திருவிளையாடற் புராணம்/45

விக்கிமூலம் இலிருந்து




45. பன்றிக் குட்டிக்குப் பால் கொடுத்தபடலம்

குரு விருந்து துறை என்னும் ஊரில் சகலன் என்னும் பெயரினன் ஒரு வேளாளன் இருந்தான். அவன் மனைவி சகலை என்பாள் பத்துக்கு மேல் இரண்டு புதல்வர்களைப் பெற்றாள். பன்றி குட்டிகளைப் போடுவதைப் போல் அளவு மிக்குப் பிள்ளைகளைப் பெற்றாள் அவர்களை வளர்ப்பதில் கருத்தும் கவலையும் செலுத்தவில்லை' செல்வம் கொடுத்து வளர்த்து அவர்களைப் பாழாக்கி விட்டார்கள். விதிவசத்தால் சதிபதிகள் இருவரும் உயர்கதி அடைந்து விட்டார்கள். அடக்குவதற்கும் அன்புடன் அணைப்பதற்கும் அன்னையும் தந்தையும் இல்லாமல் போய்விட்டார்கள்.

ஊர் சுற்றும் தறுதலைகளாக மாறிவிட்டார்கள். பெரியவர்களை மதிக்கும் பெருமை அவர்களிடத்தில் இல்லாமல் போய்விட்டது. தேவ குருவாகிய பிரகஸ்பதி அங்கே மதுரையில் தவம் செய்து கொண்டிருக்க அவருக்குத் தொல்லைகள் தந்தனர். கல்லெடுத்து எறிந்து அவர் சினச் சொல்லை எழுப்பி வைத்தார்கள். வேளாளராய்ப் பிறந்த உங்களைப் பிள்ளைகள் என்று சொல்வதை விடப் பன்றிகள் என்று தான் சொல்ல வேண்டும்' என்றார் அவர்.

நன்று என்று கூறி நகைத்தார்கள். ' பன்றிகளாகவே பிறக்கக் கடவீர்' என்று சாபம் இட்டார். சாபம் கேட்டவுடன் தாங்கள் செய்த பாவத்துக்கு வருந்தினர். வீணாகக் கோபத்தை எழுப்பிவிட்டோமே என்று அழுதவாறு சாபம் தீர வழி கேட்டனர். மறுபடியும் மனிதராக ஆக வேண்டுமானால் உங்களைப் படைத்த பிரமன் தான் வரவேண்டும்; நீங்கள் சோறு தண்ணீர் இன்றிப் பன்றிகளாகத் திரியும் போது உம்மீது இரக்கப்பட்டுச் சிவனே தாய்ப்பன்றியாக வந்து முலை தந்து உம் நிலையை மாற்றுவார் அப்பொழுதுதான் உமக்கு விதித்த சாபம் தீரும்" என்று சொல்லிப் போனார்.

அச்சாபத்தின்படி பன்றிக் குட்டிகளாக அவ்வூர்ப் புறங்காட்டில் பிறந்தனர். அவற்றின் தந்தையும் தாயும் பன்றி அரசனாகவும் அரசியாகவும் இருந்தனர். இராசராச பாண்டியன் வேட்டையாட வந்த போது காட்டு விலங்குகளைக் கலங்க வைத்தான்; பன்றிகள் பதறின; நான்கு பக்கமும் சிதறின. அவை அவர்கள் அரசன் அரசியிடம் வந்து கதறின. வீரம் மிக்க பன்றி அரசனை எதிர்ப்பது என்று முடிவு செய்தது. பன்றிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து குன்று போல் குவிந்து தாக்கின: இறுதியில் ஆண் பன்றியும் பெண் பன்றியும் போரிட்டு உயிர் துறந்து வீர சுவர்க்கம் அடைந்தன.

பால் கொடுக்க முடியாமல் பரமன் திருவடியை இப்பன்றிகள் அடைந்து விட்டபடியால் அதன் குட்டிகள் பன்னிரண்டும் அனாதைகள் ஆயின. அவை அழுத அழுகை மீனாட்சி அம்மையின் செவிகளில் பட்டது: அவர்களிடம் இரக்கம்காட்டும் அம்மையாரின் குறிப்பறிந்து உயிர்களின் பரமபிதாவாகிய இறைவன் பன்றியின் உரு வெடுத்து அவற்றிற்கு முலைப்பால் ஈந்தார்.

அடுத்த பிறவியில் மானிட உருவும் பன்றியின் முகமும் கொண்ட கலவைப் பிறப்பைப் பெற்றனர். அவர்கள் அமைச்சர்களாக இருந்து பணியாற்றினர்.

பன்றி போரில் பட்டு உயிர் துறந்த இடம் மலையாக மாறியது; பன்றிமலை என்று யோகிகளும் தவசிகளும் அங்கு வந்து தங்கித் தவம் செய்து உயர்பேறு பெற்றார்கள் பன்றியாகப் பிறந்தாலும் வீரத்தோடு போரிட்டு உயிர் துறந்ததால் அம்மலை சக்தி வாய்ந்ததாக விளங்கியது. 

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவிளையாடற்_புராணம்/45&oldid=1113111" இலிருந்து மீள்விக்கப்பட்டது