அந்தமான் கைதி/32

விக்கிமூலம் இலிருந்து


காட்சி 32.


இடம் : பாலு வீடு, தனி அறை.

காலம்: மாலை.

பாத்திரங்கள்: பாலு, நடராஜன், ஜம்பு.
(பாலசுந்தரம் ஆத்திரத்துடன் லீலாவின் படத்தை எடுத்து வைத்துக் கொண்டு)

பாலு: அடி சண்டாளி! துரோகி! விபசாரி! இன்னுமா உன் படம் இங்கு இருக்க வேண்டும்? மோசக்காரி! (படத்தைக் கீழே போட்டு மிதிக்கிறான்) பணத்திற்காக ஒரு கிழவனைக் கட்டிக் கொண்டாய் காம நோயைத் தீர்க்க இப்போது ஒரு வாலிபனை அதிலும் நெடுநாளாய் வேப்பங்காய் என்று வெறுத்துப் பாசாங்கு செய்த ஜம்புவைப் பிடித்துக் கொண்டாய். ஆகா! என்னே உன் வாழ்க்கை. தூ தூ மகாவெட்கம், விபசாரி கூட இவ்வளவு இழிவாய் நடக்கத் துணியாள் சே! என்ன உலகமோ (வருத்தத்துடன் தலையைக் கவிழ்ந்து கொண்டிருக்கிறான். நடராஜன் வருகிறான். பாலு திடுக்கிட்டு) யார்? நீங்களா! வாருங்கள் இப்படி உட்காருங்கள். ஊரிலிருந்து எப்பொழுது வந்தீர்கள்?

நட : (உட்கார்ந்தபடியே) நேற்று வந்தேன்.

பாலு : ஏது இவ்வளவு தூரம் அபூர்வமாக இருக்கிறதே!.

நட : ஏன் வரக்கூடாதா என்ன?

பாலு : இல்லை, இல்லை. இதுவரை வந்ததில்லையே என்று தான் கேட்டேன்.

நட : உன்னிடம் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறித்துப் பேச வேண்டும்; அதற்காகத்தான் வந்தேன்.

பாலு : யார்-என்னிடத்திலா?

நட : ஆம், என் தங்கை லீலா விஷயமாக!

பாலு : என்ன! உங்கள் தங்கை விஷயமாகவா? என்னிடமா?

நட : ஆமாம், உன்னிடம்தான் பாலு! உனக்கும் லீலாவுக்கும் எவ்வளவு ஆழ்ந்த அன்பு உண்டென்பது எனக்குத் தெரியும்.

பாலு : உண்மைதான்! அது ஒரு காலம். அதற்கு இப்பொழுது என்ன? லீலாவுக்குத்தான் கல்யாணமாகி எத்தனையோ நாட்களாயிற்றே.  நட : ஆமாம் கல்யாணமாகிவிட்டது, அதை நீயும் ஒப்புக் கொள்ளுகிறாயா? உன் இருதயம் அதை ஆதரிக்கிறதா?

பாலு : நான் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் உலகம் ஒப்புக்கொண்டுவிட்டது. இனி என்ன?

நட : உலகம் ஒப்புக்கொள்ளும், இந்த அக்ரம உலகம் எதைத்தான் ஒப்புக்கொள்ளாது? உலகமா ஒப்புக் கொண்டது-இல்லை. உலகத்தில் உள்ள மடையர்கள் ஒப்புக் கொண்டார்கள் என்று சொல்.

பாலு : அதற்கு நாமென்ன செய்ய முடியும்?

நட : நாமென்ன செய்ய முடியுமா? எல்லாம் நம்மிடம் தான் இருக்கிறது? நம்மைப் போன்ற வாலிபர்கள் துணிந்தால் அதைத் தடுக்க முடியுமா முடியாதா?

பாலு : முடியும். முடியாதென்று யார் சொன்னது!

நட : அப்படியானால் நீ என் தங்கையை மனப்பூர்வமாகக் காதலித்திருந்தும் அவளுக்கு ஏற்பட்ட இந்த அக்ரமத்தை ஏன் தடுத்திருக்கக் கூடாது? தடுக்க முடியா விட்டாலும் பரவாயில்லை. தடுக்கவாவது முயற்சி செய்தாயா?

பாலு : இதில் நான் என்ன செய்ய முடியும்? லீலாவே சம்மதித்துக் காரியம் நடக்கும்போது அதைத் தடுக்க எனக்கு என்ன உரிமையிருக்கிறது?

நட : பாலு! உன் குற்றத்தை நீ லீலாவின் மீது சுமத்தப் பார்க்கிறாய். பெண்களின் சம்மதத்தைக் கேட்டுக் கல்யாணம் செய்வதென்பதே நம் நாட்டு வழக்கமில்லையே! உடைந்து போகும் பொம்மையை வாங்கவும், கிழிந்து போகும் புடவையை வாங்கவும், பெண்களின் அபிப்பிராயத்தைக் கேட்கும் பெற்றோர்கள், வாழ்க்கை முழுவதும் இன்ப துன்பங்களுக்குக் காரணமா யிருக்கும் திருமண விஷயத்தில் தங்கள் மனம்போன போக்கில் தானே நடந்து வருகிறார்கள். பெண்களுக்கு அந்தச் சுதந்திரமாவது இருந்திருந்தால் நம் நாடு எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்குகுமே... பாலு! போனது போகட்டும். இப்பொழுது ஒன்றும் மோசம் வந்து விடவில்லை. உன்னையே உண்மையாய் நேசித்து வரும் ஒரு பெண்ணை, அல்லும் பகலும் உன்னையே நினைந்து நினைந்து உருகும் ஒரு அபலையை இப்போது நீ காப்பாற்றப் போகிறாயா, இல்லையா?

பாலு : என்ன லீலாவையா? இனிமேலா? அது எப்படி முடியும்?

நட : ஆம், லீலாவைத்தான்! என் தங்கை லீலாவைத் தான் பாலு! நான் மானத்தை விட்டுச் சொல்லுகிறேன்; லீலாவை நானே அழைத்து வந்து உனக்கு. மறுமணம் செய்து வைக்கிறேன்; சம்மதம் தானே?

பாலு : (ஏளனச் சிரிப்புடன்) அது நமக்குச் சரி. ஆனாலும் எங்கள் வீட்டிலுள்ளவர்களும் மற்றவர்களும் சம்மதிக்க வேண்டாமா? மேலும் இன்னொருவனுக்கு வாழ்க்கைத் துணைவியான ஒருத்தியை நான் திரும்பவும் மணப்பதென்றால் உலகம் என்னைப் பழிக்காதா?

நட : அதைத்தான் நான் முன்பே சொல்லி விட்டேனே, பாலு! நம்மைப் போன்றவர்கள் துணிந்தால்தான், இவைகளை யெல்லாம் சீர்திருத்த முடியும்.

பாலு : என்னை மன்னிக்க வேண்டும். நான் இன்னும் அவ்வளவு சிறந்த சீர்திருத்தக்காரன் என்ற நிலைக்கு வரவில்லை.  நட : பாலு வெட்கமில்லையா உனக்கு! நான் அந்த நிலைக்கு வரவில்லை யென்று சொல்ல உன் நாவு கூசவில்லை? அவ்வளவு நெஞ்சுத் துணிவில்லாத நீ ஏன் என் தங்கையைக் காதலித்தாய்? பெற்றோருக்கும் உலகத்துக்கும் பயப்படும் இந்தப் புத்தி உனக்கு ஏன் அப்பொழுதே இல்லாமல் போயிற்று? காதலிக்கத் துணிந்த உனக்கு அதன் விளைவுகளை ஏற்கத் துணிவில்லையா? பாலு! காதல் எதையும் பொருட்படுத்தா தென்பதை நீ யறியாயா? காதலுக்காக எத்தனையோ பேர் எவ்வளவோ பெரிய தியாகங்களை யெல்லாம் செய்திருக்கிறார்களே! அப்படியிருக்கப் பிறர் இழிவாகப் பேசுவார்களே என்பதற்காக உன் காதலியை இழந்துவிடப் போகிறாயா?

பாலு : இழந்துவிடப் போவதென்ன? (பெருமூச்சிட்டு) இழந்துதான் ஆயிற்றே. இனியொரு தரமா அதை விரும்பவேண்டும்?

நட : அப்படியானால் நான் சொல்வதை நீ கேட்க மாட்டாயா?

பாலு : கேட்கக் கூடியதாயில்லை. மன்னிக்கவேண்டும். என் உள்ளம் முன்பே புண்பட்டிருக்கிறது. நீங்கள் மறுபடியும் மறுபடியும் ஒரு விபசாரிக்காகப் பரிந்து பேசுவது......

நட : (நெருப்பை மிதித்தவனைப் போல் துடித்து) ஆஹா, என்ன சொன்னாய் (ஓங்கி பாலுவை அறைகிறான், ஆத்திரத்தில் வெறி பிடித்தவன் போல்) விபச்சாரி விபச்சாரி!! யார் என் தங்கையா விபச் சாரி அடே பேடி, உன்னையும் ஒரு மனிதன் என்று நினைத்துத் தன் விலை மதிப்பற்ற காதலை விரையமாக்கினாளே, என் தங்கை. துரோகி உன்னைப்போல் உணர்ச்சியற்ற சோம்பேறிகள் இருக்கும்வரை இந்த நாடு எப்படி முன்னேறப்போகிறது; ஒரு பேதைப் பெண்ணின் உள்ளத்தில் காதலை விதைத்து வளர்த்துப் பயிராக்கி முடிவில் அதை அடியோடு பாழ் படுத்திவிட்டாயே! ச்சீய், ஆண் மகனா நீ? இனியாவது உன்னைப் போன்ற பேடிகள் இப்படிச் செய்யாமல் இருக்கும் பொருட்டாவது உன் மூடத்தனத்துக்கு, உன் அற்பத்தனத்துக்கு, உன் கோழைத் தனத்துக்கு, இல்லை, இந்நாட்டுக் கற்பரசிகளின் விடுதலைக்காகவாவது, என் அன்பில் என் ரத்தத்தில் ஊறிய என் தங்கையையும் என்னையும் பலி கொடுக்கிறேன். பிறகாவது உன் போன்ற கோழைகள் வாழட்டும்.
(நடராஜன் ஓடுகிறான்.)

பாலு : (எதிர்பாராத விதமாய் வீழ்ந்த அடியிலும் பேச்சிலும் ஸ்தம்பித்துக் கன்னத்தைத் தடவியபடி, தனக்குள்) லீலா விபச்சாரி இல்லையா! லீலா விபச்சாரி இல்லையா! லீலா விபச்சாரி யில்லையா? நான் பார்த்தேனே! அவன் அந்த ஜம்பு அவளைத் தன் இரு கைகளாலும் அணைத்துத் தூக்கி.......

(மற்றொரு புறத்திலிருந்து ஜம்பு ஓடி வருகிறான்.)

ஜம்பு : பாலு! பாலு! லீலா விபச்சாரியில்லை. லீலா விபச்சாரியில்லை. நீ நினைப்பது தவறு. அவள் மகா உத்தமி!

பாலு : யார், ஜம்புவா லீலாவின் புதிய காதலன? அடே அயோக்கியப் பயல்களா! யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? (பாலு திடீரென்று ஜம்புவின் மீது பாய்ந்து அவன் கழுத்தைப் பிடித்து அழுத்திக் கொல்ல முயற்சிக்கிறான்.)

ஜம்பு : (கம்மிய குரலில்) பாலு சத்தியமாகச் சொல்லுகிறேன். உன் காதலி லீலா விபச்சாரியல்ல; மகா உத்தமி. அவள் உன்மீது கொண்டது உண்மையான காதல், பரிசுத்தமான காதல், ஒப்பற்ற காதல்...

பாலு : என் லீலா உத்தமியா?

ஜம்பு : ஆம். என் வார்த்தையை நம்பு; அவளைக் கை விடாதே; காப்பாற்று! உங்கள் மறுமணத்திற்கு நானே ஏற்பாடு செய்கிறேன். பாவியாகிய என்னை மன்னித்துவிடு, என்னை மன்னித்துவிடு. இந்தப் பழிக்கெல்லாம் நானே காரணம்.

பாலு: லீலா... லீலா... ஐயோ... நடராஜன் அவளைக் கொன்றுவிடுவதாக..... லீலா...... லீலா......

(அலறிக்கொண்டே ஓடுகிறான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/32&oldid=1073525" இலிருந்து மீள்விக்கப்பட்டது