திருவிளையாடற் புராணம்/17

விக்கிமூலம் இலிருந்து

அவர் கூறியபடியே அரபத்தர் என்ற அந்த வேதியரை அழைத்துக் கொண்டு மதுரைக்குச் சென்று தட்சிணா மூர்த்தியைத் தினந்தோறும் முறைப்படி வணங்கி வழி பட்டனர். தட்சிணாமூர்த்தி குருவடிவில் வந்து திருவாலவாய் உடையவராகிய சோமசுந்தரக் கடவுளின் சந்நிதியை அடைந்து அவர்களை அங்கே அமர வைத்து வேதத்தில் உட்பொருளை விளக்கிக் கூறினார்.

வேதம் உணர்த்தும் பொருள் கடவுள் என்பதாகும். அக்கடவுள் என்ற மெய்ப் பொருள் எல்லாமும் யாவையுமாகி எங்கும் நிறைந்து எல்லா உயிர்களிலும் பொருள்களிலும் நீக்கமற நிறைந்து சத்து சித்து ஆனந்தவடிவமாக நிற்பது என்று கூறப்பட்டது. சத்து என்பது உண்மை; சித்து என்பது அறிவு, ஆனந்தம் என்பது மகிழ்ச்சி. இம் மூன்றையும் அறிந்து உணர்வதே கடவுள் ஞானம் என்று உணர்த்தப்பட்டது. எனவே மானுடர்கள் நிலைத்த உண்மைகளை உணர முற்பட்டு ஒழுக்க மேம்பாட்டிற்கு வேண்டிய அறிவினைப் பெற்றுப் பேரின்ப வாழ்வு வாழ முற்படுவதே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்பது உணர்த்தப்பட்டது.

வேதத்தின் உட்பொருளை விரித்துரைத்துத் தட்சிணா மூர்த்தியாக வந்த காட்சியைக் கண்டு அம்முனிவர்கள் தெளிவு பெற்றவராய் மதுரையை விட்டுத் தம் வனம் போய்ச் சேர்ந்தனர். 

17. மாணிக்கம் விற்ற படலம்

வீர பாண்டியன் காமக்கிழத்தியர் சிலரோடு உறவு கொண்டான்; அவர்கள். வயிற்றில் பிறந்த புதல்வர்கள் ஒழுங்காக வளர்க்கப்படவில்லை; அவர்கள் தீய ஒழுக்கங்களில் பழகி நற்பண்பிழந்து வெறுக்கத் தக்கவர் ஆயினர். கட்டிய மனைவிக்குப் புதல்வன் பிறக்காத குறை அவனை அரித்துக் கொண்டு வந்தது. வேள்விகளும் விரதங்களும் மேற்கொண்டு சோம சுந்தரக் கடவுளை வழிபட்டு தான் பயனாக இனிய மகன் ஒருவனைப் பெற்றான். அதன் ஐந்து வயது இருக்கும் போதே வீரபாண்டியன் புலி வேட்டைக்குச் சென்று தன் உயிர் துறந்தான். திக்கற்ற அக்குடும்பத்தில் கேட்பார் இன்மையின் மூத்த புதல்வர்கள் வீடு புகுந்து அரச முடியையும் ஆபரணங்களையும் ரத்தினங்களையும் முத்துக் குவியல்களையும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு போய்விட்டனர். வீரபாண்டியனுக்கு அந்திமக்கடன் அனைத்தையும் அவன் இளைய மகன் செய்து முடித்தான்.

பட்டத்துக்குரிய வயதுக்கு வந்ததும் அவனை அரசனாக்குவதற்கு அமைச்சர்களும் நகரமாந்தர்களும் முற்பட்டனர். அவனுக்கு மணிமுடி சூட்ட அணிகலன்கள் வைத்திருந்த பேரறையைத் திறந்து பார்த்தனர். அங்கிருந்த விலையுயர்ந்த பொருள்களும் மாணிக்கக் கற்களும் இரத்தின முடியும் கொள்ளை கொண்டு போய்விட்டதை அறிந்தார்கள். மறுபடியும் அவற்றை அவர்கள் எங்குப் போய்ச் சேகரிப்பது பாண்டிய மன்னர்கள் தொன்று தொட்டு ஈட்டிய செல்வம் அனைத்தும் பறிபோய்விட்டன. என் செய்வது? பொன் செய்யும் வழி அறிந்திலர்; மன்னன் செய்த மடமை இது.

பாண்டியன் மகன் சோமசுந்தரரிடம் முறையிடப் பரிவாரத்தோடு சென்றான்; அரண்மனையை விட்டு அடியெடுத்து வெளியே கால் வைத்ததும் மாணிக்க வணிகர் ஒருவர் கோணிப்பை நிறைய மாணிக்கமும் நவரத்தினமும் கொண்டு வந்து அவன்முன் காட்டினார்.

முடி செய்ய இவற்றைக் கொண்டு முடியும் என்று விவரித்தார். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது என்பது பழமொழி. தெய்வமே உண்மையில் அவர்களைத் தேடி வந்ததை அவர்கள் அறிந்திலர்.

"அரசன் முடி செய்வதற்கு உம்மிடம் இரத்தினக்கல் உளவோ" என்று கேட்டனர்.

"உண்டு; அவற்றை வாங்க உம்மிடம் கோடி பொன் உளவோ" என்று கேட்டார்.

"பொன் உண்டு மணி இல்லை" என்றார்கள். சேர்ந்து அமைதல் அரிதுதான்.

அவ்வணிகர் கரிய நிறத் துண்டை விரித்து வைரமும் முத்தும் மணியும் மற்றும் உள்ள ஒளிமிக்க நவரத்தினமும் காட்டி வேண்டுவன எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.

கிரீடத்திற்கு வேண்டிய கற்களைப் பொறுக்கிக் கொண்டனர்.

சோமசுந்தரக் கடவுளிடம் இவற்றைக் காட்டி இதை அணியும் அரச மகன் ஆயுளும் ஆட்சியும் பெற்று மாட்சி பெறுக" என்று கூறி வாழ்த்திக் கொடுத்தார். அவற்றிற்கு உரிய பொன்னை எடுத்துக் கொடுக்க முயன்ற போது மின்னல் வேகத்தில் அவ்வாணிபர் மறைந்து உமையொரு பாகனாகக் காட்சி அளித்துத்திருக்கோவிலில் மறைந்தார்.

வாணிகனாக வந்தசோமசுந்தரர் அவனுக்கு அபிடேக பாண்டியன் எனப் பெயரிடுமாறு கூறிச் சென்றார். அவ்வாறே அவனுக்கு அத்திருப்பெயரைச் சூட்டி அவனி ஆளும் வேந்தனாக ஆக்கினர்.

அவனும் சோமசுந்தரர் அருட்டிறம் போற்றி அனுதினமும் வழிபட்டுத் தூய நற்கருமங்கள் செய்து சான்றோனாகத் திகழ்ந்தான். பொறுப்பு மிக்க அரசனாக இருந்து ஆட்சி செய்து நீதியையும் ஒழுங்கையும் நிலை நாட்டினான். நவ மணிகளையும் நல்நிதிகளையும் கொள்ளை அடித்துச் சென்ற கள்ள மனம் படைத்த மூத்த சகோதரர்கள் இருக்குமிடம் தேடிப்பிடித்து வந்து அவர்கள் கையகம் வைத்திருந்த நகைகளையும் நிதிகளையும் கொண்டு வந்து சேர்த்தனர். பொருளிழந்த நிலையில் அருள்மிகுந்த இறைவன் மாணிக்கம் விற்று அவனை மாண்புடைய அரசனாக்கிய திறம் நினைத்து நெஞ்சில் அவரை நிறுத்தி வழிபட்டு ஆட்சி நடத்தினான். 

18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்

சித்திரைத் திங்களில் சித்திரை நாளில் அபிடேக பாண்டியன் சோமசுந்தரக் கடவுளுக்குச் சிறப்புப் பூசனை செய்து நெய் முதல் சந்தனம் ஈறாக மணப்பொருள்களை அபிடேகம் செய்து பச்சைக் கர்ப்பூரம் கலந்த தண்ணீரைக் கொண்டு அபிடேகம் செய்தான். அவரைக் கர்ப்பூர சுந்தரர் என்னும்படி அபிடேகம் செய்து அழகுபடுத்தினார்.

அதே நாளில் வழக்கப்படி பூசை செய்து வரும் இந்திரன் இவன் செய்யும் பூசை முடியும் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. பின் தன் சொந்த நகர் திரும்பினான். தனக்கு ஏற்பட்ட அவமானத்தை எண்ணியவனாய்க் கவலை தோய்ந்த முகத்தோடு அவன் காட்சி தந்தான் வருணன் நடந்தது அறிந்து அக்கோயிலின் தலவிசேடம் யாது என்று கேட்டான். தனக்கு ஏற்பட்ட பழியையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவிளையாடற்_புராணம்/17&oldid=1111429" இலிருந்து மீள்விக்கப்பட்டது