சீனத்தின் குரல்/தேவை

விக்கிமூலம் இலிருந்து

தேவை

இந்த கொந்தளிப்பை யடக்க ஒரு சமூக சீர்த்திருத்தவாதி, புரட்சி மனப்பான்மை கொண்டோனான பொதுநலவாதி ஒருவன் தேவைப்பட்டான். அதுவரை சீனம் சென்றுகொண்டிருந்த கரடுமுரடான பாதையை செப்பனிட ஒரு வீரன் தேவைப்பட்டான்.. இடிந்து விழுந்திருக்கும் சமூக கோபுரத்தைப் புதுப்பிக்க ஒரு நல்ல் கை தேர்ந்த கை வண்ணத்தான் தேவைப்பட்டான். பெண்களை, ஆண்களும், ஆண்களை பெண்களும் மாறி மாறி அடிமைப்படுத்திக் கொண்டிருந்த கொடுமைக்கு விடை கொடுத்தனுப்பத் தகுந்ததோர் தீரன் தேவைப்பட்டான். மடமையில், எழுத ஒண்ணாத கொடுமையில், சகிக்க முடியாத அவமான சாகரத்தின் அடிவார்த்தை நோக்கிப்போய்க் கொண்டிருக்கும் அநியாயத்தைத் தடுக்க ஒரு அறிஞன் தேவைப்பட்டான். வாள் எடுக்கா முன், போர்முகங் காணா முன், புதுயுகங் காட்ட வல்லதோர் புரட்சிக்காரன் தேவைப்பட்டான், தாயகம் போய்க்கொண்டிருக்கும் தவறான பாதையை மூடி தக்கதோர் பாதையை காட்டும் கர்ம வீரன் ஒருவன் தேவைப்பட்டான். பொதுப்பணியை பொதுப்பணியாகவே மதிக்கும் ஒரு பொதுநலவாதி தேவைப்பட்டான்.

இவ்வளவு காலமாக வீரமனப்பான்மையும் தேசாபிமானமும் தோன்றாதிருந்ததற்குக் காரணம், அவர்கள் அதுவரை அனுசரித்து வந்த மதங்களான, டாய்ஸ் மதம், கன்பூஷியஸ் மதம், புத்த மதம் ஆகிய மூன்றும், சாந்தம், சமாதானம், அமைதி, கொல்லாமை ஆகியவைகளையே போதித்து வந்தன. இவைகள் சமூக அமைப்பில் தனி மனிதர்கள் அனுசரிக்க வேண்டிய முறைகள் ஆனால் வெளி நாட்டாராதிக்கத்தைத் தொலைக்க, சுதந்திர ஆர்வம் கொள்ள இவைகள் பயன்படாதே, ஆகவே இவைகளுக்கு மேலாக அரசியல் உணர்ச்சியையும் நாட்டுபற்றையும், தனியாக ஊட்டவேண்டிய நிலை ஏற்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=சீனத்தின்_குரல்/தேவை&oldid=1073171" இலிருந்து மீள்விக்கப்பட்டது