உள்ளடக்கத்துக்குச் செல்

கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1/சும்மா இருக்கும் எல்லை

விக்கிமூலம் இலிருந்து

சும்மா இருக்கும் எல்லை

அநுபவாதிசயம்

"து அன்று, இது அன்று" சொல்லிக்கொண்டே வந்து ஒரு பாட்டை முடித்துத் தொடர்ந்து அந்தப் பட்டில், "சொல்ல முடியாத தாயிற்றே அது!" என்று கூறுகிறார் அருணகிரியார். அந்த இன்ப அநுபவத்தைச் சொல்லத் தொடங்கி அப்படியே நிறுத்திவிட்டு, "ஆஹா!" என்று வியப்படைகிறார்.

ஒரு குழந்தை இறந்துவிட்டது. அக்குழந்தையின் தாயிடம் பலர் சென்று, "நேற்றுக்கூட விளையாடிக் கொண்டிருந்தானே! எப்படி இறந்தான்?' எனத் துக்கம் கேட்கிறார்கள். தாய், "நேற்றுக்கூட விளையாடிக் கொண்டுதான் இருந்தான்...உம், ஆ... சாயங்காலம்கூட நன்றாகப் பேசிக் கொண்டிருந்தான்... உம்.ஆ" என எல்லை மீறிய துக்கத்தினால் விஷயத்தைச் சொல்ல முடியாதவாறு இடை இடையே துன்பக் கொட்டாவி விடுவாள். எல்லை மீறிய இன்பம் அடைந்தவனும் இப்படித்தான் சொல்ல முடியாமல் திணறுவான். தாம் அடைந்த இன்ப அநுபவத்தைச் சொல்லும் அருணகிரியாருக்கு இடையிடையே வருகிறது அந்தக் கொட்டாவி. முதல் பாட்டிலேயே, "பேற்றைத் தவம் சற்றுமில்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா" என்று இந்த அநுபவாதிசயம் வெளியாயிற்று. இப்போது பார்க்கப் போகும் பாட்டில், "சொல்லுகைக்கு இல்லை என்று எல்லாம் இழந்து சும்மா இருக்கும் எல்லையுள் செல்ல எனைவிட்டவா!" என்று ஆச்சரியம் ததும்ப வெளிப் படுகிறது கொட்டாவி. "விட்டவாறு என்னே!" என்று சொல்ல முடியாத இன்பத் திணறலைக் காண்கிறோம்.

சில அநுபவங்கள் சொல்ல முடியும்; கேட்டவர்களும் அநுபவிக்க முடியும். பழம் இனிக்கிறது என்று மாத்திரம் சொல்ல முடியும். எப்படி இனிக்கும் என்று ஒருவாறு சொல்ல முடியாது. பழத்தைத் தின்றால்தான் முடியும். ஆனால் ஆத்மாநுபவத்தைச் சொல்லவும் முடியாது; எல்லோரும் அநுபவிக்கவும் முடியாது.

இருவகை எல்லை

'நான் ஒர் எல்லைக்குள் இருந்தேன். பிறகு வேறொரு புதிய எல்லைக்குள் புகும்படி முருகன் அருள் செய்தான் என்று தொடங்குகிறார். அவர் முன்பு இருந்த எல்லை நாம் இப்போது இருக்கும் துன்பமான எல்லை; எதையும் வாக்கினாலே சொல்கிற எல்லை; ஒரு கணம்கூடச் சும்மா இருக்க முடியாத எல்லை. எப்பொழுதும் வேகத்தோடு வாழ்க்கை நடத்துகின்ற அந்த எல்லைக்குள் சும்மா செயலற்று இருக்கும் நிலை இல்லை. எங்கே திரும்பினாலும் ஒரே பேச்சுத்தான். சமய இயலானாலும், அரசியல் துறையானாலும், வியாபார விளம்பரமானாலும் ஒரே பேச்சுத் தான். சும்மா இருப்பதனால்தான் சுகம் என்பதைப் பற்றியே எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் இடம் இது! அருணகிரியார் புகுந்த எல்லை, எல்லாம் அடங்கிச் சும்மா இருக்கும் மோன நிலை.

எல்லாம் இழத்தல்

சும்மா இருக்கும் இடத்துக்கும், நாம் இருக்கிற இடத்துக்கும் நடுவில் ஒர் எல்லை உண்டு. "அந்த எல்லையைத் தாண்டி, சும்மா இருக்கும் எல்லைக்குள் செலுத்தினான்" என்கிறார். "அதைப்பற்றி எதுவும் சொல்லுகைக்கு இல்லை" என்கிறார்.

சொல்லுகைக்கு இல்லைஎன்று எல்லாம் இழந்து சும்
மாஇருக்கும்
எல்லையுட் செல்ல, எனைவிட்டவா!

இழப்பது என்பது நஷ்டம் அல்லவா? என்னிடம் இருந்த ஒன்றை இழந்துவிட்டேன் என்று சொன்னால் அது துக்கப்பட வேண்டிய நிலை. ஆனால், இங்கே இழந்ததைச் சிறப்பித்துப் பேசுகிறார். இழப்பது லாபம் என்று சொல்கிறவர் அருணகிரியார்.

'உல்லாச நிராகுல, யோகஇதச்
சல்லாப விநோதனும் நீஅலையோ?
எல்லாம்அற, என்னை இழந்தநலம்
சொல்லாய்முரு கா!சுர பூபதியே!" என்று அவர் கந்தர் அநுபூதியில் பாடுகிறார். "எல்லாம் அற என்னையும் இழந்த நலம் எப்படி எனச் சொல்லாய், முருகா" என்று கேட்கிறார். எல்லாம் இழந்ததை நலம் என்கிறார்.

பாயசம் சாப்பிட்ட குழந்தை, "அம்மா பாயசம் சாப்பிட்டேனே; அது எப்படி இருந்தது சொல்லம்மா" என்று தாயைக் கேட்பது போல இருக்கிறது இது. அதைச் சுவைத்ததிலே தான் அடைந்த இன்பத்தைக் குழந்தையால் சொல்ல முடிவதில்லை. "உலக இன்பத்தை நுகர்வதற்குக் கருவியாக இருக்கும் கருவி கரணங்களை எல்லாம் இழந்தேன். அவற்றை இன்னவாறு இழந்தேன் என்று சொல்லக்கூட முடியாத வகையில் என்னையும் இழந்து விட்டேன். என்னையே இழந்த பிறகு நுகர்ந்ததை உணரவும், சொல்லவும் நான் இல்லையே! நீ இருக்கிறாய். ஆகையால் நீதான் சொல்ல வேண்டும், முருகா!" என்று கேட்கிறார். எல்லாம் இழப்பதில் தன்னை இழந்ததும் அடங்கும்.

விழுப்புரம் ஸ்டேஷனில் நிறையக் கடைகள் வந்திருக்கின்றன என ஒருவர் கேள்விப்பட்டிருந்தார். ரெயிலில் போகும் போது விழுப்புரம் ஸ்டேஷனைப் பார்க்க வேண்டுமென்று எண்ணினார். ஆனால் சுகமாகக் காற்று வீசியதனால் தூங்கிப் போய்விட்டார். விழுப்புரம் தாண்டிய பிற்பாடுதான் விழித்துக் கொண்டார். அதனால் விழுப்புரம் ஸ்டேஷன் இன்னவாறு இருந்தது என்று அவரால் சொல்ல முடியவில்லை. அப்படி நான் என்ற ஒன்று எப்பொழுதும் விழிப்போடு இருந்தால், தான் அநுபவிக்கிற இன்பம் இன்னவாறு இருந்தது என்று சொல்லலாம். அருணகிரியார் அந்த நான் என்பதையும் இழந்துவிட்டார்; எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கிற நான் என்பதை இழந்த நிலையிலே ஜீவசாட்சியாக இருக்கிற ஒருவன் ஆண்டவன்தான்.

பிறவிப் பிணி

டலைப் பற்றியிருக்கிற நோய் நீங்கினால், உடலுக்கு இன்பம் உண்டு. நோய்க்கு இடம் கொடுக்கிற உடம்பு உண்டாவதே ஒரு நோய் அல்லவா? அதுதான் பிறவிப் பிணி. புழுக்கள், ரத்தம், சீழ் முதலியவை நிரம்பிய அசுத்தமான மலபாண்டமாகிய இது வருவது ஒரு நோய். ஜூரம், தலை வலி முதலானவை உடம்புக்கு வரும் நோய். பிறவி உயிருக்கு வரும் நோய். உலகில் பிறந்து புண்ணியம், பாவம் ஆகிய இரு வினைகளையும் செய்வதனால் பிறவி நோய் உண்டாகிறது. மனம், வாக்கு, காயம் ஆகியவற்றினாலே செய்கின்ற புண்ணிய பாவங்கள்தாம், உயிரைப் பிடிக்கும் நோய்க்குக் காரணம். புண்ணியம் செய்தல் எப்படி நோய்க்குக் காரணமாகும் எனக் கேட்கலாம். புண்ணியம் செய்கின்றவர்கள் தேவர்களாகப் பிறந்திருக்கிறார்கள். பாவம் செய்கிறவர்கள் விலங்குகளாகவும், மனிதர்களாகவும் பிறக்கின்றார்கள். ஆகவே, பிறப்பு ஆகிய பிணி புண்ணியம், பாவம் ஆகிய இரு வினைகளையும் செய்வாருக்கு உண்டு. தங்கத்தினால் செய்த விலங்கைக் கைகளில் பூட்டினாலும், இரும்பினால் ஆன விலங்கைப் பூட்டினாலும் விலங்கு விலங்குதான். தங்கத்தினால் அமைந்த விலங்கு காப்பாகிவிடாது. காப்பாக இருந்தால் இரு கைகளையும் தனித்தனியே வீசி நடப்பதற்கு அநுகூலமாக இருக்கும்; இரு கைகளிலும் தனித்தனியே இருக்கும். புண்ணியம், பாவம் ஆகிய இருவினைகளிலும் ஏற்படுகின்ற நோயினால் உயிருக்குச் சுதந்தரத் தன்மை போய்விடுகிறது. இரண்டாலும் பிறப்பு ஏற்படுகின்றது. பிறப்பதனால் துன்பம் உண்டாகும்.

"இருள்சே ரிருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

என்கிறார் வள்ளுவர். இரண்டு வினைகளையும் இருள்சேர் வினை என்று சொல்கிறார். நாம் செய்கின்ற வினைகளான புண்ணியம், பாவம் ஆகியவற்றினால் உயிரைப் பற்றும் பிறப்பாகிய நோய் வருகின்றது. இறைவனை அடைந்தவர்களிடம் இந்த இருவினையும் சேரா. பிறப்புக்குக் காரணமானவை உடம்பினால் நாம் செய்கின்ற செயல், வாக்கினால் நாம் பேசுகின்ற பேச்சு, நெஞ்சினால் நாம் நினைக்கின்ற நினைப்பு என்பவை.

மூவகை மோனம்

பிறவி என்ற நோய் இல்லாமல் இருந்தால் இன்பம் உண்டாகும். நோய் தீர்ந்தால்தானே இன்பம்? ஆகவே நோய்க்குக் காரணமான செயல்கள் நழுவ வேண்டும்; மூன்று கரணங்களும் செயல் இழந்து போக வேண்டும். மூன்று கரணங்களும்,செயலிழந்து போனால் புண்ணியம் இல்லை; பாவம் இல்லை. புண்ணிய பாவம் இல்லாமையினால் பிறவி நோய் இல்லை. மூன்று கரணங்களும் ஒருங்கே சும்மா இருக்க வேண்டும். ஒர் இடத்தைவிட்டு ஆடாமல் அசையாமல் இருப்பது உடம்பு சும்மா இருத்தல்; எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பது மனம் சும்மா இருத்தல்; எதைப்பற்றியும் பேசாமல் இருப்பது வாக்கு சும்மா இருத்தல். இந்த மூன்றும் மூவகை மோனம்.

சும்மா இருப்பது

ருணகிரியார், "சும்மா இருக்கும் எல்லையுள் செல்ல என்னை விட்டவாறு என்னே" என்று அதிசயப்படுகிறார். பல இடங்களில் அவர் இதைப் பற்றிச் சொல்கிறார். "சும்மா இருப்பது என்ன அவ்வளவு அருமையானதா? சும்மா எதுவும் பேசாமல் இருப்பவர்கள் சோம்பேறிகள் அல்லவா?" என்ற கேள்வி எழலாம்.

ஒர் ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் யாருடனும் எதுவும் பேசாமல் எப்பொழுதும் மௌனமாகவே ஒரு கோயில் திண்ணையில் அமர்ந்திருப்பார். அவருக்கு அந்தக் கோயில் நிர்வாகிகள் ஒரு பட்டைச் சாதம் தினமும் கொடுப்பது வழக்கம். புது நிர்வாகி ஒருவர் வந்தார். கணக்குகளைப் பார்க்கும்போது, "சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை" என்று இருப்பதைக் கண்டார். அவருக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. "சும்மா இருக்கிற சோம்பேறிகளுக்கு எதற்காகச் சோறு? இனி மேல் அந்தச் சாமியாருக்குச் சோறு கொடுக்கக்கூடாது" என்று உத்தரவு பிறப்பித்தார். சாமியாரிடம் மற்றவர்களுக்கு மரியாதை உண்டு. "அப்படிச் சொல்வது சரியல்ல" என்று அவர்கள் சொல்ல விரும்பினாலும் அதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. மெல்ல நிதானமாக, "நீங்கள் அப்படி நினைக்கக் கூடாது. சும்மா இருப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. புலன் ஒடுங்கிய ஞானிகளுக்குத்தான் அது சாத்தியம். அவர் பெரிய ஞானி" என்று அதிகாரியிடம் ஒருவர் சொல்ல ஆரம்பித்தார். "சும்மா இருப்பது என்ன ஐயா அருமை? நான் இன்று முழுவதும் யாருடனும் பேசாமல் சும்மா இருக்கிறேன், பாரும்" என்று பந்தயம் போட்டார் அந்த அதிகாரி. 'சரி' என மற்றவர்கள் விட்டுவிட்டார்கள். அதிகாரி, "இன்றைக்கு யாருடனும் பேசுவது இல்லை" என்ற விரதத்தோடு வீட்டுக்கு வந்தார். இது அவர் மனைவிக்குத் தெரியாது. அவர் வீட்டிற்குள் போவதற்குள்ளேயே, "இன்றைக்கு என்ன சமையல் பண்ணுவது? காய்கறி ஏதாவது வாங்கிக் கொண்டு வருகிறீர்களா?" எனக் கேட்டுக் கொண்டே வந்தாள். அவர் மௌனமாக உள்ளே போனார். அந்த அம்மாவுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. "சரிதான், பேசாவிட்டால் போங்களேன். என்ன சமைக்கிறது என்று கேட்டால் ஊமை போல் இருந்தால் என்ன அர்த்தம்? நானும் பேசாமல் இருந்துவிடுகிறேன்" எனக் கோபமாக உள்ளே போய்விட்டாள். இது ஏதடா வம்பாகப் போய்விட்டதே என்று அதிகாரி ஒன்றும் புரியாமல் மௌனமாகவே இருந்தார். "சாமி" எனக் கோயில் பூக்காரன் வந்தான். "இன்றைக்கு நிலைமாலை கட்ட வேண்டுமா? இல்லாவிட்டால் சரமாகவே கொண்டு வந்துவிடட்டுமா?" என்று கேட்டான். "போங்களடா என் உறுதியைக் குலைப்பவர்கள் போல ஏனடா நிற்கிறீர்கள்?" என்று சொல்ல வேண்டும்போல அவர் மனம் துடித்தது. வாய் பேசவில்லையே தவிர, கையையும் முகத்தையும் காட்டி ஏதோ சைகை செய்தார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தலையைச் சொறிந்துகொண்டே நின்றான். "சாமி மாட்டைப் பட்டிக்குப் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள்" என்று மாட்டுக்காரன் ஓடி வந்தான். அதிகாரியின் முகம் கோபத்தால் சிவந்து போய்விட்டது. உலகம் முழுவதும் அவர் மௌனத்தைக் குலைக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.

அவருக்குத் தம்முடைய ஒரே ஒரு குழந்தையிடம் அன்பு மிகுதி. அந்தக் குழந்தை பள்ளிக்கூடம் போயிருக்கிறான் என எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு பையன் வந்தான். "மாமா, உங்கள் ராமு பள்ளிக்கூடம் வர வில்லையாம்; வாத்தியார் அழைத்து வரச் சொன்னார்" என்றான். உள்ளே மிகக் கோபமாக இருந்த அவருடைய மனைவியின் காதில் இது விழுந்தது. "ஐயையோ பள்ளிக்கூடம் போகிறேன் என்று அவன் எட்டு மணிக்கே போய்விட்டானே! எங்கே போனான்? கொஞ்சம் தேடிப் பாருங்களேன்" என்று அலறிக் கொண்டு ஓடி வந்தாள். "அப்படியா! எங்கே போயிருப்பான்? தனியாகவா போனான்?" என்று அதிகாரி பேசிவிட்டார். "என்னைக் கேட்டால் கொஞ்சம் போய்த்தான் பாருங்களேன்" என்று துடித்தாள் அவர் மனைவி. "டேய் வேலப்பா, டேய் சாமிநாதா, போய்க் குளம், குட்டையைப் பாருங்கடா; நான் பள்ளிக்கூடத்துக்குப் போய்ப் பார்த்து வருகிறேன்" என அந்தப் பையனை அழைத்துக் கொண்டு அதிகாரி வெளியே போய் விட்டார். சில மணி நேரம் எதுவும் பேசாமல் மௌனமாக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது அப்பொழுதான் அவருக்குத் தெரிந்தது. மறுநாள் கோயிலுக்கு வந்தவர், "சும்மா இருக்கிற சாமியாருக்கு இரண்டு பட்டைச் சோறு" என்று உத்தரவு போட்டுவிட்டார்.

மோன நிலைக்கு வழி

சும்மா இருப்பதை மோன நிலை என்று சொல்வார்கள். உடல் அசையாமல் இருப்பது காஷ்ட மௌனம்; வாக்குப் பேசாமல் இருப்பது வாங் மௌனம்; மனம் சிந்திக்காமல் இருப்பது மனோ மௌனம். இந்த மூன்று வகையான மௌனங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. மனம் ஓடாமல் நிற்கிற போதுதான் பேச்சு நிற்கும்; உடம்பு அசையாமல் இருக்கும்.

ஒருவன் கட்டை போலப் படுத்துத் தூங்கினான் என்றால் அது மௌனம் ஆகாது. இருவர் பட்டினி கிடக்கிறார்கள். ஒருவன் உண்பதற்கு எதுவும் இல்லை என்பதனால் பட்டினி கிடக்கிறான். மற்றவன் உண்பதற்கு மிகுதியான பொருள்கள் இருந்தும், ஏகாதசி என்பதனால் ஒன்றையும் உண்ணாது பட்டினி கிடக்கிறான். சாப்பிடுவதற்குப் பொருள் இருந்தும் எதையும் புசிக்காமல் இருப்பதே விரதம். அதைப்போல உடம்பில் உணர்ச்சி இருக்கும் பொழுது, தூண்டுதல் பல இருந்தாலும் ஜாக்கிரத்தில் எதுவும் செய்யாமல் எதுவும் பேசாமல், எதுவும் சிந்திக்காமல் உடம்பு, வாக்கு, மனம், யோகம், ஆசனம் முதலியவற்றால் உடம்பு அசையாமல் இருக்கப் பழகலாம். இது மோன நிலைக்கு முதற்படி. உடம்பும் வாக்கும் எப்பொழுது செயலற்று.. இருக்கும்? மனம் பலபல பொருள்களைப் பற்றிச் சிந்திக்காமல் ஏதேனும் ஒன்றைப் பற்றியே சிந்தித்தால்தான் இருக்கும். அதற்காகத்தான் தியானத்தை வைத்திருக்கிறார்கள். ஏதேனும் ஓர் உருவத்தை மனத்தில் இருத்திக்கொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தால் மனம் அடங்கி மனோலயம் ஏற்படும்.

மனோலயம் வந்த பிறகு மேலும் மேலும் சாதனம் செய்து, அடைவதை அடைந்தவர்களுக்கு மனோ நாசம் ஏற்பட்டுவிடும். ராமகிருஷ்ண பரமஹம்சர் இதற்கு மிகவும் தெளிவான உபமானம் சொல்லியிருக்கிறார். ஒர் உப்புப் பொம்மையைக் கொண்டு நீரின் ஆழத்தை அளக்கத் தொடங்கினால் அது கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே போய்க்கொண்டிருக்கும். நீரின் அடிக்குப் போவதற்குள் பொம்மை கரைந்து போய்விடும். அதுபோல மனத்திலே ஒர் உருவத்தை நினைத்து தியானம் செய்ய ஆரம்பித்தால் தியானம் பண்ணப் பண்ண உடம்பு அடங்கி, வாக்கு அடங்கிப் போகும். கடைசியில் மனத்தில் புதைத்துக் கொண்ட உருவமும் போய் மனம் நின்றுவிடும். இந்த நிலைதான் சும்மா இருக்கும் நிலை.

நாம் சும்மா இருப்பது மனோலயத்தை அடைவதற்கு. முதலில் ஒன்றை மனத்தில் வைத்து மற்றவற்றை மறக்கப் பழகி விட்டால் அந்த ஒன்றையும் கடைசியில் நினைக்காமல் சும்மா இருக்கும் நிலை வரும்.

"முருகக் கடவுள் சும்மா இருக்கும் எல்லைக்குள் என்னைச் செலுத்தினான்" என்றார் அருணகிரியார். எப்படி இந்த நிலை வந்தது? சொல்லுகைக்கு இல்லை. கை இருந்தும் அது எதையும் செய்யவில்லை. கண் இருந்தும் அது எதையும் பார்க்க வில்லை. உடம்பு இருந்தும் அது இயங்கவில்லை. வாக்கு இருந்தும் அது பேசவில்லை. மனம் இருந்தாலும் அது எதையும் சிந்திக்கவில்லை. எல்லாம் இருந்தும் சும்மா இருக்கும் நிலை அது.

வள்ளி நாயகன்

யார் அப்படி விட்டான்? அதைப் பிறகு சொல்கிறார்.

இகல் வேலன் நல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக்
கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத்
தோள் அண்ணல் வல்லபமே. "என்னுடைய ஆற்றலால் நான் எதுவும் செய்யவில்லை. இறைவன் தன்னுடைய அருள் ஆற்றலால் என்னை அந்த எல்லைக்குள் விட்டான். நான் என்னையே இழந்துவிட்டதால் என்னுடைய முயற்சியின் பயனாக அங்கே போகவில்லை. எல்லாம் அற, என்னை இழந்த நலம் விளைவித்தவனாகிய முருகனே அந்த எல்லைக்குள் என்னைச் செலுத்தினான். அவனது அருள் வல்லமை இருக்கிறதே, அதுவே என்னைச் செல்ல விட்டது" என்கிறார்.

அவன் எத்தகையவன்? இகல் வேலன்; பகைவரோடு மாறுபட்டு எதிர்த்து வெல்லும் வேலைக் கையில் உடையவன்.

இறைவன் திருவருளினால் தாம் பெற்ற இன்ப அநுபவத்தை எடுத்துச் சொல்லும்போதெல்லாம் வள்ளியம்பெருமாட்டிக்கு கிடைத்த இன்பத்தையும் நினைப்பூட்டுவது அவர் வழக்கம். இதற்கு முன்பு பாட்டிலே அதைப் பார்த்தோம். உள்ளத்தில் அரும்பும் தனிப் பரமானந்தத்தைச் சொல்ல வந்தவர், "பெரும் பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்பும் குமரன்” என்று பேசினார். அப்படிச் சொல்லும்போது, 'வள்ளி கல்யாணம் என்பது சிற்றின்பக் காதல் அல்ல; பேரின்பக் காதல்; ஆண்டவன் வள்ளியம்பெருமாட்டியைத் தானே வலிய வந்து ஆட்கொண்டு அருள் வெள்ளத்தைப் பாய்ச்சினான்' என்பதையும் புலப்படுத்துகிறார். வள்ளி மணவாளப் பெருமாள் சிற்றின்பத்திற்கு நாயகன் அல்ல, அவன் பேரின்ப அநுபவம் தந்தவன் என்ற குறிப்புத் தோன்றப் பல இடங்களில் கூறுகிறார். இந்தப் பாட்டிலும் வள்ளியைப் பற்றிப் பேசுகிறார்.

வள்ளியின் மொழி

நல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியை.

கொல்லி என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. ஆளைக் கொல்கின்ற நஞ்சுக்குக் கொல்லி என்று பெயர். மற்றொன்று ஒருவித ராகம்; பண். கொல்லி என்பதற்கு நஞ்சு என்ற பொருள் வரக்கூடாது என்பதற்காகவே, "நல்ல கொல்லி' என்கிறார். நல்ல கொல்லிப் பண் எனப் பொருள் கொள்ள வேண்டும். காதுக்கு நல்லதாக, இனிமை தருவதாக இருக்கிற கொல்லிப்

க.சொ.1-20 பண்ணைச் சேர்த்துப் பேசுகின்ற சொல்லை உடையவள் வள்ளி. அவளுடைய பேச்சானது கொல்லிப் பண்ணைப்போல இனிமையாக இருக்கும்.

கல்வரைக் கொவ்வைச் செவ்வாய் வல்லியை

கல்வரை வல்லி, கொவ்வைச் செவ்வாய் வல்லி எனக் கொண்டு பொருள் கொள்ள வேண்டும். வாயிலிருந்து வரும் பேச்சும், அதைப் பேசும் வாயும் அழகையுடையன என்று பாராட்டுகிறார். அவள் கல் நிரம்பிய மலைகளிலே பிறந்தாள். அவள் சொல் கொல்லிப் பண்ணைப்போல இனிமையாக இருந்தது. கோவைப் பழம்போலச் சிவந்த வாயை உடையவள் அவள். கற்கள் நிரம்பிய மலை நாட்டிலே பிறந்தாலும், வள்ளியெம்பெருமாட்டியின் மொழி உள்ளத்தைக் கரைக்கின்ற கொல்லிப் பண்ணைப் போன்றது. அவள் பேச்சிலே முருகன் மயங்கினான். ஆதலால் அவளுடைய அழகில் வேறு எதையும் சொல்லாமல் அருணகிரியார் அவள் சொல்லையே சொல்கிறார். "தேன் என்று பாகு என்று உவமிக்கொணா மொழித் தெய்வ வள்ளி" என்று இதற்கு முந்திய பாட்டிலும் குறிப்பித்தார் அல்லவா? அவளுடைய பேச்சுக்காக ஏங்கி நின்றவன் ஆதலால் அதன் சிறப்பை எடுத்துச் சொன்னார்.

அவள் மொழியைக் கேட்க வேண்டுமென்று என்ன என்ன காரியம் செய்தான்! அவளுக்குக் கோபத்தை ஊட்டிப் பேச வைத்தான். மகிழ்ச்சியை உண்டாக்கிப் பேச வைத்தான். அவள் வாயைத் திறந்து ஏதேனும் சொல்ல மாட்டாளா என ஏங்கினான். அவள் வாக்கிலிருந்து எந்தப் பேச்சு வந்தாலும் இன்பமாக இருந்தது; கொல்லிப் பண்ணைப்போல இருந்தது. குயில் அழுகிறது; சிரிக்கிறது; சண்டை போடுகிறது. அது நமக்குத் தெரியாது. அதன் வாயிலிருந்து எது வந்தாலும் அது நமக்குப் பாட்டுத்தான். வீணை வாசித்தால் மிக இனிமையாக இருக்கிறது. தூக்கத்தில் பக்கத்தில் இருக்கிற வீணையின்மேல் கையைத் தூக்கிப் போடும்போது 'டங்' என ஒலி வந்தாலும் அது காதுக்கு இனிமையாக்த்தான் இருக்கும். அப்படி வள்ளியின் வாயிலிருந்து எந்தச் சொல் வந்தாலும் கொல்லிப் பண்ணைப்போல இருந்ததாம்.

முதலில் வள்ளிநாயகி அவனோடு பேசாமல் மௌனம் சாதித்தாள். அவளுக்கு கோபத்தை உண்டுபண்ணி அவளைப் பேச வைத்தான் முருகன். பேசிக் கொண்டிருந்த அருணகிரி யாரைச் சும்மா இருக்கும் எல்லையுள் செல்லவிட்டவன் யாரோ, அவனே சும்மா இருந்த வள்ளியம்மையைப் பேச வைத்தான்.

3

பேச்சும் மோனமும்

மோன நிலை திடீரென்று வந்துவிடாது. பல பல பொருள்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் வழக்கத்தை மாற்றி இறைவனைப் பற்றி மிகுதியாகப் பேசிப் பழக வேண்டும்.

"பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாள்எல்லாம் பிறவா நாளே”

என்று அப்பர் சொன்னார். வாய் படைத்த பயன் இறைவனை வாழ்த்துவது. மற்ற மற்றக் காரியங்கள் எல்லாம் மெல்ல மெல்ல ஒடுங்க, இறைவனைப் பற்றியே சதா சிந்தித்துக்கொண்டு, அவன் புகழைப்பற்றியே பேசி வர வேண்டும். வாய் படைத்தும், அவனைப் பற்றிப் பேசாமல் இருப்பது என்ன மௌனம்? பலவீன மௌனம். மற்றவற்றைப் பற்றிச் சண்டப் பிரசண்டமாகப் பேசிவிட்டு இதில் மட்டும் மௌனம் சாதிப்பது நல்ல தன்று. இறைவன் நாமத்தைச் சொல்லவிடாமல் தடுப்பது நாணம்; மௌன சாதனையன்று. தன்னைச் சுற்றி உள்ளவர்களை நினைத்துக் கொண்டிருக்கும் போது நாணம் இருக்கும். சொல்வதன் பொருளை நினைத்தால் நாணம் விலகும். நாணம் இருந்தால் இன்பம் இல்லை. இறைவனது திருநாமத்தைச் சொல்வதற்கு நாணினால் இன்ப அநுபவம் கிடைக்காது.

நாணத்தை விட்டுவிட்டு இறைவன் நாமத்தை நாம் சொல்ல வேண்டும். "கூட்டத்திலே கோவிந்தா போடுவது" என்பார்கள். நாலு பேர்களுக்கு மத்தியில் நாமும் சேர்ந்து கூட்டத்தோடு கூட்டமாக இறைவன் நாமத்தைக் கூறினால் நமது அபஸ்வரம் புலப்படாது. பல பேர்களுடைய குரலுக்குள் அது கலந்து போய் விடும். இப்படியே சொல்லிச் சொல்லிப் பழகினால் கடைசியில் தனியாக இருந்து அவன் நாமத்தைக் கூறிக் கதற முடியும். அவன் நாமத்தை உள்ளத்தோடு கலந்து, உணர்ச்சி ததும்பச் சொல்ல வேண்டும். அப்படி வாயார அவன் புகழைப் பாடிப் பழகினால் மௌன நிலை தானே சித்திக்கும். தர்மபத்தினியுடன் இல்லறம் நடத்தி வருகின்றவனைச் சந்நியாசிக்குச் சமமானவன் என்று சொல்வார்கள். அதுபோல இறைவன் பேச்சைத் தவிரப் பிற இழிவான, அவலமான பேச்சுக்களைப் பேசாமல் இருப்பது மௌனத்திற்குச் சமானம். இந்த நிலையை அடுத்து உள்ளத்திற்குள்ளேயே இறைவன் நாமத்தைச் சொல்லும் மௌன நிலை வரும். அப்பால் சொல்லுகைக்கு இல்லை என்று சும்மா இருக்கும் நிலை வரும்.

பேசப் பேச இனிக்கிற பொருள் ஆண்டவன். ஆண்டவனைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால், அந்தப் பேச்சு முடிந்த எல்லையிலே மோனம் தலைப்படும். மௌனம் அநுபவத்திற்கு அறிகுறி.

ஒரு பெண் பேசிக்கொண்டே இருக்கிறாள். வாசலில் கணவன் வருகின்ற காலடி ஓசை கேட்ட மாத்திரத்தில் வாய் அடங்கி விடும். இதைப் போலவே, இன்ப அநுபவம் தலைப்படும்போது தவ நெறியில் மோனம் தலைப்படும். அதுவரைக்கும் இறைவனைப் பற்றியே பேசிக்கொண்டுதான் இருக்க வேண்டும்.

மோனமும் அநுபவமும்

ரு தலைவியைப் பிரிந்து அவள் நாயகன் ஊருக்குப் போகிறான். வர மூன்று நாள் ஆகும் எனச் சொல்லிப் போகிறான். அவன் பிரிவினால் அவளுக்குத் துன்பம் உண்டாகிறது. போகும்போது, "உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். தவறாமல் கடிதம் போடுங்கள்" என்று சொல்லி அனுப்புகிறாள். அவளுக்குத் துணையாக அடுத்த வீட்டுப் பெண் அவள் வீட்டிலேயே தங்கி இருக்கிறாள். தலைவன் ஊருக்குப் போனது முதல் தலைவி தன் தலைவனுடைய குணங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாள். இரண்டு நாளாயின; கடிதம் ஒன்றும் இல்லை. ஒரு நிமிஷம் அவளுக்கு ஒரு யுகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. தலைவன் சொல்லியபடி ஊரிலிருந்து வரவில்லை. தலைவிக்குப் பெருங்கோபம் வந்துவிட்டது. "இவர் எப்போதும் இப்படித்தான். சொன்னால் சொன்னபடி நடப்பதில்லை. கடிதம்கூடப் போடுவதில்லை. வரட்டும் சொல்கிறேன்; என்ன பண்ணுகிறேன் பார்" என்று பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் சொல்கிறாள். ஊரிலிருந்து தலைவன் வந்தவுடன் ஒரு பெரிய சண்டை நடக்கப் போகிறது என்று அந்தத் தோழி நினைக்கிறாள்.

அவன் மறுநாள் வந்துவிட்டான். அவன் வரும் பொழுதே அந்தக் காதலியின் முகத்தில் புன்முறுவல் அரும்பிவிட்டது. எதுவும் பேசாமல் தலைவனுக்குக் காபி போட உள்ளே போய்விட்டாள். பெரிய சண்டை ஆரம்பமாகப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்த தோழிக்குப் பெரிய ஏமாற்றம். 'என்ன என்னவோ கேட்கப் போகிறேன்' எனச் சொல்லிய தலைவி எதுவும் பேசாமல் மௌனமாக இருப்பது அவளுக்கு விந்தையாக இருந்தது. அவன் வெளியில் போனவுடன் மெள்ளப் போய்த் தலைவியை, "நீ ஏதோ சண்டைப் போடப் போவதாகச் சொன்னாயே; உன் கணவனிடம் நிறையக் குற்றங்கள் இருப்பதாக அடுக்கினாயே! ஒன்றையும் கேட்காமல் மௌனமாகவே இருந்துவிட்டாயே?" என்று கேட்கிறாள். அவள் தோழிக்கு விடை சொல்கிறாள். திருக்குறளில் அந்த விடை ஒரு பாட்டாக இருக்கிறது.

"எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து."

பெண்கள் மை இட்டுக் கொள்வது வழக்கம். அதற்காக ஒரு கோல் வைத்திருப்பார்கள். அது தந்தத்தினாலோ, தங்கத்தினாலோ அமைந்திருக்கும். தூர இருக்கும்பொழுது அது தந்தமா, தங்கமா என்பது நன்றாகத் தெரிகிறது. ஆனால் மை தீட்டுவதற்கு அதைக் கண் அருகில் கொண்டு போய்விட்டால் அந்தக் கோல் தெரிவதில்லை. அதுபோலக் கணவன் அருகில் இல்லாதபோது அவன் குறைபாடுகள் தெரிந்தன. ஆனால் அருகில் வந்தபோது, "எழுதுங் கால் கோல் காணாக் கண்ணேபோல் அவன் பழியை நான் காண்பதில்லை" என்கிறாள். நாயகன் அருகில் வந்துவிட்டால் பேச்சு அடங்கிவிடுகிறது. எதுவும் சொல்லத் தோன்றுவதில்லை.

இறைவனை உணராத காலத்தில் அவன்பால் பல குறைகளைச் சொல்லத் தோன்றும். "கடவுளுக்குக் கண் இருந்தால் இப்படி நடக்குமா? என் வேண்டுகோளுக்கு அவன் இரங்காமல் இருக்கிறானே" என்றெல்லாம் பலர் பேசக் கேட்கிறோம். அதைக் கேட்டு, அவர்களுக்குக் கடவுளிடத்தில் பக்தி இல்லையோ என்று நினைக்கத் தோன்றும். இது பக்தியினால் ஏற்படுகின்ற தாபத்தின் விளைவு. அதனால் பல பழிச் சொற்கள் வெளிப்படுகின்றன. இறைவனது அருள் கிடைத்துவிட்டால், தாபம் அடங்கிய தன்மை பிறந்துவிட்டால், பேச்சு எங்கே வரும்? எல்லாம் இழந்த நலம் பிறக்கும்.

வள்ளியின் தன்மை

கல்வரைக் கொவ்வைச்செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோள் அண்ணல்
வல்லபமே.'

ற்கள் நிரம்பிய மலையில் பிறந்த வள்ளியை, கோவைப் பழம் போலச் சிவந்த வாயை உடைய வள்ளியை, தன்னுடைய பெரிய மலை போன்ற தோளில் அணைந்தான் முருகன். வள்ளி வாழ்ந்தது மலை. அவள் அடைந்ததும் மலைதான். குறமகளாகக் கல் மலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் வரையிலும் அவளுக்கு இன்பம் இல்லை; துன்பந்தான் இருந்தது. முருகனது தோளாகிய மலையை அடைந்தவுடன் இன்பம் உண்டாயிற்று. உயிரானது ஒன்றோடு இணைந்தே இருக்கும். பாசத்தோடாவது பதியோடாவது சேர்ந்தே இருக்கும். பாசத்தோடு இணைந்திருக்கிற வரையில் அதற்குத் துன்பந்தான். பதியோடு இணைந்துவிட்டால் இன்பம் உண்டாகும். கல் நிரம்பிய மலைகளிலே உறைந்திருந்த வள்ளியின் நிலை, ஆன்மா பாசத்தோடு இணைந்திருப்பதற்கு ஒப்பானது. வள்ளி முருகப் பெருமானது மலை போன்ற புயங்களின் அணைப்பைப் பெற்ற நிலை ஆன்மா பதியை அடைந்ததற்குச் சமானம்.

"கொல்லிப் பண்ணைப் போன்ற இனிமையான சொல்லை உடையவளும், சிவந்த வாயை உடையவளும் மலையில் பிறந்த வளுமாகிய வள்ளியை, தன் புயங்களாகிய மலையில் முருகன் அணைந்தான். அவன் அருள் வல்லமை இருக்கிறதே, அது என்னைப் பேச்சு அற்ற மோன நிலையான சும்மா இருக்கிற எல்லைக்குள் செல்ல விட்டது; எல்லாம் இழந்த இன்ப நலத்தை அளித்தது" என்கிறார் அருணகிரியார்.

சொல்லுகைக்கு இல்லைஎன்று எல்லாம்
இழந்துசும் மாஇருக்கும்
எல்லையுள் செல்ல எனைவிட்ட
வா! இகல் வேலன் நல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக்
கல்வரைக் கொவ்வைச்செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத்
தோள் அண்ணல் வல்லபமே!

(பகைவரோடு போராடுகின்ற வேலையுடைய முருகன், கேட்பதற்கு இனிய கொல்லிப் பண்ணின் தன்மையைச் சேர்க்கின்ற சொல்லையுடையவளும், கற்களையுடைய மலையில் இருந்தவளும், கொவ்வைப்பழம் போன்ற சிவந்த வாயையுடையவளுமாகிய வள்ளி நாயகியைத் தழுவுகின்ற பெரிய மலை போன்ற தோள்களையுடைய பெருமை பெற்ற முருகனுடைய அருள் வல்லமை, சொல்வதற்கு இல்லை என்று கருவி கரணங்களெல்லாம் நழுவ அவற்றை இழந்து சும்மா இருக்கும் எல்லைக்குள்ளே செல்லும்படி என்னை விட்டவாறு என்ன ஆச்சரியம்!

விட்டவா-விட்டவாறு என்னே! இகல்-இகலுகின்ற; பகைவரோடு மாறுபடுகின்ற, கொல்லி-ஒரு பண். வரை-மலை. வல்லி-வள்ளிநாயகி. புல்கின்ற-அணைகின்ற; புல்குகின்ற என்பது செய்யுளை நோக்கி விகார மாயிற்று. மால்-பெருமை. வல்லபம்-ஆற்றல். வல்லபம் விட்டவா!)