திருவிளையாடற் புராணம்/18

விக்கிமூலம் இலிருந்து

அவனும் சோமசுந்தரர் அருட்டிறம் போற்றி அனுதினமும் வழிபட்டுத் தூய நற்கருமங்கள் செய்து சான்றோனாகத் திகழ்ந்தான். பொறுப்பு மிக்க அரசனாக இருந்து ஆட்சி செய்து நீதியையும் ஒழுங்கையும் நிலை நாட்டினான். நவ மணிகளையும் நல்நிதிகளையும் கொள்ளை அடித்துச் சென்ற கள்ள மனம் படைத்த மூத்த சகோதரர்கள் இருக்குமிடம் தேடிப்பிடித்து வந்து அவர்கள் கையகம் வைத்திருந்த நகைகளையும் நிதிகளையும் கொண்டு வந்து சேர்த்தனர். பொருளிழந்த நிலையில் அருள்மிகுந்த இறைவன் மாணிக்கம் விற்று அவனை மாண்புடைய அரசனாக்கிய திறம் நினைத்து நெஞ்சில் அவரை நிறுத்தி வழிபட்டு ஆட்சி நடத்தினான். 

18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்

சித்திரைத் திங்களில் சித்திரை நாளில் அபிடேக பாண்டியன் சோமசுந்தரக் கடவுளுக்குச் சிறப்புப் பூசனை செய்து நெய் முதல் சந்தனம் ஈறாக மணப்பொருள்களை அபிடேகம் செய்து பச்சைக் கர்ப்பூரம் கலந்த தண்ணீரைக் கொண்டு அபிடேகம் செய்தான். அவரைக் கர்ப்பூர சுந்தரர் என்னும்படி அபிடேகம் செய்து அழகுபடுத்தினார்.

அதே நாளில் வழக்கப்படி பூசை செய்து வரும் இந்திரன் இவன் செய்யும் பூசை முடியும் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. பின் தன் சொந்த நகர் திரும்பினான். தனக்கு ஏற்பட்ட அவமானத்தை எண்ணியவனாய்க் கவலை தோய்ந்த முகத்தோடு அவன் காட்சி தந்தான் வருணன் நடந்தது அறிந்து அக்கோயிலின் தலவிசேடம் யாது என்று கேட்டான். தனக்கு ஏற்பட்ட பழியையும் வெள்ளை யானைக்கு ஏற்பட்ட இழிவையும் இறைவன் நீக்கினான் என்று கூறினான். அதற்கு வருணன் "என் வயிற்று நோயை அந்த வைகை நதிக்காவலன் தீர்த்து வைப்பானா" என்று கேட்டான்.

"பிறவி நோயைத் தீர்க்கும் பெருமான் ஆகிய அவனுக்கு வயிற்று நோயைத் தீர்ப்பது தானா முடியாது. அந்த வைத்தியநாதனை நீ சோதித்துப் பார்" என்றான்.

மிரட்டியே எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்த வருணன் தன் ஏழு மேகங்களையும் ஏவி மழைபெய்யச் செய்து கடல் அலையை விளித்துப் பொங்கி எழுமாறு ஆணையிட்டான். மதுரை கடல் நீரில் கலங்கியது; மக்கள் உயிருக்குத் தப்பி ஓட உறைவிடம் தேடினர். பாண்டியன் சோம சுந்தரக் கடவுளிடம் சென்று கடல்கள் செய்யும் இடர்களை எடுத்து உரைத்தான்; அஞ்சற்க என்று சொல்லித் தன் சடையில் மேகங்கள் நான்கினை அழைத்து "நீவிர் நால்வரும் கடல் அலையை உறிஞ்சி வற்றச் செய்வீர்” என்று ஆணையிட்டார்.

மெய்யன்பர்களின் எழுவகைப் பிறப்பையும் தீர்ப்பது போல ஏழுகடலில் நீர் முழுதும் வற்றும்படி செய்ய மறுபடியும் பாண்டிய நாடு பழைய நிலையை அடைந்தது. கடல்கோள் அங்குக் கால்கோள் கொள்ள முடியாமல் போயிற்று. இதெல்லாம் ஈசன் திருவிளையாடல் என்று அறிந்து உணர்ந்து மக்கள் எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவிளையாடற்_புராணம்/18&oldid=1111431" இலிருந்து மீள்விக்கப்பட்டது