திருநாமத்தைப் பேசாமல், பேசத் தகாதன எல்லாம் பேசிப் பிறருடைய மனத்தைப் புண்படுத்திக் கொண்டிருந்தால், அவன் நம்மை ஊமையாக்கிவிடுவான்.

பொல்லாத பேச்சுக்களில் நான்கு வகை உண்டு. கடுமையாகப் பேசி பிறர் மனம் புண்படும்படி செய்வது ஒரு வகை. பயன் இல்லாத சொற்களைப் பேசுவது ஒரு வகை. ஒருவனைக் காணாதபோது இகழ்ந்து பேசுவது ஒரு வகை. பொய் சொல்வது ஒரு வகை. இந்த நான்கு வகையாகப் பேசுவதையும் ஒழித்து இவற்றிற்கு மாறான பேச்சைப் பேச வேண்டும். பிறர் மணம் உவகை கொள்ளும்படி இன்சொல்லைப் பேச வேண்டும்; மெய்யைப் பேச வேண்டும்; புறங்கூறாமல் நேரே நயமாகச் சொல்ல வேண்டும்; பயனுள்ளவற்றையே பேசவேண்டும். நாம் எதையேனும் வாயில் போட்டுக் கொண்டு அதைத் திரும்ப வெளியில் துப்பினால் அதனை எச்சில் என்று சொல்லுகிறோம். உடம்புக்குள் போன எந்தப் பொருளாகட்டும், எந்த வழியாக வெளியே வந்தாலும் அதனை எச்சில் என்றோ, மலம் என்றோதான் சொல்கிறோம். நம்மிடமிருந்து வெளிவரும் அழுக்கை நாமே அருவருத்து ஒதுக்குகிறோம். ஆனால் உடம்புக்குள் இருந்து வெளியே வருவனவற்றுள் சிறந்த ஒன்று, எச்சில் படாத ஒன்று, மலமாகாத ஒன்று பேச்சுத் தான். அந்தப் பேச்சை சரியானபடி சொன்னால் எல்லோரும் கேட்பார்கள். உடம்புக்குள் இருந்து வெளி வருகின்ற எல்லாவற்றையும் எச்சில் என்றும், மலம் என்றும் சொல்லி வெறுக்கும் மனிதர்கள் விரும்பிக் கேட்டு அநுபவிக்கக் கூடியது பேச்சு.

அவ்வளவு அருமையாக நமக்குக் கிடைத்திருக்கும் பேச்சைப் பிறருடைய மனம் புண்படும்படியாகப் பலர் பயன்படுத்துகிறார்கள். குழந்தை தங்கக் கிண்ணத்தை எடுத்து வீதியில் போகிற நாயை அடிக்கிறமாதிரிதான் இருக்கிறது அது.

இறைவனுடைய அருளினால் பெற்ற வாக்கை அவனுடைய திருவருளை நினைந்து பாடுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே மிகச் சிறந்த பயன்.

வாய் பெற்ற பயன்

றைவன் நமக்கு வாய் தந்திருப்பது சாப்பிடுவற்காக மாத்திரமா? அப்படியானால் எல்லா உயிர்களுக்கும் வாய் இருக்கிறது. நம்மைக் காட்டிலும் யானைக்கு மிகப் பெரிய வாய் இருக்கிறது. ஆனால் அதை வாயில்லாப் பிராணி என்றுதான் சொல்கிறோம். நாம் ஒரு கவளம் சாப்பிட்டால் யானை நூறு கவளத்தை ஒரே வாயில் சாப்பிட்டுவிடும். பெரிய பிராணி அல்லவா யானை? ஆனாலும், அதனை நாம் வாயில்லாப் பிராணி என்றே சொல்கிறோம். சாப்பிடுகின்ற வாய் வாயாகாது. பேசும் வாய்தான் வாய். யானைக்குப் பேசத் தெரியாது. ஆகையால் அது வாயில்லாப் பிராணி ஆயிற்று. நாம் பேசும் வாய் படைத்ததன் பயன் என்ன?
   "வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
   தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை" என்று அப்பர் அருளியிருக்கிறார். அவ்வாறு வாய் படைத்தவர்கள் எல்லோரும் அவனை வாழ்த்தாவிட்டால் ஆண்டவன் என்ன செய்வான்? "போன பிறப்பில் இவனுக்கு அழகாகப் பேசக் கூடிய வாயைக் கொடுத்தோம். இவன் அதை நன்கு பயன்படுத்தாமல் இன்னாதன கூறி, பிறர் மனத்தைப் புண்படுத்தி வாழ்ந்தான். புறங்கூறிப் பெரிய பெரிய சண்டைகளைக் கிளப்பி விட்டான். பொய் கூறினான். வழவழவென்று பயனற்ற வம்புப் பேச்சைப் பேசினான். இவனுக்கு வாய் கொடுத்துப் பயன் இல்லை. இவன் வாயில்லாப் பிராணியாகவே போகட்டும்" என்று செய்து விடுகிறான்.

நன்றாகப் பேசக் கூடிய வாயைப் பெற்றிருந்தும், அந்த வாயையும், நாவையும் கொடுத்த இறைவனைப் புகழாதவனுக்கு வாய் இருந்தும் என்ன பயன்? இராமலிங்க சுவாமிகள்,
   "எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்
   ஏக்கற் றிருக்கும்வெறு வாய்”
என்று வருந்திச் சொல்கிறார்.

யாரைப் புகழ்வது?

கவே நாவை நமக்கு இறைவன் கொடுத்ததற்குக் காரணம் என்ன? நம்முடைய கடமை என்ன? வாய் கொடுத்த இறைவனை வாழ்த்துவது நம்முடைய முதற் கடமை. நமக்கெல்லாம் அவன் வாய் கொடுத்தது தன்னை எல்லாரும் புகழ வேண்டுமென்ற எண்ணத்தினாலா? அப்படி அல்ல. நாம் புகழ்ந்து அவனுக்கு ஆக வேண்டியது ஒன்றும் இல்லை. ஆனாலும் நம்முடைய கடமை அது. நாம் நம்முடைய நாவைக் கொண்டு மற்ற மக்களைப் புகழ்ந்து பேசினால் அவர்களுக்கு இன்பம் உண்டாகும். ஆனால் அவரிடம் விருப்பம் இல்லாதவர்களுக்குத் துன்பம் உண்டாகும். நாலு பேர் இருக்கும்போது ஒருவரைப் புகழ்ந்தால் மற்ற மூவரும், "நம்மை இவன் புகழவில்லையே!” என்று எண்ணக் கூடும். எல்லோரையும் புகழ வேண்டுமென்றால் இந்த நாவினாலே முடியாது; ஆயிரம் நா நமக்கு இருந்தாலும் முடியாது. ஆகவே, யார் நமக்கு உபகாரம் செய்கிறார்களோ அவர்களைப் புகழ்கிறோம். உபகாரம் செய்பவரைப் புகழ

க.சொ.1-7 வேண்டும் என்று தெரிந்து கொண்டது உண்மையானால், அப்போதும் இறைவனைப் புகழ வேண்டும்.

மக்கள் எல்லோரும் உபகாரம் செய்கிறார்கள். அவர்கள் செய்கிற உதவிக்கு எல்லை உண்டு. தாம் நினைத்தபடி எல்லாம் உபகாரம் செய்ய வேண்டுமென்றால் அவர்களிடம் மிகப் பெரிய சக்தி இருக்க வேண்டும். தன் குழந்தையைத் தொட்டால் அது உடனே வஜ்ரமாக ஆகிவிட வேண்டுமென்று ஒரு தாய் ஆசைப்படுகிறாள். ஆனால் அவளால் செய்ய முடிவதில்லை. அவளுக்கு வெறும் ஆசைதான் இருக்கிறது. ஆசையை நிறைவேற்றும் ஆற்றல் இல்லை. அவளிடம் உண்டாகிற ஆசைகள் பல. அவற்றில் ஒரளவு நிறைவேறுகிறது என்றால் அது ஆண்டவனுடைய சக்தியினால்தான் நிறைவேறுகின்றது. குழந்தைக்கு அவள் உபகாரம் செய்கிறாள் என்று நினைக்கிறோம். கொடுக்கும் கருவி அவள். அவள் மூலமாகக் கொடுக்கிறவன் ஆண்டவன்.

யாரோ ஒருவர் நமக்கு ஒரு புத்தகம் கொடுக்கிறார். இறைவனால் தூண்டப்பட்டுக் கொடுக்கிற அவர் இறைவனுடைய அருளாணைக்குரிய கருவியாகத்தான் இருக்கிறார். ஆண்டவன் மற்றவர்களையன்றி அவரை ஒரு கருவியாகக் கொண்டு கொடுப்பதனால் அவருக்கு ஒரு பெருமை உண்டு. அதனால் அவர் மகிழ்ச்சி அடையலாம். நாமும் அவரைப் போற்றலாம். ஆனால் அதனை அவர் நமக்குக் கொடுப்பதற்கு யார் மூல காரணமாக இருந்தானோ அவனை மறந்துவிடக்கூடாது.

தஞ்சாவூரிலிருந்து ஒருவர் நமக்கு ஐம்பது ரூபாய் மணியார்டர் பண்ணியிருக்கிறார். அந்த மணியார்டரைக் கொண்டு வந்து தபால்காரன் கொடுக்கிறான். அதனை வாங்கிக் கொண்டு நாம் என்ன செய்கிறோம்? மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் நமக்கு ஐம்பது ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்த தபாற்காரனுக்கு ஒர் இரண்டனாவைக் கொடுத்துப் போகச் சொல்லுகிறோம். ஆனால் அதே சமயத்தில், "அப்பாடி! நம்முடைய கஷ்டம் நீங்கிற்று. சரியான சமயத்தில் உதவி செய்த அந்தத் தஞ்சாவூர்ச் செட்டியாருக்கு என்ன கைம்மாறு செய்வோம்!” என்று எண்ணி உள்ளம் உருகுகின்றோம். இவ்வாறே நமக்கு உபகாரம் செய்கின்றவர்களிடம் நாம் ஓரளவு நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். அதே சமயத்தில் எல்லாவற்றுக்கும் மூலகாரணமாயிருக்கிற ஆண்டவனிடத்தில் நாம் மிக்க நன்றி பாராட்ட வேண்டும் அல்லவா? நாம் அவனுக்கு வேறு எவ்விதமாகக் கைம்மாறு செய்ய முடியும்? அவன் புகழைச் சொல்வதுதான் நன்றியறிவுக்கு அறிகுறி.
   "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
   பொருள்சேர் புகழ்புரிந்தார்மாட்டு"
என்பது வள்ளுவர் வாய்மொழி. பொருள் சேர் புகழ் என்பதற்கு உண்மையான புகழ் என்பது பொருள்.

இறைவனுடைய புகழ்தான் உண்மையான புகழ். மற்றவர்களைப் புகழ்வது ஏதோ ஒரு சம்பிரதாயத்திற்காகத்தான். மற்றவர்களைக் கருவியாகக் கொண்டு எல்லாக் காரியத்தையும் யார் செய்கின்றானோ அவனைப் புகழ்வதே உண்மையான புகழ்ச்சி.

ஆகையால் எல்லோரையும் புகழ்வதற்குப் பதிலாக எல்லாவற்றுக்கும் மூலப் பொருளாகிய ஆண்டவனைப் புகழ்ந்தால், உண்மையை நாம் உணர்ந்து கொண்டவர்களாகவும் ஆவோம்; எல்லோரையும் புகழ்ந்ததாகவும் ஆகும். இதனை உணர்ந்து அப்பர் பெருமான் சொல்லுகிறார்.
   "பொன்னானாய் மணியானாய் போக மானாய்
   'பூமிமேல் புகழ்தக்க பொருளே' உன்னை
   என்னானாய் என்னானாய் என்னின் அல்லால்
   ஏழையேன் என்சொல்லி ஏத்து கேனே!"

பொன்னாயும், மணியாயும், அவற்றால் ஏற்படுகின்ற போகமாயும் நீ இருக்கின்றாய். ஆகையால் பூமி மேல் யாரையாவது புகழ வேண்டுமென்றால் யாரைப் புகழ்வது? எல்லாம் நீயாகவே இருக்கின்றதனால் உன்னைத்தானே புகழ வேண்டும்? எந்த வகையைக் கொண்டு உன்னை நான் புகழ்வேன்? நீ எப்படி இருக்கின்றாய் என்று அறிந்தால்தானே புகழ முடியும்? உன்னை எப்படிப் புகழ்வது என்று எனக்குத் தெரியவில்லையே!” என்று பாடுகிறார். பல பல தேவாரத் திருப்பதிகங்களைப் பாடிய அப்பர் சுவாமிகள் நான் எப்படிப் புகழ்வேன் என்பாரானால், நாம் எல்லாம் என்ன சொல்வது?

4

அதன் பயன்

றைவனைப் புகழ்வது நம் கடமை; வாய் படைத்த பயன்; முன்னால் இறைவனால் பெற்ற பயனை நினைந்து நன்றி கூறும் செயல். அது மட்டுமல்ல. இனியும் அதனால் விளையும் பயன் ஒன்று உண்டு. அது என்ன என்று பார்க்கலாம்.

ஆண்டவன் கவியை அன்பால் பிழையறக் கற்றுக் கொண்டவர்கள், சாகுங் காலத்தில் ஒரு பாவி வந்து மிரட்டுவானே, அவனுடைய மிரட்டலுக்குப் பயப்பட வேண்டாம். நம்மிடம் இருக்கும் சொத்தைக் கண்டு அந்தக் காலன் பயப்படமாட்டான். பதவி கண்டும் பயந்து உயிரை விட்டுப் போக மாட்டான். எந்த நிமிஷத்தில், எந்தக் கணத்தில் வந்து சுருக்கிட்டு இழுத்துப் போக வேண்டுமென்பது அவனுக்குத் தெரியும். அவனை வெல்ல வேண்டுமென்றால் அயில்வேலன் கவியை அன்பால் படிக்க வேண்டும். நன்றாக வாழ்கின்ற காலத்தில் அப்படிப் படிக்காமல் இருந்துவிட்டால், அந்தப் பாவி யமன் வந்து கழுத்தில் சுருக்கிட்டு இழுத்துப் போவானே, அப்பொழுதா படிக்க முடியும்? சாகிற காலத்தில் சங்கரா, சங்கரா என்றால் வருமா? வராது. மனிதனுடைய பழக்கத்தால் உண்டான வாசனை எதுவோ அதுவே சாகிற காலத்தில் முந்திக் கொண்டு நிற்கும்.

அப்போது நினைத்தல்

றைவன் நினைப்புச் சாகிற போது வருமா என்பதை அநுபவத்தில் ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொள்ளலாம். தினந்தோறும் உறங்குகிறோம். உறங்குவதும் ஒரு சாவுதான். "உறங்குவது போலும் சாக்காடு" என்று சொல்லுகிறார் வள்ளுவர். நம்முடைய அநுபவத்தில் நம் நினைவில் என்ன என்னபடுகின்றனவோ அவை கனவில் வருகின்றன.

திருடனைக் கண்டு பயப்படுகிறோம்; திருடனைப் பற்றிக் கேட்டு அஞ்சுகிறோம்; கனவில் திருடன் தோன்றி நம்மை அலற வைக்கிறான். தினந்தோறும் நாம் இறைவனை நினைத்தால் கனவிலும் இறைவன் வருவான். நாம் நினைப்பதில்லை; அவன் நம் கனவில் வருவதில்லை. நம் மனத்தில் உள்ள அழுத்தமான நினைவுகள் கனவில் தோன்றுகின்றன.

கனவிலே ஆண்டவனைக் காண வேண்டுமென்றால் நனவில் அவனை அழுத்தமாக நினைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் படுத்து உறங்குகின்ற சாக்காட்டிலேயே இறைவன் நினைவு வரவில்லையென்றால், உடலை விட்டுப் போகும் பொழுது இயற்கையான வாசனையை மீறிக் கொண்டு ஆண்டவனது நினைவு எப்படி வரும்?

பயத்தால் அலறும்போது, "அம்மா, அப்பா!" என்று அலறுகிறோம்; "ஐயோ!" என்று கூவுகிறோம். அப்படிக் கூவிப் பழக்கம் ஆகிவிட்டது. அப்போது ஆண்டவனை அழைப்பதில்லை. அந்தப் பழக்கம் திடீரென்று நம்மிடம் வராது. பலநாள் பழக்கத்தால் வர வேண்டும்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூர்த் தியாகேசரிடம் மிகுதியான அன்பு கொண்டவர். அவர் திருவொற்றியூர் வந்தார். தாம் திருவொற்றியூரை விட்டுப் போவதில்லை எனச் சபதம் செய்து கொடுத்துவிட்டுச் சங்கிலி நாச்சியாரை மணந்து கொண்டார். திருவாரூர்ப் பெருமானைப் பிரிந்திருக்க அவரால் முடியவில்லை. "சங்கிலி நாச்சியாருக்குச் சத்தியம் செய்து கொடுத்தால் என்ன?" என்று புறப்பட்டுவிட்டார். சத்தியத்தை மீறியதால் அவர் கண்கள் குருடாகிவிட்டன. அப்போது இறைவனை நினைந்து அவர் புலம்புகிறார். 'சுவாமீ, உன்னை நான் எப்போதும் நினைக்கிறவனாயிற்றே. தடுக்கி விழுந்தாலும் உன் திருநாமத்தைச் சொல்வதையல்லாமல் ஐயோ, அம்மா, அப்பா என்று எனக்கு சொல்லத் தெரியாதே! என் கண்ணுக்கு ஒரு மருந்து சொல்ல மாட்டாயா?" என்று கதறுகிறார்.
   "அழுக்கு மெய்கொடுன் திருவடி அடைந்தேன்
     அதுவும் நான்பெறற் பாலதொன் றானால்
   பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்!
     பிழைப்ப னாகிலும் திருவடிப் பிழையேன்;
   வழுக்கி விழினும் திருப்பெயர் அல்லால்
     மற்று நான்அறியேன்மறு மாற்றம்;
   ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்
     ஒற்றி யூரெனும் ஊர்உறை வானே!"
பின்னும் ஓரிடத்தில்,
   "நற்ற வாஉன்னை நான்ம றக்கினும்
     சொல்லுநா நமச்சி வாயவே"
என்கிறார். இறைவன் நாமத்தைச் சொல்லிச் சொல்லிப் பழகிப் போனதால் அவர் இறைவனை மறந்தாலும் அவருடைய நாக்கு அவன் நாமத்தை மறக்காமல் சொல்கிறதாம்.

அத்தகைய நிலை நமக்கும் வரவேண்டுமென்றால் இப்பொழுதிலிருந்தே பழகி வர வேண்டும். யமன் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தால், அவன் இப்போது வருவேன் என்று அறிக்கை அனுப்பிவிட்டு வர மாட்டான். எப்போது வருவான் என்பதை நாமாகத் தெரிந்து கொள்ளவும் முடியாது. ஆகவே, இப்பொழுதிலிருந்தே அயில் வேலன் கவியைச் சொல்லிப் பழகினால் இறக்கும் பொழுது வேலன் நினைவு வரும். அந்தச் சமயம் அவன் ஓடோடியும் வந்து காப்பாற்றுவான்.

கலந்து பாடுதல்

வாக்கிலே கவி வந்துவிட்டால் மாத்திரம் போதாது. வாக்கிலே வரும் கவி எண்ணத்திலே பல சமயங்களில் வருவது இல்லை. இறைவன் திருநாமம் வெறும் பெயர் மாத்திரம் அல்ல. அதற்குச் சிறப்பான பொருள் உண்டு. அதனாற் பெறும் உணர்ச்சியும் உண்டு. அன்போடு சொல்லச் சொல்ல, அது மனத்திலே ஏறி, அதன் பொருள் உள்ளத்திலே தங்கும்; அதனுடைய சாரம் மனத்திலே பதியும்; அதனால் எழுகின்ற உணர்ச்சி பதியும். இறைவன் பற்றும் உண்டாகும். பிறகு இன்ப அநுபவம் உண்டாகும். அன்பினால் சொன்னால்தான் படிப்படியாக இந்த அநுபவங்கள் ஏற்படும்.

ஒரு பெண் இருக்கிறாள். அவள் வீட்டுக்குப் பக்கத்தில் ஆறுமுகம் என்று ஒரு பையன் இருக்கிறான். அவன் பெயரைப் பலர் கூப்பிடக் கேட்கிறாள் அந்தப் பெண். அந்தப் பெயரைக் கேட்கும் போது எந்தவிதமான உணர்ச்சியும் அவளுக்கு உண்டாவதில்லை. பெண்ணுக்குக் கல்யாணம் ஆகிறது. அவளுடைய கணவர் பெயரும் ஆறுமுகம் என்பதுதான். வழக்கம்போல் பக்கத்து வீட்டுப் பையனை அவன் தந்தை, 'ஆறுமுகம்' என்று கூப்பிட, அந்த ஒலி இன்றைக்கு அவள் காதில் ஜில்லென்று விழுகிறது. காரணம்? அந்தச் சொல் இப்போது அந்தப் பெண்ணுடைய நாயகனின் திருநாமம். அந்தப் பெயரைச் சொல்லி வேறு ஒருவரைக் கூப்பிடுவதாக இருந்தாலும், அவள் காதிலே விழும்போது இனிமை உண்டாகிறது. தன் நாயகனை நினைப்பூட்டுவதால் அந்த இன்பத்தைப் பெறுகிறாள்.

இதைப் போலவேதான் ஆண்டவன் நாமத்தை அன்பினால் சொல்ல்ப் பழகிவிட்டால், அந்தச் சொல்லானது கேட்ட மாத்திரத்தில் தன் பொருளாகிய இறைவன் திருவுருவத்தை நினைப்பூட்டுகிறது. அதனால்தான், "இறைவன் திருநாமத்தைச் சொல்லும் போதெல்லாம் நாக்கு இனிக்கிறது" என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். தேன் இனிக்கும் என்பது நமக்குத் தெரியும். தேனை நாக்கிலே விட்டுக் கொண்டால்தான் அந்த இனிமை தெரியும். அவ்வாறே இறைவன் திருநாமம் இனிக்கும் என்றால், அது கருத்தோடு கலந்தால்தான் இனிக்கும். அயில்வேலன் கவி அன்பால் கருத்தோடு கலந்தால் இனிக்கும். எப்போதும் சொல்லத் தோன்றும். யமன் வரும்போதும் சொல்லி இன்புறலாம்.

நாம் பாடினால் அவ்வளவாக இனிக்கிறது இல்லை. ஆனால் பெரியவர்கள் இனிக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். 'ஏதோ சம்பிரதாயத்திற்குச் சொல்லியிருக்கலாமோ?’ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. கருத்தோடு இணைந்து நிற்கும்படி நாமும் பாடினால் அப்போது நமக்கும் இனிக்கும்; அவர்கள் சொன்னது உண்மையென்று தெரியும்.

மாணிக்கவாசகர் பாட்டை இராமலிங்க சுவாமிகள் அநுபவித்தார். எப்படி?
   "வான் கலந்த மாணிண்க வாசகநின் வாசகத்தை
   நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
   தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவை கலந்தே
   ஊன்கலந்தென் உளங்கலந்தே உவட்டாமல் இனிப்பதுவே" என்கிறார். அவருக்கு மட்டும் இனிப்பானேன்? நமக்கு அப்படி இனிக்காமற்போவது ஏன்? நான் ஒருவர் வீட்டுக்குச் சென்றேன். அவர்கள் எனக்குக் குடிக்கப் பால் தந்தார்கள். அதைக் கொஞ்சம் சாப்பிட்டபோது தித்திப்புத் தெரியவில்லை. "சர்க்கரை போடவில்லையோ?” என்று கேட்டேன். “சர்க்கரை அடியில் இருக்கும். கலந்திருக்காது; கலந்து சாப்பிடுங்கள்" என்றார் அவ்வீட்டுக்காரர். சர்க்கரையைப் பாலிலே கலக்கும்படி செய்து சாப்பிடும்போது பால் இனிக்கிறது. சர்க்கரை தன் உருவம் தோற்றாமல் பாலிலே கலந்துவிட வேண்டும். சர்க்கரை வேறு, பால் வேறாக இருந்தால் பால் இனிக்காது. சர்க்கரை கரைந்து பாலிலே ஒன்றிக் கலந்து விட்டால், பால் இனிக்கிறது போல, தம்மை மறந்து, பாட்டு மயமாகக் கலந்து யார் பாடுகிறார்களோ அவர்களுக்கு அந்தப் பாட்டு இனிக்கும். "நான் கலந்து பாடுங்கால்” என்று இராமலிங்கர் சொல்வதை ஊன்றிக் கவனிக்க வேண்டும்.

நாம் அயில்வேலன் கவியில் கலந்து நம்மை மறந்து அன்போடு பிழையறக் கற்றுப் பாடினால் யமதர்ம ராஜனையே வெல்லலாம் என்று அருணகிரிநாதர் புலப்படுத்துகிறார். அவர் சொல்லும் பாட்டு எதிர்மறை வாய்பாட்டில் இருக்கிறது.

“அவனுடைய பாட்டை நீங்கள் அன்பாலே பாடவில்லை. எழுத்துப் பிறையறக் கற்கவில்லை. எரிமூண்டதென்னப் பொங்கு வெங்கூற்றன் தன் பாசக் கயிற்றால் கழுத்தில் சுருக்கிட்டு இழுப்பானே, அப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் அந்தச் சமயத்தில் கவி கற்றுக் கொள்ளலாம் என்று இருப்பீர்களானால் பயன் இல்லையே!" என்று கேட்கும் கேள்வியாக அது இருக்கிறது.

பாதுகாப்பு

ருணகிரிநாதர் ஒர் இன்ஷஅரன்ஸ் ஏஜண்டு. "ஐயா இப்போதே இன்ஷூரன்ஸ் பண்ணிக்கொண்டு விடுங்கள். நீங்கள் திடீரென்று செத்துப் போனால் என்ன ஆவது? உங்கள் குடும்பம் போகும் கதி என்ன?" என்று நம்மிடம் வந்து கேட்கிறார்களே, இன்ஷூரன்ஸ் ஏஜெண்டுகள், அந்த முறையில் சொல்கிறார். உயிருக்குப் பாதுகாப்புத் தேடிக்கொள்ள வேண்டுமென்பதை அவர் நினைவூட்டுகிறார். "உலகத்தவர்களே, அயில்வேலன் கவியை, அன்பால் பிழையறக் கற்றுக் கொள்ளாமல் இருக்கிறீர்களே, நாளைக்கு வந்து விடுவானே யமன். தன்னுடைய பாசக் கயிற்றால் உங்கள் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்க வந்து விடுவானே' என்கிறார்.

5

மரண வேதனை

னிதனுக்கு மரணத்தைவிட மிகத் துன்பமானது எதுவும் இல்லை. "சாதலின் இன்னாதது இல்லை" என்று வள்ளுவர் பேசுகிறார். சாகிறவன் மரணசமயத்தில் எப்படித் துன்பப்படுவானோ நமக்குத் தெரியாது. செத்தவர்கள் யாரும் தாங்கள் பட்ட வேதனையைத் திரும்பி வந்து சொன்னது இல்லை. ஆனால் சாகும் தறுவாயில் இருக்கிறவன் படுகிற பாட்டைக் கண்ணால் பார்க்கிறவர்களுக்கு மரண அவஸ்தை எவ்வளவு கடுமையானது என்று ஒரளவு ஊகிக்க முடியும். இறக்கும் நிலையில் இருப்பவன் வாயில் நுரை வருகின்றது. கண் பிதுங்குகிறது. நாக்கு வெளியே தள்ளுகிறது. காது கேளாமல் போய் விடுகிறது. கழுத்திலே கயிற்றைப் போட்டு முறுக்கினால் அப்படித்தான் நுரை தள்ளும்; கண் பிதுங்கும். மரணாவஸ்தையில் தோற்றும் அறிகுறிகளும் கழுத்தில் கயிற்றை இறுக்கி முறுக்கினால் உண்டாகும் அறிகுறிகளும் ஒரே மாதிரியானவையே. அந்த வேதனையைக் கண்டவர்கள் மரணத்தை உண்டாக்கும் சக்திக்கு உருவம் கொடுத்து யமன் என்று பெயர் வைத்து, அவன் கையிலும் ஒரு கயிறு இருப்பதாகச் சொல்லி, அவன் அந்தக் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கிறான் என்று சொன்னார்கள்.

தெரியாத பொருளையும், நுட்பமான பொருளையும் நாம் உணர்ந்து கொள்ளும்படி பருப்பொருளாகச் சொல்வது பெரியவர்கள் வழக்கம். மரணத்தை விளைவிக்கிறவன் யமன் என்று சொல்வது மரபு. அவனுக்குக் கூற்றுவன் என்றும் ஒரு பெயர் உண்டு. கூறு போடுதல் என்றால் பிரித்து வைத்தல் என்று பொருள். யமன் உடம்பிலிருந்து உயிர் போகும் நேரம் வரும் போது, "ஏ, உயிரே, நீயாக இந்த உடம்பிலிருந்து வெளியே போய்விடு" என்று சொன்னால், பழக்கப்பட்ட வீட்டை விட்டு வெளியே போவதற்கு அதற்கு மனம் வருமா? ஒருவனுடைய வீட்டில் நான்கைந்து ஆண்டுகள் குடியிருந்துவிட்டாலே, வீட்டுக்காரன் வீட்டைக் காலி பண்ணு என்றால் குடியிருப்பவனுக்கு அதை விட்டுப் போக மனம் வருவது இல்லை. பல ஆண்டுகள், பிறந்ததிலிருந்தே, இந்த உடம்பில் இருந்து வாழும் உயிரை அதை விட்டுப் போ என்றால் போகுமா? போகாது. அதனை வெளியே வரும்படி செய்ய, ஓர் அதிகாரி வருகிறான். எருமைக் கடாவில் யமன் வந்து, தன் கையிலுள்ள பாசக் கயிற்றால் சுருக்கிட்டு இழுக்கிறான். அவனை நாம் பாவி, கூற்றன், யமன் என்கிறோம்.

காலன் தன்னுடைய ஊழியத்தைச் செய்கிறான். அதனை அறியாமல் நாம் அவனைப் பாவி என்கிறோம். ஆனால் பெரியவர்கள் அவனைத் தர்மராஜன் என்று சொல்வார்கள். அவர்கள் மரணத்தை வரவேற்கிறவர்கள். உடம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் கடமையை நிறைவேற்றுகின்றவனாதலால் தர்மராஜா என்கிறார்கள். நாமோ மரணத்தைக் கண்டு பயப்படுகிறோம். அதனால் அவனை வைகிறோம்.

பயமும் பக்தியும்

யமன் எருமைக் கடாவின் மீது ஏறி வருவான். அவனுக்குக் கோரப் பற்கள் இருக்கும். அவன் பார்க்கும் போதே கண் அனல் கொப்புளிக்கும்; புகைவிடும். அவன் நம் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கப் பாசக் கயிற்றைக் கையில் வைத்திருக்கிறான் என்றெல்லாம் சொல்லும்போதே அது நமது உள்ளத்தில் பயத்தை உண்டாக்குகிறது. மரணம் பயமுடையதென்று எண்ணுகிற நமக்குக் காலனும் அச்சந்தரும் கோலத்துடன் இருக்கிறான்.

"மரணத்தைக் கண்டு ஏன் பயப்பட் வேண்டும்? மரணத்தை வரவேற்கும்படியாகச் சொல்லக் கூடாதா?" என்றால், மரணத்தில் பயம் ஏற்பட்டால்தான் மரணத்தினின்றும் விடுதலை பெற வேண்டும் என்ற ஆசை தோன்றும். தப்பும்படி அருள்கின்ற இறைவனிடத்தில் பக்தி உண்டாகும். காலனால் உண்டாகும் பயத்தை எடுத்துச் சொல்லி, அந்தப் பயத்தைப் போக்குகின்ற இறைவனிடத்தில் பக்தியை உண்டாக்கி வந்தார்கள், நம் நாட்டுப் பெரியோர்கள். மரண பயம் உண்மையில் மனத்தில் தோன்றினால் அழுத்தமான பக்தி உண்டாகும். அதனால்தான் 'பயபக்தி' என்ற தொடர் வந்தது.

ஒரு வீட்டிலே ஒருவர் இறந்து போகிறார். அயல் வீட்டுக் கிழவர் மயானம் வரையிலும் அந்தப் பிணத்தோடு சென்று வருகிறார். மயானத்திலே அவர், "உம்; எல்லோரும் இப்படிப் போக வேண்டியதுதான். இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்கு யமன் வருவான்" என்று சொல்கிறார். ஆனால் வீட்டிற்கு வந்தவுடன் அந்த அறுபது வயசுக் கிழவர் இன்னும் அறுபது ஆண்டுகளுக்குரிய குத்தகைச் சீட்டில் கையெழுத்துப் போடுகிறார். அவருக்கு உண்மையிலேயே நாளைக்கு யமன் வருவான் என்ற பயம் ஏற்பட்டிருந்தால் அப்படிச் செய்வாரா? வீட்டுக்கு வந்தவுடனேயே அவருக்குப் பயம் போய்விடுகிறது. மயானத்தில் தோன்றிய அறிவு, குளத்தில் பாசி சற்றே விலகி மறுபடியும் நீரை மூடிக் கொள்வது போல, மறைந்து போகிறது. அவருக்கு ஏற்பட்ட வைராக்கியம் ஸ்மசான வைராக்கியம்.

ஒருவன் தலையில் தீப்பற்றிக் கொண்டுவிட்டதானால், அவன் அந்த நெருப்பை அணைக்க, "எங்கே நீர்? எங்கே நீர்?" என்று தவிதவித்து ஒடுவான். "இந்தா அப்பா, இது மிகவும் சுவையான அல்வா" என்றால் அவன் அதனை வாங்கித் தின்ன நிற்பானா? "காசு கொடுக்க வேண்டாம் அப்பா இனாமாகவே தின்றுவிட்டுப் போ" என்றால்தான் நிற்பானா? "எங்கே நீர்? எங்கே நீர்?" என்று அலறுவதை நிறுத்த மாட்டான். மரணம் என்கிற துன்பத்தை நினைத்துப் பார்த்து, அது தனக்கு வந்து விடுமே என்னும் உண்மையான பயத் தீ ஒருவனைப் பற்றிக் கொண்டுவிட்டால் அதனை அணைக்க, "எங்கே அருள் தண்ணீர்? எங்கே அருள் தண்ணீர்?" என்று அலறித் தேடி ஒட மாட்டானா? ராமகிருஷ்ண பரமஹம்சர் தீவிரமான பக்தி எப்படி இருக்கும் என்பதை விளக்குகிறார். சீடன் தன் குருவை, "எப்படிப் பக்தி செய்வது? என்று கேட்டானாம். குரு அவனை, "இங்கே வா" என்று அழைத்துக் கொண்டு ஒரு குளத்திற்குப் போனார். அவனை அந்த நீரில் குளிக்கச் சொன்னார். அவன் அந்தக் குளத்திற்குள் அமிழும்போது அவன் தலையை வெளியே தூக்க மாட்டாமல் நீருக்குள்ளேயே அழுத்தினார். ஒரு நிமிஷத்திற்குப் பின் விட்டு விட்டார். அவன் மூச்சு விட முடியாமல் திணறித் துடித்துக் கொண்டு எழுந்தான். அவனைப் பார்த்து, "தண்ணிருக்குள் நீ என்ன நினைத்தாய்?" என்று கேட்டார். "எந்தச் சமயத்தில் வெளியே வருவேன், என்று எண்ணினேன்" என்றான் அவன். 'இப்படி ஆண்டவனை எந்தச் சமயத்தில் காணுவோம் என்று துடிதுடித்து நினைத்துப் பக்தி செய்தால் ஆண்டவன் அருள்வான்" என்று சொன்னார். அந்தத் துடிப்பை எப்படிப் பெறலாம்? மரணத்தினால் உண்டாகும் வேதனையை மனமார உணர்ந்தால் பெறலாம்.

எப்போது வருவான்?

நாம் யமன் வாயில்தான் தூங்குகிறோம். அவன் வாயிலுள்ள நம்மை அவன் எந்தச் சமயத்திலும் கொண்டு போய்விடுவான். அது இன்ன சமயம் என்று நமக்குத் தெரியாது. யமன் முன் எச்சரிக்கை அனுப்பி விட்டு வருகிற பேர்வழி அல்ல. அதனால் நாம் எப்போதுமே பாதுகாப்புடன் இருக்க வேண்டும். ஞானசம்பந்தர்,
   "நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யார் அறிவார்
   சாநாளும் வாழ்நாளும்?"
என்று நெஞ்சுக்கு உபதேசம் செய்கிறார்.

எந்த நாள் யமன் வருவானோ? யார் அறிவார்கள் சா நாளும், வாழ் நாளும் யார் அறிவார்கள்? தான் செத்துப் போகிற நாள் எது, வாழ்கின்ற நாள் எது என்று யாருக்காவது தெரியுமா? தெரியுமானால் அந்தச் சமயத்தில் ஆண்டவன் பேரைச் சொல்லலாம்.

ஒருவன் ஒர் ஊருக்குப் போகிறான். அந்த ஊர் போகும் வண்டி மணிக்குக் கிளம்புகிறது என்று ஒருவரைக் கேட்கிறான். அவர் பத்து மணிக்கு என்கிறார். மற்றொருவரைக் கேட்கிறான். அவர் பதினொரு மணிக்கு என்கிறார். இவன் ஒன்பது மணிக்கே ஸ்டேஷனில் போய் உட்கார்ந்து கொண்டு விடுகிறான். "எந்தச் சமயத்தில் வண்டி கிளம்பும் என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. எதற்கும் முன்னாடியே போய்விட்டால் நல்லதென்று வந்து விட்டேன்?" என்று சொல்கிறான். அதைப்போலவே மரணம் என்பது எப்போது வரும் என்று நிச்சயமாகத் தெரியாததாலே, அதிலிருந்து தப்ப வேண்டுமானால் அதற்கு முன்னாலேயே இறைவனை வாழ்த்தத் தொடங்க வேண்டும். எப்போதுமே இந்தக் கவசத்தை அணிந்து கொண்டால் யமன் எப்போது வந்தாலும் பயம் இல்லை.

ஆகவே மீட்டும் பிறவாத நிலை தந்து நம்மை எல்லாம் ஆட் கொள்ளுகிற இறைவனைப் பாட வேண்டும். அவன் ஒருவன் தான் உண்மையான புகழுக்கு உரியவன். அந்தப் புகழுக்கு உரியவனாக இருப்பது மாத்திரம் அல்ல. புகழ்வதற்குரிய நாக்கைத் தந்தவனும் அவன்தான். நம் கடமை, நாக்கைத் தந்தவனைப் புகழ்வது என்பது மட்டும் அன்று; புகழ்வதனால் மேலும் நமக்குப் பயன் உண்டு. அவனைப் புகழ்ந்தால் காலனை வெற்றி கொள்ளலாம்.


   ......எரி மூண்டதென்ன
   விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன்.
கூற்றன் மிகவும் சீற்றத்தோடு வருகிறான். அவன் கண்களில் அனல் கொப்புளிக்கிறது. புகை எழுகிறது. முகம் கோபத்தால் சிவந்திருக்கிறது. அவன் தன் பாசக் கயிற்றைப் போட்டு, நம் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கிறான். அவனது கொடுமையான பிடியிலிருந்து தப்ப வேண்டுமென்றால் அயில்வேலன் கவியைப் பாட வேண்டும். நன்றாக வாழ்கின்ற காலத்து அவன் கவியைக் கற்றுக் கொள்ளாதிருக்கிறீர்களே; மரணம் உண்டாகும் சமயத்தில் எப்படி உங்களுக்குப் பாட வரும்?' என்பது அருணை முனிவர் கேள்வி.

"பேச்சு என்ற பெரு வரம் பெற்ற மக்கள் நாம். ஆதலால் நல்ல பேச்சைப் பேசுங்கள். முருகன் பேச்சைப் பேசுங்கள். அயில்வேலன் கவியைக் கற்றுக் கொள்ளுங்கள். அன்பால் எழுத்துப் பிழையறக் கற்றுக் கொள்ளுங்கள். கூற்றன் வந்து கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும்போது அந்தக் கவி வந்து உதவும். அந்தச் சமயத்தில் கற்றுக் கொள்ளலாம் என்று இருப்பீர்களானால் நிச்சயமாக அப்போது கற்றுக் கொள்ள முடியாது" என்று இதனால் தெரிந்து கொள்ளும்படி உபதேசம் செய்கிறார் அவர்.
   அழித்துப் பிறக்கவொட் டாஅயில்
     வேலன் கவியைஅன்பால்
   எழுத்துப் பிழையறக் கற்கின்றி
     லீர்எரி மூண்டதென்ன
   விழித்துப் புகையெழப் பொங்குவெங்
     கூற்றன் விடுங்கயிற்றால்
   கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன்
     றோகவி கற்கின்றதே?

(மீட்டும் பிறக்காமல் செய்யும் கூர்மையான வேலையுடைய முருகனைப் புகழும் கவியை அன்பினால் எழுத்துப் பிழைகள் இன்றிக் கற்காமல் இருக்கிறீர்களே கனல் மூண்டாற்போல விழித்து அதிலிருந்து புகை எழும்படியாகக் கோபத்தால் பொங்கும் கொடுமையுடைய யமன் தான் விடுகிற பாசக் கயிற்றால் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அந்த நாளிலா கவி கற்பது?

அழித்து - மீட்டும். அயில் - கூர்மை. கற்கின்றிலீர் - நீங்கள் கற்கவில்லையே. பொங்கு-கோபித்து எழும்.)