கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/உலகம் போற்றும் ‘ஜீன்’ தத்துவ அற்புதங்கள்
4. உலகம் போற்றும் ‘ஜீன்’ தத்துவ அற்புதங்கள்
பேரறிவாளன் கன்பூசியஸின் ஞான போதனைகளில் மிகச் சிறந்தது எது என்று இன்றுவரை உலகம் போற்றிக் கொண்டிருக்கும் தத்துவங்களில் தலை சிறந்தது 'ஜீன்’ தத்துவ அற்புதங்களாகும்!
'ஜீன்' என்றால் என்ன பொருள்? அதாவது மனித உள்ளம் படைத்திருத்தல், பிறன் மீது அன்பு செலுத்துதல் என்பதே அதன் உட்பொருளாகும்!
கன்பூசியஸ், சீன நாடெங்கும் பேசி வலம் வந்த அற நெறிகள், அரசியல் நெறிகள், சமுதாய உணர்வுகள், லட்சியக் கருத்துக்களில்; எல்லாவற்றுக்கும் மேலாக, தலைசிறந்த மூலாதாரமான கொள்கையாக விளங்கி நிற்பது இந்த ஜீன் கொள்கைதான்! இதிலே இருந்துதான் அவரது மற்ற கொள்கைள் எல்லாம் தோன்றின என்றும் கூடச் சொல்லலாம்!
மனிதத் தன்மையை வளப்படுத்தி, மனித இயல்புகளை வளர்த்து, தனது குணவடிவத்தை உயர்வுபடுத்தி, மனிதனது உரிமைகளை நிலைநாட்டுவது இந்த 'ஜீன்' தத்துவங்களே ஆகும்! இந்த தத்துவத்தின் பரிபூரண பண்பையே எல்லா பண்புகளுக்கும், மனித உறவுகளுக்கும் அடிப்படையாக அவர் அமைத்துள்ளார்;
ஜீன் கொள்கையின் பெற்றோர் பக்தி, சகோதர அன்பு என்னும் கன்பூசியசின் இரு கருத்துக்களையும் ஆராய்ந்தால், அவற்றின் விரிவுக் கருத்துக்கள் முழுமையாக விளங்கும்.
வீட்டில் இருக்கும்போது ஒரு வாலிபன் பெற்றோர் பக்தியோடும், வெளியே பழகும்போது அதே வாலிபன் மற்றவர்களிடம் உடன்பிறந்த சகோதரப் பக்தியோடும் பழகப் பயில வேண்டும்.
மனப்பூர்வமாக அவன் எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்று கூறிய கன்பூசியஸ்; இந்த இரண்டு பண்புகளையும், மனித உணர்வுகளையும் சமுதாய அமைப்பிற்கு அடிப்படையாக இருக்கவேண்டும் என்று விளக்குகிறார்.
அதே சமயத்தில் அந்த வாலிபனுக்கு விசுவாசமும், பரோபகாரமும் தேவை என்கிறார். விசுவாசம் அவனுக்கு பிறரிடம் முழுமனதுடனான நேர்மையினையும், பரோபகாரம் வெளியுலகில் மற்றவர்களை நன்கு புரிந்து கொள்ளும் மனோநிலையினையும் அவனுக்கு உருவாக்கும் என்கிறார்.
"ஜீன் வழி மனிதன் தன்னை வளர்த்துக் கொள்ளும்போது, அவன் மற்றவர்களையும் வளர்க்கும் மனநிலையை பெறுவான் என்றும், அந்தக் கொள்கையுடையவன் நல்ல குடிமகனாகவும், நல்ல ஆட்சியாளனாகவும், நல்ல தந்தையாகவும், நல்ல தாயாகவும், நல்ல பிள்ளையாகவும், நல்ல, கணவனாகவும் நடந்த கொள்ளும் நல்ல பழக்கங்களையும் பெறுவான் என்று கூறுகிறார்.
இப்படிப்படிப்பட்ட ஜீன் ஒழுக்கங்கள், சீனர்களின் பண்பாட்டை வளர்ப்பதற்கும், தேசிய வாழ்க்கைக்கும், மூலாம்சமாக மாறின. நீதி நேர்மை, பொறுமை, மற்றவர் களோடு பழகும் உறவுமுறை, அன்பு, ஆகியவற்றை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்ளவும் உதவுகின்ற மனநிலைகளை வழங்குகின்றன. இதனால், இந்த ஜீன் தத்துவத்தின் போதனைகள் உலகெங்கும் தலைதூக்கி இன்று மக்களின் போற்றுதலைப் பெற்றுள்ளன எனலாம்.
கன்பூசிஸ் இந்த தத்துவங்களின் அருமையை நன்கு புரிந்துகொண்டதால்தான், இவற்றைத் திரும்பத் திரும்ப உலகுக்கு உபதேசம் செய்தார். ஒருவன் தன்னுடைய சுற்றுச் சார்பு நிலைகளுக்கு உகந்தவாறு அவன் தனது செயல்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வலியுறுத்துகிறார்.
மனிதன் உயிரிகள் மீது அன்பு காட்டுவது மனிதப் பண்பு; ஆனால், மனிதர்களைப் புரிந்து கொள்வது அறிவியல் என்றும் தீர்க்க தரிசனமாகக் கூறுகிறார்.
மனிதனுக்கும்-ஓர் அரசுக்கும், இவை அனைத்திற்கும் மேலே ஒரு சக்தி உள்ளது. அதுதான் சுவர்க்கம் அல்லது வானகம் என்றும் சொல்கிறார்.
வானகம் என்று அவர் கூறுகிறாரே, அது என்ன என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு அவரே பதிலளிக்கும்போது; 'வானகம் என்பது உன்னதமான ஓர் ஆத்மீக இயக்கம். அது இயற்கையின் சக்தியே தவிர, இறைவன் எனப்படும் ஓர் ஆளல்ல என்றும் அதைத்தெளிவுபடுத்தி அடையாளம் காட்டுகின்றார்.
'வானகம்', ஒளியை வழங்குகிறது. அதனைப்போல ஒளியூட்டும் லட்சியங்கள்-நம்மை, நமது மனத்தைப் புதுப்பிக்கவும், மனித சமுதாயம் முழுவதும் அந்த ஒளியால் சிறப்பான நன்மைகளைப் பெறவும் உதவுகின்றது என்றும் இந்த ஞானி அறிவிக்கின்றார்.
இவ்வாறு, வானகம் தரும் ஒளியை இயற்கை நியதி என்கிறோம். இந்த இயற்கையின் வழிதான் நமது கடமையின் வழியாகும் என்று கன்பூசியஸ் விளக்குகின்ற உண்மை, மனித இன ஒழுக்கத்திற்குரிய மூலஸ்தானம் என்றும் குறிப்பிடுகிறார்.
நமது கடமை என்பது, வெளியிலே இருந்து வரும் கட்டளைகளோடோ, தடைகளோடோ சம்பந்தப்பட்டவை அல்ல. நமது உயிர்க்குள் இருக்கும் இயற்கையான பகுத்தறிவைப் பிறவியிலேயே நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அந்தத் தெய்வீக ஒளியை வளர்ப்பதும், நாம் நமது ஒழுங்கு கெட்டுப் போகாமல், நம்மைச் சுற்றியுள்ள இயற்கையின் தன்மைகளோடு இணைந்து, இசைத்து இயங்கும் தன்மையை அடைவதும் மனிதர்களுடைய கடமையாகும்.
'பரிபூரணம் என்பது வானகத்தின் சட்டம். பரிபூரணம் அடைதல் என்பது மானிடத்தின் சட்டம்! இவ்வாறு, மனித நடத்தைக்கும், மாபெரும் உலகத் திட்டத்திற்கும் ஓர் இணைப்பை ஏற்படுத்தியுள்னார்.
பொது உலகப் போக்கோடு மனிதனின் செயல்களும், நடத்தைகளும் ஒன்றுபட்டிருக்க வேண்டும். ஒன்றுபட்டிருக்க முடியும். அப்போதுதான், மனித ஒழுக்கம் உண்மையான, கண்கண்ட நடத்தையாக இருக்கும் என்கிறார்.
தமது தெய்வீக ஒளி பொருளாதார உணர்ச்சி என்ற இருளில் மூழ்கிவிட்டது. ஆனால், அந்த ஒளி மங்கி விட்டதே தவிர முழுவதுமாக அணைந்து விடவில்லை; என்றும் விளக்கமளித்துள்ளார். உலகப் பொது ஒழுக்கமும் உலக ஒழுக்க அறிவும் கன்பூசியஸ் சிந்தனையில் நிலையாக இடம் பெற்றுள்ளதை இங்கே பார்க்கின்றோம்.
இயற்கையோடு மனிதன் ஒன்றி வாழவேண்டும். பருவகாலச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அவன் தனது செயல்களையும், அதற்குரிய போக்குகளையும் அமைத்துக் கொண்டு, தெய்வீகச் சட்டத்தின் ஒளிக்கு ஏற்றவாறு உண்மையான பாதையைக் கண்டு நடக்க வேண்டும் என்பதே அவரது எண்ணமாகும்.
மேலே உள்ள வானகம் என்பது இயற்கையின் சக்தி; ஒழுக்கச் சக்தி, இரண்டும் இணைந்த ஒரு சக்தியாகும். அந்தச் சக்திகளிடம் இருந்துதான் மனிதனுக்குரிய நன்மையும்-தீமையும் வருகின்றன.
மனிதன் உயிர் வாழும்போது, இயற்கையும் வாழ்க்கையையும் இரண்டும் இணைந்ததாகும். அவை ஒன்றில் ஒன்று இணைந்தவை. எனவே, மனிதனையும், வானகத்தையும் ஒன்றுபடுத்தும் இந்த லட்சியம் கன்பூசியசின் மகத்தான் ஒரு சிந்தனையாகும்.
ஒரு சத்திய நெறியின் கட்டளைக்குள் மனித ஒழுக்கங்களை ஒழுங்கு படுத்துவது ஒரே அறநெறியின் கட்டளைக்குள் மனிதர்கள் அனைவரையும் பொறுப்புள்ளவர்கள் ஆக்குவது இந்தக் கன்பூசியசின் கொள்கைகளோடு தற்காலச் சமுதாயத் திட்டக் கொள்கைகளையும் ஒப்பிட்டு; பார்க்க வேண்டியது ஒரு அவசியமாகும்.
எல்லா மனிதர்களையும் வானகத்தின் முன்பு; பொது மனித சமுதாயக் கூட்டமாகக் கொண்டு வந்து கன்பூசியஸ் நிறுத்துகிறார். மக்களின் தன்மைகளையும், சக்திகளையும் பக்குவமான ஒரு திசையை நோக்கிப் பண்படுத்தி வளர்ப்பதற்கான வழிகளை அவர் வகுத்துள்ளார். முறையான ஓர் உலக ஒழுங்கிற்கு மனிதர்களைப் பாதுகாவலராக்கி, மக்கள் கடமைகளையும், பொறுப்புக்களையும் அலர் கவனப்படுத்துகிறார்,
இயற்கையைப் பற்றிய இன்றைய மேனாட்டுச் சிந்தனையாளர்களின் கருத்துக்கும், கன்பூசியசின் சிந்தனைக்கும் இடையே பெருத்த ஒரு வித்தியாசம் இருப்பதை நாம் காணலாம்.
வானகத்து வின்மீன்கள், கோள்கள் போன்ற இயற்கையின் அற்புதங்களைக் கண்டு வியக்கும் மேனாட்டுத்தத்துவ ஞானிகள் கூட, நமக்கு மேலே உள்ள வானக சக்திக்கும், மனிதர்களுக்குள்ளே உள்ள ஒழுக்க நெறிகளுக்கும் இன்றுவரை சம்பந்தப்படுத்தியே பார்க்கவில்லை.
வானகத்துச் சக்தியும், மனித ஒழுக்க நெறிகளின் சக்தியும் ஒன்றோடு ஒன்று இசைந்து போகும் நோக்கு உள்ளவை என்று கன்பூசியஸ் சிந்தனை செய்து கூறி உள்ளார்.
'மனித தத்துவமும், வானகமும் ஒன்று சேர்த்துதான், இந்த உலகத்தை இயக்குகின்றது. இதில் மனிதன் ஒரு முக்கியமான உறுப்பினன் ஆவான். இந்த இருசக்திகளும் இணைந்து இயங்க வேண்டியவை. இந்த இணைப்பில் மனிததத்துவம்தான், சகலவிதமான இயற்கை அழிவுகளுக்கும் காரணமாக இருக்கின்றது. அதனால், இயற்கை நியதியை ஒரு நிலையான, சீரான, ஒழுங்கு நிலையில் காத்து வருவது மனிதனின் கடமையாகின்றது என்கிறார் கன்பூசியஸ்:
ஒழுக்க ரீதியாகவும், மண், விண், காற்று, வான், நீர் என்ற ஐம்பூதங்கள் இயக்கத்தின் படியும், ஒரு விளைவை உண்டாக்கிட வானகத்திற்கு வழிவகைகள் உண்டு. உலக இயக்கத்தின் இயல்பான இந்த அறநெறிகள் வெளிப்படையாக, உடனே தெரியாமல் இருக்கலாம்.
ஆனால், ஒவ்வொன்றின் வீழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் உரிய மூலாம்சங்கள், அதனதன் உள்ளே அடங்கி இருக்கின்றன என்பதுதான் உண்மை.
எடுத்துக்காட்டாக, மோசமான ஓர் அரசாங்கம், அதன் வீழ்ச்சிக்குரிய கிருமிகளைத் தன்னிடமே சுமந்து கொண்டிருக்கின்றது. அது போலவே, ஒரு நல்ல அரசாங்கம் வளர்ந்தோங்குகின்றது, என்பதும் உலக வரலாறு நிரூபித்துக் காட்டிய உண்மைகளாகும்.
வானகத்தின் சட்டங்களுக்கும், பூமியின் நீதிக்கும் ஏற்ப வீழ்ச்சியும், எழுச்சியும் உலக வாழ்வில் அவ்வப்போது தோன்றுகின்றன.
தவறுகள் ஏற்படும் போது உலகியல் திட்டமும் தடம் புரளும்; வானகத்து நெறிக்கு மாறாக உலகில் அநீதிகள் ஏற்படும்போது, யுத்தங்களும், பூகம்பங்களும், வெள்ளமும் கொந்தளிப்பும், கொள்ளைநோய் போன்ற பேரழிவுகளும் சீரழிவுகளும் ஏற்படும் என்கிறார்.
எனவே, இயற்கை நெறியும், மனிதநெறியும் வெவ்வேறானவை அல்ல; ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டவை தான். இந்தத் தத்துவம் மனித சிந்தனைக்கு இன்றும் அவசியமானதாகவே இருக்கிறது.
ஒரு தனி ஜடப்பொருளின் இயக்கமாக இயற்கையைக் கருதும் இன்றைய விஞ்ஞானச் சிந்தனை, இயற்கையை மீறும்படியான விஞ்ஞான அறிவை மனிதனிடம் வளர்ந்து விடுகின்றதே தவிர, இயற்கை நிகழ்ச்சிகளின் போக்கையும், உலகியல் சம்பவங்களையும் பொருளற்றதாக்கி, மனிதனை அவற்றிற்கு சக்தியற்றவனாக்கி வெறும் ஜடப் பொருளாக்கி விடுகின்றது.
அதற்கு மாறாக, மனிதர்களாகிய நம்முடைய செயல்கள் அனைத்திற்கும்-உலக நிகழ்ச்சிகளுக்கும் சம்பந்தம் உன்டு என்று கூறுகின்ற கன்பூசியஸ் தத்துவம், அதீதமான ஓர் ஆத்மீகச் சக்தியையும் நமக்கு வழங்குகின்றது.
இயற்கையையும் தம் வசப்படுத்தக் கூடிய ஓர் ஆத்மீக சக்தி நம்மிடம் இருக்கின்றது என்ற உணர்வைத் தூண்டி, மனித சக்தியை மிக மிக உன்னத நிலைக்கு உயர்த்தி விடுகின்றது.
வானகத்தின் விதிகளில் இருந்து மனிதனில் விதி பிரிந்து நிற்க முடியாது. இந்த நியதிக்கு மாறாகச் செல்லும் போதுதான், உலகத்திற்குப் பேரழிவும், பெருந் துன்பங்களும் உண்டாகின்றன.
பயங்கரச் சம்பவங்கள், துயரங்கள் துன்பங்கள், துர்ப் பாக்கியங்கள் எல்லாம் துன்புறும் உலகின் எச்சரிக்கைக் குரல்களே ஆகும். ஒழுங்கை மீட்க வேண்டும் என்றும், சரியான பாதைக்குத் திரும்பிட வேண்டுமென்றும், மனிதனை அவை அறைகூவி அழைக்கின்றன.
மக்களின் பொதுநல வழியில் எதுவும் தடையாக நிற்காமல் காப்பதுதான் ஞானமகான் கன்பூசியசின் தத்துவக் கவசம். இந்த வகையில் பார்த்தால், அவர் மக்களின் அன்பராக, ஒரு புதுமையான ஜனநாயகவாதியாகவும் திகழ்கின்றார்.
உலகம் முழுதும் உள்ள மனிதன், சகமனிதன் ஆகியோர் பெறவேண்டிய உறவு பற்றிய இவருடைய ஞானம், அன்பு வழியே, அறநெறிகள் படியே உலக மனித சமுதாயம் அமைய வேண்டும், என்ற கன்பூசியஸ் கருத்தும், மனிதனும் இயற்கையும் ஒன்றுபட்டு இயங்க வேண்டும் என்ற அந்த மகானின் சிந்தனையும் அரசியல் தத்துவத்திற்குக் கிடைத்த பெரும் பேறுகளாகும்.