உள்ளடக்கத்துக்குச் செல்

கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1/பேய் விளையாட்டு

விக்கிமூலம் இலிருந்து

பேய் விளையாட்டு

1

ம்முடைய அநுபவத்தை, "இறைவன் திருவருளால் அவனை மெய்யன்புடன் மெல்ல மெல்ல உள்ளினேன். அதனால் தனிப் பரமானந்தம் அரும்பியது. அதன்பின் உலக இன்பங்கள் வெறுத்துப் போயின" என்று அருணகிரியார் சொன்னார். அப்போது அவர் இறைவனுக்கு அருகில் நின்று பெருமிதத்தோடு பேசினார். அவர் கருணை உடையவராதலினால், அப்படியே இருப்பதில்லை. நம் நிலையிலிருந்து இறைவனுடைய அணிமையை அடைந்தவர் அவர். நம் துன்பநிலை அவருக்கு நன்றாகத் தெரியும். மேலே இருந்தபடி நம்மை பார்க்கிறார். 'இவர்களை மறக்கக் கூடாது' என்ற அருள் உள்ளத்தால் மறுபடியும் நம்மிடம் ஓடி வருகிறார். நம்மோடு ஒருவராக நின்று முருகனிடம் விண்ணப்பம் செய்து கொள்கிறார். நமக்காகவே அப்படிச் செய்கிறார். தாம் ஏதோ மயக்கம் அடைந்தது போலவும், அதைப் போக்கி அருள் செய்ய வேண்டும் என்பதற்காகவும் அவர் பாடுகிறார்.

சளத்தில் பிணிபட்டு அசட்டுக் கிரியைக்குள்
தவிக்கும்என்றன்
உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பாய்; அவுணர்
உரத்துதிரக்
குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக்
குடித்துவெற்றிக்
களத்தில் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட
காவலனே.

மயக்கம்

“என் உள்ளத்தில் உள்ள ப்ரமத்தைத் தவிர்க்க வேண்டும்" என்பது அவர் வேண்டுகோள். ப்ரமம் என்பது மயக்கம்.

"அமரும் பதிகேள் அகமாம் எனும்இப்
பிமரம் கெடமெய்ப் பொருள்பே சியவா"

என்று கந்தர் அநுபூதியிலும் இந்தப் பிரமத்தைச் சொல்கிறார். பிமரம் என்று எழுத்து மாற்றி அங்கே சொல்லியிருக்கிறார்.

மயக்கம் என்று எதைச் சொல்கிறார்? தெளிவு இல்லாமல் இருப்பதே மயக்கம். தெளிவு என்பது இன்ன பொருள் இத்தகையது என்று உணர்ந்துகொள்ளும் மனநிலை. நாம் தெளிவுடன் இருக்கிறோமா? உண்ணும் உணவைச் சரியானபடி உண்ணுகிறோம். ரூபாய் அணா பைசாவைச் சரியானபடி எண்ணுகிறோம்; நம்முடைய உறவினர்களையும் நண்பர்களையும் சரியானபடி தெரிந்து கொள்கிறோம்; காதினால் கேட்கும் வார்த்தைகளுக்குச் சரியானபடி பொருள் செய்து கொள்கிறோம். ஆகையால் தெளிவான நிலையில்தான் இருக்கிறோம். என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அந்த எண்ணம் உண்மை அன்று. நாம் காணுகிற அனைத்தும் உண்மை அல்ல. வெவ்வெறு வகையான பொருள்களை நாம் காண்கிறோம். விருப்பு வெறுப்புடன் பார்க்கிறோம். நான் என்ற நினைவு நீங்காமல் இருக்க, அந்த நினைவோடு பார்க்கிறோம். அந்த அந்தப் பொருளை அதன் அதன் இடத்திலேயே வைத்துப் பார்க்காமல் நம்மோடு ஒட்டிப் பார்க்கிறோம். நம் பார்வையும் கருத்தும் நம்மிடத்திலிருந்தே தொடங்குகின்றன. ஆதலால் பொருள்களின் இயல்பை உள்ளவாறே தெரிந்து கொள்ள முடியவில்லை.

பல நூல்களைப் படித்தும் நமக்கு முழுத் தெளிவு ஏற்பட்டதாகச் சொல்ல இயலாது. இறந்த பிறகு உயிர் என்ன ஆகிறது? நமக்குத் தெளிவாகத் தெரியாது. நமக்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு? உடம்புக்குள் உயிர் ஏன் வந்தது? இனி எத்தனை எத்தனை உடம்புக்குள் புகப் போகிறது? ஏன் இந்த நிலை வர வேண்டும்? - ஒன்றும் நமக்குத் தெளிவாகத் தெரியாது.

நம்முடைய உள்ளத்தில் என்ன என்ன எண்ணங்கள் பதுங்கியிருக்கின்றன. நம்முடன் பழகுகிறவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? - ஒன்றும் நமக்குத் தெளிவாகத் தெரியாது.

இந்தத் தெளிவற்ற நிலையில் நாம் காண்கிற பொருள்கள் பலவாக இருக்கின்றன: மெய்யாகத் தோன்றுகின்றன. ஆனால் உண்மையான பொருள் இன்னதென்று தெரியாமல் திண்டாடுகிறோம். பெரியவர்கள் இறைவனை மெய்ப்பொருள் என்றும் பரம்பொருள் என்றும் சொல்கிறார்கள். அதை நாம் கேட்கிறோம்; ஆனால் அதை அநுபவத்தில் உணர முடிவதில்லை. பெரியவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மறுத்துப் பேசாமல் இருக்கிறோம்.

நமக்கு எல்லாமே பொருளாக இருக்கின்றன. சோறு ஒரு பொருள்; குழம்பு ஒரு பொருள்; அணு ஒரு பொருள்; அணு குண்டும் பொருள்தான். தகரம் ஒரு பொருள்; தங்கமும் ஒரு பொருள். காற்றும் நீரும் நெருப்பும் பொருள்களே. மனிதன், குழந்தை, யானை எல்லாம் பொருள்களே. புழு, பூனை, புலி யாவும் பொருள்களே. இத்தனை பொருள்களையும் உணர்ந்தும் நாம் மெய்ப்பொருளை உணரவில்லை. அந்த மெய்ப் பொருள் எங்கே இருக்கிறது?

பெரியவர்கள் இத்தனை பொருளாகவும் அந்த மெய்ப் பொருள் இருக்கிறதென்று சொல்கிறார்கள். பலவாகக் காண்பது உண்மை அன்று என்று கூறுகிறார்கள். "ஒன்றாகக் காண்பதே காட்சி" என்று உபதேசம் செய்கிறார்கள். "மெய்ப்பொருள் நம்மை விட்டு, எங்கோ வெகு தூரத்தில் இருப்பது அன்று; அது நம்முடன் இடைவிடாமல் இருக்கிறது" என்று அவர்கள் சொல்வது நமக்குத் தெளிவுபடுவதில்லை. "பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே" என்று தாயுமானவர் சொல்கிறார். ஒரு நீக்கமறப் பார்க்குமிடம் எங்கும் நாம் காணும் பொருள்கள் மரம், மட்டை, மனிதன், வீடு, காடு, நாய், நரி என்பவைகளே. அவரோ பரிபூரண ஆனந்த மயமான பொருள் என்று சொல்கிறார். அவர் காண்பது உண்மையா? நாம் காண்பது உண்மையா?

நாம் காண்பது உண்மையானால் நமக்கு மனநிறைவு உண்டாக வேண்டும்; இன்பம் உண்டாக வேண்டும். நாமோ பல வகையில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதனால் நாம் காண்பதுவே சரி என்று சொல்ல இயலவில்லை.

திருவள்ளுவர் இதை விளக்குகிறார். நாம் படும் துன்பங்களுக்கெல்லாம் மூலம் பிறப்பு. பிறவி என்பது பெரிய துன்பம்;

"அமரும் பதிகேள் அகமாம் எனும்இப்
பிமரம் கெடமெய்ப் பொருள்பே சியவா"

என்று கந்தர் அநுபூதியிலும் இந்தப் பிரமத்தைச் சொல்கிறார். பிமரம் என்று எழுத்து மாற்றி அங்கே சொல்லியிருக்கிறார்.

மயக்கம் என்று எதைச் சொல்கிறார்? தெளிவு இல்லாமல் இருப்பதே மயக்கம். தெளிவு என்பது இன்ன பொருள் இத்தகையது என்று உணர்ந்துகொள்ளும் மனநிலை. நாம் தெளிவுடன் இருக்கிறோமா? உண்ணும் உணவைச் சரியானபடி உண்ணுகிறோம். ரூபாய் அணா பைசாவைச் சரியானபடி எண்ணுகிறோம்; நம்முடைய உறவினர்களையும் நண்பர்களையும் சரியானபடி தெரிந்து கொள்கிறோம்; காதினால் கேட்கும் வார்த்தைகளுக்குச் சரியானபடி பொருள் செய்து கொள்கிறோம். ஆகையால் தெளிவான நிலையில்தான் இருக்கிறோம் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அந்த எண்ணம் உண்மை அன்று. நாம் காணுகிற அனைத்தும் உண்மை அல்ல. வெவ்வெறு வகையான பொருள்களை நாம் காண்கிறோம். விருப்பு வெறுப்புடன் பார்க்கிறோம். நான் என்ற நினைவு நீங்காமல் இருக்க, அந்த நினைவோடு பார்க்கிறோம். அந்த அந்தப் பொருளை அதன் அதன் இடத்திலேயே வைத்துப் பார்க்காமல் நம்மோடு ஒட்டிப் பார்க்கிறோம். நம் பார்வையும் கருத்தும் நம்மிடத்திலிருந்தே தொடங்குகின்றன. ஆதலால் பொருள்களின் இயல்பை உள்ளவாறே தெரிந்து கொள்ள முடியவில்லை.

பல நூல்களைப் படித்தும் நமக்கு முழுத் தெளிவு ஏற்பட்டதாகச் சொல்ல இயலாது. இறந்த பிறகு உயிர் என்ன ஆகிறது? நமக்குத் தெளிவாகத் தெரியாது. நமக்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு? உடம்புக்குள் உயிர் ஏன் வந்தது? இனி எத்தனை எத்தனை உடம்புக்குள் புகப் போகிறது? ஏன் இந்த நிலை வர வேண்டும்? ஒன்றும் நமக்குத் தெளிவாகத் தெரியாது.

நம்முடைய உள்ளத்தில் என்ன என்ன எண்ணங்கள் பதுங்கியிருக்கின்றன. நம்முடன் பழகுகிறவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? ஒன்றும் நமக்குத் தெளிவாகத் தெரியாது.

இந்தத் தெளிவற்ற நிலையில் நாம் காண்கிற பொருள்கள் பலவாக இருக்கின்றன; மெய்யாகத் தோன்றுகின்றன. ஆனால் உண்மையான பொருள் இன்னதென்று தெரியாமல் திண்டாடுகிறோம். பெரியவர்கள் இறைவனை மெய்ப்பொருள் என்றும் பரம்பொருள் என்றும் சொல்கிறார்கள். அதை நாம் கேட்கிறோம்; ஆனால் அதை அநுபவத்தில் உணர முடிவதில்லை. பெரியவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மறுத்துப் பேசாமல் இருக்கிறோம்.

நமக்கு எல்லாமே பொருளாக இருக்கின்றன. சோறு ஒரு பொருள்; குழம்பு ஒரு பொருள்; அணு ஒரு பொருள்; அணு குண்டும் பொருள்தான். தகரம் ஒரு பொருள்; தங்கமும் ஒரு பொருள். காற்றும் நீரும் நெருப்பும் பொருள்களே. மனிதன், குழந்தை, யானை எல்லாம் பொருள்களே. புழு, பூனை, புலி யாவும் பொருள்களே. இத்தனை பொருள்களையும் உணர்ந்தும் நாம் மெய்ப்பொருளை உணரவில்லை. அந்த மெய்ப் பொருள் எங்கே இருக்கிறது?

பெரியவர்கள் இத்தனை பொருளாகவும் அந்த மெய்ப் பொருள் இருக்கிறதென்று சொல்கிறார்கள். பலவாகக் காண்பது உண்மை அன்று என்று கூறுகிறார்கள். "ஒன்றாகக் காண்பதே காட்சி" என்று உபதேசம் செய்கிறார்கள். "மெய்ப்பொருள் நம்மை விட்டு, எங்கோ வெகு தூரத்தில் இருப்பது அன்று; அது நம்முடன் இடைவிடாமல் இருக்கிறது" என்று அவர்கள் சொல்வது நமக்குத் தெளிவுபடுவதில்லை. "பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே" என்று தாயுமானவர் சொல்கிறார். ஒரு நீக்கமறப் பார்க்குமிடம் எங்கும் நாம் காணும் பொருள்கள் மரம், மட்டை, மனிதன், வீடு, காடு, நாய், நரி என்பவைகளே. அவரோ பரிபூரண ஆனந்த மயமான பொருள் என்று சொல்கிறார். அவர் காண்பது உண்மையா? நாம் காண்பது உண்மையா?

நாம் காண்பது உண்மையானால் நமக்கு மனநிறைவு உண்டாக வேண்டும்; இன்பம் உண்டாக வேண்டும். நாமோ பல வகையில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதனால் நாம் காண்பதுவே சரி என்று சொல்ல இயலவில்லை.

திருவள்ளுவர் இதை விளக்குகிறார். நாம் படும் துன்பங்களுக்கெல்லாம் மூலம் பிறப்பு. பிறவி என்பது பெரிய துன்பம்; பல துன்பங்களை உண்டாக்கும் தாய் அது. அது நமக்கு எப்படி உண்டாகிறது? மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்யாகக் காண்பதனால்தான் துன்பம் நிறைந்த பிறப்பு உண்டாகிறது’ என்று வள்ளுவர் சொல்கிறார்.

"பொருள்அல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு"

என்பது குறள்.

மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்யாக உணர்வதுதான் மருள்: மயக்கம். அதையே அருணகிரியார் ப்ரமம் என்று சொல்கிறார். அதுதான் பிறப்புக்கு ஆதாரம். பிறப்பு மாணாதது; சிறப்பு இல்லாதது. துன்பம் தருவதனால் மாணாததாயிற்று.

இந்த மயக்கமாகிய மருள் இறைவன் அருளால் நீங்கும். மருள், ஒன்றை வேறு ஒன்றாகவும் பலவாகவும் காணும்படி செய்கின்றது. அருளோ யாவற்றையும் ஒன்றாகக் காணச் செய்கின்றது. இருட்டிலே தெளிவு இராது. கட்டை மனிதன் போலத் தோன்றும். ஒன்றும் இல்லாத இடத்தில் யாரோ நடமாடுவது போல இருக்கும். இந்த மருள் நீங்கி ஒளி உண்டானால் உள்ளது உள்ளபடியே தோன்றும். அருளால் ஒளி உண்டாக வேண்டும்.

"என் உள்ளத்தில் இருக்கிற இந்த மருளை நீ நீக்கியருள வேண்டும்" என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார்.

இந்தப் பிரமத்தால் உண்டாகும் துன்பங்களையும் அவர் சொல்கிறார்.

வஞ்சனை

சளத்திற் பிணிபட்டு அசட்டுக் கிரியைக்குள்
தவிக்கும்.

உள்ளத்தில் உள்ள மயக்கத்தால் உண்டாகும் விளைவுகள் பலவானாலும் இங்கே சுருக்கி இரண்டாகச் சொல்கிறார். சளத்தில் பிணிபட்டிருப்பது ஒன்று; அந்தப் பிணிப்பினால் அசட்டுக் கிரியைக்குள் தவிப்பது ஒன்று. இவை ஒன்றுக்கு ஒன்று காரணமாக நிற்பவை. ப்ரமத்தால் சளம் உண்டாகிறது; சளத்தால் அசட்டுக் கிரியைகள் உண்டாகின்றன. சளம்-வஞ்சனை. ப்ரமம் சளத்தை உண்டாக்க அதில் பிணிபட்டுக் கிடக்கிறோம். அதன் விளைவாக அசட்டுச் செயல்களைச் செய்கிறோம்; அதனால் தவிக்கிறோம். இந்த விளைவுகளை இனி விரிவாகப் பார்க்கலாம்.

சளமாகிய வஞ்சனையில் கட்டுப்பட்டு வாழ்கிறோம். அதற்குக் காரணம் முன் சொன்ன ப்ரமம்; அதுவே மயக்கம். அதையே அறியாமை என்றும் அவித்தை என்றும் அஞ்ஞானம் என்றும் கூறுவாாகள.

நாம் எத்தகைய வஞ்சனைக்குள் கட்டுப்பட்டிருக்கிறோம்? மனத்தில் ஒன்றும் வாக்கில் ஒன்றும் பேசுவது வஞ்சனைப் பேச்சு. மனத்தில் ஒன்றும் செயலில் வேறு ஒன்றும் செய்வது வஞ்சனைச் செயல். உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதாகிய வஞ்சனையைப் பிறரிடம் நாம் காட்டுகிறோம். நாம் சொல்வது வஞ்சனைப் பேச்சு என்று பிறர் அறிவதில்லை. ஆனால் நமக்கு வேண்டிய ஒன்றை நாம் எண்ணும்போது அப்படியே செய்யாமல் நம்மை நாமே வஞ்சித்துக் கொள்கிறோம். நமக்கு நாமே வஞ்சனை செய்து கொள்வதனால் நமக்குக் கவலைகளும் அச்சமும் உண்டாகின்றன.

'தன்நெஞ் சறிவது பொய்யற்க; பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்"

என்கிறார் வள்ளுவர்.

பொய்யை பொய்யாக உணர்வது மருள் அல்லது ப்ரமம். அதிலிருந்து விளைவது உள்ளும் புறமும் ஒவ்வாமல் இருக்கும் பொய். மூலப் பொய்யுணர்வுக்கு ப்ரமம் என்று பெயர். அதிலிருந்து விளையும் பொய்க்கு வஞ்சனை என்று பெயர்.

பிறரை வஞ்சிக்கும் குணம் தீயது; ஆனால் தன்னைத்தானே வஞ்சிக்கும் இயல்பு அதைவிடத் தீயது. இந்த வஞ்சனையில் நாம் கட்டுப்பட்டிருக்கிறோம். ஒரு செயலால் நமக்குத் துன்பம் விளைவதை அநுபவத்தில் உணரும்போது, இனி இப்படிச் செய்யக்கூடாது என்று எண்ணுகிறோம். ஆனால் மறுபடியும் அந்தச் செயலைச் செய்யப் போகிறோம். இது பெரிய வஞ்சனை. இதைத்தான் ஆத்ம வஞ்சனை என்று சொல்வார்கள். பிறரை வஞ்சிப்பவர்களைவிடத் தம்மைத்தாமே வஞ்சிப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது?

க.சொ.1-15 பித்துப் பிடித்தவன்தனக்குத்தானே தீங்கு தேடுவதைப் போலப் பிரமம் பிடித்தவன் வஞ்சனைக்குள் கட்டுப்பட்டிருக்கிறான். அதனின்றும் விடுபட வேண்டும் என்று எண்ணினாலும் பழக்க மிகுதியால் விடுபட முடிவதில்லை. கரடியைக் கம்பளியென்று ஆற்றில் குதித்தவன் கதையாக வஞ்சனை இயல்பு இறுக்கிப் பிணித்து ஆழ்த்துகிறது.

அசட்டுச் செயல்

ந்த வஞ்சனையின் விளைவுதான் நாம் செய்யும் அசட்டுக் காரியங்கள். அசட்டுக் கிரியைகளைச் செய்து தவிக்கிறோம். நாம் துன்பப்படுவதற்கு ஏதுவாக இருக்கும் செயல்களை அசட்டுக் கிரியைகள் என்பதில் தவறு என்ன? அசடு என்று அறியாமை உடையவர்களை நாம் கூறுகிறோம். புத்திசாலி அல்லாதவன் அசடு. ப்ரமத்திலிருந்து உண்டான சளத்தின் விளைவு அசட்டுச் செயல்.

நாம் செய்யும் காரியம் ஒன்றா, இரண்டா? மதுரையில் எம்பெருமான் அறுபத்துநாலு திருவிளையாடல்களைப் புரிந்தான் என்று திருவிளையாடற் புராணம் சொல்கிறது. நாமோ ஒரே நாளில் 640 திருவிளையாடல்களைச் செய்கிறோம். ஒன்றையேனும் உருப்படியாக, பயன் உள்ளதாக, செய்கிறோமா? அதுதான் இல்லை. ப்ரமத்தின் விளைவில் என்ன நன்மை இருக்கும்? "நாம் என்ன காரியம் செய்தோம்? அதனால் என்ன பயன் உண்டாகும்?" என்று நினைத்துப் பார்த்தால் நமக்கே நம்முடைய அறியாமை புலனாகும்.

அசடு என்ற சொல் எப்படி வந்தது? அசத்து என்பதே அசடு என்று திரிந்தது? சத்து அல்லாதது அசத்து. சத்து என்பது உண்மை; மெய்ப்பொருள். அசத்து, உண்மை அல்லாதது; பொருள் அல்லாதது. மெய்ப்பொருளில் நாட்டமின்றிச் செய்யும் அசட்டுக் காரியங்கள்.

"அசட்டர்கள் ஐவரை அறுவர் ஆக்கிய
வசிட்டன்"

என்று கம்பர் சொல்கிறார். ஐந்து பேரை ஆறு பேர் ஆக்கினார் என்று ஒரு பொருள் தோன்றச் சொல்கிறார். ஐந்து பொறிகளாகிய அசட்டர்களை அற்றவர் ஆக்கினார் வசிட்டர். அவர் பொறிகளை அடக்கினவர்; இந்திரிய நிக்கிரகம் செய்தவர். அங்கே 'பொருளல்ல வற்றைப் பொருள்' என்று உணரும் பொறிகளை அசட்டர்கள் என்று கம்பர் சொல்கிறார்.

உண்மை அறிவு தலைப்பட்டபோது சத்தான செயல்களைச் செய்வோம். அறியாமையாகிய மருள் தோன்றினால் அசத்தான செயல்கள விளையும். மருள் நீங்கி அருள் உண்டானால் இந்த அசட்டுச் செயல்கள் இல்லாமற் போகும். அவற்றால் ஏற்படும் தவிப்பும் இல்லையாகும்.

உலகப் பொருள்களை இந்திரியங்களின் வாயிலாக நுகர்ந்து, அவற்றின் உண்மையை உணராமல் வாழ்க்கையை நடத்துகிறவர்கள் அசட்டுத்தனம் உடையவர்கள். அந்த நிலை மாற வேண்டுமானால் இந்திரியங்களின் போக்கைத் திருப்பிவிட வேண்டும்.

அசட்டுக் காரியங்களைச் செய்வதனால் நாம் இன்பத்தை அடைவதில்லை; தவிக்கிறோம் துன்புறுகிறோம். ஜெயிலுக்குள் இருக்கும் கைதி, "நானாக இங்கே வரவில்லை. என்னைப் போலீஸ்காரர்கள் இங்கே கொண்டு வந்து அடைத்து வைத்து விட்டார்கள்" என்று சொல்கிறான். அவன் தானே சிறைக்குள் வரவில்லை என்பது உண்மை. ஆனால் அங்கே வருவதற்கு ஏதுவான அசட்டுக் காரியத்தைச் செய்தவன் அவன்தான். சிறைக்குள் வருவதற்கு மூலகாரணமான குற்றத்தை அவன் செய்யும் போதே சிறையின் வாயிற்கதவை அவன் தனக்காகத் திறந்து கொண்டுவிட்டான். அப்போது அவனுக்கு அது தெரிவதில்லை. அதன் பயனாகச் சிறைவாசம் அநுபவிக்கும்போது தவிக்கிறான். தன்னைக் கொண்டு வந்து போலீஸ்காரர்கள் உள்ளே அடைத்து விட்டார்கள் என்று குறை கூறுகிறான். சிறைக்குள் வருவதற்குக் காரணமான குற்றத்தைச் செய்யாமல் தவிர்த்திருந்தால் அவனை யார் உள்ளே கொண்டு வந்து அடைக்க முடியும்?

இந்த உடம்பாகிய சிறைக்குள் வந்து அடைபட்டுத் தண்டனை அநுபவிப்பதற்குக் காரணமான அசட்டுக் காரியங்களைச் செய்தவர்கள் நாம். இங்கு வந்தும் அவற்றை நாம் விடுவதில்லை. கைதியைப்போல, இறைவன் நம்மை இந்த உடம்புக்குள் அடைத்து விட்டு அருள் செய்யாமல் இருக்கிறான் என்று குறை கூறவும் துணிகிறோம்.

நாம் படும் தவிப்பைத் தாபம் என்று சொல்வார்கள். அது உயிர்களால் வருபவை, சடப் பொருள்களால் வருபவை, தெய் வத்தால் வருபவை என்று மூன்று வகைப்படும். தாபத்திரயம் என்பார்கள். ஆதியாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம் என்று தனித்தனியே பெயரிட்டுச் சொல்வதுண்டு. இந்த மூன்று பிரிவில் அடங்கும் தவிப்புக்கு மூலம் நம்முடைய அசட்டுச் செயல்களே. அவற்றிற்கு மூல காரணம் சளம் அல்லது வஞ்சனை. அதற்கும் மூலமாக நிற்பது ப்ரமம்.

நமக்குக் காலிலோ கையிலோ ஒரு சிரங்கு வந்தால் அதைக் குணப்படுத்த டாக்டர் மருந்தை ஊசி வழியாக ரத்தத்தில் ஏற்றுகிறார். ரத்தத்தில் மருந்து கலந்தால் உடம்பில் எந்தப் பகுதியில் நோய் கண்டாலும் நீங்கும். அதுபோல மனிதனுடைய செயல்களில் உள்ள கோளாறுகளை நீக்க அவற்றுக்கெல்லாம் காரணமாக இருக்கிற உள்ளத்தில் ஊசி போட வேண்டும். உள்ளத்திலுள்ள மயக்கம் நீங்கிவிட்டால் உள்ளும் புறம்பும் ஒத்து நிற்கும். செய்யும் செயல்கள் யாவும் சத்தாகிவிடும். இறைவன் திருவருளால் உள்ளத்தே ப்ரமம் நீங்கி ஒளி உண்டாகிவிட்டால் செய்யும் செயல்கள் யாவும் இறைவனோடு தொடர்புடைய சத்தாகிவிடும்.

அருணகிரியார் தவிப்பைப் போக்குவாய் என்று சொல்லவில்லை; அசட்டுச் செயல்களை செய்யாமல் இருக்க அருள் என்று சொல்லவில்லை; உள்ளொன்றும் புறம்பொன்றுமாக இருக்கும் வஞ்சனை நிலையை மாற்று என்றும் வேண்டிக் கொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் காரணமான ப்ரமத்தைப் போக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.

சளத்தில் பிணிபட்டு அசட்டுக் கிரியைக்குள்
தவிக்கும்என்றன்
உளத்தில் ப்ரமத்தைத் தவிர்ப்பாய்

ப்ரமமாகிய அவித்தை போனால் பிணிபடுதல் இல்லை. உயிர் கட்டுப்பட்டிருக்கிறது. பாசத்தால் கட்டுப்பட்டிருக்கும் உயிர் அந்தக் கட்டினின்றும் விடுபடுவதுதான் முக்தி. முக்தி என்ற சொல்லுக்கே விடுதலை என்பதுதான் பொருள்; வீடு என்பதும் அதுதான். தேசம் விடுதலை பெற்றதென்று மகிழ்ச்சி அடைகிறோம். இது முடிந்த முடிவான விடுதலை அன்று. தேகத்தினின்றும் விடுதலை கிடைக்க வேண்டும். பிறவிப் பிணியினின்றும் நீங்கிச் சுயராஜ்யம் பெற வேண்டும். அது குருவின் மூலமாகக் கிடைக்கும் என்று வேதம் சொல்லுகிறது. ப்ரமம் நீங்கினால் கட்டு நீங்கும்; கட்டு நீங்கினால் அசட்டுச் செயல் நீங்கும்; அது நீங்கினால் தவிப்பு நீங்கும்.

2

முதலில் அருணகிரியார் பிரார்த்தனையை வெளியிட்டார். பிறகு முருகனைப் பற்றிச் சொல்கிறார்.

ஆண்டவன் அமரர்களுக்கு மாத்திரம் இன்பம் தருபவன் அல்லன், பேய்களுக்கும் இன்பம் நல்குபவன். "நான் மனிதனாக நின்று கேட்கிறேன். உன் திருக்கோயில் வந்து வணங்கிக் கேட்கிறேன்; சூரன் முதலிய அசுரர்களைக் கொன்றதனால் தேவலோகம் பிழைத்தது. சுயராஜ்யம் பெற்ற தேவர்கள் மாத்திரம் அதனால் சந்தோஷம் அடையவில்லை. மற்றொரு சாதியார்க்கும் நீ இன்பம் தந்தாய்; பேய்களும் களித்தன. பேய்களுக்கும் இன்பம் தந்த நீ, மனிதனாக இருக்கிற எனக்கு இன்பத்தைத் தரக் கூடாதா?" என்று கேட்பதுபோல, முருகப் பெருமான் சூர சங்காரம் செய்த காலத்தில் பேய்கள் இன்பக் களிப்பினால் குதித்துக் கும்மாளம் போட்டன என்று சொல்ல வருகிறார்.

பேய்க்கூத்து

போரைப்பற்றிச்சொல்லும் பாடல்கள் பலவற்றைப் பழங்கால முதற்கொண்டு புலவர்கள் பாடியிருக்கிறார்கள். போர் நிகழ்ச்சியில் பல துறைகள் உண்டு. தலைவனுக்கும் அவனுடைய பகைவர்களுக்கும் போர் மூண்டதை வர்ணிக்கும் போது, "பகைவர்கள் போர்க்களத்தில் இறந்து ஒழிந்தார்கள்; இறந்து கிடந்த பிணங்களைச் சுற்றிப் பேய்கள் கூத்தாடின; தங்கள் நகங்களால் பிணத்தைப் பீறிப் பீறித் தின்றன" என்று வருணிப்பது ஒரு மரபு. பிற்காலத்தில் எழுந்த நூல்களிலும் இந்த மரபைப் பார்க்கலாம். போர் நிகழ்ச்சிகளைச் சொல்லும் புறத் துறைகளில் பேய்கள் வரும் துறைகளும் சில உண்டு.

பிணத்தைத்தான் உண்ண வேண்டுமென்று பேய்களுக்குப் பைரவர் சாபம் கொடுத்தார் என்பது புராணச் செய்தி. உயிரோடு இருக்கிறவர்களை உண்ணக் கூடாதாம். பிணம் எங்கே கிடைக்கும்? மயானத்தில் கிடைக்கும். அங்கே பேய்கள் இருக்கும். மயானத்தைப் பற்றி வருணிக்கும் இடங்களில் பேய்களைப் பற்றிய வருணனையும் வரும். காரைக்கால் அம்மையார் பாடிய பாடல்களில் பேய்களின் வருணனைகள் வருகின்றன.

எல்லாப் பேய்களுக்கும் உணவு தர மயானம் போதாது. அதை மாத்திரம் நம்பியிருந்தால் பெரும்பாலானவை பட்டினி கிடக்கத் தான் வேண்டும். வேறு எதையும் சாப்பிடவும் முடியாது. ஆகவே, "ஐயோ பசிக்கிறதே பட்டினி கிடக்கிறோமே! எங்களுக்குச் சோறு கொடு!" என்று அவை யாவும் காளிதேவியைச் சுற்றி நின்று கூக்குரல் போடுமாம். அப்போது எங்கேயாவது போர் நடந்தால் உடனே செய்தி தந்தியாகப் பறந்து வரும். ஒரு பேய் அதைத் தெரிந்து கொண்டு வந்து சொல்லும். யாவும் உடனே கூட்டமாக ஒடிப் போய் யுத்தகளத்திலே மலைமலையாகக் குவிந்து கிடக்கும் பிணங்களைச் சுற்றி நின்று மகிழ்ச்சி ஆர வாரத்தோடு அவற்றை உண்டு களிக்கும். இவ்வாறு சொல்வது கவி மரபு.

தொல்காப்பியத்தில் களவேள்வி என்ற துறை ஒன்று வருகிறது. போர்க்களத்தில் இறந்த பகைவர்களுடைய உடம்புகளை பேய்கள் நுகரும்படி வீரம் விளைப்பதைச் சொல்வது அரிது.

திருமுருகாற்றுப்படையில்

திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் பேய்களைப் பற்றிச் சொல்கிறார். முதலில் அழகிய அணங்குகளைப் பற்றிச் சொல்லி விட்டுத் தொடர்ந்து அஞ்சத்தக்க உருவத்தையுடைய பேயைப் பற்றிச் சொல்கிறார். இப்படிச் சொல்வது ஓர் அழகு. சிவப்பையும் கறுப்பையும் அருகருகே வைத்துக் காட்டுவது போன்ற அழகு இது.

முருகன் காந்தட் கண்ணியை அணிபவன் என்று சொல்ல வந்தவர், அம் மலர் வளரும் மலைச் சாரல் சோலையை வர்ணிக்கிறார். சோலை முழுவதும் மணம் நிறைந்த பலபல வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அதைப் பார்த்தாலே பெண்களுக்கு எத்தனை ஆனந்தம்! 'பூ..... ... பூ.....!' என்று தெருவிலே விற்றுக் கொண்டுபோனால், அந்தப் பூவை வாங்காவிட்டாலும், கூப்பிட்டு அதன் அழகையும் மணத்தையும் சுவைப்பதற்காகவாவது, விலை கேட்கத் தோன்றும் நமது தமிழ்நாட்டுப் பெண்களுக்கு. காந்தள் மலர் மலரும் இடம் இந்தத் தமிழ்நாட்டு மலைச்சாரலில் உள்ள சோலைகள். தேவலோகத்து அரம்பையர் ஆடிப்பாட, இந்தச் சோலைகளுக்கு வருகிறார்கள். தேவ லோகத்தில் கற்பக மரத்தின் பூத்தான் கிடைக்கும். அது பொன் நிறமாக இருக்கும். வேறு நிறம் இல்லை. ஆனால் பூமியில் இருக்கும் மலருக்குப் பலவகையான வண்ணம் உண்டு; மணம் உண்டு.

செக்கச் செவேலென்றிருக்கும் வெட்சிப் பூவினாலும் கருநீல நிறமுள்ள குவளை மலர்களாலும் அவ்வணங்குகள் தங்கள் கூந்தலைச் சிங்காரம் செய்து கொள்கிறார்கள். எழில் நிறைந்த வண்ணப் பூக்களால், அந்தப் பெண்கள் தாங்கள் விழைகின்றவாறே அலங்காரம் செய்து கொள்வதற்கு ஏற்ற பொருள்களை அந்தச் சோலைகள் தருகின்றன. ஆகையால் மலை உச்சியில் இருக்கிற பூம்பொழில்களுக்கு சூரர மகளிர் வருகிறார்கள். வந்து அலங்காரம் பண்ணிக்கொண்டு, "கோழிக் கொடி நெடிது வாழ்க!" என்று வாழ்த்தி ஆடுகிறார்கள்.

உடனே, நக்கீரர் பேய் மகளின் ஆடலைச் சொல்கிறார். அணங்குகளுடைய அழகையும் ஆடலையும் வருணித்தபிறகு பேயின் அழகை வருணிக்கிறார். அதன் தலைமயிர் உலர்ந்து பரட்டையாக இருக்கிறது. முன்னால் அரமகளிரது கூந்தல், ஒத்து வளர்ந்து நெய்ப்போடு கூடியதாக இருக்கிறது எனச் சொன்னார். இங்கே பேய் மகளின் தலைமயிர் உலர்ந்து, வறண்டு பறட்டையாகக் கிடக்கிறது என்கிறார். பற்கள் ஒன்றோடொன்று சேர்ந்து, வரிசையாக, அழகாக இல்லாமல் ஒரே கோரமாய் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு போக்கிலே பிறழ்ந்து இருக்கின்றனது; கோரப் பற்கள். வாயோ பேழ்வாய்; ஆழமான பெரிய வாய். கண்ணோ? எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கிற விழிகள்; சுழல்விழி. அரமகளிர் தம்முடைய காதுகளில் சிவந்த அசோகந்தளிர்களைச் செருகியிருக்கிறார்கள் என்று சொன்னார். பேய் மகளிரது காதோ மார்பு வரையில் தொங்குகிறது. மார்பிலுள்ள தனங்களோடு மோதுகிறது. கழன்று விடுமோ என்று தோன்றும் கண்களையுடைய கோட்டானும் பாம்பும் காதில் ஆபரணம் போலத் தொங்குகின்றன. பாம்பிலே கூகையைக் கட்டித் தொங்கவிட்டிருக்கிறாள் பேய்மகள். அரமகளிரது உடம்பு வழவழவென்று பொலிவும் நிறமும் பெற்று மெருகோடு இருக்கின்றது. ஆனால் பேய் மகளின் உடம்பு எப்படி இருக்கிறது? வயிறு நன்றாக வெளியிலே தெரிகிறது. உடம்பு சொர சொரவென்று இருக்கிறது. அவள் பூமியதிர நடந்து வருகிறாள். அவள் நடையைக் காண்பவர் உள்ளம் திடுக்கிடுகிறது. அவள் கொம்மாளம் போடுகிறாள். சூரபன்மன் முதலிய அசுரர்களை, முருகன் தன் திருக்கரத்திலேயுள்ள வேலினால் சங்காரம் பண்ணினானே, அந்தப் போர்க் களத்தில் கொம்மாளமிடுகிறாள். 'மலைமலையாக அசுரக் கூட்டங்களைக் கொன்று குவித்திருக்கிறான். நமக்கு உணவு போட்டிருக்கிறான்' என்று அந்த இடத்திலே போய் முருகனை வாழ்த்திக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஆடுகிறாள். அவளுடைய கைநகம் வாச்சி போல் இருக்கிறது. அந்த நகத்தினால் பிணங்களின் சதையைப் பிடுங்கிப் பிடுங்கித் தின்கிறாள். ரத்தத்தை அளைகிறாள். அவள் கைவிரல் ரத்தத்தை அளைந்து சிவப்பாக இருக்கிறது.

நாம் பனை நுங்கு சாப்பிட்டிருக்கிறோம். பனை மரத்தின் அடியிலே போய், நுங்கின் புற ஒடுகளை நீக்கிவிட்டு, அப்படியே உள்ளே இருக்கும் நுங்கை இரண்டு கட்டைவிரலாலும் எடுத்துச் சாப்பிடுவது ஒரு தனிச் சுவை. நுங்கை எடுத்துவிட்டால், அது இருந்த இடம் பள்ளமாக இருக்கும். இந்தப் பேய் மகள் நுங்கு சாப்பிடுவது போல ஒரு காரியம் செய்கிறாள். இறந்து கிடக்கும் அசுரர்களின் கண்ணை, ரத்தம் தோய்ந்த தன் கைவிரல்களிலுள்ள கூரிய நகத்தினால் அப்படியே தோண்டி எடுத்துத் தின்கிறாள்; நுங்கு எடுக்கப்பட்ட பின்னுள்ள பனம்பழம் போல் தலை இருக்கிறது. அதனை எடுத்துக் கொண்டு கண்டார் பயப்படும்படியாக ஏந்தி வருகிறாள். அவள் வாய் நிணத்தை மென்று கொண்டேயிருக்கிறது. சரியானபடி உணவு கிடைத்தால் ஆட்டம் போடத் தோன்றும் அல்லவா?

'துணங்கை தூங்க.'

அவள் துணங்கைக் கூத்து ஆடுகிறாள். ஆண்டவன் சூர சங்காரம் செய்ததினால் வாழ்வு அடைந்தவர்கள் தேவர்கள். தேவலோகப் பெண்கள் அவன் புகழைப் பாடி ஆடிக் களிக்கிறார்கள். ஆண்டவன் சூரசங்காரம் செய்ததனால் பகைவர்கள் போர்க்களத்தில் மாண்டு மலையாகக் கிடந்தார்கள். அப்போது நெடுநாள் பசியுடன் இந்த பேய்கள் தங்களுக்கு வேண்டிய உணவைப் பெற்று மகிழ்ந்தன. அவை பிணத்தை வயிறார உண்டு, முருகனை வாழ்த்திக் கூத்தாடின.

'முகம் குதிரையாகவும், உடம்பு மனிதர்களைப் போலவும் இருந்த சூரன் நடுங்கும்படி, ஆறு முகங்களோடு சென்று தலை கீழாகக் கவிழ்ந்த பூங்கொத்துக்களை உடைய மாமரமாக இருந்த சூரனை அழித்துத் தேவர்களுக்கும் பேய்களுக்கும் மகிழ்வு அளித்தான், குற்றமற்ற வெற்றியையும், யாராலும் அறிதற்கரிய புகழையும் உடைய செவ்வேற் சேய்' என்று நக்கீரர் பாடுகிறார்:

'உலறிய கதுப்பிற் பிறம்பற் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்
கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்கும் காதிற் பினர்மோட்டு
உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூர்உகிர்க் கொடுவிரல்
கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவர
வென்றடு விறற்களம் பாடித் தோள்பெயரா
நினம்தின் வாயள் துணங்கை தூங்க
இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர்
மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து
எய்யா நல்இசைச் செவ்வேற் சேய்'[1]

பரணி நூல்கள்

ப்படி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுந்த திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் பேய்களின் கூத்தை விளக்கியிருக்கிறார்.

புறநானூறு முதலிய நூல்களிலும் வேறு பல சங்க நூல்களிலும் களவேள்வியைப் பற்றிய செய்திகள் பல இடங்களில் வருகின்றன. பேய்கள் பசியினால் வருந்துவதையும் காளியிடம் முறையிடுவதையும் போர் நிகழ்வது தெரிந்து ஓடிச் சென்று களத்தில் பிணங்களைக் கொண்டு விருந்து சமைத்து உண்பதையும் விரிவாகச் சொல்லும் பிரபந்தம் ஒன்று உண்டு. அதற்குப் பரணி என்று பெயர். கலிங்கத்துப் பரணி என்ற நூல் மிகச் சிறந்தது. குலோத்துங்கன் படை வடக்கே சென்று வெற்றி பெற்று வந்ததை அது வருணிக்கிறது. பேய்கள் காளி தேவியைச் சுற்றிக் கொண்டு, "ஐயோ! நாங்கள் சாப்பிட்டுப் பல காலம் ஆகி விட்டனவே, பட்டினியாகக் கிடந்து தவிக்கிறோமே! எங்களுக்குச் சாப்பாடு போடு" என்று கூக்குரல் போடுமாம்; கூத்தாடுமாம். எங்கேயாவது யுத்தம் நடக்கிறது என்று தெரிந்தால், அவைகளுக்கு ஒரே கொண்டாட்டம். பரணிகளில் இதைக் காணலாம்.

அரசர்களின் வீரத்தைப் பாராட்டும் போது களவேள்வியைப் பற்றிச் சொல்வது பழங்கால வழக்கம். பிற்காலத்தில் ஆண்டவனைப் பற்றிப் பாடும்போதும் களவேள்வியைப் பற்றிப் பலர் பாடியிருக்கிறார்கள். ஒட்டக்கூத்தர் பாடியது தக்கயாகப் பரணி. அதில் பேய்கள் உணவு பெறாமல் வருந்தும் திண்டாட்டமும் தக்கயாக சங்கார காலத்தில் உணவு பெற்றுக் களித்தாடும் கொண்டாட்டமும் வருகின்றன.

பேய்கள் எல்லாம் காளியிடம் போய்ச் சொல்கின்றன. "அம்மா உன்னுடைய பிள்ளை முன் காலத்தில் என்ன செய்தான் தெரியுமா? எங்களுக்கு எல்லாம் பெரிய விருந்து வைத்தான். சூர சங்காரம் செய்யும்போது அசுரர்களை மலைமலையாகக் கொன்று குவித்தான்; பள்ளம் விழுந்ததுபோலக் குழி விழுந்து போன எங்கள் வயிறுகள் புடைக்கும்படியாக உணவு போட்டான்" என்று அவை சொல்கின்றனவாம்.

"குரொடும்பொர வஞ்சிசூடிய பிள்ளையார்படை தொட்டநாள்
ஈருடம்பு மிசைந்திரண்டுதிரப்பரப்பும் இரைத் தனம்."
"அசும்புதூர்வயி றாரமுன்பவர் செற்றதானவர் அற்றநாள்
விசும்புதூர விழும்பிணங்கள் நிணங்களுற மிசைந்தனம்."

சூரபன்மனோடு போராட முருகன் புறப்பட்டபோது வஞ்சி சூடிக் கொண்டு புறப்பட்டான். புறப்பட்டுச் சென்று வேலை விட்ட நாளில் சூரனுக்குரிய இரண்டு உடம்புகளையும் பேய்கள் உண்டன. இரண்டு உடல்களின் உதிரத்தையும் குடித்துப் பருத்தன.

"போர்க்களத்தில் மலைமலையாகப் பிணங்கள் கிடந்தன. வானமளாவக் குவிந்து கிடந்தன. அவற்றின் கொழுப்புக்களை எங்கள் குழி விழுந்த வயிறுகள் நிரம்பும்படியாக உண்டோம்" என்று அந்தப் பேய்கள் சொல்லுகின்றன.

இறைவனைப் பற்றி விரிவாக எண்ண வேண்டுமானால் அவன் வீரமுடையவன், கருணையுடையவன் என்று பல குணங்களுக்கு உரியவனாகவே நினைக்க வேண்டும். வீரம் உடையவன் என்பது எப்படித் தெரியும்? "போர் நடந்தது; பகைவர்கள் மாண்டார்கள்; போர்க்களத்திலே மலைபோலக் கிடக்கின்ற பிணங்களைச் சுற்றிப் பேய்கள் கூடிக்கொண்டு களிப்புடன் அவற்றைத் தின்றன" என்று சொன்னால் தெரியும்.

அரசர்களும், வீரர்களும் செய்த போரில் பேய்கள் விருந்து நுகர்ந்தன என்ற செய்தி உண்மை நிகழ்ச்சியோடு ஒட்டாமல், கவிமரபாக நிற்கின்றது. வீரத்தைப் பெருகப் பேசுவதற்கு ஏற்ற நிலமாக இத்தகைய செய்திகள் அங்கே பயன்படுகின்றன. ஆனால் இறைவனுடைய வீரத்தைப் பற்றிச் சொல்கையில் அவை மற்ற நிகழ்ச்சிகளோடு ஒட்டி நிற்கின்றன.

அரசர் போர் செய்தது வரலாற்று நிகழ்ச்சி, பேய்கள் விளையாடியது கற்பனை நிகழ்ச்சி. இரண்டும் வெவ்வேறு வகை. கவிதையில் இவை இணைகின்றன. ஆனால் இறைவனுடைய பெருமையைக் கூறும் புராணச் செய்திகளில் அவ்விரண்டும் இயல்பாகவே இணைந்து நிற்கின்றன. இறைவன் போர் செய்யும் போது நிகழும் நிகழ்ச்சிகள் உலகியலுக்கு அப்பாற்பட்டவை; பேய்களின் விளையாடலும் அத்தகையனவே. உண்மை நிகழ்ச்சிகளானாலும், கற்பனையானாலும், உள்ளுறையை உடைய கதையானாலும் இரண்டும் ஒரே நிலையில் இருப்பவை. ஆதலின் அரசர் செய்த போரில், களத்தில் பேய்கள் ஆடின என்பதைவிட முருகன் செய்த போரில் பேய்கள் உண்டுகளித்தன என்பது பொருத்தமாகத் தோற்றுகிறது.

திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் பேய்க் கூத்தைப் பாடியதை முன்பு பார்த்தோம். மற்றோரிடத்திலும் சுருக்கமாக இச்செய்தி வருகிறது. முருகப் பெருமானுடைய ஆறு திருமுகங்களும் இன்ன இன்ன காரியங்களைச் செய்கின்றன என்று ஒரிடத்தில் வருணிக்கிறார். அவனுடைய திருமுகங்களில் ஒன்றுமாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கும்படியாகப் பலவகைக் கதிர்களைப் பரப்புகின்றது; அன்பர்களுடைய வேட்கைகள் நிறை வேறும்படி வரமளிக்கும் அருட்செயலைச் செய்கின்றது மற்றொரு முகம்; வேத முறைப்படி அந்தணர்கள் செய்கின்ற யாகங்களைத் தீங்கின்றிப் பாதுகாக்கின்றது ஒருமுகம்; யாராலும் விளக்க முடியாமல் இருக்கின்ற பொருள்களை விளக்குகின்றது ஒரு முகம்; வள்ளியெம் பெருமாட்டி யோடு கூட இன்புற்று மகிழும் செயலைப் புரிகின்றது ஒரு முகம்.

"........................ ஒரு முகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே"

என்பது ஒரு முகத்தைப் பற்றிய செய்தி.

வீரர்களுள் தலைசிறந்த வீரன் முருகன்; அவன் தேவசேனாபதி. தேவர்களுடைய பகைவர்கள் அசுரர்கள். அசுரர்களால் தேவர்களுக்கு எவ்விதமான தீங்கும் ஏற்படாதவாறு காப்பாற்ற அவன் விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறான். "நிருத ரார்க்கொரு காலா ஜேஜய" என்று திருப்புகழில் பாடுகிறார் அருணகிரிநாதர்.

பகைவர்களை அழித்து, வருகின்ற சண்டைகளைப் போக்கி, கறுவுதல் கொண்ட உள்ளத்தோடே களவேள்வி செய்தது ஒரு முகம் என்பது திருமுருகாற்றுப்படைப் பகுதியின் பொருள்.

மரபு வழியே

வ்வாறு பழங்காலம் முதற்கொண்டே வழங்கி வருகின்ற மரபை ஒட்டியே அருணகிரிநாதர் பேயின் விளையாட்டைப் பாடுகின்றார். வாழ்நாள் முழுவதும் முருகனைப் பற்றிப் பாடுவதையே தம் பணியாகக் கொண்டவர் அவர். முருகனைப் பற்றி விரிவாகப் பாடுவதற்கான பொருளைத் தொகுத்துக் கொண்டவர். அவருக்கு முன்பிருந்த புலவர்கள் முருகனுடைய வீரத்தை வருணிக்கும்போது, களவேள்வி பற்றிச் சொல்லியிருப்பவற்றை யெல்லாம் சேகரித்துக் கொண்டு நாம் படித்துச் சுவைக்கும் வகையில் அவற்றைச் சொல்கிறார்.

திருப்புகழில் பேய்களின் விளையாட்டை வெவ்வேறு வகையில் பாடியிருக்கிறார். ஒர் உதாரணம்:

"குடிப்பன முகப்பன நெடிப்பன நடப்பன
கொழுத்தகு ருதிக்கடலிடையூடே
குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன
குவட்டினை இடிப்பன சிலபாடல்
படிப்பன திருப்புகழ் எடுப்பன முடிப்பன
பயிற்றில கைக்குலம் விளையாடப்
பகைத்தெழும் அரக்கரை இமைப்பொழு திணிற்பொடி
படப்பொரு துழக்கிய பெருமாளே."[2]

என்று கந்தர் அலங்காரத்திலும் வேறு ஒரு பாட்டில்,

"................... முது கூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டுடு டுடுடுடு
டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக்கொட்டி ஆடவெஞ்
சூர்க்கொன்ற ராவுத்தனே"

என்று பாடுகிறார்.

திருவகுப்பு

வற்றையன்றித் திருவகுப்பில் மிக விரிவாக அலகைகளின் கூத்தைப் பாடியிருக்கிறார். இருபத்தைந்து பாடல்கள் அமைந்த அந்நூலில் மூன்று பேய்க்கூத்தை வருணிப்பவை. பொருகளத்து அலகை வகுப்பு, செருக்களத்து அலகை வகுப்பு, போர்க்களத்து அலகை வகுப்பு என்ற மூன்றும் போர்க்களத்தில் பேய்கள் விருந்துண்டு கூத்தாடும் செயலை விரிவாகச் சொல்வன.

ஏழாவது வகுப்பு: பொருகளத்தலகை வகுப்பு திருத்தணிகையில் இருக்கும் ஆறுமுகம் படைத்த ஒருத்தனாகிய இளைய முருகன், நிசிசரர் இளைத்து பதைத்து மடியும்படியாக ஒர் இமைப்பொழுதில் அமர் பொருதான். அவன் அப்படிப் பொருத களத்தில் உள்ள அலகைகளின் செயல்களைச் சொல்வது அது.

அவை ஆனந்தமாகத் தசையைத் தின்கின்றன. பக்கத்தில் நிற்கிற குட்டையான பேய்க்கும் தமக்குப் போக மிஞ்சின தசையைக் கொடுக்கின்றனவாம். அந்தப் பேயும் ஆடுகிறதாம்.

'குதித்து மகிழ்வொடு மிதித்து நடமிடு
குறட்கு மிகுதசை கொடுத்து வருவன"[3]

குதிரையின் இறைச்சியைத் தனித்தனியே குவித்துப் பக்குவமாக அவித்து உண்ணுகின்றன.

"கொழுத்த குரகத இறைச்சி வகைவகை
குவித்து முறைமுறை அவித்து நுகர்வன.[4]

இரத்த ஆற்றிலே குதித்து முழுகி அந்த இரத்தத்தைக் குடித்துக் களிப்போடு வருகின்றன.

"குதித்து முழுகியும் இரத்த நதியிடை
குளித்தும் உணர்வொடு களித்து வருவன."

அவை ஆடுகின்றன; ஆரவாரத்தோடு கூத்தாடுகின்றன.

""தொகுக்கு தொகுதொகு தொகுக்கு தொகுதொகு
தொகுக்கு தொகுவென நடித்து வருவன.”

அடுத்தது செருக்களத்தலகை வகுப்பு. அது, அடவிப் புனத்தில் உற்ற குறமகளுக்கு ஏற்ற மணிப்புயத்தையுடைய ஆறுமுகன், அடல் மிக்க அசுரர்கள் பட்டு விழும்படியாகப் பொருத செருக்களத்தில் அலகைள் செய்யும் செயல்களைச் சொல்வது.

'குதிரைத் திரள்பட் டபிணத் தைஎடுத்
"துதிரப் புனலிற் குளிக்கும் ஒருதிரள்;
குருதிக் கடலைப் பெருகப் பருகிக்
குணலைத் திறனிற் களிக்கும் ஒருதிரள்"[5]

என்று தொடங்குவது அது. 'ஒரு பேய்க் கூட்டம் இறந்து போன திரளான குதிரைப் பிணங்களை எடுத்துக் குருதி வெள்ளத்தில் குளிக்கும். மற்றொரு பேய்க் கூட்டம் ரத்தக் கடலை நிரம்பக் குடித்துக் குணலையென்னும் கூத்தாடிக் களிக்கும்' என்று பாடுகிறார் அருணகிரியார்.

ஒன்பதாவது திருவகுப்பு, போர்க்களத்து அலகை வகுப்பு, தணிகையென்னும் பதியில் நிற்பவனாகிய முருகன், 'கொலை நிருதரை முனிந்த போர்க்களத்தில் அலகை' செய்தவற்றை விரித்துரைப்பது அது. அந்த அலகைகள் பசியினால் பயிரவியை வாழ்த்துகின்றனவாம்.

"பவுரிவ ரும்பரி புரம்நரல் பங்கய
வித்தா ரத்தன பயிரவி பதங்கள்
வாழ்த் தெடுத்த பசியன"[6]

அவை இப்போது வேண்டிய உணவைப் பெற்றுக் கூத்தாடுகின்றன. எத்தனை விதமான ஆட்டம்! அவை உருவத்தால் இருண்டன. உலவி நிணம் மொண்டு கூட்டு அமைத்து நுகர்வன. உலகு குலுங்கிட அரிய துணங்கையினைச் சாதிப்பன. உவன படலங்களும் காக்கைகளும் சுற்றி வருவன. இப்படி வருணிக்கிறார். ஒடுகின்ற ரத்த ஆற்றில் முழுகி எழுகின்றன; ஆரவாரம் செய்கின்றன; கடல் அதிரப் பூமி பிளக்க நடை பயில்கின்றன.

“ஒழுகுதி ரந்தனில் முழுகிஎ ழுந்தன
உச்சா டத்துடன் உடைகடல் அதிர்ந்து
கூப்பிளக்கும் நடையின."[7]

அவை கூத்தாடும் ஓசையையும் பாடுகிறார்.

"திரிகட தொங்கிட திரிகட திங்கிட
தித்தீ செக்கண செக்கண மொழிந்து
கூத்த னைத்தும் நவில்வன."

பேய் விளையாட்டு

வ்வாறெல்லாம் பாடிய அருணகிரிநாதர் இந்தப் பாட்டிலும் பேய் விளையாட்டை வருணிக்கிறார். பாட்டின் ஒசையே பேய்கள் குதிப்பதை நினைவூட்டுகின்றது.

"அவுணர் உரத்துதிரக்
குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக்
குடித்துவெற்றிக்
களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட
காவலனே!”

அவுணர் என்பது அசுரருக்குப் பெயர். அவர்களுடைய மார்பிலிருந்து பெருகிய ரத்தம் குளமாகத் தேங்கிக் கிடக்கிறது. இந்தக் காட்சி நிகழும் இடம் போர்க்களம்; முருகன் அவுணரைப் பொருது வெற்றிக் கொண்ட களம். வேலைப் பிரயோகம் செய்து அவன் வெற்றி கொண்டான்.

முருகன் வென்ற போர்க்களத்தில் அவுணர் உடம்பிலிருந்து பெருகித் தேங்கிய ரத்தக் குளத்தில் பேய்கள் குதிக்கின்றன. குதித்துக் குதித்து எழுகின்றன. குளிக்கின்றன. அவற்றிற்கு அப்போது உண்டான மகிழ்ச்சிக்கு எல்லை ஏது? பல காலம் பசியால் வாடிய உடம்பையுடைய அவற்றிற்கு அப்போதெல்லாம் ஒரு துளி ரத்தம் கிடைக்கவில்லை. இப்போது ரத்தக் குளத்தில் மூழ்கிக் கொம்மாளம் இடுகின்றன. அதைக் குடிக்கின்றன. களிப்புக்குக் கேட்க வேண்டுமா? கழுது என்பது பேய். இப்படிப் பேய்கள் வெற்றிக் களத்தில் செருக்கி ஆட வேலை விட்டான் முருகன்.

களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட
காவலனே!

மார்பிற் புண்

முருகன் சிறந்த வீரன். போர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஒடுகிறவர்களைக் கொல்கிறவன் வீரனாகமாட்டான். புறமுதுகு காட்டுவதும், முதுகிட்டார் மேல் படை விடுவதும் வீரனுக்கு ஏற்ற செயல்கள் அல்ல. அசுரர்களின் ஆரவாரச் செயல்களைக் கண்டு அஞ்சாமல் அவர்களைத் தவிடு பொடியாக்கிய முருகன் அவர்களை முதுகில் அடிக்கவில்லை. வேலால் அவர்கள் மார்பைத் துளைத்தான். அதனால் அவர்களுடைய மார்பிலிருந்து குருதி வெள்ளம் பீறிட்டுப் பாய்ந்து குளமாகத் தேங்கியது. அதனால்தான்,

அவுணர் உரத்து உதிரக்குளத்து

என்றார் அருணகிரியார். உரம் என்பது மார்பு. மார்பிலே படுகின்ற புண்ணை விழுப்புண் என்பார்கள். அவுணர் உரத்து உதிரம் என்றது முருகனுடைய சிறந்த வீரத்தைக் காட்டி நிற்கிறது.

இராவணனை அம்பு எய்து கொன்றான் இராமன். இறந்து கிடந்த இராவணனை இராமன் போய்ப் பார்த்தான். குரங்குகள் அவன் மேல் ஏறித் துகைத்தன. அப்போது அவன் முதுகில் ஏதோ புண் இருப்பதைக் கண்டான் இராமன். "அடடா! நான் இராவணனை முதுகில் அடித்துக் கொன்றுவிட்டேன் போல் இருக்கிறதே! என்ன காரியம் செய்தேன்!" என்று ஒரு கணம் திடுக்கிட்டான். அதை விபீஷணன் கண்டு அவனைத் தெளிவித்தான். "நீங்கள் வருத்தம் அடையக் காரணமே இல்லை. இவன் திக்கயங்களோடு பொருத போது அவற்றின் கொம்புகள் மார்பிலே பாய்ந்தன. அவை உருவி முதுகிலே வந்த சுவடு அது. ஆகையால் உங்கள் அம்பினால் உண்டான புண் என்று எண்ணாதீர்கள்" என்று அவன் எடுத்துச் சொன்ன பிறகே இராமன் தெளிவு பெற்றான்.

முருகனும் முதுகில் அடிக்கிறவன் அல்ல. தேவசேனாபதியாகிய அவன் வீரருள் வீரன். அவன் அவுணர்களின் மார்பிலே வேலைப் பாய்ச்சி வெற்றி பெற்றான்.

"பேய்கள் பிணத்தைத் தின்று குருதிக் கடலிலே குதித்து விளையாடும்படியாக அசுரர்களைச் சங்காரம் செய்தவன் அல்லவா நீ? என் துன்பங்களுக்கெல்லாம் காரணமான பிரமத்தைப் போக்கியருள மாட்டாயா?" என்று இந்தப் பாட்டில் அருணகிரிநாதர் வேண்டிக் கொள்கிறார்.

சளத்தில் பிணிபட்டு அசட்டுக் கிரியைக்குள்
தவிக்கும்என்றன்

க.சொ.1-16

உளத்தில் ப்ரமத்தைத் தவிர்ப்பாய், அவுணர்
உரத்துஉதிரக்
குளத்தில் குதித்துக் குளித்துக் களித்துக்
குடித்துவெற்றிக்
களத்தில் செருக்கிக் கழுதுஆட வேல்தொட்ட
காவலனே!

(வஞ்சனையில் கட்டுண்டு, உண்மையற்ற செயல்களில் அகப்பட்டுத் தவிக்கும் என்னுடைய உள்ளத்தில் உள்ள மயக்கத்தை நீக்கியருள்வாயாக; அசுரர்களின் மார்பிலிருந்து பெருகித் தேங்கிய ரத்தக் குளத்தில் குதித்தும் குளித்தும் களிப்புற்று ரத்தத்தையே குடித்து உனக்கு வெற்றி உண்டான போர்க்களத்தில் இறுமாந்து பேய்கள் விளையாட வேலாயுதத்தை விட்ட பெருமானே!

சளம்-வஞ்சனை. பிணி-கட்டு. ப்ரமம்-மயக்கம். அவுணர்-அசுரர். உரம்-மார்பு. செருக்கி-இறுமாந்து. கழுது-பேய். தொட்ட-பிரயோகம் செய்த. காவலன்-தேவலோகத்தைப் பாதுகாக்கும் பெருமான்.)



1. பின்வரும் கம்பராமாயணப் பாடல்கள் இதனைப் புலப்படுத்தும்.

"வென்றியால் உலகம் மூன்றும்
மெய்ம்மையான் மேவி னாலும்
பொன்றியார் கின்ற தோளைப்
பொதுவற நோக்கும் பொற்பும்
குன்றிஆ அற்ற தன்றே!
இவன்எதிர் குறித்த போரில்
பின்றியான் முதுகிற் பட்ட
பிழம்புள தழும்பின் அம்மா."

என்பது இராமன் கூற்று.

"நாடுள தனையும் ஓடி
நண்ணலார் காண்கி லாமல்
பீடுள குன்றம் போலும்
பெருந்திசை எல்லை யானைக்
கோடுள தனையும் புக்குக்
கொடும்புறத் தழுந்து புண்ணின்
பாடுள தன்றித் தெவ்வர்
படைக்கலம் பட்டென் செய்யும்"

என்பது விபீஷணன் கூற்று.

  1. 1.உலறிய கதுப்பின்-உலர்ந்த கூந்தலையுடைய. பேழ் வாய்-ஆழமான வாய். சூர்த்த நோக்கு-அச்சம் தரும் பார்வை. கூகை-ஆந்தை. தூங்க-தொங்க. பினர் மோடு-சுரசுரப்பையுடைய வயிறு. உரு-அச்சம். செலவு-நடை உகிர்-நகம் தொட்டு-தோண்டி. கழி முடை-மிக்க நாற்றத்தையுடைய தொடி-வளை. வெருவர-அச்சம் உண்டாக. தோள் பெயரா-தோளை அசைத்து. துணங்கை-கைகோத்து ஆடும் கூத்து. தூங்க-ஆட. அவுணர்-அசுரர். வலம்-வெற்றி, இணர்-பூங்கொத்து. மா முதல்-மாமரத்தின் அடி. தடிந்த-அழித்த. மறு-குற்றம். எய்யா-அறிய இயலாத. இசை-புகழ். சேய்-முருகன்.
  2. நெடிப்பன - உயர்ந்து நிற்பன. மதிப்பன-கடைவன. குவடு-மலை. அலகைக் குலம்-பேய்க் கூட்டம். உழக்கிய-கலக்கிய. குடிப்பனவாகியும் முகப்பனவாகியும்... முடிப்பனவாகியும் அலகைக்குலம் பயிற்றி விளையாட அரக்கரை இமைப்பொழுதினில் உழக்கிய பெருமாளே என்று பொருள் கொள்ள வேண்டும்.
  3. குறட்கு-குட்டைப் பேய்க்கு. மிகு தசை-தாம் தின்று எஞ்சிய தசை
  4. குரகத இறைச்சி-குதிரை மாமிசம். அவித்து-சுட்டு.
  5. பட்ட-இறந்த. குருதி-இரத்தம். குணலைத் திறனில்-குணலை என்ற கூத்தின் வகையைப்போல.
  6. பவுரி-சுழன்றாடும் கூத்து. பரிபுரம் நரல் பங்கயம்-சிலம்பு ஒலிக்கும் தாமரை போன்ற பாதம். பங்கயத்தையும் தனத்தையும் உடைய பைரவி.
  7. உச்சாடம்-உயர்ந்த ஆரவாரத் தொனி. கூப்பிளக்கும்-பூமியைப் பிளக்கச் செய்யும்.