உள்ளடக்கத்துக்குச் செல்

கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1/ஐந்து பகைவர்

விக்கிமூலம் இலிருந்து













குறிஞ்சிக் கிழவன்



முகவுரை

அருணகிரிநாதர் முருகன் அருளில் மூழ்கித் திளைத்தவர். அதுமாத்திரம் அன்று. சிறந்த புலமை உடையவர். அவருடைய திருவாக்கைக் கூர்ந்து ஆராய்ந்தால் தென்மொழியிலும் வட மொழியிலும் ஒருங்கே புலமை பெற்றவர் என்பதை உணரலாம். பழங்காலத்தில் அராகம், வண்ணம், வகுப்பு, முடுகு என்ற பெயரோடு அங்கங்கே சந்த அமைப்பையுடைய கவிகள் இருந்தாலும் முழுவதும் சந்தம் அமைந்த திருப்புகழைப் போலச் சந்தக் கவி பாடியவர்கள் மிக அரியர். அதுவும் ஒரு பாட்டா, இரண்டு பாட்டா? பதினாயிரம் திருப்புகழ்களையல்லவா மேகம் போலப் பொழிந்து தள்ளியிருக்கிறார்? தமிழர்களுடைய இழவூழால் அவற்றில் பெரும்பாலன மறைந்தன. சற்றேறக்குறைய 1300 பாடல்களே இப்போது கிடைத்திருக்கின்றன.

பிரபுடதேவராயன் காலத்தில் வாழ்ந்தவர் அருணகிரிநாதர். அம்மன்னன் 16-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று தெரிய வருகிறது. அக்காலத்தில் கருநாடக அரசர்கள் இப்பக்கத்தில் ஆண்டதனால் கன்னடத்துக்கு அதிகச் சலுகை இருந்து வந்தது. அப்போது தமிழில் வில்லிபுத்தூரார் சிறந்த கவிஞராகத் திகழ்ந்தார். அவருடைய வாக்கில் முடுகு நடை விரவிய கவிகள் பல உண்டு. அருணகிரிநாதர் வெள்ளம் போலச் சந்தக் கவியைப் பாடிய காலமாதலின் வில்லிபுத்துரரும் சந்த விருத்தங்களைப் பாடினர் போலும்!

புதிய வகையில் சந்தக் கவி பாடியது மாத்திரமன்று; முருகனைப் பற்றியே அவ்வளவு பாடல்களையும் பாடினார். அதற்குமுன் முருகனைத் துதித்த பாடல்கள் தமிழில் இருந்தாலும் ஒரே புலவர் இத்துணைப் பாடல்களைப் பாடவில்லை. அதற்கு முன் முருகனைப் பற்றிப் பாடிய கவிகளைத் தொகுத்துப் பார்த்தால் அத்தனைக் கவிகளுக்கும் அதிகமாகவே அருணகிரியார் பாடினார் என்பது தெரியவரும். அருண்கிரியார் பாடலில் இது இரண்டாவது சிறப்பு.

மூன்றாவது அவருடைய சமரச இயல்பு. தேவாரம், திவ்யப் பிரபந்தமாகிய அருள் நூல்களிற்கூட ஏனைய சமயத்தார் உள்ளம் புண்படும் இடங்கள் இருக்கலாம். ஆனால் அருணகிரிநாதர் பாடல்களில் எல்லாத் தெய்வங்களும் போற்றப் பெறுகின்றனர். சாதன வகைகளாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கைப் பற்றிய செய்திகளையும் அவற்றில் காணலாம். வடமொழி தென்மொழி இணைப்பு, பழமை புதுமை இணைப்பு, இசை இயல் இணைப்பு, சைவ வைணவ இணைப்பு, யோக ஞான இணைப்பு, உலகியல் பதியியல் இணைப்பு முதலிய பல இணைப்புகள் அருணகிரியார் திருவாக்கில் ஒளிவிடும். காழ்ப்பின்றி யாவரையும் தழுவிக் கொண்டு சமரச நெறியிலே வாழ்வதை விரும்பும் இக்காலத்துச் சான்றோர்க்கு உவப்பைத் தருவது அவர் பாடல்.

இந்தப் பண்புகள் அனைத்தும் கந்தர் அலங்காரத்தில் விரவியிருத்தலைக் காணலாம். இதில் உள்ள பாடல்கள் கட்டளைக் கலித்துறை என்னும் கலிப்பா இனத்தைச் சேர்ந்தவை. ஆயினும் பல பாடல்களில் சந்த அமைதி இருக்கிறது.

“சேராநிட் டூரனைச் சூரனைக் காருடற் சோரிகக்கக்
கூரகட் டாரியிட் டோரிமைப் போதினிற் கொன்றவனே"

என்ற பாட்டினில் தானனத் தானனத் தானனத் தானனத் என்ற சந்தம் அமைந்திருக்கிறது. வேறு சில பாடல்களும் உண்டு.

சிவபுராணச் செய்திகளும் கந்த புராண வரலாறுகளும் பாரத ராமாயணத்தில் வரும் நிகழ்ச்சிகளும் திருப்புகழிலும் உண்டு; மற்ற நூல்களிலும் உண்டு.

இந்தப் புத்தகத்தில் நான்கு பாடல்களுக்குரிய விளக்கங்கள் இருக்கின்றன. ஐந்து பகைவர், குறிஞ்சிக் கிழவன், தனிப்பரமானந்தம், பேய் விளையாட்டு என்ற தலைப்பில் அவ்விளக்கங்கள் இதில் உள்ளன. பாட்டின் பொருளை மாத்திரம் பதவுரையாகவோ பொழிப்புரையாகவோ எழுதிவிடுவது மிக எளிது. இந்த நான்கும் சொற்பொழிவாகச் செய்த விளக்கம். ஆதலால், சொல்லுக்குப் பொருள் உரைப்பதோடு நில்லாமல் அங்கங்கே உள்ள பொருள்களை வேறு செய்திகளோடு சார்த்தி விளக்கும் முறையில் இச்சொற்பொழிவுகள் அமைந்திருக்கின்றன. கந்த புராணத்திலுள்ள வரலாறுகள் வருமிடங்களில் அவற்றின் உள்ளுறையை என் அறிவுக்குப் புலனாகிய அளவுக்கு விளக்கியிருக்கிறேன். நம் நாட்டில் வழங்கும் புராணங்களில் வரும் கதைகள் நம்பத்தகாதன, குருட்டு நம்பிக்கையினால் எழுந்தன என்று சிலர் சொல்லுவார்கள். மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகளை வைத்துப் புனைந்த கற்பனைக் கதைகள் பல உண்டு; அத்தகைய அபூத கற்பனைகளில் வரும் நிகழ்ச்சிகள் முன்பு நடந்தவை அல்ல; இனியும் நடக்கப் போவன அல்ல. ஆனாலும் அவற்றைப் படித்து இன்புறுகிறார்கள் இக் காலத்து மக்கள். கதைகளில் பாத்திரங்களின் இயல்புகளும் அடிப்படையான உண்மைகளும் உள்ளுறையாக அமைந்திருப்பதால் அவற்றைத் தெரிந்து மகிழ்ச்சியடைகிறார்கள். அதே தெளிவு புராணக் கதைகளிலும் காணலாம். அவற்றிலுள்ள வரலாறுகள் அனைத்தும் அப்படியே நிகழ்ந்தன என்று கொள்ள வேண்டியது இன்றியமையாததன்று. அவற்றினூடே உள்ள கருத்துக்களை, அக்கதைகள் எந்த உண்மையை வெளிப்படுத்த அமைந்தனவோ அந்தக் குறிப்புக்களை, உணர்ந்தால் இப்போது தோன்றும் அபூத கற்பனைகளைச் சுவைப்பது போலவே புராணக் கதைகளையும் சுவைக்கலாம்.

புராணத்தில் வரும் கதைகள் இந்த நாட்டுக்கு மாத்திரமே உரியன என்பதற்கும் இல்லை. எல்லா நாடுகளிலும் எல்லாச் சமயங்களிலும் எல்லா மொழிகளிலும் இத்தகைய கதைகள் உண்டு. இந்தக் கதைகளை எண்ணித் தங்கள் சமய நெறிகளை இழிவாகக் கருதுபவர் யாரும் இல்லை. மற்ற நாட்டுக் கதைகளினூடே உள்ளுறை இருக்கிறதோ இல்லையோ, திட்டமாகச் சொல்ல இயலாது. இந்த நாட்டுக் கதைகளுக்கு நிச்சயமாகத் தத்துவார்த்தம் உண்டு. மூர்த்திகளின் உருவ வேறுபாடுகளுக்குத் தனித்தனியே உள்ளுறை உண்டு, கோயிலின் அமைப்புக்கும், வழிபாட்டு முறைக்கும், விழாக்களுக்கும், கடவுளின் பல்வேறு திருஉருவங்களுக்கும், திருவிளையாடல்களுக்கும் உள்ளே நுட்பமாக அமைந்த கருத்துக்கள் உண்டு. அக்கருத்துக்களை கருவாகக் கொண்டு உருவெடுத்தவை அவை. பொதுவாக இந்திய நாட்டின் கலைகள் யாவுமே உள்ளுறையுடன் அமைந்த குறிப்புக் கலைகளே (Suggestive Art). ஆதலின் புராணக் கதைகளின் சிறப்பை அறிய வேண்டுமானால் மேலெழுந்த வாரியாகப் பார்த்து, "இது என்ன பைத்தியக்காரக் கதை" என்று புறக்கணிக்கக் கூடாது. "இதன் கருத்து யாது?" என்று கூர்ந்து ஆராய வேண்டும். நம்முடைய சமய உண்மைகளை நிலைக்களமாக வைத்துக் கொண்டு ஒப்பு நோக்க வேண்டும். அப்போது உள்ளுறை விளங்கும். நுண்பொருளைப் பருப்பொருளாகக் காட்டியிருக்கும் கலைத்திறத்தைப் பாராட்டிப் போற்றும் நிலைக்கு வந்துவிடுவோம்.

இப்புத்தகத்தில் சில இடங்களில் புராண வரலாறுகளின் உள்ளுறையை ஒரளவுக்கு விளக்கியிருக்கிறேன். சொற்பொழிவுகளினிடை விளக்கியவையே அவை.

இலக்கிய சம்பந்தமான செய்திகளையும் அங்கங்கே விளக்கியிருக்கிறேன். ஐந்திணையைப் பற்றிய செய்திகள், முருகனைக் குறிஞ்சித் தெய்வமாக வைத்துப் போற்றும் மரபு, விழுப்புண், கள வேள்வி முதலியவற்றை இலக்கிய இலக்கண நூல்களிற் கண்ட பொருள்களோடு வைத்துக் காட்டி விளக்க முயன்றிருக்கிறேன்.

நான் எழுதியுள்ள திருமுறை மலர்கள் என்ற வெளியீடுகளிலும், வேறு சில நூல்களிலும் காணும் கருத்துக்கள் சில இதில் அங்கங்கே வந்திருக்கலாம். ஒரு கருத்தைப் பல இடங்களில் விளக்க வேண்டி வரும்போது இது மாற்ற முடியாதது என்பது அன்பர்களுக்குத் தெரியும்.

சமய சம்பந்தமான கருத்துக்கள் நுட்பமானவை. அவற்றை விளக்குவது எளிதன்று. பெரியோர்களின் திருவாக்குகளை மேற்கோள் காட்டினால் மாத்திரம் போதாது. ஆதலின், வாழ்க்கையில் நாம் நேரே அறியும் நிகழ்ச்சிகளை உவமையாக வைத்துப் பல கருத்துக்களை விளக்கியிருக்கிறேன். பழம் புலவர்கள் கூறுவனவற்றைப் புதிய முறையில் அமைத்துக் காட்டும் இடங்களும், முழுதும் புதியனவாகவே உவமை கூறி விளக்கும் இடங்களும் இதில் உண்டு.

இவை சொற்பொழிவுகளானமையால் ஒரு பொருளைப் பல வகையில் விளக்கிச் சொல்ல வேண்டியது அவசியமாயிற்று. உவமைகளும், உதாரணங்களும் மேற்கொள்ளும் கருத்துக்களை விளக்க உதவி புரிகின்றன. வாழ்க்கை நிகழ்ச்சிகளிலிருந்து எடுத்துக் காட்டும் உவமைகளால் பொருள் விளங்குவதைப் போல, மற்ற எதனாலும் அவ்வளவு தெளிவாக விளங்குவதிலை. அதனால் பல பல உவமைகளைப் பேச்சினிடையே பயன்படுத்துவது என் வழக்கமாகிவிட்டது.

எழுதும் கட்டுரையில் உள்ள செறிவு இதில் இல்லாமல் இருக்கலாம்; ஆனால் விளங்காத பகுதி ஒன்றும் இதில் இராதென்றே எண்ணுகிறேன். பேச்சைக் கேட்கும்போது உண்டாகும் அநுபவம் வேறு. பேச்சில் தொனி வேறுபாடுகளும், பேசுபவனுக்கு நேரே கேட்பவர்கள் இருந்து ஒரு முகமாகக் கவனிக்கும் வாய்ப்பும் உண்டு. அதனால் பேச்சில் ஓரளவு சுவை பிறக்கிறது. அந்த வாய்ப்புக் கட்டுரைகளுக்கு இல்லை. ஆனாலும் பன்முறை படித்துப் படித்து இன்புற இயலும்.

இதற்கு முன் வெளியிட்ட "அலங்காரம்" என்னும் புத்தகத்தில் உள்ள சொற்பொழிவுகளைச் சுருக்கெழுத்தில் எடுத்துத்தந்த என் அன்பர் திரு. அனந்தன் அவர்களே இந்தப் புத்தகத்தில் உள்ளவற்றையும் எடுத்தார். அவருடைய அன்பை அளவிட்டுச் சொல்வது இயலாத காரியம். ஒன்றரை மணி நேரம் விடாமல் சுருக்கெழுத்து எழுதிப் பிறகு அதைத் தட்டெழுத்தில் வார்த்துத் தர வெறும் ஆற்றல் மாத்திரம் இருந்தால் போதாது; தனியான அன்பு இருப்பதனால்தான் இது அவருக்குச் சாத்தியமாகிறது. அந்த அன்பும் அவர் ஆற்றலும் அவர் நலங்களும் முருகன் திருவருளால் மேன்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தேனாம்பேட்டையில் உள்ள பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று இரவு ஏழு மணி முதல் எட்டரை மணி வரையில் இந்தச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறேன். ஒன்றரை மணி நேரம் பொறுமையோடு இருந்து கேட்கும் அன்பர்கள் என் உள்ளத்தே ஊக்கம் உண்டாகும்படி செய்கிறார்கள். அவ்வப்போது அவர்கள் காட்டும் களிப்புக் குறிப்பு அவ்வூக்கத்துக்கு உரமூட்டுகிறது. வழக்கம்போல் ஒவ்வொரு வாரமும் என்னை அன்புடன் வரவேற்றுச் சொற்பொழிவு இனிது நிகழும்படி வேண்டியவற்றைச் செய்யும் தர்மகர்த்தர்களாகிய ஸ்ரீ சந்திரசேகரன், ஸ்ரீ நரசிம்மன், ஸ்ரீ நாயகர் ஆகியவர்களுடைய பேரன்பை நான் பாராட்டக் கடமைப்பட்டவன். அவர்களுக்கு என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் புத்தகத்தில் விளக்கப் பெற்ற பாடல்கள் நான்கே. ஆனால் விரிக்கப் பெற்ற பொருள்கள் பல என்பதை அன்பர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். உள்ளுறையைப் பார்த்தால் இது விளங்கும்.

முருகன் திருவருள் யாண்டும் மலிவதாகுக.

கி.வா. ஜகந்நாதன்



01.01.1956

ஐந்து பகைவர்

சிவபெருமான் திரிபுரம் எரித்த கதையையும் ஷண்முகநாதப் பெருமான் சூர சங்காரம் செய்த கதையையும் மூன்றாவது பாட்டில் சொன்னார் அருணகிரி நாதர். தேவலோகவாசிகள் சூரபன்மனது ஆதிக்கத்திற்கு உட்பட்டு, தங்கள் அரசையும் இழந்து, அடிமை வாழ்வில் அகப்பட்டு உழன்று கொண்டிருந்தார்கள். சூரனை வென்று முருகன் அவர்களுக்கு சுயராஜ்யம் வாங்கித் தந்தார் என்று பார்த்தோம்.

அடுத்தபடியாக அருணகிரி நாதருக்கு ஒரு நினைவு வந்தது. 'தேவலோகத்தைக் கைப்பற்றிக் கொண்டு தேவலோக வாசிகளை அடிமைப்படுத்திய அசுரர்களைச் சங்காரம் செய்து, ஆண்டவன் தேவர்களுக்குத்தானே பிழைப்புக் கொடுத்தான்? அதனாலே நமக்கு என்ன?' என்ற நினைவு யாருக்காவது வந்தால் என்ன செய்வது என்று எண்ணினார் போலும்: "நமக்குத் தேவலோகம் போன்ற ராஜ்யம் எதுவும் சொந்தமாக இல்லை. ஒரு ஜமீன்கூடச் சொந்தம் இல்லை. நமக்கு என்று ஒரு தனி ராஜ்யம் இருந்து, அது போய்விட்டால் மீட்டும் அதனை முருகன் வாங்கித் தருவான். ஒரு வீடுகூடச் சொந்தம் இல்லாமல் இருக்கிற நமக்கு அவனைப் பற்றி என்ன கவலை?" என்று ஒருவர் கேட்பதாக வைத்துக் கொள்வோம். அதற்குரிய விடையைப் புலப்படுத்தும் பாடலை அடுத்தபடி அலங்காரத்தில் பார்க்கிறோம்.

இதற்கு முன்னாலே, சொன்ன பாட்டில், 'சூர்ப்பேரணி கெட்டது" என்றுதான் சொன்னார்; சூரன் அழிந்ததைக் குறிப்பாகப் பெற வைத்தார். இந்தப் பாட்டில் இவனை முருகன் சங்காரம் செய்தான் என்பதையும் வெளிப்படையாகச் சொல்கிறார்.

1

உடம்பாகிய வீடு

லகத்தில் சொத்துப் படைத்தவர்கள் எல்லாம் நிலமும் வீடும் படைத்திருக்கிறார்கள். சிலருக்கு நிலம் இல்லாவிட்டாலும் வீடு இருக்கிறது. நமக்கு என்ன வீடு இருக்கிறது? ஒன்றும் இல்லை என்று நம்மில் சிலர் நினைக்கிறோம். ஆனால் நம் எல்லோருக்கும் வீடு இருக்கின்றது. உயிர்களாகிய ஆன்மாக்கள் தங்கி வாழ்கின்ற வீடு ஒன்று உண்டு. அதற்கு உடம்பு என்று பெயர். தேகமாகிய வீட்டில் இருக்கின்ற உயிரைத் 'தேகி' என்பார்கள். தேகமாகிய வீட்டுக்கு விலாசம் உண்டு; பெயர் உண்டு. விலாசம் உள்ள அந்த வீட்டில் உயிர் குடியிருக்கிறது. மனிதன் என்று உயிர் உள்ளவனைத்தான் சொல்கிறோம். முத்துசாமி செட்டியார், முத்துசாமி ஐயர் என்றெல்லாம் விலாசம் போட்டுச் சொல்வது ஆன்மாவை அடையாளம் கண்டுகொள்வதற்கு அல்ல; உடம்பை அடையாளம் காணத்தான். உயிரோடு வாழ்கிற உடம்புக்குத்தான் அத்தகைய விலாசம் இட்டுச் சொல்கிறோம். உடம்பில் வாழ்கிற உயிர் புறப்பட்டுப் போய் விட்டால் அந்த உடம்புக்கு விலாசம் இல்லை. எல்லா உடம்புக்கும் அப்பொழுது ஒரே பெயர்தான் அமைகிறது. மக்கள் வசிக்காத இடிந்த வீடுகளை விலாசம் இல்லாமல் 'குட்டிச்சுவர்' ன்ன்று அழைப்பதைப் போல, உடம்பாகிய வீட்டிலிருந்து உயிர் போய்விட்டால் இதனைப் பிணம் என்று அழைக்கிறோம்.

"ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே"

என்று சொல்கிறார் திருமூலர்.

யாருக்குச் சொந்தம்?

பிணமாக இல்லாமல், உடம்பாக வளர்ச்சியுடன் இருக்கிறது இந்த விடு. மனிதனென்று சிறப்புப் பெறுகிறது. இந்த வீட்டில் உயிர் குடியிருக்கிறது. இந்த உடம்பாகிய வீடு உயிர்க்குச் சொந்தமா? அல்லது சொந்தக்காரர் வேறு யாரேனும் இருக்கிறாரா? இந்த உடம்பு உயிருக்குச் சொந்தம் என்றால் உயிர் நினைத்தபடி உடம்பு அமைய வேண்டும். நமக்குச் சொந்தமான வீட்டில் இரண்டடுக்குகள் இருக்கின்றன; நாம் விரும்பினால் மூன்று அடுக்கு மாளிகையாக அதைக் கட்டிக் கொள்ளலாம். நமக்குப் பிள்ளை அதிகமானாலும், மருமகப்பிள்ளை வீட்டுக்கு வந்தாலும் இன்னும் இரண்டு மூன்று அறைகள் தடுத்துக் கொள்ளலாம். வீட்டுக்குச் சொந்தக்காரர் தம் விருப்பப்படி அதில் பலவிதமான மாறுதல்களைச் செய்து கொள்ள முடியும்.

உயிரின் விருப்பப்படியே இந்த உடம்பில் வேண்டிய மாறுதல்களைச் செய்து கொள்ள முடியுமா? செவிடாகப் பிறந்த ஒருவர் அந்த செவிட்டை நீக்கிக் கொள்ள முடியுமா? நமக்கு இரண்டு கைகள் போதவில்லை; பன்னிரண்டு கைகள் வேண்டு மென்று விரும்பினால் பாக்கிக் கைகளை ஒட்டிக் கொள்ள முடியுமா? பிறவி ஊமையாகப் பிறந்த ஒருவன் பேச்சில் வல்லவன் ஆக முடியுமா? ஆகையால் இந்த உடம்பு நமக்குச் சொந்தம் அன்று என்றே தெரிந்து கொள்ள வேண்டும். இதில் நாம் குடியிருக்கிறோம். வீட்டைப் படைத்தவன் எந்த எந்த மாதிரியாகப் படைத்தானோ அதில் சிறிதளவுகூட மாற்றம் செய்ய முடியாது. இப்படி இருந்தும் இந்த உடம்பு நமக்குச் சொந்தம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு என்று ஒன்று இருந்தால் அதில் என்ன என்ன இருக்கின்றனவென்று நமக்கு தெரியாதா? நாம் ஒரு பெட்டியை வாங்கிக்கொண்டு வருகிறோம். அதில் பல பொருள்களை வைத்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் பெட்டி நம்முடைய தாதலால், அதில் பல பொருள்களையும் வைத்தவர் நாமாதலால், எப்போது கேட்டாலும் அந்தப் பெட்டியில் என்ன இருக்கின்றன என்று நம்மால் சொல்ல முடியும். இந்த உடம்பு நமக்குச் சொந்தம் என்றால் இதற்குள் என்ன இருக்கின்றன என்று சொல்ல நமக்குத் தெரிய வேண்டாமா? வயிற்று வலி வந்தால் அது எப்படி வந்தது என்று நமக்குத் தெரிவதில்லை. டாக்டரிடம் போய்க் காட்டுகிறோம். அவருக்கும் தெரிவதில்லை. எக்ஸ்ரே எடுக்க வேண்டுமென்கிறார். எக்ஸ்ரேக்கும் தெரியாமல் எத்தனையோ வியாதிகள் இருக்கின்றன. அது கிடக்கட்டும். இந்த உடம்புக்குள் எத்தனை புழுக்கள் இருக்கின்றன தெரியுமா? அதுவும் தெரியாது.

குடியிருக்கும் வீடு

நாம் பல ஆண்டுகள் ஒரு வீட்டில் மாதம் மாதம் வாடகை கொடுத்துக் கொண்டு வாழ்ந்தால் அந்த வீட்டை நம்முடையது என்று சொல்கிறோம்; "என்னுடைய வீட்டுக்கு வாருங்கள்" என்று அழைக்கிறோம். அது வழக்கமாகப் போய்விட்டது. அதைப் போல இந்த உடம்பில் நாம் குடியிருப்பதனால் இதை நம்முடையது என்று சொல்லலாம். அந்த மட்டும் உண்மை. ஆனால் குடியிருக்கும் போதாவது அது நமக்கு முழுச் சொந்தமாக இருக்கிறதா? நம்முடைய விருப்பப்படி அதில் வளைய வரலாமா? இதைச் சற்றே சிந்தித்துப் பார்க்கலாம்.

ஒரு வீட்டில் நாம் குடியிருக்கிறோம். அந்த வீட்டின் சொந்தக்காரனும் அந்த வீட்டிலேயே மற்றொரு பகுதியில் வசித்தால் அதைவிடத் தொல்லை வேறு வேண்டியதில்லை. பெரும்பாலும் அங்கே நமக்குச் சுதந்தரம் இராது. அழகான முருகன் படத்தை அன்றைக்குத்தான் நாம் வாங்கி வந்திருப்போம். அதை மாட்டலாம் என்று சுவரில் ஆணி அடிக்கப் போனால், வீட்டின் சொந்தக்காரன் சண்டைக்கு வந்துவிடுவான்; "ஆணி அடித்து வீணாக்கவா நான் சுவர் எழுப்பினேன்?" என்று கேட்க வந்துவிடுவான்.

ஐவர் செயல்

ஒரு ஜமீன்தார்: அவர் இறக்கும்போது அவருக்கு ஒரு வீடுதான் சொந்தமாக இருந்தது. வீட்டில் ஒருவர் குடியிருந்தார். அந்த ஜமீன்தாருக்கு ஐந்து பிள்ளைகள். அவர்களும் அந்த வீட்டிலேயே வசிக்க வந்துவிட்டார்கள். சின்னஞ்சிறு பிள்ளைகள், செல்லப் பிள்ளைகளாக வாழ்ந்தவர்கள். ஆதலால் அவர்கள் செய்கின்ற குறும்பு சொல்லி முடியாது. அந்த வீட்டில் குடியிருந்தவர் ரேடியோவில் திருவாசகம் பாடுவதை அறிந்து அதைக் கேட்கலாம் என்று உட்காருகிறார். பக்திப் பாடலின் வரிசையில் ஒருவர் அழகாகத் திருவாசகத்தைப் பாடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்த சமயம் பார்த்து, ஜமீன்தாரின் பிள்ளைகளில் ஒருவன் ஒரு தகர டப்பாவை வைத்துக் கொண்டு மிருதங்கம் வாசிக்கிறான். அவனுக்கு மிருதங்கம் கிடைக்கவில்லை. ஆகவே, தகர தப்பாவை வைத்துக் கொண்டு கர்ணகடோரமான ஒலியை எழுப்புகிறான். கேட்டால், "இது என் வீடு. என் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்வேன்" என்று பேசுகிறான். மைசூருக்குப் போய் நல்ல மணமுள்ள ஊதுவத்தியை அவர் வாங்கி வந்திருந்தார். ஆண்டவன் படத்திற்கு முன்னாலே உட்கார்ந்து கொண்டு தியானம் செய்யும்போது, அந்த வத்தியைக் கம்மென்று மணக்கும்படி ஏற்றி வைத்திருந்தார். அதே சமயத்தில் ஜமீன்தாரின் மற்றொரு பிள்ளை அவர் வீட்டு ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு மொத்தமான சுருட்டு ஒன்றைப் புகைக்கிறான். இருக்கிற நாற்றம் போதாது என்று புகையிலைச் சுருட்டு நாற்றத்தை வேறு விடுகிறான். அது அவர் மூக்கில் ஏறித் தலைவலி எடுக்கிறது. கேட்டால், "இது என் வீடு. என் விருப்பப்படி சுருட்டுக் குடிக்க எனக்கு உரிமை உண்டு" என்று அவன் பேசுகிறான். அந்த வீட்டின் வாயிலிலே அழகழகான வண்ணக் கோலங்களைக் குடியிருக்கிறவர் போடுகிறார். அடுத்த கணம் ஜமீன்தாரின் மற்றொரு பிள்ளை வாளி நிறையத் தண்ணீரைக் கொண்டு வந்து அதில் கொட்டிக் கோலம் அழிந்து போகும்படி செய்கிறான். கேட்டால் "இது என் வீடு. என் விருப்பப்படி வீதியில் தண்ணிர் கொட்டுவேன். அதைக் கேட்க நீர் யார்?" என்று பேசுகிறான். நல்ல தென்றல் காற்று வருகிறதே என்று அவர் தம் வீட்டு ஜன்னலின் பக்கம் உட்கார்ந்து கொண்டு திருப்புகழைக் கொஞ்சம் படிக்கலாம் என்று ஆரம்பிக்கிறார். ஜமீன்தாரின் மற்றொரு பிள்ளை ஜன்னலை அடைக்கச் சொல்லுகிறான். அவன் சினிமாக் காட்டப் போவதால் இருட்டாக இருக்க வேண்டுமென்கிறான். கேட்டால், "இது என் வீடு. என் விருப்பப். படி நடக்கத்தான் வேண்டும்" என்று பேசுகிறான்.

அந்த வீட்டில் அவர் மாதந்தோறும் குடிக்கூலி கொடுத்துக் கொண்டு இருந்தாலும், தம் விருப்பப்படி திருவாசகம் கேட்பதற்கு தடை உண்டாகிறது. அவர் விருப்பப்படி ஊதுவத்தியை ஆண்டவன் சந்நிதானத்திலே ஏற்றி வைத்து, அதன் நறுமணத்தை அநுபவிப்பதற்குத் தடை உண்டாகிறது. அவர் விருப்பப்படி அழகான கோலங்களைப் போட்டு அதனைப் பார்த்துக் களிக்கக் கூடிய காட்சிக்குத் தடை உண்டாகிறது. அவர் விருப்பப்படி நல்ல தென்றல் காற்றை அநுபவிக்க முடியாமல் போகிறது. இப்படி அந்த வீட்டின் சொந்தக்காரர்களாகிய ஐந்து பிள்ளைகளாலும், அந்த வீட்டில் குடியிருக்கின்ற அவர் ஐந்து விதமான புலன்களினாலும் அநுபவிக்கின்ற அநுபவங்களுக்குத் தடை உண்டாகிறது. அவர்களுடைய வீட்டில் வசிக்கிற அவர் என்ன செய்வார் குடிக் கூலி கொடுத்துக் கொண்டுதான் அந்த வீட்டில் வசிக்கிறார். ஆனால் தம் விருப்பப்படி எதையும் அங்கே அநுபவிக்கச் சுதந்தரம் இல்லை.

இந்தக் கதையைப் போன்றதுதான் நம்முடைய வாழ்வும். நம்முடைய உடம்பாகிய வீட்டில் நாள்தோறும் நடக்கும் நிகழ்ச்சி இது. 'அற்புதமாகத் திருப்புகழை யாரோ பாடுகிறார்களே; அதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கலாம்' என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால் அவனுடைய காதோ அதைக் கேட்கப் போகிறதில்லை. அந்த வீட்டுக்கு எதிரேயுள்ள டிக்கடையிலிருந்து வரும் சினிமாச் சங்கீதத்தைக் கேட்கத் தாவுகிறது. ஆண்டவன் நமக்கு உண்டாக்கிய கைகள் இருக்கின்றனவே, அவற்றால் நல்ல நல்ல பூக்களை எடுத்து அவனுக்கு அர்ச்சனை செய்யலாம், அலங்காரம் பண்ணலாம் என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால் இவனுடைய கைகள் அதைச் செய்யப் போவதில்லை; செய்யத்தகாத பல காரியங்களை எல்லாம் செய்யப் போகின்றன. ஆண்டவனது திருவுருவத்திற்குப் பூவாலும், அணியாலும் அலங்காரம் பண்ணியிருக்கிறார்களே, அதைக் கண் குளிரக் கண்டு கொஞ்சம் களிக்கலாம் என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால் அந்தக் கண்கள் அதைக் காணப்போவதில்லை; பார்க்கத் தகாத பொருளை எல்லாம் காசு கொடுத்துப் பார்க்கப் போகின்றன. ஆண்டவனது திருக் கோயிலைச் சுற்றி அழகான நந்தவனங்களை எல்லாம் உண்டு பண்ணியிருக்கிறார்கள்; அங்கே போய்க் கொஞ்சம் நல்ல காற்றை அநுபவித்துவிட்டு வரலாம் என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால் இவன் கால்கள் அங்கே போவதில்லை. பருத்தி விலைச் சூதாட்டத்துக்குப் போய்ப் போலீஸ்காரர்கள் வருகிறார்கள் எனப் பயந்து, காற்றுக்கூட உள்ளே புகாத இருட்டறைக்குள் நுழைந்து கொண்டு புழுங்கித் துன்புறப் போகின்றன. ஆண்டவனுக்கு நிவேதனம் செய்து கோயிலிலே நல்ல நல்ல பிரசாதங்கள் கொடுக்கிறார்கள்; அவற்றை வாங்கிச் சாப்பிடுவோம் என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால் இவன் நாக்கு அதைச் சுவைப் பதில்லை. "ஹோட்டலுக்கு வா; ஜிலேபி போட்டிருக்கிறார்கள்" என்று இவனைத் தூண்டி அங்கே இழுத்துப் போய்க் காசு கொடுத்து ஜிலேபியை வாங்கித் தின்னச் சொல்லி விட்டு, வீட்டுக்கு வந்து வாந்தி எடுக்கச் செய்கிறது.

இப்படியாக, இந்த உடம்பாகிய வீட்டில் இருக்கிற நாம், நல்ல காரியங்களைச் செய்ய வேண்டுமென்று விரும்பினாலுங் கூட, இந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் என்று சொல்லிக் கொள்ளுகிற ஐந்து இந்திரியங்களும் நம்மை அந்த அந்தக் காரியங்களைச் செய்யவொட்டாமல் தடுக்கின்றன. "ஆண்டவன் கோயிலுக்குப் போகலாம்; அவன் திருவுருவத்தைத் தரிசிக்கலாம்; அதனை மனத்திலே தாங்கிச் சிறிது நேரம் தியானம் செய்யலாம்” என்பன போன்ற நினைப்புக்கள் நமக்கு வந்தாலும், அந்த நினைப்பின் படி நடக்கவொட்டாமல், ஐந்து இந்திரியங்களும் நம்மை வேறு வழிக்கு இழுத்துச் சென்று துன்பப்படுத்துகின்றன.

மெய், வாய், விழி, மூக்கு, செவி ஆகிய ஐந்து இந்திரியங்களையும் பொறிகள் என்று சொல்வார்கள். இந்திரியம் என்பது வடமொழி. உலகத்திலுள்ள பொருள்களை எல்லாம் அநுபவிப்பதற்கு இந்த ஐந்து பொறிகளும் உதவுகின்றன. காதாகிய பொறியினால் அநுபவிப்பது சப்தம். கண்ணாகிய பொறியினால் அநுபவிப்பது காட்சிப் பொருள். மூக்காகிய பொறியினால் அநுபவிக்கக் கூடியது மணம். உடம்பாகிய பொறியினால் அநுபவிக்கக் கூடியது ஸ்பர்சம். நாக்காகிய பொறியினால் அநுபவிக்கக் கூடியது சுவை.

"சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு"

என்று வள்ளுவர் சொல்லுகிறார்.

பல சமயங்களில் மனம் ஒன்றை நினைக்கிறது. நினைப்பதை இந்திரியங்கள் செய்வதில்லை. நல்ல உணவைத்தான் சாப்பிட வேண்டுமென்று நினைக்கிறோம். சாப்பிடுகின்ற பொறி அதனைக் கேட்பதில்லை. நல்ல பொருள்களையே காண வேண்டுமென்று நினைக்கிறோம். ஆனால் காணுகின்ற பொறி காணத் தகாத பொருளைத்தான் காண்கின்றது. இவ்வாறு இந்த உடம்பாகிய வீட்டில் இருக்கின்ற ஐந்து பொறிகளும், நாம் ஏதேனும் ஒன்றை நினைத்தால் அது அநுகூலமாக நடப்ப தில்லை. நமக்கு அவை பகைவர்களாக இருக்கின்றன. .

ஐந்து களிறு

இந்த ஐந்து பொறிகளும் மத களிற்றுக்குச் சமானம் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். உலகத்திற்குப் பொதுவாக ஒரு சிறந்த நூல் செய்த வள்ளுவரும் அப்படிச் சொல்லுகிறார்.

“உரனென்னுந் தோட்டியான் ஒரைந்தும் காப்பான்
வரவென்னும் வைப்பிற்கோர் வித்து."

'மனத்திண்மை யென்னும் அங்குசத்தால் பொறிகள் ஐந்தாகிய மதயானைகளை அடக்கிக் காப்பவன், எல்லாவற்றையும்விட மேலானது என்று சொல்லப்பெறும் முத்தி நிலத்திற்சென்று முளைக்கும் வித்துப் போன்றவன்' என்பது இதற்குப் பொருள்.

விதை நெல்

ந்த உலகத்தில் சாவியாய்ப் போகும் நெல் உண்டு. பயனுள்ள நெல்லும் உண்டு. நெல்லை அறுவடை செய்தால் எல்லா நெல்லும் நல்ல நெல்லாக இருப்பதில்லை. அறுவடை செய்த நெல்லைத் தூற்றினால் பதர் தனியாகப் பறந்து போய் விழுவது தெரியும். நெல்லாக இருக்கிறவற்றிலும் எல்லா நெல்லும் விதை நெல்லாக இருப்பதில்லை. பெரும்பாலானவை சாப்பாட்டிற்கு உபயோகப்படும் நெல்லாகத்தான் இருக்கும். விதை நெல் சற்றுக் கனமாக இருக்கும். நன்றாக விளைந்து முற்றிய நெல்லையே விதையாகத் தேர்ந்தெடுப்பார்கள்.

விளைகின்ற நெல்லிலே எப்படிச் சாவியாய்ப் போன நெல், பதராகப் போன நெல் இருக்கிறதோ, அதேபோல மனித சாதியிலும் சாவியாய்ப் போன மனிதர்கள் இருக்கிறார்கள். தம்முடைய அருமையான வாழ்நாளை வீணாக அடிக்கிற மனிதர்கள் அவர்கள். இவர்களை மக்கள் என்று சொல்லக்கூடாது. "மக்களட் பதடியெனல்" என்று சொல்கிறார் வள்ளுவர். தான் பேசுகின்ற பேச்சினாலே தனக்கும் பயன் இல்லாமல், கேட்பவர்களுக்கும் பயன் இல்லாமல் வழவழவென்று பயனில்லாத சொற்களையே பேசுகின்றானே அவனை மனிதன் என்று சொல்லக்கூடாதாம்; பதடி என்று சொல்ல வேண்டுமாம்.

"பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்"

அத்தகையவர்கள் உள்ளீடு இல்லாதவர்கள். வெறும் நெல்லைப் போல இருப்பவர்கள் பலர் உண்டு. அவர்கள் தாம் பெற்ற வாழ்விலே எவ்வளவு சுகத்தை அநுபவிக்கலாமோ அவ்வளவும் அநுபவிப்பார்கள். ஆனால் இனிமேல் இந்த உலகத்தில் பிறவாமல் முத்தி இன்பத்தை அடைய இப்பொழுதே அஸ்திவாரம் போடுபவர் யாரோ அவர்கள் விதை நெல்லுக்கு ஒப்பானவர்கள். நன்றாக முற்றி விளைந்த நெல்தானே விளையும்? முற்றின இந்த நெல் முத்தியென்னும் உலகத்தில் விளைவதாகும். 'வரன்’ என்னும் வைப்பாவது முத்தியுலகம். பதினான்கு உலகங்கள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். அவற்றை மூன்று தட்டுகளாகச் சொல்வார்கள். ஒன்று வானுலகம். மற்றொன்று பூவுலகம். இந்தப் பூவுலகத்திற்குக் கீழே இருப்பது மூன்றாவதாகிய பாதாள லோகம் என்பது. வானுலகம் மேலே இருக்கின்றது. பூவுலகம் மத்தியில் இருக்கின்றது. பாதாள லோகம் கீழே இருக்கின்றது. அவற்றை "அந்தர் மத்திய பாதலம்" என்று சொல்வார்கள். இந்த மூன்றுவகையான உலகங்களுக்கும் அப்பாற்பட்ட ஒன்று உண்டு. அதுதான் முக்தியுலகம். வானுலகந் தான் தேவலோகம். அதற்கும் மேலான உலகமாய் இருப்பது முத்தி. "வானோர்க் குயர்ந்த உலகம்" என்று திருவள்ளுவர் அதைச் சொல்வார்.

மாயா லோகமாகிய இந்தப் பூவுலகத்திலே வந்து பிறந்த ஆன்மா இன்ப துன்பங்களை அநுபவித்து, பக்தி மார்க்கத்திலே நின்று தவம் பண்ணி, ஆண்டவன் திருவருளைப் பெற்றுச் சிறந்து நின்றால், அது திரும்பவும் இந்த உலகத்திலே வந்து பிறவாமல், முத்தி உலகத்திலே போய் விளைகின்றது. இந்த ஆன்மாவானது. இந்தப் பூவுலகத்தில் வளர்ந்து விளைந்து கடைசியில் விதைக்குரிய நெல்லாக முற்றி முத்தி லோகத்தில் போய் விளைகின்றது. இன்ப துன்பத்திற்கு அப்பாற்பட்ட ஆனந்தத்தை அங்கே அடைகின்றது. இங்கே விளைந்த வித்து அங்கே போய் முளைக்கிறது.

தேவர்கள் நம்மைக் காட்டிலும் சிறந்த இன்ப வாழ்வை அநுபவிக்கிறார்கள் என்று நினைக்கிறோம். ஆனால் அவர்கள்

க.சொ.1-10 அடைவது இன்ப வாழ்வு அல்ல; சுக வாழ்வு. ஆனந்தம், சுகத்திற்கும் துக்கத்திற்கும் அப்பாற்பட்டது.

விளக்கு நல்ல ஒளியைத் தரக்கூடியதுதான். விளக்கிலிருந்து வெளிச்சம் வருகிறது. ஆனால் அந்த விளக்குக்கு அடியில் போய்ப் பார்த்தால், அந்த விளக்கின் நிழல் படிந்திருக்கும். தேவர்கள் விளக்கு ஒளியைப் போன்றவர்கள். இன்பமாகிய ஒளியும், துன்பமாகிய நிழலும் உடையவர்கள். ஆனந்தம் என்பது சுகமும் அல்லாமல், துக்கமும் அல்லாமல் எல்லாவற்றையும் கடந்து, நிழலே விழாத சூரியனின் ஒளியைப் போன்றது. நிழலே இல்லாத இந்த ஆனந்தத்தை அடைய வேண்டுமென்றால் முத்தியை அடைய வேண்டும். அதனைப் பெறுவதற்கு வழி என்ன? அந்த முத்தியை விளைவிக்கக்கூடிய இந்தப் பூலோகத்தில் வந்து பிறந்து, நல்ல நல்ல காரியங்களை எல்லாம் செய்து, பொறிகளை அடக்கித் தவம் பண்ண வேண்டும்; ஈரம் காய்ந்து முற்றிய வித்தைப் போல ஆக வேண்டும். ஐம்பொறிகளை அடக்கி, ஈரமின்றி முற்றினால், முத்தி நிலத்தில் முளைத்துப் போகம் பெறலாம்.

திருவள்ளுவர் ஐந்து களிறுகளை அடக்க வேண்டுமென்று சொல்கிறார். இந்த ஐந்து யானைகளும் மதம் பிடித்த யானைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் இழுத்துக் கொண்டு போகின்றது. அவற்றை அடக்க வேண்டும். களிற்றை அடக்குவதற்கு யானைப் பாகன் தன் கையில் என்ன வைத்திருக்கிறான்? அங்குசத்தை வைத்திருக்கிறான். பொறிகளை அடக்கும் அங்குசம் ஞானம். யார் ஞானம் என்ற அங்குசத்தைப் பெற்றிருக்கிறார்களோ அவர்கள் ஐந்து பொறிகளாகிய யானைகளை அடக்கி விடுவார்கள். அந்த ஞானத்திற்குத்தான் 'உரன்’ என்று பெயர். உரன் பெற்றவர்கள், ஞானம் பெற்றவர்கள், ஆத்மாவுக்குத் துன்பத்தைத் தருவதற்குக் காரணமான ஐந்து இந்திரியங்கள் என்ற மதம் பிடித்த யானைகளை அடக்குகிறார்கள். அவ்வாறு பொறிகளை அடக்கி வென்றவர்கள் முத்தி நிலத்தில் விளைகின்ற வித்துப் போன்றவர்கள். இது வள்ளுவர் சொல்லும் உண்மை.

பொறியை அடக்குதல்

பொறிகளாகிய ஐந்து களிறுகளையும் அடக்குவதற்கு நாம் ஒவ்வொருவரும் வாழ்நாளில் முயற்சி செய்ய வேண்டும். அதற்காகத்தான் பூசை முதலியன வைத்திருக்கிறார்கள். ஐந்து பொறிகளையும் இரண்டு விதமான முறையில் அடக்கலாம். தவம் பண்ணி, வேதாந்த சித்தாந்தங்களை எல்லாம் படித்து, ஞான விசாரத்தினால் இந்திரியங்களை நிக்கிரகம் செய்வதன் மூலம் அவற்றை அடக்கிவிடலாம். ஆனால் இந்த முறை சிங்கத்தைக் கட்டிப் போடுவது போன்றது. கட்டிப் போட்டிருக்கிற வரையில் சிங்கம் சாதுவாக இருக்கும். கட்டுத் தளர்ந்து விடுபட்டால் எல்லையற்ற தீங்கு விளைந்துவிடும். அது போன்றதுதான் இந்த முறை. இந்த முறை கடினமானது. நல்ல சுவையுள்ள சாப்பாட்டைச் சாப்பிட வேண்டுமென்று அவர்கள் நாக்கு விரும்பும். சேர்ந்தாற் போலப் பத்து நாள் பட்டினி கிட என்று வயிற்றைப் பட்டினி போடுவார்கள். நல்ல சுகமான தென்றல் காற்றை அநுபவிக்க அவர்கள் உடம்பு விரும்பும். சேர்ந்தாற்போலப் பல ஆண்டுகள் காற்றுப் புகாத குகைக்குள் நுழைந்து கொண்டு உடம்பை புழுக்கத்தால் வாடிப் போகச் செய்வார்கள். குளிர்ச்சியான இடத்திற்குப் போய் இன்புற அவர்கள் உடம்பு விரும்பும். அப்போது தான் மண்டை வெடிக்கிறது போல இருக்கின்ற வெயிலில் நின்று கொண்டு தவம் செய்வார்கள். "நிரம்பக் குளிராக இருக்கிறதே; கொஞ்சம் குளிர் காய்ந்தால் நன்றாக இருக்கும்" என்று அவர்கள் உடம்பு விரும்பும். அப்போதுதான் சில்லென்று இருக்கிற தண்ணிருக்குள் மூழ்கித் தவம் பண்ணுவார்கள். இப்படி அவர்களுடைய பொறிகள் என்ன என்ன அநுபவிக்க வேண்டுமென்று விரும்புகின்றனவோ அதற்கு நேர்விரோதமான பாதையில் அவற்றைச் செலுத்தி அவற்றின் ஆசையைக் குலைத்து வெல்வார்கள்.

இது ஞானயோகிகளுக்குச் சாத்தியமாகும். இந்த முறை நமக்கு ஏற்றது என்று சொல்ல முடியாது. அந்த ஞானயோகிகள் செல்கின்ற மார்க்கத்திலே ஒரு சின்னத் தவறு ஏற்பட்டு விட்டாலும் அவர்களுக்கு எல்லை இல்லாத தீங்கு உண்டாகி விடும். எறும்பு விழுந்தால் அடிபடாது. யானை கீழே விழுந்தால் என்ன ஆகும்? அந்த மாதிரியே ஞானயோகிகள் தாங்கள் செல்கிற பாதையில் சின்னத் தவறு இழைத்துவிட்டாலும் அது அவர்கள் வாழ்க்கையில் பெரிய தீங்காய் முடியும்.

ஆனால், முத்தி அடைவதற்கு எளிய வழி ஒன்றும் இல்லையா? இருக்கிறது. "உலகத்திலுள்ள பொருள்களை எல்லாம் ஐந்து பொறிகளின் மூலம் அநுபவிக்க விரும்பினால், அப்படியே அநுபவி. ஆனால் அதில் ஒரே ஒரு சின்ன மாறுதல் செய்ய வேண்டும். ஐந்து புலன்களை அவ்வவ் வழியே போகவிடு. அவ்வாறு போக விடுவதில் ஒரு ஒழுங்கு இருக்கட்டும்" என்று நம் பெரியோர்கள் நமக்குச் சொன்னார்கள்.

மாடும் முளையும்

ரு கொண்டி மாடு இருக்கிறது. அதை அவிழ்த்து விட்டால் வயல்களில் போய் மேய்ந்து பயிர்களை அழித்துவிடுகிறது. அதனைக் கட்டிப் போட்டே வைத்தால் பயனில்லை. அதை மேயவும் விட வேண்டும். பயிர் பச்சைகளை அழித்துவிடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு என்ன வழி?

பழைய காலத்தில் பசுக்கள் மேய்வதற்காக என்று ஒவ்வோர் ஊரிலும் மேய்ச்சல் தரை ஒதுக்கியிருப்பார்கள். அதற்குக் 'கற்றாப் புல்' என்று பெயர். கல்வெட்டுக்களால் இது விளங்குகிறது. அந்த மாட்டைப் புல் தரையில் மேயட்டும் என்று அவிழ்த்து விட்டால், அது அந்தத் தரையிலுள்ள புல்லை மேயாமல், வயலில் இறங்கிப் பயிர்களை அழிக்கிறது. அந்த மாடு புல் தரையில் மேயவும் அதே சமயத்தில் அப்பால் இருக்கிற வயலில் இறங்கிப் பயிரை அழிக்காமல் இருக்கவும் மாட்டுக்காரன் என்ன செய்கிறான்? அந்த மைதானத்தின் நடுவே ஒரு முளையை அடித்து, நீளமான கயிற்றினால் மாட்டைக் கட்டி, அந்தக் கயிற்றின் மறு முனையை இந்த முளையில் கட்டி விடுகிறான். மாடு துள்ளித் துள்ளிக் குதிக்கிறது; ஒடுகிறது. எவ்வளவு தூரம் ஓட முடியும்? கயிறு எவ்வளவு நீளமோ அவ்வளவு நீளந்தானே ஒட முடியும்? முரட்டு மாடு ஆகையால் அது வேகமாக ஒடுகிறது. கயிறு நீளமாக இருப்பதால் தாராளமாக ஓட முடிகிறது. ஆனால் எத்தனை ஓடினாலும் அது முளையைச் சுற்றி சுற்றித்தான் ஓட முடியும். அது ஓட ஓடக் கயிறு முளையில் சுற்றிக் கொண்டே வருகிறது. கயிறு சுற்றச் சுற்ற மாட்டுக்கும் முளைக்கும் உள்ள தூரம் குறைந்து கொண்டே வரும். மாடு முளையை நெருங்கி வரும்; முளைக்கு அருகிலேயே வந்து விடும். பாக்கியிருப்பது இரண்டடி நீளமுள்ள கயிறுதான் என்றால் பின்னும் சுற்றும்போது, கயிறு குறுகிவிடுகிறது. அது நெறிக்க மாடு அப்படியே முளையின் அடியில் படுத்துக் கொண்டுவிடுகிறது. அதுபோல இறைவன் என்ற முளையை அடித்து, ஐந்து பொறிகளான மாட்டை அந்த முளையோடு நீண்ட கயிற்றினால் கட்டி மேய விடுங்கள். நன்றாகச் சாப்பிட வேண்டுமென்று நாக்கு விரும்புகிறது. "சாப்பாடா வேண்டும்? வா கோயிலுக்கு. அங்கே நல்ல சர்க்கரைப் பொங்கல் கொடுக்கிறார்கள். புளியோதரை கொடுக்கிறார்கள். அவற்றை வாங்கி நன்றாகச் சாப்பிடு" என்று சொல்லுங்கள். சர்க்கரைப் பொங்கல் வேண்டுமென்ற நாவின் ஆசையை இங்கே நாம் அடக்கவில்லை. ஆனால் இறைவன் பிரசாதத்தைச் சாப்பிட வேண்டுமென்ற நாட்டத்தை எழுப்புகிறோம். ஆண்டவன் என்ற முளையை அடித்துவிட்டதால், ஆண்டவனுடைய பிரசாதத்தைச் சாப்பிட வேண்டுமென்ற ஆசை எழுகிறது. இதனால் இறைவனுடைய தொடர்பு உண்டாகிறது. சர்க்கரைப் பொங்கல் சாப்பிட வேண்டுமென்ற ஆசை அப்படியே இராது. வர வரக் குறைந்து கொண்டே வரும். இறைவனுடைய சம்பந்தமுள்ள பொருள்களையே நாடும்படியாக முளையடித்து விட்டால் ஒழுங்கற்ற பொறிகளிடம் ஒரொழுங்கு உண்டாகும். அவை யாவும் கடைசியில் வேறு ஒன்றையும் நாடாமல் செயலற்று நிற்கும் நிலைமை வந்து விடும்.

இந்தக் கண் அழகான காட்சிகளைப் பார்த்துக் களிக்க விரும்புகிறது. அதற்கு, "நீ எதையும் பார்க்காதே" என்று சொல்ல வேண்டாம். “அழகான பொருள்களைத்தானே பார்க்க வேண்டுமென்கிறாய்? விதம் விதமான வண்ணத்தைக் கொண்டு தீட்டிய இந்த ஆண்டவன் படத்தைப் பார்? அழகழகான பூக்களாலும், மணியாலும் அலங்கரித்துள்ள ஆண்டவனுடைய விக்கிரகத்தைப் பார் என்று சொல்ல வேண்டும். தன் இச்சைப்படியே அது பார்க்கிறது. பார்க்கும்போதே ஆண்டவனுடைய தொடர்பு அதற்கு ஏற்படுகின்றது. காது இனிமையான சங்கீதத்தைக் கேட்க வேண்டுமென்று விரும்புகிறது. அப்போது, "நீ எதையும் கேட்காதே" என்று சொல்ல வேண்டாம். "இனிமையான சங்கீதத்தைத்தானே கேட்க வேண்டுமென்று விரும்புகிறாய்? அதோ பாடுகிறார்கள் கேள், தேவாரத்தை, திருப்புகழை" என்று சொல்ல வேண்டும். தன் இச்சைப்படியே அது அந்த இனிமையான சங்கீதத்தைக் கேட்கிறது. கேட்கும்போதே ஆண்டவனுடைய தொடர்பு அதற்கு ஏற்படுகிறது. இப்படியே ஒவ்வொரு புலனையும் ஆண்டவன் என்ற முளையை அடித்துத் தொடர்புபடுத்திவிட்டு அதனதன் இச்சைப்படி போக விட வேண்டும். ஓட ஓடக் கயிறு சுற்றிக் கொள்ள, கடைசியில் மாடு முளைக்கு அருகிலேயே வந்து படுத்துக் கொள்வதுபோல, கடைசியில் புலன்களாகிய மாடுகள் ஆண்டவன் என்ற முளைக்கு அருகிலேயே வந்து படுத்து விடும்; செயலொழிந்து விடும்.

இது மிகவும் அருமையான காரியம் அன்று. ஒரு குழந்தை எல்லாப் புத்தகத்தையும் கிழிக்கிறது. நாம் ஏதாவது ஒரு முக்கியமான புத்தகத்தை வைத்துவிட்டுப் போனால் அதனைக் கிழித்து விடுகிறது. "அதைக் கிழிக்காதே; அடிப்பேன்" என்று கோபித்துக் கொண்டால் நம்மிடம் இருக்கும் பயத்தில் அப்போதைக்கு அது அதனைக் கிழிக்காமல் இருக்கும். நாம் கொஞ்சம் அப்புறம் போனால் அதைக் கிழித்துவிடும். இதற்கு என்ன செய்வது? அந்தக் குழந்தையை கிழிக்காதே என்றால் கிழிக்கின்ற சுபாவம் உள்ள அதனால் எதையும் கிழிக்காமல் இருக்க முடியாது. ஆனால், "நன்றாகக் கிழி, இங்கே நார் இருக்கிறது. கிழித்து வை" என்று சொல்ல வேண்டும். குழந்தையின் கிழிக்கிற கை அந்த நாரைக் கிழிக்கிறது. ஆனால் கிழிய வேண்டியது கிழிகிறது.

அதைப்போலப் பார்க்க வேண்டுமென்று விரும்புகிற புலனைப் பார்க்காதே என்று சொல்லாமல், "இங்கே ஆண்டவன் படம் இருக்கிறது; அதைப் பார்" என்று சுட்டிக் காட்ட வேண்டும். கேட்க வேண்டுமென்று விரும்புகிற பொறியைக் கேட்காதே என்று சொல்லாமல், "இங்கே திருப்புகழ் பாடுகிறார்கள்; அதனைக் கேள்" என்று சொல்ல வேண்டும். இப்படிச் செய்தால் பொறிகள் தம் இச்சையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. ஆனால் அவை யாவும் இறைவனோடு தொடர்புடைய அநுபவங்களாகவே அமைகின்றன.

புலன்களாகிய யானைகளை இந்த முறையில் நம்முடைய அறிவினாலே ஒழுங்குபடுத்த வேண்டும். அந்த யானைகளை நம் விருப்பப்படி நடக்க வைக்க, அறிவாகிய அங்குசம் நம்மிடம் இருக்கிறது. அந்த அங்குசத்தினால் அவற்றை அடக்கி, இறைவன் என்ற முளையை அடித்து, அதைச் சுற்றிச் சுற்றி எல்லா விதமான இன்ப அநுபவங்களையும் அடையச் செய்தால், அவை தம் விருப்பப்படியே ஒடியாடி, கடைசியில் இறைவனுடைய தொடர்பினால் மனத்தோடு ஒன்றி இறைவன் திருவடியிலேயே படுத்துவிடும்.

கோயில், அங்கே உள்ள மூர்த்தி, அதற்குச் செய்யும் அலங்காரம், அங்கே கொடுக்கும் பிரசாதம், அங்கே பாடும் திருப்புகழ் இவை அத்தனையும், நம் பொறிகளாகிய மதம் பிடித்த யானைகளுக்கு உணவாகி, அவற்றின் மதத்தை மாற்றி நல்ல நெறியிலே அழைத்துச் சென்று கடைசியில் அவற்றைப் படுக்க வைக்கின்றன. இது பக்தி நெறியாகிய எளிய வழி. "ஆண்டவனிடத்தில் சென்று நீ பக்தி செய். அவனைப் பூசை செய். உன் கைகளினாலேயே அவனுக்கு அலங்காரம் பண்ணிக் கண்குளிரப்பார். அவன் புகழைப் பாடு. அவன் பெருமையைக் கூறுகின்ற பாடல்களை நன்றாகக் கேட்டு அநுபவி. அவன் திருக்கோயிலைச் சுற்றி வலம் வா" என்று நம் நாட்டுப் பெரியவர்கள் சொன்னது, ஐம்பொறிகளாகிய மதம் பிடித்த யானைகள் தத்தம் விருப்பப்படியே உலகத்திலுள்ள பொருள்களை அநுபவிக்கும்போது அவற்றை இறைவனுடன் சம்பந்தப்படுத்தி அநுபவிக்கச் செய்யவும், வரவர அந்தத் தொடர்பு நெருங்க நெருங்க அவற்றை ஒடுங்கச் செய்யவுமே ஆகும்.

மனத்திண்மை

ம் மனம் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறது. ஆனால் அவற்றைச் செயலிலே செய்ய முடியவில்லை. நினைக்கும் மனத்திற்குத் திண்மை இல்லை. நம் மனத்திலே திண்மை இல்லை என்பதற்கு அடையாளம், நாம் நினைக்கிறதை நினைக்கிறபடியே செயலில் செய்ய முடியாதது தான். உண்மையில் இதைவிடப் பலவீனம் வாழ்க்கையில் வேறு எதுவும் இல்லை.

நாம் தொட்ட மண் எல்லாம் தங்கமாக மாற வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். அந்த மாதிரி மாற்றக் கூடிய சக்தி நமக்கு இல்லை. அது நம்முடைய சக்திக்கும் அப்பாற்பட்ட ஆசை. அப்படியின்றி நம்மால் செய்யக்கூடிய காரியத்தைச் சில சமயங்களில் நினைக்கிறோம். பக்கத்து வீட்டுக் குழந்தை வாழைப்பழம் வேண்டுமென்று அழுகிறது. அது ஏழைக் குழந்தை. தெருவிலே போகிற வாழைப்பழத்தை வாங்கிக் கொடுக்க அதன் பெற்றோர்களிடம் காசு இல்லை. நம்மிடம் வாழைப்பழம் இருக்கிறது. 'அந்த ஏழைக் குழந்தைக்கு நம்மிடம் இருக்கும் வாழைப் பழத்தைத் தந்தால் என்ன?’ என்ற நினைப்பு நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அந்த நினைப்பு உடனேயே செத்துப் போகிது. கருவுற்ற பிறகு அது நன்றாக வளர்ந்து வெளியே வந்தால் அது குழந்தை ஆகிறது. வயிற்றுக்குள்ளேயே செத்துப் போனால் என்ன பயன்? குறைப் பிரசவம் ஆகும். கரு வயிற்றிலேயே இறந்து விட்டால், பெரிய டாக்டர்களைக் கூப்பிட்டு, 'ஆபரேஷன்' செய்து அதனை வெளியே எடுக்க வேண்டிய அபாயம் வந்துவிடுகிறது. கருவும் கெட்டு, அதைத் தாங்கிய உடம்பும் கெடுகிறது.

அப்படியே மனத்தில் சில நல்ல எண்ணங்கள் கருவாகத் தோன்றுகின்றன. அந்த எண்ணங்களை வளர்த்துக் செயல் ஆக்குவதற்கு நம்மிடம் திடம் இல்லை. பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு நம்மிடம் இருக்கும் வாழைப் பழத்தைத் தர வேண்டுமென்ற எண்ணம் கருவாகத்தான் தோன்றுகிறது. அந்த வாழைப் பழம் ஆயிரம் ரூபாய் பெறுமானதன்று. நாம் கடைக்குப் போய் வாங்கி வரவேண்டுமென்பதுகூட இல்லை. நம் கையில் இருக்கிறது. இருந்தாலும் நம்மிடம் இருப்பதைக் கொடுக்கும் மனோதிடம் நம்மிடம் பெரும்பாலும் இருப்பதில்லை. இது மண்ணைத் தங்கம் ஆக்குகிற வித்தை அல்லவே. நம் சக்திக்கு உட்பட்டது தானே? ஆனால் அந்த நினைப்பை, தோன்றிய மனத்திலேயே, குழி வெட்டிப் புதைத்துவிடுகிறோம். வாழைப் பழத்தைக் கொடுக்க வேண்டுமென்ற நினைப்பு மனத்திலே தோன்றுகிறது. "அதனை எடுத்துக் கொடு" என்று கைக்கு உத்தரவு போடும் திண்மை மனத்திற்கு இல்லாமல் போகின்றது. கொடுக்காமல் நின்றுவிடுகிறோம்.

வீட்டில் நம்மை யாரும் மதிக்கிறது இல்லை என்று சொல்கிறோம். பெண்டாட்டி நான் சொல்வதைக் கேட்க மாட்டேன் என்கிறாள் என்று சிலர் சொல்கிறார்கள். பிள்ளை நம் கருத்துப்படி வேலை செய்வதில்லை என்று சொல்கிறோம். வேலைக்காரர்களிடம் நாம் ஒன்று சொன்னால் அவர்கள் வேறு ஒன்று செய்கிறார்கள் என்று சொல்கிறோம். அப்படிச்சொல்ல நமக்கு என்ன வாய் இருக்கிறது? நாம் நினைக்கிறபடி நாம் முதலில் நடக்கிறோமா? நாமே நினைக்கிற எண்ணத்திற்கு நாமே கௌரவம் கொடுத்து நடக்கிறோமா? இங்கிருந்து ஆகாயத்தில் பறந்து போகவேண்டுமென்று நினைத்தால், அது நம்முடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செயல். அதைச் செய்ய முடியாததற்குப் பல காரணம் சொல்லலாம். ஆனால் இங்கிருந்து கோயிலுக்குப் போய் வர முடியாதா? நாம் செய்ய வேண்டியதை நினைக்கிறோம்; செய்யக் கூடியதை நினைக்கிறோம். ஆனால் நினைத்தபடி செய்வதில்லை. மனத்திண்மை உடையவர்கள் நினைத்தபடி செய்வார்கள். தங்கள் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அவர்கள் நினைக்க மாட்டார்கள். மனத்திலே தோன்றிய எண்ணம் மனத்திற்குத் திண்மை இருந்தால் செயலாக விளையும். ஆகவே மனம் திண்மை உடையதாக இருக்க வேண்டும். திண்மை உடையவன் தன் மனத்திலே தோன்றுகிற எண்ணங்களைச் செயலாக மாற்றுவான்.

நினைத்தவை அனைத்தையும் செயலாக மாற்றுபவர்கள் மனத்திண்மை உடையவர்கள். நினைத்ததில் சிலவற்றைச் செயலாக மாற்றுபவர்கள் முயற்சி உடையவர்கள். நினைத்தவற்றில் பலவற்றைச் செயலாக மாற்ற இயலாதவர்கள் மனத்திண்மை அடியோடு அற்றவர்கள்.

மனத்திண்மை உடையவன் செய்கிறதை நினைப்பான்; அநாவசியமாக ஆசைப்பட மாட்டான். எனக்குப் பத்துக் கார் வேண்டுமென்று நினைக்க மாட்டான். எனக்கு நடக்கக் காலில் பலம் வேண்டுமென்று நினைப்பான். தன் சக்திக்கு அப்பாற்பட்டதையும், சக்திக்கு உட்பட்டதையும் நினைத்துத் தன் சக்திக்கு உட்பட்ட காரியத்தைக்கூடச் செய்யும் திண்மை அற்றவன் அதமன். தன் சக்திக்கு அப்பாற்பட்டவற்றையும் நினைத்துத் தன் சக்திக்கு உட்பட்ட காரியத்தைச் செய்கிறவன் மத்திமன். தன் சக்திக்கு உட்பட்டு இருக்கிற காரியங்களையே நினைத்து அவை எல்லாவற்றையும் திறம்படச் செய்கிறவன் உத்தமன்.

"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்"

என்று பேசுகிறார் வள்ளுவர். எண்ணியதை எண்ணியபடி செயலிலே செய்வதற்கு மனத்திலே திண்மை வேண்டும்; அவர்கள் தங்களால் செய்யக்கூடிய காரியங்களையே எண்ணுவார்கள். அவற்றைச் செயலிலே ஆற்ற முயற்சி செய்வார்கள். அந்த முயற்சிக்கு எவ்வளவு இடையூறு வந்தாலும் அஞ்ச மாட்டார்கள். தங்கள் முயற்சியிலே கொஞ்சமேனும் தளரமாட்டார்கள்.

"நான் எல்லாவற்றையும் செய்துவிடுகிறேன்" என்று நாம் அளக்கிறோமே அப்படி அவர்கள் அளக்க மாட்டார்கள். நூறு ரூபாய் தருகிறேன் என்று சொன்னால் கொடுப்பதற்கு நூறு ரூபாய் இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்துக் கொண்டு சொல்ல வேண்டும். பின்னர் நூறு ரூபாய் இல்லையென்பதற்காக வேறு ஒரு பொருளை அதற்குச் சமமாகக் கொடுப்பதில் பயன் இல்லை.

"உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லா முளன்"

என வள்ளுவர் பெருமான் கூறுகிறார்.

மகாத்மா காந்தியடிகளை வெவ்வேறு கட்சிக்காரர்களும் கொள்கை அளவில் எதிர்த்தாலும், சொல்கிற முறை தவறு என்று சொல்லியிருந்தாலும், அவரை நல்லவர் என்று எல்லோரும் பாராட்டினார்கள். அவர் தம் மனத்தில் தோன்றியதைச் சொல்வார். தம் மனத்திலே நினைப்பதைச் செய்வார். தாம் செய்வதையே பிறருக்கும் சொல்வார். அவரிடம் நினைப்பு வேறு, சொல் வேறு, செயல் வேறு என்பதே இல்லை. ஒரே சுவட்டில் இந்த மூன்றும் செல்லுகிற அற்புதமான வாழ்க்கை வாழ்ந்தவர் அவர் சத்தியத்தையே நினைந்து, நினைந்த சத்தியத்தையே செய்துகாட்டி, அந்த மெய்ச் செயலையே பிறருக்கும் உபதேசம் செய்த மகாத்மா உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் இன்றைக்கு உறைந்துவிட்டார். அப்படிப்பட்ட சத்தியவான்கள் ஒவ்வொரு சமயம் தம் சக்திக்கு அப்பாற்பட்ட எண்ணங்களை எண்ணினாலுங்கூட, அவை அவர்கள் நினைந்த வண்ணம் நடந்து விடும்.

முதலிலே, செய்யக்கூடியவற்றையே நினைக்கும் பக்குவம் வந்துவிட்டால், பிறகு நினைத்தன எல்லாவற்றையும் செய்யும் பக்குவம் வரும். அந்தப் பக்குவம் வருவதற்கு மனத்திண்மை வேண்டும். இந்த மனத்திண்மை ஒரு நாளில் வராது. பொறிகளை வசப்படுத்தி, நினைப்பையும் சொல்லையும் செயலையும் ஒரு நெறியிலே செலுத்த அந்தத் திண்மையே வேண்டும்.

ஒருமைப்பாடு

ந்து பொறிகளும் சேர்ந்து ஒன்றுபட்டு இறைவனுக்குப் பூசை செய்ய வேண்டும். அப்படிச் செய்ய வேண்டுமென்ற நினைப்பு வருகிறது. ஆனால் ஐந்து பொறிகளும் அதற்கு விரோதமாக இருக்கின்றன. அவற்றை அடக்கும் திண்மை நம்மிடம் இருப்பதில்லை. நாம் தினமும் பூசை பண்ணுகிறோம். பூசை பண்ணுகிறபோதே, வீதியில் ஏதாவது கூச்சல் கேட்டால் அது என்ன சத்தம் என்று கேட்கக் காது போய்விடுகிறது. இறைவனுக்கு அழகாக அலங்காரம் பண்ணியிருக்கிறார்கள் என்பதைக் கேட்டு நாமும் ஆலயத்திற்குச் செல்கிறோம். ஆனால் கோயிலுக்குள் போனால் இறைவனைக் கண் பார்ப்பதில்லை. அங்கே உள்ள வேறு காட்சிகளைப் பார்க்க ஓடி விடுகிறது. பட்டினத்து அடிகள்,

"கையொன்று செய்ய விழிஒன்று நாடக்
கருத்தொன்றுஎண்ணப்
பொய்ஒன்று வஞ்சக நாஒன்று பேசப்
புலால் கமழும்
மெய்ஒன்று சாரச் செவிஒன்று கேட்க
விரும்புமியான்
செய்கின்ற பூசைஎவ்வாறுகொள் வாய்வினை
தீர்த்தவனே."

என்று பாடுகிறார்.

வேற்றுமையில் ஒற்றுமை

ரு சங்கீதக் கச்சேரி நடக்கிறது. அங்கே ஒருவர் வாய்ப்பாட்டுப் பாடுவார். ஒருவர் மிருதங்கம் வாசிப்பார். ஒருவர் பிடில் வாசிப்பார். ஒருவர் குழல் ஊதுவார். ஒருவர் கஞ்சிராத் தட்டுவார். இவர்கள் எல்லோரும் வெவ்வேறு காரியங்களைச் செய்கிறவர்கள்; வெவ்வேறு விதமான இசையொலியை எழுப்புகிறவர்கள். வாய்ப்பாட்டின் ஒலி வேறு. மிருதங்கத்தின் ஒலி வேறு. குழலின் ஒலி வேறு. பிடிலின் ஒலி வேறு. இந்த ஒலிகள் எல்லாம் ஒன்றுக் கொன்று சம்பந்தம் இல்லாதவை போல இருக்கின்றன. ஆனால் எல்லாம் சேர்ந்து, ஒரு சுருதியோடு பூர்ணமாகக் கலந்து, ஒரு பாட்டைப் பாடினால், அது மிக இனிமையாக இருக்கிறது. அதைச் சங்கீதம் என்கிறோம். எல்லாம் ஒரு சுருதியோடு சேர்ந்து அமைந்தால், "மேளம் கட்டிவிட்டது” என்று சொல்வது வழக்கம். 'மேளம்' என்பது கூட்டுறவு என்று பொருள்படும் சொல். வாய்ப் பாட்டு வேறு, மிருதங்கம் வேறு, குழல் வேறு, பிடில் வேறு என்றாலும் எல்லாம் ஒரு நெறியிலே இயங்கும்போது இன்பம் உண்டாகிறது. பல வகையான இசைக்கருவிகளிடையே ஓர் ஒற்றுமை இருக்கிறது. இதை வேற்றுமையில் ஒற்றுமை (Unity in diversity) என்று சொல்வார்கள்.

பூசையிலும் இந்த ஒற்றுமை வேண்டும். ஐந்து இந்திரியங்களும் வெவ்வேறாகக் சிதறுண்டு இருந்தாலும் அவற்றை நெறிப் படுத்தி இறைவன்பால் அவற்றை ஒருமுகமாகச் செலுத்துவது பூசை. பூசை செய்ய உட்கார்ந்தும் இந்த ஐந்து இந்திரியங்களை வெவ்வேறு வழியில் செல்ல விட்டு, மனம் எதையோ நினைத்துக் கொண்டிருந்தால் அது பூசையாகாது. வாய்ப் பாட்டுக்காரர் ஒரு பாட்டுப் பாட, குழல் ஊதுகிறவர் வேறொரு பாட்டை வாசிக்க, மிருதங்கக்காரன் ஏதோ ஒரு தாளத்துக்கு வாசித்தால் அது கச்சேரி ஆகாது. ஒரே கூச்சலாக இருக்கும். அது போலத்தான் ஐந்து இந்திரியங்களும் வெவ்வேறு காரியங்களைச் செய்ய, நாம் பூசை செய்தால் அது பூசையாக இராது. "ஆண்டவனே. நான் உனக்குப் பூசை செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ஆனால் இந்த உடம்பாகிய வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிற பொறிகளாகிய ஐந்து பேர்களும் நான் ஆசைப்படுவது போலப் பூசை செய்யவிடமாட்டோம் என்கிறார்களே என்று அருணகிரிநாதர் இந்தப் பாட்டில் சொல்கிறார்.

ஒரஓட் டார்ஒன்றை உன்னஓட் டார்மலர்
இட்டுனதாள்
சேரஒட் டார்ஐவர் செய்வதென் யான்?

இது கந்தர் அலங்காரத்தின் நான்காவது பாட்டின் முதற் பகுதி. இதில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. தாம் செய்ய விரும்புகிற காரியங்களைச் செய்யவொட்டாமல் தடுக்கிற ஐந்து பொறிகளின் செயல்களும், அதனால் தாம் என்ன செய்ய முடியும் என்று ஏங்குகிற தன்மையும் ஆகிய இரண்டு செய்திகளை அருண கிரிநாதர் புலப்படுத்துகிறார். அந்தப் பாட்டின் இரண்டாவது பகுதியில் இறைவனது திருவிளையாடலைச் சொல்லுகிறார்.

முன்னாலே நம்முடைய இருள் விளையாடலைச் சொல்லி விட்டார். இருள் என்பது மாயை, அஞ்ஞானம். நாம் இன்றைக்குச் செய்கிற காரியங்கள் எல்லாம் அஞ்ஞானத்தின் விளைவு. இந்தக் காரியங்களுக்குப் பொறிகளாகிய ஐந்து பேர்கள் துணையாக இருக்கிறார்கள். இன்பத்தை அடைவதற்கு உரிய செயல்கள் என்ன என்னவோ அவற்றை நாம் செய்யலாம் என்று நினைத்தால் இந்த ஐந்து பேர்களும் அதற்குச் சத்துருக்களாக இருக்கிறார்கள்; அநுகூலமாக இருப்பதில்லை. நாம் சில நல்ல காரியங்களைச் செய்ய வேண்டுமென்ற சங்கற்பம் செய்து கொள்ளுகிறோம். ஆனால் அவற்றைச் செய்யவொட்டாமல் இப்பகைஞர் தடுக்கிறார்கள்.

ஒர்தலும் உன்னுதலும்

ங்கெங்கோ அலைந்து திரிகிற இந்த மனத்தை, இறைவனையும் அவன் சம்பந்தமான பொருள்களையும் மாத்திரம் நினைக்கச் செய்வது முதல் படி; இறைவனையே நினைக்கச் செய்வது அதற்கு அடுத்த படி; அதற்கும் மேலான படி இறைவனோடேயே கலந்துவிடுவது.

இதற்கு ஒர் உபமானம் சொன்னால் விளங்கும். சின்னப் பிள்ளை பம்பரம் விடுகிறான். பம்பரத்தில் கயிற்றைச் சுற்றி வெகு வேகமாக விடுகிறான். பம்பரம் சுழலுகிறது. வேகமாக எங்கெங்கோ சுற்றி சுழலுகிறது. அப்படிச் சுழலும்போது, முதலில் வரையறையின்றிப் பலவிதமான வட்டமிட்டுச் சுற்றிய பம்பரம் கடைசியில் ஒர் இடத்தில் வந்து நிற்கிறது. அப்போதும் பம்பரம் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அது ஓரிடத்தில் நிற்கிறது. தூங்குகிறது என்று பிள்ளை சொல்லுகிறான். மனிதன் படுத்துத் தூங்குகிறானே அதைப்போல பம்பரம் தூங்கவில்லை. பல இடங்களில் சுற்றிச் சுழன்று வந்த அது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நேராக நின்று சுழலுகிறது. அவ்வாறே இறைவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களை எல்லாம் நினைந்து மனம் சுழலுவதை ஒர்தல் என்று சொல்லலாம். குறிப்பிட்ட ஒரு பொருளை மாத்திரம் நினைந்து சுழலுவது இருக்கிறதே அதற்கு 'உன்னுதல்' என்று பெயர். முதலிலே பவலவற்றை ஒர்கிறோம். இறைவன் திருக்கோயில் போக வேண்டும்; அங்கே பாடுகிற திருப்புகழைக் கேட்க வேண்டும்; அங்கே அலங்காரம் செய்து வைத்திருக்கிற மூர்த்தியைக் காண வேண்டும்; அங்கே இறைவனுக்கு நிவேதனம் செய்த பிரசாதத்தை வாங்கிச் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் ஓர்கிறோம். இவை எல்லாம் பல செயல்களாக இருந்தாலும் அவ்வளவும் ஆண்டவன் என்ற பொருளோடு சம்பந்தம் உடையன. அவற்றை எல்லாம் நினைத்தல் ஒர்தல். வெளியில் வரையறையின்றிச் சுற்றித் திரிந்த மனம் இப்போது ஆண்டவன் என்ற பொருளைச் சுற்றியுள்ள வட்டத்திற்குள் சுழலுகிறது.

ஆனால் அது மாத்திரம் போதாது. அதுவே முடிவு அன்று. அதற்குப் பின் இறைவன் திருவடியில் மனம் நின்று சுழல வேண்டும். இறைவன் திருவடியில் துரங்க வேண்டும். மனம் வேறு ஒன்றையும் நினைக்காமல் இறைவனையே நினைந்து அங்கே சுழல வேண்டும். இந்தத் தூக்கத்தைத்தான் தியானம் என்று சொல்வார்கள்.

மூன்று நிலை

ம்பந்தப்பட்ட பலவற்றை நினைப்பது முதற்படி; ஒன்றையே நினைந்து ஒர் இடத்திலே ஆணி அடித்தாற்போல நின்று இறைவனை நினைப்பது தியானம். பின்பு தன்னையே இழப்பது சமாதி. "என்னுடைய பொறிகளாகிய ஐந்து பாவிகள் அப்படிச் செய்ய விடமாட்டேன் என்கிறார்களே!" என்கிறார் அருணகிரிநாதர். ஒரவொட்டார்-உன்னுடைய சம்பந்தமானவற்றை எண்ணிப் பார்க்க விடமாட்டார்கள். உன்னவொட்டார்-உன்னையே மனத்தில் நிறுத்தி ஒருமைப்பாட்டை அடையவும்விட மாட்டார்கள். மலர் இட்டு உன் திருவடியைத் தியானிக்கலாம் என்றாலோ, அதையும் செய்ய விடுவதில்லை.

மலர்இட்டு உனதாள் சேரவொட்டார்

இறைவனுடைய தாளைச் சேர்தலாவது அவன் திருவடியைத் தியானம் செய்தல். அது பிறவியைப் போக்க ஏற்ற வழி. மனக்கவலை நீங்கும் வழி. இங்கே, சேர்தல் என்பதற்குத் தியானம் செய்தல் என்று பொருள் கொள்ள வேண்டும்.

“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது"

என்ற திருக்குறளின் உரையில் சேர்தல் என்பதற்குத் தியானித்தல் என்று பரிமேலழகர் பொருள் எழுதியிருக்கிறார்.

இறைவனுடைய தாள்கள் இரண்டு. 'உனதாள்' என்பதற்கு 'உன்னுடைய தாள்கள்' என்று பொருள். உன என்பதில் உள்ள அகரம், பின்வருவது பன்மைச் சொல் என்பதைக் குறிக்கும். உனது தலை என்று சொல்லலாம். அது ஒருமை. உனதாள் என்பதில் உள்ள தாள் பாதங்கள் என்ற பொருளில் வந்த பன்மை. ஆறாம் வேற்றுமையில், வரும்சொல் ஒருமையாக இருந்தால் 'அது' என்னும் உருபும், பன்மையாக இருந்தால் 'அ' என்னும் உருபும் வரும் என்று இலக்கணம் விதிக்கிறது. அப்படி வந்தது இந்த அகரம்.

"என் உடம்பாகிய வீட்டில் மெய், வாய், விழி, மூக்கு, செவி என்னும் பொறிகளாகிய ஐந்து பாதகர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் உன்னைப் பற்றியவற்றை எண்ணலாம் என்றால் விட மாட்டேன் என்கிறார்கள். உன்னை உன்ன வேண்டுமென்றால் உன்ன விடமாட்டேன் என்கிறார்கள். மலரிட்டு உன் தாளைத் தியானம் பண்ணலாம் என்றால் அதற்கும் விடமாட்டேன் என்கிறார்கள். நான் என்ன செய்வேன்? எனக்கு ஒன்றும் தெரியவில்லையே!" என்று முறையிடுகிறார் அருணகிரிநாதர்.

செய்வதென் யான்?

"யான் செய்வது என்?" என்று கேட்கிறார்.

ஒரு வீடு வேண்டுமென்றால் வாடகை அதிகாரிக்கு விண்ணப்பம் போடுகிறோம். அவர் நம்முடைய சம்பளம், உத்தியோகம், வாடகை கொடுக்கும் சக்தி இவற்றை எல்லாம் கவனித்து, "இந்த வீட்டுக்குப் போ" என்று சொல்லுகிறார். அதைப் போலவே, இறைவன் நமக்கு, நாம் செய்திருக்கிற வினைகளைக் கணக்கு எடுத்துக் கொண்டு ஒரு வீட்டைக் காட்டி இதற்குப் போ என்று அனுப்புகிறான். இந்த வீட்டில் இவ்வளவு நாள் குடியிருக்கலாம், இதில் இன்ன இன்ன காரியங்களைச் செய்யலாம் என்று வரையறை செய்து சீட்டு எழுதித் தலையிலே ஒட்டி அனுப்பி விடுகிறான். இதைத்தான் தலையெழுத்து என்று சொல்லு வார்கள். தலையெழுத்தோடு வருகிற நாம் எத்தனை காலம் இந்த வீட்டில் வாழ்வோம் என்று சொல்ல முடியாது. "இருக்கிற காலத்திற்குள் கொஞ்சம் நல்ல காரியம் செய்யலாம் என்று ஆசைப்படுகிறேன். ஆண்டவனே, உன்னை ஒரலாம் என்றாலும், உன்னை உன்னலாம் என்றாலும், உன் தாளை மலரிட்டுச் சேரலாம் என்றாலும் இந்த வீட்டிலே எனக்குச் சத்துருக்களாக வந்திருக்கிற ஐந்து பாவிகளும் என்னை விடுவதில்லையே! இங்கே நான் ஆசைப்படும்படி எதையும் செய்யக்கூடிய சுதந்திரம் இல்லை. என்னுடைய ராஜ்யமாக இருக்க வேண்டிய இந்த உடம்பிலே, ஐந்து பேர்கள் என்னை அடக்கி ஒடுக்கித் தங்களுடைய ராஜ்யமாக வைத்துக் கொண்டு என்னை ஆட்டி வைக்கிறார்கள். அவர்களுடைய கொட்டத்தை அடக்க எனக்கு ஆற்றல் இல்லையே! என்ன செய்யட்டும்?" என்று பேசுகின்றார் அருணகிரி முனிவர்.

முருகன் கேட்கிறான். "உன்னுடைய பொறிகளை அடக்கி, உன் மனத்தை ஆளக்கூடிய திறமை உனக்கு இல்லாவிட்டால் நான் என்ன செய்வேன்? என்னிடம் எதற்காக வந்து சொல்லுகிறாய்?" என்று கேட்கிறான். அவர் சொல்கிறார்.

2

சூரசங்காரம்

சென்று தேவர்உய்யச்
சோரநிட் டுரனைச் சூரனைக்
காருடல் சோரிகக்கக்
கூரகட் டாரியிட் டோர்இமைப்
போதினிற் கொன்றவனே.

"அப்பா, உன்னுடைய பெருமை எனக்குத் தெரியும். தேவர்களுக்கு எல்லாம் நீதான் பிழைப்புக் கொடுத்தாய் எனப் புராணங்கள் பேசுகின்றன. அவர்களுக்குச் சொந்தமான அரசு தேவலோகம். அதை மகா பாவிகளாகிய சூரபன்மன் முதலிய அசுரர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். இந்திரன் மகனாகிய சயந்தனைச் சிறையில் அடைத்தார்கள். இந்திரன் மனையாட்டி இந்திராணி தன்னுடைய கற்புக்கு ஊறு நேரிட்டுவிடுமோ என அஞ்சி ஒடி ஒளிந்து கொண்டு விட்டாள். பிள்ளை ஒரு பக்கம் வாட மனைவி ஒரு பக்கம் ஒட, தேவேந்திரன் நாட்டை இழந்து, ஆட்சி உரிமையை இழந்து, அடிமைப்பட்டு வாடினான். தேவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய முடியாமல் சிறையில் வாடினார்கள். நீ என்ன செய்தாய்? கோடிக் கணக்கான அசுரர்களையும் வென்று, தேவர்களுக்கு அவர்களுடைய லோகத்தைத் திரும்பவும் வாங்கிக் கொடுத்தாய் அல்லவா? அவர்களுக்கு நீதானே சுயராஜ்யம் வாங்கிக் கொடுத்தாய்? அது எனக்குத் தெரியாதா? கொஞ்ச காலம் குடியிருக்கும்படி எனக்குக் கொடுத்திருக்கிற வீட்டில் ஐந்து அசுரர்கள் புகுந்துகொண்டு துன்பம் இழைத்து வருகிறார்கள். கோடிக் கணக்கான அசுரர்களை வதை செய்த நீ நினைத்தால் இந்த அசுரர்களையும் அழிப்பது பெரிய காரியமா? எனக்கு நீ பிச்சையாகக் கொடுத்தது, இந்த உடம்பு. அதனை ஐந்து பேர்களும் பிடுங்கிக் கொண்டதோடு அல்லாமல், என்னையும் தங்களுக்கு அடிமையாக்கிவிட்டார்கள். இங்கே நான் நினைப்பதைச் செய்யக்கூடிய சுதந்தரம் இல்லை. செய்யவொட்டாமல் அவர்கள் தடுக்கிறார்கள். எனக்குச் சுயராஜ்யம் வேண்டும். பல காலம் போராடித் தேவர்களுக்கு அவர்களுடைய ராஜ்யத்தைத் திரும்பவும் வாங்கிக் கொடுத்த கருணையாளன் அல்லவா நீ? உன்னைத் தவிர நான் வேறு யாரிடம் போய் எனக்குச் சுயராஜ்யம் வாங்கிக் கொடு என்று கேட்பேன்" என்கிறார்.

இந்தப் பாட்டை இதற்கு முந்திய பாட்டுடன் தொடர்பு செய்தது போலச் சொல்கிறார். முந்திய பாட்டில், "கிரௌஞ்சம் குலைந்தது; அரக்கன் நேரணி இட்டு வளைந்த கடகம் நெளிந்தது; சூர்ப் பேரணி கெட்டது; தேவேந்திர லோகம் பிழைத்தது" என்று சொன்னார். தாங்கள் பெற்ற இன்ப வாழ்க்கையை நடுவிலே இழந்து, சூரபன்மன் முதலியவர்களால் மிகுந்த துன்பத்திற்கு ஆளான தேவர்கள் திரும்பவும் உன்னுடைய கருணையினால் இன்ப வாழ்வைப் பெற்றார்கள் என்று சொன்னார். சூரன் என்ன ஆனான் என்று அங்கே சொல்லவில்லை. இந்தப் பாட்டிலே சொல்கிறார்.

க.சொ.1-11

சென்று தேவர்உய்யச்
சோரநிட் டூரனைச் சூரனைக்
கார்உடல் சோரிகக்கக்
கூரகட் டாரியிட் டோர்இமைப்
போதினிற் கொன்றவனே

தேவர் உய்யச் சென்று சூரனை வதைத்தான் முருகன். மற்ற மற்ற அசுரர்களை எல்லாம் கொல்ல முருகன் போகவில்லை. வீரபாகு முதலிய வீரர்கள் பார்த்துக் கொண்டனர். ஆனால் சூரனைச் சங்காரம் செய்ய முருகனே அவன் இருக்குமிடம் சென்றான். எதற்காக? "தேவர் உய்ய" என்கிறார் அருணகிரிநாதர். தேவர்கள் தங்கள் உரிமைகளை எல்லாம் பறிகொடுத்தார்கள்; இன்பமயமாக இருந்த வாழ்க்கை துன்பமயம் ஆகிவிட்டது. அவர்களது வாழ்க்கையை மீண்டும் இன்ப மயமாகக் செய்ய, அவர்கள் உய்யும்படியாகச் செய்ய, முருகன் சூரபன்மன் இருக்குமிடத்துக்குச் சென்றான்.

பகைவன் இருக்குமிடத்திற்கே சென்று, அவனுடைய கோட்டையை முற்றுகை போட்டு, அவன் தோற்று ஒடும்படியாகச் செய்வது பெரிய வெற்றி. பகைவன் தன்னுடைய நாட்டுக்கு வந்து முற்றுகை போடும்போது, அவனைத் தோல்வியுறச் செய்து ஒடச் செய்வது சாமான்ய வெற்றி.

"ஈண்டவன் அடுதலும் ஒல்லான் ஆண்டு.அவர்
மாணிழை மகளிர் நாணினர் கழியத்
தந்தை தம்மூர் ஆங்கண்
தெண்கிணை கறங்கச்சென்று ஆண்டட் டனனே"

என்று ஒர் அரசனைப் புலவர் ஒருவர் பாராட்டுகிறார்.

முருகன் தேவசேனாபதி அல்லவா? அவன் தன்னுடைய இடத்திற்குச் சூரபன்மன் வர அவனோடு போராடி வெல்லவில்லை. அவன் இருக்கிற இடத்திற்கே சென்று போராடினான்.

அவனை வெல்வதற்குத் தன் கையில் உள்ள வேலை விட்டாலே போதும். ஆயினும் முருகன் தானே அவன் இருக்கு மிடத்திற்கு நேரில் சென்றான். காரணம், 'அந்தச் சமயத்திலாவது அவன், மன்னிப்புக் கேட்டுக் கொண்டு நம் காலில் வந்து விழ மாட்டானா? அவனுக்கு நாம் அருள் செய்யச் சந்தர்ப்பம் ஏற்படாதா?’ என்று கருதியே சென்றான். சூரனுக்குத் துணையாக இருந்த கிரௌஞ்ச மலை முருகன் கைவேலின் கூரினால் அணு அணுவாகிக் குலைந்துவிட்டது. அவனுடைய படை வியூகங்கள் சின்ன பின்னமாகிவிட்டன. அவன் மகன் பானுகோபன் மாண்டுவிட்டான். சிங்கமுகாசுரன் மடிந்துவிட்டான். இவற்றைக் கண்டாவது சூரன், இறைவன் வீரத்தை உணர்ந்து அஞ்சி அவன் காலிலே வீழ்ந்தானா? விழவில்லை. முருகனை எதிர்த்துப் போராடப் போர்க்களத்திற்கு வந்துவிட்டான். அவன் தைரியம் என்ன தைரியம்? அசட்டுத் தைரியம். தன் படைப்பலம் கொண்டு பிறரை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று எண்ணி இறுமாந்து வந்தான். தன் படைகள் அழிந்து போன பிறகும் தன் பலத்தின் அளவையும் முருகன் பெருமையையும் உணராமல் எதிர்க்கத் துணிந்தான். இது முரட்டுத் துணிவு.

சூரனைச் சோரன் என்கிறார் அருணகிரியார். தேவர்களுக்கு உரிய வாழ்வைப் பறித்தவன் அல்லவா? அவன் கொடுமையை உடையவன்; நிட்டுரன். தன் படைப்பலம் கொண்டு பிறருக்கு நன்மை செய்யாததோடு யாவருக்கும் கொடுமை செய்வதையே தொழிலாக அவன் கொண்டான். அவன் பிறருக்கு இழைத்து வந்த துன்பத்திற்கு ஏற்ற தண்டனை கிடைத்தது. ஆண்டவனது திருக்கரத்திலே உள்ள வேல் சூரனது 'காருடல் சோரி கக்கும்படி’ யாகப் பாய்ந்தது. சோரி - ரத்தம். காருடல் - கன்னங்கரேல் என்று கறுப்பாக இருந்த உடல். கறுப்பு, அஞ்ஞானத்தின் அடையாளம். ஞானத்தின் அடையாளம் செம்மை. அஞ்ஞான மயமான சூரனது கரிய உடல் சிவப்பு ரத்தம் கக்கும் படியாக வேல் பாய்ந்தது. முருகன் அவனைக் கூர்மையான கட்டாரி இட்டுக் கொன்றான். கட்டாரி என்றால் குத்து ஈட்டி. இங்கே வேலையே அப்படிச் சொன்னார். அது கட்டாரியைப் போலக் குத்த உதவுவது.

சோரநிட் டூரனைச் சூரனைக்
காருடல் சோரிகக்கக்
கூரகட் டாரியிட்டு ஒரிமைப்
போதினில் கொன்றவனே

கருணை வீரம்

வனை முருகன் கொன்றது ஓர் இமைப் போதினில்தான் என்கிறார். முருகன் திடீரென்று அவனுக்கு எச்சரிக்கை எதுவும் செய்யாமல் கொன்றுவிடவில்லை. அவனோடு பலகாலம் போரிட்டான். இதற்குள் ஒரு விநாடியிலாவது அவனுக்கு ஞானம் பிறந்து, "இறைவனே என்னை மன்னித்துவிடு" என்று அவன் காலில் வந்து வீழ்ந்திருந்தாலும் முருகன் மன்னிக்கக் காத்துக் கொண்டுதான் இருந்தான். கடைசி நிமிஷத்திலாவது அவன் சரணாகதி அடைய மாட்டானா என்பதுதான் அவன் ஆசை. கெட்டவர்கள் நல்லவர்களாக மாற வேண்டுமென்பதுதானே இறைவனுடைய ஆசை? பொல்லாதவர்களை எல்லாம் அழித்துவிட வேண்டுமென்று நினைப்பவன் அல்ல ஆண்டவன்.

ஒரு குழந்தையை வெளியே போகாதே என்று சொல்லுகிறாள் தாய். தாயின் சொல் கேளாது அந்தக் குழந்தை வெளியே போகிறது. எங்கோ விழுந்து, காலில் ரத்தம் சொட்ட, "அம்மா!" என்று அழுதுகொண்டே திரும்ப வீட்டிற்குள் வருகிறது. அம்மாவுக்குக் கோபம் வந்துவிடுகிறது. அவள் என்ன செய்கிறாள்? "நான் அப்போதே சொன்னேனே! ஏன் வெளியே போனாய்?" என்று அந்தக் குழந்தையை மேலும் படார் படார் என்று அடிக்கிறாள். அவள் போகாதே என்று சொன்னது உண்மை. அதைக் கேளாமல் அந்தக் குழந்தை வெளியே போனது தவறுதான். அந்தப் பிழைக்கு அவள் தண்டனைக் கொடுக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? "இன்றைக்குப் பண்ணியிருக்கிற பட்சணம் தர மாட்டேன்" என்று சொன்னால் போதும். அது தண்டனை. ஆனால் தன் வார்த்தையைக் கேட்கவில்லை என்பதனால் அவளுக்குக் கோபம் உண்டாகிறது. குழந்தையை அடிக்கிறாள். அதனால் தன் கோபத்தைத் தீர்த்துக் கொள்ளுகிறாள். இது தண்டனை ஆகாது. கோபத்தால் அடிக்கிறவள், கால் வலியோடு அடியின் வலி வேறு சேர்கிறதே என்பதை மறந்து விடுகிறாள்.

சூரனிடம் சினம் மூண்டு அவனை அழித்துவிட வேண்டும் என்று முருகன் நினைக்கவில்லை. அவனுக்குத் தண்டனை கொடுத்து வழிப்படுத்த எண்ணினான். இறைவன் நல்ல காரியத்தைச் செய் என்று ஆணையிட்டபோதிலும், கெட்ட காரியங் களைச் செய்கிறவர்களிடம் கோபம் கொள்ளுவது இல்லை. ஆனால் அவர்களுக்கு அந்த அந்தக் காரியங்களுக்கு ஏற்ற தண்டனையை அளிக்கிறான்; திருந்த வேண்டும் என்ற எண்ணத்தால் தண்டிக்கிறான்.

"இராவணன் என் மனைவியை எடுத்துப் போய்விட்டான்; அவனை விட்டேனா பார் என்ற கோபம் இராமனுக்கு வந்திருந்தால், போர்க்களத்திலே படைகள் எல்லாம் அழிந்து போக, தன்னுடைய துணைவர்கள் யாவரும் மாண்டு போக நிராயுதபாணியாக நின்ற இராவணனை இதுதான் சமயம் என்று ஒரே அம்பால் கொன்றிருக்கமாட்டானா? அவனுக்கு இராவணனிடம் அப்போது கருணைதான் உண்டாயிற்று. பத்துத் தலையையுடைய இராவணன் தன்னைச் சுற்றிலும் யாரேனும் துணைவர்கள் இருக்கிறார்களா என்று பார்க்கலாம். எல்லோரும் செத்துக் கிடக்கும்போது, படைகள் எல்லாம் அழிந்து கிடக்கும் போது, தன் கையிலுள்ள எவ்விதமான ஆயுதங்களும் இல்லாமல் தனியே நிற்கும்போது, 'இனி இராமனுடன் நான் எப்படிச் சண்டை போட முடியும்? அவன் மனைவியை அவனோடு அனுப்பிவிடலாம்' என்று எண்ணினானா? இல்லை. இராமன் நிராயுதபாணியாக இருந்த இராவணனை ஒரே அடியாக அப்போது அடித்துக் கொன்று விட்டானா? இல்லை. "இன்று போய் நாளை வா" என்றான். அந்தச் சமயத்தில் அவன் காட்டிய வீரம் கருணை வீரம். நிராயுதபாணியிடம் படையைச் செலுத்தாமல் இருப்பதைத் தழிஞ்சி என்று சொல்வார்கள் இலக்கணப் புலவர்கள்.

"ஆள யாஉனக் கமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை, இன்றுபோய்ப் போர்க்கு
நாளை வாஎன நவின்றனன், நாகிளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்"

என்பது அவர் பாட்டு.

இராவணனிடம் போர் செய்வதற்கு என்ன இருக்கிறது? அவனுடைய துணைவர்கள் எல்லோரும், படைகள் எல்லாம், புயற் காற்றில் அடிபட்ட பூளைப் பூவைப் போலப் போய் விட்டன. அந்தச் சமயத்தில், "இன்று போய் நாளை வா" என்கிறான் கருணை வள்ளலாகிய இராமன். "இன்றைக்குப் போ. இரவில் நன்றாக யோசித்துப் பார். உன் படைகள் எல்லாம் அழிந்துவிட்டன. நீ துணைவர்கள் இன்றி இருக்கிறாய். ஆகவே சீதையைத் திருப்பி அனுப்பிவிடுவோம் என்ற எண்ணம் தோன்றலாம். அப்படித் தோன்றினால், நாளைக்கு நீ வரவேண்டியதில்லை. அப்படியின்றிப் போர் செய்யும் எண்ணம் இருந்தால் நாளைக்கு வா" என்கிறான்.

அங்கே தன்னுடைய போர் வீரத்தைக் காட்டிலும் சிறந்த கருணை வீரத்தைக் காட்டினான் இராமன். இங்கே முருகன் நினைத்திருந்தால் சூரனை ஒரு நிமிஷத்தில் கொன்றிருக்கலாம். ஆனால், இவன் நல்லவனாக மாட்டானா? தேவர்களுடைய அரசை அவர்களுக்கே திரும்பவும் கொடுத்து, அவர்களைச் சிறையிலிருந்து விடுவித்துவிடமாட்டானா?” என்று பல காலம் போரை நீளச் செய்து காத்திருந்தான்; தன் விசுவரூபத்தைக்கூட காட்டினான்.

ஆனால் சூரன் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு வேஷம் போட்டுக் கொண்டு வந்தான். மாயையின் பிள்ளை அல்லவா? பெரிய பெரிய மாயாஜாலங்களைக் காட்டினான். மாயையை அறுத்து எறிகின்றவன் முருகன். அவனிடம் அவன் மாயாஜாலங்கள் செல்லுமா? எவ்வளவு செறிவாக இருள் இருந்தாலும் ஒரு விளக்கைப் போட்டால் அது ஒடிவிடுகிறதல்லவா?

முருகனுக்குச் சூரனைக் கொன்றுவிட வேண்டுமென்ற கோபம் இல்லை. அவனுக்குத் தன் கருணையை வழங்க வேண்டுமென்றே விரும்பினான். ஆகவே அவனுடைய மாயைத் தோற்றங்களை எல்லாம் குலைத்தான். தன் உருவத்தைக் காட்டினான். அப்படியும் அவன் சரணடையவில்லை. பின்பே முருகன் தன்னுடைய படையான வேலை விடுவித்தான். கட்டாரியைப் போன்ற அந்தக் கூர்மையான வேல், கரிய சூரன் உடலில் பாய்ந்து, இரத்தம் கொப்புளிக்க அவனை ஓர் இமைப் போதினில் அழித்தது. போர் நெடுங்காலம் நடைபெற்றாலும் சூரனைக் குத்த வேண்டும் என்ற நினைவு உண்டானது இமைப் பொழுதில்; அந்தக் கணத்தில் முருகன் அவனைச் சங்காரம் செய்து விட்டான். அதனால், "ஓரிமைப் போதினில் கொன்றவனே" என்கிறார் அருணகிரியர்.

"மாயையின் பிள்ளையாகிய சூரன் என்ன என்னவோ உருவங்களை எடுத்தான். தேவர்கள் உய்ய, சூரன் இருக்குமிடத் திற்கே சென்று, அவனது கரிய உடல் இரத்தம் கக்கும்படியாக உன்னுடைய கட்டாரியைப் போன்ற கூர்மையான வேலை விட்டு, அவனை ஒரு நொடிப் பொழுதினில் கொன்றாய். தேவர்களுடைய ராஜ்யத்தைத் திரும்பவும் வாங்கிக் கொடுத்தாய். அதை போல எனக்கு நீ உதவி செய்யக் கூடாதா? எனக்கு இந்த உடம்பாகிய வீட்டில் சுயராஜ்யம் கிடைக்கும்படியாகச் செய்யக் கூடாதா? உரிமை வாழ்வு எனக்கு அருளக் கூடாதா? என்னுடைய ஐந்து பொறிகளும் எனக்கு அளிக்கின்ற துன்பம் கொஞ்சநஞ்சம் அல்லவே! நான் உன்னை ஒரலாம் என்றாலும், உன்னலாம் என்றாலும், மலரிட்டு உன்தாள் சேரலாம் என்றாலும் இவர்கள் என்னை விடமாட்டோம் என்கிறார்களே உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடத்தில் போய் நான் முறையிட முடியும்? யான் என்ன செய்வது?" என்று இந்தப் பாட்டிலே முறையிடுகிறார் அப்பெருமான்.

இந்தப் பாட்டின் பின் இரண்டியில் சந்தநயம் அமைந்திருக்கிறது.

ஒரஒட் டார்; ஒன்றை உன்னஒட்
டார்; மலர் இட்டுனதாள்
சேரஒட் டார்ஐவர் செய்வதென்
யான்? சென்று தேவர்உய்யச்
சோரநிட் டூரனைச் சூரனைக்
காருடல் சோரிகக்கக்
கூரகட் டாரிஇட் டோர்இமைப்
போதினிற் கொன்றவனே!

(ஐம்பொறிகளாகிய பகைவர் உன் சம்பந்தமான எண்ணங்களை எண்ண விடுவதில்லை; ஒன்றைக் கூர்ந்து சிந்திக்க ஒட்டுவதில்லை; மலர் தூவி உன் தாளைத் தியானிக்க விடுவதில்லை. யான் என்ன செய்வது? அசுரர்கள் உள்ள இடத்துக்குச் சென்று தேவர்கள் உய்வை அடையும் படியாக, கள்வனும் கொடுமையுடையவனுமாகிய சூரனை அவனுடைய கரிய உடல் இரத்தத்தைக் கக்கும்படி கூர்மையான கட்டாரியாகிய வேலைக் கொண்டு குத்தி ஒரு கண நேரத்தில் கொன்றவனே!

ஒர-நினைக்க. உன்ன-கூர்ந்து சிந்திக்க. சேர-தியானிக்க. நிட்டுரம்-கொடுமை. நிட்டுரன் என்றது சந்தம் நோக்கி நீண்டது. சோரி-இரத்தம். கூர-கூர்மையான கட்டாரியிட்டுச் சூரனைக் கொன்றவனே.)