திருவிளையாடற் புராணம்/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

47. கரிக்குருவிக்கு உபதேசஞ் செய்த படலம்

இராசராசனுக்குப்பின் அவன் மகன் சுகுண பாண்டியன் ஆட்சிக்கு வந்தான். அவன் ஆட்சிக் காலத்தில் ஒருவன் தருமங்கள் பல செய்தும் பாவம் சில செய்ததால் கரிக்குருவியாகப் பிறந்தான். கரிக்குருவிக்குப் பகையாகக் காகங்கள் அமைந்தன. கரிக்குருவி மிகச் சிறிய வடிவமாக இருந்ததால் காக்கையின் குத்தலுக்குத் தப்ப முடியவில்லை. அவை தலையைக் குத்திக் குத்திப் புண் ஆக்கிவிட்டன; கத்திக் கத்திப் பார்த்தும் பயன் இல்லை; தத்தித் தத்திப் பறந்து நகரத்தைவிட்டு வனத்துக்குச் சென்று தப்பிப் பிழைத்தது. அங்கே ஒரு மரத்தின் கிளையில் ஏறி உட்கார்ந்து கொண்டது. தனக்கு விமோசனமே இல்லையா என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

தான் இருந்த மரத்தின் அடியில் தவ முனிவர் ஒருவர் சீடர் சிலருக்குச் சிவத்தலங்களின் பெருமையைச் சொல்லிக் கொண்டிருந்தார். தீர்த்தம், தலம், மூர்த்தி இம் மூன்றாலும் சிறந்து பாவங்களைத் தீர்த்து வைக்கும் பரமன் இருக்குமிடம் மதுரைதான் என்று தெரிவித்தார். அங்குச் சென்று வழிபடுவோருக்குப் பாவ விடுதலை கிடைக்கும் என்றும் பயன் மிகுதி உண்டாகும் என்றும் கூறிக்கொண்டிருந்தார். அவற்றைக் கேட்கும் போதே அதற்குத் தன் சென்ற பிறவியின் நினைவுகளும் இப்பிறவியில் ஏற்பட்ட இடும்பைகளும் விளங்கின.

மதுரை நோக்கி விண்ணில் பயணம் செய்தது. வைகை நதி வந்ததும் வையகமே தன் கைக்கு வந்து விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. பொற்றாமரைக் குளத்தில் முழுகி எழுந்து இறைவன் நற்றாளை வழிபட்டு மூன்று நாட்கள் தொடர்ந்து இச்செயல்பாட்டில் இறங்கியது. தவசிகளும் யோகிகளும் அரசர்களும் தேவர்களும் வழிபடும் காட்சியைக் கண்டு வந்த மீனாட்சி அம்மையாருக்குக் கரிக்குருவியின் செயல் வியப்பை தந்தது.

"இந்தக் கரிக்குருவியைப் பார்த்தீர்களா? இதன் செய்கை புதுமையாக உள்ளதே" என்றாள் மீனாட்சி அம்மை.

"தெரியும், அது முற்பிறவியில் செய்த தவறு இப்பிறப்பில் கரிக்குருவியாகிவிட்டது; கரிய நிறமுள்ள காகமாகவும் பிறக்கவில்லை. கொத்தித் தின்று உயிர் வாழும் குருவியாகவும் பிறக்கவில்லை. இரண்டும் சேர்ந்த தனிப்பிறவி இது" என்றார்.

"தருமங்கள் பல செய்தவர் ஆயினும் அவர்கள் கருமங்கள் அனைத்தும் விரும்பத்தக்கவையாக இருக்க வேண்டும். பாவ காரியம் சில செய்ததால் இப்பிறவியில் பரிதவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தவறு நினைத்துத் திருந்தி விட்டதால் அதனை மன்னித்து ஏற்றமிகு வாழ்வு தரவேண்டுவது நம் கடமை" என்றுகூறி அக்கரிக்குருவியை ஆட்கொண்டார்.

"உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார்

"வலிமை வேண்டும்; கரியான் என்ற பெயர் மாறி வலியான் என்ற பெயர் நிலவ வேண்டும்" என்று கேட்டுக் கொண்டது.

"அப்படியே ஆகுக" என்று இறைவன் அருள் செய்தார்.

"எனக்கு மட்டுமல்ல; எங்கள் இனத்துக்கே இப்பெயர் நிலவ வேண்டும்" என்று கேட்டுக் கொண்டது.

"தக்கவன் வாழத் தன் கிளையும் வாழும் என்னும் பழமொழிக்கேற்ப அப்பறவை இனத்துக்கே இப்பெயர் அமைவதாயிற்று.