உள்ளடக்கத்துக்குச் செல்

கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1/வேலின் பெருமை

விக்கிமூலம் இலிருந்து


வேலின் பெருமை

1

ருணகிரி நாதர் முதலில் விநாயகரை நினைத்தார். பிறகு முதல் பாட்டிலே தாம் பெற்ற இன்பத்தைச் சொன்னார். "இறைவன் திருவருளினால் எந்த விதமான தகுதியும் இல்லாமல் இருந்த நான் பெரிய பேற்றைப் பெற்றேனே!" என்று இந்தச் சொற் கோயிலுக்குள் போகும்போதே, தாம் இருந்த நிலையை நினைவு கூர்ந்து, தாம் அடைந்த பேற்றைச் சொன்னார். தாம் மாத்திரம் இன்பம் பெற்றால் போதுமா? உலகமும் அந்த இன்பத்தைப் பெற வேண்டாமா? உலக மக்களும் அந்தப் பேரின்பத்தைப் பெறுவது எப்படி என உபதேசம் செய்ய வேண்டாமா? அந்த உபதேசத்தைச் செய்தார் இரண்டாவது பாடலிலே. "அயில்வேலன் கவியை எழுத்துப் பிழையறப் பாட வேண்டும், அதனால் யம பயம் இல்லாமல் போகும். அந்தக் கவியைக் கல்லாமல் இருக்கிறீர்களே, நாளைக்குக் காலன் வரும்போது என்ன செய்வீர்கள்?" என்று இரங்கினார்.

அயில்வேலன் கவியைக் கற்கச் சொல்கிறாரே; அவன் எத் தகையவன்? என்ன பெருமை உடையவன்? அவன் கையிலுள்ள அயில் வேலுக்கு என்ன பெருமை? சாதிக்க முடியாத காரியம் எதையாவது அது முன்பே செய்திருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு அருணகிரி நாதர் மூன்றாவது பாட்டிலே விடை சொல்கிறார்.

உலகம் எல்லாம் ஒப்புக் கொள்ளும்படி, அவன் புகழைப் பெரியோர்கள் கவியில் சாசனம் செய்திருக்கிறார்கள். கந்த புராணம் என்ற பெரிய நூலில் முன்பே அவன் புகழ் பரந்து சொல்லப் பெற்றிருக்கிறது. முருகனுடைய அவதாரத்திற்கு வியாஜம் சூரனைச் சங்கரிப்பது. அந்தக் சூர சங்காரம் செய்ததே அவன் திருக்கரத்திலுள்ள வேல்தான். அதை இப்போது சொல்கிறார்.

கவிஞன் கலை

தாவது பொருளைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் உள்ளபடியே சொன்னால் அந்தப் பொருளில் கவர்ச்சி இராது. அதைச் சுற்றி வளைத்து வருணனைகளோடு அழகுபடுத்திச் சொன்னால் சுவை பிறக்கும். அழகான பொருளை அலங்காரம் பண்ணி வைக்கும்போது அதனைத் தரையில் வைக்க மாட்டார்கள். அடியிலே அழகான பீடம் போட்டு, அதனையும் அலங்காரம் செய்து அதன்மேல்தான் வைப்பார்கள். நவராத்திரி சமயத்தில் ஒருவர் வீட்டில் ஐந்து படி கட்டினார்கள் என்றால், அடுத்த வீட்டில் ஏழு படி கட்டி, ஏழாவது படியின்மேலே ஆண்டவன் விக்கிரகத்தை அலங்காரம் பண்ணி வைக்கிறார்கள். அப்படித் தான் கவிஞன் தான் சொல்வதைப் பல படிகளைக் கட்டி உயரத்தில் வைக்கிறான்.

திரிபுர சங்காரம்

ஆண்டவன் திருக்கரத்திலுள்ள வேலின் பெருமையைச் சொல்ல வந்த அருணகிரிநாதர் அதனை அழகாகச் சொல்கிறார். முருகன் தன் கையிலுள்ள வேலினால்தான் சூரனைச் சங்காரம் பண்ணினான். அவன் தகப்பனார் யார் தெரியுமா?
   தேர்அணி இட்டுப் புரம்எரித்தான்

"தேர் அணி இட்டு' என்றால் தேரை அலங்காரம் பண்ணி என்று பொருள். சிவபெருமான் முப்புரங்களைச் சங்காரம் பண்ணினான். பறக்கும் கோட்டைகள் மூன்று இருந்தன. இரும்பாலான கோட்டை, வெள்ளியால் ஆன கோட்டை, தங்கத்தாலான கோட்டை ஆகிய மூன்றையும் முருகப் பெருமானுடைய தந்தை எரித்தான். அந்த மூன்று கோட்டைகளையும் உடைய மூன்று அசுரர்கள் மிக்க துன்பத்தைப் பிறருக்கு அளித்து வந்தார்கள். அதனால் அவர்களுடைய புரங்களை அழித்தான்.

உடம்பினாலும், உள்ளத்தினாலும் அசுரர்களாக இருந்தவர்களைப் பற்றிப் புராணம் சொல்கிறது. உள்ளத்தினால் அசுரராக இருப்பவர்கள் எல்லாக் காலத்திலும் உண்டு. தன் காரியங்களால் தானே இன்பம் அடைகிறவன் மனிதன்; தன் காரியங்களால் தானும் இன்புற்றுப் பிறரையும் இன்புறச் செய்பவன் தேவன்; தன் செயலால் பிறருக்குத் துன்பத்தை விளைவித்து அதைக் கண்டு இன்புறுகிறவன் அசுரன். இன்றைக்கும் தம் காரியங்களால் பிறருக்குத் ஊறு விளைவித்து உவகை கொள்கிறவர்கள் பல பேர் இருக்கிறார்கள்; அவர்கள் எல்லோரும் அசுர சாதியைச் சேர்ந்தவர்களே.

சங்க நூலாகிய கலித்தொகையில் ஒரு பாட்டு வருகிறது. பாலை நிலம்; அந்த நிலத்தில் தண்ணிர் இராது. மரங்கள் கருகிப் போய் இருக்கும். மான் தண்ணீர் என்று கானல் நீரைத் தேடி ஓடி அலையும். தப்பித் தவறி அங்கே யாராவது போய்விட்டால் அவர்கள் அங்குள்ள விலங்குகளுக்கு இரையாகிவிடுவார்கள். ஆறலை கள்வர் அவர்களை அடித்துப் பறிப்பார்கள். வழிப்போக்கர்களிடம் இருக்கும் அவல், அரிசி, கோதுமை, பொருள் முதலியவற்றை அவர்கள் பறித்துக் கொண்டு போவார்கள். அங்கே பயிர் பச்சை இல்லை. உழைத்துச் சாப்பிட வசதி கிடையாது. தொழில் செய்து பிழைக்கலாம் என்று வேறு பிரதேசங்களுக்குப் போகும் முயற்சியும் அவர்களிடம் இல்லை. ஆகையால் அந்தப் பக்கம் போகிறவர்களை அடித்து நொறுக்கி வழி மறித்துத் திருடிச் சாப்பிடுவதே அவர்கள் வழக்கம்.

வழிப்பறி செய்துவிட்டுப் போனால் போகட்டும், ஆளையாவது உயிரோடு போக விடுகிறார்களா என்றால், அப்படியும் போக விட மாட்டார்கள். அவர்களுக்குக் கூத்துப் பார்ப்பதிலே மிக்க மகிழ்ச்சி அந்தப் பாலை நிலத்திலே கூத்தாட யார் வரப் போகிறார்கள்? வழிப்போக்கர்களின் கழுத்தைச் சீவியவுடனே, தலையிழந்த அவர்களது முண்டம் துள்ளும் அல்லவா? அதைக் கண்டு களிப்படைகிறார்களாம். "துள்ளுநர்க் காண்பான் தொடர்ந்துஉயிர் வவ்வலின்" என்று ஒரு புலவர் பாடுகிறார். இந்த வேடர்களை அசுரர்கள் என்றே சொல்ல வேண்டும். பிறருக்குத் துன்பத்தை விளைவித்து அதனாலே இன்பம் அடைகிறவர்கள் அல்லவா?

மூன்று கோட்டைகளுக்கும் சொந்தக்காரராகிய அசுரர்கள் என்ன செய்தார்கள்? ஆகாயத்தில் விமானம் போல மூன்று கோட்டைகளும் பறந்து வந்து மக்கள் மிகுதியாக வாழும் பகுதியில் அப்படியே இறங்கும். அவை கீழே உட்கார்ந்து கொண்டவுடன்

க.சொ.1-8 அந்தப் பகுதியிலுள்ள மக்கள் அப்படியே நசுங்கிச் செத்துப் போவார்கள். இதனால் என்ன பயன் என்று கேட்கலாம். இவ்வாறு மக்களைச் சாகச் செய்து பார்ப்பதில் அவர்களுக்குக் களிப்பு. இதைக் கண்டு தேவர்களுக்கு மிக்க கலக்கம் ஏற்பட்டு விட்டது. உலகம் வாழ்ந்தால்தான் தேவர்கள் எல்லோரும் வாழ முடியும். அவர்களுடைய தொழில் மின்சாரப் பகுதியில் வேலை செய்கின்ற ஊழியர்களின் வேலையையும், வளர்ச்சித் துறையில் வேலை செய்கிறவர்களின் வேலையையும் போன்றது. உலகத்திலுள்ள மக்கள் ஒன்றும் செய்யாமல், வரி கொடுக்காமல் இருந்தால், அவர்களுக்கு உத்தியோகமும் இல்லை; சம்பளமும் இல்லை. இறைவனுடைய ஆணைப்படி இவ்வுலகத்தைப் பாலிப்பதற்காக உள்ள பலதுறை அதிகாரிகள் தேவர்கள். வருணனுக்கு ஒரு பகுதி, நீர் வளத்தைக் கவனிக்க வேண்டும். வாயுவுக்கு ஒரு பகுதி; அவன் காற்றுக்குரிய மந்திரி. அக்கினி தேவன் வெளிச்சம் போடுகிற மந்திரி. இவர்களுக்கு உலக மக்களாகிய நாம் பண்ணுகிற வேள்விகளும், துதிகளும், பூசைகளும் சம்பளமாக மாறுகின்றன. இவ்வுலகில் மனிதன் வாழாமல் இருந்து விட்டால் தேவர்களுக்குச் சாப்பாடு இல்லை; பட்டினிதான்.

ஆதலின், உலகம் இப்படி அசுரர்களால் அழிந்து ஒழிந்து போவதைக் கண்டு, தேவர்கள் அலறிக் கொண்டு போய் இறைவனிடம் முறையிட்டார்கள். இறைவன் அதைக் கேட்டான். தேவர்களும் கொஞ்சம் அகங்காரத்தோடு இருந்தார்கள். அக்கினி தன் தொழிலைத் தான் செய்யாவிட்டால் உலகத்திலுள்ளவர்கள் எப்படி வாழ முடியும் என்று தருக்குக் கொண்டிருந்தான். உடம்பில் உயிர் இருப்பது என்னால்தானே என்று வாயு தருக்குக் கொண்டிருந்தான். இப்படியே எல்லாத் தேவர்களும், தாங்கள் தொழில் புரியாவிட்டால் உலகம் நடைபெறாது என்று செருக்குற்றிருந்தார்கள். அவர்களுடைய அகங்காரத்தையும் போக்க வேண்டுமென்று இறைவன் நினைத்தான்.

நாம் ஒரு காரியத்தைச் செய்தால் அதில் உள்ள ஒரு பகுதி தான் நிறைவேறுகிறது. ஆண்டவன், ஒரு காரியத்தைச் செய்யும் போது பல காரியங்கள் நிறைவேறும்.அவன் திரிபுரத்தில் இருந்த அசுரர்களை அடக்க விரும்பினான். அதோடு தேவர்களுடைய அகங்காரத்தையும் போக்க எண்ணினான். உடனே தேரில் புறப்பட்டான். பூமியைத் தேராக்கி அதை நன்றாக அலங்காரம் பண்ணினான். அதை இழுக்க வேண்டுமே வேதமாகிற நான்கு குதிரைகளைப் பூட்டினான். சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு சக்கரங்களைக் கோத்தான். நான்கு வேதங்களையும் உணர்ந்தவன் பிரமா. ஆதலால் தேரை ஓட்டுவதற்குரிய சாரதியாக அவனைக் கொண்டான். மேருவை வில்லாக வளைத்தான். வாசுகியை நாணாகப் பூட்டினான். வாயு, அக்கினி, திருமால் ஆகிய மூன்று பேரையும் அம்பாகக் கொண்டான். அம்புக்கு முன் பக்கம் திருமாலையும், நடுப்பக்கம் அக்கினியையும், வால் பக்கம் வாயுவையும் வைத்தான். வேகமாகப் போவதற்காக வால் பக்கம் வாயு இருந்தான். இப்படியே தேரை அணி செய்து யுத்தத்திற்குப் புறப்பட்டபோது சற்று அகங்காரம் கொண்டார் திருமால்; 'சிவ பெருமான் அந்த அசுரர்களோடு போர் செய்யப் புறப்பட்டாலும், அம்பின் நுனியில் இருக்கிற நான்தானே அவர்கள் மேல் பாய்ந்து அழிக்கப் போகிறேன்? என்று எண்ணிக் கொஞ்சம் கர்வத்தோடு இருந்தார்; தமக்குக் கர்வம் உண்டானது போலக் காட்டிக் கொண்டார். அதைப் போக்கச் சிவபிரான் எண்ணினான்.

வேஷம் மாறுதல்

சிவபுராணத்தில் திருமாலுக்கு அகங்காரம் வந்ததாகவும், சிவபெருமான் அடக்கியதாகவும் வருகிறது. விஷ்ணு புராணத்தை எடுத்துப் பார்த்தால், சிவபெருமானுக்கு அகங்காரம் சில சமயங்களில் உண்டானதாகவும், திருமால் அடக்கியதாகவும் இருக்கும். அவற்றைக் கொண்டு சிவபெருமான் உயர்ந்தவரா, விஷ்ணு உயர்ந்தவரா என்னும் வாதத்தில் நாம் இறங்கிவிடக் கூடாது. நாடகக் குழுவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் பலவிதமான நாடகங்களை நடித்துக் காட்டுகிறார்கள். ஒரு நாடகத்தில் அண்ணன் அரசனாக வருகிறான்; தம்பி வேலைக்காரனாக வருகிறான். மற்றொரு நாடகத்தில் தம்பி அரசனாக வருகிறான்; அண்ணன் வேலைக்காரனாக வருகிறான். இரண்டு பேரும் ஒரே நாடகத்தில் அரசனாக இருக்க முடியாது அல்லவா? அவர்கள் இரண்டு பேரில் யாரும் உண்மையில் அரசன் அல்ல; வேலைக்காரனும் அல்ல. மாறிமாறி வேலைக்காரனாகவும் அரசனாகவும் வந்தாலும், இரண்டு பேரும் உண்மையில் சமமானவர்களே. சிவனும் திருமாலும் மாறி மாறி வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள். அவர்கள் போட்டுக் கொள்ளுகிற வேஷம் எதுவும் உண்மை அன்று. கதைகளின் உட்கருத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

திரிபுர சங்காரக் கதையில் அகங்காரம் திருமாலிடத்தில் ஏற்பட்டதாக இருக்கிறது. சிவபெருமான் போருக்கு எழுந்தவுடனே திருமால் தலை நிமிர்ந்து நின்றார். இது பரமசிவனுக்குத் தெரியாதா? வில்லை வளைத்து, நாண் பூட்டி, அம்பை விடப் போனவன், திருமாலுக்கு உண்டான அகங்காரத்தை எண்ணி வேடிக்கையாகச் சிரித்தான். அவ்வளவுதான்; அந்தச் சிரிப்பு, திருமாலிடம் தோன்றிய அகங்காரத்தை எரித்தது. அதோடு முப்புரங்களையும் சுட்டுச் சாம்பலாக்கிவிட்டது.

திரிபுரங்களுக்கும் தலைவர்களாகிய மூன்று அசுரர்கள் வித்யுன்மாலி, தாரகாட்சன், வாணன் என்போர். சிவபிரான் தன் சிரிப்பினால் மூன்று கோட்டைகளையும் எரித்துச் சாம்பலாக்கினாலும், அந்த மூன்று அசுரர்களையும் அழிக்கவில்லை.

இறைவன் கருணை

ரு குழந்தை தன் கையிலுள்ள கோலினால் அடுத்த வீட்டுக் குழந்தையை அடிக்கிறது. அன்புள்ள தாய் என்ன செய்கிறாள்? குழந்தையை அடிக்க மாட்டாள். அதன் கைக்கோலைப் பிடுங்கி அடுப்பிலே போட்டு விடுவாள். அவ்வாறே செய்தான் சிவபிரான். எல்லாரும் இறைவனுடைய குழந்தைகள் அல்லவா? அசுரர்களும் இறைவனுடைய குழந்தைகள்தாமே? அந்த மூன்று அசுரர்களும் பொல்லாத பிள்ளைகளாக இருந்தார்கள். அவர் களுக்கு அதுகூலமாக மூன்று கோட்டைகள் கிடைத்தன. அவர்கள் அந்தக் கோட்டையின் உதவியால் துன்பத்தை விளைவித்தார்கள். தன் குழந்தையின் கையிலுள்ள கோலைப் பிடுங்கி எரித்துவிடும் தாயைப் போல, தன் குழந்தைகளாகிய அசுரர்களுடைய மூன்று கோட்டைகளையும் எரித்தான் சிவபிரான். ஆனால் அந்த மூன்று பேரையும் எரிக்கவில்லை. புரங்கள் எரிந்தவுடன் அந்த மூன்று அசுரர்களும் இறைவன் காலில் வந்து விழுந்தார்கள். அவனுடைய சந்நிதியில் அவர்கள் நல்லவர்கள் ஆகிவிட்டார்கள். இறைவன் தன் திருவிடியில் வந்து வீழ்ந்த வாணனை மிருதங்க வித்து வானாக வைத்துக் கொண்டான். மற்ற இரண்டு பேரையும் தன் வாயில் காவலராக வைத்துக் கொண்டான். இனி இந்தக் கதையின் உட்கருத்து என்ன என்று பார்க்கலாம்.

உட்கருத்து

ணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களோடும் உள்ள ஆன்மா இந்த உலகத்தில் பிறந்து துன்பத்தை அடைகிறது. மலத்தோடு சேர்ந்திருக்கும் ஆன்மா களிம்போடு சேர்ந்துள்ள தாமிரத்திற்கு ஒப்பானது. தாமிரத்தை ரஸவாதத்தால் பொன்னாக்குவார்கள்; ஆனால் ஈயத்தைப் பொன்னாக்க மாட்டார்கள். பாதரஸத்தை விட்டு, அதோடு சில மூலிகைச் சாற்றைப் பிழிந்து புடமிட்டுப் பொன்னாக்குவதால் அதற்கு ரஸவாதம் என்று பெயர் வந்தது. தாமிரத்தை நன்றாக விளக்கி வைத்துப் பார்த்தாலே அது பொன்போல ஒளிர்வதைப் பார்க்கலாம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அதில் மாசு ஏறி, அதன் பிரகாசம் மங்குகிறது. தங்கத்தின் தன்மை தாமிரத்தில் இருக்கிறது. தாமிரத்தோடு களிம்பு ஏறாமல் தடுத்தால் அது தங்கந்தான். களிம்பு இல்லாத தாமிரம் தங்கம்; களிம்புள்ள தங்கம் தாமிரம்.

தங்கம் பரமேசுவரன். தாமிரம் ஆன்மா. ஆன்மாதவிடத்தில் என்றும் ஒட்டிக் கொண்டு பிறவிக்குக் காரணமாக இருக்கிறது மலம் அல்லது பாசம் என்பது. உயிர் இறைவனை ஒட்ட விடாமல் செய்து கொண்டிருப்பது அந்தக் களிம்பாகிய மலம். அது மூன்று விதம்; ஆணவம், கன்மம், மாயை என்பன. யான், எனது என்று கொள்ளும் அகங்காரமமகாரம் ஆணவம், புண்ணிய பாவ வினைகள் கன்மம். கடவுளை உணராமல் ஒன்றை ஒன்றாக மயங்கிக் கிடப்பது மாயை. இந்த மூன்றும் சேர்ந்த களிம்பினால் உயிர் மூடப்பட்டிருக்கிறது. இறைவன் எந்தக் காலத்திலும் மலத்தின் சம்பந்தம் இல்லாதவன். ஆன்மாக்கள் யாவுமே மலத்தோடு சம்பந்தப்பட்ட தாமிரமாக இருக்கின்றன. தாமிரம் தங்கமாக வேண்டும். தாமிரத்தோடு சேர்ந்த களிம்பு போன்றது மலம். அதைப் போக்கும் ஞானமே அக்கினி. மலமாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று கோட்டைகளையும் வைத்துக் கொண்டுதான் உயிர்கள் பலவிதமான தீமைகளைப் புரிகின்றன. தன் சிரிப்பினாலேயே திரிபுரங்களையும் சங்காரம் செய்த இறை வனை ஆன்மாக்கள் பற்றிக் கொண்டால், அவனுடைய சிரிப்பாகிய ஞானாக்கினியினால் மூன்று மலங்களும் சாம்பலாகிவிடும்.
   "கருமருவு குகையனைய காயத்தின் நடுவுட்
     களிம்புதோய் செம்பனையயான்
   காண்டக இருத்தியே ஞானஅனல் மூட்டியே
     கனிவுபெற உள்உருக்கிப்
   பருவம தறிந்துநின் அருளான குளிகைகொடு
     பரிசித்து வேதிசெய்து
   பத்துமாற் றுத்தங்கம் ஆக்கியே பணிகொண்ட
     பட்சத்தை என்சொல்லுவேன்"
என்று இந்த ரஸவாதத்தைப் பற்றித் தாயுமானவர் பாடுகிறார். "குகையாகிய உடம்பில் களிம்பு தோய்ந்த செம்பைப் போல் உள்ளவன் ஆன்மாவாகிய நான். என்னை ஞான அனலால் உருக்கிக் களிம்பைப் போக்கி அருளாகிய குளிகையைக் கொண்டு தங்க மாக்கினாய்" என்கிறார்.

"ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள்ளுருக்கி என்பதைக் கவனிக்க வேண்டும். ஞானத்தினால் உருக்கம் உண்டாகும். உள்ளம் உருகாவிட்டால் கனிவு இல்லை; இரக்கம் இல்லை; அருள் இல்லை; பிறருடைய துன்பத்தைக் கண்டு இரங்கும் இளகிய மனம் இல்லை. அன்பர்கள் இறைவனைத் துதிக்க அவர்களுடைய மனத்திலே இளக்கம் ஏற்படும்; உள்ளம் உருகும். ஞானத்தீயினாலே உயிரைப் பற்றிக் கொண்டிருக்கிற மலமாகிய களிம்பு பொசுங்கிப் போகும். களிம்பு நீங்கிய தாமிரம் தங்கத்தோடு தங்கமாகச் சேர்ந்து விடுவதைப் போல, மலமாகிய களிம்பு நீங்கிய ஆன்மா இறைவனைச் சார்ந்து விடும். இறைவன் தன்னுடைய சிரிப்பினாலேயே ஆன்மாக்களைப் பற்றியிருக்கிற மும்மலக் கோட்டைகளை எரித்துவிடுகிறான். தீயவர்களை அவன் சுட்டு எரிப்பதில்லை; அவர்களிடமுள்ள தீமையையே போக்கி ஆட்கொள்கிறான். இத்தனை பெரிய தத்துவங்களை விளக்குகிறது திரிபுர சங்காரம். அதனைச் செய்தவனுடைய பிள்ளை முருகன்.


   தேரணியிட்டுப் புரம்எரித் தான்மகன் அந்த மகனாகிய முருகன் செங்கையில் வேல் இருக்கிறது. அந்த வேல் என்ன செய்தது? மூன்று புரங்களையும் எரித்து, அவற்றுக்கு உரியவர்களை நல்லவர்கள் ஆக்கி, தன் பணியாளர்களாக வைத்துக் கொண்ட சிவபெருமானுடைய குழந்தை அல்லவா முருகன்? தகப்பனாரிடம் உள்ள அந்தப் பண்பை அவனிடமும் காணலாம். சூரனுடைய உருவத்தை மாற்றி வேலும் மயிலுமாகக் கொண்டருளினான். இவ்விரண்டும் எதிர்த்தவர்களுக்கு முடிவில் அருள் பாலிக்கும் கருணைய வெளியிடுவன. அதனால்தான் இரண்டையும் இங்கே இணைத்துக் காட்டினார் அருணகிரிநாதர்.

2

வேலின் செயல்

முருகன் கையில் உள்ள வேலே, அதன் கூரிய முனையே, சூரனைச் சங்காரம் செய்துவிட்டதாம்.
                செங்கையில்வேற்
   கூர் அணியிட்டுஅணு வாகிக் கிரௌஞ்சம் குலைந்தரக்கர்
   நேரணியிட்டு வளைந்த கடகம் நெளிந்தத; சூர்ப்
   பேரணி கெட்டது; தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே. அந்த வேல் மூன்று காரியங்களைச் செய்தது என்று சொல்வதோடு, அதனால் தேவேந்திர லோகம் பிழைத்தது என்று மங்களமாக முடிக்கிறார்.

அந்த மூன்று காரியங்கள் என்ன? கிரௌஞ்சம் குலைந்தது; அரக்கர் படை குலைந்தது; சூரன் தலைவனாக இருந்து நடத்திய பெரும் படையும் கெட்டது.

கிரௌஞ்ச சங்காரம்

'னுவாகிக் கிரௌஞ்சம் குலைந்து': கிரௌஞ்ச மலை அணு அணுவாகிக் குலைந்து போயிற்றாம். அணு என்று கண்ணுக்குப் புலப்படாத மிகச் சிறிய பொருளைக் குறிப்பார்கள். பெரிய பொருளை மலை போல இருக்கிறது என்று சொல்வார்கள். கிரௌஞ்சம் என்பது அன்றில் என்ற பறவையின் பெயர். அது நெய்தல் நிலத்தில் இருக்கும். பனை மரங்களில் ஆணும் பெண்ணுமாய் இரட்டை இரட்டையாகவே வாழும்; கணமும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் இருக்கும். அந்தப் பறவையைக் காதலுக்கு எடுத்துக்காட்டாகச் சொல்வது வழக்கம். அதன் பெயரை உடையது கிரௌஞ்ச மலை. கெட்டவர்கள் நல்ல பேரோடு நல்லவர்களைப் போல தோற்றம் அளிப்பதுண்டு. அதை இது நினைவூட்டுகிறது. பிறருக்குத் தீங்கு செய்யும் கயவர்கள், மனிதர்களைப் போலவே இருப்பார்கள் என்று சொல்லுகிறது திருக்குறள். தாமரை போன்ற முகம் உடையவள் என்கிறோம். தாமரைக்கும் முகத்துக்கும் வேறுபாடு தெரியும். தம்பி மாதிரியே அண்ணன் இருக்கிறான் என்றால், தம்பி வேறு, அண்ணன் வேறு என்று தெரியும். ஒப்பாகச் சொல்லும் பொருள்களுக்குள் வித்தியாசத்தை அறிந்து கொள்ளலாம். ஆனால் நல்லவர், பொல்லாதவர் என்ற இருவருக்குள்ளும் வேறுபாடே தெரியாதாம்.
   "மக்களே போல்வர் கயவர் அவரன்ன
   ஒப்பாரி* யாம் கண்டது இல்"
என்பது குறள். யார் கயவர் என்பதைக் கண்டுகொள்ள முடியாது. முன் ஒரு நாள் மெய்ப்பொருள் நாயனாரின் வரலாற்றைச் சொன்னேன். நாயனாரைக் கொல்ல வந்த கயவன் முத்திநாதன் சிவனடியாரைப் போலவே வேஷம் தாங்கி வந்தான். உண்மையான சிவனடியார்கூடத் திருநீற்றை உடல் எல்லாம் பூசிக் கொண்டு வேஷம் போட மாட்டார். ஆனால் முத்திநாதன் மெய்யெல்லாம் விபூதி பூசி, ருத்திராட்சம் போட்டுக் கொண்டு வந்தானாம். இப்படிப் புறத்திலே வேஷம் போட்டு வந்த அந்தக் கயவன் மெய்ப்பொருள் நாயனாரைக் கொன்றான்.

கிரௌஞ்சாசுரன் காதல் உள்ளம் படைத்த அன்றிலைப் போலக் காட்சி அளித்தான். காதல் ஒட்டுவது; பகை வெட்டுவது. காதலுக்கு உதாரணமாகிய அன்றில் பறவையைப் போலப் புறத்திலே தோற்றம் அளித்த அவன், ஒர் அழகான மலைபோல் நின்றான், புலி பசுத்தோலைப் போர்த்துக் கொண்டதுபோல். பலர் உண்மையான மலை என்று எண்ணினார்கள். தவம் செய்வதற்குரிய அழகான இடம் என்று எண்ணிச் சிலர் அந்த மலையில்

ஒப்பாரி* - ஒப்பு இருந்த குகைக்குள் செல்வார்கள். அந்தச் சமயம் பார்த்து அவன் அதை மூடிக் கொண்டுவிடுவான். அவ்வளவுதான்; உள்ளே போனவர்கள் அத்தனை பேரும் நசுங்கிச் செத்துப் போவார்கள். இது கிரௌஞ்சாசுரன் வேலை. இந்த அசுரனது சூழ்ச்சி நாளடைவில் எல்லோர்க்கும் தெரிந்தது. தேவர்களுக்கும் தெரிந்தது. அவர்கள் இறைவனிடம் முறையிட்டார்கள். இந்தக் கிரௌஞ்ச மலையைத் தன் கையிலுள்ள வேலினால் அணு அணுவாகக் குலைத்தான் முருகன். அவன் செங்கையில் உள்ள வேலின் கூரானது அண்ணியிட்டு, அணுக, கிரௌஞ்ச மலை குலைந்தது.

அசுர சங்காரம்

தற்குப் பிறகு தாரகாசுரனாகிய யானை முகன் தன் படையுடன் வந்தான். பின்பு சிங்கமுகாசுரன் வந்தான். முருகனது கூர்மையான வேல் அவர்களையும் சங்காரம் செய்துவிட்டது. சூரனுக்குத் துணையாக இருந்த கிரௌஞ்சம் குலைந்தது என்றவுடனேயே அசுரக் கூட்டதிற்குத் திகில் வந்துவிட்டது. அடுத்துத் தாரகன் முதலிய அசுரர் நேரே அணிவகுத்து வளைந்த படையும் நிலை குலைந்தது.


   அணுவாகிக் கிரௌஞ்சம் குலைந்து அரக்கர்
   நேரணியிட்டு வளைந்த கடகம் நெளிந்தது; சூர்ப்
   பேரணி கெட்டது.

சூரசங்காரம்

சூரனே போர்க்களத்திற்கு வந்துவிட்டான். மயிலின் மேல் சின்னஞ்சிறு குழந்தையாக வீற்றிருக்கிற இளமுருகனைப் பார்த்தவுடன், "இவனா நம் படைகளை எல்லாம் அழிக்க வந்தவன்? இந்தச் சின்னஞ்சிறு குழந்தையை ஒரு நொடியில் என்ன செய்கிறேன் பார்!’ என்று கொக்கரித்தான். வேல் அவன் படையையும் கெடச் செய்தது.

பெரிய போர்கள் மூன்று. பாரதப்போர், ராமாயண யுத்தம், சூரசங்காரம் என்பன அவை. பாரதப் போர் பதினெட்டு நாட்கள் நடந்ததாம். ராமராவண யுத்தம் அதைவிடப் பெரியது; அது பதினெட்டு மாதங்கள் நடந்தது என்பார்கள். ஆனால் சூரசங்காரப் போர் பதினெட்டு ஆண்டுகள் நடந்தது என்பர். அது எவ்வளவு பெரிய போர் என்பதை அதனால் தெரிந்து கொள்ளலாம். இந்தப் போரிலே தன் சிரிப்பினாலேயே திரிபுர சங்காரம் செய்த சிவ பெருமானுடைய குமாரன் தன் செங்கை வேலினால் முதலில் சூரனது படைக்குப் பெரிய பாதுகாப்பாக அமைந்திருந்த கிரௌஞ்ச மலையை அணு அணுவாகிப் போகும்படி குலைத்தான். பின்பு மற்ற அசுரர் படைகளை ஒழிந்து போகும்படி செய்தான். கடைசியில் சூர்ப்பேரணி கெடச் சூரனையும் சங்காரம் செய்தான். சூரன் அழிந்து ஒழிந்தான் என்று இதில் சொல்ல வில்லை. அவனுடைய பேரணி கெட்டது என்று மாத்திரம் சொன்னார். ஆனாலும் அதைக் குறிப்பாகச் சொன்னதாகவே கொள்ள வேண்டும்.

சூர சங்காரத்தை அருணகிரிநாதர் இந்தப் பாட்டிலே மூன்று பகுதியாகச் சொன்னார்; முதலில் கிரௌஞ்ச சங்காரம்; அடுத்தது தாரகாசுரன் முதலிய அசுரர்களுடைய படைகளின் அழிவு; கடைசியாகச் சூரனுடைய அழிவு. .

தேவர் பெற்ற வாழ்வு

பிறருக்குத் துன்பம் விளைவித்து வந்த அசுரர்களை எல்லாம் அழித்தான் முருகன். அதனால் பயன் பெற்று வாழ்ந்தவர் யார்?
   தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.
சூரன் தன் படையைக் கொண்டு தேவேந்திர லோகத்தைக் கைப்பற்றித் தேவர்களைச் சிறையில் அடைத்தான். தேவர்கள் இதுவரையிலும் செய்து வந்த தொழில்களைச் செய்ய வொட்டாமல் தடுத்தான். அவர்களுடைய இன்ப வாழ்க்கையைக் குலைத்தான்; சுதந்தரத்தைக் குலைத்தான். புரமெரித்தான் மகனுடைய கையிலுள்ள வேல், சூரனையும், அவனுடைய அசுரப் படைகளையும் குலைத்தவுடனே தேவர்கள் சுதந்தரம் பெற்றார்கள், தேவேந்திர லோகம் பிழைத்தது.

அசுர சம்பத்தும் தேவ சம்பத்தும்

னிதர்களுடைய வாழ்க்கையில் ஒவ்வொருவரிடமும் சூரசங்காரம் நிகழ வேண்டும். ஒவ்வொரு மனிதனுடைய மனத் திலும் இருக்கின்றவை அசுர சம்பத்தாகிய தீய குணங்கள். தேவ சம்பத்தாகிய நல்ல குணங்களும் இருக்கின்றன. சூரபன்மனுடைய தாயின் பெயர் மாயை. மாயையின் பிள்ளைதான் சூரன். மாயையின் பிள்ளைகளே தீய குணங்கள்.

அந்த மாயையின் பிள்ளையாகிய சூரன் தேவர்கள் தம் நல்ல காரியங்களைச் செய்யவொட்டாமல் தடுத்துச் சிறையில் போட்டுப் பலவிதமான துன்பங்களைச் செய்தான். நம் மனத்திலே இருக்கிற மாயையின் பிள்ளைகளாகிய காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய தீய குணங்களோ பிறருக்குத் தீங்கு விளைவிக்காமை, பிறருக்கு உபகாரம் செய்தல், பிறரிடம் அன்பு பாராட்டுதல் முதலியவற்றிற்குக் காரணமான நல்ல குணங்களை அடக்கி, ஆன்மாக்களுக்கு மிகுந்த துன்பத்தை விளைவித்து வருகின்றன. தேவர்களுடைய வாழ்க்கையிடம் போல இருக்க வேண்டியது நம் மனம். ஆனால் அது அசுரர்களின் பூமியாகிவிட்டது. அதனால் ஆன்மாக்கள் விடுதலை பெறாமல் துன்பம் அடைகின்றன. அது மாற வேண்டுமானால் தீய குணங்கள் மாற வேண்டும். அசுரர்களுடைய ஆளுகைக்கு உட்பட்டிருக்கிற மனம், தேவர்களுடைய லோகம் ஆக வேண்டும். சூரனைத் தேவர்களால் அழித்துவிட முடியாது. அதற்கு ஏற்ற ஆற்றல் அவர்களிடம் இல்லை. அதைப்போலவே நம்முடைய மனத்தில் தோன்றுகிற தீய குணங்களை நாமே அழித்துவிட முடியாது. அதற்கு ஏற்ற ஆற்றல் நமக்கு இல்லை. இறைவன் அருளால் ஞானம் ஏற்பட்டு அவை அழிய வேண்டும். முருகன் கையில் உள்ள வேல் ஞான உருவுடையது; ஞான சக்தி.

இருவகைக் கருணை

தேவர்களுக்கு அசுரர்களை அழிக்கும் ஆற்றல் இருந்தால் அவர்கள் இறைவனை மதிக்க மாட்டார்கள்; மிக்க அகங்காரம் உடையவர்கள் ஆகிவிடுவார்கள். உண்மையில் ஆண்டவன் அசுரர்களைச் சிருஷ்டித்ததே, தன் புகழைத் தேவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான். நல்லதைக் கேட்கின்ற குழந்தைகளுக்கு நல்லதை அளிக்கும் தாயாகவும், கெட்ட காரியங்களைச் செய்கின்ற குழந்தைகளை அடித்து உதைத்து அவர்களை நல்வழிப்படுத்துகின்ற தாயாகவும் இறைவன் இருக்கின்றான். அறக் கருணை உடையவனாகவும், மறக் கருணை உடையவனாகவும் அவன் இருக்கிறான். அணைத்துக் காப்பாற்றுவது அறக்கருணை; அடித்துக் காப்பாற்றுவது மறக் கருணை. அசுரர்களை அழித்ததுவும் கருணையே; மறக்கருணை.
   "வானம்எங் கே? அமுத பானம்எங் கே? அமரர்
     வாழ்க்கைஅபி மானம்எங்கே?
   மாட்சிஎங் கேஅவர்கள் சூழ்ச்சிஎங் கே?தேவ
     மன்னன்அர சாட்சிஎங்கே?
   ஞானம்எங் கேமுனிவர் மோனம்எங்கே?அந்த
     நான்முகன் விதித்தல்எங்கே?
   நாரணன் காத்தலை நடாத்தல்எங் கே?மறை
     நவின் றிடும் ஒழுக்கம்எங்கே?
   ஈனம்அங் கேசெய்த தாரகனை ஆயிர
     இலக்கமுறு சிங்கமுகனை
   எண்ணரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை
     ஈந்துபணி கொண்டிலைஎனின்
   தானம்இங் கேர்சென்னைக் கந்தகோட்
     டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே
   தண்முகத் துய்யமணி உண்முகச் சைவணி
     சண்முகத் தெய்வமணியே"
என்று இந்த மறக் கருணையை அருட்பிரகாச வள்ளலார் பாராட்டுகிறார்.

இரண்டு நோயாளிகளுக்கு நோய் வந்தது. இரண்டு பேருடைய நோயையும் குணப்படுத்துபவன் ஒரே மருத்துவன் தான். ஆனால் அவன் ஒருவனுக்கு மருந்தைத் தேனிலே குழைத்துச் சாப்பிடும்படி சொல்கிறான். மற்றவனுக்கோ கத்தியை எடுத்து உடலை அறுத்துச் சிகிச்சை செய்கிறான். "ஏன் எனக்கும் தேனிலே மருந்து கலந்து கொடுக்கக் கூடாது?" என்றால், அவனுக்கு ஏற்பட்ட நோய் இவனுக்கு வந்த வியாதியைப் போன்றது அன்று. ஜூரம் வந்தால் அவன் கொடுக்கிற ஒரு வேளை மருந்திலே சரியாகிவிடும். புற்றுநோய் வந்துவிட்டால் மிக்ஸர் கொடுத்தால் போதாது; ரணசிகிச்சைதான் பண்ண வேண்டும். டாக்டருடைய எண்ணம் இரண்டு பேருடைய நோயையும் குணப்படுத்த வேண்டுமென்பதுதான். அதைப்போலவே இறைவன் எல்லோருக்கும் கருணை காட்ட வேண்டுமென்றே விரும்புகிறான். அவன் காட்டுகின்ற ஒரு கருணை மென்மையாகத் தோன்றுகிறது. மற்றொன்று கடுமையாகத் தோன்றுகிறது. மென்மையாகத் தோன்றுவது அறக் கருணை, கடுமையாகத் தோன்றுவது மறக்கருணை; முருகன் சூரபன்மனிடம் மறக் கருணை காட்டி ஆட்கொண்டான்.

மூன்று இயல்

தேவேந்திரன் தேவலோகத்தை ஆட்சி செலுத்தமுடியாமல் செய்து, அவன் பதவியையும் பற்றிக் கொண்டான் சூரன். எல்லாத் தேவர்களையும் அவரவர்களுடைய தொழிலைச் செய்ய முடியாமல் சிறையில் அடைத்துவிட்டான். அதனால் சிருஷ்டி இல்லை; ஸ்திதி இல்லை; சங்காரம் இல்லை. தேவர்களுக்குச் சாப்பாடு இல்லை; அதனால் ஊட்டம் இல்லை. இறைவன் என்ன என்ன கடமையைத் தேவர்கள் செய்ய வேண்டுமென்று வைத்தானோ அவற்றைச் செய்ய முடியாமல் அவர்களைச் சிறையிட்டான் சூரன். தான் செய்ய வேண்டிய கடமையையும் செய்யவில்லை. அவனை முருகன் வதம் செய்து, மறக் கருணை காட்டி ஆட்கொண்டான்; தேவர்கள் தங்கள் தங்கள் கடமையை மறுபடியும் எவ்வித இடையூறும் இன்றிச் செய்யும்படியாகச் செய்தான். இது புராணம்.

கந்தபுராணத்தை மூன்று நிலையில் பார்க்கலாம். ஒன்று கதையியல். சூரபத்மன் வதையைக் கூறுவது கதை. இரண்டாவது உலகியல்; மூன்றாவது அருளியல்.

ஒருவன் தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாததோடு பிறர் செய்கின்ற நல்ல காரியங்களையும் செய்ய விடாமல் தடுத்து, அவர்களுக்குத் துன்பத்தை உண்டாக்கி வந்தால் அவன் அசுரன்தான். அவனைத் தண்டித்து நல்லவர்கள் நல்ல காரியங்களைச் செய்யும்படியாக உதவுபவன் முருகன். இது உலக இயலை ஒட்டிய தத்துவம்.

உள்ளமாகிய பீடத்தில் தேவர்களுடைய சம்பத்து ஆகிய நல்ல குணங்கள் தங்கள் கடமைகளைச் செய்யவொட்டாமல், அந்தப் பீடத்திலே அசுரர்களுடைய சம்பத்து ஆகிய காமக் குரோத லோப மோக மத மாச்சரியங்கள் வந்து ஆக்கிரமித்துக் கொண்டு, ஆன்மாவுக்குப் பல துன்பங்களை விளைவித்து வருகின்றன. கடமையை உணர்ந்த நல்ல அறிவு என்ற வேல் வந்தால், ஞானமாகிற கூர்மையான வேல் பாய்ந்தால், அஞ்ஞானத்தின் விளைவாகிய அசுரக் கூட்டங்கள் அழிந்து ஒழிந்து போகின்றன என்பது அருளியலை ஒட்டிய தத்துவம்.

இறைவன் கையிலுள்ள வேல் இந்தக் காரியங்களை எல்லாம் செய்கிறது; மனிதனுடைய உள்ளம் நாய்க் கோலம் பூண்டாலும், யானைக் கோலம் பூண்டாலும், யாளிக் கோலம் பூண்டாலும், அதை அழித்து ஒழித்து உண்மையான அன்புக் கோலம் பூணும் படியாகச் செய்கிறது. இதனை விளக்குவது கந்தபுராணம்.

3

கந்த புராணம்

கந்த புராணம் மிகவும் பெரிய கதை. அப்புராணத்தில் சொல்லப் பெறாத பொருளே இல்லை. பதினெண்புராணங்களில் மிகவும் பெரியது கந்தபுராணந்தான். "எந்தப் பொருளும் கந்த புராணத்தில்" என்று பெரியவர்கள் சொன்னார்கள். தமிழில் கச்சியப்பசிவாசாரியர் இயற்றியுள்ள கந்தபுராணம், வடமொழியிலுள்ள ஸ்காந்தம் முழுவதையும் மொழிபெயர்த்து அமைத்தது அல்ல; அதில் ஒரு பகுதிதான். இதுவே மிகப் பெரியதாக இருக்கும்போது, மூலம் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம். கந்தபுராணக் கதைகளைக் கந்தர் அலங்காரத்தில் அங்கங்கே பார்க்கலாம்.

இந்தப் பாட்டை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம். "தேரணி யிட்டுப் புரம் எரித்தான் மகன்" என்பது முதற் பகுதி. "செங்கையில்வேற் கூரணி யிட்டு அணு வாகிக் கிரௌஞ்சம் குலைந்து" என்பது இரண்டாவது பகுதி. "அரக்கர் நேரணியிட்டு வளைந்த கடகம் நெளிந்தது" என்பது மூன்றாவது பகுதி. "சூர்ப் பேரணி கெட்டது" என்பது நான்காம் பகுதி. "தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே" என்பது ஐந்தாவ்து பகுதி. இந்தப் பகுதிகளில் கந்தப்புராணத்தில் விரிவாகக் காணப்படும் ஐந்து பெரிய பகுதிகளின் சாரம் அடங்கியிருக்கிறது.

பழைய வரலாறுகள்

“கந்தபுராணம் என்பது தமிழிலே கச்சியப்ப சிவாசாரியார் அவர்கள் எழுதியதுதானே? அதற்கு முன்பு கிடையாதே. அதில் உள்ள கதைகள் எப்படிப் பழையன ஆகும்?" என்று சொல்லலாம். முருகனைப் பற்றிய வரலாறுகள் மிகப் பழங்காலத் தொட்டே தமிழ் நாட்டில் வழங்கி வருகின்றன. சங்க நூல்களில் பல செய்திகள் இருக்கின்றன.

பரிபாடலின் முருகன் அவதாரச் செய்தி வருகிறது. சூரபன்மனைப் பற்றிப் புலவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கந்தபுராணத்தில் காணாத செய்திகளையும் அதில் பார்க்கிறோம். சூரபன்மன் ஒரு மாமரமாகத் தலை கீழாய் இருந்தானென்று பழைய நூல் சொல்கிறது. அந்த மரத்தில் பூ, காய், பழம் எல்லாம் கீழே இருந்தன; வேர் மேலே இருந்ததாம். நல்லவர்கள் எல்லாம் நேரே இருந்தால், அசுரர்கள் தலைகீழாய்த்தானே இருப்பார்கள்? கிளெஞ்ச மலை சூரனுக்குக் கவசம் போல் இருந்ததாம். முருகன் தன் வேலால் அந்த மலையையும் சூரபன்மனையும் ஒருங்கே பிளந்தானாம்.


   "ஒருதோகை மிசையேறி உழல்சூரும் மலைமார்பும்
     உடனஊடறப
   பொருதோகை சுரராச புரமேற விடுகாளை
     புகழ்பாடுவாம்"
என்று ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணியில் பாடுகிறார்.


   "கிளைபட் டெழுசூர் உரமும் கிரியும்
   தொளைபட் டழியத் தொடுவே லவனே"
என்று அருணகிரிநாதர் கந்தரநுபூதியில் பாடுகிறார்.

இத்தகைய வரலாறுகள் பல பழங்கால முதற் கொண்டு வழங்கி வருகின்றன. பின் வந்த கதைகளில் வேறுபாடு இருக்கலாம். வேறுபாடு இருக்கின்ற காரணத்தினாலேயே இவை கதை, உண்மை அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். உள்ளுறையாகிய தத்துவமே உண்மை என்று தெளிய வேண்டும்.


   தேர் அணி இட்டுப் புரம்ளித்
     தான்மகன் செங்கையில்வேற்
   கூர்அணி யிட்டணு வாகிக்
     கிரௌஞ்சம் குலைந்தரக்கர்
   நேர்அணி யிட்டு வளைந்த
   கடகம் நெளிந்தது; சூர்ப்
   பேர்அணி கெட்டது, தேவேந்த்ர
   லோகம் பிழைத்ததுவே.

(பூமியாகிய தேரை அலங்காரஞ் செய்து திரிபுரங்களை எரித்த சிவபெருமானுடைய மகனாகிய முருகனது செங்கையிலுள்ள வேலின் கூரானது, நெருங்கிச் செல்லச் செல்ல, கிரௌஞ்ச மலை அணுவாகிப் பொடியாகிக் குலைய, அசுரர்கள் நேரே அணி வகுத்துச் சூழ்ந்த படை நிலை குலைந்தது; சூரனுடைய பெரிய வியூகம் கெட்டது; தேவேந்திரனுக்குரிய உலகம் உய்ந்தது.

அணியிட்டு-அலங்காரம் செய்து. கூர்-கூரிய துணி. அணியிட்டு-அண்ணியிட்டு; நெருங்கி; நெருங்க எனக் கொள்க; எச்சத்திரிபு. கிரௌஞ்சம் அணுவாகிக் குலைந்தது. அரக்கர் என்றது இங்கே அசுரரைச் சுட்டியது. நேர்-நேராக. அணியிட்டு-அணியாக வகுத்து. கடகம்-படை. பேர் அணி-பெரிய படை வகுப்பு.)