திருவிளையாடற் புராணம்/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

46. பன்றிக்குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்

பன்றி மலையில் இப்பன்னிருவரும் பிறந்து கலவைப் பிறப்பாகக் காட்சி அளித்தனர். முகம் மட்டும் பன்றி; உடம்பு அறிவு ஆற்றல் இவற்றில் மானிடராக இருந்தனர். இறைவன் முலைப்பால் குடித்ததால் தெய்வ ஞானமும் கூர்த்த அறிவும் தருமம் அறிந்து செயல்படும் திறமும் அவர்கள் பால் அமைந்தன. பாண்டியன் இராசராசன் கனவில் சோமசுந்தரக் கடவுள் தோன்றிப் பன்றிகள் பன்னிருவரையும் அமைச்சர்களாக ஏற்றுக் கொள்ளுமாறு அறிவித்தார். முகலட்சணம் பொருந்திய அமைச்சர்கள் இருந்த இடத்தில் அவலட்சணம் மிக்க இவர்களை அவன் அமைச்சராக்கினான்.

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று வள்ளுவர் கூறியதற்கு ஏற்ப அவர்கள் உருவைக் கண்டு. அரசன் இகழ்ச்சி காட்டவில்லை. அவனுக்குக் கவசம் போல் இருந்து அவர்கள் காத்து வந்தனர். சாபத்தால் பன்றிக் குட்டிகள் ஆகப் பிறந்தவர்கள் இறைவன் திருவருளால் அமைச்சர்கள் ஆயினர்.

பழைய அமைச்சர்களின் குமாரிகளை இவர்களுக்குத் திருமணம் செய்வித்து அவர்களுக்கு நல்வாழ்வு கொடுத்தான். அவர்களும் இவர்களைப் பன்றி முகத்தவர் எனக் கொண்டு அருவெறுப்புக் காட்டவில்லை. கடவுள் அருள் பெற்றவர்கள் என்பதால் அவர்களிடம் ஞாண ஒளியும் பேரழகும் மிக்குக் காணப்பட்டன.

மனித முகங்களைப் பார்த்துப் பழகியவர்களுக்கு இது புதுமையாக இருந்தாலும் இப்படியும் வாழ முடியும் என்ற ஒரு புதுமையைக் காணமுடிந்தது. மனிதன் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று பழகிய பின் இப்படிக் கலவையாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கு இவர்கள் உருத்தந்தார்கள். இரண்டும் கெட்ட நிலையில் அவர்கள் வாழ முடிந்தது.

மனிதர்களுள் பலர் குரங்கு முகமும் பன்றி முகமும் பெற்று இருப்பதாக எள்ளி நகையாடல் உண்டு; அது உண்மையாகவே இருந்தது என்பதற்கு ஏற்பப் புதுமையான படைப்பாகும்.