திருவிளையாடற் புராணம்/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
19. நான் மாடக் கூடல் ஆன படலம்

கடல் வற்றிப் போனாலும் செயல் வற்றாத வருணன் ஒரு கை பார்த்து விடுவது என்று தீர்மானித்து ஏழு மேகங்களையும் அழைத்து "மதுரை அழிந்து போகும் வரை சூழ்ந்து பெய்க" என்று கட்டளை இட்டான். மழை விடாது பெய்து மதுரையை நீர் சூழச்செய்து அவர்கள் வாழ்க்கையைச்சின்ன பின்னப்படுத்தியது. நகர மக்களும் நாட்டு அரசனும் சோமசுந்தரரை அணுகித் தம்மைக் காத்தருளுமாறு வேண்டினர்.

இறைவன் தன் முடி மீது தவழ்ந்து கிடந்த மேகங்கள் நான்கினை விளித்து மறுபடியும் நீர் சென்று நான்கு மாடங்களாக மதுரைக்கு மூடியாக அமைந்து தண்ணீர் கொட்டாதவாறு தடுக்கவேண்டும்" என்றான். நான்கு மேகங்கள் மாடங்களாக அமைந்து அங்கு ஒரு சேரக் கூடியதால் அந்நகருக்கு 'நான் மாடக்கூடல்' என்ற பெயரும் வழங்குவது ஆயிற்று.

மேகங்கள் நான்கைக் கொண்டு மதுரையைக் காத்தான். இடியும் மின்னலும் கொண்டு தாக்கிய போதும் ஒரு சொட்டுத் தண்ணீரும் உள் நுழையாமல் மேகங்கள் பாய் விரித்தது போலப் படிந்து காத்தன. கடல் ஏழும் முழுகி வயிறாரப் பருகி இங்கே வந்து கொட்டிய அவ்வளவு நீரும் மலைக்கற்களில் பெய்த அலைகள் ஆயின. உடற் பருத்துக் கறுத்து வந்த மேகங்கள் எல்லாம் மெலிந்து நலிந்து வெளுத்துவிட்டன. ஆணையை நிறைவேற்ற முடியாமல் புதுமணப் பெண்போல வெட்கித் தலை சாய்ந்து வருணன் முன் நின்றன. விதவைக் கோலத்தில் வந்த மேகங்களைக் கண்டு வருணனும் சினம் அடங்கிவேறுவழி இன்றிச் சிவனிடம்வந்து சரண் அடைந்தான். தன் ஆணவத்தால் அறிவு கெட்டு இந்த அவல நிலைக்கு ஆளானதை வருணன் உணர்ந்து வானத்து வீதியில் சென்று ஈசனைத் தரிசித்து மன்னிக்கும்படி வேண்டினான்.

இரக்கமே உருவான இறைவன் அவனை மன்னித்து "உனக்கு என்ன வேண்டும்?" என்று வினவினார். தான் மிரட்டித் தன் வயிற்று நோயைத் தீர்த்துக் கொள்ளலாம் எனக் கருதி அதனால் ஏழு மேகங்களை விரட்டி இங்கு அனுப்பியதாக உரைத்தான். சூலை நோய் தந்து நாவுக்கரசரை ஆட்கொண்ட சிவபெருமான் வருணனின் வயிற்று நோயைத் தீர்த்துக் கொடுத்தார். ஆணவம் நீங்கி அடக்கம் மேற்கொண்டு இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு ஏனைய மேகங்களை விடுவித்துக்கொண்டு தன் கடலை இருப்பிடமாக அடைந்தான். 

20. எல்லாம் வல்ல சித்தர் ஆன படலம்

அபிடேக பாண்டியனுக்கும் அவன் நாட்டு மக்களுக்கும் வேண்டிய பொருளைத் தருவதற்காக இறைவன் எல்லாம் வல்ல சித்தராக உருக்கொண்டு வந்தார். வட்டமாகிய மயிர்ச் சடையும், நீறு பூசிய நெற்றியும் குண்டலம் தரித்த செவியும், புலித் தோல் ஆடையும், காலில் சிலம்பும் பாதுகையும் கொண்டு புன்முறுவல் பூத்த முகத்தினராய் அங்காடித் தெருக்களும் மாளிகைச் சந்திப்புகளும் தேர் வீதிகளும் செல்வாராயினர். ஓர் இடத்திலேயும் தங்க இருப்புச் கொள்ளாமல் விருப்பப்படியே திரிந்து சென்றார்.

முதியவரை இளைஞர் ஆக்கினார். ஆடவரை மகளிர் ஆக்கினார்; மலடியைக் கருஉயிர்க்கச் செய்தார்; ஊமை, குருடு, செவிடு, முடம் இப்பிணிகளைத் தீர்த்து வைத்தார்;